மொழிபெயர்ப்பாளர் ச.வின்சென்ட் அவர்களுடன் நேர்காணல்

சந்திப்பு: ந.முருகேசபாண்டியன் & மதுரை க. சரவணன்

மதுரை புறநகர்ப் பகுதியிலுள்ள புதூரில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் தொடர்ந்து மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ச.வின்சென்ட் அவர்களைச் சந்தித்தோம். எண்பது வயதில் தளர்ந்திருந்த அவர் இளமைப் பருவம், கல்லூரிப் பணி, மொழிபெயர்ப்பு ஆகியவற்றைப் பற்றி உற்சாகமாகக் கதைத்தார். ஓய்வு பெற்ற மொழிப் பேராசிரியருக்கு எழுத்துப் பணியில் ஒருபோதும் ஓய்வில்லை என்பதற்கு அடையாளமாக விளங்குகின்ற ச.வின்சென்ட் அவர்களின் அனுபவங்கள், சமகால அக்கறையுடன் சமூகப் பதிவுகளாக விளங்குகின்றன.sa vincent 640கம்பம் நகருக்கு அருகிலுள்ள அனுமந்தன் பட்டி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த நீங்கள் கல்வி கற்ற அன்றையப் பள்ளிக்கூடச் சூழல் எப்படி இருந்தது?

ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே இருந்த எங்கள் ஊர்ப் பள்ளிகளில் அப்போதே வசதியான சூழல் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தரையில் மணலில் உட்கார்ந்து ஆனா ஆவன்னா எழுதிப் பழகியது நினைவிருக்கிறது. அப்போதும் இராகம் போட்டு ஓரோண் ஒண்ணு பாடினார்கள். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குச் சென்றார்கள்; மரத்தடியில் விளையாடினார்கள்.

கிராமத்துப் பின்புலத்தில் இருந்து வந்த நீங்கள் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது சாதாரணமானது அல்ல. உங்களை ஊக்குவித்த ஆளுமைகளைப் பற்றிச் சொல்லுங்கள்.

இலக்கியத்திற்கும் மொழித்திறனுக்கும் உள்ள வேறுபாடு தெரியாத காலம் அது. எனது தந்தையார் அந்தக் காலத்திலேயே -30 களில்- பாளையங்கோட்டை, புனித சவேரியார் பள்ளியில் படித்தவர். அப்பொழுது ஆங்கில இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். சிறுவயதிலேயே எனக்கு அடிப்படை ஆங்கில இலக்கணத்தை அவர்தான் கற்றுத் தந்தார். எனக்கு இலக்கிய ஆர்வம், உயர்நிலைப்பள்ளிக் காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

உங்களுடைய குடும்பத்தில் அல்லது கிராமத்தில் இலக்கிய ஆர்வலர்கள் யாரும் இருந்தனரா?

என்னுடைய அம்மா ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு. கோதைநாயகி அம்மாள் எழுதிய நாவல்களைப் படிப்பார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து வாசிப்பேன். எங்கள் ஊரில் கவிஞர் அந்தோணி முத்துப் பிள்ளை என்பவர் சிந்துக் கவிஞர்; நாடக ஆசிரியர். அவர் எழுதிய சல்லிக்கட்டுப் பாடலை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி அறிந்துகொண்டது பின்னால்தான் என்னுள் இலக்கிய ஆர்வம் இருந்தது என்று தான் சொல்வேன். எனது அண்ணன் சிறிது ஊக்கம் தந்தார்.

ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சியடைவது சிரமமான காலகட்டத்தில் ஆங்கில இலக்கியப் படிப்பு உங்களைக் கவர்ந்தது எப்படி?

எனக்கு என்னவோ கடினமாகத் தெரியவில்லை. எனக்கு மனப்பாடம் செய்வது வராது. மற்றவர்கள் ஆங்கிலத்தை மனப்பாடம் செய்து மதிப்பெண் பெற்றபோது நான் வேறு வழிகளை தேட வேண்டியதிருந்திருந்தது. அதற்காகவே மொழித்திறன்களைக் கற்க வேண்டியதிருந்திருக்கும். மொழித்திறன் இருந்தால் இலக்கியத்தின்மேல் ஆர்வம் ஏற்படத்தானே செய்யும்!

உங்களுக்கு ஆங்கில இலக்கியம் போதித்த பேராசிரியர்களின் தனித்துவம் எப்படி இருந்தது?

பள்ளியில் கற்றுத்தந்த ஆசிரியர்களிடமிருந்து தொடங்க வேண்டும். ஒன்பதாம் படிவம் படிக்கும்போதே எங்கள் வகுப்புக்கு வரும் துணைத் தலைமையாசிரியர் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளைச் சொல்வார். இலக்கியச் செவ்விலக்கியங்களின் -ஸ்காட், டிக்கன்ஸ்- சுருக்க நூல்களை எனக்கு வாசிக்கக் கொடுப்பார். பல வாக்கியங்கள் புரியாது; ஆனால் கதை புரியும். அது போதுமே! தேர்வுகளுக்காக வாசிக்கவில்லை; பொழுதுபோக்கிற்காக, வாசிப்பில் இன்பம் காண, ஒருவேளை நான் ஆங்கிலப் புத்தகமெல்லாம் வாசிக்கிறேன் என்று மற்றவர்களுக்குக் காட்ட இருக்குமோ!

கல்லூரியில் கால் எடுத்து வைத்ததெல்லாம் புது அனுபவம்தான். எல்லாம் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம். இளம் தமிழ் விரிவுரையாளர் நா.பாலுசாமி சூட்டில்தான் வருவார். ஓர் ஆங்கிலப் பேராசிரியர் ஜிப்பா அணிந்து வருவார். அவருடைய ஆங்கிலப் பேச்சை ஓரளவு புரிந்துகொள்ள ஒரு பருவம் ஆயிற்று. ‘ப்யூப்பா,’ என்று ஒரு வார்த்தையை அடிக்கடி சொல்வார். அது வேறொன்றும் இல்லை. நாம் சொன்னதை மீண்டும் ஒரு முறை சொல்லுமாறு கூறும் ‘பெக் உயர் பார்டன்’ அவர் உச்சரிப்பில் அப்படிக் கேட்டது. ‘பார்டன்’ என்றும் சொல்வோம். இப்போது ஆங்கில வகுப்புகளில் அது ‘என்னா?’ என்று ஆயிற்று.

அந்த இண்டர்மீடியேட் வகுப்பில் மொழியும் இலக்கியமும் சேர்ந்தே வந்து சேர்ந்தன. ஷேக்ஸ்பியரும், வோர்ட்ஸ்வொர்த்தும், கோல்ட்ஸ்மித்தும் பேசினார்கள். உப்பிலியும், பி.வி.ஆரும், பல்துறை அறிஞர் சக்திவேலனும் ஆங்கில இலக்கியத்திற்குக் கோடு போட்டுத் தந்தவர்கள். பின்னர் பி.எஸ்ஸி.யில் மதுரைக் கல்லூரியில் கே.ஆர். நாராயணன் வகுப்புகளில் புதுப் பாதைகள் விரிந்தன. டி.எச். லாரன்சும், சாமர்சட் மாமும் அறிமுகமானார்கள். அவர் போல நாமும் ஆங்கிலம் பேச முடியுமா என்ற ஏக்கம்/ பேராசை இருந்தது.

கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியபோது, மாணவர்களுக்கு ஆங்கில மொழியைப் போதிப்பதில் என்ன வகையான சவாலை எதிர்கொண்டீர்கள்?

முதல் சில ஆண்டுகள் எனக்காக ஆங்கிலம் நடத்தினேன். பிறகுதான் கருமாத்தூர் சுற்றுப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதுதான் கடமை என்பதை உணர்ந்தேன். idle ஐ இட்லி என்று வாசித்தார்கள். walk, talk ஆகிய சொற்கள் வால்க், டால்க் ஆயின. ஆங்கிலத்தில் சொற்களைக் கூட்டிப் பொருள் காணத் தெரியவில்லை. ஒரு வாக்கியம் ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை; நாம் பேசுவது அவர்களுக்குப் புரியாது. அவர்களுக்கு எஸ் நோ, தேங்க்யூ, சாரி தான் தெரியும். இவற்றை எல்லாம் அவர்கள் பள்ளியிலேயே படித்திருக்க வேண்டும் என்று தட்டிக் கழித்தனர் ஆசிரியர்கள். முதலில் நல்ல ஆங்கில உச்சரிப்பைச் சொல்லிக் கொடுத்தால் போதும் என்பது எனது கருதுகோள். அடுத்து நடைமுறை இலக்கணம் சொல்லிக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். Structural Approach அணுகுமுறையை அடுத்துப் பின்பற்றினோம். ஆனால் மொழித்திறனைக் கற்பதில் ஒரு சிறிதும் அவை உதவவில்லை. இதற்கிடையில், பல்கலைக்கழகப் பாடத்தை முடிக்க வேண்டும்.

பல்லாண்டுகள் மொழிப் பாடம் படிக்கின்ற மாணவர்கள் மொழியைக் கையாண்டு எழுதுவதில் சிரமப்படுவது பாடத்திட்டத்தில் உள்ள கோளாறுதானே?

பாடத்திட்டம் என்று சொல்வதைவிடக் கலைத்திட்டம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். மொழியைக் கற்க மூன்று காரணங்கள் ஒரு கலைத்திட்டத்தில் இருக்க வேண்டும்: செய்தி பரிமாற, இலக்கியம் கற்க, பிறவற்றைக் கற்க ஒரு கருவியாக. முதன் மொழியா, இரண்டாம் மொழியா என்பதைப் பொருத்தும் இந்நோக்கம் மாறுபடும். நமது கலைத் திட்டத்தில் இவை ஒவ்வொன்றின் பரிமாணங்களையும் பயன்பாடுகளையும் கண்டு அவற்றிற்கு ஏற்ப பாடம், செயல்படுத்தும் முறை, தேர்ச்சியை அளவிடல் ஆகியவை இருக்க வேண்டும். பேச்சாற்றலைக் கற்றுத் தராமல் அதைச் சோதிக்கக் கூடாது. ஒரு தேர்வு அது எதைச் சோதிக்க வேண்டுமோ அதைத்தான் சோதிக்க வேண்டும். எழுத்துத் திறனைச் சோதிக்கும்போது இன்னொரு நுண்ணறிவான மனப்பாடத் திறனைச் சோதிக்கக் கூடாது. இதுதான் இப்போது நடக்கிறது. இதனைச் சரிசெய்ய தேர்வு முறை, கற்பிக்கும் நோக்கம், கற்பிக்கும்/ கற்கும் முறை, பாடங்கள் தேர்வு ஆகியவற்றில் முழுமையான மாற்றங்கள் வேண்டும். ஆசிரியர்களுக்குத் தரப்படுன்ற பயிற்சி ஒரு வேடிக்கை. அங்குதான் ஒழுக்கமின்மையே ஆரம்பம் ஆகிறது. இத்தனை வருட அனுபவத்தில் frustrating experience. மனச்சான்றுள்ள ஆசிரியர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

உங்களுடைய பணிக்காலத்தில் ஆங்கில மொழியைப் போதிப்பதில் புதிய வழிகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்திட முயன்றீர்களா?

நான் படித்த ஆசிரியர் பயிற்சிப் பட்டம், CIEFL இல் நான் பெற்ற சான்றிதழ், பட்டய வகுப்புப் பயிற்சிகளின் பின்னணியில் எங்கள் ஊரக மாணாக்கருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஆங்கிலம் கற்றுத்தரப் புது வழிகளைத் தேட உதவின. அவர்களுக்கு ஆங்கில இலக்கியத்தைவிட மொழித்திறன் அவசியம் என்பதை அறியவே மாதங்கள் ஆகின. அதன் பிறகு ஆங்கில உச்சரிப்புப் பயிற்சியும், இலக்கணமும் போதும் என்று கருதி அவற்றிற்குப் பயிற்சிகள் தயாரித்தேன். மொழித் திறன்கள் என்றால் முதலில் பேச்சுதான் என்பது நினைவு வந்தது. தேவை, எளிதில் கற்றல், உடனடிப் பயன்பாடு என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் பாடங்களைத் தயாரித்தேன்; அவற்றை விளையாட்டு, செயல்பாடுகள்மூலம் மாணவர்களிடம் நானும் என்னுடன் பணியாற்றிய பேராசிரியர்களும் கொண்டு சேர்த்தோம். இதே கோட்பாட்டின் அடிப்படையில் மற்ற மூன்று திறன்களுக்கும் பாடத்திட்டமும் செயல்பாடுகளும் தயாரித்தோம். எங்கள் முயற்சிக்கு ஏற்றாற்போலக் கல்லூரிக்குத் தன்னாட்சி தரப்பட்டது. நூல்களிலுள்ள பாடங்களை இல்லாமல் திறன்களைச் சோதிக்கத் தேர்வுமுறைகள் மாற்றப்பட்டன. முதன்முறையாகப் பேச்சுத்திறனை அளவிட வெளிக் கல்லூரிப் பேராசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வந்து உதவி செய்தார்கள். கேட்கும் திறனிலும், வாசித்துப் புரியும் திறனிலும் நல்ல முன்னேற்றம். நான்கு பருவங்களுக்கும் திறன்படிநிலை வகுத்து அவற்றிற்கேற்ற செயல்பாடுகள், பயிற்று முறைகள், தேர்வுகள் தயாரிப்பது எளிதில்லை. Communicative Language Teaching என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நமது ஊருக்குப் பொருத்தமானவற்றை அமைக்க வேண்டும். எல்லாம் அறைகூவல்கள்.

கிறிஸ்தவ சமய நெறி சார்ந்த சூழல், உங்களுடைய தொடக்ககாலத் தமிழ்க் கட்டுரை எழுதுவதில் வகித்த பங்கு என்ன?

சமயநெறிச் சூழல் என்று சொல்ல முடியாது. என்னுடைய முதல் கட்டுரை முத்தாரத்தில் வந்தது. கல்லூரியோடு தொடர்புடைய கத்தோலிக்க சேவை என்ற இதழ் எனக்கு அறிமுகமானது. பேராசிரியர் குழந்தைநாதன் கட்டுரைகளை, குறிப்பாக அரசியல் கட்டுரைகளை எழுதும்படி என்னைத் தூண்டினார். உரோமையிலிருந்து வரும் இதழில் சில கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்க்கக் கேட்டுக்கொண்டார்கள். அது ஒரு நல்ல பயிற்சி. பிறகு ’நம் வாழ்வு’ இதழ் வரத்தொடங்கியவுடன் அதில் எழுத ஆரம்பித்தேன். உலக அரசியல் முதல் இளையோருக்கான கட்டுரை வரை. கட்டுரைகள், மொழிபெயர்ப்பு முதல் நாவல் மொழிபெயர்ப்பு வரையில் பல துறைகளில் எழுத்துப் பயிற்சி. அவை, நம் வாழ்வு பத்திரிகையில் தொடராக வெளியானவை. பல நூல்களாக வந்துள்ளன. பாவ்லோ கொய்லோவின் ஐந்தாம் மலை அவற்றில் ஒன்று.

மொழிபெயர்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் எப்படி ஏற்பட்டது? நீங்கள் மொழிபெயர்த்த முதல் மொழிபெயர்ப்பு நூலாக்கத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஒருவர் உங்களைக் கேட்பதால் நீங்கள் ஒன்றைச் செய்கிறீர்கள். அதுவே உங்களுக்குப் பிடித்துப் போயிற்று. அதுவே பழக்கமாகப் போய்விடுகிறது. அப்படித்தான் மொழிபெயர்ப்பும் எனக்கு ஆயிற்று. ஆனால் எனக்கு ஒரு படைப்பைப் பிடித்திருந்தால்தான் அதை எடுத்துக்கொள்வேன். அப்படி என்னை மொழிபெயர்ப்பில் முழுவதும் ஈடுபடுத்திய நூல் லியர் எழுதிய ஃப்ராய்ட் ஆகும். அது தத்துவார்த்த அடிப்படையில் ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வை ஆராய்ந்தது. ஓர் அறைகூவல்தான். சொற்களைத் தேட வேண்டும், உளவியலின் அடிப்படைக் கோட்பாடுகளை மூல நூலில் சேர்க்காமல் கொடுக்க வேண்டும்; எல்லாருக்கும் புரியும் நடையில் எழுத வேண்டும். எப்படியோ சோர்வடையாமல் மொழிபெயர்த்து முடித்தேன். நான் ஏற்கெனவே கற்றிருந்த கற்பித்திருந்த உளவியல் ஓரளவு உதவியது என்று சொல்லலாம்.

ஆங்கில மொழியின் அமைப்பிற்கும் தமிழ் மொழியின் அமைப்பிற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நான் சொல்லுக்குச் சொல், வாக்கியத்துக்கு வாக்கியமாக மொழிபெயர்ப்பதைப் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறேன். பொருள்தான் முக்கியம், அது மூல ஆசிரியர் சொல்ல வந்ததை அப்படியே வாசகருக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இப்போது மொழிபெயர்ப்புக் கோட்பாட்டை இரண்டு வகைகளாகப் பார்க்கிறார்கள். உள்ளூர்மயமாக்குதல் (domestication): இலக்குமொழியின் பண்பாட்டிற்கு ஏற்பப் பனுவலை மாற்றிக்கொள்வது. வெளிநாட்டுத்தன்மையாக்கல் (foreignisation): மூல நூலின் பண்பாட்டை மட்டுமல்லாமல் மொழிக் கட்டமைப்பைக்கூட அப்படியே பின்பற்றுவது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்புப்போல. நான் இரண்டையுமே பயன்படுத்துவேன்; தேவையான இடங்களில் தேவையான முறையைப் பின்பற்றுகிறேன். வாசகருக்குச் செய்தி போய்ச் சேரவேண்டும். எனவே மூல மொழி, இலக்கு மொழி ஆகியவற்றின் கூறுகள் மாறாமல் பார்த்துக் கொள்கிறேன்.

மொழிபெயர்ப்பில் பண்பாடு பெறுமிடம் என்னவாக இருக்கிறது? அது உங்களுக்கு விடுக்கிற சவால் முக்கியம் இல்லையா?

யாருக்காக எழுதுகிறோம் என்பதைப் பொறுத்து மூல நூலின் பண்பாட்டை அப்படியே வைத்துக்கொள்கிறேன். சில வேளைகளில் முடிவதில்லை. மூல மொழியின் மரபையும் இருக்கு மொழியின் மரபையும் பேணவேண்டும் என்று தொல்காப்பியம் சொல்வதை மொழிபெயர்ப்பாளர் கருத்தில்கொள்ள வேண்டுமல்லவா?

sa vincent 333நீங்கள் மொழிபெயர்த்த நூல்களில் எந்த நூல் உங்களை மிகவும் சிரமப்படுத்தியது? அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்.

எல்லா நூல்களுமே மொழிபெயர்ப்பதற்குக் கடினமானவைதான். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், காஃப்காவின் உருமாற்றம் முதலான கதைகள் நூலைச் சொல்லலாம். இருத்தலியல் கோட்பாடு வளர்வதற்கு முன்னரே எழுதப்பட்டாலும் அக்கோட்பாட்டின் அடிப்படைகளை இங்குக் காண முடியும். கதையின் கரு, கதையாடல் உத்தி, வாக்கிய அமைப்புகள் என்று எல்லாமே அறைகூவல்கள்தான். எனவே நூலை வாசிப்பவர்களுக்கு உதவுவதற்காக நீண்ட முன்னுரை கொடுத்திருக்கிறேன்.

பொதுவாக மொழிபெயர்த்திட நூல்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுடைய தேர்வு என்னவாக இருக்கிறது? அல்லது பதிப்பாளர் குறிப்பிடுகின்ற புத்தகங்களை மொழிபெயர்க்கின்றீர்களா?

எனக்குப் பிடித்த நூல்களை நான் தொடுவதற்கு முன்னரே பதிப்பாளர் ஒரு கவர்ச்சிகரமான நூலைக் கொடுத்துவிடுகிறார். எனக்கு எப்படிப்பட்ட நூல் பிடிக்கும் என்று எதிர் பதிப்பகத்தின் உரிமையாளர் அனுஷ் போன்றவர்களுக்குத் தெரியும். எனக்குப் பிடித்திருந்தால் எடுத்துக்கொள்வேன்; அல்லது தட்டிக் கழித்து விடுவேன். பெரும்பாலும் பேராசிரியர் தமிழவன் கொடுக்கும் கட்டுரைகள் தட்ட முடியாதவையாக இருக்கும். எனக்குப் பிடித்த டி.எஸ். எலியட்டின் 'மர்டர் இன் தெ கத்தீட்ரலையும்’, சாமர்செட் மாமின் 'ரேசர்ஸ் எட்ஜையும்’ மொழிபெயர்க்க அண்மையில்தான் முடிந்தது. அதற்காக நண்பர் சந்தியா நடரசானுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவை சரியாக விற்கவில்லை என்பது வேறு விஷயம்.

எதிர் வெளியீடு தவிர, வேறு எந்தப் பதிப்பகங்கள் உங்கள் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டிருக்கின்றன?

என்சிபிஹெச் பதிப்பகம் ஆங்கிலம், தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களையும் மாணவர்க்கான நூல்களையும் வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக தஸ்தயெவ்ஸ்கி எழுதிய The Idiot நாவலை வெகுளி என்ற தலைப்பில் என்சிபிஹெச் வெளியிட்டிருக்கிறது. இரு நகரங்கள் கதை, விந்தையுலகில் ஆலிஸ் முதலான நான்கு உலக இலக்கியங்களின் சுருக்கத்தை மொழிபெயர்த்திருக்கிறேன். அவை மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இந்தியா 2020 என்ற நூலின் மாணவருக்கான பதிப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என்சிபிஹெச் பதிப்பகத்திற்குக் கொடுத்திருக்கிறேன்.

நீங்கள் மொழிபெயர்த்த முக்கியமான நூல்கள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

மௌன வசந்தம், வாங்காரி மாத்தாய், வெகுளி, காஃப்கா, சமகாலத் தமிழ் கவிதைகள், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு பிரதாப முதலியார் சரித்திரம், வேங்கையின் மைந்தன்.......

சில மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்.

மௌன வசந்தம் ரெய்ச்சல் கார்சன் எழுதிய Silent Spring என்ற நூலின் மொழிபெயர்ப்பு. 1962 ஆம் ஆண்டு வெளியாயிற்று. DDT முதலான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் நிலம், நீர், காற்று, கடல், உயிரினங்கள் எவ்வாறு பாதிப்படைகின்றன என்பதைப் பதிவு செய்த நூல்; உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. பல நாட்டுத் தலைவர்கள் கார்சனுடைய எச்சரிக்கையால் DDT முதலான வேதி நச்சுப்பொருட்களின் பயன்பாடுகளைத் தடை செய்தனர். நமது நாட்டில்கூட 70களில் தடை செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். உலகம் பேரழிவிலிருந்து ஒரு தனி மனிதரின் முயற்சியால் காக்கப்பட்டது. மௌன வசந்தம் இந்த முயற்சிகளை மனத்தைத் தொடும்வகையில் தருகிறது. வாங்காரி மாத்தாயின் தன்வரலாறு, தனி ஒரு பெண்ணாக அவர் எப்படி கென்யாவில் அரசுகளைப் பகைத்துக்கொண்டு மரங்களைக் காத்தார் என்ற போராட்டத்தின் கதை. பிரதாப முதலியார் சரித்திரம் நாவலைத் தமிழிலாவது நம்மவர்கள் படிக்கிறார்களா? ஆங்கில மொழிபெயர்ப்பை வாசிப்பார்களா? உலகம் வாசிக்கும் என்பது எனது நம்பிக்கை. தஸ்தயெவ்ஸ்கியின் இடியட்டை வெகுளி என்று மொழிபெயர்த்திருக்கிறேன். பெரிய நாவல்தான். ஆனால் எல்லோரும் அதை வாசிக்க வேண்டும்.

நீங்கள் மொழிபெயர்த்த நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் என்ன வகையான வினையாற்றுகின்றன என்று நினைக்கிறீர்கள்?

அப்படி ஓர் ஆய்வு செய்வதற்குத் தமிழில் வழி இருக்கிறதா என்ன? ஆனாலும் மௌன வசந்தமும், வாங்காரி மாத்தாயும் அதிகம் வாசிக்கப்படுகின்றன. தமிழ்ச் சமூகத்தில் இயற்கையைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட அவை காரணமாக இருக்கவேண்டும். சுற்றுச் சூழல்பற்றிய இன்னொரு நூல் பாதரசம் எனும் நஞ்சு. அது மக்களைச் சென்றடைந்திருக்கிறதா? என்பது தெரியவில்லை. அந்த நூல் கொடைக்கானலில் வெப்பமானி தயாரித்த தொழிற்சாலையின் பாதரச நஞ்சின் பாதிப்பை விவரிக்கிறது – அறிவியல்பூர்வமாய், அரசியல் கண்ணோட்டத்தோடு. இன்னும் காடுகளிலும், ஏரித் தண்ணீரிலும் பாதரச நஞ்சின் கசடுகள் இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்களாம். எனது மொழிபெயர்ப்பு நூலை வாசிக்கும் நண்பர்களில் சிலராவது பாதரசத்தை முழுவதுமாய் நீக்க முயற்சி மேற்கொள்ள மாட்டார்களா? அண்மையில் சாகித்திய அகாதமி வெளியிட்டிருக்கும் அகிலனின் வேங்கையின் மைந்தன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு பேரரசின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அனைவருக்கும் கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.

தமிழர் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் இல்லாத நூல்களைத் தேர்ந்தெடுத்துத் தமிழில் மொழிபெயர்க்கின்ற போக்கினால் ஏதாவது பயன் உண்டா?

உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், இன்றைய தமிழ் வாழ்க்கைக்கு முக்கியம் இல்லாத நூல்கள் நாளை முக்கியத்துவம் பெறலாம் அல்லவா? திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் முறை இங்கே வராது என்பது என்ன நிச்சயம்?

மொழிபெயர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கின்ற நூல்கள் தேர்வில் கட்டுப்பாடு அவசியமா?

கண்டிப்பாக, மொழிபெயர்ப்பாளருக்கும் படைப்பாளியைப் போல சமூக ஆன்மீகப் பிரக்ஞை, பொறுப்பு இருக்கிறது அல்லவா?

மொழிபெயர்ப்பு நூல்ககளைத் தவிர, நீங்கள் எழுதிய மாணவர் கற்றல், முதுமை போன்ற நூல்கள் சமூக மாற்றத்தில் என்னவகையாக உதவிடும் என்று கருதுகிறீர்கள்?

கல்வி பற்றிய எனது மொழிபெயர்ப்பு நூல்கள் சிறிது கடினமானவை என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இளையோருக்கும் மாணவருக்கும் எழுதியுள்ள நூல்கள் அவர்களை உருவாக்குவதில் உதவுகின்றன என்று நம்புகிறேன். முதுமை இனிமையைப் பலரும் விரும்பி வாசிக்கிறார்கள். ஒரு வாசகர் ஒவ்வொரு வரியையும் எடுத்துக் கொண்டு விளக்கம் தருகிறார். எனக்கு மிகவும் மன நிறைவு அளித்த நூல் அது. கற்றல், ஆங்கிலம் கற்பித்தல், பேச்சுப் பயிற்சி நூல்கள் நல்ல பயனைத் தந்திருக்கின்றன என்று அறிகிறேன்.

மொழிபெயர்ப்பைத் தவிர தாங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் பற்றி…

உங்கள் நூலகம், சிற்றேடு, தளம், பிறழ், காக்கைச் சிறகினிலே, தமிழ்வெளி முதலான இதழ்களில் இலக்கிய ஆய்வு தொடர்பான கட்டுரைகளை எழுதுகிறேன். இலக்கியக் கோட்பாடுகளும் கோட்பாட்டாளர்களும் என்ற கட்டுரைத் தொகுப்பைப் பிறழ் வெளியிட்டிருக்கிறது. என்னுடைய நூல் அறிமுகங்களின் தொகுப்பைக் கனவு வெளியிட்டிருக்கிறது.

உலகமயமாக்கல் காலகட்டத்தில் கார்ப்பரேட்டுகளின் அரசியல் மேலாதிக்கம் நிலவுகிற இன்றைய காலகட்டத்தில் இலக்கியப் படைப்புகளின் இடம் எதிர்காலத்தில் என்னவாக இருக்கும்?

உங்கள் வினாவிலேயே விடை இருக்கிறது; அச்சம், ஐயம், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாசிப்பு தேவையில்லை என்ற போக்கு இப்போதே இருக்கிறது என்பதை உங்கள் வினா சொல்லாமல் சொல்கிறது.

ஆங்கில மொழிக்கும் தமிழ் மொழிக்கும் பாலமாக விளங்குகிற நீங்கள் இதுவரை எத்தனை நூல்களை மொழிபெயர்த்து இருக்கிறீர்கள்? உங்களுடைய மொழிபெயர்ப்புச் செயல்பாடு, திருப்தி அளிக்கிறதா?

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு 44 நூல்களும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு 25 நூல்களும் மொழிபெயர்த்திருக்கிறேன். பேராசைக்காரனுக்கு என்று மன நிறைவு கிடைக்கும்?

செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்க்கின்ற இன்றைய காலகட்டத்தில் மொழிபெயர்ப்பாளரின் தனித்துவம் இன்னும் எத்தனை காலத்துக்குத் தாக்குப் பிடிக்கும்?

தெரியவில்லை; இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையை மாற்றி எழுத வேண்டும் போலும். புகழும் ஆற்றலும் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் அந்தப் பக்கம் போய்விட்டார்களாமே?

உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றி…

திசையெட்டும் வாழ்நாள் சாதனையாளர் விருது, அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பாளருக்கான முதல் பரிசு, தமிழக அரசின் சிறந்த உளவியல் கல்விக்கான விருது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேடை பதிப்பகம் வெளியிட்ட நாகாலாந்து நூலுக்குத்தான் அருட்செல்வர் விருது கிடைத்தது.

நீங்கள் ஏதாவது கலை இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறீர்களா?

இல்லை. ஆனால் பல இடதுசாரி அமைப்புகளோடு தொடர்புண்டு. கத்தோலிக்கக் கிறிஸ்துவ கலை இலக்கிய மன்றத்தோடு பயணித்திருக்கிறேன். அதன் தலைவராகக்கூட இருந்திருக்கிறேன்.

ஏறக்குறைய நாற்பது ஆண்டு காலம் உயர்கல்விப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய கல்விப் பணி மனதுக்கு நிறைவாக இருக்கிறதா?

சிறப்பாக என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு செய்திருக்கிறேன் என்ற மன நிறைவு உண்டு. இன்னும் செய்திருக்கலாமோ என்ற ஏக்கமும் உண்டு.

உங்கள் இலக்கியம் சார்ந்த மொழிபெயர்ப்புப் பணி பற்றி உங்களுடைய குடும்பத்தினரின் அபிப்ராயம் என்னவாக இருக்கிறது?

எனக்கு வாசிப்பதையும் எழுதுவதையும் தவிர ஒன்றும் தெரியாது. மனைவிக்கு உதவி செய்வதெல்லாம் எதுவும் இல்லை. கூட அமர்ந்து பேசுவதும் குறைவு. பாராமுகம் என்றோ அலட்சியம் என்றோ, இல்லை. எனக்குத் தெரிந்த உளவியல் அவ்வளவுதான். இருந்தாலும், 44 ஆண்டுகள் என்னுடைய இந்த நடத்தையைப் பொறுத்துக் கொண்டது மட்டுமின்றி, எனக்கு நேரா நேரம் குடிப்பதற்கோ உண்பதற்கோ ஏதாவது கொடுத்து, வீட்டுக்கு வருபவர்களிடமும் இவற்றைக் குறையென்று காட்டாமல் பெருமையாகச் சொல்லி ஊக்கப்படுத்தியதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய மகள்களும் பேரக்குழந்தைகளும்கூட அப்படியே வந்து விட்டனர்.

எழுத்தாளர்களுக்கு என் ஆலோசனை:

நீங்கள் எவ்வளவு பெரிய உலக இலக்கியம் படைத்தாலும் உங்கள் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அவ்வளவுதான்.