காடுகளில் விலங்குகளைப் போல அலைந்து திரிந்து வாழ்ந்த மனிதர்கள் இன்று உலக சமுதாய மாக வாழ வழி வகுத்த வாழ்வியல் வடிவங்களில் குறிப்பிடத்தகுந்தது ‘அரசியல்’. சமுதாய வளர்ச்சியில் மாறுபட்ட பல வகையான சூழல்களில் விதவிதமாக இயங்கிய அரசியல் என்ற வடிவத்தை அடிநாளில் உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் அரிஸ்டாட்டில். அவர் ஒரு கிரேக்க ஞானி.

politics aritstole 450‘அரசியல்’ என்ற இந்த நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. ஆங்கிலத்தின் வழியாக இது தமிழ் மொழிக்கு வந்துள்ளது. கிரேக்க நாகரிக ஆவணங்களையும் அதன் பேரிலக்கியங்களையும் ஆழமாகப் படித்து ஆய்வு செய்து அவற்றின் பொருளுணர்ந்து ஆங்கிலேயர் தமது மொழியில் அவற்றை மொழி பெயர்த்துள்ளனர். புதிய நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்த நூல் ஆங்கில மொழியில் 68 பதிப்புகள் வெளிவந்து உள்ளன. அதன் பின்னரும் பல பதிப்புகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு பதிப்பும் மேலும் மேலும் செழுமைப்படுத்தப்பட்டவை.

ஆங்கில அறிஞர் சி.எம். பௌரா தனது கிரேக்க இலக்கியப் படைப்பு நூல்களில் அரிஸ்டாட்டிலைச் சேர்க்க இயலாத காரணத்தை இப்படிக் கூறி ஆறுதல் அடைகிறார்: “மிகப் பெரிய ஆஜானுபாகு வாகிய அரிஸ்டாட்டிலை எனது நூலில் நான் சேர்க்காதது பற்றி எனக்கு மிக மிக வருத்தம். சிந்தனையின் வரலாற்றிலே முன்வரிசையிலே அவருக்கு என்றென்றும் இடமுண்டு. ஆனால், இலக்கிய வரலாற்றிலே அவரைச் சேர்க்க வழி யில்லை. ஏனெனில் இன்று நமக்குக் கிடைத்துள்ள அவரது நூல்கள் பலவாயினும் அவை இலக்கியக் கட்டுரைகள் அல்ல. அவை, பிறருக்குப் போதனை செய்வதற்கு அவர் எழுதிய குறிப்புகள்; அல்லது அவர் போதித்த போது எடுக்கப்பட்ட குறிப்புகள் அவை.”

‘அரசியல்’ என்ற அரிஸ்டாட்டிலின் அரிய நூலைக் குறித்து, மொழிபெயர்ப்பாளர் சில கருத்துக்களை முன்வைத்து அவருடைய வரலாற்றுப் பின்னணியையும் அவரது இயல்பான வளர்ச்சி யையும் தன்னுடைய முன்னுரையில் தெளிவாக விளக்குகிறார்.

“அரிஸ்டாட்டில் பிறந்த சமயத்தில் ஏதென்ஸ் நகரரசினில் இளைஞர்களுக்குக் கல்வியளிக்கும் குருகுலங்கள் அல்லது பள்ளிகள் இருந்தன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சாக்ரடீஸ் மரண தண்டனை ஏற்று மறைந்தார். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஐசோ கிராடஸ் என்ற பேரறிஞர் பேச்சுக்கலைப் பயிற்சியை அளித்து மற்ற துறைகளிலும் கல்வி கற்பித்து வந்த ‘லைசியம்’ என்னும் பள்ளியைத் துவக்கியிருந்தார். பேரறிஞர் பிளேட்டோவின் அகாடமி என்ற பள்ளியும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஏதென்ஸில் ஸ்தாபிக்கப்பட்டது.

“கி.மு. 367 அளவில் அரிஸ்டாட்டில், பிளேட் டோவின் பள்ளியில் மாணவராகச் சேர்ந்தார். மாணவராகச் சேர்ந்த அரிஸ்டாட்டில் அகாடமியில் பின்னர் ஓர் ஆசிரியராகவும் ஆனார். இருபது ஆண்டுகள் அகாடமியில் படித்துப் பணியாற்றி விட்டு, பிளேட்டோ 347-இல் மரணமடைந்தார். பின்னர், அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் நகரைவிட்டு ஆசாஸ் என்ற நகருக்குச் சென்று தங்கினார். இந்நகர் சிறிய ஆசியப் பகுதியின் வடமேற்குப் பகுதியிலுள்ளது. இந்த ஆசாஸ் நகருக்கருகிலிருந்த அடர்னேயஸ் நகரரசில் அரிஸ்டாட்டிலுடன் அகாடமியில் பயின்றவனான ஹெர்மியாஸ் என் பவன் ஆண்டு வந்தான். அந்த ஹெர்மியாஸின் உடன் பிறந்தவரின் புதல்வியை அரிஸ்டாட்டில் மணம் புரிந்தார்.”

“பண்டைய கிரேக்க சமுதாயத்தை நாம் ஏன் ஒரு நாகரிகம் என்று குறிப்பிடுகிறோம்? அந்தக் காலத்தில் அவர்களுக்கிடையில் மலர்ந்திருந்த பல் துறை வளர்ச்சியே அதற்குக் காரணம். இலக்கியம், மருத்துவம், கணிதம், உயிரியல், தத்துவ தர்க்க வியல்கள், வாழ்வின் இலட்சியங்களைப் பற்றிய நெறி என்னவென்ற கருத்துக்கள், அரசியல் அமைப்புத் தத்துவம் ஆகிய ஒவ்வொரு துறையிலும் அவர்கள் அடைந்திருந்த முன்னேற்றம் அவ்வளர்ச்சியைக் குறிப்பிட்டது.”

“கி.மு. 342-இல் அரிஸ்டாட்டில் மாசிடன் பிரதேசத்தில் பெல்லா என்ற நகரில் அலெக் சாண்டருடைய ஆசிரியராகப் பணியாற்றினார்.”

“கி.மு. 336-இல் பிலிப் மன்னர் கொலை செய்யப்பட்டு அலெக்ஸாண்டர் மன்னரானார். அப்போது அரிஸ்டாட்டில் மாசிடன் பிரதேசத்தி லிருந்து மீண்டும் ஏதென்ஸ் நகருக்கு வந்து, அங்கே அவரே பள்ளி ஒன்றினை நிறுவினார்.”

“கி.மு. 336 - லிருந்து 323 வரை அரிஸ்டாட்டில் இப்பள்ளியின் தலைவராக, முதல்வராக இருந்தார் அவருடைய படைப்புக்கள் பல இந்தக் காலத்திலே தான் அவற்றின் இறுதி உருவத்தைப் பெற்றிருக்க வேண்டும். இக்காலத்தில் அவர் பழுத்த அனுபவம் பெற்று அவரது அறிவும் முதிர்ந்ததாயிருக்க வேண்டும். “அரசியல்” என்ற அரசியலைப் பற்றிய நூல் இக்காலத்ததாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.”

“அவரது அரசியல் என்ற நூல் ஓர் ஆராய்ச்சி நூல் எனலாம். அவர் 158 அரசியல் அமைப்பு களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தார். அவை கிரேக்கர்கள், கிரேக்கர்களல்லாத கார்த்த ஜீனியர்கள், பாரசீகர்கள் ஆகியோரிடையில் வழக்கில் இருந்த அமைப்புகள். அது தவிர அரசியல் அமைப்பு பற்றித் தனக்கு முன்பு கூறியிருந்த சிந்தனையாளர்கள், சட்டங்களை வகுத்த அறிஞர்கள் ஆகியோர் அவ் விஷயங்களைப் பற்றி என்ன கூறியிருந்தனர்

என்பதையும் அறிந்திருந்தார். ஆதலால் அவர் இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அரசியலைப் பற்றிய தனது கூற்றுக்களை முன் வைத்தார். நடைமுறையும், தத்துவமும் இணைந்த வகையில் உருவானது அவரது நூல். அரசியல் என்பதை ஒரு கற்பனைத் தத்துவம் என்றல்லாமல் உருப்படியான அனுபவத்தின் மீது எழுந்த ஒரு விஞ்ஞானமாக ஆக்கியது அவருடைய அரும்பணி யாகும்.”

‘அரசியல்’ நூலைப் படித்து முடித்தபோது இந்தக் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தொடர்ந்து ‘அரசியல்’ நூலின் முக்கியத் துவம் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்து கிறார். “ஓர் அரசில் ஏழைகளுக்கும், பணக்காரர் களுக்குமிடையில் நடுவிலான நடுத்தர வர்க்கம் தான் அரசியல் பாதுகாப்பான அம்சம் என்றெல்லாம் வாதிக்கிறார் அவர்... எனவே, அவரை ஒரு சீர்திருத்தவாதி என்றுதான் சொல்ல வேண்டும். தனி உடைமையைக் காக்க விரும்புகின்றவரின் அந்தக் கருத்து மாறிவிட்ட காலம் இது. தனி உடைமை பொது நலனுக்கும் சமூக நலனுக்கும் ஏற்றதல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ள காலம் இது. ஆனால், அந்தக் காரணம் பற்றி அரிஸ்டாட்டிலின் படைப்புகளை ஒதுக்கித் தள்ளி விடுவது என்பது அறிவியல் வளர்ச்சியில் முக்கியமான கட்டத்தைப் பற்றி அறியாமல் விட்டுவிடுவதாகும். முந்தைய சமூகம் ஒன்றில் பிறந்து நீண்டகாலமாகப் பிந்தைய சமூகத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்த ஒரு சிந்தனையை அறிந்து கொள்ளாமலிருப்பதோ, அறிய வேண்டாம் என்று இருப்பதோ வரலாற்றுப் போக்கினைத் தெரிந்துகொள்ள மறுப்பதாகும்.”

“அரிஸ்டாட்டிலின், ‘நன்னெறி’ என்ற நூலைத் தொடர்ந்ததாக வரும் ஒரு கருத்து மனிதனுடைய வாழ்வு மேம்பட்டது. மேம்பட்ட அந்த வாழ்வின் நெறி என்ன என்பதைப் பற்றிக் கவனித்தது அவருடைய ‘நன்னெறி’ நூல். அதைத் தொடர்ந்த தாக வந்த நூல் ‘அரசியல்.’

‘அரசியல்’ என்ற இந்த அருமையான நூல் எட்டுப் புத்தகங்களாகப் பிரிக்கப்பட்டு அரசியலின் தன்மைகளையும், வளர்ச்சிகளையும் ஒவ்வொன்றிலும் அடையாளப்படுத்துகிறது. வடிவமைப்பில் இது தனித்தன்மை மிகுந்த மாறுபட்ட உள்ளடக்கம் கொண்டு கூர்மையான கண்ணோட்டத்தை நமக்கு உணர்த்துகிறது. மேலும் ஒவ்வொரு புத்தகமும் பல தனித்தனியான பகுதிகளை உள்ளடக்கிய அரசியலை விளக்குகிறது. ஆழமான கருத்துக் களைத் தகுந்த எளிமையான எடுத்துக்காட்டு களின் வாயிலாகப் பொருத்தமான விதத்தில் விளக்குகிறார்.”

அரிஸ்டாட்டில் தனது முதலாவது புத்தகத்தில் தன்னுடைய சாராம்சமான கருத்தை வெளிப்படை யாகவும் தெளிவுபடுத்துகிறார். “ஒரு அரசிலுள்ள சுதந்திரர்களுக்குள் சரிபாதியினர் பெண்கள். அப் பெண்டிரும் குழந்தைகளும் அரசியல் நலனைக் கருத்துக் கொண்ட வகையில் பயில்விக்கப்பட வேண்டும்.”

தனது இரண்டாவது புத்தகத்தில், “தம் வாழ்வின் லட்சியத்தை அனுபவிக்கக்கூடிய மனிதர்கள் அனை வருக்கும் எந்த விதமான அரசியல் சமுதாயமானது சிறந்தது என்பதைக் கவனிப்பது நமது நோக்கம்” என்று ஒரு முன்னுரையாகக் குறிப்பிட்டு அந்தக் கருத்தை விரிவாக விளக்குகிறார்.

தன்னுடைய மூன்றாவது புத்தகத்தில் ஓர் அரசியல் அமைப்பில் தலைமைப் பொறுப்பை ஏற்பவரின் முதன்மையான தகுதி, நல்லொழுக்கம் என்பதை விரிவாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்து அதைத் தெளிவுபடுத்துகிறார். “நம்முடைய ஆராய்ச்சியின் ஆரம்பத்தில் முழுமைச் சிறப்பு வாய்ந்த அரசிலுள்ள பிரஜையின் நல்லொழுக்கமும், நல்ல மனிதனுடைய நல்லொழுக்கமும் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதை நாம் காண்பித்தோம். அதே வகையில் எந்த வழியிலே அந்த மனிதன் சிறந்தவனாகின்றானோ அதே வழியில் அவன் அரசை வகுப்பான். மன்னராட்சி முறையானாலும். நல்லோராட்சி, மேலோராட்சி முறையானாலும் அவன் (உண்மையில் உயர்வானதாயிருக்கும் அது) அரசை வகுப்பான். கல்வியிலும், பழக்க வழக்கங் களிலும் அதே கல்விப் பயிற்சியும் அதே பழக்க வழக்கங்களும் ஒரு நல்ல மனிதனை ஒரு நல்ல அரசியல் மேதையை, ஒரு அரசனை உருவாக்கும்.”

அடுத்து, அரிஸ்டாட்டில் தனது நான்காவது புத்தகத்தில் அரசாங்க அரசியல் அமைப்பு வகைகள் பற்றிய தனது கருத்துக்களை ஆழமான ஆய்வின் அடிப்படையில் தெளிவுபடுத்துகிறார். “ஜனநாயகம், ஆளிகார்ச்சி எனும் பணக்காரர் சிலராட்சி ஆகிய இரண்டைத் தவிர இன்னும் இரண்டு (அரசாங்க) அரசியல் அமைப்பு வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று அனைவராலும் அங்கீகரிக்கப் பட்டு, முக்கியமான நால்வகை அரசாங்க முறை களில் சேர்க்கப்பட்டுள்ளது. அவை (1) மன்னராட்சி முடியாட்சி (2) ஆளிகார்ச்சி அல்லது பணக்காரர் சிலராட்சி (3) ஜனநாயகம் (4) நல்லோராட்சி (அரிஸ்டாக்ரசி) என்று அழைக்கப்படுவது அல்லது சிறந்ததோர் அரசாங்கம். ஆனால் ஐந்தாவது ஒன்றும் இருக்கிறது அது ‘பாலிடி’ அல்லது ‘அரசியல் அமைப்புச் சட்ட அரசாங்கம்’ என்ற பொதுப்படையான பெயரைப் பெற்றுள்ளது.

தொடர்ந்து, தனது ஐந்தாவது புத்தகத்தில் அரசுகளில் புரட்சிகள் நிகழ்வது பற்றித் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையின் வழியாகத் தெளிவாக விளக்குகிறார். “அடுத்த படியாக அரசுகளிலே புரட்சி (அல்லது அரசியல் அமைப்பு மாறுபாடு) ஏற்படுவதற்குக் காரணங்கள் என்ன, அவை எத்துணை, அவற்றின் தன்மை (இயல்பு) என்ன; குறிப்பிட்ட அரசுகளில் எந்த அம்சங்கள் அவற்றை அரித்துப் பறித்துப் பாழாக்கு கின்றன, அப்படிச் செய்து அவை என்ன நிலை யினின்று என்னவாக மாறுகின்றன; மேலும் அரசுகளில் பொதுவாகவோ அல்லது ஒரு குறிப் பிட்ட அரசிலோ அதனை நீடித்துக் காப்பதாக உள்ள அம்சங்கள் என்ன, ஒவ்வொரு அரசும் எந்த வகையிலே சிறந்த முறையில் நீடித்துக் காக்கப் படலாம்” போன்றவை குறித்து விரிவான முறையில் தகுந்த ஆதாரங்களுடன் தனது முடிவு களைத் தெரிவிக்கிறார்.

மேலும், அரிஸ்டாட்டில் தனது ஆறாவது புத்தகத்தில் ஓர் அரசியல் அமைப்பில் வகிக்கப் படும் பதவிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருகிறார். “மீண்டும் கூறுவோம் - அரசுகளில் உயர்ந்த பதவிகளில் (ஓட்டு மூலம்) தேர்ந்தெடுக்கப்படும் உயர்ந்த பதவிகளில் - மூன்று வகைகள் இருக்கின்றன - சட்டக் காப்பாளர், புரோபுலை, கவுன்சிலர்கள். இவற்றுள் சட்டக் காப்பாளர் மேலோர் ஆட்சி ஸ்தானம், புரோபுலை சிலராட்சி வகை ஸ்தாபனம், கவுன்சில் அல்லது ‘பூலே’ ஜனநாயக ஸ்தாபனம் - பல்வேறு விதமான பதவிகளைப் பற்றி இம்மட்டும் கூறியது போதும்.” என்று அரிஸ்டாட்டில் மனநிறைவு கொள்கிறார்.

அரிஸ்டாட்டில் தனது ஏழாவது புத்தகத்தில் ஒரு அரசுக்கும் சரி, தனி மனிதர்களுக்கும் சரி, அதே வாழ்வு சிறந்ததா அல்லவா என்பதைக் கண்டறிய முனைகிறார். “ஒரு அரசின் மிகச் சிறப்பான அமைப்பு உருவத்தைப் பற்றி முறையாக ஆய்வதற்கு விரும்புகிறவன். எவ்வகையான வாழ்வு விரும்பத்தக்கது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். இது தெளிவாக இல்லாதிருந்தால் அரசின் சிறப்பான உருவமும் தெளிவானதாக, திட்டமானதாக இராது. ஏனெனில், சாதாரண மான முறைப்படி இருக்கும் நிலையில், மனிதர்கள் அவர்களது சூழ்நிலையும், சந்தர்ப்பங்களும் இட மளிக்கின்றதற்குத் தக்கபடி சிறப்பான முறையில் அரசாளப்பட்டு வருமிடத்தில் சிறந்த வாழ்வைக் கடைப்பிடித்து வாழ்வர் என்று எதிர்பார்க்கலாம். எனவே, நாம் எவ்வகையான வாழ்வு பொதுவாக மிகவும் அடையத்தக்கது விரும்பத்தக்கது என்பதை முதலில் அறிய வேண்டும்.”

சமூக அமைப்பில் கல்வியை எப்படி நடை முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றித் தெளிவாகவும், அழுத்தமாகவும் அரிஸ்டாட்டில் தனது கருத்துக்களை முன்வைக்கிறார். “கல்வி யானது, வாழ்க்கையில் இரு காலகட்டத்ததாகப் பிரிக்கப்படவேண்டும். ஏழினின்று பக்குவப் பருவம் வரையிலொன்று, பின்னர் அதனினின்று இருபத்தொன்றாம் ஆண்டு வரையில் இன்னொன்று. மனிதர் வாழ்வை ஏழேழு ஆண்டுகளாகப் பிரிப்பது (கவிஞர்கள் செய்வது போல) எப்போதுமே சரியெனக் கூறவியலாது. ஏற்கனவே, இயற்கை ஏற்படுத்தியுள்ள பிரிவுகளை நாம் பின்பற்றுவது தான் சரியாகும். ஏனெனில் இயற்கை காலியாக விட்டுள்ளவற்றைத் தந்து வாழ்வை நிரப்புவது தான் கலையும், கல்வியும் செய்யும் பணி.”

இறுதியாகத் தனது எட்டாவது புத்தகத்தில் அரிஸ்டாட்டில் குழந்தைகள் பற்றி கட்டுப்பாட்டு விதிகள் ஏதாவது வகுக்கப்பட வேண்டுமா என்பதைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்து தனது முடிவுகளை முன்வைக்கிறார். “சட்டமியற்று வோன் எல்லாவற்றினும் முதன்மையாக இளைஞர் களின் கல்வியைப் பற்றிக் கவனிக்க வேண்டும் என்பதையோ அல்லது கல்வியைப் புறக்கணிப்பது அரசுக்கே கேடு விளைவிப்பதாகும் என்பதையோ பற்றி எவருக்கும் எவ்விதச் சந்தேகமும் இருக்காது. பிரஜை அல்லது குடிமகன் எந்த அரசாங்கத்தின் கீழ் வாழுகின்றானோ அதற்கு ஏற்ற வகையில் அவன் கல்வி பயில்விக்கப்பட்டு உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் ஒரு தனிக்குண விசேஷமிருக்கிறது. அக்குண விசேஷம் ஆதியில் உருவாகி நீடித்து வந்து அரசாங் கத்தைப் பாதுகாத்துக் கொண்டு வருகின்றது.”

“கல்வி முறை மூன்று கொள்கைகளை, நடுமையானது, சாத்தியப்பாடானது (அவர்களுக்கு ஏற்றது), அவரவர்களை சிறப்புறச் செய்யக் கூடியது ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் தெளிவு.”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துரைத்துள்ள படைப்பு என்ற முறையில் அரிஸ்டாட்டிலின் நூல் அரசியல் அமைப்பு, அரசியல் சமுதாயம் என்பது நீடித்து மறையாது இருக்கும் நாள்வரை முக்கியமான நூலாக இருக்கும். ஏனைய அரசியல் தத்துவ அறிஞர் பலர் ஒரு பிரஜையின் உரிமை என்னவென்றோ அரசினில் முடிவான அதிகாரம் யாருடையதாக இருக்க வேண்டும் என்றோ, அரசின் அதிகாரம் எவ்வளவினதாக இருக்கும் என்றோ - இவ்வாறாக அரசியலில் ஏதாவது ஒரு முக்கியமான பகுதியைப் பற்றியோ, சில முக்கியமான பகுதிகளைப் பற்றியோ கூறி யுள்ளனர். அரிஸ்டாட்டிலோ அவை அனைத்தையும் பற்றி இந்நூலில் கூறியிருக்கின்றார். மனத்தில் வகுத்துள்ள ஒரு கோட்பாட்டின் அடிப்படை யிலன்று; நடைமுறையில் இருந்த நிலைமைகளை உதாரணங்களாகவோ, மேற்கோள்களாகவோ கூறி அடிப்படையான கொள்கைக் கருத்துக்களை வகுத்துக் கூறியிருக்கின்றார்.

அரிஸ்டாட்டிலின் பல நூல்களில் ஒன்றான இது அரசியல் தத்துவத்தைப் பற்றி முறையான படிப்புக்கு ஆதாரமாகக் கருதப்பட்டு இன்றும் மேல்நாட்டு மேல்படிப்பில் பாடநூலாக வைக்கப் பட்டிருக்கும் ‘அரசியல்’ என்ற இந்த நூலை மொழிபெயர்ப்பாளர் சி.எஸ். சுப்பிரமணியம் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் கடுமையான உழைப் புடனும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மனித வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் வாசித்து சமுதாய அரசியல் பார்வையை வளப்படுத்திக் கொள்ள இந்த நூல் மிகவும் பொருத்தமுடையது

அரசியல்

அரிஸ்டாட்டில்

தமிழில்: சி.எஸ்.சுப்பிரமணியம்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41 - பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொலைபேசி எண்: 044 - 26251968

 ` 285/-

Pin It