கடந்த பத்து ஆண்டுகளாக உலகத்தில் மக்களாட்சி சிதிலமடைய ஆரம்பித்து விட்டது என்று விவாதம் செய்வதை நாம் அறிவுத் தளத்தில் பார்த்து வருகிறோம். தற்போது மக்களாட்சியை சிறையிட்டுவிட்டனர். மக்களாட்சிக்கு விடுதலை வேண்டும் என்று விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். மக்களாட்சி பற்றி தொடர் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள். மக்களாட்சி வரலாற்றை புரட்டும்போது அது ஒரு காலத்தில் தத்துவமாக இருந்தது, பிறகு அது ஒரு சமூகத்தை ஆட்சி செய்யும் முறையாகப் பயன்படுத்தப்பட்டது, அடுத்து மக்களாட்சி என்பது ஒரு கலாச்சாரம். அது சமூகத்தை, அரசியலை மேம்படுத்தும் கருவியாக உபயோகப்படுத்தினர்.

மக்களாட்சி பற்றிய ஆய்வினை இரண்டாம் உலகப்போருக்குப்பின் தான் மிகப் பெரிய அளவில் கவனப்படுத்தி மேற்கத்திய நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டன. அப்படி செய்யப்பட்ட ஆய்வுகளை சற்று பின் நோக்கி தொகுத்துப்பார்த்தால் அந்த ஆய்வுகள் மூன்று கோணங்களில் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒன்று மக்களாட்சி நடைபெறுகின்ற ஒரு நாட்டில் மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடுகள் எப்படி நடைபெறுகின்றன என்று ஆய்வு செய்திருக்கின்றனர். அடுத்து, மக்களாட்சி நடைபெறுகின்ற நாடுகளில் அரசியல் சூழல் மேம்படுத்தப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்துள்ளனர். மூன்றாவதாக மக்களாட்சி எப்படி உருவாக்கப்பட்டு மேன்மைத் தன்மையை அடைகிறது என்று தொடர் ஆய்வினை பல நாடுகளை ஒப்பு நோக்கிச் செய்து ஆய்வு அறிக்கைகளைக் கொண்டு வந்துள்ளனர். இந்த ஆய்வுகளை ஒப்பு நோக்கு ஆய்வின் (Comparative Methodology) மூலம் பெரு நிதியைச் செலவிட்டு மேற்கத்திய அறிஞர்கள் ஆய்வு செய்து தரமான நூல்களை பதிப்பித்துள்ளனர்.election thumb 1மக்களாட்சி, அரசியல், சமூகத்தில் நடைபெறும் மேம்பாட்டுச் செயல்பாடுகள் என்ற இந்த மூன்றுக்கும் இருக்கின்ற தொடர்புகளையும் ஆய்வு செய்துள்ளனர். அதுவும் குறிப்பாக இரண்டாவது உலகப் போருக்குப் பின் விடுதலை அடைந்த நாடுகளில் மக்களாட்சி எப்படி செயல்படுகிறது என்பதனை ஆய்ந்தனர். அதில் முக்கிய அம்சமாக முடியாட்சி அல்லது எதேச்சதிகாரத்திலிருந்து வெளிவந்த சமூகம் இந்த மக்களாட்சியை எப்படி தன் வயப்படுத்திக் கொள்கிறது என்பதுதான் மையக்கருத்தாக வைத்து ஆய்வு செய்யப்பட்டது. மக்களாட்சி நடைபெறும் பல நாடுகளில் விடுதலையடைந்ததிலிருந்து சிறிது சிறிதாக மக்களாட்சி வளர்த்தெடுக்கப்பட்டு மேம்படுத்துவதற்குப் பதில், அது பிறந்த இடத்திலேயே தன் செயல்பாடுகளை தக்க வைத்துக் கொண்டிருந்த நிலைகளை தங்கள் ஆய்வின் மூலம் கொண்டு வந்தனர். ஆடுகளத்திற்கு வர வேண்டிய மக்களாட்சி மீண்டும் அது தன் குணங்களை தன்மைகளை இழந்து மக்களாட்சியில் மன்னராட்சித் தன்மைகளை பரவச் செய்து கொண்டிருக்கிறது என்பதனை வளர்ச்சியற்ற குழந்தைபோல் குறைந்தபட்ச மக்களாட்சியாக இருந்து வருவதை படம்பிடித்துக் காட்டினர் ஆய்வாளர்கள். அது பிறந்த இடத்திலேயே இருக்கிறது என்பதற்குப் பொருள் மக்களாட்சி தேர்தலைத் தாண்டவே இல்லை என்பதுதான். அது மட்டுமல்ல அந்தத் தேர்தலையும் குறைகளற்று நடத்த முடியவில்லை, எனவேதான் இந்தக் குறைந்தபட்ச மக்களாட்சி குறையுடைய மக்களாட்சியாக செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினர்.

இந்த ஆய்வுகளிலிருந்து ஒருசில கருத்தாக்கங்களை உலகுக்குக் கொண்டு வந்தனர் ஆய்வாளர்கள். மக்களாட்சி முறை ஆளுகையில் முறைமையுடன் ஆட்சி நடந்தால் அது அந்த நாட்டின் அரசியலை மேம்படுத்தும். அதேபோல் மேம்பட்ட அரசியல் ஒரு நாட்டில் நடைபெற்றால் அது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டினைக் கொண்டுவரும். இவைகளை கோட்பாட்டுக் கருதுகோளாக வைத்து ஆய்வுகளைத் தொடர்ந்தனர். ஒரு குறிப்பிட்ட காலம் வரை இது ஒரு வழிப்பாதை செயல்பாடாக விளக்கப்பட்டது. அதாவது மாற்றங்களும் மேம்பாடும் ஆரம்பமாகும் இடம் மக்களாட்சி. அதிலிருந்து அரசியல் மேம்பாடு, அடுத்து அதிலிருந்து சமூகப் பொருளாதார மேம்பாடு என்பதாகவே பார்த்தனர்.

பிற்காலத்தில் வந்த ஆய்வுகள் இந்தக் கருதுகோள்களை நிராகரித்தன. ஒரு சமூகம் மக்களாட்சியை எப்படி புரிந்து கொண்டு தன் பங்கினை அரசியலில் ஆற்றுகின்றதோ அந்த அளவிற்குத்தான் மக்களாட்சி சமூகத்தில் தாக்கங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று அரசியல் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்தவர்கள் விளக்கினார்கள். இதில் மிக முக்கியமாக மிகத் தொன்மையான நாகரீகங்களைக் கொண்ட சமூகங்களில் மக்களாட்சிக்கான நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்டிருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் எடுத்து விளக்கியிருக்கின்றார்கள். மக்களாட்சி என்ற கருத்தாக்கம் கிரேக்கத்திலிருந்து வந்தது என்று எழுதிய காலம் உண்டு, அதே காலத்தில், ஏன் அதற்கு முன்பே இந்திய மண்ணில் மக்களாட்சி மலர்ந்திருக்கிறது என்பதையும் வரலாற்று ஆசிரியர்கள் கூறியபின், அதன் தன்மைகளை ஆய்வு செய்தவர்கள் அது ஒரு வரையறுக்கப்பட்ட மக்களாட்சியாகத்தான் இருந்தது என்று விவாதிக்கின்றனர்.

இந்த வரலாற்று ஆய்வுகளில் மக்களாட்சிக்கான அடிப்படைக் கூறுகள் என்னென்னவெல்லாம் ஒரு சமூகத்தில் இருந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டி விளக்கியதுதான் பிற்காலத்தில் மக்களாட்சிக் கலாச்சார மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கு மிக உதவிகரமாய் அமைந்துள்ளது. இந்த சமூக, அரசியல், மக்களாட்சி என்கின்ற கூறுகளுக்கிடையில் உள்ள உறவுமுறைகள் பற்றி விவாதிக்கும்போது ஆய்வாளர்கள் நவீனகால மேற்கத்திய மக்களாட்சி முறைச் செயல்பாடுகளிலிருந்து புதிய மக்களாட்சி நாடுகளுக்கு வழிகாட்ட நெறிமுறைகளை விளக்கினார்கள். அதாவது ஒரு நாட்டில் மக்களாட்சி அமைப்புக்கள் முறையாக கட்டமைக்கப்பட்டு விட்டால், அந்த ஆட்சிமுறை மக்களை நெறிப்படுத்திவிடும் என்பதை மேற்கத்திய நாடுகளை வைத்து விளக்கினர். அத்துடன் அந்த ஆட்சி முறை மக்களுக்கு மேம்பாட்டையும் கொண்டு வந்துவிடும் என்றும் விளக்கினர்.

பொதுவாக மக்களாட்சி நடைபெறுகின்ற நாட்டில் மக்களாட்சி அரசாங்கத்தில் முறையாக ஆளுகை மற்றும் நிர்வாகத்திற்கான அமைப்புக்களைக் கட்டமைக்க வேண்டும். மக்களாட்சி எந்த இடத்திலும் தனி மனிதர்கள் கையில் சிக்காமல் நிறுவனமாக தனித்தன்மையுடன் செயல்பட கட்டமைக்கப்படல் வேண்டும். கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்குத் தேவையான புரிதலையும் பயிற்சியையும், அந்த நிறுவனங்களை இயக்கும் மனிதர்களுக்குத் தந்திட வேண்டும். அதேபோல் அதை முறையாகக் கண்காணிக்க மக்கள் கண்காணிப்பகம் சமூகத்தில் உருவாக்கப்பட்டு செயல்பட வேண்டும்.

அடிப்படையில் மக்களாட்சி உரிமைகளிலும் (Rights), ஒழுக்க நியதிகளிலும்தான் (Virtues) கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உரிமைகள் என்பது நவீனகால மக்களாட்சி முறையில் உருவானவைகள். ஆனால் மக்களாட்சிக்கான ஒழுக்க நியதிகள் மற்றும் விழுமியங்கள் என்பது வரலாற்றிலிருந்து கொண்டு வரப்பட்டவைகள். உரிமைகளை அனுபவிக்க எந்தக் கல்வியும் தேவை இல்லை. ஆனால் மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகள் நிலைத்து நிற்க மக்களாட்சி மேம்பட வேண்டும். அதற்கு மக்களிடம் மக்களாட்சிக்கான ஒரு கலாச்சாரம் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். அந்த கலாச்சாரம் என்பது மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளைப் பின்பற்றுவது. ஒரு சமூகத்தில் மக்களாட்சிக்கான ஒழுக்க நியதிகளை வளர்த்தெடுப்பது மிக எளிதாக நடந்து விடுவது கிடையாது. இதற்கு ஒரு மக்கள் கல்வித் திட்டம் தேவை. அதுதான் குடிமக்களை உருவாக்கும் கல்வி. இந்தக் கல்வி இன்றைய கல்வித் திட்டத்தில் இடம் பெறவில்லை. இந்தக் கல்வி மாணவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் வேண்டும். இதை யார் செய்வது என்பதுதான் கேள்வி. இந்தக் கல்வியை கல்விச் சாலைகளும், பொதுக் கருத்தாளர்களும் சீர்திருத்தவாதிகளும், நடுநிலை ஊடகங்களும் செய்திட வேண்டும்.

ஒரு நல்ல அரசு அமையும்போது, அதனிடம் இருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி ஆட்சியைச் சிறப்புடன் நடத்தி, மக்களின் மேம்பாட்டை கொண்டு வந்து விட்டனர் ஒருசில நாடுகளில். அத்துடன் ஒரு அரசியல் மாற்றத்தையும் கொண்டு வந்துவிட்டனர். ஆட்சி மேம்படுவதும், சமூகம் மேம்படுவதும், அரசியல் மேம்படுவதும், மக்களாட்சியை மேன்மையடையச் செய்கின்றன. இதை வைத்துத்தான் பொருளாதாரத்தில், ஆளுகையில், அரசியலில், மேம்பட்ட ஒருசில நாடுகள், இந்த ஆட்சிமுறையை விரிவுபடுத்தினால் உலகம் பயன்பெறும் என்று எண்ணி மக்களாட்சி விரிவாக்கம் என்பதை பெருநிதி அளித்து செயல்பட்டனர். இந்த மக்களாட்சி விரிவாக்கம் நடைபெறுவதை மக்களாட்சியில் இல்லாத நாட்டின் தலைவர்கள், உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு சில நாடுகள் வல்லரசாக இருப்பதால் அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர்.

சுதந்திரம் அடைந்த நாடுகளில் மக்களாட்சியைக் கைக் கொள்ள மிக முக்கியத் தேவை மக்களாட்சி நிறுவனங்களை முறையாக உருவாக்கி, அவைகளை நிலைபெறச் செய்வது. அடுத்து சமூகத்தில் மக்களாட்சி விழுமியங்களை மக்கள் மத்தியில் கலாச்சாரமாக உருவாக்குவது. மூன்றாவது இந்த இரண்டும் அதாவது மக்களாட்சிக்கான ஆளுகை மற்றும் நிர்வாக அமைப்புக்கள் செம்மையாக செயல்படவும், சமூகம் மக்களாட்சிமயப்படவும், அரசியல் மக்களாட்சியில் கட்டமைக்கப்படல் வேண்டும். இந்த மூன்றும் முறைமையுடன் செயல்பட்டால் பொருளாதார மேம்பாடு அனைவருக்குமானதாக மாறும்.

இன்றைய மக்களாட்சியில் உள்ள இரு கூறுகள் அதாவது மக்களாட்சியில் உரிமைகள் மற்றும் கடமைகள் அல்லது பொறுப்புக்கள் அல்லது மக்களாட்சி விழுமியங்கள் இரண்டு இடங்களிலிருந்து வெளிவந்தவைகள். மக்களாட்சியின் உரிமைகள் என்பவை நவீன கால மக்களாட்சித் தத்துவத்திலிருந்து புறப்பட்டவைகள். இந்த உரிமைகள் என்பது சமூகத்தில் உள்ள மரபுவழிச் சிந்தனைகள், புரபுத்துவ மனோபாவச் செயல்பாடுகள், ஆதிக்கச் சிந்தனைகள் அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் சக்தி கொண்டவைகள். இவை மேற்கத்திய நவீன மக்களாட்சியால் உருவாக்கப்பட்டவை. இந்த உரிமைகளில் முதன்மையானது வாக்குரிமை.

இந்த வாக்குரிமை மூலம் குடிமக்களிடம் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தந்துவிட்டனர். இந்த செயல் கூறும் செய்தி என்னவென்றால், என் முன்னே என் வாக்கைப் பெற வரும் தலைவனின் தகுதி, திறமை, நேர்மை, கண்ணியம், நம்பகத்தன்மை, வாக்குறுதி இவைகளைச் சோதனை செய்து நான் என்னை ஆள்வதற்கு என் உரிமையைப் பயன்படுத்தி என் பிரதிநிதியை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தேர்ந்தெடுப்பேன், அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் சரியில்லை என்றால் மறு தேர்தலில் அவனைப் புறக்கணிப்பேன் என்று கூறுவதுதான். ஆட்சியாளன் என் கையில் என்று கூறுவதுதான் அந்த உரிமை. அந்த உரிமை எப்போது சிறப்பாகச் செயல்படுமென்றால், அந்த வாக்கினைப் பயன்படுத்தும் மனிதன் தான் ஒரு நாட்டின் குடிமகன் என்ற நிலையில் மக்களாட்சிக்கான விழுமியங்களை புரிந்து கலாச்சாரமாக பயன்படுத்தத் தெரிந்தவர்களாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும் என்பது உலகில் நிரூபணமான ஒன்று.

இன்று மக்களாட்சியில் உள்ள சிக்கல்களுக்கு சட்டங்கள் மூலம் அல்லது தொழில்நுட்பங்கள் மூலம் அல்லது ஒரு சில நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம் தீர்வு காண முயல்கின்றன பெரும்பாலான மக்களாட்சி அரசாங்கங்கள். மேற்கத்திய நாடுகளில் மட்டுமே மக்களாட்சிக்கான சீர்திருத்தங்கள் நல்ல விளைவினைத் தந்தன. மற்ற வளர்முக நாடுகளில் எந்த நல் விளைவுகளையும் தந்திடவில்லை என்பது நிரூபணமாகியது. எனவே மேற்கத்திய நாட்டுச் சீர்திருத்தங்களால் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை. காரணம் சிக்கல் வேறொரு இடத்தில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர். அது மக்களிடத்தில்தான் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க நமக்கு இத்தனையாண்டுகள் ஆகி இருக்கின்றன. எங்கு குடிமக்கள் தயாரிப்பு செவ்வனே நடைபெறுகின்றதோ அங்கு மக்களாட்சியில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வுகள் எட்டப்படுகின்றன. இன்றைய சிக்கல் எந்த இடத்தில் என்றால் குடிமக்கள் தயாரிப்பில் பெரும்பாலான நாடுகள் கோட்டை விட்டன. வாக்குரிமை கொடுத்த நாடுகள், கொடுத்த உரிமைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையை பொதுமக்களிடம் உருவாக்கத் தவறிவிட்டன. வாக்குரிமையை போராடிப் பெற்ற நாடுகளில் இந்தச் சிக்கல் மிகக் குறைவு. வாக்குரிமையை மிக எளிதாக மக்களுக்குக் கொடுத்த நாட்டில் மக்களாட்சி சிக்கல்களை சந்திக்கிறது. இந்தச் சிக்கல்களைத் தீர்க்க இன்று உள்ள வாய்ப்பு பொதுமக்களை குடிமக்களாகத் தயாரிப்பது ஒன்றுதான் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

குடிமக்கள் தயாரிப்பு என்பது சாதாரண நிகழ்வல்ல. காரணம் மக்களாட்சியின் விழுமியங்களாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நியதி, தியாகம், நேர்மை, சேவை, மக்களை மதித்துப் போற்றும் பண்பு, கருத்துக்களை மதித்து உள்வாங்கும் பண்பு, எதிர்க்கருத்துக்கு மதிப்பளித்தல், அனைவரையும் உள்வாங்குதல், கேள்வி கேட்பதை ஆதரித்தல், உண்மையை நோக்கிச் செயல்படல், தரவுகளில் செயல்படல் என்கின்ற பல்வேறு விழுமியங்கள் இந்த நவீனகால மக்களாட்சியிலிருந்து வரவில்லை. அவைகள் பண்டைய மக்களாட்சியிலிருந்து எடுத்து வளர்க்கப்பட்டவை. இவற்றை இந்த நவீனகால மக்களாட்சியில் வந்த உரிமைகளுடன் இணைப்பதில் கோட்டை விட்ட நாடுகள்தான் மக்களாட்சி என்ற பெயரில் மன்னராட்சியை நடத்துகின்றன.

இந்திய மண்ணில் கிரேக்கத்துக்கு இணையாக ஒரு மக்களாட்சி முறை இருந்துள்ளது, அதன் விழுமியங்கள் மேற்கத்திய விழுமியங்களைவிட மேம்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காரணம் பொது ஒழுக்கங்கள் என்பது ஆட்சியிலும் சரி, சமூகத்திலும் சரி பேணப்பட வேண்டும் என்பதை அடிப்படையாக்கி வைத்திருந்தனர். நம் நாட்டு மக்களாட்சி என்பது மற்ற நாடுகளிலிருந்து வித்தியாசமானது என்ற கருத்தை உருவாக்கியவர்கள் விவேகானந்தர், அரவிந்தர், மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர். இதைத்தான் ஒரு 40 ஆண்டுகால ஆய்வினை மேற்கொண்ட டென்னிஸ் டால்டன் கூறுகிறார், “சுதந்திரம் என்பதற்கு இந்த நால்வரும் கொண்ட கருத்து மேற்கத்திய அறிஞர்கள் கொண்ட கருத்திற்கு முற்றிலும் வேறுபட்டது”. இவர்கள் அனைவரும் கூறியது நம் மக்களாட்சி தர்மத்தின் அடிப்படையில் உருவான ஒன்று என்பதைத்தான். இது இந்தியாவுக்கு மட்டுமான மக்களாட்சி அல்ல உலகத்திற்கான மக்களாட்சி, உலக மக்களுக்கு மட்டுமான மக்களாட்சி அல்ல, உலகத்தில் உருவான அனைத்து உயிர்களுக்குமானவை.

இந்த மக்களாட்சி என்பது உலகம் ஒன்றென பாவித்து வாழ்வியலில் இணைந்தது. இன்றைய நம் மக்களாட்சி என்பது குறைந்தபட்ச மக்களாட்சியாகவும் திரிபு பட்டு செயல்படுகிறது இந்தியாவில். இதை சரிசெய்ய மிகப்பெரிய மக்கள் இயக்கச் செயல்பாடு ஒரு கல்வித் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான கல்வி ஒன்று தேவை என்பதை இந்த நால்வரும் வலியுறுத்தினார்கள். அரிஸ்டாட்டில் தனது அரசியல் என்ற புத்தகத்தில் ஒரு மக்களாட்சி நாட்டில் மக்கள் தாங்கள் எப்படி ஆளப்பட வேண்டும், எப்படி ஓர் ஆளுகை இருக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார். அதற்கான ஒழுக்க நியதிகள் அரசியலும் ஆட்சியிலும் எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது குடிமக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் ஓர் ஆட்சியின் தன்மையை நிர்ணயிக்கும் என்றார்.

ஒரு நல்ல மக்களாட்சி என்பது மக்களாட்சியின் ஒழுக்கக் கூறுகளை மக்களுக்கு போதிப்பதை முக்கியக் கடமையாக இருக்க வேண்டும் என்றார். மக்களாட்சியில் ஆட்சி என்பது உண்மை நோக்கிச் செயல்படுவதும், உண்மையை நோக்கி மக்களை பயணிக்க வைப்பதும்தான் மிக முக்கியமான மக்களாட்சிப் பணியாகும். மக்களாட்சியில் குடிமக்கள் தங்கள் தேவைகளைப் பற்றி மட்டும் சிந்திக்கக்கூடியவர்கள் அல்ல, முதலில் அவர்கள் பொறுப்புமிக்க குடிமக்களாக சமூகத் தேவைகள் பற்றி சிந்திப்பவர்கள். அதில் தங்கள் தனிமனிதத் தேவைகளைப் பார்ப்பவர்கள். மக்களாட்சியில் மக்கள் தலைவர்கள் எளிமையாக வாழும் மனப்பக்குவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற நியதி இன்று பெரும் பணக்கார நாடுகளில் உள்ளது. ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் அரசியலிலும் சரி ஆட்சியிலும் சரி தலைமை தாங்கி செயல்படுபவர்கள் பகட்டு வாழ்க்கை வாழ்வது என்பது மக்களாட்சிக்கு முரணானதாகும். அத்துடன் உண்மைக்கு மாறாக புனைவுகளைக் கொண்டு தலைவர்களுக்கு பிம்பம் கட்டி தலைவர்களை பொருள்கள் விற்பது மக்களாட்சி கூறுகளுக்கு முற்றிலும் முரண்பட்ட செயல்பாடு. ஆகையால்தான் பல நாடுகளில் மக்களாட்சிக் சிதிலமடைய ஆரம்பித்து விட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்தச் சூழல் மாறத்தான் குடிமக்கள் பண்பு வளர்க்கும் ஒரு அறிவுத் திட்டம் தேவை என்று கோடிட்டுக் காட்டுகின்றனர் வல்லுனர்கள்.

இந்தப் பார்வை வந்துவிட்டால் மக்கள் குடிமக்களாகச் சிந்தித்து சமூகப்பார்வையுடன் தியாகம் செய்து சமூகத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்கள். நல்ல மக்களாட்சியில் பொதுமக்கள் குடிமக்களாக மாறி தங்கள் வாழ்க்கைக்கு தாங்களே பொறுப்பேற்கும் தலைவர்களாக மாறிவிடுவார்கள். மக்களுக்கு. சமூகத்தை மக்களாட்சிப்படுத்துவதற்கு ஒரு கல்வி பிரதானமாக உருவாக்கப்படல் வேண்டும். நம் நாட்டில் நம் மக்களாட்சியை சற்று அலசி ஆராய்ந்து பார்த்தால், மக்களாட்சிக்கான அனைத்து அமைப்புக்களும் உருவாக்கப்பட்டுவிட்டன. ஆனால் அந்த அமைப்புக்கள் மக்களாட்சிப்படுத்தப்பட்டனவா என்றால் ஆம் என்று கூற இயலாது. அடுத்து சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டிய மக்களாட்சிப் பண்புகள் மக்களிடம் வளர்த்தெடுக்கப்படவில்லை. மக்களாட்சிக்கு எதிரான கூறுகளைத்தான் சமூக வாழ்க்கையில் மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

எனவே இந்தச் சூழலை மாற்றத் தேவை ஒரு புதிய கல்வித் திட்டம். அந்தக் கல்வித் திட்டம் எல்லா கல்விக் கூடங்களிலும் பள்ளியிலும் கல்லூரியிலும் எல்லாப் பாடத்திட்டத்திலும் இணைக்கப்படல் வேண்டும். இந்தக் கல்வி என்பது அறிவியல் படித்தாலும் சரி, மருத்துவம் படித்தாலும் சரி, பொறியியல் படித்தாலும் சரி, மருந்தியல் படித்தாலும் சரி, விவசாயம் படித்தாலும் சரி இந்தப் பாடத்திட்டம் இணைக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இந்தக் கல்வி மக்களாட்சி மற்றும் குடிமைப் பண்புகள் என்ற இரண்டும் இணைந்த ஒன்று. இந்தக் கல்வியை மாணவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியல்துறை தான் இதற்கான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும். அதுதான் நாம் தேடும் மக்களாட்சிக் கல்வி.

- க.பழனித்துரை, காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It