‘ப்ளஸ் டூ’ தேர்வில் இவ்வாண்டும் வழக்கம் போல் மாணவிகளே சாதனை படைத்துள்ளனர். 87.3 சதவீதம் மாணவிகளும், 81.3 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்களுக்கு கல்வி உரிமையையே மறுத்தவைதான் பார்ப்பன - இந்து மத தர்மங்கள்!

“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?” என்று ஆணாதிக்க சிந்தனையில் உதித்த பொன்மொழியை சுக்குநூறாக உடைத்துத் தள்ளியிருக்கிறார்கள் - மாணவிகள்!

சென்னை, திருச்சி, கோவை போன்ற பெரும் நகரங்களில் செல்வாக்கும், வசதி வாய்ப்புகளும் உள்ள பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளைவிட, கிராமப்புறப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

இவை எல்லாவற்றையும்விட சிறப்பாக ஒன்றை சுட்டிக் காட்ட வேண்டும். அதுதான், சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி வரும் சாதனை. பல்லாயிரம் ரூபாய் பணத்தை வாரி இறைத்து, நவீன தரத்துடன் உயர்ந்த கட்டமைப்புகளோடு சென்னை நகரில் - ஏராளமான தனியார் பள்ளிகள், தங்கள் கல்வி வணிகத்தை நடத்தி வருகின்றன.

இந்தப் பள்ளிகளில் தங்கள் குழந்தை படிப்பதில் தான் தங்களது குடும்பத்தின் செல்வாக்கும், பெருமையும் அடங்கியிருக்கிறது என்ற உளவியலில், இந்த வணிக நிறுவனங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகிறார்கள். இந்த சமூகப் பின்னணிகளுக்கு முற்றிலும் மாறாக ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வீட்டுப் பிள்ளைகளுக்காக கதவுகளைத் திறந்து வைத்திருப்பவைதான் மாநகராட்சி பள்ளிகள்.

மாநகராட்சிப் பள்ளிகளிலே தங்கள் பிள்ளைகள் படிக்கிறது என்று கூறுவதற்கே பெற்றோர்கள் தயங்கக்கூடிய பார்ப்பனிய உளவியல்தான், இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் - “நாங்கள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல” என்று மாநகராட்சிப் பள்ளி மாணவ மாணவியரும் நிரூபித்துக் காட்டியுள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் பிளஸ் டூ தேர்வில் 81 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதிலும் மாணவர்களைவிட மாணவிகளே முன்னணியில் நிற்கிறார்கள். தண்டையார்பேட்டை அப்பாசாமி வீதியிலுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். புரசை கங்காதீசுவரர் வீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 99 சதவீதமும், விருகம்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 94.4 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாதவரம் நெடுஞ்சாலையிலுள்ள எச்.எல்.எல். மாநகராட்சிப் பள்ளியைச் சார்ந்த மாணவி கல்பனா, 1,143 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 1000 மதிப்பெண்களுக்கு மேல், 151 மாணவர்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்றுள்ள கல்பனா, 10 ஆம் வகுப்பிலும் மாநகராட்சிப் பள்ளியில் படித்து முதலிடம் பெற்றவர்.

சென்னையில் ‘உயர்தரமுள்ள’ தனியார் பள்ளிகள், கல்பனாவுக்கு, இலவசமாக கல்வி வழங்கிட போட்டி போட்டு அழைப்பு விடுத்தாலும், அதை நிராகரித்து, என்னை இதுவரை உருவாக்கிய மாநகராட்சி பள்ளியில்தான் எனது பிளஸ் டூ கல்வியும் தொடரும் என்று உறுதியாக அறிவித்து சாதித்தும் காட்டியிருக்கிறார். சபாஷ் கல்பனா! ஏழைக் குடும்பத்தில் பிறந்த கல்பனாவின் தந்தை ஒரு போலீஸ்.

ஒவ்வொரு நாளும் மக்களை நேரடியாக சந்தித்து, மக்கள் பணியில் தன்னை முழுமையாக்கிக் கொண்ட, எளிமையான ஒரு தொண்டர் சென்னை மாநகராட்சியின் மேயராக வந்திருப்பது, சென்னை நகரத்துக்கே பெருமை சேர்ப்பதாகும். ஒடுக்கப்பட்ட சமூகத்திலே பிறந்து முதல் தலைமுறையாக உயர் பதவியை அலங்கரிக்கும் சமூக நீதியிலும் பெரியார் கொள்கையிலும் ஆழ்ந்த பிடிப்புள்ள மரியாதைக்குரிய மேயர் மா. சுப்ரமணியம், மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி வருவது பாராட்டுக்குரியதாகும்.

தமிழை இரண்டாவது பாடம் எடுத்த மாணவர்கள்தான், மாநிலத்திலே முதல், இரண்டாவது இடத்துக்கு வர முடியும் என்று தமிழக அரசு ஆணை தெளிவாக இருந்தும், சிலர் பிரஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை இரண்டாவது பாடமாக எடுத்து, அதில் 200க்கு 200 மதிப்பெண்களையும் வாங்கி, கூடுதல் மதிப்பெண் பெறுகிறார்கள். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ போன்ற நாளேடுகள் இவர்களைத் தான் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்களாக படம் பிடித்து முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டு தங்கள் பார்ப்பன உணர்வை வெளிப்படுத்துகின்றன.

இந்தச் சூழலில் உண்மையான அறிவும், ஆற்றலும், ‘தகுதி’யும், ‘திறமை’யும் கொண்ட மாணவர்களாக இந்த மாநகராட்சிப் பள்ளியில் படித்து சாதனை புரிந்த மாணவ மாணவிகளைத்தான் நாம் பார்க்கிறோம். உச்சிமோந்து பாராட்டுகிறோம்; மாணவச் செல்வங்களே! சமூகத் தடைகளையும் சூழல்களையும் வென்று நிற்கும், உங்கள் சாதனைகள் தொடரட்டும்!

Pin It