சென்ற இதழின் தொடர்ச்சி...
1908 அக். 19 அன்று ‘24 பர்கானாஸ்’ மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சார்ல்ஸ் போடென் பீச்ரோஃப்ட் முன் வழக்கு விசாரணக்கு வந்தது. பீச்ரோஃப்ட்டும் அரவிந்தரும் ஒரே ஆண்டில் இங்கிலாந்தில் ICS தேர்வு எழுதியவர்கள். அரவிந்தர் பீச்ரோஃப்டைக் காட்டிலும் ‘மெரிட்’ வரிசையில் அப்போது முன்னிருந்துள்ளார். இப்போது ஒருவர் நீதி வழங்கு ஆசனத்தில்; மற்றவர் குற்றவாளிக் கூண்டில். குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு வாதாட 15 பேர் கொண்ட வழக்குரைஞர் குழுமம் இருந்தது.
அரவிந்தருக்காக வழக்காட ப்யோம்கேஷ் சக்கரவர்த்தி எனும் புகழ்பெற்ற பாரிஸ்டர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கீழ் நீதிமன்றத்தில் நீதிபதி பிர்லே, கோஸ்வாமியைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காததை சட்ட விரோதம் என சக்கரவர்த்தி தன் விவாதத் திறமையால் நிறுவினார். பீச்க்ராஃப்ட் அதை ஏற்றுக்கொண்டார். இதற்கெதிரான நார்ட்டனின் மறுப்பு அங்கே எடுபடவில்லை.
மீண்டும் இது குறித்து விசாரிக்க இப்போது கோஸ்வாமி உயிருடன் இல்லை.
விசாரணை தொடர்ந்தது (1908 - 1909). மேலும் சில ஆவணங்கள் நீதிமன்றத்தின் முன் இருதரப்பாலும் முன்வைக்கப்பட்டன. ப்யோம்கேஷ் சக்ரவர்த்தி கேட்ட தொகையை அரவிந்தர் தரப்பில் கொடுக்க இயலாததால் அவர் வழக்கிலிருந்து விலகிக் கொண்டார். பின்னாளில் பெரும் புகழ்பெற்றவரும், அப்போது ஒரு இளம் வக்கீலாகவும் இருந்த சித்தரஞ்சன் தாஸ் இப்போது அரவிந்தருக்காக வாதாடினார்.
முன்னதாகக் குற்றத்தை ஒத்துக்கொண்டு தாங்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களை பாரின் கோஷ§ம் இதர மானிக்டோலா ஆஸ்ரமத்தினரும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.
கோஸ்வாமியின் சாட்சியம் பயனற்றுப் போன நிலையில் இப்போது நார்டன் ‘வந்தேமாதரம்’, ‘யுகாந்தர்’ ஆகிய இதழ்களில் அரவிந்தர் எழுதிய ராஜதுரோகக் கருத்துக்களை முன்வைத்து அவருக்கு எதிராகக் கடுமையாக வாதிட்டார். அரவிந்தர் எழுதியவை விடுதலை, சுதந்திரம் முதலான தத்துவார்த்தச் சிந்தனைகள் எனவும், அவற்றுக்கும் ராஜதுரோகத்துக்கும் தொடர்பில்லை எனவும் சித்தரஞ்சன் மிகத் திறமையாக எதிர் வாதிட்டார்.
அரவிந்தருக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிற ஆவணங்கள், பொருட்கள் எல்லாமும் இட்டுக் கட்டப்பட்டவை என்கிற சித்தரஞ்சனின் விவாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
“தேசபக்தியைப் பாடிய கவியாகப் பார்க்கப்படப் போகிறவர் அவர். தேசியத்தின் நற்செய்தியாளர் அவர். மானுடத்தை நேசித்தவர் அவர். இந்தியாவில் மட்டுமின்றி, தொலைதூரக் கடல்களிலும், நிலங்களிலும் அவரது சொற்கள் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்” - எனச் சித்தரஞ்சன் தாஸ் நீதிமன்றத்தில் முழங்கிய சொற்கள் அலிப்பூர் நீதிமன்றத்தில் அவர் அது வழக்கு விசாரிக்கப்பட்ட அறையில் இன்று சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
அரவிந்தர் விடுதலை செய்யப்பட்டார். இன்னும் 16 பேர்களும் அவரோடு விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட சொத்து பறிப்புகளுடன் கூடிய கடும் தீவாந்தர தண்டனைகள் பத்து ஆண்டு கடுங்காவல்கள், ஏழாண்டு மற்றும் மூன்றாண்டு தண்டனைகள் முதலிய விவரங்களை முன்பே குறிப்பிட்டேன். விடுதலை செய்யப்பட்ட 17 பேர்களில் இருவர் வேறு ஒரு வழக்கில் முன்பே தண்டிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் உடன் வெளிவர முடிய வில்லை.
மரணதண்டனை அளிக்கப்பட்ட பரீன்கோஷ், உல்லாஸ்கர் தத் ஆகியோரின் தண்டனைகள் மேல் முறையீட்டில் தீவாந்திர ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டன. 1920ல் பொது மன்னிப்பு ஒன்று அளிக்கப்பட்டபோது, பதினோரு ஆண்டு அந்தமான் சிறைவாசத்திற்குப் பின் அவர்கள் விடுதலை ஆயினர். அரவிந்தரின் இளைய சகோதரரான பரீன் எனப்படும் பரீந்திர குமார் கோஷ் இங்கிலாந்தில் பிறந்து ஒரு வயதில் இங்கு கொண்டு வரப்பட்டவர். இங்கிலாந்துக் குடியுரிமை உள்ளவர் என்கிற அடிப்படையில் அவர் சில உரிமைகளைப் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தபோதும் ஒரு தேசபக்தர் என்கிற வகையில் அவர் அதை மறுத்துவிட்டார். விடுதலை அடைந்தபின் ‘ஸ்டேட்ஸ்மன்’ முதலான இதழ்களில் பத்திரிகையாளராகப் பணி செய்த பரீன் கோஷ் 1959ல் இயற்கை எய்தினார்.
அரவிந்தர் விடுதலையானது ஆங்கில அரசுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. மேல்முறையீடு குறித்து அது யோசித்தபோது அதில் பயனில்லை என்பதை சட்டவல்லுனர்கள் சுட்டிக் காட்டியதை ஒட்டி 1909ல் அரவிந்தருக்கு எதிரான மேல் முறையீட்டு முயற்சியை அரசு கைவிட்டது.
மானிக்டோலா சதி வழக்கிற்குப் பின்பு பகா ஜதின் தலைமையில் மீண்டும் அனுஷீலன் சமிதி உயிர்ப்பிக்கப்பட்டது. வங்கத்திற்கு அப்பால் பிஹார், ஒரிசா, உ.பி ஆகியவற்றிலும் அதற்குக் கிளைகள் தொடங்கப்பட்டன. அமரேந்திர சட்டர்ஜி, நரேன் பட்டாசார்யா, ராஷ்பிஹாரி போஸ் முதலான தலைவர்கள் சமிதியில் இனைந்து செயல்பட்டனர். புத்துயிர் பெற்ற சமிதி செயலில் இறங்கியது. அலிபூர் சதிவழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட அதே ஆண்டில் (1909), சிறைக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட நரேய்ன் கோஸ்வாமி கொலை வழக்கில் கொலை செய்த சமிதி உறுப்பினர்களுக்கு எதிராக வாதிட்ட வழக்குரைஞர் அசுடோஷ் பிஸ்வாசையும், 1910ம் ஆண்டில் அலிப்பூர் சதி வழக்கை நடத்திய துணைக் காவல் கண்காணிப்பாளர் ஷம்ஷ§ல் ஆலத்தையும் அனுஷீலன் சமிதியினர் திட்டமிட்டுச் சுட்டுக் கொன்றனர். 1914ல் முதல் உலக யுத்தம் தொடங்கியபோது பிரிட்டனுக்கு எதிராக ஜெர்மனி முதலான நாடுகளுடன் இணைந்து இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சியைக் கவிழ்க்கவும் அது முயற்சிகள் செய்து பார்த்தது.
சிறை வாழ்வின் ஊடாகத் தன் இறுதிப் பரிணமிப்பை அடைந்த அரவிந்தர் ஃப்ரெஞ்ச் ஆட்சியில் இருந்த புதுச்சேரிக்கு வந்து தன் ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்தார். ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து வந்த மிர்ரா அல்போன்சா என்கிற அம்மை அந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டார். 1926ல் அரவிந்தரும் அன்னையும் இணைந்து அரவிந்தா ஆஸ்ரமத்தை புதுச்சேரியில் உருவாக்கினர். அரவிந்தர் தன் மகா காவியமான சாவித்ரி, The Life Devine முதலான முக்கிய நூல்களை எழுதினார். டிசம்பர் 5, 1950 அன்று அவர் இயற்கை எய்தினார்.
வங்கப் பிரிவினையால் கிளர்ந்து எழுந்த முதற் கட்டத் தீவிர தேசியவாதியாதிகள் எல்லோரையும் போல ஸ்ரீஅரவிந்தரும் பகவத் கீதைக்கு உரை எழுதினார்.
சிறையிலிருந்து விடுதலையாகி புதுச்சேரி வந்து ஒரு புதிய வாழ்வை அரவிந்தர் தொடங்கிய அதே 1909ல் தான் லண்டனிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்று கொண்டிருந்த ஒரு நீராவிக் கப்பலில் அமர்ந்து கொண்டு இந்த முதற்கட்டத் தேசபக்தர்களின் இந்தியா குறித்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்த மிக முக்கியமான நூலாகிய ‘ஹிந்த் சுயராஜ்’ஐ மகாத்மா காந்தி எழுதிக் கொண்டிருந்தார்.
(இதுவரை சொன்னவை, கிடைக்கும் முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அலிப்பூர் வழக்கு மற்றும் சிறை அனுபவங்கள் குறித்து நாமறியும் வரலாறு. இனி இந்த வழக்கு மற்றும் சிறை அனுபவங்கள் குறித்து ஸ்ரீ அரவிந்தர் என்ன கூறுகிறார், என்ன மாதிரி உணர்வுகளைப் பெற்றார் எனப் பார்ப்போம்.)
4.பகவத் கீதையிலிருந்து கற்றுக்கொண்ட பாடம்
அரவிந்தர் மே 2, 1908 அதிகாலை அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டு, மே 5 அன்று அவரும் கைது செய்யப்பட்ட மற்றவர்களும் அலிப்பூர் சிறையில் அடைக்கப்படுகின்றனர். சரியாக ஓராண்டு முடிந்து மே 6, 2009 அன்று குற்றச்சாட்டு நிறுவப்படாத நிலையில் அரவிந்தர் விடுதலை செய்யப்படுகிறார். அழகான ஆங்கில நடையில் எழுதக் கூடியவர் ஆயினும் இந்த அனுபவங்களை அவர் ‘சுப்ரபாத்’ எனும் வங்க இதழில் வங்க மொழியில் எழுதுகிறார். உத்தர்பாரா என்னுமிடத்தில் அவர் சிறை வாழ்வில் பெற்ற ஆன்மீக அனுபவங்கள் குறித்துப் பேசியுள்ளதாகவும் பதிவு உள்ளது. இது தவிர சிறையிலிருந்தபோது 'Invitation' (அழைப்பு) என்றொரு கவிதையையும் அவர் எழுதியதாக அறிகிறோம்.
சிறை வாழ்க்கை குறித்த அவரது இந்தக் குறுநூல் 89 ஆண்டுகளுக்குப் பின் 1998ல்தான் விஜயலஷ்மி என்பவரால் தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆங்கில வடிவத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள இயலும்.
ஒரே வீச்சில் சோர்வின்றிப் படித்துவிடக் கூடிய குறு நூல். சிறைவாழ்வின் ஊடாகத் தான் பெற்ற ஆன்மீக அனுபவங்கள், ஆன்மீக வாழ்வை நோக்கி அடைந்த உந்துதல் ஆகியவை பற்றி எழுதுவது தன் நோக்கமில்லை என அவர் கூறியபோதும், பிற்பகுதி மிகவும் நகைச்சுவையோடு எழுதப்பட்டுள்ள போதும் அதனூடாக அவரடைந்த ஆன்மீக அனுபவங்களை வாசிக்கும் நம்மால் உணர முடிகிறது. அது மட்டுமல்ல அவரிடம் திடம்பெற்றிருந்த சில உலகப் பார்வைகள், தேசியப் பண்பு குறித்த கண்ணோட்டங்கள், மனிதர்கள் மற்றும் குற்றச் செயல்கள் குறித்த பார்வைகள் ஆகியன பற்றியும் நாம் இக்குறுநூல் ஊடாக விளங்கிக் கொள்ள இயல்கிறது.
சிலவற்றைப் பார்க்கலாம்.
நாம் இதுவரை பார்த்த அலிப்பூர் சதி வழக்கு தொடர்பான வரலாற்று விவரங்கள் அனைத்தும் இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. யாரும் அவற்றை மறுப்பதற்கில்லை. அரவிந்தரைப் பொருத்த மட்டில் இது குறித்து அவர் எதையும் உண்மை என்று ஏற்பதோ பொய்யென்று மறுப்பதோ இல்லை. அவரது கதையாடல் இப்படித் தொடங்குகிறது. ஒருநாள் அவர் தனது அலுவலகத்தில் இருக்கும்போது ஒரு தந்தி வருகிறது. “ஒரு வெடிகுண்டு சம்பவத்தில் இரு ஐரோப்பியப் பெண்மணிகள் கொல்லப்பட்டதை அதிலிருந்து அறிந்தேன்” எனப் பதிவு செய்யும் அரவிந்தர், எனினும் தானே அதில் முதன்மைக் குற்றவாளியாக்கப் படுவோம் என அப்போது அறிந்திருக்கவில்லை என்கிறார். உடனடியாகத் தன் தம்பி பரீன் கோஷைத் தொடர்புகொண்டு இது தொடர்பான ஆதாரங்கள், சான்றுகள் ஆகிய அனைத்தையும் அகற்றுமாறு தெரிவித்தார் என்று பதிவுகள் உள்ளன. எனினும் இக்குறுநூலில் அவர் அதைச் சொல்லவில்லை.
அரவிந்தரிடமிருந்து தகவல் கிடைத்த போதும் போலீஸ் வருமுன் அரவிந்தர் - பரீன் சகோதரர்களின் மாணிக்டோலா வீட்டில் இருந்த ஆதாரங்கள் எல்லாவற்றையும் அகற்ற இயலவில்லை. பிரசுரங்கள் தவிர வெடிமருந்துகள், வெடிகுண்டுகள், detonators கீதைப் பிரதிகள் உட்பட ஏராளமான ஆதாரங்களைப் போலீஸ் கைப்பற்றுகிறது. அரவிந்தரின் 48, கிரே ஸ்ட்ரீட் அலுவலகத்தில் வெடிகுண்டு முதலானவை கைப்பற்றப்படாத போதும் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் அவை அதிக அளவில் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் மாஜிஸ்ட்ரேட் முன் நிறுத்தப்படும்போது அவர்களில் பெரும்பாலோரை அரவிந்தர் முதன் முதலாக அங்குதான் பார்த்ததாகச் சொல்கிறார். சிறைக்குள்ளும் அவர் வெகு சிலருடன் தான் சற்றுக் கலகலப்பாகப் பழகுகிறார். ஓரிரவு சிறையில் எல்லோரும் பாட்டும் கூத்துமாய்க் கழித்தபோதும் அரவிந்தர் அதில் கலந்து கொள்ளவில்லை. எனினும் அவரோடு கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்களிடம் அவருக்கு அன்பு இருக்கவே செய்கிறது. அது ஆங்காங்கு வெளிப்படவும் செய்கிறது.
ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அரவிந்தர் சிலவற்றைச் சொல்ல விரும்பவில்லை ஆயினும் பொய்யாக எதையும் புனையவும் இல்லை. அவர் அப்படியானவர் இல்லை. அவரே அக்குழுவின் ஆதர்சம், வழிகாட்டி என்ற போதிலும் அவர் நேரடியாக கீழ்மட்டம் வரைக்கும் தொடர்புடையவராக இருக்கவில்லை. அனுஷீலன் சமிதியின் அமைப்பு வடிவமே அப்படி அமைந்துள்ளதை வேறு பலரும் சொல்கின்றனர். வங்கப் பிரிவினையை ஒட்டி இங்கு ஏற்பட்ட எழுச்சியின் ஊடாகத் திலகர், விபின் சந்திரபாலர் முதலானோர் தலைமையில் இங்கு ஏற்பட்ட எழுச்சி, பிரிட்டிஷாரை ஆங்காங்கு கொன்று அச்சுறுத்தி, அதனூடாக ஒரு எழுச்சியை ஏற்படுத்துவது என்கிற அணுகல்முறையைக் கொண்டிருந்தது.
அரவிந்தர் இதில் முழு உடன்பாடு உடையவராகவே இருந்தார் என்பதை யாரும் மறுக்க இயலாது. அதற்குத் தோதாக “எதிரே இருப்பது சகோதரரே ஆனாலும் களத்தில் எதிரியாயின் அங்கே கொலைதான் அறம்” எனப் போதித்த பகவத் கீதையை அவர்கள் இந்து மதத்தின் புனித நூலாக முன்னிலைப்படுத்தத் தொடங்கினர் என்பது வரலாறு. அரவிந்தர் தொடங்கி நம் பாரதி வரை அன்று கீதைக்கு யார்தான் உரை எழுதவில்லை.
மேல்நாட்டிலிருந்து திரும்பி வந்ததும் “காங்கிரசின் விண்ணப்பக் கொள்கைக்கு எதிராக மிகவும் தீவிரமான கட்டுரைகளை” தான் எழுதத் தொடங்கியதாக அரவிந்தர் குறிப்பிடுகிறார் (பக்.66). காந்தியின் வருகைக்கு முந்திய இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதுபவர்கள் “மிதவாதிகள் X தீவிரவாதிகள்” என இரு பிரிவுகளாகச் சுதந்திரப் போராட்டத்தினரைப் பிரிப்பதை அறிவோம். அதாவது கோகலே, ரானடே முதலான காங்கிரஸ் தலைவர்கள் ஆங்கிலேய அரசிடம் விண்ணப்பம் செய்தே உரிமைகளைப் பெற்றுவிடலாம் எனக் கருதியதாகவும், திலகர் முதலானோரே ஒரு போரை நடத்தி உண்மையான விடுதலையைச் சாத்தியப்படுத்தும் மனம் மற்றும் கொள்கைத் திடம் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்பதும் இதன் பொருள். தனது எழுச்சி மிகு கட்டுரைகளைப் பார்த்துவிட்டு ரானடே தன்னிடம் சிறைச்சாலைச் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசியதாகவும், இந்த எதிர்பாராத யோசனையைக் கேட்டுத் தான் “ஆச்சரியமும் அதிருப்தியும்” அடைந்ததாகவும் அரவிந்தர் எழுதுகிறார் (பக்.60).
ஆக, பிரஃபுல்லா சகி, அவரால் அறிமுகப்படுத்தப் பட்ட குதிராம்போஸ் என்கிற பதின் வயது இளைஞன் ஆகியோரை ஆங்கில நீதிபதி கிங்ஸ்ஃபோர்டைக் கொல்வதற்காக கையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளுடன் தன் தம்பி அனுப்பிய நுண் விவரங்கள் ஒரு வேளை அரவிந்தருக்குத் தெரியாதிருந்தாலும் இந்த நடவடிக்கையில் அவருக்கு முழு உடன்பாடு இருந்ததே உண்மை. தன்னுடைய வீட்டில் ஒரு வெடிகுண்டுத் தொழிற்சாலை இயங்கியதை எல்லாம் அவர் அறியாதிருந்தார் என்பதல்ல.
சிறைக்குள் இன்னொரு மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றச் செயலையும் அக்குழு செய்ததைப் பார்த்தோம். அரவிந்தரை எப்படியாவது முக்கிய குற்றவாளியாக நிறுத்தி அவரது கதையை முடிக்க வேண்டும் என நினைத்த ஆங்கில அரசு, அதற்காகவே, கைது செய்யப்பட்ட 49 பேர்களில் ஒருவனை ‘அப்ரூவராக’ மாற்றுகிறது. அவனுடன் உளவுத்துறை பேசி அவனைத் தயார் செய்கிறது. சிறைக்குள் அவனை இவர்கள் சுட்டுக் கொல்கின்றனர். சுட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க அரவிந்தரைக் காப்பாற்றுவதற்காகவே செய்யப்பட்ட கொலை இது. அரவிந்தரின் சகோதரர் பரீன் கோஷால் இது கச்சிதமாகத் திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. சிறை அதிகாரிகளின் இரக்க குணத்தைப் பயன்படுத்தி இரண்டு கைத்துப்பாக்கிகள் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டு இது நிறைவேற்றப்படுகிறது. வங்கச் சிறை அதிகாரிகள் இருவரின் வேலையும் இதனால் பறிபோகிறது.
இது குறித்து அரவிந்தர் நான்கு இடங்களில் பதிவு செய்கிறார்.
1) ஓய்வூதியத்துடன் பணி ஓய்வு பெறலாம் எனக் கனவு கண்டவரும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரவிந்தருக்குப் பல உதவிகள் செய்தவருமான சிறை அதிகாரி யோகேந்திர பாபு ஓய்வூதியம் எல்லாம் இல்லாமல் டிஸ்மிஸ் செய்யப்பட்டதைச் சொல்ல வரும்போது, “நரேன் கோஸ்வாமி கன்னையாவினால் சுட்டுக் கொல்லப்பட்டார்” (பக். 48) என்று மட்டும் பதிவு செய்வது ஒன்று.
2) சிறையில் அரவிந்தரிடம் அன்பாக நடந்து கொண்ட மருத்துவர் வைத்யநாதபாபுவும் அவ்வாறே, கோஸ்வாமியின் படுகொலைக்காகப் பணி நீக்கம் செய்யப்படுகிறார். அதைப் பற்றிச் சொல்ல வரும்போது அவரைப் பற்றி அரவிந்தர் சிறப்பாக உரைத்தாலும் மனிதர்களைச் சரியாக எடைபோடும் திறமை அவருக்குப் போதிய அளவு இல்லாததாலேயே சத்யேந்திரநாத் மற்றும் கன்யாலால் ஆகியோரால் “அந்த விபரீதம் நடந்தது” (பக்.52) என முடிக்கிறார். திட்டமிட்டுத் தம் குழுவினர் செய்ததை ஏதோ இயல்பாக நடந்த ‘விபரீதம்’ என்கிறார்.
3) அரசுத்துறை வழக்குரைஞராக வாதிட்ட அன்றைய புகழ்பெற்ற வழக்குரைஞர் நார்டனின் அட்டகாசங்களை மிக்க நகைச்சுவையுடன் விவரிக்கப் பல பக்கங்களைச் செலவிடும் அரவிந்தர், நார்டன் மட்டும் சாட்சிகளை மிரட்டி வற்புறுத்தும் செயல்பாடு களில் ஈடுபடாமல் இருந்திருந்தால் “வழக்கில் சில அனாவசியமான அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக் கலாம்” (பக்.76) என்கிறார். இங்கு கோஸ்வாமி பற்றி ஏதும் கூறவில்லை என்றாலும் அப்படியான ஒரு ‘அசம்பாவிதங்களில்’ ஒன்றாகவே அவர் கோஸ்வாமியின் கொலையையும் உள்ளடக்க முயல்கிறார்.
4) கோஸ்வாமி அப்ரூவராக மாறிய வரலாறு, அவனை இவர்கள் கையாண்ட முறை குறித்தெல்லாம் விவரமாகவும் நகைச்சுவையாகவும் விவரிக்கச் சுமார் 13 பக்கங்கள் (பக் 98-111) எடுத்துக்கொள்ளும் அரவிந்தர் அவன் எவ்வாறு கொலை செய்யப்பட்டான் என்பதை மட்டும் சொல்லாமல் மீண்டும் நார்டனைப் பற்றிய கதைக்குத் தாவுவார்.
சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இப்படித் தாங்கள் திட்டமிட்டுக் கொன்றது குறித்து விரிவாகப் பேசுவதை அரவிந்தர் தவிர்த்திருப்பார் எனத் தோன்றலாம். அது சரியல்ல. கோஸ்வாமியைக் கொன்ற நிகழ்ச்சி சிறை வளாகத்திற்குள் அதிகாரிகள் கண்முன் நிகழ்ந்த ஒன்று. கொன்றவர்கள் துப்பாக்கியுடன் சரணடைந்தனர். குற்றம் நிறுவப்பட்டுத் தண்டிக்கவும் பட்டனர். இந்நிலையில் அதைத் தந்திரோபாய ரீதியாக அரவிந்தர் தவிர்த்தார் எனச் சொல்வதில் பொருளில்லை. நார்டனின் கெடு பிடியால் தங்கள் குழுவில் இருந்த அசோக் நந்தி இறந்தது குறித்தெல்லாம் கண்ணீர் உதிர்க்கும் அரவிந்தர் இந்தக் கொலை குறித்துச் சாதிக்கும் மௌனத்தை அப்படியெல்லாம் எளிதில் விலக்கி அகல முடியாது. கோஸ்வாமியின் உயிரையும் அசோக் நந்தியின் உயிரையும் அவர் வேறுபடுத்திப் பார்க்கிறார். ஒன்று எதிரியின் உயிர். இன்னொன்று தங்களின் உயிர். கோஸ்வாமியும் அவர்களில் ஒருவனாகவே இருந்தாலும் இன்று அவன் எதிரி. அவனைக் கொல்வது பாவமல்ல; அதுவே நீதி. இதுதான் பகவத் கீதையிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டது.
5) அரவிந்தரின் சாராம்சவாதம்
ஸ்ரீ அரவிந்தரின் இந்த சிறைக் குறிப்புகளை வாசித்தால் ஒன்று விளங்குகிறது. ஆங்கிலக் காலனி அரசு எத்தனை கொடூரமாக இருந்தபோதிலும் இப்படியான “தேசத் துரோகிகளை” கையாள்வதில் இன்றைய இந்திய அரசைக் காட்டிலும் பல மடங்கு சட்ட பூர்வமாகவும், கருணையோடுமே இருந்துள்ளனர் என்பதுதான் அது. இதன் பொருள் ஆங்கில அரசு இரக்கம் நிறைந்தது என்பதல்ல.
இந்தப் பிரச்சினையில் நாம் சிலவற்றைச் சற்றே கூர்ந்து கவனம் கொள்ள வேண்டும். அரசு என்பது மார்க்சியம் சொல்வதுபோல ஒரு அடக்குமுறைக் கருவி என்பதை மறந்துவிடக் கூடாது. நவீன அரசுகளில் சிறைச்சாலை என்கிற நிறுவனம் எத்தகைய நுணுக்க மான அடக்குமுறைக் கருவியாகச் செயல்படுகிறது என்பதை ஃபூக்கோ முதலான நவீன சிந்தனையாளர்கள் விளக்கியுள்ளனர். இவற்றின் நடைமுறை எடுத்துக் காட்டாகத்தான் அன்றைய பிரிட்டிஷ் சிறைகள் இருந்தன. காலனிய ஆட்சிகள் முடிவுக்கு வந்து உலகளாவிய மனித உரிமைப் பிரகடனங்கள், அதை ஒட்டிய சட்ட ரீதியான பாதுகாப்புகள் (civil and economic rights conventions) எதுவும் இல்லாத ஒரு காலகட்டம் அது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று பல்வேறு மட்டங்களில் இந்த உரிமைகள் எல்லாம் நடைமுறைக்கு வந்துள்ள போதிலும், இன்னொரு பக்கம் National Security என்கிற பெயரில் அவை பறிபோய்க் கொண்டுள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய உலக அரசுகள் பலவும், குறிப்பாக இந்திய அரசு ஒரு எடுத்துக்காட்டு.
இதெல்லாம் கிட்டத்தட்ட ஒரு முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே பெரும்பாலும் உலகப் பொதுவான நடைமுறைகளாக உள்ளன. பள்ளிக்கூடம், மருத்துவமனை, சிறைச்சாலைகள் என்கிற நவீன நிறுவனங்கள் அனைத்தும் எவ்வாறு அடக்குமுறை நிறுவனங்களாக உள்ளன என்பதைப் பின்நவீனச் சிந்தனையாளர்கள் விரிவாக விளக்கியுள்ளனர். இவை எல்லா நாட்டிற்கும் பொதுவான பண்புகள்.
சமத்துவ சமூகம் ஒன்றை உருவாவதற்கென மேலெழுந்த சோஷலிசக் கட்டுமானங்களிலும் இந்த நிறுவனங்கள் அப்படித்தான் அமைந்தன. எம்மா கோல்ட்மான் போன்ற அமெரிக்க இடதுசாரிப் பெண்ணியவாதிகள் லெனின் காலத்திய பள்ளிக் கூடங்களையும் கல்வி முறையையும் பார்த்துவிட்டு மிகவும் மனம் கலங்கி அவற்றின் மீது வைத்த விமர்சனங் களை நாம் அத்தனை எளிதாக மறந்துவிட இயலாது. லெனின் போன்ற புரட்சியாளர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் சொத்துடைமை ஒழிக்கப்படுவதை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த ஒரு சமத்துவ ஆட்சியாக அது இருந்த போதிலும் பள்ளிக்கூடம், சிறைச்சாலை முதலான இந்த நவீன நிறுவனங்கள் அவற்றுக்கே இயல்பான ஒடுக்குமுறைப் பண்புகளுடன்தான் விளங்கின என்பது குறிப்பிடத் தக்கது.
அந்நிய ஆட்சியை வன்முறை கொண்டு அகற்ற முனைந்திருந்த ‘அனுஷீலன் சமிதி’ மேற்கொண்ட ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடவடிக்கையில் கைதான வர்கள் எல்லோரும், அவர்கள் கைதான கணத்திலிருந்து சரியாக ஓராண்டில் அவர்கள் தண்டிக்கப்படும் வரை எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பன அரவிந்தரின் இக்குறு நூலில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அக்காலகட்டச் சிறைகள், தனிக் கொட்டடித் தண்டனைகள், வழங்கப்படும் உணவு, விசாரணை, தீர்ப்பு எல்லாம் விரிவாகத் தொகுத்து முன்வைக்கப் படுகின்றன.
அன்றைய பிரிட்டிஷ் அரசின் இந்த நடவடிக்கைகளை, இன்றைய இந்திய அரசு, இப்படியான சந்தர்ப்பங்களில் எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பதுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதுவும் இந்த நூறாண்டுகால இடைவெளியில் ஏற்பட்டுள்ள மனித உரிமைப் பிரகடனங்கள், அவற்றுக்கான செயல் திட்டங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சிர்திருத்தங்களின் பின்னணியில் பார்க்க வேண்டும். இவ்வளவு சீர்திருத்தங்களுக்குப் பின்னும், மனித உரிமை உடன்பாடுகலுக்குப் பின்னும் இன்றைய சிறைகள் அப்படியேதான் உள்ளன. நீதிவழங்குமுறை என்பது இன்னும் கொடியதாகக் கூட இன்று மாறியுள்ளது.
மறுபடியும் சொல்கிறேன் அன்றைய பிரிட்டிஷ் சிறைகள் மனிதாபிமானத்துடன் இருந்தன என நான் சொல்ல வரவில்லை. அவை கொடூரமாகத்தான் இருந்தன. தண்டிக்கப்பட்டவர்கள் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். செக்கிழுக்க வைக்கப்பட்டனர். ஆனால் இவை அனைத்தையும் வரலாற்றுப் பின்னணி யுடன் பார்க்க வேண்டுமே ஒழிய மிகவும் குடுட்டுத் தனமாக பிரிட்டிஷ் இனத்தின் சாராம்சப் பண்பாக இவற்றைப் பார்த்துவிட முடியாது.
காலனியம், அன்றைய காலகட்டம் ஆகிய பின்னணிகளை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு முழுக்க முழுக்க எல்லாவற்றையும் இன்றைய நோக்கிலிருந்து பார்த்து அவற்றை பிரிட்டிஷ் இனத்தின் சாராம்சப் பண்பாகப் பார்ப்பதும், இந்தியப் பண்பாடு என்பதை அதன் இருமை எதிர்வாக (binary opposition) முன் வைத்து இந்தியர்கள் இப்படியான கொடூரமான பண்பைக் கொண்டிருக்கமாட்டார்கள் எனச் சொல்வதும் எத்தனை அபத்தம். அரவிந்தர் போன்ற பெருமக்கள் அத்தகைய கருத்துடன் பதியும் விடயங்கள் மிகவும் முட்டாள்தனமாக மட்டுமின்றி அருவருப்பாகவும் உள்ளதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
இந்த வழக்கையே நாம் எடுத்து ஆய்வு செய்தால் தீவாந்திரத் தண்டனை போன்ற அக்கால கொடு நடவடிக்கைகள் தவிர இன்றைய இந்திய அரசுடன் ஒப்பிடும்போது அன்றைய பிரிட்டிஷ் அரசு நியாயமாகத் தான் நடந்து கொண்டுள்ளது என்பது விளங்கும். ஏன் ராஜீவ் காந்திக் கொலையாளிகள் எனக் குற்றம் சாட்டப் பட்டோரையும், நாடெங்கும் முஸ்லிம் கைதிகளையும் இந்திய அரசு நடத்தும் விதத்தைப் பார்த்தால் இன்றைய இந்திய அரசைக் காட்டிலும் அன்றைய ஆங்கில அரசே பரவாயில்லை என்றல்லவா தோன்றுகிறது?
அரவிந்தரை எப்படியாவது கடுமையாகத் தண்டித்துவிட வேண்டும் என நினைத்தாலும் அன்றைய வெள்ளை ஆட்சியாளர்களால் சட்டத்தை மீறி அதைச் செய்ய முடியவில்லை. கைது செய்யப்பட்ட 49 பேர்களில் இருவர் தனிக் கொட்டடியில் அடைக்கப்பட்டாலும் மற்றவர்கள் சுதந்திரமாகத்தான் இருந்து உள்ளனர். எந்த அளவிற்கு என்றால் வெளியிலிருந்து கைத்துப்பாக்கிகளையும் குண்டுகளையும் கடத்தி உள்ளே கொண்டு வரும் அளவிற்கு அவர்கள் மீது கண்காணிப்புகள் குறைவாகவே இருந்துள்ளன. கடுமையான சதிக் குற்றச்சாட்டிற்கு ஆளானவர்கள் என்ற போதிலும் அவர்களில் யாரும் கடுஞ்சித்திரவதைக்கு ஆளானதாக அரவிந்தர் எந்தப் பதிவையும் செய்யவில்லை. ஆங்கில அதிகாரிகளானாலும் சரி, இந்திய அதிகாரிகளானாலும் சரி நிறையப் படித்தவர் என்கிற வகையில் அரவிந்தரை மிக்க மரியாதையுடனேயே நடத்தியுள்ளனர். மழைக்காலத்தில் அவருடைய ‘செல்’லில் இருப்பது கஷ்டமாக இருக்கும் என அவர் மருத்துவமனையில் வந்து சற்றே வசதியாகத் தங்கிக் கொள்ள அதிகாரிகளே ஏற்பாடு செய்துள்ளனர். வெளியிலிருந்து உடைகள், புத்தகங்கள் வரவழைத்துக் கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அன்றைய அன்னிய அரசு இப்படியான கடும் குற்றங்கள் சுமத்தப்பட்டவர்களை கண்ணியமாகத்தான் நடத்தியுள்ளது. விசாரணை என்கிற பெயரில் இன்று நடத்தப்படும் சித்திரவதைகள், போலி என்கவுன்டர் படுகொலைகள், வழக்கையும் நடத்தாமல், பிணையில் விடுதலையும் செய்யாமல் ஆண்டுக் கணக்கில் விசாரணைக் கைதிகளாகவே வைத்திருத்தல் என்பதெல்லாம் அலிப்பூர் சதி வழக்கில் நடக்கவில்லையே. எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வளவு பேர்கள் தண்டிக்கப்பட்டும் கூட அனுஷீலன் சமிதி தொடர்ந்து இயங்க முடிந்துள்ளதே. இவர்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணமான இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளார்களே.
ஆனால் அரவிந்தர் அன்றைய சிறை நிலைமைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை ஆங்கிலேயரின் சாராம்சப் பண்பாகச் சொல்லிக்கொண்டே இருப்பதும், இந்தியர்கள் அப்படியான இழிபண்புகள் இல்லாதவர்கள் எனச் சொல்வதும் தொடர்ச்சியாக நூல் முழுக்கவும் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதாக இல்லை.
ஓரிடத்தில், “தாய்நாட்டன்பு, தியாகம், வறுமை, விரதத்தின் மாண்பு ஆகியவைகளை எல்லாம் இந்த ஆங்கிலேய மரமண்டைக்குள் ஏற்றுவதற்கு முடியாத காரியம் என்று அந்த வீண் முயற்சியில் நான் இறங்கவில்லை” என விசாரணையின்போது ஒரு அதிகாரி கேட்கும் ஒரு எக்குத்தப்பான கேள்வி குறித்து அரவிந்தர் பதிவு செய்கிறார் (பக்.6). கேள்வி அபத்தமாக இருந்தபோது அது அந்த நபரின் வக்கிரபுத்தி என்று போகாமல் அதை ஆங்கிலேய இனத்தின் பண்பாகச் சொல்வதும், இந்தியப் பண்பு அதுவல்ல என்பதும் கவனிக்கத்தக்கன. இதையெல்லாம்விடக் கொடூரமான வக்கிரத்துடன் இந்திய காவல்துறை நடந்து கொண்டதற்கும், நடந்து கொண்டிருப்பதற்கும் ஆயிரம் எடுத்துக்காட்டுகளை நம்மால் காட்ட முடியும். அவற்றை இந்தியர் அல்லது தமிழர்களின் சாராம்சப் பண்புகளாகச் சொல்லிவிட முடியுமா?
இதையெல்லாம் சொல்வது தான் பட்ட சிறைத் துயர்களைச் சொல்வதற்காக அல்லவென்றும், “நாகரிகமடைந்த ஆங்கிலேயர் ஆட்சியில் விசாரணைக் கைதிகளுக்காக எத்தகைய விசித்திரமான ஏற்பாடுகள் உள்ளன என்பதையும் நிரபராதிகள் எத்தனை நீடித்த வேதனைகளை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டவே” (பக். 29,30) என்றும் பிறிதோரிடத்தில் குறிப்பிடுகிறார். இப்படி எல்லாவற்றையும் ஆங்கிலேயரின் சாராம்சப் பண்பாகத்தான் அவரால் பார்க்க முடிகிறதே ஒழிய இவற்றை எல்லா ஆட்சியாளர்களின் பொதுப் பண்பாக அவரால் பார்க்க இயலவில்லை. இந்திய அரசுகள், ஆட்சி நெறிகள் பற்றி கௌடில்யன், மனு போன்றோர் எழுதி வைத்துள்ளவற்றையெல்லாம் இந்த மகான் படித்ததில்லையா என்கிற கேள்வியை நாம் எப்படித் தவிர்க்க இயலும்?
இப்படியான இழிபண்புகள் யாவும், “பிரிட்டிஷாரிடம் குடி கொண்டுள்ள குணக் குறையாகும். ஷத்திரியர்களுக்குரிய குணத்தை ஆங்கிலேயர்கள் பெற்றிருந்தும், விரோதிகள் மற்றும் எதிர்க் கட்சிக்காரர்களை நடத்துவதில் இவர்கள் நூற்றுக்கு நூறு வியாபாரிகளே (வைசியர்களே)” (பக்.31,32) என்கிறார். சத்திரியர், வைசியர், சூத்திரர் எனச் சாராம்சப் பண்புகளை ஏற்கும் இந்த வருணாசிரம மனநிலை அவரில் ஆழப் பதிந்து கிடப்பதன் விளைவே அவரது மொழி இவ்வாறு அமைவது.
சரி ஒருவேளை ஒரு நற்குணம் மிக்க வெள்ளை அதிகாரியைச் சந்தித்தால் இவர் தனது சாராம்சக் கோட்பாட்டினடியாக எப்படி அதை விளக்குவார்? ஒரு எடுத்துக்காட்டு:
அலிப்பூர் சிறை அதிகாரி எமர்சன், உதவி மருத்துவர் வைத்யநாத் சட்டர்ஜி இருவரும் அரவிந்தரின் அனுபவத்தில் நல்லவர்கள். முன்னவர் ஆங்கிலேயர். மற்றவர் இந்தியர். இவர்களைப் பற்றிச் சொல்லும்போது, “ஒருவர் ஐரோப்பாவில் அநேகமாக மறைந்துவிட்ட கிறிஸ்தவ தர்மத்தின் அவதாரம்; மற்றவர் ஹிந்து தர்மத்தின் சாரமான தயை, பரோபகாரத்தின் நடமாடும் மூர்த்தி” (பக்.46) என்பார்.
இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். அரவிந்தர் மகான் என இன்று போற்றப்படுகிறார். இப்படி மனிதர்களை இனம், வருணம் என்றெல்லாம் சாராம்சப்படுத்திக் காண்பவர்களாக மகான்கள் இருக்க இயலுமா?
தனக்கு மலம் அள்ளவும், ஆடைகள் துவைக்கவும், தண்ணீர் கொணரவும் பணிக்கப்பட்ட பல “தோட்டி” முதலான தொழிலாளிகளைப் பற்றிக் குறிப்பிடும் அரவிந்தர் அவர்களைப் பெயர் சொல்லிக்கூட அடையாளப்படுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வரிகளை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது, இப்படியான சந்தர்ப்பங்களில் மகாத்மா காந்தியின் மொழி எவ்வாறு இருந்திருக்கும் என்கிற கேள்வி என்னுள் எழுகிறது.
தொடரும்...