நிறுவனம் சார்ந்த எந்தக் கல்விப் புலத்திற்கும் சென்று பயின்று பட்டம் பெறாத உ.வே. சாமிநாதையர் அவர்கள் பல நிறுவனங்களிடமிருந்து பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றுச் சிறப்புற்றிருக்கிறார். கடும் உழைப்பினால் மட்டுமே பல மதிப்புமிக்க பட்டங் களைப் பெற்றுப் புகழின் எல்லையைக் கண்டவர் சாமிநாதையர். இசை அறிந்த குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் அவற்றின்பால் ஈடுபாடுகொள்ளாமல் தமிழை மட்டுமே நம்பி, தமிழை மட்டுமே படித்தறிந்து, தமிழின்பால் மட்டுமே தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டவர் சாமிநாதையர். அவரிடமிருந்த தமிழ்ப் பற்றால்தான் இந்திய மகாகவி களான தாகூர், பாரதி ஆகிய இருவராலும் ‘அகத்தியர்’ என போற்றிக் கொண்டாடப்பட்டார். கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ‘தமிழ்த்தாத்தா’ என அன்போடு அழைத்து மகிழ்ந்ததும் உ.வே.சா. தம்மைத் தமிழின்பால் ஈடுபடுத்திக்கொண்ட காரணத்தால் மட்டுமேயாகும்.
உ.வே.சா. பெற்ற பட்டங்கள் எல்லாவற்றையும் இணைத்து அவர் பெயரை எழுதினால் ‘மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி திராவிட வித்யாபூஷணம் டாக்டர் உ.வே. சாமிநாதையர்’ என அமையும். தாம் பதிப்பித்த பல நூல்களின் முகப்பில் தம் பெயருக்கு முன்னால் இந்தப் பட்டப் பெயர்களையெல்லாம் இணைத்து அச்சிட்டு அழகு பார்த்திருக் கிறார் சாமிநாதையர்.
இளமைக் கல்வியைப் பல ஊர்களில் பல அறிஞர் பெருமக்களிடம் கற்றறிந்த பின்னர் 1871இல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து பயின்று, புலமைபெற்று, பிள்ளையின் இறப்பிற்குப் பின்னர் 1876ஆம் ஆண்டி லிருந்து திருவாவடுதுறை மடத்தின் ஆதீனகர்த்தராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரிடம் தமிழ் கற்று அறிந்திருக்கிறார் உ. வே. சாமிநாதையர். தேசிகரிடம் பாடம் கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் (1877, ஈசுவர வருஷம் தை மாதம்) மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மகாகும்பாபிஷேகத்திற்குத் தேசிகரைக் கும்பாபிஷேகம் நடத்தும் அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தார் அழைத்திருந்தனர். அந்த விழாவிற்குச் செல்வதற்குரிய யாத்திரையில் உ.வே. சாமிநாதை யரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார் சுப்பிர மணிய தேசிகர். அந்தப் பயணத்திற்கு முன்பாகக் கௌரீசங்கர கண்டியும் (உத்திராக்கமாலை), சால்வையும் சுப்பிரமணிய தேசிகரால் இவருக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
உ.வே.சாமிநாதையரவர்களின் வரலாற்றுவழி பார்க்கும்போது சுப்பிரமணிய தேசிகரிடம் பெற்ற கண்டி, சால்வை இரண்டும் அவர் பெற்ற முதல் சிறப்பாகக் கருதமுடிகிறது. இந்தச் சிறப்பைப் பெறும்போது அவருக்கு வயது 16. சுப்பிரமணிய தேசிகரிடம் பெற்ற சிறப்பு குறித்து என் சரித்திரத்தில் இப்படிக் குறிப்பிட்டு மகிழ்கிறார் உ.வே. சாமிநாதையர்:
“யாத்திரையில் எனக்குப் பலவகை நன்மைகள் உண்டாகுமென்பதற்கு அந்த ஸம்மானங்கள் அறிகுறியாக இருந்தன. என் தந்தையாரிடம் முன்பே பிரயாண விஷயத்தைத் தெரிவித்திருந் தாலும் நான் பெற்ற சிறப்புக்களை அவர் பார்த்து இன்புற வேண்டுமென்ற நினைவோடு தான் திருவாவடுதுறைக்குப் போய் வரும்படி தேசிகர் கூறினாரென்பதை நான் உணர்ந்தேன். திருவாவடுதுறை சென்று கண்டியையும் சால்வையையும் என் தாய் தந்தையருக்குக் காட்டியபோது அவர்கள் அடைந்த சந்தோஷம் சாமான்யமானதன்று” (என் சரித்திரம், ப. 440)
சுப்பிரமணிய தேசிகரின் யாத்திரை திருவாவடு துறையிலிருந்து புறப்பட்டு, ஆலங்குடிவழியாக மன்னார்குடியை அடைந்தது. மன்னார்குடியில் தங்கியிருந்தபோது இவருக்குச் சிவப்புக் கல் வைத்த கடுக்கன் அணிவிப்பதற்குரிய ஏற்பாட்டைத் தேசிகர் செய்திருக்கிறார். மன்னார்குடியிலிருந்து புறப்பட்டுப் பட்டுக்கோட்டை சென்றடைந்ததும் தேசிகர் உ.வே.சா. அவர்களுக்கு மோதிரம் வாங்கிக் கொடுத்துக் கையில் அணிந்துகொள்ளச் செய்திருக்கிறார்.
உ.வே.சாமிநாதையர், திருவாவடுதுறை மடத்தில் சுப்பிரமணிய தேசிகரிடம் (1876 - 1880) பாடம் கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் இளைய தம்பிரான்களுக்குப் பாடம் சொல்லும் வித்துவானாகவும் விளங்கியிருக்கிறார். தம்பிரானாகவும் வித்து வானாகவும் விளங்கிய காலத்திலேயே தமது புலமைத்திறத்தால் பலவகை சிறப்புக்களைப் பெற்று விளங்கியிருக்கிறார் சாமிநாதையர்.
உ.வே.சா. மடத்தில் இருந்த காலத்தில், சுப்பிரமணிய தேசிகரிடத்தில் ஈடுபாடுகொண்ட பரமசிவத் தம்பிரான் என்பவர் தேசிகர்மீது மும்மணிக் கோவை ஒன்றை இயற்றியுள்ளார். அந்தப் பிரபந்தம் தேசிகருடைய முன்னிலையில் அரங்கேற்றப்பட்டு உள்ளது. அம்மும்மணிக்கோவைக்குப் பத்துபேர் சிறப்புப் பாயிரச் செய்யுள் வழங்கியிருந்தனர். அவர்களுள் சாமிநாதையரும் ஒருவர். சிறப்புப் பாயிரச் செய்யுளுக்கு முன்னர் அதனை எழுதினவர் பெயர் அமைப்பது வழக்கம். அதன்படி ‘திருவாவடு துறை ஆதீன மகாசந்நிதானத்திடத்துக் கல்வி கற்கின்ற வரும் வேங்கடசுப்ப ஐயரவர்கள் புத்திரருமாகிய திருவாவடுதுறைச் சாமிநாதையரவர்கள் இயற்றிய அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்’ என்று அமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அமைத்தது குறித்து என் சரித்திரத்தில் இப்படி எழுதிப் பெருமை கொள்கிறார் சாமிநாதையர்:
“என்னைத் திருவாவடுதுறைச் சாமிநாத ஐயரென்று வழங்குவது உறுதியாயிற்று. திருவாவடுதுறையென்பது ஊர்ப் பெயராக இருந்தாலும் அதை என் பெயரோடு சேர்த்த போது எனக்கு ஒரு கௌரவப் பட்டம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று” (என் சரித்திரம், ப. 435).
திருவாவடுதுறை மடத்தில் வித்துவானாக இருந்தபோதே தியாகராச செட்டியார் வழியாகக் கும்பகோணம் கல்லூரித் தமிழ் ஆசிரியர் பணி வாய்ப்பு வரப்பெற்றது. தியாகராச செட்டியாரின் முயற்சியினால் 1880ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் நாள் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் பணியை ஏற்றிருக்கிறார். கும்பகோணம் கல்லூரித் தமிழாசிரியர் பணி ஏற்கச் செல்லும்போது சுப்பிரமணிய தேசிகர் இவரைப் பற்றி இவ்வாறு எழுதியனுப்பியிருக்கிறார்:
“இந்தப் பத்திரிகையிலெழுதப்பட்டிருக்கிற சாமிநாதையர் நமது ஆதீன வித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்களிடத்தில் ஆறு வருஷ காலம் இலக்கண இலக்கியங்கள் நன்றாய் வாசித்ததுமன்றி நம்மிடத்திலும் நான்கு வருஷ காலமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். இலக்கண இலக்கியங்களைத் தெளிவாய்ப் போதிக்கிற விஷயத்தில் நல்ல சமர்த்தர்; நல்ல நடை யுள்ளவர்” (என் சரித்திரம், ப. 484).
1903ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் மாணவர்கள் போற்றும் நல்லாசிரியராக அங்குப் பணியாற்றியிருக்கிறார். கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது 1903, ஜனவரி, 1ஆம் நாள் தஞ்சையில் ஏழாவது எட்வர்டு மன்னர் முடிசூட்டு விழா தொடர்பாக நடந்த நிகழ்ச்சி யன்றில், இவரது தமிழ்ப்பணியைப் பாராட்டும் வகையில் மாவட்ட துணை ஆட்சியரால் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பெற்றது. இந்தப் பட்டத்தை உ.வே.சா. அவர்கள் பெற்றபோது பதிமூன்று ஆண்டு கால ஆசிரியர் பணி அனுபவங்களையும், சீவக சிந்தாமணி (1887), பத்துப்பாட்டு (1889), சிலப்பதி காரம் (1892), புறநானூறு (1894), மணிமேகலை (1898) உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட பதிப்பாசிரியர் அனுபவங்களையும், மணிமேகலை (1898) நூலுக்கு உரை எழுதி வெளியிட்டதன் வழியாக உரையாசிரியர் அனுபவத்தையும் பெற்றிருந்தார். 1903ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சென்னை மாநிலக் கல்லூரிக்கு வந்து தமிழாசிரியர் பணியைச் செய்யத் தொடங்கினார். கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு வந்தபின்னர் மேலும் பல சிறப்புக்களை அவர் பெற்று விளங்கி யிருக்கிறார்.
1906, ஜனவரி, 1ஆம் நாளன்று சாமிநாதையர் அவர்களின் தமிழ்ப் பணியைப் போற்றும்வகையில் அரசு ‘மகாமகோபாத்தியாய’ பட்டம் வழங்கிப் பாராட்டியது. இந்தப் பட்டத்துடன் ஆண்டுதோறும் 100 ரூபாய் பெறுவதற்குரிய வழிவகையும் செய்து தரப்பட்டது. இந்தப் பட்டத்தைப் பெறும்போது சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிக் கொண் டிருந்தார். உ.வே.சாமிநாதையர் அவர்களுக்கு மகாமகோபாத்தியாய பட்டம் கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளை அந்தக் காலத்தில் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் புகழ்பெற்று விளங்கிய வி. கிருஷ்ண சாமி ஐயர் செய்திருந்தார். கிருஷ்ணசாமி ஐயர் பிரிட்டிஷ் அரசு கவர்னரது நிர்வாகச் சபையில் உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக செனட், சிண்டிகேட் ஆகிய இரு அவைகளின் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றியவர். மயிலாப்பூரில் சமஸ்கிருத கல்லூரி, வேங்கடரமண வைத்தியசாலை ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர்.
உ.வே.சாமிநாதையர் மகாமகோபாத்தியாய பட்டம் பெற்றதற்குப் பலரும் நேரில் கண்டு பாராட்டியுள்ளனர்; பலர் கடிதங்கள் மூலமாகத் தங்களின் மகிழ்ச்சியையும் பாராட்டையும், வாழ்த்தினையும் தெரிவித்துள்ளனர். 1903, ஜனவரி, 3ஆம் நாள் சுதேசமித்திரன் இதழ், சாமிநாதையர் அவர்கள் மகாமகோபாத்தியாய பட்டம் பெற்றதைப் பாராட்டி இவ்வாறு எழுதியிருந்தது:
“ஸ்ரீமான் ஸ்வாமிநாதையர் தமது பாஷாபிமானம், தேசாபிமானம் என்னும் பெரிய ஆயுதங்களைக் கொண்டே அசௌகர்யங்களை வென்று உயர்வுற்றிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. இவருடைய அருந்திறமையை நன்கு மதித்துக் கவர்ன்மெண்டார் இவருக்குப் புதுவருஷப் பட்டமாக மகாமகோபாத்தியாயர் என்ற உயர் பட்டமளித்திருப்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். மகாமகோபாத்தியாய ஸ்வாமிநாதையர் அவர்கள் இன்னும் நெடுங் காலம் இருந்து, அவருக்கு நெடுங்காலம் முன்னரே கிடைத்திருக்க வேண்டியதாகிய மதிப்பு முழுதையும் அடைந்தவராகி, இத் தமிழுலகத் தாருக்குப் புதிய புதிய விருந்துகள் ஊட்டிக் கொண்டிருப்பாரென்று மனப்பூர்த்தியாக விஸ்வசிக்கின்றோம்” (மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர், பக். 57 - 58)
1906, மார்ச்சு, 17இல் சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றதற்குப் பாராட்டு விழா நடைபெற்று உள்ளது. இந்தப் பாராட்டுவிழாவிற்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வந்திருந்து கீழ்வரும் வாழ்த்துப்பாக்களைப் பாடி அளித்திருக்கிறார்:
“செம்பரிதி யளிபெற்றான் பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்த தாங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்
றெவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல் இதற்கென்கொல்
பேருவகை படைக்கீன் றீரே?”
“அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி யறியாதார்
இன்றெம்மை யாள்வோ ரேனும்
பன்னியசீர் மஹாமஹோ பாத்தியா
யப்பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்
முன்னிவனப் பாண்டியர்நா ளிருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?”
“நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
யின்பவகை நித்தந் துய்க்கும்
கதியறியோம் என்றுமனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலை பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே!”
(மேலது, பக். 61 - 62)
அப்போது பாரதியார் சுதேசமித்திரன் இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்திருக் கிறார். உ.வே.சா. அவர்கள் 1918, மே, 15இல் புதுச் சேரியில் நடைபெற்ற சங்கர ஜெயந்தி விழாவிற்குத் தலைமைதாங்கச் சென்றபோது அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாரதியாரைச் சந்தித்து மகாமகோபாத்தியாய பட்டம் பெற்றபோது தம்மைப் பற்றிப் பாடிய பாடல்களுக்காக நன்றி தெரிவித்திருக்கிறார்.
மகாமகோபாத்தியாய பட்டம் பெற்றதற்கு நடந்த பாராட்டு விழாவில், வை. மு. சடகோபராமாநுஜாசாரி யாரும் கலந்துகொண்டு உ.வே.சா. அவர்களுக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். அவர் உரையின் எழுத்து வடிவத்தைச் சுதேசமித்திரன் இதழ் 1906, பிப்ரவரி, 13இல் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.
உ.வே.சாமிநாதையர் ஆற்றிவரும் தமிழ்ப் பணியை அறிந்து 1917, ஜனவரி, 31ஆம் நாள் காசியி லிருந்த பாரத தர்ம மகா மண்டலம் ‘திராவிட வித்யா பூஷணம்’ (திராவிடக் கலையழகன்) என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது. மகா மண்டலத்தார் சாமிநாதையருக்கு இந்தப் பட்டத்தை அளிப்பது குறித்து இவரது பழைய மாணவரும் திருச்சியில் வழக்கறிஞர் தொழில் செய்துவந்தவருமான டி.வி. சுவாமிநாத சாஸ்திரி என்பவருக்குக் கடிதம் எழுதித் தெரிவித்திருக்கிறார்கள். சாஸ்திரி அவர்களே அங்குச் சென்று அந்தப் பட்டத்தைப் பெற்றுவந்து சாமிநாதை யரிடம் அளித்திருக்கிறார்.
1906, ஜனவரி மாதத்தில் வேல்ஸ் இளவரசர் துணைவியாருடன் சென்னைக்கு வந்திருக்கிறார். ஒரு வாரத்திற்கு மேல் சென்னையில் அவர்கள் தங்கி யிருந்துள்ளனர். அவர்களின் வருகையைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் வகையில் சென்னையில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பெற்றுள்ளன. அரசு, அறிஞர் பெருமக்கள் பலருக்குப் பட்டங்களும் பரிசுகளும் வழங்கிச் சிறப்புசெய்திருக்கிறது. கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தர்பாரில் உ.வே.சாமிநாதையர் அவர்களுக்குத் தங்கத் தோடா அணிவித்துப் பெருமைப் படுத்தியுள்ளனர். வேல்ஸ் இளவரசர் மீண்டும் 1922, ஜனவரி, 13இல் சென்னைக்கு வந்திருக்கிறார். அப்போது தமிழிலும் வடமொழியிலும் சிறந்து விளங்கும் பல அறிஞர் பெருமக்களுக்கு அரசு மரியாதை செய்திருக்கிறது. சாமிநாதையர் அவர்களுக்குக் ‘கில்லத்’ வழங்குவது என முடிவாகியிருந்தது. சாமிநாதையர் அப்போது திருவாவடு துறையில் இருந்து சென்னைக்கு வந்து அந்தப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்திருக்கிறார்.
1925, ஜூன், 8ஆம் நாள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 24-ஆம் ஆண்டுவிழா நடைபெற்றது.
சர் சி.பி.இராமசாமி தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் சாமிநாதையரின் தமிழ்நூல் பதிப்புப் பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில்
ரூ. 5000/- பொற்கிழி அளித்துச் சிறப்பித்தனர். இத் தொகை, மதுரையில் வழக்கறிஞராகவும், அப்போது மதுரைத் தமிழ்ச்சங்க உறுப்பினராகவும் இருந்த
டி. ஸி. சீநிவாஸையங்கார் பல செல்வந்தர்களிடமிருந்து திரட்டி வைத்திருந்த தொகையாகும். நிதி அளித்து உதவி செய்தவர்களின் பெயர்களை, அந்த ஆண்டு பதிப்பித்து வெளியிட்ட நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரைப் பதிப்பில் அச்சிட்டு நன்றி செலுத்தியிருக் கிறார் சாமிநாதையர்.
ஸ்ரீமான் ஸர். எம். ஸி. டி. முத்தையா செட்டியார், உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமான் கனம் வி.வி.
ஸ்ரீ நிவாஸையங்கார், இந்து பத்திரிகை அதிபர் ஸ்ரீமான் எஸ். கஸ்தூரிரங்க ஐயங்கார், சுதேசமித்திரன் பத்திரிகை அதிபர் ஸ்ரீமான் ஏ. ரங்கசாமி ஐயங்கார், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீமான் கே. பாலசுப்பிர மணிய ஐயர், வெள்ளக்கால், ஸ்ரீமான் வெ.ப.சுப்பிர மணிய முதலியார் ஆகியோர் நிதி அளித்தவர்களுள் சிலராவர்.
அதே விழாவில், சாமிநாதையருக்குக் காஞ்சி காமகோடிபீடத் தலைவர் சங்கராச்சாரிய சுவாமிகள் ‘தாஷிணாத்ய கலாநிதி’ பட்டம் வழங்கிச் சிறப்பித்து, இரட்டைச் சால்வையும், தோடாவும் அணியச் செய்திருக்கிறார்கள். சங்கராச்சாரியர் வழங்கிய தாக்ஷிணாத்ய கலாநிதி என்னும் பட்டத்தைப் பிற்காலத்தில் தாம் பதிப்பித்து, எழுதி வெளியிட்ட பல நூல்களில் தம் பெயருக்கு முன்னர் பெருமையுடன் சேர்த்துப் பதிப்பித்து மகிழ்ந்திருக்கிறார் சாமிநாதையர்.
சாமிநாதையரின் தமிழ்ப் பணியைப் பாராட்டிச் சென்னைப் பல்கலைக்கழகம், ‘டாக்டர்’ (D. LITT.) பட்டம் வழங்கிக் கௌரவித்தது. சாமிநாதையருக்கு டாக்டர் பட்டம் அளிப்பது குறித்துச் சென்னைப் பல்கலைக்கழகம் 1932, மார்ச், 21ஆம் நாள் தெரிவித்தது; 1932, ஆகஸ்ட் 3ஆம் நாள் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அந்தப் பட்டத்தை வழங்கியது. இவருடன் டாக்டர் பட்டம் பெற்றவர்களுள் சர் சி.வி. இராமன் அவர்களும் ஒருவராவார். வடமொழி, தமிழல்லாத ஏனைய துறைசார்ந்த அறிஞர்களுக்கு மட்டுமே வழங்கிவந்த இந்தப் பட்டம் தமிழில் முதன் முதலாகச் சாமிநாதையருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
1935, மார்ச் மாதம் சாமிநாதையருக்கு எண்பதாம் ஆண்டு நிறைவுற்றது. இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வழக்கறிஞர் கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தார். விழா 1935, மார்ச் 5ஆம் நாள் சென்னைப் பல்கலைக்கழகச் செனட் மண்டபத்தில் ஸர் முகமது உஸ்மான் தலைமையில் நடைபெற்றது. விழாவின் நிறைவில் பல்கலைக்கழகச் செனட் மண்டபத்தில் சாமிநாதையரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அப்போது சாமிநாதையருக்கு ரூ3000/- பண முடிப்பும் அளித்துச் சிறப்பிக்கப்பட்டது.
எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் பலரும் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்திருக்கின்றனர். உ.வே.சா. அவர்களின் நண்பர்களும், நலம் விரும்பிகளும் சேர்ந்து அளித்த வாழ்த்துரையில்,
“நிரம்பிய கல்வியாலும், நன்கு ஆராய்ந்து தெளிந்த பின்பே நூல்களை வெளியிடும் பொறுமையாலும், இடையூறுகளைப் பொருட் படுத்தாத விடாமுயற்சியாலும் அபாரமான ஞாபக சக்தியாலும், உள்ளதை உள்ளபடி பதிப்பிக்கும் அரிய குணத்தாலும், தூய்மை நிலையாலும், செய்ந்நன்றி மறவாத பெருந் தன்மையாலும், உடல்தளர்ந்தும் தமிழ்ப் பணியில் தளராத மன உறுதியாலும் தாங்கள் தமிழ்நாட்டிற்கு ஒரு திலகமாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள்” (எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் அளிக்கப் பெற்ற உபசாரப் பத்திரங்கள், ப. 8)
என்று வாழ்த்தி சிறப்பித்துள்ளனர். சென்னைப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் அளித்த வாழ்த்துரையில்
“செயற்கரிய செயல்களைத் தமிழுலகத்திற்குத் தாங்கள் செய்து வந்திருப்பதோடு துரைத்தனக் கல்லூரிகளில் தமிழாசிரியராகவிருந்தே தங்கள் வாழ்நாளிற் பெரும்பாகத்தைக் கழித்தீர்களென்று அறிந்து தங்களைப் பெரிதும் நாங்கள் பாராட்டு கின்றோம். தங்கள்பாலுள்ள தெய்வபக்தி, உண்மை, அன்பு, உறுதி, சொல்வன்மை, கலைபயில் தெளிவு முதலிய அரிய குணங்கள் தங்கள் மாணவரின் மனத்தை முற்றிலும் தம்பால் வசீகரித்து அவர்தம் வாழ்க்கையையும் புனிதமாக்கின” (மேலது, ப. 26)
என்று சிறப்பித்துப் போற்றியுள்ளனர். இளமை தொடங்கி தமிழ் மீது பற்றுகொண்டு படித்து, உழைத்து, உயர்ந்து, சிறப்புற்று விளங்கியவர் சாமிநாதையர். தமிழ் மீது அளவுகடந்த ஈடுபாடு அவருக்கு இருந்தது என்பதற்கு ஏராளமான சான்று களைக் காட்டலாம். அவற்றுள் ஒன்றை இங்குச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். ‘தமிழ் வரலாறு’ எனும் வரலாற்று நூலை எழுதிய சீனிவாசபிள்ளை அவர்கள் ஒருமுறை (22.3.23) சாமிநாதையருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் ஐயரின் தமிழ்ப் பணியைச் சிறப்பாகப் பாராட்டி எழுதிவிட்டு ‘இன்றுவரை தமிழுக்காகத் தாங்கள் பாடுபட்டது போதுமே; இனி அந்தச் சிரமமான வேலையை அடியோடு நீக்கிவிட்டு, ஈசுவர பக்தியை அபிவிருத்தி செய்துகொண்டு முன்னோர்களுக்கும் திருப்தியளிக்கச் செய்யலாமே’ என்று எழுதியிருந்தார். அவரின் உள்ளக் கிடக்கையைப் புரிந்துகொண்டு நன்றிசெலுத்திச் சாமி நாதையர் பதில் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தின் ஒருபகுதி இவ்வாறு இருக்கிறது.
“என் வாழ்நாள் முடியும்வரை, என் உடலில் சிறிதேனும் பலம் உள்ளவரை, நான் தமிழாராய்ச்சி ஒன்றில்தான் ஈடுபட முடியும். என்னை மூச்சு விடாதே என்று ஒருவர் சொன்னாலும் அப்படியே செய்ய முயல்வேன். ஆனால் தமிழ்ப் பணியை நிறுத்திவிடு என்றால் அது என்னால் முடியாத காரியம். நீங்கள் நல்ல நோக்கத்துடன்தான் எனக்கு எழுதினீர்கள். எனக்குச் சிரமமாக இருக்குமேயென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். எனக்கு அதுவே இன்பம். நான் மேற்கொண்ட தமிழ் ஆராய்ச்சிப் பணியே எனக்கு மிக உயர்ந்த மோட்ச சாதனம்” (என் ஆசிரியப்பிரான், ப. 136).
டாக்டர் உ.வே. சாமிநாதையரிடம் இருந்த இந்தத் தமிழ் ஈடுபாடுதான் பல சிறப்புகள் அவரைத் தேடிவரக் காரணமாக இருந்தது. அவர் காலத்திலோ, அவர் காலத்திற்கு முன்னரோ இவரையன்றி வேறு யாரும் தமிழால் இத்தனைச் சிறப்புக்களைப் பெற்ற தில்லை. அதுவே சாமிநாதையரின் தனிச் சிறப்புக் களுள் ஒன்றாக விளங்குகிறது.
துணைநின்ற நூல்கள்
1) சாமிநாதையர், உ.வே. 2008 (ஏழாம் பதிப்பு). என் சரித்திரம். சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
2) சுந்தரராகவன், கே. 1942. மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர். சென்னை: அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு
3) ஜகந்நாதன், கி.வா. 1983. என் ஆசிரியப்பிரான். சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
4) மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களுடைய எண்பதாம் ஆண்டு நிறைவுவிழாவில் அளிக்கப்பெற்ற உபசாரப் பத்திரங்கள், 6-3-1935. சென்னை: லா ஜர்னல் அச்சுக்கூடம்
(1935, மார்ச் 5, சென்னைப் பல்கலைக்கழகச் செனட் மண்டபத்தில் உ.வே. சாமிநாதையரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்ட நாள்)