voc 350கும்பகோணம் கல்லூரியில் தாம் வகித்துவந்த தமிழ் ஆசிரியர் பணியைத் தமது ஓய்வுக்குப் பின்னர் உ.வே.சாமிநாதையர் ஏற்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்குமென்று தியாகராச செட்டியார் முடிவு செய்துவிடுகிறார். அக்கால வழக்கப்படி அதற்குரிய ஏற்பாடுகளெல்லா வற்றையும் செட்டியார் செய்து முடித்திருந்தார். திருவாவடுதுறை மடத்திலிருந்த உ.வே.சாமிநாதையர் அவர்கள் செட்டியாருடன் கும்பகோணம் கல்லூரிக்குச் செல்கிறார். அப்போது முதல்வராக இருந்த கோபால்ராவ் உள்ளிட்ட பல்துறை ஆளுமைகள் உ.வே.சா. அவர்களின் திறமையைத் திறனாய்கிறார்கள். அப்போது அங்கிருந்தவர்களுள் ஒருவரான ஸ்ரீநிவாசையர் என்பவர், தியாகராச செட்டியாரை நினைவில் நிறுத்திக்கொண்டு “மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் நீங்கள் முதலிற் படித்தவர்கள். நான் பின்பு படித்தவன். இதனால் ஜேஷ்ட கனிஷ்ட முறை நம் இருவருக்கும் உண்டு. இந்த முறையால் நீங்கள் இதுவரை பார்த்துவந்த வேலையை எனக்குச் செய்விக்க வேண்டும். இந்தக் கருத்தை வைத்து ஐந்து நிமிஷங்களில் அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தமொன்று இயற்றிச் சொல்ல வேண்டும்” என்று கேட்கிறார். உடனே உ.வே.சா. அவர்கள்,

வாய்ந்தபுகழ் படைத்திலங்கு மீனாட்சி

சுந்தரநா வலவன் பாலே

ஏய்ந்ததமி ழாய்ந்தமுறைக் கியைவுறநீ

இதுகாறும் இனிதின் மேய

ஆய்ந்தவள நகர்க்குடந்தைக் காலேசில்

நின்னிடமெற் களித்தல் நன்றே

வேய்ந்ததமிழ் முதற்புலமைத் தியாகரா

சப்பெயர் கொள் மேன்மையோனே

(என் சரித்திரம், ப. 494)

என்ற விருத்தத்தைப் பாடித் தம் திறமையை வெளிப் படுத்துகிறார். இப்படியான பல திறனாய்வுகளின் முடிவில் உ.வே.சா. அவர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 1880, பிப்ரவரி, 16-இல் கல்லூரி ஆசிரியர் பணியை உ.வே.சா. ஏற்கிறார். அதன் பின்னர் இருபத்துமூன்று ஆண்டுகள் இடைவிடாது, கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் இன்புறப் பாடங்களைத் திறமையுடன் கற்பித்து வந்திருக்கிறார் என்பதை அவர் வரலாறு வெளிப்படுத்துகிறது. பொதுவாக உ.வே.சாமிநாதையரின் ஆசியப் பணிக்கால அனுபவத்தை மூன்றுநிலைகளாகப் பகுத்துக்கொள்ள முடியும்.

முதல் நிலை: 1876 - 1800

உ.வே.சாமிநாதையர் 1871ஆம் ஆண்டிலிருந்து திருவாவடுதுறை மடத்திற்கு வந்து மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் முறையாகத் தமிழ்ப் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார். 1876, ஜனவரி, 1-இல் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மறைவுற்ற பின்னர், அப்போது மடத்து ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தேசிகரிடம் பாடங்கேட்டுக் கொண்டிருந்த அதேகாலத்தில் இளைய தம்பிரான் களுக்குப் பாடம் சொல்லித் தருபவராகவும் உ.வே.சா. விளங்கியிருக்கிறார். இப்படி மடத்தில் மாணவ ராகவும் வித்துவானாகவும் ஐந்தாண்டு காலம் இருந்திருக்கிறார். இந்த ஐந்தாண்டுகால அனுபவத்தை இவரின் ஆசிரியர் பணிக்காலத்தின் முதல்நிலையாகக் கொள்ளலாம். மடத்தில் வித்துவானாக இருந்த இந்தக் காலப்பகுதியில் அந்த மடத்திலிருந்த ஆறுமுகச் சுவாமிகளுடன் இணைந்து ஆதீனம் பெரியகாறுபாறு வேணுவனலிங்கசுவாமிகள் இயற்றுவித்த சுப்பிர மணிய தேசிக விலாசச் சிறப்பு, வேணுவனலிங்க விலாசச் சிறப்பு எனும் நூலைப் பதிப்பித்து (1878) வெளியிடுகிறார். இதுவே இவர் பதிப்பாசிரியராக இருந்த முதல் நூலாகும். 23 வயதிலேயே ஆசிரிய ராகவும் பதிப்பாசிரியராகவும் உ.வே.சா. தன்னை நிலையுயர்த்திக் கொண்டுள்ளார்.

இரண்டாம் நிலை: 1880 - 1919

கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிய 23 ஆண்டுகால அனுபவங்களையும், சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய 16 ஆண்டுகால அனுபவங் களையும் சேர்த்த 39 ஆண்டுகால ஆசிரியர் பணி அனுபவங்களை இரண்டாம் நிலையாகக் கொள்ளலாம். 1880, பிப்ரவரி, 16இல் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியர் பணியை ஏற்கிறார். அப்போது அவருக்கு மாதச் சம்பளம் ரூபாய் 50/-. அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் ராவ்பகதூர்

டி. கோபாலராவ் என்பவர். கும்பகோணம் கல்லூரியில் 1880ஆம் ஆண்டு முதல் 1903ஆம் ஆண்டுவரை 23 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

உ.வே.சா. கும்பகோணம் கல்லூரியிலிருந்து மாற்றலாகி 1903, நவம்பர் மாதத்தில் சென்னை, மாநிலக் கல்லூரியில் ஆசிரியர் பணியை ஏற்கிறார். அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் ஜே.பி. பில்டர்பெக் எனும் ஆங்கிலேயர். அதன் பின்னர் 31.3.1919 வரை 16 ஆண்டுகள் மாநிலக் கல்லூரியில் பணியாற்றியிருக்கிறார்.

கும்பகோணம், சென்னை ஆகிய இரண்டு இடங்களிலிருந்த இரண்டு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய காலப்பகுதியில் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். தியாகராச செட்டி யாருடன் இணைந்து மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய திருக்குடந்தைப் புராணத்தைப் பதிப்

பித்து 1883இல் வெளியிட்டிருக்கிறார். உ.வே.சா. பதிப்பாசிரியராக விளங்கிய இரண்டாவது நூல் இதுவாகும். இதே காலப்பகுதியில் ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம் (1885) எனும் தலவரலாறு பற்றிய நூலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் சீவகசிந்தாமணி (1887), பத்துப்பாட்டு (1889) உள்ளிட்ட 30 நூல்களை இந்தக் காலப்பகுதியில் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். இதே காலப் பகுதியில் மாணவர்களின் தேர்வுநோக்கைக் கருத்தில் கொண்டு 14க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். இந்தக் காலப்பகுதியில் வெளியிட்ட மறுபதிப்பு நூல்கள் பல உள்ளன. யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இலந்தைநகர் ஸ்ரீதண்டபாணி வித்தம் - ஸ்ரீமுத்துக்குமாரசாமி ஊசல் எனும் சிற்றிலக்கிய நூலொன்றையும் (1891) இக் காலப்பகுதியில் இயற்றி வெளியிட்டிருந்தார். மாணவர்கள் போற்றும் நல்லாசிரியராக உ.வே.சா. ஏற்கெனவே விளங்கியிருந்தார். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாக்கும் பதிப்பாசிரியர் என்று நாடு போற்றும் நிலை இந்தக் காலப்பகுதியில்தான் உ.வே.சா. அவர்களுக்கு ஏற்பட்டது.

மூன்றாம் நிலை: 1924 - 1927

1924ஆம் ஆண்டு சிதம்பரத்தில் ராஜா அண்ணா மலை செட்டியார் மீனாட்சித் தமிழ்க் கல்லூரி, மீனாட்சி வடமொழிக் கல்லூரி, மீனாட்சி கலைக் கல்லூரி எனும் மூன்று கல்லூரிகளைத் தொடங்கினார். தமிழ்க் கல்லூரிக்குத் தகுந்த ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டுமென்று செட்டியார் எண்ணிய போது உ.வே.சா. அவர்களின் நினைவே முன்வந்து நின்றிருக்கிறது. அதற்குரிய முயற்சிகளையெல்லாம் செய்து உ.வே.சா. அவர்களை மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்கச்செய்கிறார். 1924, ஜூலை மாதத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டுச்சென்று கல்லூரி முதல்வர் பொறுப்பை உ.வே.சா. ஏற்கிறார்.

இவர் கல்லூரி முதல்வராக இருந்த காலத்தில் சேதுசமஸ்தான வித்துவானாக இருந்த ரா. ராக வையங்கார் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்கள் கல்லூரிக்கு வந்து சிறப்புச் சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கின்றனர். உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு 1927இல் தாம் வகித்துவந்த கல்லூரி முதல்வர் பணிவாய்ப்பை விட்டுவிட்டு மீண்டும் சென்னைக்கே வந்துவிடுகிறார். 1924 முதல் 1927 வரை கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய மூன்றாண்டு களை உ.வே.சா. அவர்களின் ஆசிரியர் பணி அனுபவத்தின் மூன்றாம் நிலையாகக் கொள்ளலாம். இந்தக் காலப்பகுதியில் நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரைப் பதிப்பு (1925) உள்ளிட்ட ஒருசில நூல்களையே உ.வே.சா. பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். இதற்குப் பிந்தைய காலத்தில்தான் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.

1876இல் திருவாவடுதுறை மடத்தில் இளைய தம்பிரான்களுக்கு வித்துவானாகப் பற்றியாற்றத் தொடங்கியது முதல் 1927இல் கல்லூரி முதல்வராக இருந்ததுவரையிலான 51 ஆண்டுகள் எனும் பெரும் காலப்பரப்பில் தமிழ் மாணவர்களோடு நேரடியாகத் தொடர்பிலிருந்திருக்கிறார் உ. வே. சாமிநாதையர்.

1871இல் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து 1876 வரை அவரிடம் முறையாகத் தமிழ் படித்து; 1876இல் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு திருவாவடுதுறை மடத்தின் ஆதீன கர்த்தராக இருந்த சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்கத் தொடங்கி; அதேகாலத்தில் மடத்து இளைய வித்துவான்களுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியராகவும் நிலையுயரத் தொடங்கிய உ.வே.சா. அவர்கள், கல்லூரி முதல்வர் எனும் பதவி வரையில் உயர்ந்து சென்றிருக்கிறார். தமிழ் மட்டுமே படித்து, அறிந்த ஒருவருக்குப் பல உயர்ந்த பதவிகள் கிடைக்கப்பெற்றது உழைப்பின்வழி மட்டுமேயாகும் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

வித்துவானாக இருந்து, கல்லூரி ஆசிரியராக உயர்ந்து, கல்லூரி முதல்வராகப் பணியாற்றி அறை நூற்றாண்டிற்கும் மேலாகக் கல்விப்புலத்தோடு தம் வாழ்க்கையைக் கழித்திருக்கிறார் உ.வே.சாமி நாதையர் என்பது வரலாற்றுச் செய்தியாகும். உ.வே.சா. ஆசிரியர் பணியை எந்த அளவு ஈடுபாட்டுடன் செய்திருக்கிறார் என்பதற்கு, ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் கழித்து அவர் எழுதி ஒரு குறிப்பை இங்கு நினைவுகொள்வது பொருத்தமாக இருக்கும்.

நான் காணும் கனவுகளில், கலாசாலையிற் பல மாணாக்கர்களிடையே இருந்து அவர்களுடைய உத்ஸாகமான செயல்களையும் அவர்கள் பேசும் பேச்சுக்களையும் அறிந்து மகிழுங் காட்சிகளே பல. தம்முடைய குடும்பத்தையே மறந்துவிட்டுக் கல்வி கற்றல் ஒன்றையே நாடிப் பறவைகளைப்போலக் கவலையற்றுப் படித்துவந்த மாணாக்கர்களுடைய கூட்டத்திடையே பழகுவதைப் போன்ற இன்பத்தை வேறுஎங்கும் நான் அனுபவித்ததில்லை. அவர்களுடைய அன்பை நினைத்தாலே என் உள்ளத்தில் ஒரு புதிய ஊக்கம் உண்டாகும். அந்தக் காலம் போய் விட்டதனாலும் அக்காலத்து நிகழ்ச்சிகளின் நினைவு இன்னும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை. அதனால், நான் நினைக்கும்போதெல்லாம் உள்ளத்தால் மீண்டும் கலாசாலையிலிருந்து பாடஞ் சொல்லுகிறேன்; இன்புறுகிறேன்” (மாணாக்கர் விளையாட்டுகள், நல்லுரைக் கோவை, மூன்றாம் பாகம், ப. 39, 1938).

உ.வே.சா. ஆசிரியராகப் பணியேற்று 140ஆவது ஆண்டு தொடங்கும் இவ்வேளையில் அவரது வரலாற்றினூடே, அவரது ஆசிரியர் பணிக்காலச் சுவடுகளைத் தேடிப்பார்த்து நினைவுகொள்வது நாம் அவருக்குச் செய்யும் மரியாதைகளுள் ஒன்றாகக் கருதத்தக்கது.

துணைநின்ற நூல்கள்:

  1. சாமிநாதையர், உ.வே. 2008 (ஏழாம் பதிப்பு). என் சரித்திரம். சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
  2. ஜகந்நாதன், கி.வா. 1983. என் ஆசிரியப்பிரான். சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
  3. சாமிநாதையர், உ. வே. 1938. நல்லுரைக் கோவை (மூன்றாம் பாகம்). சென்னை: கார்டியன் அச்சுக்கூடம்.

               (இதன் சுருக்க வடிவம் 15,பிப்ரவரி, 2019 அன்று தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்திருந்தது)

Pin It