mohanasundram 450செந்தமிழ் வானில் தாரகைகளாய் ஒளிவீசியவர் பலர். அவர்களுள் பகல் நட்சத்திரங்களாய் நம் கண்ணுக்குத் தெரியாமல் விளங்கியவர் பலர்.  அத்தகு பலருள் ஒருவராய்த் திகழ்ந்த திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றி இளைய தலைமுறைக்குச் சில செய்திகளைப் பகிர்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

‘திருவாசகமணி’ கே.எம்.பாலசுப்பிரமணியம் இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட தலை சிறந்த வழக்கறிஞர்; தமிழ் எழுத்தாளர்; மொழி பெயர்ப்பாளர்.  திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.  திருக்குறளை மொழிபெயர்ப்பதற்கு முன்னரே, திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் ‘திருவாசகமணி’ எனும் பெயரால் அழைக்கப்பட்டவர். சமுதாயத்தில் வர்ணாசிரமத்தை விரட்டும் வேலையைச் செய்யத் துணிந்த பெரியார் 1926-இல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.  தொடக்கம் முதலே கே.எம்.பாலசுப்பிரமணியம் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பணியாற்றினார்.

தொடர்ந்து கே.எம்.பாலசுப்பிரமணியம் திராவிட இயக்கத்தின் தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகிப் பணியாற்றித் திராவிட இயக்கத்தின் தளபதி எனும் இடம் பெற்றார்.  தமிழகத்தில் 1938-இல் மூண்ட இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான மொழிப்போர்க் கிளர்ச்சியில் முன்னணித் தலை வர்கள் ஐவருள் ஒருவராக விளங்கிப் போராட்டக் களம் கண்டவர் இவர்.  இதன் விளைவாக ஆறு மாதம் சிறைத்தண்டனை அடைந்தார்.  ‘திராவிட நாடு’ பிரிவினைக் கோரிக்கை தொடர்பாக இந்திய முஸ்லீம் லீக் தலைவரான முகம்மது அலி ஜின்னாவுடன் விவாதிக்கத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவுடன் பம்பாய் சென்றபோது உடன் சென்றார்.  இந்நிகழ்வின் போது சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரும் இருந்தார்.

பின்னர் கே.எம்.பாலசுப்பிரமணியம் திராவிட அரசியல் பாதையை விட்டு விலகி ஆன்மிக வழியில் நாட்டம் கொண்டார்.  தத்துவம், சைவ இலக்கியம், சைவ சித்தாந்தம் முதலானவற்றில் அவருக்கு மிகவும் ஈடுபாடு ஏற்பட்டது. கே.எம்.பாலசுப்பிர மணியத்தின் இத்தகைய மனமாற்றம் பற்றித் திராவிட இயக்க மூத்த ஆய்வு அறிஞரும் எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு பின்வருமாறு கருத்துத் தெரிவிக் கிறார்; ‘திருநெல்வேலியில் 1930-இல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் நாத்திகத்துக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்தவரின் இத்தகைய மன மாற்றம் குறித்துச் சுருக்கமாகச் சொல்வதற்கு இயலாது.’ மேலும் அவர், ‘கே.எம்.பாலசுப்பிர மணியம் அவர்களின் திருவாசகச் சொற்பொழிவை நான் நேரில் கேட்டுள்ளேன்,’ என்றும் நினைவு கூர்கிறார். தூய தமிழ்க் காவலர் கு.மு.அண்ணல் தங்கோவின் ‘அறிவுப்பா’ என்னும் நூலுக்குக் கே.எம்.பி. அணிந்துரை வழங்கியுள்ளார்.

கே.எம்.பாலசுப்பிரமணியம் திருவாசகத்தை 1958-இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 500 பிரதிகள் வெளியிட்டார். தென்ஆப்பிரிக்கத் தமிழ் மக்களின் பெருத்த ஆதரவால் பாதிக்கும் மேலான அவரின் திருவாசக மொழிபெயர்ப்பு நூல்கள் விற்றுத்தீர்ந்தன. கே.எம். பாலசுப்பிரமணியம் தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் மிகச்சிறந்த புலமை யாளர் என்று ‘வெள்ளிநாக்குச் சொற்பொழிவாளர்’ என்று பெயர் பெற்ற ரைட் ஆனரபிள் வி.எஸ். சீனிவாச சாஸ்திரி புகழ்ந்துள்ளார். இவரின் திருவாசகம் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலுக்கு அந் நாளைய தமிழக உள்துறை அமைச்சர் எம்.பக்தவத்சலம் முன்னுரை வழங்கியுள்ளார்.

13.05.1961-இல் சென்னை திருமயிலையில் உள்ள கபாலீசுவரர் திருக்கோயிலில் நிகழ்ந்த கே.எம்.பாலசுப்பிரமணியத்தின் பெரியபுராணச் சொற்பொழிவில் கலந்து கொண்ட அந்நாளைய குடியரசுத் துணைத் தலைவர் டாக்டர் எஸ். இராதா கிருஷ்ணன், பாலசுப்பிரமணியத்தைப் பலபடப் பாராட்டியதுடன், திருவாசகத்தைப் போன்றே திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கு மாறு கேட்டுக் கொண்டார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய பாலசுப்பிரமணியம் தான் திருக்குறளை மொழியாக்கம் செய்து வருவதாகத் தெரிவித்து, டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் விரைவில் இந்தியக் குடியரசுத் தலைவராக விளங்கிட அனைவர் சார்பில் விரும்புவதாகவும் தெரிவித்தார்.  அவ்வாறே ஓராண்டுக்குப் பின் 13.5.1962-இல் இந்தியக் குடியரசுத் தலைவராக டாக்டர் எஸ்.இராதா கிருஷ்ணன் பொறுப்பு ஏற்றார் என்பது வரலாறு.  அவ்வாண்டிலேயே குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் முன்னுரையுடன் பாலசுப்பிர மணியத்தின் திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எம்.பாலசுப்பிரமணியத்தின் திருக்குறள் மொழி பெயர்ப்பு மிகவும் சுருக்கமானது; கவித்துவ மானது; முந்தைய மொழிபெயர்ப்புகளைவிடத் தனித்து விளங்குவது.  திருக்குறள், திருவாசகம் - இரு ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களையும் மறு பதிப்புச் செய்துள்ளார், ‘சென்னை சிவாலயம்’ ஜெ.மோகன், ‘கவியோகி’ சுத்தானந்த பாரதியார், பாலசுப்பிரமணியத்தின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு, திருவள்ளுவரின் கருத்துகளைச் சரியாக உள்வாங்கி ஒளிதிகழும் வண்ணமாக அமைந் துள்ளதாகப் பாராட்டுகிறார்.  கே.எம்.பாலசுப்பிர மணியத்தின் திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு முன்னுரை வழங்கிய இன்னொருவர் செக்கோஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் கமில் சுவலபில் ஆவார்.  அவர் கூறுவது: “ஈடிணையற்ற தமிழ் நூலான திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலநூலைப் படிப்பது போன்றே சிறப்பாக உள்ளதாக மேற்குலகம் கருதுகிறது” என்பதாகும்.  பாலசுப்பிரமணியம் தமது திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பில் பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கராயர் ஆகியோரின் உரைகளையும், பைபிள், குரான், ஷேக்ஸ்பியர், மில்டன், அலெக்சாண்டர் போப், டிரைடன், பிரான்சிஸ் பேகன், டாக்டர் ஜான்சன் ஆகியோரின் ஆக்கங்களிலிருந்து மேற்கோள்களாகப் பலவற்றைச் சுட்டியும் விளக்கிக் காட்டியுள்ளார்.  இவையே இவரின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் பாதியளவு இடம் பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பாகும்.  திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் தன் திருவாசகம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை ஜி.யு. போப் அவர்கட்குக் காணிக்கையாக்கியுள்ளார்.  ஜி.யு.போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் முதன் முதலாக மொழி பெயர்த்து 1900 ஏப்ரல் 24-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வெளியிட்டவர்.

கே.எம். பாலசுப்பிரமணியம் தென் ஆப்பிரிக்கா வுக்கு வருகை தந்தபோது தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட பெரும் தாக்கம் குறிப்பிடத்தக்கது என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அமைச்சர் பழனிசாமி அய்யண்ணதேவன் கூறியுள்ளார்.  (பழனிசாமி அய்யண்ணதேவனின் ‘தென் ஆப்பிரிக் காவில் சமயமும் தமிழும்’ உரை-செம்மொழி மாநாடு, கோவை, 2010) சைவம் பரப்பிய அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு கூறும் பெரிய புராணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் கே.எம்.பாலசுப்பிரமணியம் ஈடுபட்டு இருந்தபோது 03.10.1974 அன்று இயற்கை அடைந்தார்.  இதனால் இப்பணி முற்றுப்பெறவில்லை.  திருவாசக மணி கே.எம். பாலசுப்பிரமணியம் பெரிய அளவில் சமூக, அரசியல் ஆளுமையாகத் தமிழ்ச் சமூகத்தில் இடம் பெற இயலவில்லையாயினும், ஆன்மிக வாதியாக மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும், திருவள்ளுவரின் திருக்குறளையும் ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்த்த சீரிய தமிழ்த் தொண்டுக்காக என்றென்றும் தமிழுலகில் நினைவு கூரப்படுவார்.

Pin It