இதுவரையில் நம் நாட்டு வரலாற்றை எழுதிய வரலாற்றறிஞர்கள் பலரும், மன்னர்கள் ஆண்ட காலம், அவர்கள் நடத்திய போர், அடைந்த வெற்றி தோல்விகள், வீரமரணம், கட்டி எழுப்பிய கோவில்கள், அளித்த கொடைகள் போன்றவை களுக்கு முக்கியத்துவம் அளித்தே எழுதி வந்தார்கள்.
இம்மாதிரி எழுதப்பட்ட வரலாற்றில் மக்களுக் குரிய பங்கு என்ன? அக்காலகட்டத்தில் அவர்கள் எவ்வாறு வாழ்ந்தவர்கள்? என்னென்ன கொடுமை களுக்கெல்லாம் ஆளானார்கள்? இவற்றை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபட்டார்களா? மக்கள் எல்லோரும் சரி - சமமாக நடத்தப்பட்டார்களா? மக்கள் மீது என்னென்ன வரிகளெல்லாம் சுமத்தப் பட்டன? சாதி வேற்றுமை இருந்தனவா? விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்தினரின் நிலைமை எவ்வாறு இருந்தது? சமூகத்தில் சமயத்தின் பங்கு என்ன? மன்னர்கள் எந்த சமயத்திற்கு ஆதரவளித்தார்கள்? மன்னர்கள் ஆட்சியின் கீழ் பிற சமயத்தவர் எவ்வாறு நடத்தப்பட்டனர்?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலைக் காண முடியவில்லை.
வடக்கில், வரலாற்றறிஞர்களான திரு. டி.டி. கோசாம்பி, டாக்டர். ரொமீலா தாப்பர். திரு. சர்தேசாய் போன்றவர்கள் மேற்கண்ட கேள்வி களுக்கான பதில்களையும் உள்ளடக்கி பல ஆய்வு களை நடத்தி, இந்திய வரலாற்றில் பல சாதனை களைப் புரிந்துள்ளனர். தெற்கில், அவர்கள் அளவுக்குச் செயல்படவில்லை என்றாலும்கூட, திரு.கே.என். பணிக்கர், பேராசிரியர் நா.வா. அவரது ‘ஆராய்ச்சி’ மாணவர்கள் போன்றவர்கள் இதுவரையில் தென்னிந்திய வரலாற்றில் துலக்கப்படாத சில விஷயங்களைத் துலக்கியுள்ளனர்.
வரலாறு, தத்துவம், கலை - இலக்கியம், நாட்டுப்புறவியல் என, பல துறைகளில் பல புதிய தடங்களை ஏற்படுத்தினார்கள். இன்னும் அது, தொடர்கிறது.
இந்த அடிப்படையில் பேராசிரியர் நா.வா. அவர்களின் ‘ஆராய்ச்சி’ மாணவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவரான பேராசிரியர் ஆ.சிவசுப்பிர மணியன் அவர்கள், தமிழ்நாட்டின் பல திசைகளி லிருந்து கிடைத்த கல்வெட்டுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதி, சமீபத்தில் வெளிவந்த நூல், ‘பிராமண போஜனமும், சட்டிச் சோறும்.’
இது, வெறுமொரு கல்வெட்டுச் சம்பந்தப் பட்ட காரியங்களை உள்ளடக்கிய நூல் மட்டு மல்ல; மாறாக, விஞ்ஞான ரீதியான மார்க்சீயக் கண்ணோட்டத்தில் தமிழக வரலாற்றை ஆராய் வதுடன், இடைக்காலத் தமிழகத்திலுள்ள வைதீகத்தைப் பற்றியும், சாதி உருவாக்கத்தைப் பற்றியும் பேசும் நூலும் கூட!
வடக்கில், இந்துமதத்தை ஆதரித்து, வளர்த்த குப்தர்கள் காலம் இந்திய வரலாற்றின் பொற் காலமாகப் போற்றிப் புகழப்பட்டது போல், தெற்கில் சேர, சோழ, பாண்டியர், பல்லவ மன்னர் களும் அளவுக்கு அதிகமாகப் புகழப்பட்டார்கள். பெரும்பாலும் இவர்களுக்குத் துதிபாடிய அறிஞர்கள் பலரும் தமிழக வரலாற்றைத் திராவிட இன மனோ பாவத்துடனேயே அணுகினார்கள். ஆனால், அவர்கள் காலத்திலுள்ள ‘உண்மை வரலாறு’ அதுவல்ல என்று பேராசிரியர் ஆ.சிவசுப்பிர மணியன் அவர்களின் நூல், பல கல்வெட்டுச் சான்று களின் வாயிலாக நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
கோயில்கள் எவ்வாறு, மக்களின் நம்பிக்கையை மையமாகக் கொண்டு பல கொடைகளைப் பெற்று, அவர்களிடையே படிப்படியாக சமய உணர்வை வளர்த்தெடுத்தன என்றும், (இக்கால கட்டத்திலேயே சமூகத்தில், பெருந்தெய்வங்கள் வீற்றிருக்கும் கோவில்கள் மிகப் பெரிய சுரண்டல் கேந்திரங்களாக மாறிவிட்டன) பல கொடைகள் மூலமாகவும் மன்னர்களின் சலுகைகளின் காரண மாகவும் பிராமண குலம் சமூகத்தின் மேல் மட்டத் திற்கு எவ்வாறு உயர்த்தப்பட்டது என்றும், இவர்களுடைய ஆதிக்கத்திற்கு மனுசாஸ்திரம் எவ்வாறு உறுதுணையாக இருந்து வந்தது என்றும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் இந்நூலின் வாயிலாக நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.
‘கோவிலுக்குப் பொன் அணிகலன்கள், உலோகப் படிமங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். கோவில் சந்தி விளக்கு, நந்தா விளக்கு எரிக்க கால்நடைகளையும், நிலங்களையும் கொடை யாக வழங்கியுள்ளனர். இவ்வரிசையில் பிராமண போஜனமும் இணைகிறது’ (ப-8).
இந்நூல் எடுத்துக்காட்டும் கல்வெட்டுச் சான்றுகள் பலவும் நிலவுடைமை அரசின் துணையுடன் பிராமணர்கள் பெற்ற சலுகைகளையும், (பிராமணர்களுக்குக் கண்டிப்பாக எல்லோரும் உணவு வழங்க வேண்டும்) பொன்னும், பொருளும், அணிகலன்களும், ஆடுமாடுகளும், நிலபுலன்களும், பல ஊர்களும், எவ்வாறு ‘கொடை’ என்ற பெயரில் கோவில் சொத்துக்களாக மாற்றப் பட்டன என்பதையும், பல சோழ, பல்லவர் கால கல்வெட்டுச் சான்றுகள் மூலம் பேராசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.
சேலம் நகரிலுள்ள சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு சொல்கிறதாம், நாள்தோறும் பிராமணர்களுக்கு உணவு வழங்க இயலாதவர்கள் சில குறிப்பிட்ட நாட் களில் உணவு வழங்க வேண்டும் என்று திருச் செங்கோடு மலைமேல் நாகர் குன்றுக்கு மேற்கில் உள்ள பாறையில் 10-ஆம் நூற்றாண்டுக் கல் வெட்டுக் குறிப்பிடுகிறதாம். இளங்கோனடிகள் என்பவனின் மனைவி மூரிக்காமக்கனார் என்பவள் திருச்செங்கோட்டுப் பன்னிரெண்டு நாட்டுப் பெருமக்களிடம் 20 கழஞ்சுப் பொன்னை வழங்கி, அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு ஏகாதசி நாளில் 20 பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தாராம்!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஆழ்வார் கோவிலில் உள்ள 955-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் வேளாண் வீரநாராயணன் என்ற செம்பியன் வேதி வேளார் என்பவன் 15 பிராமணர்கள் நாள் தோறும் உண்ண, சத்திரம் அமைத்துள்ள செய்தி இடம்பெற்றுள்ளது. இச்சத்திரத்தில் உணவு வழங்க ஆகும் செலவிற்காக இரண்டு வேலி, ஏழு மா அளவுள்ள நிலம் வழங்கியுள்ளான். இச்சத்திரத்தில் இரு நாழி அரிசி, கறிகாய்கறி ஒன்று, புளிக்கறி ஒன்று, புழுக்குக்கறி ஒன்று, நெய் அரைப்படி ஆகியவற்றுடன் வெற்றிலை, பாக்கு இரண்டும் வழங்கப்பட்டுள்ளனவாம்!’ (ப-5, பத்தி-2).
இப்படி, இதற்கு உதாரணமாக இன்னும் பல கல்வெட்டுகளைச் சான்றாகக் காட்டும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் இதன் அடிப்படையில் முன்வைக்கும் சில கருத்துக்கள் நம்மை மிக ஆழமான முறையில் சிந்திக்க வைக்கின்றன.
அதாவது, ‘தமிழ்நாட்டிலும் அயல்நாடுகளிலும் செயல்பட்ட தமிழ் வணிகக் குழுக்களும், இவற்றின் உறுப்பினர்களான வணிகர்களும், நெசவாளர், உலோகத் தொழில் புரிவோர் ஆகிய கைவினைஞர் களும், கால்நடை வளர்ப்போர், நிலவுடைமை யாளர் ஆகியோரும் தம்மிடம் இருந்த உபரிப் பணத்தை பிராமணர்களுக்கு உணவு வழங்கு
வதில் முடக்கியுள்ளனர். இம்முதலீடு இவ்வுலக வாழ்வுக்குப் பயன்தராத முதலீடாக அமைந்தது. ஆதாயம் எதுவும் தராத இயங்கா முதலீடாக (deaddeadcapital) இம்முதலீடுகள் அமைந்து சமூக வளர்ச்சிக்குத் துணை புரியாது போய்விட்டன. வருவாய் ஈட்டும் துறைகளில் உபரியை முதலீடு செய்திருந்தால் பொருளியல் வளர்ச்சி மிகுந்திருக்கும் அல்லது நலத்திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் மக்கள் பயன் பெற்றிருப்பர். பிராமணரை மையமாகக் கொண்ட பிராமண போஜனம் மறுமையைக் கருதியே வழங்கப்பட்டதால் இம்மைக்கு உதவாமல் போய்விட்டன. இதனால் சமூக வளர்ச்சி தடை பட்டுப் போனது’ என்கிறார், பேராசிரியர்.
திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீபத்மநாபன் கோவிலினுள்ளே பரிசோதனை நடத்திய போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி நகைகளும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்தியாவில் பல கோவில்களிலும், இந்து மடங் களிலும் வைத்திருக்கும் தங்கச் சிலைகளும், வைரச் சிலைகளும், அவற்றின் பெயர்களில் கோவில் களுக்குள்ளே பெட்டியில் பூட்டி வைத்திருக்கும் தங்க, வைர நகைகளும் கூட இன்னும் ஏன், உள்ளேயே வைக்கப்பட்டிருக்கின்றன? அவைகளை யெல்லாம் ஏன் பணமாக்கி நலத்திட்டங்களில் முதலீடு செய்து, மக்கள் பயன்பெறும்படி செய்யாமல் இருக்கிறோம்? இம்மாதிரிப்பட்ட கோவில் சொத்துக் களும், மடங்களின் சொத்துக்களும் ஏன், சமூக நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடாது? நாம் தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில் ஏமாற்றப் படுகிறோம் போலிருக்கிறது - என்ற சிந்தனைகளை யெல்லாம் பேராசிரியர் தட்டி எழுப்பிச் செல்கிறார்.
‘சட்டிச் சோறு’ என்பது ஊதியமாகவும், கொடைப் பொருளாகவும் வழங்கப்பட்ட சோறு ஆகும். இது, கோயில் பணியாளர்கள், தேசாந்திரிகள், பரதேசிகள், சிவனடியார் ஆகியோருக்கு வழங்கப் பட்டதாகும்.
இந்தச் சட்டிச் சோறுக்குப் பின்னாலும் இரு வேறு நோக்கங்கள் உள்ளதாக பேராசிரியர் கூறு கிறார். முதலாவது மறுமைக்குப் புண்ணியம் தேடும் முயற்சி. இந்நோக்கத்தின் அடிப்படை யிலேயே தேசாந்திரிகளுக்கும் சிவனடியார்களுக்கும் சட்டிச் சோறு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக உலோக வடிவிலான பண ஊதியத்தைவிட, சோறு வடிவிலான ஊதியம் மலிவானது என்பது. அத்துடன் உணவால் ஒருவனை நிறைவடையச் செய்யும் போது வேலை வாங்கு வோனுக்கும் வேலை செய்வோனுக்கும் இடையில் பிணைப்பு ஏற்பட்டு வேலை செய்வோனிடம் எதிர்க்குரல் தோன்றுவது மட்டுப்படும்... சோறு போட்டு வேலை வாங்குவதென்பது நிலவுடைமைச் சமூகத்தின் சுரண்டல் முறைகளில் ஒன்று. காலனி ஆட்சியிலும்கூட இது தொடர்ந்துள்ளது என் கிறார், பேராசிரியர்.
இவை மட்டுமல்ல! கோயில்களில் எரிக்கப் படும் நந்தா விளக்கிற்குப் பின்னால் உள்ள நோக்கங் களையும் பேராசிரியர் பல இடங்களில் எடுத்துக் காட்டுகிறார்.
“பல்லவர் காலத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய வடபுல வைதீக நெறி சோழர் காலத்தில் வளர்ச்சி பெற்று உச்சக் கட்டத்தை எட்டியது. பல்லவர் காலத்தில் வைதீக சமயத்திற்கு எதிராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருந்த அவைதீக சமயங்களான சமணம், பௌத்தம் ஆகியன வலு குன்றிப் போயின. பிராமணர்களுக் கென்று பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம்
என்ற பெயர்களில் தனிக் குடியிருப்புகளை சோழ மன்னர்கள் உருவாக்கினர். அக்கிராம நிர்வாக அமைப்புகள் கூட, சபை என்ற பெயரில் பிராமணர் களின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஊர்ப்பொது நிலங்களின் மீதும் கோவில் சொத்துக்களின் மீதும் பிராமணர்களும் வெள்ளாளர்களும் ஒன்றிணைந்து ஆதிக்கம் செலுத்தினர். சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதில் இணைந்து செயல்பட்டனர்” (பக்-20) என்கிறார்.
ராஜராஜனைப் பற்றி குறிப்பிடும் போது ஒரு சில உதாரணங்களை எடுத்துக்காட்டி, பேராசிரியர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
‘குடிமக்களின் சொத்துக்களைக் கட்டாயமாக விலைக்கு வாங்கும் நம் கால அரசியல்வாதிகள் சிலரின் முன்னோடி என்று ராஜராஜ சோழனைக் குறிப்பிடுவதில் தவறில்லை’ என மன்னராட்சிக் காலத்தில் மேல்சாதியினருக்கு ஒரு தண்டனையும் கீழ்ச்சாதியினருக்கு ஒரு தண்டனையும் வழங்கப் பட்டதையும் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது மட்டுமல்ல; மேல்சாதியினருக்கு அத்தண்டனை முறையில் இருந்து விலக்களிப்பதும் மன்னர் ஆட்சியில் நடைமுறையில் இருந்துள்ளது தொடர் பான கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ள தாகவும் இந்நூல் குறிப்பிடுகிறது.
பல கல்வெட்டுச் சான்றுகள் மூலம் கோவில் திருட்டுகளும் இந்நூலின் வாயிலாக எடுத்துக் காட்டப்படுகின்றன. குறிப்பாக, முதலாம் இராச ராசன் காலக் கல்வெட்டொன்றில் இக்குற்றச் செயல் இடம் பெற்றுள்ளதாம்!
பல்லவர் ஆட்சியில் நிலவுடைமைச் சமூகம் வளர்ச்சி பெறத் தொடங்கியது. அத்துடன் பிராமணிய சமயத்தின் செல்வாக்கும் இணைந்து கொண்டது. பிராமணர்கள் ஏராளமான விளை நிலங்களைக் கொடையாகப் பெறலாயினர். எனவே இதைப் பாதுகாக்கும் முயற்சியாக இரண்டு கல்வெட்டுகள் இந்நூலில் எடுத்துக் காட்டப்படுகின்றன.
ஒன்று, ‘பூதானத்திலும் மிகுந்த தானம் இருந்த தில்லை; இருக்கப் போவதுமில்லை. அதை அபகரிப் பதிலும் (மிகுந்த) பாவம் இருந்ததுமில்லை; இருக்கப் போவதுமில்லை (முதலாம் பரமேசுவர வர்மனின் செப்பேடு, கி.பி.687)
‘பிராமணன் சொத்து கொடிய விஷம்; வேறு எந்தச் சொத்தும் விஷமாகாது. விஷம் ஒருவனைக் கொல்லும். பிரம்ம சொத்தோ புத்திர பௌத்திரர் களையும் கொல்லும்’ என்ற காப்புரைத் தொடர்கள் உருவாயின. அத்துடன் மறுமை இன்பம், நரகம் என்பனவற்றை மையமாகக் கொண்டு ‘இது மாறுவான் ஏழாம் நரகத்தில் கீழா நரகம் புகுவான்’ (தெ.இ.க.22, பகுதி:1:85) என்ற காப்புரை வரிகளும் உருவாயின’ என்கிறார் பேராசிரியர்.
மேலும் நிலவுடைமைக் காலத்தில் அரசு, பிராமணர்களுக்கு உயர்ந்த இடத்தை அளிக்க ஆரம்பித்திருப்பதையும் இந்நூல் எடுத்துக்காட்டு கிறது. மட்டுமல்ல; அவர்கள் பாவம் செய்தால் கூட அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கூடாது. அவர்கள் மனிதர்களில் உயர்வான வர்கள், புனிதமானவர்கள் என்று வலியுறுத்தப் பட்டதால் பிராமணர்களைக் கொல்வது மிகப் பெரிய தோஷமாக (பாவமாகக்) கருதப்பட்டது. இப்பாவமானது ‘பிரம்மஹத்தி’ என்றழைக்கப் பட்டது. இச்சொல்லுக்கு ‘பிராமணப் பேய்’ என்று பொருள். பிரம்மஹத்தி பிடித்தவன் அதில் இருந்து எளிதில் விடுபட முடியாது என்றும் தெய்வ அருளினாலேயே விடுபட இயலும் என்றும், கூறும் தலபுராணக் கதைகள் உருவாகி உள்ளனவாம்!
இவ்வாறு ஏராளமான வரலாற்றுச் சேதி களையும், சமூகத்தில் பிராமணர் குலம் எவ்வாறு ஆதிக்கத்திற்கு வந்தது என்றும், மன்னராட்சி எவ்வாறு சாதி உருவாக்கத்திற்கும், மத வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தது என்றும் இந்நூல் பல அரிய வரலாற்றுத் தகவல்களையும் நமக்குத் தருகிறது.
நாட்டில், மன்னராட்சி ஒழிந்து ஜனநாயகம் மலர்ந்துவிட்டது. அரசியல் சுதந்திரம் கிடைத்தது. எழுத்து சுதந்திரம் கிடைத்தது. தொழில்கள் வளர்ந்தன. ஆனால், நிலவுடைமைக் காலத்தில் பண்பாட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த பிராமணீயம் மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது, பிராமணனிலிருந்து தலித் வரை எல்லாச் சாதிப் பிரிவினரின் பண்பாட்டிலும் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பண்பாட்டுத் தலைமையைப் பொறுத்தவரையில் ‘நான்தான் உங்கள் அண்ணன்’ என்று, அது, மார் தட்டிக் கொண்டு சிரிக்கிறது. அது, நிலவுடைமைச் சமூகம் உங்களுக்குத் தந்த தானம்! இவர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். கோவில்களுக்குள்ளிருந்து இவர்கள் துரத்தப்பட்டுப் பூசாரிகளாக பிற சாதியினரும் நியமிக்கப்பட வேண்டும். பல கோடி மக்கள் உழைப்பை உறிஞ்சி, இந்து மடங்களின் சொத்துக்களாக மாற்றிக் கொண்டு, மடங்களின் பீடங்களில் அமர்ந்து கொண்டு சுகபோகங்களை அனுபவித்து வரும் இந்து சந்நியாசிகள் கீழிறக்கப் பட வேண்டும். அதன் சொத்துக்கள் மக்கள் நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வின்றி, நாட்டில் எல்லா சாதியினரின் சிறு தெய்வ வழிபாடும், பண்பாடும் போற்றி வளர்க்கப்பட வேண்டும் என்றெல்லாம் பேரா. ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘பிராமண போஜனமும், சட்டிச் சோறும்’ நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
நாட்டில், சனாதனிகளின் அரசியல் ஆதிக்கமும், அடங்கி ஒடுங்கிக் கிடந்த சந்நியாசிகளின் அரசியல் பிரவேசமும், உலக முதலாளித்துவ சக்திகளுடன் கைகோத்துக் கொண்டு, ஜனநாயக சக்தியை ஒடுக்கும் வகுப்புவாத சக்திகள் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், ஜனநாயக உணர்வு கொண் டோரும், சமத்துவத்தை விரும்புவோரும், மார்க்சீய வாதிகளும் விரும்பிப் படிக்க வேண்டிய ஒரு அபூர்வமான நூல், இது.
பிராமண போஜனமும் சட்டிச் சோறும்
ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 098.
தொலைபேசி எண்: 044 - 26359906
` 75.00