சென்ற இதழின் தொடர்ச்சி...

தென்கலை வைணவத்தின் பிராமணர்கள் பல்வேறு சாதிப்பிரிவினரையும் வைணவர் என்ற பொது அடையாளத்திற்குள் ஏற்றுக் கொண்டதுடன் வழிபாட்டிற்காக அவர்களைக் கோயிலினுள் அனுமதித்தார்கள். ஆனால் திருக்குலத்தாரை மட்டும் கோயில் நுழைவுச் சட்டம் வரும் வரை அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் திவ்விய பிரபந்தம் பாடுவதற்கு மட்டும் பிராமணர் அல்லாதாரை அனுமதிக்கவில்லை. இது குறித்துப் பின்வரும் கருத்துக்களை ஆசிரியர் முன்வைக்கிறார்.

1930களில் நீதிக் கட்சியின் வளர்ச்சி குறிப்பிடத் தக்க அளவுக்கு உருப்பெற்று விட்டது.அத்துடன் பெரியாரின் செல்வாக்கும் வளர்ச்சி பெற்று விட்டது.

வேத நிபுணர்கள் குறைந்து போனார்கள்.

திவ்விய பிரபந்தத்தைப் பாடும் உரிமை தமக்கே இருக்க வேண்டும் என்று விரும்பும் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஏற்கெனவே நம்மாழ்வார் இயற்றிய ‘திருவாய்மொழி’யைப் பாடும் உரிமை அவர்களுக்கே உரித்தாய் இருந்தது.

திவ்விய பிரபந்தம் பாடுவது வைணவர்களின் கடமையாகவும் மரியாதைக்குரியதாகவும் விளங்கிவந்தது.

ஏற்கெனவே இராமானுஜ நாயகர் என்ற வன்னியர் சமூக வைணவ அடியார் கோயிலின் பிராமணப் பூசகர்களுடன் கோயிலிலும் புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திவ்விய பிரபந்தம் பாடுவது தொடர்பாகப் போராடியுள்ளார்.

vaishnavites 2பூசை செய்யும் உரிமை

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையானது கோயில்களில் வழிபாடு நடத்துவிக்கும் அர்ச்சகர்களுக்குப் பயிற்சி அளிக்கும் உரிமையைத் தன்னகத்தே கொண்டிருந்தது. இது குறித்த சட்டம் 1959இல் இயற்றப்பட்டிருந்தது. இச் சட்டத்தின் அடிப்படையில் 2006 ஆவது ஆண்டில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான ஆணை ஒன்றை வெளியிட்டது. இதன்படி உரிய தகுதியும் பயிற்சியும் உடைய எந்த இந்துவும் இந்துக் கோயில்களில் அர்ச்சகராக நியமிக்கப் படலாம். இந்த ஆணையானது சாதி அடிப்படையிலான தகுதியைப் புறந்தள்ளிவிட்டது.

இந்த ஆணையை எதிர்த்து சில பிராமண அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். தங்களின் பாரம்பரிய உரிமையில் இது குறுக்கிடுவதாக அவர்கள் தம் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இவ் வழக்கின் தீர்ப்புக்காக அவர்கள் காத்திருந்த வேளையில் பிராமணர் அல்லாதாருக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கில் அர்ச்சகராகப் பயிற்சி தரும் பள்ளிகளை அரசு திறந்தது. இவற்றில் வடமொழியில் உள்ள பஞ்சாரத்திரப் பனுவல்களின் அடிப்படையில் சமயச் சடங்குகள் நிகழ்த்துவதும்கூடக் கற்றுக் கொடுக்கப்பட்டது. என்ன காரணத்தாலோ இப் பள்ளிகள் திடீரென்று மூடப்பட்டன. தலித்துகளுக்கு உரிமையான கோயில் ஒன்றில் பரம்பரையாக வழிபாடு நடத்திவந்த குடும்பத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் இப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றிருந்தார். பயிற்சி முடித்து நான்காண்டுகள் ஆகியும் அர்ச்சகர் பணி அவருக்கு வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமையே இதற்குக் காரணம். இதற்குப் பின்னால் சாதி வேறுபாட்டை விரும்புவோர் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் அர்ச்சகர்கள் தேவைப்படும் நிலையில் முறையாகப் பயிற்சி பெற்றோரை நியமிக்காத நிலை உள்ளது. இது குறித்து இப் பயிற்சி பெற்ற தலித் மாணவர்களிடம் உரையாடல் வழி நூலாசிரியர் கேட்டறிந்த செய்திகள் வருமாறு:

ஆகம விதிமுறைகளில் முறையாகப் பயிற்சி பெற்ற தலித் மாணவர்களை நியமிக்காமைக்கான உண்மைக் காரணம் இவர்களுடன் பணத்தை அல்லது அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பாமையே.

மந்திரங்களையும், ஆசிர்வாதங்களையும் வடமொழியில் கூறும் மரபிற்கு மாறாக தமிழில் கூற வேண்டும். வடமொழியைப் பயன்படுத்துதல் என்பது பிராமணர்களின் அதிகாரத்தைப் பாதுகாப்பதாக உள்ளது.

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பொதுச் செயலாளரான திரு.ஜகந்நாதன் என்பவர் ‘தலித்துகள் தூய்மையற்றவர்கள் அல்லர். ஆனால் பிராமணர்களைப் போன்று தூய்மையானவர்கள் அல்லர்’ என்று குறிப்பிட்டதுடன் அவர்கள் புகை பிடிப்பவர்களாகவும் மது அருந்துபவர்களாகவும் அழுக்கான ஆடைகளை அணிபவர்களாகவும் இருப்பதாகக் குறை பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

தலித்துகளிடம் பாகுபாடு காட்டும் போக்கு பிராமணர்களிடம் மட்டுமின்றி பிராமணர் அல்லாதாரிடமும் நிலவுவதை இந்நூலாசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். பிராமணர் அல்லாத பூசாரிகள் பணிபுரியும் கிராமப்புறக் கோயில்களில் வழிபாடு செய்ய தலித்துகளை அனுமதிப்பதில்லை. இது குறித்து சட்டமன்ற உறுப்பினராக இருந்த (தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்) திரு ரவிக்குமார், பிராமணர் அல்லாதார் அர்ச்சகராவதை பிராமணர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் தலித்துகள் அர்ச்சகராவதை முன்னாள் பிற்படுத்தப்பட்ட சாதியினர் எதிர்ப்பதாகக் கூறியுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது. கேரளத்தில் சனாதன இந்து அமைப்புக்களின் ஆதரவுடன் பிராமணர் அல்லாதார் அர்ச்சகர்களானதாகக் குறிப்பிட்டு அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க.வின் இந்து எதிர்ப்பு, பிராமண எதிர்ப்புக் கொள்கைகளின் காரணமாக இது போல் இணக்கம் நிகழவில்லை என்கிறார். அத்துடன் பிராமணர் அல்லாதாருக்கு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் நிறுவுவதில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு காட்டுவதாகக் கூறும் மேற்கோள் ஒன்றையும் எடுத்துக்காட்டுகிறார். ஆனால் இவர்கள் பணிபுரிந்தது ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்ட கோயில்களிலா? உட்படாத கோயில்களிலா? என்பதை விளக்கவில்லை.

தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்பும் தென்கலை பிராமணர்கள், அர்ச்சகர் பணியைத் தமக்குரியதாக ஆக்கிக்கொள்வதை அதற்கான முக்கிய வழிமுறையாகக் கருதுகிறார்கள் என்பது ஆசிரியரின் முடிந்த கருத்தாக உள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

இந்துக் கோயில்களின் அர்ச்சகர்களாக யார் இருக்க முடியும் என்று 2006ஆவது ஆண்டில் தொடங்கிய சிக்கலுக்கான தீர்வை 2015ஆவது ஆண்டில் தன் தீர்ப்பின் வழி உச்ச நீதிமன்றம் வழங்கியது. இத் தீர்ப்பில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25, 26 ஆவது பிரிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் 25 ஆவது பிரிவு சமயங்களின் அடிப்படை இயல்புகளைப் பாதுகாப்பதை மையமாகக் கொண்டது. 26ஆவது பிரிவு சமயங்கள் தங்களது உள்விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையைப் பாதுகாப்பதை மையமாகக் கொண்டது. இருப்பினும் 26ஆவது பிரிவு சில விதிவிலக்குகளைத் தன்னுள் கொண்டிருந்தது. இதன்படி பொது ஒழுங்கு, ஒழுக்கமுறை, உடல்நலம், சமய நோக்கில் முக்கியத்துவமற்ற நடைமுறைகள் ஒழிப்பு என்பனவற்றை நோக்கமாகக் கொண்ட சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. தேவதாசி முறை ஒழிப்பு, அனைத்து சாதிப் பிரிவினரும் கோயிலில் நுழைந்து வழிபடும் உரிமை என்பனவற்றை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் நிகழ இவ் விதிவிலக்குகளே துணை நின்றுள்ளன.

தமிழ்நாட்டின் சைவ சமயக் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் தனித்தனியான ஆகம நெறிமுறைகள் நடைமுறையில் இருந்தன. சைவ ஆகம முறைப்படி தீட்சை பெற்றவரே சைவக் கோயில்களில் அர்ச்சகராக முடியும். ஆனால் சில தொடக்க நிலைச் சடங்குகளை மேற்கொண்டோர் மட்டுமே வைணவக் கோயில்களில் அர்ச்சகராக முடியும். இவற்றைக் குறிப்பிட்டதுடன் இறுதியாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இவ்வாறு அமைந்தது.சாதியின் அடிப்படையில் ஒருவர் அர்ச்சகராக முடியாது என்று ஆகமங்களில் தெளிவாக வரையறுக்கப் படாத நிலையில் தமிழ்நாடு அரசின் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்துடன் முரண்படவில்லை.

நூலின் முக்கியத்துவம்

தமிழ் வைணவத்தில் இடம்பெற்றுள்ள வடகலை, தென்கலை என்ற இரு பிரிவுகள் பரவலாக அறிமுகமான ஒன்றுதான். ஒரு சமயத்திற்குள் இத்தகைய பிரிவுகள் உருவாகி தனித்தனி சமயங்கள் போன்று காட்சியளிப்பது சமயங்களின் வரலாற்றில் புதிதல்ல.

இந்தியாவில் தோன்றிய சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களிலும் இது போன்று பிரிவுகள் உருவாகியுள்ளன. கிறித்தவத்தில் நிலவும் பிரிவுகள் பரவலாக அறிமுகமானவைதான். இப் பிரிவுகள் உருவானமைக்கான மூலகாரணங்கள் சமயங்களுக்குள் மட்டுமின்றி அதற்குப் புறத்தேயும் காணப்படுகின்றன. கிறித்தவத்தில் சீர்திருத்தக் கிறித்தவப் பிரிவு (பிராட்டஸ்டண்ட் கிறித்தவம்) உருவானதற்கு மார்ட்டின் லூதரின் பங்களிப்பும் விவிலியத்தை அவர் செர்மானிய மொழியில் மொழிபெயர்த்தமையும், பாதிரியார்களின் பாவமன்னிப்புச் சீட்டு விற்பனையும் பரவலாகக் கூறப்படும் செய்திகளாகும்.

ஆனால், எங்கல்ஸ் எழுதிய செர்மனியில் குடியானவர் போர் (The peasant War in Germany) கிறித்தவ சமய எல்லைக்குள் இருந்த அகக் காரணங்களை மட்டுமின்றி செர்மனியின் குடியானவர்கள், நிலப்பிரபுக்கள், கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகிகள் என்போருக்கு இடையிலான உறவு வகித்த பங்கினையும் வெளிப்படுத்துகிறது. இவ் வகையில் பண்பாடு என்ற பரந்த களத்திற்குள் (Domains) அடங்கும் சமயம் என்ற நிறுவனத்தை வர்க்கப்பார்வையில் மிக நுட்பமாக எங்கல்ஸ் ஆராய்ந்துள்ளார். எங்கல்ஸ் எழுதிய இந்நூலானது ஒரு சமயத்திற்குள் நிகழ்ந்த மாற்றங்களை ஆராய்வோருக்கு வழிகாட்டும் தன்மையது.

இந்தியாவில் சமயங்கள், சமயப்பிரிவுகள் குறித்து ஆராயும்போது வர்க்கங்களுடன் நின்றுவிடாமல் சாதியையும் இணைத்தே பார்க்கவேண்டும். தென்கலை வைணவத்தில் பிராமணர்களைவிட பிராமணர் அல்லாதாரே மிகுதி. இது குறித்து திரு.கே.கே. வெங்கடாச்சாரி என்ற பிராமணர் நூலாசிரியரிடம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“தென் இந்தியாவில் மூன்று விழுக்காட்டினரே பிராமணர்களாக உள்ளனர். இவர்களுள் ஒரு விழுக்காட்டினரே வைணவப் பிராமணர்கள். நாங்கள் பிராமணர் அல்லாதாரை வைணவர்களாக ஏற்றுக்கொண்டிராவிட்டால் ஒரு சிறிய குழுவாக. இருந்திருப்போம். எனவே அவர்களை எங்களுடன், சேர்ந்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எப்படி இருந்தாலும் இது தென்கலை மரபு.” எண்ணிக்கை அதிகரிப்பு என்பது ஒரு சாதி அல்லது சமயத்திற்கு வலிமை ஊட்டுவதாக அமைகிறதை இக் கூற்று வெளிப்படுத்துகிறது.

எண்ணிக்கை அதிகரிப்பு என்பது ஒரு வகையில் அளவு மாறுபாடாகும். இங்கு பிராமணர் அல்லாதாரை வைணவத்தில் இணைத்துக் கொள்வதன் மூலம் வைணவம் தன் வலிமையை உயர்த்திக் கொண்டுள்ளது. வைணவ ஆச்சாரியரான இராமானுஜர் வைணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்காக இடைநிலை சாதியினரையும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி இருந்த மக்கள் பிரிவினரையும் வைணவர்களாக்கினார் என்பது பரவலாக அறியப்பட்ட வரலாற்று உண்மை. திருஅரங்கம் அரங்கநாதர் கோயிலில் ‘கொத்து' என்ற பெயரில் அவர் உருவாக்கிய ஊழியமுறையில் பிராமணர் அல்லாத பல்வேறு சாதிப்பிரிவினர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் தமிழகத்தின் முக்கிய சைவ வைணவக் கோயில்கள் மன்னர்கள், வணிகர்கள், பெருநிலக்கிழார்கள் ஆகியோரிடமிருந்து நிலமானியங்களையும், கால்நடைகளையும், பொன்னையும் பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட அணிகலன்களையும் கொடையாகப் பெற்று வளம் மிக்க நிறுவனங்களாக விளங்கின. சில நேரங்களில் கடன் வழங்கி வட்டி வாங்கி வந்தன. இவ்வகையில் ஒரு பொருளாதார நிறுவனமாகவே இடைக் காலத் தமிழகத்தில் கோயில் காட்சி அளித்தது.

நிலமானியச் சமூகமாக இடைக்காலத் தமிழகத்தில் சோழராட்சி விளங்கியபோது பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணர்களுக்கு நிலக்கொடைகள் வழங்கப்பட்டன. சில நேரங்களில் ஒரு கிராமமே பிரம்மதேயமாக வழங்கப்பட்டது. தமிழ்ப் பிராமணர்கள் மட்டுமின்றி வடபுலத்தில் இருந்தும் கோதாவரி ஆற்றுப் பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட பிராமணர்களும் பிரம்மதேயக் கொடையினைப் பெற்றனர். இடைக்காலத் தமிழகத்தில் நிலவிய சமூக நிலை குறித்து எழுதும் போது, வரலாற்றறிஞர் கே.கே.பிள்ளை இந்நிலை குறித்துப் பின்வருமாறு விரிவாக எழுதியுள்ளார்:

“தமிழகத்து வேந்தர்கள் தமிழகத்து அந்தணரிடம் எக்குறைபாடுகளைக் கண்டார்கள் என்பது விளங்கவில்லை... வடவரின் இலக்கியமும் சமயக் கருத்துக்களும் பண்பாடுகளும் தமிழ்நாட்டில் பெருக்கெடுத்துப் பாயவே அவற்றை வளர்ப்பதற்கும், மேற்கொண்டு பல புதுமைகளைப் பெருக்கிக் கொள்வதற்கும், மன்னர்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பிராமணரை இறக்குமதி செய்து கோயில்களிலும் மடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் அவர்களை அருச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும் வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தினர். வேதநெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடிபுகுந்த பிராமணருக்குப் பொன்னையும் பொருளையும் குடியுரிமைகளையும் வாரி வழங்கினர். பிராமணர்களுக்குத் தனி நிலங்களும் முழுமுழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன.அக் கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதிமங்கலம், பிரம்மதேயம் எனப் பல பெயரில் வழங்கின. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிர்வாகத்துக்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல்படா.

அக் கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், கடமைகள், ஆயங்கள். முதலியவற்றினின்றும் முழு விலக்கு அளிக்கப்பட்டன.ஒவ்வொரு கிராமத்தின் உள்ளாட்சிக்கும் ஒரு மகாசபை அமைத்துக் கொண்டு பிராமணர்கள் தத்தம் கிராமத்தின் நிருவாகத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பிராமணர் தமிழகம் முழுவதும் பரவிக் குடியமர்ந்தார்கள். உளநிறைவுடன் நல்வாழ்க்கையில் நின்று வேதம் ஓதி, இறைப்பணி புரிந்து, அறம் ஓம்பி, மக்களிடையே கல்வியறிவையும் ஆன்மீக விழிப்பையும் தோற்றுவிப்பதற்காகவே மன்னரும் மக்களும் அவர்கட்குத் துணை நின்றார்கள். ஆனால் விளைவோ வேறுவிதமாயிற்று. தமிழ் மன்னரும் தமிழ் மக்களும் வரையாது வழங்கிய வாழ்க்கை நலன்களைப் பெற்ற பிராமணர்கள் தனித்து வாழ்ந்து, மக்களிடையே குல வேறுபாடுகளைப் பெருக்கித் தமிழர் அனைவரையுமே சூத்திரர் என்ற இழிகுலத்தினராகக் கருதிக் கோயில்களிலும் மடங்களிலும் ஏனைய பொது அறச்சாலைகளிலும் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். ஒரு கோயிலைக் கட்டி குடமுழுக்கு செய்விக்கும் தமிழன் ஒருவன் தான் கட்டிய கோயிலிலேயே தொலைவில் ஒதுங்கி நிற்கவும் பின்னின்று கோயில் பிரசாதங்களைப் பெறவும் ஒப்புக்கொண்டுவிட்டான்... தேவார ஆசிரியர்கள் காலத்தில் தமிழர் கருவறைக்குட் செல்லும் உரிமை பெற்றிருந்தும் சோழர், பாண்டியர் காலத்தில் அவ்வுரிமையை அவன் இழந்துவிட்டான்.”

இவ்வளவு விரிவான மேற்கோளை இங்கு எடுத்துக் காட்டியதற்குக் காரணம் இடைக்காலத் தமிழகத்தில் வைதீக மரபைப் பேணிய பிராமணியம் பெற்றிருந்த ஏற்றத்தை அறியச் செய்யத்தான். பல்லவர் காலம் தொட்டு பிற்காலச் சோழர் காலம் பாண்டியர் காலம் வரை வைதீக சமயங்களான சைவம், வைணவம் என்பனவும் அவைதீக சமயங்களான பௌத்தம். சமணம் என்பனவும் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு நின்றன. இச் சூழலில்தான் வைணவமும் சைவமும் தம் சமய எல்லைக்கு வெளியில் நின்ற இனக்குழுச் சாதிகளை தம்முள் இணைக்கும் செயலை மேற்கொண்டு வந்தன. இவற்றுள் சைவம் வேளாளரியம் சார்ந்தும் வைணவம் வேதமரபு சார்ந்த வைதீகப் பிராமணியம் சார்ந்தும் இயங்கின.

மேலே குறிப்பிட்ட எண்ணிக்கை அதிகரிப்பை வைணவம் மேற்கொண்டபோது பல்வேறு இனக்குழுச் சாதிகள் அதைத் தழுவின. இப்புதிய வைணவர்களின் வரவு தென்கலை வைணவம் என்ற புதிய வைணவப் பிரிவைத் தோற்றுவித்தது. இப் பிரிவில் பல்வேறு பிராமணர் அல்லாத சாதியினர் இணைந்திருந்த போதிலும் கோயில் என்ற நிறுவனத்திற்குள் அவர்களால் அதிகாரம் செலுத்த இயலவில்லை. இதற்கான இரண்டு காரணங்களை இந் நூலின் வழி உய்த்துணர முடிகிறது. முதலாவது வழிபாட்டை நடத்தும் உரிமை (அர்ச்சகராதல்). இரண்டாவது, திவ்விய பிரபந்தம் என்ற வைணவ சமயப் புனித நூலின் பாடல்களைக் கோயிலிலும், சமய ஊர்வலங்களிலும் ஓதும் உரிமை.

இவ்விரண்டு உரிமைகளும் சமயப் பண்பாடு சார்ந்த உரிமைகள்.

என்றாலும் இவ்வுரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கோ இவை சமூகத் தகவு (social value) சார்ந்த உரிமைகள். ஏன் எனில் ஒரு சமூக இனக்குழுவின் சமூக மதிப்பென்பது வழிபாட்டுத் தலமான கோயிலுடன் தொடர்பு கொண்டதாக இருந்தது. (இன்றும்கூட இக்கருத்து நம் சமூக வாழ்வில் நிலைபெற்றுள்ளது). ஆங்கிலக் காலனிய ஆட்சியில் பெற்ற நவீனக் கல்வி, அதன் துணையால் பெற்ற புதிய வேலைவாய்ப்புகள், நிலவுடைமைச் சிந்தனைகளில் இருந்து விடுபடத் தொடங்கியமை,மக்களாட்சிக் கோட்பாடுகள், சமுக சீர்திருத்தச் சிந்தனைகள் ஆகியனவற்றின் தாக்கம் என்பனவற்றால் கோயில்களில் சமத்துவம் வேண்டும் போக்கு உருவானது. அவர்களின் எண்ணிக்கை உயர்வும் ஒரு சிலர் பொருளியல் நிலையில் பெற்றிருந்த ஏற்றமும் இதற்குத் துணைநின்றன. நாடு விடுதலை பெற்றமையும் பெரியாரின் சமூக சீர்திருத்தச் சிந்தனைப் பரப்புரைகளும், பொதுவுடைமை இயக்கத்தின் வளர்ச்சியும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தின. எனவே அரசியல் விடுதலை, பொருளாதார விடுதலை குறித்த சிந்தனைகளுடன் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளும் வளர்ச்சியுற்றன.

இவற்றின் விளைவாகவே வைணவக் கோயில்களில் சமத்துவம் வேண்டும் என்ற சிந்தனை பிராமணர் அல்லாத தென்கலை வைணவர்களிடம் உருவாகியது.மற்றொரு பக்கம் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத நிலமானிய காலத்தின் சிந்தனைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஆகமங்களின் துணையுடனும் நீதி மன்றங்களின் துணையுடனும் சமத்துவ மறுப்பை நிலைநிறுத்த தென்கலை வைணவத்தின் பிராமணர்கள் முயன்றனர். நகரமயமாதலுக்கு ஆட்பட்டு, நவீனக் கல்வி கற்று, அதன் துணையுடன் வழக்கறிஞர், மருத்துவர், ஆசிரியர், அரசு ஊழியர், பொறியாளர், தணிக்கையாளர், தொழில்முனைவோர் என இன்ன பிற பணிகளை மேற்கொண்டு வாழ்ந்தாலும் அவர்களில் பலரிடம் மன்னராட்சிக்காலத்தின் சிந்தனைப் போக்கே மேலோங்கி இருந்தது. இவ்விரு முரண்பட்ட சிந்தனைகளும் கோயிலை மையமாகக் கொண்டே உருவாகி நீதிமன்ற வழக்குகளுக்கு வழி வகுத்தன. இச் சிந்தனைப் போக்கு பிராமணர்களிடம் மட்டுமின்றி சாதியப் படிநிலையில் இவர்களை அடுத்திருந்த வேளாளர்களிடமும் நிலவியது. இதன் வளர்ச்சி நிலையாக இடைநிலைச் சாதிகள் சிலவும் இதன் தாக்கத்திற்கு ஆட்பட்டுள்ளன.

கோயிலில் வழிபாட்டை நடத்திவைக்கும் அர்ச்சகராதல், சமயப் புனித நூலை ஓதுதல் அல்லது பாடுதல் என்ற வேட்கையானது சமய எல்லைக்கு உட்பட்டதாகக் காட்சியளித்தாலும் அதற்குள் பண்பாட்டு சமத்துவ மறுப்பிற்கு எதிரான குரல் மறைந்துள்ளது. இவ்வகையில் இதுவும் பண்பாட்டு அடையாளப் போராட்டத்தின் ஒரு வடிவம்தான்.

பண்பாட்டு அடையாளப் போராட்டமானது இரு வழிமுறைகளைக் கொண்டது. இவ் வழிமுறைகளை வகுத்ததில் ஆதிக்க வகுப்பினருக்கும் பங்கு உண்டு. எவ்வாறெனில் பண்பாட்டு ஒடுக்குமுறையை இவர்கள் இரு வகையில் வெளிப்படுத்தி வந்தனர். முதலாவது, சில பண்பாட்டு அடையாளங்களைத் தமக்கு மட்டுமே உரியதாக உரிமை கொண்டாடி பிறருக்கு அவற்றை மறுத்தல். இரண்டாவது, சில இழிவான பண்பாட்டு அடையாளங்களை அவர்கள்மீது திணித்தல். இவை இரண்டிற்கும் எதிரான போராட்டங்களே பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் ஆகும். பிராமணர் அல்லாத தென்கலை வைணவர்கள் தமக்கு மறுக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களைப் பெற சட்டத்தின் துணையுடன் போராடிய வரலாற்றுச் செய்திகளை இந்நூல் வெளிப்படுத்தி உள்ளது.

கடவுள் மறுப்பு, பிராமணிய எதிர்ப்பு என்ற இரண்டு எதிர்ப்புக்களை மட்டுமே கருவிகளாகக் கொண்டு மத அடிப்படைவாதத்திற்கு எதிராகப் போராட முடியாது என்ற உண்மையை இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுகளைக் குறிப்பிடுவதன் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார். சிறுபான்மைச் சமய எதிர்ப்பு, பசுவதை எதிர்ப்பு என்ற எதிர்ப்புகளுடன் மட்டும் அவர்கள் நின்றுவிடவில்லை. சராசரி மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் அவர்கள் மேற்கொண்டுள்ள பணிகள் சிலவற்றையும் தொகுத்தளித்துள்ளார். இவற்றை மேற்கொள்ள நிதி ஆதாரம் அவர்களிடம் வலுவாக உள்ளது என்புது உண்மைதான். இருப்பினும் முற்போக்கு சக்திகளால் அவற்றில் சிலவற்றை மேற்கொள்ள முடியும். மாறாக எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டும் மையமாகக் கொண்டு இயங்குவது பயன்தருமா என்பதை ஆராய வேண்டிய கட்டத்தில் முற்போக்கு இயக்கங்கள் உள்ளன.

நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ள ஆறு பின் இணைப்புகளும் ஆய்வு நோக்கில் அமைந்துள்ளன. இந்நூலின் ஆய்வுக்களம் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களை மையமிட்டுள்ளது. தென்மாவட்டங்களிலும் பிராமணர் அல்லாத தென்கலையினர் குறித்த ஆய்வு மேற்கொள்ள ஒரு பரந்த களம் உள்ளது.

காதரின் யங்: (2021) கிளர்ந்தெழுந்த மாற்றங்கள் (தமிழ்நாட்டின் சமயம், சாதி, அரசியலில் பிராமணர் அல்லாத தென்கலை வைணவர்களின் பங்களிப்பு).

katherine Young (2021)Turbulent Transformations. Non Brahmin srivaisnavas on Religion, Caste And Politics in Tamil Nadu. Orient Black Swan, Hyderabad. 500 029

- ஆ.சிவசுப்பிரமணியன், தமிழர் சமூக வரலாற்று ஆய்வாளர், மார்க்சிய சிந்தனையாளர்

Pin It