sivasubramanian book 450இந்த நூலைப் பற்றி வரலாற்றாய்வாளர் வெண்டி டோனிகர் மொழியில் சொல்வதானால் மாற்று மக்களின் மற்றும் மாற்று மக்களைப் பற்றிய கதையாடல்களை உள்ளடாக்கிய ஒரு கதையை இது சொல்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. இடைக்காலத் தமிழகத்தைப் பற்றிய மிகப் பெரும்பான்மையான மேலாய்வுகள் முன்வைக்கின்ற ஒரு கதையாடலுக்கு மாற்றுக்கதை யாடல் ஒன்றை இந்நூல் வெளிச்சப்படுத்துகிறது. இடைக்காலம் குறித்தும் சாதிஉருவாக்கம் குறித்தும் இதற்கு முன்னர் பல ஆய்வாளர்கள் பேசியுள்ளனார். என்றாலும் இந்நூலில் கல்வெட்டுக்களில் இதுவரை வெளிச்சம் படாத பக்கங்களின் உண்மைத் தன்மைகளை எந்தவிதப் புனைவும் இன்றித்  தருகிறார் ஆ.சிவசுப்பிர மணியம்.

பல்லவர் காலத்தில் பரவத்தொடங்கிய வைதீகம் இடைக்காலத்தில் தமிழகத்தில் ஆழமாக வேர்விட்டு சோழர் காலத்திலும் விஜயநகரப் பேரரசு காலத்திலும் தழைத்து வளர்ந்தது. புதிய சாதிகளின் உருவாக்கமும் சாதிகளுக்கிடையான முரணும் இவ்விரு பேரரசுகளின் காலத்தில் முக்கிய சமூக நிகழ்வுகள் ஆயின. இந்தச் சமூக நிகழ்வுகள் நேரடியாகவோ, மறைமுகமாவோ, பதிவு பெற்றுள்ளன. கல்வெட்டுக்களுள் புதையுண்டு கிடக்கும் சாதிய மேலாண்மை, சாதிய இழிவு, சாதிய முரண்களை இதுவரைப் பேசாமல் விட்டுவிட்ட சூழலில் இந்நூல் இம்மையங்களின் நுண்மைகளைப் பேசியுள்ளது கவனிக்கத்தக்கதாகும். ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்நூல்.

காலங்காலமாகப் பிராமணர்களுக்கு கொடை வழங்கப்பட்டிருக்கிறது. பிராமணர்களுக்கு கொடை வழங்கவேண்டும் என்பதை மனுதர்மம் வலியுறுத்தி யுள்ளது. கொடையாக வழங்கப்பட்ட பொருட்களில் உணவுக்கொடை முக்கியமானது. சிவனடியார்கள், சமண, பௌத்த அடியார்கள், பயணம் செய்வோர் ஆகியோர்க்கு உணவுக்கொடை வழங்கப்பட்டது. பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கொடை பிராமண போஜனம் எனப்பட்டது. “இப்பிராமண போஜனம் மூன்று வகையில் நிகழ்ந்துள்ளது. இதை நிசிதம் (ஏற்பாடு) என்று கல்வெட்டுகள் குறிப்பிடு கின்றன. இரண்டாவது அமாவாசையன்று நிகழ்வது மூன்றாவது கோவில் திருநாட்களின்போது நிகழ்வது” (ப.2) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராமண போஜனத்தில் சோறுடன் ஆழாக்கு நெய், அய்ந்து வகைக்கறி, அய்ந்து உழக்குத்தயிர் இரண்டு பாக்கு, வெற்றிலை, கும்மாயம், பழம், காய்கறி, புளிக்கறி, பொறிக்கறி, புழுக்குக்கறி, பருப்பு, அக்காரலட்டு, வாழைப்பழம், போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இவை களைக் கூடுதலாகவோ, குறைவாகவோ வாங்கியுள்ளனர்.

பிராமணப் போஜனக் கொடையைப் பெரும் பாலும் ஆண்களே வழங்கியுள்ளனர். ஆனால் திருச் செங்கோடு மலைமேல் நாகர் குன்றுக்கு மேற்கில் உள்ள பாறையில் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு பெண் வழங்கியது குறித்து குறிப்பிடுகின்றது. “இக்கல்வெட்டு இளங்கோவடிகள் என்பவனின் மனைவி மூரிக்காமக்கனார் என்பவள் வழங்கிய கொடையைக் குறிப்பிடுகிறது. இப்பெண் திருச்செங்கோட்டுப் பன்னிரண்டு நாட்டுப் பெருமக்களிடம் இருபது கழஞ்சுப் பொன்னை வழங்கியுள்ளாள்.  இதில் இருந்து  கிடைக்கும் வட்டித்தொகையைக் கொண்டு ஏகாதசி நாளில் இருபது பிராமணர்களுக்கு உணவு வழங்கப் பட்டுள்ளது” (ப.7) என்று கூறியிருப்பதன் வழி பெண்களும் பிராமணப் போஜனத்திற்கு ஆதரவு நல்கினர் என்பது தெரியவருகின்றது.

மறுமை குறித்த நம்பிக்கையின் அடிப்படையில் செல்வந்தர்கள் கோவிலை மையமாகக் கொண்டு பல கொடைகளைச் செய்துள்ளனர். இதில் பிராமண போஜனமும் அடங்கும். பிராமணரை மையமாகக் கொண்ட பிராமண போஜனத்தில் தமிழ் வணிகக் குழுக்கள், வணிகர்கள், நெசவாளர்கள், உலோகத் தொழில் புரிவோர், கைவினைஞர்கள், கால்நடை வளர்ப்போர். நிலவுடைமையாளர்கள் ஆகியோர் தம்மிடம் இருந்த  உபரிப்பணத்தை பிராமணர்களுக்கு உணவு வழங்குவதில் முடக்கியுள்ளனர் என்ற கருத்து முக்கியமானதாகும்.நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொள்ளாமல் குறிப்பிட்ட சாதியின் வயிறு வளர்ச்சியில் பணத்தை முடக்கியது சமூக மேன்மையை உணராத செயலாகும்.

விருந்தோம்பலில் தனித்துவம் பெற்ற தமிழர்களின் உணவு முறை இல்லத்தில் சமைத்து உண்ணும் சோறானது அடிப்படையில் ஒர் உணவுப் பொருளாக இருந்தாலும் இடைக்காலத் தமிழகத்திலும் அதன் பின்னர் உருவான விஜயநகர மராத்தியர் ஆட்சிக்காலத்திலும் கொடைப் பொருளாகவும் வரிப் பொருளாகவும் ஊதியமாகவும் விளங்கியுள்ளது  என்று சட்டிச்சோறு கட்டுரை எடுத்தியம்புகிறது.

தமிழ்க்கல்வெட்டுகளில் “எச்சோறு, புள்ளிச்சோறு, திங்கட்சோறு, வரிச்சோறு, வெட்டிச்சோறு, நிசதிச் சோறு, சட்டிச்சோறு என்று பல்வேறு வகையான அடை மொழிகளுடன் சோறு குறிப்பிடப்பட்டள்ளது. இவ் அடைமொழிகள் ஒவ்வொன்றும் சோறு வழங்கப்படுவதன் நோக்கத்தைக் குறிப்பவையாகும்” (ப.9)

சட்டிச்சோறு வழங்கபட்டதன் பின்னணி இரண்டு மையங்களைக் கொண்டது என்கிறார் ஆ.சிவசுப்பிர மணியன். ஒன்று, மறுமைக்கு புண்ணியம் தேடும் முயற்சி தேசாந்திரிகளுக்கும் சிவனடியார்களுக்கும் இதன் அடிப்படையில்தான் சட்டிச்சோறு வழங்கப்பட்டது. மற்றொன்று,

“உலோக வடிவிலான பண ஊதியத்தைவிட சோறு வடிவிலான ஊதியம் மலிவானது என்பது. அத்துடன் உணவால் ஒருவனை நிறைவடையச் செய்யும்போது வேலை வாங்குவோனுக்கும் வேலை செய்வோனுக்கும் இடையில் பிணைப்பு ஏற்பட்டு வேலை செய் வோனிடம் எதிர்க்குரல் தோன்றுவது மட்டுப்படும். வயிறு நிறையச் சோறு அளிக்கும் நிறுவனத்திற்கு அல்லது தனிமனிதனுக்கு நன்றிக்கடன் கொண்டவனாக அவன் இருப்பான். சட்டிச்சோறைத் தாண்டி அவன் சிந்திக்க மாட்டான். சோறு போட்டு வேலை வாங்குவதென்பது நிலவுடைமைச் சமூகத்தின் சுரண்டல் முறைகளில் ஒன்று காலனி ஆட்சியிலும் இது தொடர்ந் துள்ளது” (ப.12) என்ற கருத்து முக்கியமானதாகும். நிலவுடைமையாளர்கள் இந்த முறையை இன்றும் கையாள்வதைக் காணமுடிகிறது.

நந்தா விளக்கு எனும் கட்டுரை கோயிலில் இடை விடாது எரியும் நந்தா விளக்கின் பின்னணி குறித்து பேசுகிறது. நந்தா விளக்கு எரிவதற்குத் தேவைப்படும் நெய்  மூன்று வகையில் பெறப்பட்டுள்ளது. ஒன்று ஒரு குறிப்பிட்ட அளவு பொன் அல்லது பணத்தைக் கோயில் நிர்வாகிகளிடம் வழங்கிவிடுவது. அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு தேவையான அளவு நெய்யைக் கோயில் நிர்வாகத்தினர் வாங்கிக்கொள்வர். இரண்டாவதாக குறிப்பிட்ட அளவு நிலத்தை விலைக்கு வாங்கி அதைக் கோயிலுக்கு வழங்கி விடுவது. அந் நிலத்தில் கிட்டும் விளைச்சலை விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கோவில் நிர்வாகிகள் தேவையான நெய்யை வாங்கிக்கொள்வது. மூன்றாவது பசு,எருமை, ஆடு ஆகியவற்றை இடையர்களுக்கு வழங்கி அவர் களிடம் நெய்யைப் பெற்றுக்கொள்வது, இப்பணியை மேற்கொள்ளும் இடையர் விளக்குக் குடிமக்கள் திருநந்தா குடிகள் என்ற பெயர் பெற்றிருந்தனர். இவர்களுக்கு மன்றாடிகள் என்ற பட்டமும் உண்டு.

நந்தா விளக்கு கட்டுரை இரண்டு விஷயங்களை மையப்படுத்துகிறது. ஒன்று நந்தா விளக்கு எரிக்க எருமை, ஆடு ஆகியவற்றின் நெய் பயன்பட்டது குறித்தும். பிற்காலத்தில் விலக்கப்பட்டது குறித்தும் பேசுகிறது. காஞ்சிபுரம் அருளாளப் பெருமாள் கோவில் இராசராசனின் 20 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இதே கோயிலில் உள்ள (1252 ஆம் ஆண்டு) கல்வெட்டு, இராமகிரி வாலிஸ்வரன் கோயில் கல்வெட்டு, எருமைகள் கோயிலுக்கு நெய்க்காகத் தரப்பட்டது குறித்து குறிப்பிட்டுள்ளது. எருமைகள் வழங்கப் பட்டதைப்போல ஆடுகள் கோயிலுக்கு  வழங்கப்பட்டு உள்ளன. மதிப்புறு நந்தா விளக்கு எரிவதற்கான நெய், பசு, எருமை, ஆடு என்ற மூன்றின் பாலில் இருந்தே பெறப்பட்டது. இவற்றுள் ஆடு பரவலான இடம் பெற்றிருந்தது இது வைதீக சமயத்தின் ஆய்வுக் குள்ளானது.

“பசு மட்டுமே வைதீக சமயத்தின் பார்வையில் புனிதமானது. எருமையும் ஆடும் புனிதமற்றவை. கோயிலின் புனிதத்தைக் காக்க, எருமை, ஆட்டு நெய் ஆகியவை புனிதம் இல்லைÓ எனக் கூறி  தாவார எண்ணைய்க்கு மாறியுள்ளனர். ஆ.சிவசுப்பிரமணியன் கூறுவதைப் போல நந்தா விளக்கு தமிழ்நாட்டில் நிகழ்ந்த பண்பாட்டு ஆதிக்கம் ஒன்றினை வெளிப்படுத்தி நிற்கிறது. இவ்வாதிக்கம் இன்றும் தொடர்வதன் வெளிப்பாடாக ஆட்டு நெய் பலரும் கேள்விப்படாத ஒன்றாகிவிட்டது. Òஎருமைநெய் பசுவின் நெய்யைவிடத் தாழ்வானது. புனிதமற்றது என்ற எண்ணம் தமிழர் களிடம் ஆழமாக வேருன்றிவிட்டது” (ப.2) என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விளக்கின் பின்னால் கட்டுரை கோயில்களில் விளக்குகள் எரிக்க வலுக்கட்டாயமாக நிலங்களைக் கையகப் படுத்தியதைப் பேசியுள்ளது. அதில் பிராமணர்கள் நிலங்களைக் கையகப்படுத்துவதிலே முக்கியப் பங்கு வகித்தாக கட்டுரை கூறியுள்ளது. கீழ்சாதியைத் தண்டிக்கும் முறைமைகளிலே கட்டுரை பிராமணர் களைத் தவிர மற்றவர்களுக்கு நீதி வழங்கும் முறை குறித்து பேசியுள்ளது.

இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுக்கள் கட்டுரை முக்கியமானதாகும். பொருளியல் நிறுவனம் என்ற நிலையில் கோவில் இடைக்காலத்தில்  இடம்பெற்றிருந்தது. பலரும் வழங்கிய கொடையால் கோயில் பொருளியல் நிலையில் தன்னிறைவு பெற்றிருந்தது. பொருளியல் நிறைவு பெற்றிருந்த கோவிலில் திருட்டுக்கள் நடந்தன. இந்தத் திருட்டு களுக்குத் தண்டனைகள்  கிடைத்தன. ஆனால் தண்டனை முறைகள் என்பது பிராமணர்-பிராமணர் அல்லாதவர் என்ற நிலையில்  அமைந்திருந்தது. பிராமணர்கள் திருடினால் அதிகபட்சமாக பூசை உரிமை பறிக்கப்பட்டது. பிராமணர் அல்லாதவர் திருடினால் கை வெட்டப்பட்டது. குற்றத்தின் தன்மையைக் கணக்கில்  எடுக்காமல் குற்றம் செய்தவனின் சாதி X பொருளியல் X சமூகத்தகுதி அடிப்படையாகக் கொண்டே நீதி வழங்கப்பட்டமை இக்கல்வெட்டால் வெளிப்படுகிறது.

எருமை, ஆட்டின் நெய் எவ்வாறு கோயிலிருந்து விலக்கி வைக்கப்பட்டதோ அதனைப்போல கருப்புக் கட்டி ஒதுக்கிவைக்கப்பட்டதை திருமடைப்பள்ளியும் கருப்புக்கட்டியும் கட்டுரை பேசியுள்ளது. இம் மண்ணுக்கான அடையாளம் என கருப்புக்கட்டியை கோயில் பயன்படுத்தாமல் விலக்கப்பட்டது பண் பாட்டுத் தாக்குதல் என்ற ஆ.சிவசுப்பிரமணியனின் கருத்து முக்கியமானதாகும்.

பதவி சாதியானமை கட்டுரை பிள்ளை, முதலி, கணக்கர், சாத்தாணியர் சாதிகளைக்  குறித்து ஆய்வு செய்கிறது. கல்வெட்டுகளில் காப்புரை என்ற கட்டுரை முக்கியத்துவம் பெற்றதாகும். கல்வெட்டுக்களைக் காப்பதற்காக பாடப்பட்டாலும் பிராமணனைக் கொலை செய்தல் கூடாது என்ற கருத்தை மையப்படுத்தி நிற்கிறது. இந்துத் தர்மத்தை விலக்கினபேர்கள் கங்கைக் கரையிலே காராம் பசுவையும் பிராமனையும் கொன்ற தோஷத்திலே போக்க கடவராகவும் என்ற கருத்தின் வழி கங்கையாறு. பசு என்பவற்றுடன் பிராமணக் கொலையையும் இணைத்தும் பேசியுள்ளது கவனிக்கத் தக்கதாகும். காப்புரையின் உண்மை  முகம் என்பது,

“சமுதாய வாழ்வில் விளை நிலங்கள் மதிப்பு மிக்கவையாக மாறும்பொழுது அவைகளைத் தானமாக வழங்கும் நிலை வனரலாயிற்று பெரும்பாலும் காப்புரைகள் நிலக்கொடைகளின் இறுதியிலேயே அமைந்துள்ளன. இந்நிலங்களைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தவர்கள், அரசியல் பலத்தால் மட்டு மின்றி ஆன்மீகத்தின் துணையாலும் காப்பாற்ற முனைந்தனர். இம்முயற்சியின் ஒரு பகுதியே காப்புரை” (ப.2) என்று கூறப்படுவதிலிருந்து நிலத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆன்மீக அரசியல் இங்கே கையாளப்பட்டுள்ளது.

பிராமண போஜனமும் சட்டிச் சோறும் எனும் இந்நூல் இடைக்காலத்தில் கிடைத்த கல்வெட்டுக்களில் அடித்தள மக்களின் முகங்களையும் பிராமணர்கள், நிலவுடைமையாளர்களின் கோரமுகங்களையும் முன்வைக்கின்றது. ஒவ்வொரு கட்டுரையும் பல்வேறு, எதிர்கால ஆய்வுக்கு வழிகோல்கின்றது. இந்நூல் இடைக்கால வைதீகத்தின் சாதி உருவாக்கப் பின்னணி குறித்துப் பேசும் அதே வேளையில் இதுவரை பேசப் படாத பல நுட்பமான பதிவுகளைத் தாங்கி நிற்கிறது. பொருளாதாரம் குறிப்பிட்ட சாதியினரின் சமூக நிலைப்பாட்டையும், அதிகாரத்தையும் நிர்ணயித்தது  என்பதை இந்நூலின் வழித் தெளிவாக உணர முடிகிறது. இந்த நூல் இன்றைய தமிழ்ச்சூழலுக்கு மிகப்பொருத்த மாக அமைந்துள்ளது. காவி அரசியல் பின்னணி இன்று எழுந்த ஒன்றல்ல. அது காலத்தின் ஆழத்தில் புதைந்து கிடப்பதாக இந்நூல் எடுத்துச்சொல்கிறது. அந்த வேறினை அறுக்க இந்தநூல் தரும் பார்வை காலத்தின் தேவையாகிறது.

பிராமண போஜனமும் சட்டிச் சோறும்

ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொடர்புக்கு : 044 - 26251968, 26359906

விலை: ` 75/-

Pin It