கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சமகாலத்தில் கூட நிகழ்த்துக்கலைகளுள் பெண் கலைஞர்கள் அரிதாக உள்ள நிலையில், சங்க காலத்தில் பல்வேறு பெண் நிகழ்த்துநர்கள் இருந்ததற்கான தெரிப்புகள் சங்க இலக்கியங்களில் சிதறிக்கிடக்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அத்தகைய கலைஞர் களைத் தனித்து அடையாளம் காண வேண்டியது அவசியமாகும். பொதுவாக, நிகழ்த்துக்கலை மரபுகள் சடங்கியல் சார்ந்தும் பொருளாதாரம் மற்றும் அதிகார வரம்புகளின் அரவணைப்புகள் சார்ந்துமே இயக்கம் கொள்கின்றன. சங்ககால நிகழ்த்துக்கலைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

சங்ககால அரசியல் நிலையை,

  • மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்
  • சேர நாட்டுப் பழங்குடிகள்: குடவர் (குட்டுவர்), அதியர், மலையர், மழவர், பூழியர், வில்லோர், கொங்கர், குறவர்.
  • பாண்டிய, சோழ நாட்டுப் பழங்குடிகள்: பரதவர், கோன்.
  • தனித்தவர்கள்: ஆவியர், ஓவியர், வேளிர், அருவர், இடையர், அந்தர்.
  • தமிழ் நிலங்களை அண்டி வாழ்ந்த பழங் குடிகள்: கொண்டையர், களவர், வடுகர்.
  • கிழார்கள், சிற்றரசர்கள், பழங்குடித் தலைவர்கள்.

என்று பகுத்துக்கொள்ளலாம். மேற்சுட்டிய அரசியல் தலைமைகளை அண்டித்தான் சங்ககால நிகழ்த்துநர்கள் தம் கலைகளை நிகழ்த்தியுள்ளனர். அகம், புறம் சார்ந்த நிகழ்த்துக்கலை மரபையும் புரிந்து கொள்ள வேண்டி யுள்ளது. சடங்கியல் சார்ந்தும், கொண்டாட்டம் சார்ந்தும் கூத்துகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

வேந்தர்கள், குறுநில மன்னர்கள், சீறூர் தலைவர்கள் கலைஞர்களை ஆதரித்துள்ளனர். வேந்தர்களைக் காட்டிலும் ‘ஓரி’ போன்ற குறுநில மன்னர்களும் அவர் களைக் காட்டிலும் சீறூர் தலைவர்களும் (கிழார்கள்) கலைஞர்களை ஆதரித்துள்ளனர்.

ஆற்றுப்படை நூல்களுள் மூன்று ஆற்றுப்படைகள் குறுநில மன்னர்களிடத்தேயே கலைஞர்கள் ஆற்றுப் படுத்தப்படுவதாகக் காட்டுகிறது. பொருநர் ஆற்றுப் படை மட்டுமே சோழன் கரிகால் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்துவதாக உள்ளது. கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகிய நிகழ்த்துநர்கள்,

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி

பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவுறீஇ

சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்

(தொல். புற. இயல். 30)

வறுமையை விரட்ட பொருள் தேடி அலை வோராகக் காட்டப்பட்டுள்ளனர்.

தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

பாணன் பாடினி இளையர் விருந்தினர்

கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப

(தொல். கற். இயல். 52)

இக் கலைஞர் குழாம் 12- வாயில்களாகச் செயல் பட்டுள்ளது. நீண்ட தொலைவு பயணம் செய்து, செய்தி உரைப்பவர்களாக பாணன், பாடினி, கூத்தர் விறலி ஆகியோர் சுட்டப்படுகின்றனர்.

பாண் சமூகத்தில் விறலி, பாடினி, பாடியர், பாடுமகள், ஆடல் மகள், கிணைமகள், பாட்டி, பாணிச்சி எனும் பெயர்களில் பெண்பாற் கலைஞர்கள்  அழைக்கப்பட்டனர். ‘செல்லா மோதில் பாண்மகள்’ (பதி.ப. 60) என்பது பொதுவாக விறலியைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

பாணர் வருக பாட்டியர் வருக (மதுரை. 749)

ஆடுநடை அண்ணனிற் பாடுமகள் காணியர்

(பதி.ப. 44)

வேறுபாடுகளைக் காட்டுகின்றன.

பாணர் பண்புகள்:

  • தமது வறுமை போக்க விறலியுடன் மன்னனைக் காணச் செல்வர் (புறம். 64)
  • பாடினி வேந்தனின் மறம் பாடுவாள்: மறம் பாடிய பாடினி வேந்தனிடம் இழை பெறுவாள் (புறம். 11)
  • யாழ், ஆகுளி, பதலையடு விறலியுடன் தன் வறுமை நீங்க மன்னனைக் காணச் செல் வார்கள் (புறம். 64)
  • மன்னனிடம் விறலியர் பாட, ஏனையோர் பல்லியங்கள் வாசிப்பார்கள் (புறம். 152, மலைபடு. 532 - 544)
  • விறலியும் பாணனும் சேர்ந்தே வேந்தனைக் காணச் சென்றனர். விறலியுடன் காணச் சென்றால் பரிசில் பெறலாம் (புறம்: 70, 109)

பாணர் குலத்தில்,

பாடும் திறன் பெற்றவர்கள் - பாடினியர்

மெய்ப்பாடு தோன்ற ஆடுமகளிர் - விறலியர்

விழாக்களில் ஆடியவர்கள் - ஆடுமகள்

அகவிக் கட்டுரைத்த மகளிர் - அகவன் மகளிர்

ஆடலும் பாடலும் பிரிக்க முடியாத அம்சங்களாக சங்க காலத்தில் இருந்துள்ளன. இப்பாடல்கள் புகழ்ச்சிப் பாடல்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

வெறியாட்டு

அகமரபு சார்ந்த ஒரு சடங்கு. காதல் கொண்ட பெண்ணொருத்தியின் தாய், தன் மகள் பசலைப் பூத்து மெலிந்து போவது கண்டு அவளது காதலை அறியாது, அவளது இந்நோய்க்குக் காரணம் முருகன் என்று எண்ணி வேலனை அழைத்து (வேலன் - இச்சடங்கை நடத்தக் கூடியவன்) பூசை செய்கிறாள். வாத்தியங்களின் இசைக்கு ஏற்ப வேலன் முருகனை வேண்டிப் பாடுவான் (நற். 51).வேலன் வெறிகொண்டு ஆடி அவளது இந்நிலைக்குக் காரணம் முருகனே என்று உரைக்கிறான்.

இச்சடங்கு முதுவாய்ப் பெண்டிராலும் நடத்தப் பட்டுள்ளது (அகம். 98, நற். 288). பெண்கள் ஆடியதாக அகம் 370-வது பாடல் சுட்டுகிறது. ஆடும் பெண்கள் சடங்கில் இணைக்கப் பட்டிருந்தமையைக் காட்டுகிறது என்று கா. சிவத்தம்பி கூறுகிறார் (2004:194). பாடல்கள் பாடி (அகம். 138) இந்நிகழ்வின்போது இறுதியில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆடி முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளனர் (அகம். 382).

குரவைக் கூத்து

‘குரவைக் கூத்தே கைகோத்தாடல்’, காமமும் வெற்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கை பிணைந்தாடுவது - என்று அடியார்க்கு நல்லார் உரை எழுதுகிறார்.

ஒருவரை ஒருவர் தழுவி ஆடுவது. தலைவியை அழைத்து ‘கொண்டு நிலை’ பாடும்படிக் கூறுகிறாள். கொண்டு நிலைக்கு நச்சினார்க்கினியர் உரை செய்யும் போது, ‘ஒருவர் கூற்றினை ஒருவர் கொண்டு கூறுதலிற் கொண்டு நிலையாயிற்று’ என்கிறார். பல்வேறு குரவைகள் சுட்டப்படுகின்றன.

  • போர்வீரரின் போர்க்களக் குரவை (புறம். 22)
  • பரதவர் கள்ளுண்டு ஆடும் குரவை (புறம். 24)
  • கள்ளுண்ட குறவரின் குரவை (புறம். 129)
  • நெய்தல் மகளிர் குரவை (அகம். 20, பதி. ப. 73)
  • நெய்தல் நிலப் பெண்கள் தங்கள் ஆட்டத்தின் போது, தங்கள் கணவன்மார்களின் நேர்மையற்ற தன்மையினைப் பாடியுள்ளனர் (அகம். 339).
  • ஆயர் குரவை (கலி: 102, 103, 104...)

எனப் பலவகையான குரவை சுட்டப்படுகிறது.

குரவை ஆட்டம் பல்வேறு சூழல்களில் ஆடப் பட்டுள்ளது. குரவை என்பதை முன்தேர்க் குரவை   என்று புறம் 371 ஆம் பாடலை எடுத்துக்காட்டி விளக்குகிறார் இளம்பூரணர். அதே பாடலை பின்தேர்க் குரவைக்கு நச்சினார்க்கினியர் உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார். அதாவது, தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாகத் தேர்த் தட்டிலே நின்று போர் வீரரோடு கை பிணைந்தாடும் குரவை என்கிறார் நச்சினார்க்கினியர். தேரின் முன்னே நின்றாடிய குரவை என்கிறார் இளம்பூரணர். ஆக, ஆட்டம் என்பது ஒன்றாகவே இருந்துள்ளது. அது ஆடப்படும் களத்தைக் கொண்டு ‘முன்தேர்’, ‘பின்தேர்’ என்பதாக வரையறுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆயர் குரவை

ஏறு தழுவியபின் ஆண்களும் பெண்களும் குரவை ஆடியுள்ளனர். குரவை ஆடும்போது முதலாமவர் வென்றவனையும் அவனது காதலியையும் பாடும்படிக் கூறுகிறார். பெண்கள், மரபு வழியான பாடல் பாடி யதாக, “குரவை தழீஇய மரபுளி பாடி” (கலி. 103) என்ற வரி உணர்த்துகின்றது. அதாவது, “யாஞ்சுற்றத்தார் கூறும் முறைமையைப் பாடி குரவைக் கூத்தாடி” என்ப தாகும். இது கூத்து நிலைப்பட்ட ஆடலாம். சிலப்பதி காரம் ஆய்ச்சியர் குரவை நிகழ்த்தப்பட்டமையைக் கூறுகிறது.

கலைமகளிர் பலவாறு வருணனைக்கு ஆட்பட்டு உள்ளனர். ஆற்றுப்படை நூல்களில் இவ்வகை வருணனைகளை ஏராளமாகக் காணலாம். காட்டாக, பதிற்றுப்பத்து - 54வது பாடல்,

வீங்கிறைத் தடைஇய அமைமருள் பணைத்தோள்

ஏந்தெழில் மழைக்கண் வனைந்து வரல் இளமுலை

பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல்

மின்னிழை விறலியர் நின்மறம் பாட (பதி. ப. 54)

புறப்பாடல்கள் பலவற்றில் விறலியர் பாணர் களுடன் சென்று பாடிப் பரிசில் பெற்ற செய்தியினைக் குறிப்பிடுகின்றன.

பாடினி

வெட்சித்திணைப் பாடல்களில் நிரை மீட்டதற்கு சடங்கில் கொற்றவைக்கு இரத்தப் பலி கொடுத்து வழிபடும்போது பாடினி பாடுவதுண்டு.

ஆடிப்பண் பாடி அளவின்றக் கொற்றவை

பாடினி பாடல் படுத்து வந்தாள்...

(நச்சி. உரை மேற்கோள்).

பாணன் தனி நிகழ்த்துநன் அல்லன். பாடினி அக் குழுவின் உறுப்பினள் (புறம். 11, 60, 319). அக்குழுவின் பெண் உறுப்பினளான இவள், பெரும்பாலும் விறலி என்று அழைக்கப்பட்டாள் என்கிறார் சிவத்தம்பி (2004: 201).

சிறக்கப் போர்புரிந்த மன்னரின் புகழ் பாடிய பாடினி,

மறம் பாடிய பாடினி யும்மே

ஏர் உடைய விழுக் கழஞ்சின்

சீருடைய இழை பெற்றிசினே

இழை பெற்ற பாடினிக்கு        (புறம். 11: 11-14)

இழையணி பெற்றுள்ளாள். குழையணி, நறுமணம் பொருந்திய மாலை அணிந்து பேரியாழ் கொண்டு பாலைப்பண்ணை மீட்டி, மன்னர்களின் போர்த் திறத்தைப் பாடி பல பரிசில்கள் பெற்றுள்ளாள் என்று பதிற்றுப்பத்து 5, 6: 1 - 14 கூறுகிறது.

புலால் நாற்றம் வீசும் பாசறைகளுக்குச் சென்று பாடிய முறைமையையும் பதிற்றுப்பத்து (71: 1-14) கூறுகிறது.

நூலின் வலவாணங்கு அரில் மாலை

வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய

(பொரு. 3: 161-162)

பாடினி பொன்னரி மாலை, முத்துமாலை பரிசில் பெற்றதாகப் பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது.

பாடினி மாலை அணிய           (புறம். 319: 14)

வாடா மாலை பாடினி அணிய           (புறம். 364: 1)

புரி மாலையர் பாடினிக்கு       (புறம். 361: 11)

பாடினியை அழைத்து நெடிய தேரையும் யானைகளையும் பாண்டிய மன்னன் வழங்கினான் என்று மதுரைக் காஞ்சி (749) குறிப்பிடுகிறது.

பாடினி இனிமையான குரல்வளம் மிக்கவள். அவள் பாடிக்கொண்டிருக்கும் போது மறுபுறம் மயில் அகவும் ஒலி எழும் என்பதை,

ஒருதிறம் பாடினிமுரலும் பாலையங் குரலின்

நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற

ஒருதிறம் ஆடுசீர் மஞ்ஞை அரிகுரல் தோன்ற

என்று பரிபாடல் (17: 17-19) சுட்டும்.

விறலி ஆடுதல், பாடுதல், இணை கொடுதல், தாள மிடுதல், வேடமிட்டு ஆடுதல், மெய்ப்பாடு தோன்ற நடித்தல், பாட்டியற்றிப் பாடுதல் ஆகியவற்றில் கை தேர்ந்தவர். கூத்தர், பொருநர் ஆகியோரின் பெண்பால் மக்களே விறலியர் எனப்பட்டனர் (பக்தவத்சல பாரதி; 2012: 72).

மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியிற்

கேட்பினல்லது காண்பறி யலையே    (புறம். 133: 1-2)

மென்மையான தோகை விரித்த மயில் போன்ற சாயலுடன் கூந்தலை உடையவளாக விறலி காணப் படுகிறாள்.

சிறுபாணாற்றுப்படை விறலியின் தோற்றத்தை விரிவாக எடுத்துரைக்கும் புறப்பொருள் வெண்பா மாலை (பாடாண் திணை: 31)

சில்வளைக்கை செவ்வாய் விறலி செருப்படையான்

பல்புகழ் பாடிப் படர்தியேல் - நல்லவையோர்

ஏத்த விழையணித் தின்னே வருதியாற்

பூத்த கொடிபோல் பொலிந்து

என்கிறது. வளையல்கள் அணிந்து கொடிபோல் விளங்கும் விறலி குரல்வளம் மிக்கவளாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளாள். பரிபாடலும் (7:15) அகநானூறும் (89: 9-10) இதையே உணர்த்துகின்றன.

பாடுக விறலியர் பல்பிடி பெறுக      (பதி. ப. 43: 22)

பாடுவல் விறலியின் கோதையும் புனைக (புறம். 172: 3)

என்ற வரிகள் விறலியரின் மெய்ப்பாடு தோன்ற ஆடுவதில் மட்டுமல்லாது பாடுவதிலும் வல்லவர்களாக விளங்கியுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

‘விறலியரோடு கிள்ளிவளவனிடம் சென்றால் பொருள் பெறலாம்’ என்று பாணனை ஆற்றுப்படுத்து கிறார் கோவூர் கிழார் (புறம். 70). அதாவது, ‘சீறியாழ்ப்பாண, கிள்ளி வளவனின் புகழைக் கருதி, விறலியுடன் செல்க; சென்றால் செல்வம் அடைவாய்’ என்கிறார்.

விரைஒலி கூந்தல் நும் விறலியர் பின்வர

ஆடினிர் பாடினிர் செலினே

நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே   (புறம்: 109: 16-18)

அதாவது, வடித்து முறுக்கப்பட்ட நரம்பினை யுடைய யாழை வாசித்து, மணம் பொருந்திய கூந்தலை யுடைய நம் விறலியர் பின்வர, ஆடியும் பாடியும் செல் வீராயின், அவன் நுமக்கு நாட்டையும் மலையையும் பரிசிலாகத் தருவான் என்கிறார் கபிலர்.

விறலியர், ‘வளக்கை விறலி’ (புறம்: 135, 140), ‘சில்வளை விறலி’ (புறம்: 60, 64, 103) ‘ஒண்ணுதல் விறலி’ (புறம்: 32), ‘வாணுதல் விறலி’ (புறம்: 89, 105), ‘பாடுவல் விறலி’ (புறம்: 280) என வெவ்வேறு பெயர் களால் சுட்டப்பட்டுள்ளனர்.

விறலியாற்றுப்படைத் துறைப் பாடல்கள் விறலியைத் தனித்தே சுட்டுகின்றன.

செல்லா மோதில் சில்வளை விறலி    (பதி. ப. 57)

சில்வளை விறலி செல்குவை ஆயின் (மேலது; 78)

இளமைப் பருவத்தினர் சில வளையல்களையும் பேதைப் பருவத்தினர் மிகுதியான வளையல்களையும் அணிந்துள்ளனர்.

‘சில்வளை விறலியர்’ தனித்தும் இயங்கியதை புறம். 133ம் பாடல் காட்டுகிறது. விறலியாற்றுப் படைத் துறைப்பாடல் மெல்லிய இயல்புடைய விறலியை “மெல்லியல் விறலி! தேர்வேள் ஆயைக் காணிய சென்மே” என்று ஆற்றுப்படுத்துகிறார் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

விழாக்களின் போது விறலிக்குப் பின்னால் தமது இடுப்பில் முழவினைக் கட்டிக் கொண்டு கோடியர் நிற்பதைப் போல, ஆடுகின்ற மயிலுக்கு முன்னே பலாப்பழத்தைத் தூக்கிக்கொண்டு நிற்கும் குரங்கு உள்ளது என்று அகநானூறு 352-வது பாடல் விறலியின் நிகழ்த்தல் முறை குறித்துப் பதிவு செய்திருக்கிறது.

ஆடுமகள்

ஆடுமகளின் ஆட்டம் விறலியின் ஆட்டத்தி லிருந்து வேறுபட்டதாகக் காணப்படுகிறது.

கழைபாடு இரங்க பல்லியம் கறங்க

ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று (நற். 95)

அதாவது, புல்லாங்குழல் மற்றும் பல இசைக் கருவிகள் முழங்க, கயிற்றின் மேல் ஆடிய நிகழ்த்துநரை ஆடுமகள் என்று குறிக்கிறது. மேலும் பெண் கலை ஞர்கள் ஆடுமகள் என்றும் ஆண் கலைஞர்கள் ஆடுமகன் என்றும் விளிக்கப்பட்டுள்ளனர்.

யானும் ஓர் ஆடுகள மகளே என்கைக்

கோடுஈர் இலங்கு வளை நெகிழ்ந்த

பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே

என்று தலைவி கூறுகிறாள்.

அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்

கயிறூர் பாணியின் தளரும் சாரல் (குறி. பா. 193-194)

என்கிற பாடல் வரிகள், ஆடுமகள் மூங்கில்களுக்கு இடையேயான கயிற்றின் மேல் நின்று ஆடுகின்றவள் என்பதை உணர்த்தும்.

வெறியாட்டில் ஆடிய மகள், ஆடுமகள் என்று அழைக்கப்பட்டுள்ளாள் என்பதை,

அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்

வெறியுறு வனப்பின் வெய்துந்து நடுங்கும்

என்ற வரிகள் காட்டுகின்றன.

அகவன் மகள்

தெய்வங்களை அழைத்துப் பாடுகின்ற கட்டுவிச்சி. சங்கு போல வெண்ணிறக் கூந்தலை உடையவளான இக்கட்டுவிச்சி வயதில் முதியவளாக இருக்கலாம்.

அகவன் மகளே! அகவன் மகளே!

மனவுக் கேட்பன்ன நல்நெடுல் கூந்தல்

அகவன் மகளே!          (குறும். 23)

என்று விளிக்கிறது. மேலும், குறுந்தொகை 298 பாடலும் “வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்” என்று குறிப்பிடுகிறது. இவர்கள் கையில் சிறுகோல் வைத்துப் பாடல் பாடும் மரபைக் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.

குன்ற நாடன் பிரிவிற் சென்று

நன்னுதல் பரந்த பசலைகண்டு அன்னை

செம்முது பெண்டிரோடு நெல்முன் நீறிஇக்

கட்டிற் கேட்கும் ஆயின்...      (நற். 288)

குறவர் பெண்கள் குறி சொல்லும் முறையை இக்கட்டுவிச்சியின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். மேற்கண்ட பாடல் மூலம் தலைவியின் பசலை நோய்க்கான காரணத்தை அறிய கட்டுவிச்சி துணை கோரப்பட்டாள் என்பது தெரிகிறது. இவள் முதுமை மிக்கவள் என்பதும் தெரிகிறது. இக்கலைஞர்கள் தனித்தே இயங்கியுள்ளனர்.

கிணைமகள்

பொருநர் குழுவில் கிணைமகள் இணைந் திருந்தாள் என்பதை புறம். 111வது பாடல் கூறுகிறது. சில உரை ஆசிரியர் இவளையும் விறலி என்றும் கூறுவர். ஆனால், பொருநர் வாழ்வில் ஒரு பெண் கலைஞர் இருக்க வாய்ப்பில்லை என்கிறார் கா. சிவத்தம்பி (2005: 223). உடுக்கு, பறை ஆகிய இசைக் கருவிகளுடன் தொடர்புடைய கலைஞனை, இரும்பறைக் கிணைமகன் என்கிறது புறநானூறு (388).

நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்

கிணைமகள் அட்ட பாவற்புளிங்கூழ்

பொழுது மறுத்துண்ணும் உண்டியேன்          (புறம். 399)

கிணைமகள் தூண்டிலால் மீன் பிடித்து விற்று, புளிக்கூழ் சமைத்து வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவுகிறாள்.

சங்கப் பாடல்களில் புலவர்கள் கலைஞர்களை ஆற்றுப்படுத்தும் பாடல்கள் மிகுதியாக உள்ளன. புறநானூற்றில் பாணனும் விறலியும் ஆற்றுப்படுத்தப் படுகின்றனர். பதிற்றுப்பத்தில் பாணனைக் காட்டிலும் விறலியே மிகுதியும் ஆற்றுப்படுத்தப்படுகின்றாள். பழந்தமிழ் நிகழ்த்துமரபில் பெண் நிகழ்த்துநர்களின் பங்களிப்பு அளப்பரியது. இதற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் அகச்சான்றுகளே சான்று.

பார்வை நூல்கள்:

இராமசுவாமி மு., தமிழ்ச் சமூகத்தில் கூத்து- நாடகம் ஒரு தொடர் விவாதத்தை நோக்கி, செம்பி படைப்பகம், மதுரை, 2008.

சிவத்தம்பி கா., பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம், குமரன் புத்தக இல்லம், சென்னை, 2004.

பக்தவத்சல பாரதி, பாணர் இனவரைவியல், உ.த.நி, சென்னை, 2012

,, தமிழகத்தில் நாடோடிகள்-சங்ககாலம் முதல் சமகாலம் வரை, வல்லினம், புதுவை, 2003.

ராஜ்கௌதமன், பதிற்றுப்பத்து - ஐங்குறுநூறு - சில அவதானிப்புகள், விடியல் பதிப்பகம், கோவை, 2011.

,, கலித்தொகை - பரிபாடல் ஒரு விளிம்பு நிலை நோக்கு, விடியல் பதிப்பகம், கோவை, 2011.

---------------------- சங்க இலக்கியங்கள்.

---------------------- தொல்காப்பியம்.