தொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு

 தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர் வடமொழியில் வைசேடிகம் எனப்படும் சிறப்பியத்தைத் தோற்றுவித்தவர். வைசேடிகச் சூத்திரம் என்ற வடமொழிநூல் இவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவரது சிறப்பியம், அணுவியம் குறித்துப்பேசும், “அகத்திய தருக்க சூத்திரம்” என்ற 20 இரு அடி பாக்களைக்கொண்ட, தமிழில் எழுதப்பட்ட ஒரு சிறுநூல் கிடைத்துள்ளது. இதனைத் தமிழ் மெய்யியலுக்குக் கிடைத்த ஒரு அரிய செல்வம் எனலாம். தமிழில் நிறைய மெய்யியல் நூல்கள் இருந்துள்ளன என்பதற்கு இது ஒரு சான்றாகத் திகழ்கிறது.

இந்திய வரலாற்றில் பகவத் கீதை - பிரேம்நாத் பசாசு:

 திலகர், காந்தி முதல் இராசேந்திர பிரசாத் வரையான இந்திய அரசியல் தலைவர்களும், விவேகானந்தர், அரவிந்தர் முதல் டாக்டர் இராதாகிருசுணன் வரையான இந்திய அறிஞர்களும் பகவத் கீதையைத்தான் தங்களது வாழ்க்கை வழிகாட்டி நூலாகக் கருதி செயல்பட்டு வந்துள்ளனர். இந்திய அளவில் புகழ்பெற்ற அந்நூல் குறித்து “இந்திய வரலாற்றில் பகவத் கீதை” என்ற ஆய்வு நூலை பிரேம்நாத் பசாசு என்பவர் எழுதியுள்ளார். அவர் அந்நூலின் முன்னுரையில் கி.பி. 4ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் கீதை இந்துக்களின் புனித நூலாக ஏற்றம் பெற்றது எனவும் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில்தான் இந்தியா இருண்டகாலத்தில் மூழ்கியது எனவும் குறிப்பிடுகிறார். கிறித்துவிற்குப்பின் வந்த முதல் 1000 ஆண்டுகளை இரண்டாகப் பிரித்த நேரு அவர்கள் முதல் 500 ஆண்டுகாலத்தில் பண்பாடு, தத்துவம், இலக்கியம், நாடகம், நுண்கலை, அறிவியல், கணிதம் ஆகிய பல துறைகளிலும் இந்தியா வளர்ச்சியடைந்தது எனவும் ஆனால் அதற்குப்பிந்தைய 500 ஆண்டுகளில் உள்ளார்ந்த பலவீனத்துக்கு இந்தியா ஆட்பட்டது எனவும் அப்பலவீனம் இந்தியாவின் தகுநிலையை மட்டுமல்ல அதன் படைப்புத்திறனையும் பாதித்தது எனவும், கி.பி. 1000 க்குப்பின் உச்சிவேளையின் உன்னதமான ஒளி கடந்த காலமாகியதோடு, இந்தியாவின் இதயம் உறைந்து போய் அதன் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வந்தது எனவும் அதன் காரணமாக அறிதலின் மீதிருந்த ஆர்வமும், சாதனை புரிய வேண்டும் என்ற மன எழுச்சியும் இருந்த இடத்தை நீக்குப்போக்கற்ற கட்டுப்பாடுகளும், வறட்டுவாதமும் எடுத்துக்கொண்டன எனவும் நேரு அவர்கள் கூறுவதாக பிரேம்நாத் பசாசு கூறுகிறார்(1).

 premnath book on gitaகீதை இந்துக்களின் புனித நூலாக ஏற்றம்பெற்ற பின்தான் இந்தியாவின் வீழ்ச்சியும் ஆரம்பமானது என்பதை நான் மட்டுமல்ல நேருவும் ஒப்புக் கொள்கிறார் என்கிறார் பசாசு. (கீதை மட்டுமல்ல சமற்கிருதமயமாக்களையும், பார்ப்பனியத்தையும் கொண்ட இந்துத்துவா ஏற்றம்பெற்ற காலகட்டம் அது. அன்றே இந்தியாவின் வீழ்ச்சியும் தொடங்கிவிட்டது எனலாம்). இந்துக்களின் புனித நூலான கீதை குறித்து, “உயர்தரமான சில கோட்பாடுகளை அது கூறுகிறது என்பது உண்மைதான். விழுமிய சிந்தனைகள் சிலவற்றை அது கொண்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. மன எண்ணங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான சில நல்லொழுக்கங்களையும் அது கற்பிக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மனித முன்னேற்றத்தைப் பாழ்படுத்துவதற்கும் சமூகத்தீமைகளை வளர்ப்பதற்குமே கீதையின் போதனைகள் பயன்பட்டு வருகிறது. உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம் கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துவிடவும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்து எழவிடாமல் அடக்கி வைத்துக்கொள்வதற்கும் உயர் வர்க்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுவதே கீதையின் தத்துவம்”. என்கிறார் பிரேம்நாத் பசாசு(2).

 மேலும் அவர், பழைய பூசாரிப் பிழைப்புக்கான அத்தனை சாத்திரங்களும் சடங்குகளும், நீர்தெளிக்கப்பட்டு கீதையில் புனிதப்படுத்தப்பட்டிருக்கின்றன எனவும் வாசகர்கள் குற்றம் சொல்ல முடியாதபடியும், குறைகாணாத அளவிலும் பார்ப்பனிய நச்சுக்கொள்கைகள் தேன் தடவித்தரப்பட்டுள்ளது எனவும் பார்ப்பனிய சாத்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் கீதையில் கவிதையாக்கப்பட்டு நிலைத்திருக்க வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார். இந்தியச்சமூகத்தின் சாபக்கேடான சாதிப்பிரிவினை குறித்து, நான்கு வருணங்களையும் கிருட்டிணபரமாத்மாதான் படைத்தார் எனவும் நான்கு சாதிக்கான பட்டயங்களும் பிறவியிலேயே தீர்மானிக்கப்படுகின்றன எனவும் இவ்வியற்கையான சாதிப்பிரிவு மாற்றப்பட முடியாதது எனவும் கீதை சொல்வதாக ஆசிரியர் கூறுகிறார்(3). இறுதியாக பார்ப்பனியம் நிலைநாட்டப்படுவதற்குத் தேவையான கந்தலாகிப்போன பழைய பார்ப்பன நம்பிக்கைகளையும், சடங்கு முறைகளையும் சாத்திரங்களையும் ஒன்றுவிடாமல் கீதையில் பாடிவைத்து புறக்கடை வழியாக பார்ப்பனியம் நுழைய வைக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் குற்றஞ்சாட்டுகிறார்(4)

வேதப்பாடல்கள் - பிரேம்நாத் பசாசு:

 இந்திய ஆரியரது காலத்துக்குச் சிறிது முன்போ அல்லது பின்போ உலகின் வேறு பகுதிகளில் வாழ்ந்த, வேறு சில பழங்குடிகளும், ஏறக்குறைய வேதப்பாடல்களில் காணப்படும் கருத்துக்களைக் கொண்ட பாடல்களைப் பாடி இருக்கிறார்கள். சுமேரியருடைய திருமுறைகள்(கி.மு. 2200), பாபிலோனிய புலம்பல் பாடல்கள், சீனர்களது வேள்விப்பாடல்கள், கிரேக்கர்களது இறைவேண்டல்பாடல்கள் எல்லாம் அறிவுத்தேடலின் வெளிப்பாடுகளே. இந்தோ ஆரியர்களது உணர்வுகள் அதுபோன்ற அறிவுத்தாகத்தால் தூண்டப்பட்டிருந்தாலும், அவர்களது சிந்தனைகள் பேதமை நிறைந்ததாகவும், பொருளற்றதாகவும், சிறுபிள்ளைத்தனமானதாகவும் இருக்கின்றன. அறிவிலும், பண்பாட்டிலும் வளர்ச்சிபெற்ற சமூகங்கள், நேரம் வந்தபொழுது அவர்களது பழங்கடவுள்களைத் தூக்கி எறிந்தார்கள். பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள் கொள்கைக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் இந்தியர்கள் இன்றுவரை மூடநம்பிக்கைக்கு காரணமான, சமூக வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கிற பழங்கடவுள்களையே போற்றிக்கொண்டு இருக்கிறார்கள். வேத நாகரிகம் ஏனைய பழைய நாகரிகங்களைவிட நனி சிறந்தது, தனித்தன்மை வாய்ந்தது, உலகுக்கு வழிகாட்டப் பிறர் கேட்டறியாத ஒன்றைத் தன்னுள்ளே கொண்டுள்ளது என்றெல்லாம் நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இவை பிரேம்நாத் பசாசு கூறுவனவாகும்(5). இந்த வேதப்பாடல்களையும், பழங்கடவுள்களையும் கொண்டுதான் பார்ப்பனர்கள் தங்களை அன்று முதல் இன்று வரை உயர்ந்தவர்களாக, வலிமையானவர்களாக, செல்வாக்குமிக்கவர்களாக, அறிவும் திறமையும் கொண்டவர்களாக ஆக்கிக்கொண்டார்கள்.

கடவுளுக்கும் மேலானவன் பார்ப்பனன்- பிரேம்நாத் பசாசு:

 வேத காலத்தில் மதிப்புக்குரியவர்களாக இருந்து, பின்பு ஆதிக்க வர்க்கமாக உயர்ந்த பார்ப்பனர்கள், அதிகாரத்தைக்கைக்கொண்டு, அதையே தங்களைப்பாதுகாக்கும் அரணாகச் செய்துகொண்டார்கள். ஆதிக்கவர்க்கமாக அதிகாரவர்க்கமாக என்றென்றும் நிலைத்திருப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதே அவர்களது முழுநேரச் சிந்தனையாக இருந்தது. அதற்காக பிராமணங்கள் என்ற புதியவகையான நூல்களை எழுதினார்கள். யாகங்கள் செய்வதற்கான, செய்விப்பதற்கான, விரிவான விளக்கங்களின் தொகுப்புதான் பிராமணங்கள் ஆகும். இந்த பிராமணங்கள் பார்ப்பனப் புரோகிதர்களின் தகுநிலையை எட்டாத உயரத்துக்கு ஏற்றிவைத்ததோடு கடவுள்களுக்குச் சமமாகவும் இருக்கவைத்தது. அதன்பின் கடவுள்களுக்கும் மேலாக, படைப்பின் முதல்வனாகத் தன்னை உயர்த்திக்கொள்ளப் பிராமணங்களில் மேலும் சிலமந்திரங்களை இடைச்செருகல்கள் செய்துகொண்டனர். “பார்ப்பனன் பண்டைய முனிகளின் மரபில் வந்தவன். எனவே அவன் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள், அதாவது அனைத்துக் கடவுள்களும் அவனுள் அடக்கம்” என சதபத பிராமணம் கூறுகிறது. பண்பாட்டு வரலாற்றில் பூசாரிக்கும்பலின் மூர்க்கத்தனம் எவ்வாறு நம்மைத் திகைக்கச் செய்யும் அளவுக்கு மீறி இருக்கிறது என்பதுமட்டுமல்ல, மத்திய காலத்துக்கு முந்தைய இந்திய வரலாறு முழுவதிலும் நமக்குக்காணக்கிடைக்கும் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் இந்தக் கூற்றுகள் முன்னோடியாக அமைந்தன எனவும் வின்டர்நிட்சு கூறுவதைக் குறிப்பிடுகிறார் பிரேம்நாத் பசாசு(6).

 பார்ப்பனர்கள் சொத்து மீது மன்னர்கள்கூட உரிமை பாராட்ட முடியாது. மன்னர்கள் தங்கள் நாட்டையே இழந்தாலும் பார்ப்பனர்களின் சொத்துக்களில் கைவைக்கக் கூடாது. பார்ப்பனர்கள் மீது மன்னர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என பார்ப்பனர்கள் இறுமாப்புடன் கூறினார்கள். பார்ப்பனனால் ஒருவன் கொலை செய்யப்பட்டால் அதைக் கொலைக் குற்றமாகக் கருதக்கூடாது. சூத்திரன் நினைத்தவுடன் கொல்லப்பட வேண்டியவன். இவை பிராமணங்களில் சொல்லப்பட்டுள்ளவைகளாகும். லேவி என்பார், “பிராமணங்களின் இறையியல் கருத்துகளைவிட, பண்பற்ற, பகுத்தறிவற்ற, ஆன்ம இழிநிலையை வெளிப்படுத்தும் வேறு ஒன்றைக்காண்பது அரிதினும் அரிது. பிராமணங்கள் கூறும் இறையியலில் ஒழுக்கப்பண்புக்கு இடமே இல்லை”(7) எனக்கூறுவதாகத் தெரிவிக்கிறார் பசாசு. பி.கே. கோசு “இந்துத்துவத்தில் ஏதாவது அருமைபெருமை இருக்குமானால் அவை இரிக் வேதத்தில் குறிப்பால் உணர்த்தப்பட்டன. அதேவேளையில் இந்துத்துவத்தில் உள்ள அத்தனை இழிவுகளும் அருவருக்கத் தக்கவைகளும் பிராமணங்களில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளன”(8) எனக்கூறுவதாகத் தெரிவிக்கிறார் பசாசு. மேலும் தேவையான பொழுது வேதப்பாடல்களில் மாற்றங்களும் இடைச் செருகல்களும் செய்யப்பட்டன என்கிறார் அவர்.(9) இந்த வேதப் பாடல்களிலும், பிராமணங்களிலும் பார்ப்பனன் குறித்துச் சொல்லப்பட்ட உயர்வான கருத்துக்களும், வர்ணாசிரமம் போன்ற பிற்போக்கான இந்து சமூகக் கருத்துக்களும் மிகநுட்பமான முறையில் கீதையில் புகுத்தப்பட்டன என்பதைப் பசாசு பலமுறை தெரிவிக்கிறார். ஆகவே கீதை பார்ப்பனியத்தை மிக நுட்பமாக உயர்த்திப்பிடிக்கிறது என்பதே அவரது முடிவாகும்.

பார்ப்பனர்கள் - தாழ்ந்த குலத்தவர்கள், கீழ்ச்சாதியினர் - ரைசு டேவிட்சு:

 பார்ப்பனர்கள் தாழ்ந்த குலத்தவர்களாக மதிக்கப்பட்டு கீழ்ச்சாதியினராக நடத்தப்பட்டனர் என ரைசு டேவிட்சு கூறுகிறார். “மன்னர்கள் முன்னிலையிலும், சான்றோர் அவையிலும், பார்ப்பனர்களைச் சுட்டுவதற்கு “தாழ்ந்த குலத்தான்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சாதியின் அடிப்படையிலும், பூசாரி என்ற அடிப்படையிலும், சான்றோர் அவையில் பார்ப்பனர்கள் கைகட்டி நின்றதோடு கீழ்ச்சாதியினராகவே நடத்தப்பட்டனர்” என ரைசு டேவிட்சு கூறுவதாகத் தெரிவிக்கிறார் பிரேம்நாத் பசாசு(10). “செவ்வியல் அறிவுடன் திகழ்ந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் பெருமளவில் இருந்தார்கள். வேடனும், இறைச்சி விற்பவனுமாகிய சால்புடைய தர்ம வியாதன், பார்ப்பனனாகிய கவுசிகனுக்கு ஒழுக்கநெறி பற்றியும் தத்துவ இயல் பற்றியும் கற்றுக்கொடுத்தான். பிறப்பினால் ஒருவன் பார்ப்பனன் ஆவது இல்லை. மாறாக சான்றாண்மையோடு ஒழுகுவதால்தான் ஒருவன் பார்ப்பனன் ஆகிறான் என்ற உண்மையையும் கவுசிகனுக்கு எடுத்துரைத்தான். அதுபோன்று வீதிகள்தோறும் சென்று, தலைச்சுமை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்திய துலாதரன் என்பவன் சாசாலி என்ற பார்ப்பன முனிவருக்கு ஆசிரியராக இருந்தான்”(11) என வின்டர்நிட்சு கூறுவதாகத் தெரிவிக்கிறார் பிரேம்நாத் பசாசு. ஆகவே இவைகளின்மூலம் காலங்காலமாக பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாகவோ, கற்றறிந்த அறிஞர்களாகவோ இருக்கவில்லை என்பதையும், பல்வேறு கீழ்நிலைப் பணி செய்தவர்களும்கூட, கற்றறிந்த அறிஞர்களாகவும், பார்ப்பன முனிவர்களுக்கே ஆசிரியர்களாகவும் இருந்துள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது.

மறைமங்களில் பகுத்தறிவும், பொருள்முதல்வாதமும்:

  சுவம்ச வேத மறைமம் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், மூடநம்பிக்கைகளுக்கான எதிர்ப்பையும் கொண்டுள்ளது. “மறுபிறப்பு என்ற ஒன்று இல்லை. மெய்யறிவு என்ற ஒன்று இல்லை. கருத்துக்கள், உரையாடல்கள், ஒழுக்கநெறி என்பதெல்லாம் வெறும் மாயை, அவதாரம் என்ற ஒன்று இல்லை, கடவுள் இல்லை, சொர்க்கம் நரகம் என்றெதுவும் இல்லை. பரம்பரையாக வந்துகொண்டிருக்கும் புனித நூல்கள் யாவும் மூடர்களால் இயற்றப்பட்ட ஏமாற்றுக்கற்பனைகளே. ஆக்கும்சக்தியான இயற்கை, அழிக்கும் சக்தியான காலம் இவை இரண்டும்தான் எல்லாவற்றையும் ஆட்சி செய்கின்றன. இந்த இருவரும் மனிதனின் நன்னெறி அல்லது தீயநெறி இவற்றைப்பார்த்து அவர்களுக்கு இன்பமோ, துன்பமோ கொடுப்பதில்லை. மக்கள் தவறான வழிகளில் இழுக்கப்பட்டு கடவுள், கோவில், பூசாரி என அலைகிறார்கள். உண்மை என்னவென்றால் விசுணுவுக்கும், வீதிநாய்க்கும் எந்த வேறுபாடும் இல்லை” என சுவம்ச வேத மறைமம் கூறுகிறது என்கிறார் பிரேம்நாத் பசாசு. தைத்தரிய மறைமம், “பருப்பொருளே பிரும்மம். ஏனெனில் பருப்பொருளிலிருந்தே யாவும் தோன்றுகின்றன. தோன்றியபின்பு பருப்பொருள்களால் அவை வாழ்கின்றன. வாழ்வு முடிந்தவுடன் அவை பருப்பொருளாக மாறுகின்றன” எனக் கூறுகிறது. பிருகதாரண்ய மறைமம் “தனிமங்களிலிருந்து தோன்றுவன எல்லாம் அழிந்தபின் தனிமங்களில் கலக்கின்றன” என்கிறது. “பழமையான பருப்பொருள்களிலிருந்து உலகம் தோன்றியது” என கடம் மறைமம் கூறுகிறது. ஆகவே பொருள்முதல்வாதம்தான் தோற்றத்திற்குக்காரணம் என்பது மறைம முனிவர்கள் பலரின் கருத்தாக இருந்துள்ளது எனக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(12).

 பார்ப்பனச் சிந்தனையாளர்கள் திட்டமிட்டு பகுத்தறிவையும், பொருள்முதல்வாதத்தையும் பேசிய மறைமங்களைப் புறக்கணித்தனர். கருத்துமுதல்வாதத்தைப் பேசிய மறைமங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை பிரபலப்படுத்தினார்கள். கருத்துமுதல்வாதத்தைப் பேசிய மறைமக் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு வேதாந்தம் என்ற பெயரில் வைதீக இறையியல் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டது. இந்தியச் சிந்தனைகளையும், பண்பாட்டையும் மிகச்சிறிய அளவில்தான் இந்த இறையியல் பிரதிபலிக்கிறது என்கிறார் பிரேம்நாத் பசாசு(13).

கணாதரும் கபிலரும்:

 கீதையின் தாக்கம் குறித்து ஒரு விரிவான ஆழமான ஆய்வைச்செய்த பிரேம்நாத் பசாசு அவர்கள் மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபின் மாபெரும் சிற்பிகளான தொல்கபிலர் குறித்தும், கணாதர் குறித்தும் அதேநூலில், “இந்திய மெய்யியல் வளர்ச்சியடைவதற்குக் கணாதரும், கபிலரும் முன்னோடிகளாயினர். இருள் சூழ்ந்திருந்த இந்திய வானில் ஒளிவீசும் விண்மீன்களாக இரண்டு மாமனிதர்கள் தோன்றினார்கள். அவர்கள் இருவரும், அவர்களின் வழிவந்த திண்ணிய மனம் படைத்த சிந்தனையாளர்களும் எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் கொடுக்கவில்லை. வேதக்கடவுளர்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்தார்கள். பார்ப்பன வழிமுறைகள், யாகங்கள், மந்திரங்கள், சடங்குகள், மறைமங்கள், செவிகிழியப் பேசப்பட்ட எல்லாம் வல்ல பிரும்மம் ஆகிய அனைத்தையும் தூக்கி எறிந்தார்கள்” என்கிறார் பிரேம்நாத் பதாசு(14). ஆக இந்திய மெய்யியல் வளர்ச்சியடைவதற்குத் தமிழர்களான கபிலரும், கணாதருமே முக்கியக் காரணம் என உறுதிபடத் தெரிவிக்கிறார் பிரேம்நாத் பதாசு. ஆனால் அவர்கள் வடமரபைச் சாராத தமிழர்கள் என அவர் அறியார்.

நகர அரசுகளும் அறிவியல் சிந்தனைகளும்:

 உலகம் முழுவதும் ஆரம்பகால நகர வணிக அரசுகள்தான் புதிய சிந்தனைகள், முக்கியமாக அறிவியல் அடிப்படையைக்கொண்ட பொருள்முதல்வாதச் சிந்தனைகள் வளர்ச்சி அடைவதற்கு ஒரு முக்கிய காரணிகளாக இருந்தன என்ற நமது கருத்தியலுக்கு வட இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதே உண்மை. கி.மு. 7, 8 ஆம் நூற்றாண்டுவாக்கில் வடஇந்திய அளவில் தோன்றிய சிறு குறு நகர அரசுகள் ‘நாடோடிகள்’ எனப்படும் புதிய சிந்தனையாளர்களுக்கு எப்படி ஆதரவு அளித்தன என்பதற்கு பசாசு அவர்கள் தனது நூலில் தரும் சில செய்திகள் சான்று பகர்கின்றன.

 “மக்கள் தேடும் புதிய நம்பிக்கைகள் பற்றி உரை நிகழ்த்த வரும் நாடோடி(சிந்தனையாளர்கள்)களுக்காக அரங்கங்களும் மேடைகளும் கட்டப்பட்டன. சாவாதி நகர அரசி மல்லிகாவின் பூந்தோட்டத்தில் பெரியதோர் அரங்கம் கட்டப்பட்டது. லிச்சாவி குலத்து மன்னன் தனது தலைநகரான வைசாலியில் உயர்ந்தவகை மரத்தில் முகடு வேய்ந்த அரங்கம் கட்டினான். இந்த அரங்கத்தில் நாடோடிகள்(பரிவிராசகர்கள்) வந்து தங்கிச்சென்றார்கள். ஊர்களுக்கு அருகிலுள்ள தோப்புகளில் நாடோடிகளுக்குத் தங்குமிடம் கட்டித் தரப்பட்டது. சாம்பா நகரில் காக்கிரா அரசி ஏரிக்கரையோரமாக உள்ள இனிமையான சாம்பாலா தோப்பில் அரங்கம் கட்டினாள். இராசகிருகத்தில் மயில்கூட்டம் ஆடித்திரியும் மோரா நிவப்பா என்ற இடத்திலுள்ள தோப்பில் அரங்கம் கட்டப்பட்டது” என்கிறார் பிரேம்நாத் பசாசு(15). ஆகவே சிறு நகர அரசுகள் அறிவியல் சிந்தனைகள் வளர்வதற்கு ஊக்கமளித்தன என்பதற்கு இவை சான்றுகளாகின்றன. மேற்கண்ட சான்றுகளின் மூலம், உலகம் முழுவதும், அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் கொண்ட சிந்தனைகள் வளர்வதற்கு நகர அரசுகள் காரணமாக இருந்துள்ளன என்பதற்கு மிகப்பண்டைய சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய நகர அரசுகளோடு, தமிழக நகர அரசுகளும், கிரேக்க நகர அரசுகளும், மறுமலர்ச்சிக்கால இத்தாலிய நகர அரசுகளும், இறுதியாக வட இந்தியாவின் சனபதங்கள் எனப்படும் சிறு சிறு நகர அரசுகளும் காரணமாக இருந்துள்ளன என்பது உறுதியாகிறது.

 கி.மு. 7, 8 ஆம் நூற்றாண்டுவாக்கில் வட இந்திய அளவில் இருந்த பரிவிராசகர்கள் எனப்படும் நாடோடிகளில் முக்கியமானவர்கள் யாரும் பார்ப்பனர்கள் இல்லை எனவும் இவர்களின் உரைகளுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது எனவும், மன்னர்கள், சான்றோர்கள், அரசு அலுவலர்கள், கைவினைஞர்கள், உழவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இவர்களை வரவேற்று மதிப்பளித்தனர் எனவும் ரைசு டேவிட்சு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் பசாசு(16). இக்காலத்தில் இந்தியாவில் மீமாம்சம், வேதாந்தம், சிறப்பியம், நியாயம், எண்ணியம், ஓகம் ஆகிய 6 சிந்தனைப்பள்ளிகள் நிலவின. இவை இரண்டிரண்டாக பிற்காலத்தில் இணைக்கப்பட்டன என்பதோடு வேதம் சார்ந்தவையாகவும் ஆக்கப்பட்டன. அவை மீமாம்சம்-வேதாந்தம், சிறப்பியம்-நியாயம், எண்ணியம்-ஓகம் ஆகிய மூன்று இணைகளாகும். இவைகள் குறித்து பிரேம்நாத் பசாசு அவர்கள் தனது ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை’ என்ற நூலில் கூறியவைகளைச் சுருக்கமாக அறிவது அவசியம்.

மீமாம்சம் - பிரேம்நாத் பசாசு:

 மீமாம்ச சிந்தனைப் பள்ளியை நிறுவியவர் சைமினி ஆவார். அவரது மீமாம்ச சூத்திரம் என்ற நூல், 2621 சூத்திரங்களுடன், 890 பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. யாகங்கள் செய்வதும், செய்விப்பதும், சடங்குகளை நிறைவேற்றுவதும், வேத மந்திரங்கள் ஓதுவதுமே முக்திக்கான ஒரே வழி என்பதுதான் மீமாம்சகர்களின் கோட்பாடு. பொய்மையை நாடித்தேடி அதையே மெய்ம்மை என்று பொய்யாகக் கற்பிப்பதே மீமாம்சம் கூறும் அறிவுக்கோட்பாட்டின் முக்கியமான திரிபுவாதம் எனவும், அவர்கள் சம்கிதைகளின் மாறாத்தன்மையையும், நிரந்தரத்தன்மையையும் நிலை நிறுத்துவதற்கு முயற்சி செய்தார்கள் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 வேதப்பாடல்களிலும், வேத மந்திரங்களிலும் மந்திர சக்தி இருப்பதாகவும், கடவுளர்கள் மொழிந்த வேதத்தை வழிமொழிவதற்கு சமற்கிருதமே சிறந்தமொழி எனவும், வேதங்களின் மெய்ப்பொருள் வேறு மொழிகளின் வழியாக வெளிப்பட்டிருக்க முடியாது எனவும், வேதங்கள் இறைத்தன்மை வாய்ந்தவை எனவும், வேதங்களின் முன்பு கடவுளர்கள் கூட அற்பமானவர்கள் எனவும், வேதங்களும், பிராமணங்களும் மனிதனுக்குத் தேவையான அனைத்து மெய்யறிவையும் கொண்டுள்ளன எனவும் சைமினி கூறுவதாகவும், ஆனால் மீமாம்ச சிந்தனையில் மெய்யறிவு என்பது சிறிதளவுகூட இல்லை எனவும், ஒரு இந்துவின் எல்லாவிதமான சமயச்சடங்குகளும், குடும்ப விழாக்களும் மீமாம்சம் சார்ந்தே உள்ளன எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(17).

வேதாந்தம் - பிரேம்நாத் பசாசு:

 வேதங்கள் கூறும் மந்திரங்களை ஆராய்வதற்கும், நடைமுறைப்படுத்துவதற்குமாக நிறுவப்பட்ட இந்த சிந்தனை மரபைச் சேர்ந்தவர்கள் பிரும்மத்தைச் சுற்றியே வலம் வருகின்றனர் எனவும் தொடக்க காலங்களில் இயற்றப்பட்ட மறைமங்களில் பிரும்மம் என்ற கருத்துரு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது எனவும் இதுபோன்ற ஒருசில மறைமக் கருத்துக்களே இந்த வேதாந்தப்பள்ளியின் அடித்தளமாக அமைகின்றன எனவும் இந்நிலையில் அகிலம் அனைத்திற்குமான தனித்தன்மையான ஆன்மீகச் சிந்தனைகளின் தொகுப்புதான் வேதாந்தம் என அவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்வதாகவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 பிரும்மம் பருப்பொருட்களால் ஆனதல்ல. அதைப் புலன்களால் உணர இயலாது. உள்ளத்தால் மட்டுமே உணர இயலும். உலகிலுள்ள அனைத்தும் பிரும்மத்திலிருந்தே தோன்றுகின்றன. உலகம் நிலையற்றது; பொய்யானது; அழிவுறும் தன்மையுடையது. ஆனால் பிரும்மம் மெய்யானது; அழிக்க முடியாதது; என்றும் நிலைத்திருப்பது. பரமாத்மாவின் ஒரு பகுதியே சீவாத்மா எனவும், சீவாத்மா தன்னைத் தானே உணர்ந்துகொள்ளும் நிலையில், அது பிரும்மத்துடன், அதாவது பரமாத்மாவுடன் இணைந்து இரண்டறக் கலந்து விடுகிறது. அதன்பின் ஆத்மாவுக்கு மறுபிறப்பில்லை. இவைகளைப் புரிந்து கொள்வதையே மறைமங்கள் ஆத்மா குறித்த அறிவு எனக் கூறுகின்றன என்கிறார் பிரேம்நாத் பசாசு.

 தன்னைத் தானே அறிந்து கொள்ளாத சீவாத்மா வழிதவறிச் சென்று, பரமாத்மாவிடமிருந்து பிரிந்து விடுகிறது. தவறான வழியிலிருந்து மீண்டுவரும் சீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்து விடுகிறது. இவ்வாறு மனிதன் வழிதவறிச்செல்வதற்கு மாயைதான் காரணம். மாயையில் கட்டுண்ட மனிதன் மெய்ம்மை பற்றிய அறியாமையில் மூழ்கி விடுகிறான். இந்த மாயையிலிருந்து விடுபட்டு பிரும்மத்தோடு இணைவதைத்தான் முக்தி அடைவது என வேதாந்தம் கூறுகிறது. முக்தி அடைவதற்கு மூன்று வழிகளை வேதாந்தம் கூறுகிறது. அவை ஞானமார்க்கம்(மெய்யறிவின் பாற்பட்ட வழி), பக்திமார்க்கம்(வழிபடும் கடவுளிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்வது), கரும மார்க்கம்(யாகச்சடங்குகளை முழுமையாக நிறைவேற்றிக் கரும வினையாற்றலின் மூலம் தன்னை உணர்தல்) ஆகியன.

 மூன்று வழிகளும் கடினமானவை என்பதால் வேதாந்திகள் முக்திக்கு ஞானமார்க்கமே(மெய்யறிவின் பாற்பட்ட வழி) சிறந்தது என பரிந்துரை செய்கிறார்கள் எனவும், ஆனால் வேதாந்திகள் கூறும் மெய்யறிவு என்பது சுதந்திரமான சிந்தனையின் வெளிப்பாட்டினால் பெறப்படும் மெய்யறிவு அல்ல எனவும், வேதாந்தத்தின் அடிப்படை வாதங்களோடு முரண்படும் எல்லாவிதமான சிந்தனைப்போக்குகளையும் அவர்கள் தடை செய்தார்கள் எனவும், முழுமையான புரிதலுக்குத் தர்க்கவாதம் முற்றான வழிமுறையாகாது என்பதும், மெய்யியல் கற்கும் காலத்தில் வேதாந்தக் கோட்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் சிந்தனைகளில் ஈடுபடக்கூடாது என்பதும் அவர்களின் சட்டம் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 வேதாந்தம் உள்ளடக்கத்தில் மீமாம்சத்திலிருந்து எந்தவகையிலும் வேறுபட்டது அல்ல. அதனால்தான் மீமாம்சமும் வேதாந்தமும் இணை சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றில் பூசாரிகளின் ஆட்சிக்கு வழியமைத்துக் கொடுத்ததில் வேறெந்தப் பழமைவாதச் சிந்தனைப் பள்ளிகளையும்விட வேதாந்தம் தீவிரமான பங்கு வகித்தது, இன்றும் வகித்து வருகிறது. இவை பிரேம்நாத் பசாசு கூறுபவையாகும்(18). மறைமத்தில் உள்ள ஆன்மீகம் சார்ந்த 555 சூத்திரங்களைக்கொண்டு பாதராயணரால் எழுதப்பட்ட ‘பிரம்ம சூத்திரம்’ என்ற நூல்தான் வேதாந்தத் தத்துவத்துக்கான அடிப்படையாகும். மறைமத்தில் எண்ணியம் சார்ந்த பொருள்முதல்வாதக் கருத்துக்களும் இருக்கின்றன. ஆகவே மறைமக் கருத்துக்களின் தொகுப்பு என பிரம்ம சூத்திரத்தைக் கருத இயலாது.

சிறப்பியம்(வைசேடிகம்) - பிரேம்நாத் பசாசு:

 கணாதரின் சிறப்பியம் இயற்கை நிகழ்வுக்கான காரணங்களை இயற்கையோடு இணைத்துப்பார்க்கும் துணிகரமான முயற்சியை மேற்கொண்டதால் அது சிறப்பானது எனப்பொருள்தரும் சிறப்பியம் என்கிற வைசேடிகம் எனப்பட்டது. அணுக்கொள்கையை உலகத் தோற்றத்திற்கான காரணமாக சிறப்பியம் விளக்கியது. கட்புலனாகாத, முதலும் முடிவுமற்ற, பகுக்கமுடியாத, எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது என சிறப்பியம் கருதுகிறது.

 பருப்பொருட்கள் அனைத்தும் அவற்றின் உள்ளார்ந்த தனிப்பண்புகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன எனவும், தனிமங்கள் உருவாகும்பொழுது தனிப் பண்புகள் கொண்ட பருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றன எனவும், இதுபோன்ற இணைப்பினால்தான் உலகம் உருவாகி உள்ளது எனவும், அணுக்கள் கண்களுக்குப் புலப்படாதவனாகவும், அழிவற்றதாகவும் இருப்பினும், அவை உருவாக்கும் பொருட்கள், புலன்களால் உணரக் கூடியவனாகவும் அழியுந்தன்மை கொண்டனவாகவும் இருக்கின்றன எனவும், பல்வேறு பொருட்களால் உருவாகிய உலகிற்கு முதலும் முடிவும் உண்டு எனவும் சில குறிப்பிட்ட அணுக்களின் இணைப்பால் விளைவதுதான் உணர்வு எனவும், ஆன்மாவும் பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதுதான் எனவும் சிறப்பியம் கருதுவதாக பசாசு கூறுகிறார்.

 முறைசெறிந்த அறிதலை, புலனுணர்வு, நினைவாற்றல், தேற்றம், உள்ளுணர்வு என நான்கு வகையாகச் சிறப்பியம் பிரித்தது. அக உலகின் உணர்வுகள், புற உலகின் தோற்றம் இவைகளுக்கிடையேயான ஒத்திசைவே மெய்மைக்கான அளவுகோளாகக் கொள்ளப்படவேண்டும் எனச் சிறப்பியம் கருதியது. இவை புரட்சிகரமான கருத்துக்கள் ஆகும். அணுக்கள் இணைவதற்கும், செயல்படுவதற்கும் ‘அதிருசுடி’ காரணியாக அமைகிறது என்ற திணிக்கப்பட்ட கருத்து தவிர கணாதருடைய கருத்துநிலை முற்றிலும் பொருள்முதல்வாத அடிப்படையிலானதே எனக்கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 இயற்கைப்போக்கிலேயே அணுக்கள் இணைகின்றன எனவும், தொடக்க காலத்திலிருந்த பொருட்கூறுகளின் உள்ளார்ந்த பண்புகளால்தான் பருப்பொருட்கள் உருவாயின எனவும் கணாதர் கோட்பாடுகளின் உரையாசிரியர் உபாசுகர் குறிப்பிடுகிறார். ஆதலால் ‘அதிருசுடி’ என்ற கருத்து தேவையில்லாமல் திணிக்கப்பட்டதே என பிரேம்நாத் பசாசு உறுதிபடத் தெரிவிக்கிறார். பிரும்மம் நிலைத்தது என்ற பார்ப்பனியக் கோட்பாட்டிற்கு எதிராக இயற்கை மாறும் தன்மையுடையது என சிறப்பியம் கூறியதால், இதனை அழிவிற்கு இட்டுச்செல்லும் வேதமறுப்புக் கோட்பாடு என பார்ப்பனர்கள் கடுமையாகச்சாடினர் என்கிறார் பிரேம்நாத் பசாசு.

 கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானியான டிமோகிரிடிசு அவர்களைக் கணாதரோடு ஒப்பிடுவோர் உண்டு எனவும் டிமோகிரிடிசு அவர்களின் அணுக்கொள்கையை விடக் கணாதரின் அணுக்கொள்கை தன்னிலே முழுமையானதாக இருக்கிறது எனச் சிலர் கருத்துரைக்கின்றனர் எனவும் டிமோகிரிடிசின் கோட்பாடுகளில் அரிட்டாட்டில் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் ஏதும் கணாதரின் அணுக்கொள்கையில் இல்லை எனவும் பசாசு கூறுகிறார். இயற்கை மதத்திலிருந்து பொருள்முதல்வாதக் கருத்தியல் நோக்கித் துணிவுடன் முன்னேறுவதற்கு ஏற்ற சமுதாய அமைப்பு கிரேக்கத்தில் இருந்தது எனவும் ஆனால் இந்தியாவில் அதுபோன்ற சமூக அமைப்பு அன்றுமுதல் இன்றுவரை இருக்கவில்லை எனவும் பசாசு குறிப்பிடுகிறார்.

 கிரேக்கத்தில் பூசாரிக் கூட்டம் அழித்து ஒழிக்கப்பட்டது போன்று இந்தியாவில் அவை அழித்தொழிக்கப் படவில்லை எனவும் இந்தியாவில் அறிவுலக வாழ்க்கை என்பது பார்ப்பனப் பூசாரிகளின் ஏகபோக உரிமையாக இருந்துவந்தது எனவும் பசாசு குறிப்பிடுகிறார். இவை சிறப்பியம் குறித்தும் கணாதர் குறித்தும் பிரேம்நாத் பசாசு கூறுபவைகளாகும்(19). தமிழகத்தில் கிரேக்க சமூகத்தில் இருந்தது போன்ற நகர, நகர்மைய வணிக அரசுகள் 1000 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தன. இந்த நகர, நகர்மைய வணிக அரசுகளே பொருள்முதல்வாதக் கருத்துக்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தன(20). பழந்தமிழகத்தில் கிரேக்கத்தைப் போன்றே பூசாரிக்கூட்டம் அழித்தொழிக்கப் பட்டிருந்தது. சங்ககாலத்திற்குப் பின்னரே அதாவது கி.மு. 50க்குப்பின்னரே அவர்களின் கருத்துக்கள் செல்வாக்கு பெறத்தொடங்கின. தமிழகத்தில் பக்திகால கட்டத்தில்தான் பூசாரிக்கூட்டம் வலிமைமிக்கதாக ஆகியது.

நியாயம் - பிரேம்நாத் பசாசு:

 நியாயம் என்பதற்கு தருக்க முறையில் காரணகாரியங்களைப் பகுத்தாய்தல் எனப்பொருளாகும். நியாய மரபினர் உலகப்பொதுமைச் சிந்தனைகளையும், முக்கூற்று(SYLLOGISM) முறையையும் வளர்த்தனர். சிறப்பியர்களின் அணுக்கொள்கை, இயற்பியல், அனுபவஅறிவுக்கொள்கை முதலியவனவற்றை நியாய சூத்திர ஆசிரியர் கவுதமர் ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே சிறப்பியமும், நியாய சூத்திரமும் ஓரிணையாகக் கருதப்பட்டன. கவுதமரின் நியாய சூத்திரத்தில் 16 மெய்விளக்கங்கள் உள்ளன. முதல் 9 விளக்கங்கள் உறுதியான தருக்கமுறை தொடர்பானதாகவும், அடுத்த 7 விளக்கங்கள் பிழை நீக்குவதற்கும், அதனைத் தவிர்ப்பதற்குமான காரணிகளாகவும் இருக்கின்றன. சரியான முடிவை எட்டுவதற்கு விவாதங்களும், மறுப்புரைகளும் முக்கியமானவைகள் என நியாய சூத்திரம் கருதுகிறது. வேதங்கள் என்றுமுள்ளவை என்ற மீமாம்சகர்களின் கோட்பாட்டையும், கடவுள் இருக்கிறார் என்ற கொள்கையையும் கவுதமர் ஏற்றுக் கொள்ளவில்லை. இவை பிரேம்நாத் பசாசு கூறுபவையாகும். பிற்காலத்தில் “வைசேடிகமும், நியாயமும் ஒன்றிணைந்தபோது, இறைமைக் கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் பருப்பொருட்களைப் படைத்தவன் என்ற நோக்கில் அவர்களது இறைக்கோட்பாடு இருக்கவில்லை” எனக்கார்பே கூறுவதாகப் பிரேம்நாத் பசாசு தெரிவிக்கிறார்(21)

எண்ணியம்(எண்ணியம்) - பிரேம்நாத் பசாசு:

 எண்ணியம் குறித்தும் கபிலர் குறித்தும் பிரேம்நாத் பசாசு கூறுவதை இங்கு சுருக்கமாகக் காண்போம். உலகினுடைய ஒழுங்கமைதியுடன் கூடிய படிமுறைச் செயல்பாடுகளை ஆழ்ந்து நோக்கி, அதற்கானத் தெளிவான விளக்கத்தைக் கூறியதால், இந்தியச்சிந்தனை மரபில் எண்ணியம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. எண்ணியத்தத்துவம் என்பது மெய்யறிவுச் சிந்தனை(METAPHYSICAL) மட்டுமல்ல. பிரபஞ்சத்தின் ஆற்றல்களை மாற்றுதலும், அழித்தலும், திரட்டலும் பற்றிய அறிவியல் அடிப்படையிலான விளக்கமும் ஆகும். மெய்யறிவுத்தத்துவ உலகில் எண்ணியச்சிந்தனை ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. போதாயனம் என்ற சாத்திரத்தை இயற்றியவர், கபிலரை அசுரர் எனக்குறிப்பிடுகிறார். கபிலர் எண்ணியச் சிந்தனைகளை அசுரர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகப் பாகவதம் குறிப்பிடுகிறது. மக்கள் கபிலரை மாபெரும் சிந்தனையாளர் என்றும் மனிதவாழ்வை ஈடேற்றம் செய்வதற்குப் பிறந்தவர் என்றும் போற்றிப் புகழ்ந்தார்கள். இலங்கையில் உள்ள அனுராதபுரக் குடவறைக்கோயிலில் கபிலரின் சிற்பம் ஒன்று உள்ளது.

 கபிலர் ஒரு தீவிரமான பட்டறிவுவாதி(EMPIRICIST). அவரது சிந்தனை, மனித இனத்தின் பட்டறிவு பற்றிய தெளிவான ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது. பரிணாமக்கோட்பாட்டின்(THEORY OF EVOLUTION) அடிப்படையிலேயே உலகத்தோற்றம் பற்றிய அவரது கருத்துக்கள் அமைந்துள்ளன. புலனுணர்வு(SENSATIONALISM) அடிப்படையில் கருத்துரு வாக்கம் ஏற்படுகிறது என்ற அவரது கோட்பாடு இந்தியத்தத்துவ இயலுக்கு ஒரு மாபெரும் கொடையாகும். புலனுணர்வு, கருத்தேற்றம், சான்றுறுதி போன்றவை உறுதியான எண்பிக்கும் முறைகள் என அவர் கூறினார். புலனுறுப்புகள் இயற்கையின் உருவாக்கமே எனவும், புலனுறுப்புகள் புறவுலகு பற்றிய உண்மையான தோற்றத்தை அப்படியே நமக்குப் புலப்படுத்துகின்றன எனவும் கபிலர் திட்டவட்டமாகக் கூறினார்(22).

பெர்னார்டு:

 “அறிவுக்குட்பட்ட, காரணகாரியத்துடனான, விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் காட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவுவளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் கூறுகிறது. தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது.” தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்கவேண்டும். உலகத் தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. “அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு. அது முதலும் முடிவுமற்ற, விரிந்து பரந்த நடைமுறை. நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும் படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிய மெய்மை ஏற்றுக்கொள்கிறது” என பெர்னார்டு என்பவர் எண்ணியம் குறித்துக் கூறுவதாகப் பசாசு கூறுகிறார்(23).

 இல்லாத ஒன்றிலிருந்து எதுவுமே உருவாகாது என்பதே எண்ணியத்தின் ஆதாரக்கொள்கையாகும். ஊழி ஊழிக்காலமாய் இருந்துவரும் உலகத்தை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப்பட்டிருக்கவில்லை. அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை என்பதனால் இல்லாததிலிருந்து ஒன்று உருவாகும் சாத்தியமில்லை என்பது மெய்யாகிறது. இருபதாம் நூற்றாண்டின் இயற்பியல் வளர்ச்சியில் பருப்பொருட்கள் வகிக்கப்போகும் பாத்திரத்தை கபிலர் அன்றே எதிர்நோக்கினார் எனவும், மனம்வேறு உடல்வேறு அல்ல என்ற ஒருமைக்கோட்பாட்டைக்கொண்டது எண்ணியம் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

கார்பே:

 எண்ணியம் கடவுள் பற்றிச்சிந்திக்கவே இல்லை. எண்ணியத் தத்துவத்திற்கு எல்லாம்வல்ல ஒருவனின் தேவையும் இருக்கவில்லை. இதுபற்றி கார்பே என்பவர், “எண்ணியக்கோட்பாடு கடவுள்மறுப்புக் கொள்கையைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படை, வேதப்புரட்டுகளுக்கு எதிரானது. நமக்குக் காணக் கிடைக்கும் எண்ணியச் சூத்திரங்களில், சுருதிகளின் கருத்திசைவை நாடுவது போன்று எழுதப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்தும் பின்னாட்களில் இடைச்செருகல் செய்யப்பட்டவைகளே. எண்ணியச் சூத்திரத்தோடு வந்து ஒட்டிக்கொண்ட வேதப்பகுதிகள் அனைத்தையும் வெட்டி எறிந்தாலும் எண்ணிய மூலத்துக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது. எண்ணியத்தத்துவம் தற்சார்புடையது. தனித்தன்மை வாய்ந்தது,. அதன் மூலப்படிவத்தின் உள்ளடக்கம் இந்நாள் வரையிலும் மாற்றமின்றி இருந்து கொண்டிருக்கிறது. அது வேதத்திற்கும் பார்ப்பன மரபிற்கும் புறம்பானது“ எனக்கூறுவதாகக் கூறுகிறார் பசாசு(24).

 பகுத்தறிவு – இயற்கைவாதம் என்று கூறத்தக்கதான ஒரு மெய்யறிவு மரபை எண்ணியச்சிந்தனை வளர்த்தெடுத்தது. இயல் உலகின் புறவயமான மெய்ம்மையை ஏற்றுக்கொண்டதே கபிலர் தத்துவத்தின் உண்மையான சிறப்புக்கூறாகும். உலகுக்குப் புறவயமான இருத்தல் ஏதும் இல்லை, கருத்து அல்லது எண்ணத்தில் மட்டுமே அது உள்ளது என்ற கோட்பாட்டைக் கபிலர் வன்மையாக மறுத்தார் எனவும், இருத்தலைக் கண்ணுற்ற பின்பே கருத்து உருவாகிறது என்ற நவீனகாலப் பொருள்முதல்வாதச் சிந்தனையோடு கபிலரின் கோட்பாடுகள் ஒத்துப்போகின்றன எனவும் கூறுகிறார் பசாசு.

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா:

 சிறப்பியம் பொருள்முதல்வாதத்தின் பக்கம் நாடியது. எண்ணியம் கடவுள்மறுப்பு – இயற்கைவாதத்தோடு இணைந்துகொள்ள விழைந்தது. மனிதன் இயற்கையிடமிருந்து கற்றுக்கொண்டு, அதைச்சரியாகப் புரிந்து கொண்டால் இயற்கையை வெற்றிகொள்ளமுடியும் என்று எண்ணியவாதிகள் வலியுறுத்தினார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச்செல்லும் இது போன்ற சிந்தனைத்தெளிவு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது குறித்து “எண்ணியத்தின் மூலப்படிவம் சமரசமற்ற கடவுள்மறுப்பும், பொருள்முதல்வாதமுமே ஆகும். கடவுளற்ற ஆதிமூலப்பொருள் தத்துவம் என்றே எண்ணியம் நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வந்தது. இக்காரணத்தால்தான் அறிவியல் முன்னேற்றத்திற்கான சிந்தனை மரபாக எண்ணியம் இருக்க முடிந்தது. பருப்பொருள் கோட்பாடு; வினைக்கும் விளைபயனுக்குமான காரணத்தொடர்பு; மெய்யறிவு; பரிணாம முறை முதலியன எண்ணியக்கோட்பாட்டின் முக்கியமான கூறுகள் ஆகும்” என தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா கூறுவதாகக் கூறுகிறார் பசாசு(25).

 இந்தியப்பண்பாட்டு வரலாற்றின் படைப்பாக்கம் நிறைந்த காலகட்டத்தில் இந்தியா கணாதர், கபிலர் என்ற இரண்டு அறிஞர் பெருமக்களை ஈன்றெடுத்தது. எண்ணியம் பகுத்தறிவு, இயற்கைவாத மெய்யறிவு முதலியன பற்றியே தீவிரமாக வலியுறுத்தியது. கணாதர் தீவிரப் பொருள்முதல்வாதி. ஆனால் வேதகாலத்திற்குப் பிந்தைய அறிவு வட்டாரத்தில் எண்ணியத் தத்துவமே மேலாண்மையுடன் விளங்கியது. கருத்துமுதல்வாத தத்துவத்திற்கு விடப்பட்ட முதல் அறைகூவல் எண்ணியமே எனவும், பார்ப்பன மதத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கியதோடு, பழங்கால இந்திய சமூகத்தின் அடித்தளத்தையும் அது ஆட்டி வைத்தது எனவும், பார்ப்பனர்கள் எண்ணியத் தத்துவத்தை வெறுத்து ஒதுக்கித்தள்ளினர் எனவும், எண்ணியத்தின் புரட்சிகரமான கொள்கைகளை உச்சிமுதல் உள்ளங்கால்வரை அவர்கள் எதிர்த்தார்கள் என்பதோடு எண்ணியத்தத்துவ விரிவுரையாளர்களில் வேதப்பார்ப்பனர்கள் ஒருவர்கூட இல்லை எனவும் கூறுகிறார் பசாசு. எண்ணியத்தத்துவம் கற்றோரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதனால், தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காரணமாகவே பார்ப்பனர்கள் எண்ணியத்திற்கு அங்கீகாரம் வழங்கினார்கள் எனவும் ஆனாலும் பார்ப்பனர்கள் கபிலரை மனதளவில் மன்னிக்கவே இல்லை எனவும் கூறுகிறார் பசாசு(26).

 கி.பி. 9ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த ஆதி சங்கரர் எண்ணியத்தைத் தோற்றுவித்தத் தமிழரான தொல்கபிலர் எனப்படும் கபிலர் குறித்து, “ஆபத்தான எதிரியான முதன்மை மல்லனைத் தோற்கடித்ததால், சிறிய எதிரிகளை வெல்வது இலகுவாயிற்று” என்கிறார்(27). ஆகவே தொல்கபிலரின் எண்ணியம்தான் பார்ப்பனர்களுக்கும், வேதாந்தத்திற்கும் மிகப்பெரிய எதிரியாக 3000 வருடங்களாக இருந்து வந்துள்ளது எனலாம். போதாயன சாத்திரத்தின் ஆசிரியர் கபிலரின் மீதான பார்ப்பன வெறுப்பை, “கடவுளர்களோடு போராடிய அவன் இதுபோன்ற வேற்றுமைகளை உருவாக்கினான். விவேகமுள்ளவன் அவன் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டான்” என வெளிப்படுத்துகிறார்(28). பார்ப்பனர்களுக்கும், வைதீக மதத்துக்கும், வேதாந்த கருத்துக்களுக்கும் மிகப்பெரிய எதிரியாக கி.மு. 1000 முதல் இன்றுவரை தமிழகமே இருந்து வந்துள்ளது. பழந்தமிழகத்தில் தொல்கபிலர் முதல் வள்ளுவன்வரையும், இன்று அயோத்திதாசர் முதல் பெரியார்வரையும் பார்ப்பனியத்துக்கும், வைதீக மதத்துக்கும், வேதாந்தத் தத்துவத்துக்கும் எதிரானவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் தோன்றி வந்துள்ளனர். ஆகவே பார்ப்பனியத்தின் மிகப்பெரிய எதிரிகளை தமிழகமே தோற்றுவித்து வந்துள்ளது எனில் அது மிகையாகாது. இன்றும் அதற்கானத் தேவை இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

 கபிலரின் எண்ணியம் முழுமையான அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு தத்துவம் எனவும் நவீன அறிவியல் சிந்தனையோடு அது முழுமையாக ஒத்துப்போகிறது எனவும் கூறுகிறார் பசாசு. எண்ணியம் குறித்த பெர்னார்டு அவர்களின் “தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது.” மேலும், உலகத்தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. “அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு. அது முதலும் முடிவுமற்ற, விரிந்து பரந்த நடைமுறை. நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும் படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிய மெய்மை ஏற்றுக்கொள்கிறது” என்ற இக்கூற்றுக்கள் எண்ணியத்தின் நவீன அறிவியல் தன்மையை முழுமையாகப் பறைசாற்றுகிறது எனலாம். எண்ணியத்தைத் தோற்றுவித்த தொல்கபிலர் ஒரு தமிழர் என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம்.

 தமிழகத்தில் கி.மு. 1000க்கு முன்பிருந்து வளர்ச்சியடைந்த நகர, நகர்மைய அரசுகளும், சிறு குறு அரசுகளும் அதன் வேளாண்மை, பொருள் உற்பத்தி, தொழில்நுட்பம், வணிகம் போன்றவற்றில் ஏற்பட்ட உலகளாவிய வளர்ச்சியும்தான் தொல்கபிலர், கணாதர் போன்றவர்களைத் தோற்றுவித்தது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு தொல்கபிலர், கணாதர் போன்றவர்களின் பங்களிப்பால் பண்டைய தமிழ்ச்சமூகம் அறிவியல், தத்துவம், கலை போன்ற அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இவ்விடயங்களில் ஒரு சிறிய அளவு மட்டும் வடமொழியில்(ஆகமம் போன்றவற்றில்) சேமிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் இருந்த அனைத்தும் அழிந்து போயின. வடமொழியில் இருந்த ஆரம்பகால அறிவியல், தத்துவார்த்த, கலை சார்ந்த விடயங்களில் பெரும்பாலானவை தமிழ் மரபுக்குரியவை. சான்றாக சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும், பரதநாட்டிய சாத்திரம் என்ற நாட்டிய சாத்திர நூலும் தமிழ்வழி நூல்கள். ஆனால் தமிழில் இருந்த அவை போன்ற நூல்கள், தடயங்கள் இன்றி இல்லாது போயின. தமிழின், தமிழ்ச் சமூகத்தின் பெருமைக்குரிய தொல்கபிலர், கணாதர் போன்ற அறிஞர்கள் ‘தமிழர்கள்’ என்பதையே அறியாதவர்களாக இன்றையத் தமிழ்ச்சமூகம் இருக்கிறது. இவர்கள் குறித்து நமக்கு அரும்பாடுபட்டு எடுத்துரைத்த முனைவர் க.நெடுஞ்செழியன் பெரும்பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியவர் ஆவார்.

பார்வை:

1.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 16, 17.

  1. “ “ “ பக்: 18, 19.
  2. “ “ “ பக்: 329-331.
  3. “ “ “ பக்: 338
  4. “ “ “ பக்: 48-50.
  5. “ “ “ பக்: 58,59 & A HISTORY OF INDIAN LITERATURE, WINTER NITZ, VOL 1 PAGE: 200

7.QUOTED IN BUDDHIST INDIA PAGE: 240 – 241.

8.THE HISTORY AND CULTURE OF INDIAN PEOPLE VOL-1 PAGE: 422

9.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 56-64.

  1. “ “ “ பக்: 77 & BUDDHIST INDIA PAGE: 31, 32.
  2. “ “ “ பக்: 79. & A HISTORY OF INDIAN LITERATURE, WINTER NITZ, VOL 1 PAGE: 415.

12.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 88-92.

  1. “ “ “ பக்: 93.

14.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 131

  1. “ “ “ பக்: 132
  2. “ “ “ பக்: 131, 132.
  3. “ “ “ பக்: 95 – 100
  4. “ “ “ பக்: 100 – 105.
  1. “ “ “ பக்: 105 – 110.

20.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்:778-781

21.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்:110-114.

  1. “ “ “ பக்; 114-116.
  2. “ “ “ பக்: 116.
  3. “ “ “ பக்: 121, 122. & INTRODUCTION TO TRANSLATION OF ANIRUDHA’S COMMENTS OK SAMKHYA SUTRA P. XX – Xxi.

25.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்:122, & LOKAYATA P. 263.

  1. பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்:122-124.
  2. “ “ “ பக்: 124
  3. “ “ “ பக்: 124 & LOKAYAT, P. 61.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It