ஃபீனா டாட் காம் (faena.com) என்னும் இணையத்தளம் ஓர் இல்ல நூலகம் என்றால் குறைந்தது 80 நூல்கள் இருக்க வேண்டும் என்கிறது.

என் பத்தாவது வயதிலேயே - என் தந்தையாரின் நூல்கள் அல்லாமல் - எனக்கேயுரியவையாக 80க்குக் குறையாத நூல்கள் இருந்தன; பெரும்பாலும் சோவியத் சிறுவர் நூல்கள்.  தமிழில், நல்ல தாளில், பெரிய எழுத்துக்களில், வண்ணமயமாக 5 - 15 காசு விலையில் அவை கிடைத்தன.  வாண்டு மாமாவின் தமிழ், லீ ஃபாக்கின் ‘முகமூடி’ தமிழ் மொழிபெயர்ப்புப் படக் கதைகள் (Comics) சிலவும் இருந்தன.  இவை படிப்பார்வத்திற்குப் பாதை சமைத்தன.

அடுத்த கட்டமாகத் தமிழ்வாணனின், படமில்லாத சங்கர்லால் துப்பறியும் கதைகளும், புனைவில்லாத (non fiction) எழுத்துகளான கல்கண்டு இதழ்த் துணுக்குகளும் வாசிப்புச் சுவையின் வாயில் திறந்தன.

இதழ்களில், குறிப்பாக ஆனந்த விகடனில் வந்த சிறுகதைகள், தொடர்கதைகள் ஆகியவற்றுள் தேர்ந்தெடுத்துத் தனியே பிரித்தெடுத்து, தொகுத்து, என் தந்தையாரே தைத்து அட்டைபோட்டு வைத்திருந்த நூல்கள், அவர் வாங்கி வைத்திருந்த மு.வ.முதலியோரின் சில புனைகதை நூல்கள், வங்க, மராத்திய, உருசியப் புனைகதைகளின் மொழிபெயர்ப்புகள், குத்தூசி குருசாமியின் ‘பலசரக்கு மூட்டை’ போன்ற கட்டுரை நூல்கள் எனப் பலவும் வகைவகையான வாசிப்பில் பயணம் செய்ய வைத்தன.

இந்தப் பயணத்தின் முதல் திருப்பம் ஜெயகாந்தன்.  அவருடைய புனைகதைகளிலும் புனைவிலா எழுத்துக்களிலும் இழையோடும் தருக்க நடைநயத்திற்கு ஆட்பட்டேன்.  அடுத்தடுத்த திருப்பங்களை விரிப்பின் அகலும்.

எனது கவிதை வாசிப்பு ஒப்பீட்டளவில் பலவீனமானது.  தமிழ் இளங்கலை பயின்ற காலத்தில் அ.வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீபுஷ்பம் கல்லூரிப் பேராசிரியர்கள் அ.தட்சிணாமூர்த்தி, ந.மெய்ப்பொருள் முதலியோர் ஆய்வு நூல்கள் பலவற்றை அறிமுகப்படுத்தினர்.  ச.வையாபுரிப்பிள்ளை, க.கைலாசபதி ஆகிய இருவர்தம் ஆய்வு முறையும் ஆய்வு நடையும் என்னைக் கவர்ந்தன.

நாங்கள் படித்த நூல்களைப் பற்றி எங்களிடம் மாணவர் - ஆசிரியர் என்னும் நிலை கடந்து உரையாடும் பேரா.மெய்ப்பொருள் அவர்கள் நூல்களை வாங்கிப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார்; நூல்கள் வாங்குவது பொருளாதார நிலையைப் பொருத்தல்ல என உணர்த்தினார்.

அடிக்கடி சென்னை சென்று வரும் பேரா.பா.மாசிலாமணி அவர்கள் கிடைக்கும் புதிய நூல்கள் பற்றிச் சொல்வார்.  அவர் மூலம் புத்தகங்கள் பலவற்றை வாங்கினோம்.  என்னுடைய வேகம் சற்றுக் கூடுதலானது.  என் தந்தையார் மர அலமாரி செய்து கொடுத்தார்; என் வேகங்கண்டு தயங்கினார்.

பேரா.சண்முகவேல் அவர்கள் ஒரு முறை, “மதி! நீ கண்டதையும் படிக்கிறே.  உனக்குன்னு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து ஆழமாப் படி.  அப்போதான் பேரெடுக்க முடியும்” என்றார்.

அவர் சொன்னது உண்மைதான்.  ஆனால், நான் வாசிப்புச் சுவை கருதியே படித்தேன்; என்னை ஈர்த்த நூல்களைப் படித்தேன்.  பாடநூல் படிப்பையும், ஆய்வுப் பட்டத்திற்கான படிப்பையும் வாசிப்பின் வகைக்குள் அடக்கவேண்டியதில்லை என்பது என் கருத்து.  ஆனால், என் ஆய்வுக்கான தேடலின்போது நான் கண்டடைந்த வியத்தகு பெரியவர் அமரர் கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியார் அவர்களை இந்தக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிற்கும் போது நினைவு கூராமல் இருக்க இயலாது.

புத்தகக் காதலர்களை அவர் இனங்காணும் திறனையும் அப்படிக் கண்டுவிட்டால் அவர்கள் பால் கொள்ளும் அன்புரிமையையும் அனுபவித்தோரே உணர்வர்.  நான் அனுபவித்தோருள் ஒருவன்.  நிற்க.

நான் பல இடங்களில் சொல்வதுண்டு.  ‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’  என்கிறார்களே, அப்படி எல்லோரும் உருகுகிறார்களா?

இராமலிங்க அடிகளார் பாடுகிறார்:

வான் கலந்த மாணிக்கவாசக நின்வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ்சுவை கலந்து

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

இதில் அடிக்கோடிட்டுப் படிக்க வேண்டியது “நான் கலந்து பாடுங்கால்” என்பது.  ஒரு நூல் தானாக ஈர்க்காது.  நாமும் கொஞ்சம் ஈடு கொடுக்க வேண்டும்.  வள்ளலாரின் திருவாசக வாசிப்பு உலகியல் கடந்தது.  உலகியல் சார்ந்த வாசிப்பு அனுபவமே அற்புதமானது; நமக்குப் போதுமானது.  அந்த வாசிப்பிலேயே உவட்டாமல் இனிக்கும் அனுபவம் பெறலாம்.  சரி.  கொஞ்சம் ஆராய்ச்சி!

கண்டு களிக்கும் ஓவியம், சிற்பம் முதலியவை உலகளாவியவை; தொன்று தொட்டுத் தொடர்பவை.  பாவைக் கூத்து, நாட்டியம், நாடகம் முதலியனவும் தொன்று தொட்டு வருவன.  நிழற்பாவைக் கூத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக் காலச் சாத்தியமாகச் சலனப் படம் வந்தது.

ஒலி, ஒளி, வண்ணம், தொலைவு, அண்மை, கோணங்கள், வேக ஏற்ற இறக்கம் எனச் சலனப் படம், பாய்ச்சல் வேகத்தில் திரைப்படம் என்னும் தனிக்கலையாக, கேளிக்கையாக வந்து சேர்ந்தது.  ஆனால், திரைப்படத்தைப் போய்ப் பார்க்க வேண்டும்.  தொலைக்காட்சி வீட்டிற்குள் வந்துவிட்டது.  திறன் பேசி செல்லுமிடமெல்லாம் உடன் வரும் கையடக்கக் குட்டித் திரையாகிவிட்டது.

சென்ற வாரம் தேஜஸ் தொடர்வண்டியில் பயணம்.  அதிலுள்ள குறுந்திரை இயங்கவில்லை.  எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த மூத்த வழக்கறிஞர் திறன் பேசியை எடுத்துச் செவியலி கருவியைப் பொருத்திக் கொண்டு கையடக்கத் திரையில் இலயித்து விட்டார்.  காப்பி வந்தபோதுதான் என் பக்கம் திரும்பினார்.  பொன்னியின் செல்வன் கதை கேட்கிறாராம்.  எனக்கும் பரிந்துரைந்தார்.  காலத்தின் கோலம்.

புத்தகம் காலாவதியாவது இயற்கைதானே,  ஓலைச்சுவடி போய் அச்சுப் புத்தகம் வரவில்லை? இனிப் புத்தகம் தேவையில்லைதானே!  அறிவுத் துறை நூல்கள், ஆவணங்களுக்கு வேண்டுமானால் ஓரளவு அச்சு நூல் தேவை என்று சொல்லலாமா?

வாசிப்பு (Reading)

வெளியீடு (Publishing)

காப்புரிமை (Copy right)

இவற்றை ஊக்குவிப்பது யுனெஸ்கோவின் நோக்கம்.

பதிப்புரிமை பற்றிய ஒரு நூலை மட்டும் இங்கு அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன்.  அது, ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும் - பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு’.  இதை அவர் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

என் மகன் தமிழ் படிக்கத் தெரிந்தவன்தான்.  இதன் ஆங்கில வடிவத்தில் பின்னணித் தகவல்கள் சில கூடுதலாக இருப்பதால் ஆங்கிலத்தில் படிக்க வசதியாயிருக்கிறது என்று வாங்கி விட்டான்.  இக்காலத்தில் தமிழ் படிக்கிறவர்களின் எண்ணிக்கையும் குன்றி வருகிறது.  எனக்குத் தமிழும் அவனுக்கு ஆங்கிலமுமாக வேறு சில நூல்களையும் வாங்க நேர்ந்துவிட்டது;  நேரும்.

“அறம் பொரு ளின்பம் வீடடைதல் நூற்பயனே” என்பார்கள்.  ஒரு மொழி நூல்களின் பெருக்கம் கடந்து, இரு மொழி நூல்களால் எங்கள் வீடு அடைகிறது.

சலபதியின் நூல் ஆய்வு நூல்.  அதனைச் சுருங்கச் சொல்லிக் கருத்தை விளக்கிவிடலாம்.  ஆனால், படித்தால்தான் மொழி வளமும் நடை நயமும் தருக்க ரீதியான ஓட்டமும் தரும் சுவையை நுகர முடியும்.  அவர் வரலாற்றுப் பேரறிஞர்.  நான் தமிழாசிரியன்.  அவரது தமிழ் நடை என் பொறாமையைத் தூண்டும்.

உலகப் புத்தக நாள் 2019 இன் அடிக் கருத்து -Theme - Share a strory

story வெறும் கதை மட்டுமல்ல; அறிவுத் துறை நூல்கள் உட்படச் சுவையாகப் படிக்கத்தக்க அனைத்தும்தான்.

யுனெஸ்கோ ஏன் ‘காலாவதி’யாகிப் போன வாசிப்பை ஊக்குவிக்க முயல்கிறது?

என் நூலகச் சுயபுராணத்தைத் தொடர்கிறேன்.

புத்தகப் பித்தனாகிய என் இல்ல நூலகத்தில் இப்போது 12 ஆயிரத்துக்குக் குறையாத நூல்கள் சேர்ந்து விட்டன.  தேவையான, ஆர்வமுள்ள நூல்களை இயன்றவரை வாங்கி விடுவேன்.  எனவேதான் பல்கலைக்கழகப் பொதுநூலகம் செல்லும் தேவை பெரிதாக ஏற்படவில்லை.

இன்னொன்று, வாங்கும் நூல்களையெல்லாம் உடனடியாக வரி விடாமல் படிக்க முடியாது; தேவையுமில்லை.  முன்னுரை முதலியவற்றால் அறிமுகப்படுத்திக் கொண்டு தேவைக்கேற்பப் படிக்கலாம் என்பது என் கருத்து; அனுபவம்.

இப்போது இட நெருக்கடி, பராமரிப்பதில் உள்ள சிரமம் முதலியவற்றால் வாங்கும் எண்ணிக்கை குறைந்திருக்கிறது; படிப்பும்தான்.  முற்றாக நின்று போகவில்லை.  எனது விரலி (Pendrive) ஒரு நடமாடும் நூலகம்.  ஏறத்தாழ 1000 நூல்கள் உள்ளன.  செல்பேசித் திரையிலேயே ஓரளவு பார்த்துவிடலாம்.

கிண்டில் போன்ற மின்னணுக் கருவிகள் வரவேற்கத்தக்கவைதாம்.  அச்சு நூல் போல் அதில் படிக்க முடியவில்லை என்றாலும் புதிய தலைமுறையினர் அதை இயல்பாகக் கையாள்கிறார்கள்.  இவை வாசிப்புக்கு உதவும் நவீன வடிவங்கள்.

வாசிப்பின் முதல் நிலையாகிய, எழுத்து - வரிவடிவம் (Script)  - மனித குலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கருத்தாலும் கரத்தாலும் உழைத்து இழைத்த அரும்பொருள்.  தமிழ்ச் சமூகம் எழுத்தைக் கொண்டாடிய தொல் சமூகங்களில் ஒன்று .

ஏறத்தாழப் பொ.கா.மு. (பொதுக் காலத்திற்கு முன், BCE) 5 - ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ்ப் பிராமி எனப்படும் தமிழி எழுத்துப் பொறிப்புகளைக் காணமுடிகிறது.  பண்ணவாந சுத்த என்னும் சமண நூல், பொ.கா.மு. முதல் நூற்றாண்டிலேயே தமிளி எனத் தமிழி வரிவடிவத்தைச் சுட்டியது.

தமிழகத்தின் வணிகம் சாராத, அரசு சாராத பகுதிகளில் மட்பாண்ட எழுத்துக் கீறல்கள் கிடைப்பதையும் அவை சுட்ட பின் கீறப்பட்டவை என்பதையும் கொண்டு தமிழக எழுத்தறிவுப் பரவலை உய்த்துணர்ந்தார் தொல் எழுத்தியலறிஞர் ஐராவதம் மகாதேவன்.

சமற்கிருத, பிராகிருத மொழிகளில் இல்லாத தமிழுக்கேயுரிய வரி வடிவங்கள் தமிழியில் உள்ளன.  அசோகர் பிராமியில் கூட்டெழுத்து உண்டு.  அதே காலத் தமிழிக் கல்வெட்டுகளில் கூட்டெழுத்து இல்லை.  இது தமிழ் இயல்பு.

வேட்கோவர் - வேளார் - எனப்பட்ட குயவர் மரபினரின் மேன்மையான அந்தஸ்தையும் எழுத்தறிவையும் பற்றிப் பானைப் பாதை (Pot route) பற்றிய தம் ஆய்வில் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். விளக்கியுள்ளார்.

வெளியிடப்பெற்ற தென்னகக் கல்வெட்டுகளில் மொழிவாரி எண்ணிக்கை:

தமிழ் 28,600

கன்னடம் 11,000

தெலுங்கு 5,000

தமிழ் இலக்கிய வரலாறு ஏறத்தாழப் பொ.கா.மு. 2-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது.  சங்க இலக்கியத்திலுள்ள பெயர்கள் பல அக்காலக் கல்வெட்டுப் பெயர்களோடு ஒத்துப் போவதும் பழந்தமிழ் இலக்கியக் காலக் கணிப்புக்கு இணங்குகின்றன.

தொல்காப்பியம் இலக்கணத்தை நூல் என்கிறது.  தொல்காப்பியத்தின் முதல் இயலுக்கு நூல் மரபு (நூன்மரபு) என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  நூன் மரபில் தமிழ் எழுத்து எண்ணிக்கை, பெயர்கள், வைப்பு முறை, வரிவடிவம் முதலியன கூறப்பட்டுள்ளன.

Grammar என்பதற்குரிய சொற்பிறப்பு வேரைப் (etymology)  பார்த்தபோது, gramma / grammat (Greek - letter of the alphabet, thing written gramma / grammat (Greek - letter of the alphabet, thing written

grammatike tekhne (Greek) - art of letters - எனக் கிரேக்கத்தில் எழுத்து என்னும் பொருள் குறித்த சொல் காட்டப்பட்டுள்ளதைக் கண்டேன்.

தமிழிலும் நூல் என்பது எழுத்தைக் குறித்து, பின்பு இலக்கணத்தைக் குறித்து, இப்போது எல்லாப் புத்தகங்களையும் குறிக்கிறது என்று உய்த்துணர்கிறேன்.  எனவேதான் எழுத்து மரபைக் கூறும் இயலுக்கு நூன்மரபு எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.  அறிஞர் வேங்கடராசுலு ரெட்டியார் இதனை முன்பே ஊகித்து எழுதியுள்ளார்.  ஒப்பியல் அதனைப் பேரளவு உறுதி செய்கிறது.  எல்லாமே எழுத்தில்தான் தொடங்குகின்றன.

“எழுத்தறிவித்தவன் இறைவன்”

“எழுத்தறியத் தீரும் இழி தகைமை”

“ஆரணங்க காணென்பர்”

என்று தொடங்கிச் சிற்றம்பலக் கோவையைப் பாராட்டும் பாட்டின் “எழுத்தென்ப இன் புலவோர்” என்னும் தொடர்களில் வரும் ‘எழுத்து’ என்பதற்கு இலக்கணம் எனப்பொருள் கொள்வது மரபு.  வரிவடிவத்தைக் குறிப்பதாகவும் இலக்கியத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.  இவை ஒன்றொடொன்று தொடர்புடையவை.

சி.சு.செல்லப்பா தம் இதழுக்கு ‘எழுத்து’ என்று பெயரிட்டதே நவீனத்தன்மையின் அடையாளம் என்பார்கள்; றுசவைவீபே என்பதன் தமிழ் வடிவம் என்பார்கள்.  இருக்கலாம்.  எழுத்து என்பது இலக்கண (இப்போது இலக்கியக் கொள்கை / கோட்பாடு என்கிறோம்),  இலக்கியங்களைக் குறிப்பது தமிழ் மரபுமாகும்.  எழுத்துக்குப் பொருளில்லை.  சொல்லுக்கும் கூட பொருள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறது தொல்காப்பியம்.  “பொருள் உடையனவே” என்று சொல்லவில்லை.  சொல்பொருளைக் கொண்டிருப்பதில்லை; பொருளைக் குறிக்கும்.  (தெய்வச் சிலையார் உரை காண்க)

சுவை

நயம்

ஆழம்

நுட்பம்

ஊன் கலப்பது

உயிர் கலப்பது

உவட்டாமல் இனிப்பது - இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

பொருள் குறியாத எழுத்துகள்

தமக்கெனப் பொருள் கொண்டிராத சொற்கள் இவற்றினூடாகப் பருப்பொருள்களையும்  நுண்பொருள்களையும் உணர முடிகறிதே! பொருளின்மையிலிருந்து பொருள்!

புத்தக வாசிப்பை ஒரு கலை -

Art of reading - என்கிறது யுனெஸ்கோ அறிக்கை.

எவை எவையெல்லாம் தெய்வம் என்று அடுக்குகிற பாரதி நிறைவாக,  “எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்”  என்று எழுத்தைத் தெய்வ நிலைக்கு உயர்த்திவிடுகிறார்.

எழுத்து ஓர் அதிசயம்,

எழுத்துக்களால் ஆன சொல் ஓர் அதிசயம்,

இவற்றாலான புத்தகம் ஓர் அதிசயம்.

வாசிப்பு ஓர் அற்புத மாயாசாலம் என்பதற்கு நானே சான்று.

நான் மட்டுமா?

இந்த மாயாசாலத்தில் மயங்கித் திளைத்தோர் பலரும் சான்று.

தன்னுள் ஆழும் ஒருவரின், படைப்புணர்வைக் கோருகிற, படைப்புணர்வைத் தூண்டுகிற, படைப்புணர்வைத் துலங்கச் செய்கிற, வாசிப்புக்கு இணையான வேறொன்று இல்லவே இல்லை.

(22-5-19 அன்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த உலகப் புத்தக விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

Pin It