போரின் வடுக்கள்... தீய்ந்துபோன விழுப்புண்கள்... காணாமல் போதல்கள்... உடல் ஊனமுறுதல்... இழப்பின் துயர் தரும்வலி... போரிலிருந்து மீண்டெழ முடியாதபடியான போர்ப்பொருளாதாரச் சம்மட்டி அடிகள்... மேற்கிளம்பி எழமுடியா விழுதல்கள், நிமிர்தல்கள் என, ஈழத்துமண்ணில் பயணம் மேற்கொண்டது குறித்து வழக்கமான ஒரு பயணக் கட்டுரையைப் போல எழுத முடியாத ஆதங்கமும் நெருடலும் இந்தக் கட்டுரையில் மையம் கொண்டிருப்பதைத் தவிர்க்கத்தான் முடியவில்லை.
19.03.2025 முதல் 31.03.2025 முடிய 11 நாட்கள் கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஒழுங்கு செய்திருந்த, கல்விசார் களப்பயணத்தில் ஆக்கபூர்வமான பணிகளைச் செய்யப் போகிறோம் என்கிற பெருமிதத்தில், நாங்கள் அமர்ந்திருக்க, இண்டிகோ விமானம் தன் சிறகை விரித்துப் பறந்தது...பத்தாண்டுகளுக்கு முன்பு போரின் குரூரமான உடனடி அழிமானங்களும் வீழ்ச்சிகளும் மரணமுறும் காலத்தின் கெடுவாய்ப்புகளும் புடைசூழ அமைந்த; வழிநெடுக பெருஞ்சோதனையின் அல்லற்பாடுகளை எதிர்கொண்ட அந்தப் பயணத்திலிருந்து ஒரு தசாப்தம் கடந்து இப்போது பயணிக்கிறோம்.கட்டுநாயக்கா விமானத்தளத்தில் எதிர்கொண்டு வரவேற்றனர், கொழும்பு தமிழ்ச்சங்க இலக்கியப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஊடகர் மதுசூதனன் மற்றும் ஆசிரியர் சேந்தன் ஆகியோர். நீண்ட காலத்துக்குப் பிந்தைய சந்திப்பின் நெகிழ்வுகளும் பார்த்தவுடன் தகவல்களைப் பரிமாறிக் கொட்டித்தீர்க்கும் ஆவலாதிகளும் ஆட்கொள்ளப் பயணம் நெடுகப் பேசிக்கொண்டே கொழும்புத் தமிழ்ச்சங்கம் சென்றடைந்தோம். அன்றைய நாள் இரவு ஓய்வுக்குப் பிறகு, எங்களுடைய முதல் நிகழ்வாக மலையகப் பயணம் அமைந்தது.
வழக்கமாக இலங்கைக்குப் போகிறவர்கள், யாழ்ப்பாணம் கொழும்பு இப்படி மையங்களை நோக்கிப் பயணிப்பார்கள் என்பதிலிருந்து விடுபட்டு, விளிம்பு நிலையான மலையகத்தில் எங்கள் நிகழ்வைத் தொடக்க நிகழ்வாக, கொழும்புத் தமிழ்ச்சங்கம் அமைத்துக் கொடுத்ததென்பது தனிச் சிறப்பு. கொழும்பிலிருந்து மலையகத்திற்கு எங்களோடு எழுத்தாளரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மல்லியப்பூ சந்தி திலகர், வழிநெடுக மலையகத்தின் ஆற்றாமைகளை; மலையகப் பிரதிநிதித்துவப்படுத்தலில் இருக்கிற விடுபாடுகளை; இன்றைக்கு இருக்கிற அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழல்களை... ஈழத்துப் போருக்குப் பிந்தைய போர்ப் பொருளாதார வாழ்வியல் நெருக்கடிகளை என, எல்லாவற்றையும் பேசியபடியே வந்தார்.
20-03-2025 அன்று விடியலில் புறப்பட்டு, மூன்று மணியளவில் நாங்கள் போய்ச் சேர்ந்த இடம் மலையகத்தின் பதுளைத் தோட்டப்புறப் பள்ளிக்கூடம் ஒன்றின் அரங்கு. அங்கேதான் முதல் பொழிவாக பேராசிரியர் வீ.அரசு பாடத்திட்டத்தின் பழமைவாதப் போக்கிலிருந்து புதிய திசைவழிகளைச் சுட்டிக் காட்டும் உரை ஒன்றை விரிவாக நிகழ்த்தினார். தமிழ் என்கிற ஒரு நிலையிலிருந்து தமிழியல் என்கிற பல்பரிமாண நிலையில் பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கு மொழி வரலாறு, இலக்கியம்-இலக்கணம், சமூகவரலாறு, ஊடகவரலாறு, பண்பாட்டுவரலாறு என்கிற பல கூறுகளில் இருந்து இலக்கியக் கல்வியை, குறிப்பாக ஆசிரியர் பயிற்சியில் ஆசிரியர்கள் பெறவேண்டிய மேன்மையான கல்வி அருமைப்பாடுகள் குறித்த விரிவாக உரையை நிகழ்த்தினார். வழக்கமான நிர்வாக இடர்கள், புதிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான அனுமதி பெறுவது சார்ந்த இடர்பாடுகளை ஆசிரியர்கள் பெரிதும் பகிர்ந்து கொண்டார்கள். அப்போது குறுக்கிட்ட பேராசிரியர் வீ. அரசு, இப்படி எல்லாம் இடர்பாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், புதியன செய்ய விரும்புகிறவர்கள் வாளாவிருந்து விடமுடியாது. பொருளாதார நெருக்கடிகள் இருக்கின்றன. ஆசிரியர் பணியிடப் பற்றாக்குறைகள் இருக்கலாம். பாடத்திட்ட மாறுதல்களைப் பெறுவதற்கான அனுமதிகளில் இடர்பாடுகள் ஏற்படலாம். எல்லா நெருக்கடிகளுக்கு மத்தியிலும்தான் நாம் கடமையாற்ற வேண்டியிருக்கிறது.
வழக்கமான ஒப்பளிக்கப்பட்ட பாடத்திட்டம் என்கிற ஒரு சட்டக முறைமையில் மட்டுமல்லாது, ஒரு புதிய / ஆகச்சிறந்த / தேவையான நவீன மாற்றங்களுக்கு உட்பட்ட ஒரு பாடத்திட்ட முறைமையை மனதிற்கொண்டு மாணவர்களுக்குப் புதியன புகுத்தலாம் என்று முடித்தார். பிறகு பேச அழைக்கப்பட்டபோது, நவீன கற்கைநெறி சார்ந்த ஊடகப் பயன்பாடுள்ள மாற்றுத்திரை முயற்சிகளை, குறிப்பாகக் குறும்படங்கள் ஆவணப்படங்கள் சிலவற்றைத் திரையிட்டு, இவற்றைக் கற்றல் கற்பித்தலில் பயன்படுத்துவது குறித்ததான தலைப்பில் என்னுடைய உரை அமைந்தது. ஸ்மார்ட் கிளாஸ் எனப்படுகிற திறன்மிகு வகுப்புகளில் இதுபோன்ற காணொளிக் காட்சிகள், மாற்றுத்திரை முயற்சிகளைப் பயன்படுத்துவது கற்போரால் வெகுவாக விரும்பப்படும். தவிரவும் ஆசிரியர்கள் பெரிதும் குறைபட்டுக் கொள்வதுபோல, திறன்பேசிகள் கைக்கு வந்துவிட்ட பிறகு; மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வந்துசேர்ந்துவிட்ட பிறகு, அது சார்ந்த ஈர்ப்பில் அவர்கள் படிப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள். அல்லது பொழுதழிப்பாக மாறுகிறது என்கிற ஒரு முகச்சுழிப்பை மாற்றி, அந்த ஊடகங்களின் வாயிலாகவே கற்றல் கற்பித்தலின் அனுகூலமான நல் வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்துத்தான் நாம் யோசிக்கவேண்டும்.
கோடியக்கரை எனும் தமிழகத்தின் கடைக்கோடி ஊரில் மாடுகளின் தோலில் உரிமையாளரின் பெயரைச் சூடுபோட்டுக் காடுகளில் கொண்டுபோய் விட்டுவிடுவதைப் போல (பிறகு கறவைக் காலத்தில் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வருவார்கள்) மலையகம் வந்த தமிழர்களைக் கால்நடைகள்போல் நடத்தி, செங்கொட்டைகளால் அடையாளச் சூடுபோட்ட வரலாற்றையும், மலையகத்திலிருந்து நெருக்கடி தாங்காமல் ஓடிப்போகிற ஆண்களை மரத்தில் கட்டிவைத்து உதைப்பதும், அதுவே ஓடிப்போவது பெண்களாயிருந்தால் கோணிச்சாக்கிற்குள் கழுத்துவரை ஓடிப்போன பெண்ணை அடைத்துவைத்து உள்ளே பூனை விடப்பட்டு சித்திரவதைப்பது போன்ற கொடுமைகளைத் தோலுரிக்கும் எனது ‘பெண்ணென்றால்’ ஆவணப் படத் திரையிடலுடனான எனது உரை அமைந்தது. கல்லிலிருந்து நார் உரிப்பது போன்றது, தமிழ்ச் சமூகவரலாறு எழுதுவது என்பார்கள். எனில் மலையிலிருந்து நார் உரிப்பது போன்ற வாழ்வியல் அறைகூவல்களின் பின்னணி சார்ந்த மலையகம் இன்று எழுந்து நிற்கிறது என்று என்னுடைய உரையை நிறைவு செய்தேன்.
அடுத்தநாள் நாங்கள் சென்றடைந்த இடம், இலங்கை மலையகத்தின் கொட்டகல ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை. அங்கும் இதேபோன்ற பொழிவுகளை நாங்கள் நிகழ்த்தினோம். வலதுசாரித் தாக்குதல்களில் இருந்து தப்பிப் பிழைக்க வேண்டிய அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைக் காலமாக இருக்கிற இந்தக் காலத்தில் மிகக்கவனமாக சமயச்சார்பற்ற தமிழ் மொழியின் மேன்மைகளை தலைமுறைகள் கடந்து, கொண்டுசெல்லவேண்டிய பாங்குகள் குறித்து, பேராசிரியர் வீ.அரசு அவர்களும், பாடத்திட்ட நவீனமாக்கல்; நவீன கற்கைநெறி சார்ந்த முறைமைகள்; பண்பாட்டு மேலாதிக்கங்களை உடைத்துக்கொண்டு முன்னேறுகிற பாய்ச்சல்கள் போன்றவற்றை நானும் என, எங்களுடைய பொழிவுகளைக் கட்டமைத்துக் கொண்டோம்.
அன்றைய இரவு மலையகத்தில் தங்கி, அடுத்தநாள் எங்கள் வாகனம் பயணத்தைத் தொடர்ந்தது. கவிஞர் சு.முரளிதரன் வீட்டில் விருந்தோடு ஏராளமான நூல்களை வாரி வழங்க, வழிநெடுக மலையக ஆசிரியர்களைச் சந்தித்ததும் அவர்களுடைய நெருக்கடிகள் குறித்து மனம்விட்டுப் பகிர்ந்ததும் அதுசார்ந்த தீர்வுகளை எடுத்துவைத்ததுமான நினைவுகளை அசை போட்டபடி மலைத்தோட்டச் சரிவுப்பாதையில் எங்கள் வாகனம் கொழும்பு நோக்கிப் பயணித்தது.
2. 22-03-2025 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பேராசிரியர் சு.வித்தியானத்தன் நூற்றாண்டு விழாவுக்கான சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்த பேராசிரியர் வீ. அரசு சிறப்புரையாற்றினார். ஈழத் தமிழ்ப் பேராசிரியர்களின் செவ்வியல் மரபு குறித்த ஆய்வுகளை மீள் பார்வையாகக் காணும்போது, அவற்றின் பல்பரிமாணங்களை உணர முடியும். பேராசிரியர்கள் தனிநாயக அடிகள், சு.வித்தியானந்தன், கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, ஆ.வேலுப்பிள்ளை ஆகியவர்களின் செவ்விலக்கிய மரபுகள் குறித்த ஆய்வுகளை உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும். செவ்விலக்கிய ஆய்வுகள் குறித்த உரையாடலுக்கு தொல்லியல், மரபணுவியல் மற்றும் தொல்லெழுத்தியல், தொல்குடியியல் ஆகிய பிற துறைகள் அடிப்படைகளாக அமைகின்றன. இவற்றின் வரலாறு, சமூக அசைவியக்கம், மெய்யியல் ஆகிய துறைகள் சார்ந்த பதிவுகளை ஈழப் பேராசிரியர்களின் ஆய்வுகளின் மூலமாகக் கண்டறியும் முயற்சி மிக முக்கியமானது.
அடுத்து எங்களுடைய திட்டங்கள்... யார் யாரைச் சந்திக்கப் போகிறோம்? என்னென்ன பேசப் போகிறோம்? என்பதாக அன்றைய இரவு நேரத்தில் ஒரு ஒரு முன்மொழிவை மதுசூதனன் தயாரிக்க, நாங்கள் வந்திருக்கிறோம் என்பதறிந்து, கிளிநொச்சித் தமிழ்ச்சங்கம்... கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகம்... நூலகம். org...கவிஞர் த.மலர்ச்செல்வன் எனப் பல்வேறு தரப்பில் நிகழ்ச்சிகளை வடிவமைத்து இசைவுபெற்று அடுத்தடுத்த கட்டமாக எங்களை அழைக்க ஆர்வம் கொண்டு பணிகளை மேற்கொண்டார்கள்.
தொடர்ந்து, நாங்கள் யாழ்ப்பாணக் கல்வி வலயம் சார்ந்த 130 ஆசிரியர்களுக்குப் பாடத்திட்டப் புதுமைகள், குறிப்பாகத் தமிழ்க் கல்வியை எப்படித் தமிழியல் கல்வியாக பல பரிமாணத் தளத்தை நோக்கி நகர்த்துவது...மொழிவரலாறு, பண்பாட்டுவரலாறு, கலைவரலாறு, சமூகவரலாறு, ஊடகவரலாறு என்கிற பலநிலைகளில் தமிழியல் கல்வியை விரிவான தளங்களில் கொண்டுசேர்ப்பது... புலம்பெயர்ந்தோர் இலக்கியங்களை கவனத்தில் கொள்வது... புதிய போக்குகள் குறித்து அவதானிப்பது என்று, பல தளங்களில் பேரா.வீ.அரசு அவர்களின் உரை அமைந்திருந்தது.
அடுத்து, யாழ்ப்பாணம் வலிகாமம் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான கூட்டம். அதில் தமிழ்ச் செவ்வியல் மறுவாசிப்பு குறித்த விரிவான உரையை நான் நிகழ்த்தினேன். தமிழ்ச் செவ்வியல் என்பது சமயச்சார்பற்ற; அறிவியல் மனப்பான்மை கொண்ட; பிற்பாடு அவைதீகப் போக்குகளின் இசைவான நிலைகள் குறித்த வலிமையான தரவுகளோடு எடுத்துப்பேச வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக மழை குறித்து வேதங்களில் சொல்லப்படுவதும், சங்கச் செவ்வியல் பனுவல்களில் சித்திரிக்கப்படுவதற்குமான பாரதூரமான வேறுபாடுகள் கொண்ட அறிவியல் பார்வை, தொல்காப்பியம் உலகத் தோற்றக் கதை குறித்த பார்வையைச் சொன்ன அறிவியல் மனப்பான்மை, வடமொழி மேலைத்தேய ஆரிய மொழிகள் போலல்லாது, தமிழ்மொழியின் கட்டமைப்பில் அஃறிணைப் பொருள்களுக்குப் பால் பாகுபாடு கிடையாது என்பதில் , (வடவாரிய மற்றும் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேலை ஆரிய மொழிகளில் பெரிய மேசையை ஆண்பாலிலும் சிறிய பலகையைப் பெண்பாலிலும் குறிக்க வேண்டும்) ஆணாதிக்கச் சிந்தனை அற்ற; அறிவியல் மனப்பான்மை என இவற்றை எடுத்துப் பேச நேர்ந்தது. பேராசிரியர் வீ.அரசு அவர்கள், தமிழியலின் பல்பரிமாண நிலையைச் சுட்டிக்காட்டி, பாடத்திட்டங்களை புதுக்கவேண்டிய செய்திகளையும் வலதுசாரிக் கருத்தாடல்களில் கல்விப்புலங்கள் சாய்ந்து விடாமல் முற்போக்குக் குணாம்சங்களோடு காத்திரமான அறிவியல் மனப்பான்மையோடு எப்படித் தமிழியல் கல்வியைக் கொண்டு சேர்ப்பது என்பது குறித்து மிக விரிவாகப் பேசினார்.
அன்று மாலை ஈழத்து நூல்கள் பலவற்றையும் மின்னூலகமாக ஆக்கித் தரவிறக்கம் செய்து வாசிப்பதற்கும், பார்வை நூல்களாகக் கருதிப் பயன்படுத்துவதற்கும் ஏதுவான மிகப் பெரிய நூலக வலைத்தள அமைப்பான நூலகம். org... சார்ந்த ஒரு கூட்டம். அங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர் வீ அரசு அவர்கள், தான் சேர்த்திருக்கிற 40 ஆயிரம் நூல்களைக் கொண்ட கல்மரம் வீட்டில் பராமரிக்கப்படுகிற அருமையான நூலகத்தைக் குறித்தும் அதில் மேற்கொண்ட மென்பொருள் சார்ந்த உத்திகள்...குறித்தெல்லாம் பேசியதோடு மட்டுமல்லாமல் நூலகம்.org... அமைப்புக்கென்று சுவடி வாசிப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதாகவும், அவருடைய உரை அமைந்தது.
சுவடிப் பாதுகாப்பு போன்றவற்றில் நாம் எப்படி அனல்வாதப் புனல்வாதப் போக்குகள் மத்தியில் சுவடிகளைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறோம். அழிந்தவை எவ்வளவு? மீந்தவை எவ்வளவு? இவற்றிற்கு மத்தியில் தான் நம்முடைய வரலாற்றுக் கருவூலம் தங்கி நிற்கிறது. இந்த வரலாற்றைத் தொடர்ந்து பேண, பாதுகாக்க மின் நூலகம் பயன்படுகிறது; என்னுடைய நூலும் இதில் இடம்பெற்று இருப்பது என்கிற அடிப்படையில் நன்றி உணர்ச்சியோடு நான் பேசுகிறேன் என்று என்னுடைய உரையில் குறிப்பிட்டேன். அதோடு கூடவே, இந்த நூலகம் உலகு தழுவிய தமிழ் நூலகமாகவும், அச்சு ஊடகம் மட்டுமல்லாமல் காட்சி ஊடக / மாற்றுத்திரை சார்ந்த குறும்பட ஆவணப்படங்களைச் சேகரித்து அவற்றின் நூலகமாகவும் விரிவு பெற வாழ்த்து தெரிவித்து என்னுடைய உரையை நிறைவு செய்தேன்.
அடுத்து எங்கள் பயணம் கிளிநொச்சித் தமிழ்ச்சங்கத்தை நோக்கித் தொடர்ந்தது. கிளிநொச்சித் தமிழ்ச்சங்கத்தில் பேராசிரியர் சு.வித்யானந்தன் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. அந்த நூற்றாண்டு விழாவில், பேராசிரியர் வீ.அரசு, சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றினார். சு.வி.யின் நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பு முயற்சிகள், அவரது தமிழர்சார்பு நூல் உருவாக்கம், அவற்றையெல்லாம் தாண்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக அவர் பணியாற்றி தமிழ்க் கல்விப்புலத்தை மேன்மைப்படுத்தியது, இப்படியான பல தளங்களில் சு. வித்தியானந்தன் அவர்களுடைய பங்களிப்பைப் பற்றி விரிவாகப் பேசியதோடு, விபுலானந்தர், சு.வித்யானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, ஆ.வேலுப்பிள்ளை, வி. செல்வநாயகம் போன்ற ஈழத்து அறிஞர் பெருமக்களை நினைவு கூர்ந்து தமிழ்நாட்டிற்கு வளம்சேர்த்த அந்த அறிவுப்பரம்பலின் தாக்கம் காரணமான நன்றி உணர்வோடு அவர் பொழிவாற்றினார். குறிப்பாக சு. வித்யானந்தன், நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த, நாடகம் சார்ந்த பங்களிப்புகளுக்கு எல்லாம் எவ்வாறு செயலாற்றினார்? அவருடைய கல்விப்புலம் சார்ந்த பங்களிப்பு எவ்வாறு விரிவாக அமைந்தது? என்பனவெல்லாம் குறித்தும் அவர் உரை நீண்டது. என்னுடைய உரையில் சு.வித்யானந்தன் தான், ஈழத்துத் தமிழ் அறிஞர் பெருமக்களிடத்தில் மிக அதிகமாகத் ‘திராவிட’ என்கிற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார் இது ஒரு தனித்துவச் சிந்தனை என்பதைக் குறிப்பிட்டு நேரத்தின் அருமை கருதி அங்கே மிகச் சுருக்கமாகப் பேசினேன்.
இந்த உரைகளைத் தொடர்ந்து, கிளிநொச்சி தமிழ்ச் சங்கம் அளித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுக்கொண்டு தொடர்ந்து எங்களுடைய பயணம் மட்டக்களப்புத் தமிழ் வலய ஆசிரியர் சந்திப்பு என்கிற நிலையில் ஆசிரியர்களுக்கான கற்கைநெறி புத்தாக்கம் குறித்த உரையாடலாக அமைந்தது. மட்டக்களப்பிலிருந்து ஆசிரியப் பெருமக்கள் மத்தியில் தமிழில் கற்கைநெறி சார்ந்த விரிவான பார்வைகளையும், பாடத்திட்ட புத்துருவாக்கம் குறித்தும் பேராசிரியர் வீ. அரசு உரை நிகழ்த்த, மாற்றுத்திரை சார்ந்த முயற்சிகள் கற்கை நெறி சார்ந்த அவற்றினுடைய தாக்கங்கள் இவை குறித்தும் அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு குறித்தும் என்னுடைய உரை அமைந்தது.
ஒரு பனை இரண்டு பாளை
ஒன்று நுங்கு ஒன்று கள்ளு
அறிவினில் அறிந்தபேர்க்கு
அதுவும் கள் இதுவும் கள்ளே
பறையனை இகழ்வதேனோ
பாய்ச்சலூர் கிராமத்தாரே”
உள்ளிட்ட பாய்ச்சலூர்ப் பதிகம், பாடுதுறை, ஆவுடையக்காள் பாடல் திரட்டு எனத் தமிழ் மரபில் அதிகம் புழங்கப்படாத; அரிதான; அறியப்படாத தமிழிலக்கிய வரலாற்றை முன்வைத்த உரை அது.
மாலை வேளையில் கல்விப்புலத்திற்கு வெளியேயான, தோழர் ரவீந்திரன் வீட்டில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கிற அருமையான நூலகத்தின் மாடியில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்ட அரங்கில், எங்களுடைய உரைகள் அமைந்தன. குறிப்பாகப் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் இன்றைக்கு, ஈழத்துப் புலமைமரபு நாங்கள் பார்த்து வியந்த நிலையிலிருந்து சற்று தளர்ச்சி அடைந்திருக்கிறதா? அதை எப்படி மீண்டும் எழுச்சிகரமானதாக மாற்ற வேண்டும்? ஈழத்து அரசியல்சூழல் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? இடதுசாரிகளின் போக்குகள்... ஈழத்து இடதுசாரிகள் தளர்ச்சி அடைந்த பின்புலச் சூழல்கள்... அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதான அவதானிப்புகள்... இந்தியச் சூழலில் இருந்து, வலதுசாரிச் சிந்தனைப் பரவலாக்கமும் ஈழத்தை நோக்கி பாய்ந்து வந்து விடுவதற்கான அபாயகரமான போக்குகள் நிலவுகின்ற இக்கட்டான சூழலையும் அவற்றிலிருந்து தங்களுடைய தனித்தன்மையைப் பேணுவது... சமயச்சார்பற்ற தமிழ்மரபைக் கட்டிக் காப்பது போன்ற விடயங்கள் குறித்தும் பேராசிரியர் வீ.அரசு அவர்களுடைய விரிவான உரை அமைய, சமஸ்கிருதப் பண்பாட்டுக் காலனியாதிக்கம், அதிலிருந்து தமிழகத் தமிழ்ச்சூழல் விடுபட்டதற்கான போராட்டம் குறித்த பார்வைகள், அதனுடைய முற்போக்குப் பாத்திரம் இவை குறித்து, என்னுடைய உரை அமைந்தது. சமஸ்கிருத பண்பாட்டுக் காலனி ஆதிக்கம் இந்தியத் தமிழ்ச்சூழலில் எங்களுக்குக் கூடுதலான சுமையாக அமைந்தது. எடுத்துக்காட்டாக இலங்கை ஒல்லாந்தர் ஆதிக்கம் பொருளாதார அரசியல் காலனி ஆதிக்கம் அதன் பிறகு சுதந்திரப் போராட்டம் என்று ஒரு ஒற்றைத் தன்மையான போராட்டத்தை சந்தித்ததென்றால், இந்தியத் தமிழ்ச் சூழலில் நாங்கள் அரசியல்ரீதியான பொருளாதாரரீதியான காலனியாதிக்கத்தைப் போராடிக் கடந்துவிட்டபோதிலும், சமஸ்கிருதப் பண்பாட்டுக் காலனி ஆதிக்கம் எங்கள்மீது கவிந்து கனத்த படுதாக்களை; கனத்த போர்வைகளை; கனத்த சுவர்களை எங்கள்மீது அழுத்திக்கொண்டிருக்கிற சூழலிலிருந்து நாங்கள் எப்படி மேற்கிளம்புகிறோம்? அது சார்ந்த போராட்டங்களை எப்படி முன்னெடுக்கிறோம்? அதனுடைய வளர்நீட்சியாக இன்றைய வாழ்வியல் எப்படி மாறியிருக்கிறது? இன்றைக்கு, சமூகநீதி எவ்வாறு நிலைநாட்டப் பட்டிருக்கிறது? என்பதான விரிவான பார்வைகளை முன்வைத்து என்னுடைய உரையை நிகழ்த்தினேன். பிறகு நல்ல கலந்துரையாடலும் நடைபெற்றது.
மேலும், "இன்று மாலை (25.03.2025) சத்தியமனை நூல்நிலையத்தில், பேராசிரியர் வீ.அரசு, பேராசிரியர் தெ.வெற்றிச்செல்வன் ஆகியோருடனான கலந்துரையாடல் இடம் பெற்றது. மதம், சாதியம், இந்திய மேலாதிக்கம் ஆகியவை யாழ்ப்பாண தமிழர்களிடையே தற்போது செலுத்தும் தாக்கம், யாழ்ப்பாணச் சைவர்களின் கிராமியத் தெய்வவழிபாட்டு இடங்கள் ஆகம ஆலயங்களாக மாற்றப்படுதல் ஆகிய தலைப்புகளில் சுவாரசியமான, விறுவிறுப்பான கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழகத்திற்கு நாம் சென்று அங்கு பத்தோடு பதினொன்றாக எமது கருத்துகளைச் சொல்லி வருகின்ற தற்போதைய காலகட்டத்தில், தமிழக அறிஞர்களை இங்கு அழைத்து, எமது பிரச்சனைகள் என்ன? எமது எண்ணக்கருக்கள் என்ன என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லக்கூடியதாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்த திரு மதுசூதனன், சத்தியமனை நூலகத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நடேசன், பூபிரவி ஆகியோரின் முயற்சி பாராட்டப் படவேண்டியது.’’ என வடகோவை வரதராஜன் அவர்களின் பின்னூட்டமும் பகிரப் பட்டிருந்தது. இந்த உசாவல்களும் பின்னூட்டங்களும் எமக்கு மிகவும் உவப்பாக அமைந்ததோடு தொடர் பணிகளுக்கான உந்துசக்தியாகவும் அமைந்தன எனலாம்.
இதைத் தொடர்ந்து, கவிஞர் த.மலர்ச்செல்வன் ஒழுங்குசெய்த மட்டக்களப்பு மைய நூலக உரையரங்கு, கிழக்குப் பல்கலைக்கழகம் ஒழுங்குசெய்த உரையரங்குகள் முக்கியமானவை. சு. வித்யானந்தன் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டிய அவரது அரங்கச் செயல்பாடுகள் குறித்த பார்வைகள், விபுலானந்தர், கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை, செல்வநாயகம் போன்ற ஈழத்துப் புலமை மரபின் தொடர்ச்சியாக இன்றைக்கு நாங்கள் எப்படி செம்மாந்து நிற்கிறோம் என்பது குறித்த, ஒரு விரிந்த ஆற்றொழுக்கான உரையைப் பேராசிரியர் வீ. அரசு வழங்கினார். விபுலானந்தர் நுண்கற்கைகள் துறையில் உரையாற்ற அவர் விரைந்த பிறகு, எனது உரை தொடர, தமிழ்ச்சித்தம் என்பது ஒரு சிந்தனை மரபாக, மருத்துவ மரபாக, பகுத்தறிவு மரபாக, அவைதீக மரபாக, தமிழ்ச்சூழலில் உருவாகி வளர்ந்ததும், அதற்கு மூல முன்னோடியாக தமிழ்ச் செவ்வியல் அமைந்ததும், ஐந்து பொறிகளால்தான் (பஞ்சபூதங்கள்) உலகம் தோன்றியது எனும் அறிவியல்பார்வை தொல்காப்பியத்தால் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சித்தமருத்துவத்தில் நாடிபிடித்து ஐந்து பொறிகளில் எதன் தாக்க மிகுதியால் நோய் உருவானது என, நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி நோய்தீர்க்கிற அறிவியல் மனப்பான்மை, கோள்களின் இயக்கம் குறித்த பார்வைகள், இயற்கை சார்ந்த நுட்பமான அவதானிப்புகள்... என்று பல நிலைகளில் சங்கத்தமிழர் வாழ்வியல் குறித்த உரையாக என்னுடைய உரை அமைந்தது.
இப்படி, தொடர்ச்சியான உரைகளுக்குப் பிறகு 29.3.2025 அன்று மலையக எழுத்தாளர் தவச்செல்வனின் ‘சிங்கமலை’ சிறுகதை நூல் வெளியீட்டு ஆய்வுரை நிகழ்த்தினோம். மலையகம் சார்ந்த வாழ்வியல் குறித்து தவச்செல்வன் எப்படி ஒரு முன்னோடி எழுத்தாளராக சிறந்த படைப்பாளியாக விளங்குகிறார்? அவருடைய எதார்த்தமான பார்வை, படைப்பு நுட்பம் இவை மிக லாவகமாக அமைந்த புலப்பாட்டுத்திறன் இவற்றின் ஊடாக அதைக் கடந்து அடுத்த நிலைக்கு வளர்வதற்கான தேடல்கள் இவை குறித்து எல்லாம் பேராசிரியர் வீ.அரசு அவர்களும் நானும் உரைகள் நிகழ்த்தினோம்.
மலையகத்துக்கு என்று தனியாக ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பதைக் கொழும்பு தமிழ்ச்சங்கம் போன்ற அமைப்புகள் முன்னெடுத்து அதைக் கொண்டுவரவேண்டும். மலையக இலக்கியங்கள், மலையகக் கலைகள், மலையகம் சார்ந்த பார்வைகளை இன்னும் கூர்மையாக ஈழத்தில் வாசிக்கப்படவும் வளர்க்கப் படவும் முன்னெடுப்புகள் முகிழ்க்கவேண்டும் என்பதான பார்வைகளை முன்வைத்து, பேராசிரியர் வீ.அரசு அவர்களும் மலையகப் பல்கலைக்கழகம் அமைக்கவேண்டும் என்கிற அவாவை வழிமொழிந்து என்னுடைய உரையும் அமைந்தது. அதோடுகூட தமிழ்நாட்டுத் தமிழ்ச்சூழலில் மறைமலை அடிகள் போன்றவர்கள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் போன்ற அமைப்புகள் ஈழத்திலும் தேவைப்படுகிற அளவுக்கு ஈழத்துத் தமிழில் அதீதமான அளவுக்கு வடமொழிப் புழக்கம் இருக்கிறது. ஈழத்தமிழ் வடமொழியிலும் மணிப்பிரவாளத்திலும் மூழ்கடிக்கப்பட்டுவிடுமா என்று ஐயுறும்படியான கலவைமொழிப் பயன்பாடு கவலை அளிக்கிறது. ஈழத்துப் புலமை மரபை மெச்சி அதன் மேன்மைகளைப் பயின்று வளர்ந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு அந்தக் கவலை இருப்பது நியாயமானது. எனவே, இதைக் களைவதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகர்கள், கலைஞர்கள், அரசியலாளர்கள், வணிகர்கள், வெகுமக்களுக்கான போதுமான புலமைத்துவமும் பயிற்சிகளும் கலைச்சொல்லாக்கத் தேவையும் இயன்றவரை நல்ல தமிழில் மொழிப் புழங்காற்றலை வளர்த்தெடுக்கவுமான பார்வைகளை முன்வைத்து என்னுடைய உரை அமைந்தது.
மிகுந்த உடலியல் நெருக்கடிகளோடு இரண்டு பேராசிரியர்களும் தமிழ்நாட்டிலிருந்து வந்து இந்த நற்பயன்களை வழங்கியமைக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நன்றிநவில, நிகழ்வுகள் ஒரு வழியாக நிறைவுற்றன. இந்தத் தேடல்கள்; இந்தப் பயணங்கள்; இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து ஈழத்தமிழ்ச் சமூகத்தைப் போர்ச்சூழலின் அதீதமான பாதிப்புகளில் இருந்தும் பேரிடர்களில் இருந்தும் காப்பாற்றி மீளவும் வாழ்வியல் சார்ந்த ஒரு இயல்பு நிலையைக் கொணர்ந்திங்கு சேர்க்கவேண்டும் என்கிற விழைவோடும் தமிழ்ப் புலமைத்துவச் செயற்பாடுகள் மேம்படவேண்டும் எனும் நம்பிக்கையோடும் விடைபெற, எங்கள் விமானம் புறப்பட்டது...
- தெ.வெற்றிச்செல்வன், பேராசிரியர், அயலகத் தமிழியல்துறை, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.