‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்றார் பாரதி. ‘தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்’ என்கிறார் பாரதிதாசன்.

‘அறிவு’ பொதுவுடைமையாக்கப்பட்ட பின்னர்தான் அனைத்தும் பொதுவுடைமையாக்கப்படும் சூழல் உருவாகிறது. இப்போது உலகெங்கும் இருக்கிற எதுவுமே குறிப்பிட்ட நாட்டினரோ, இனத்தினரோ, நிறத்தினரோ, மதத்தினரோ, மொழியினரோ கண்டுபிடித்ததல்ல. இப்போது ‘உலகமயமாக்கல்’ என்ற சொற்றொடர் அரசியல் உள்ளர்த்தத்தைக் கொண்டது. பொருளாதாரக் கொள்கை சார்ந்தது. சுரண்டலை உலகமயமாக்க உருவாக்கப்பட்ட சூத்திரம்.

இவற்றிற்கெல்லாம் முன்பு பல நூற்றாண்டுகளாக ‘மொழிபெயர்ப்பு’ தான் அறிவு உலகமயமாவதற்கு அடிப்படையாக இருந்துள்ளது. மொழிபெயர்ப்பே அறிவுப் பரவலின் அடித்தளம்.

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்ற பாரதியின் வைரவரிக்கு உயிரூட்டும் திட்டம்தான் சமீபத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி.

இதுவரை எத்தனையோ ஆளுமைகள் காலப்பெட்டகம் போன்ற பிறமொழி நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். அவர்களின் கட்டுக்கடங்காத அறிவுத் தாகத்தையும் மொழிச் சேவையையும் - சமூக உணர்வையும் எண்ணி எண்ணிப் பாராட்ட தமிழ்ச் சமூகம் கடமைப்பட்டுள்ளது. அதேபோன்று மொழிபெயர்ப்பிற்கென்று தனி இதழ்கள் நடத்தி வருபவர்கள், தனி அமைப்பையே நடத்தி வருபவர்கள் உள்ளனர். நாம் அறிந்த, நம்மோடு வாழ்ந்து கொண்டுள்ள பேராசிரியர் நா. தர்மராஜன், கவிஞர் புவியரசு போன்றோரின் பங்களிப்பு வியந்து பாராட்டத்தக்கதாகும். இது போன்று வாழ்ந்து மறைந்த, வாழ்ந்து கொண்டுள்ள தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் பலர் உள்ளனர்.

எழுபத்திமூன்றாண்டு காலப் பாரம்பரியம் மிக்க நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் எண்ணற்ற உலக அளவிலான நூல்களை தொடக்க காலத்திலிருந்தே தமிழில் மொழிபெயர்த்துப் பதிப்பித்துள்ளது. மேலும் பல தமிழ்ப் பதிப்பகங்களும் பிறமொழி நூல்களை தமிழாக்கம் செய்துள்ளன. இத்தகைய முயற்சிகள் தமிழ் மண்ணில் வலுவான தாக்கத்தை உருவாக்கியுள்ளது

இவற்றிற்கெல்லாம் அடுத்தகட்ட முயற்சியாக, இத்தகைய முயற்சிகளுக்கெல்லாம் சிகரம்வைத்தாற் போன்று எடுக்கப்படும் சீரிய முயற்சியாக அமைந்ததுதான் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி. புத்தகக் காட்சி, புத்தகக் கண்காட்சி, புத்தகச் சந்தை, புத்தகத் திருவிழா என்று பல பெயர்களில் இதுவரை தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சிகளுக்கும் சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சிகளில் புத்தகங்கள் நேரடியாக விற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசால் கடந்த இரண்டாண்டுகளாக நடத்தப்படும் சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி நேரடியாக வாசகர்களுக்கானது அல்ல. பல நாடுகளில் அந்தந்த மொழிகளில் வெளியாகும் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கவும், தமிழ் நூல்களை பிறமொழிகளில் மொழிபெயர்க்கவும் காப்புரிமைப் பரிமாற்றம் செய்வதும்தான் இப்புத்தகக் கண்காட்சியின் பிரதானப் பணி. இதில் பதிப்பாளர்கள், படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள இலக்கிய முகவர்கள் மட்டுமே பங்கேற்பர். இது அவர்களுக்கான நிகழ்வு.

சென்ற ஆண்டுதான் முதன்முறையாக சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. அப்போது சென்னையில் பபாசியால் நடத்தப்படும் புத்தகக் காட்சிக்கு அருகிலேயே இக்கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் இதற்கும் அணி அணியாக வந்தனர். அந்த அனுபவத்தில் இந்த ஆண்டு தனியாக நந்தம்பாக்கத்திலுள்ள உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி பல சிறப்பம்சங்களுடன் நடத்தப்பட்டது.

முன்னனுமதி பெற்றவர்கள் மட்டும் உள்ளே செல்லுமாறும் மாலை 4 மணிக்கு மேல் பார்வையிட விருப்பமுள்ள பொதுமக்கள் வந்து செல்லுமாறும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனவரி 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் இக்கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சி நடத்தப்படுவதற்கு முன்பு தமிழக அரசு சார்பில் நூலகத்துறை இயக்குனர் கே. இளம்பகவத் ஐஏஎஸ் தலைமையில் ஒரு குழுவினர் இதே கண்ணோட்டத்துடன் ஆண்டுதோறும் உலக அளவில் ஜெர்மனியில் நடைபெறும் ஃபிராங்பெர்ட் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று சென்னைக் கண்காட்சிக்கான அடிப்படை முன்னேற்பாடுகளைச் செய்துவந்ததோடு அக்கண்காட்சி அனுபவங்களையும் உள்வாங்கி வந்துள்ளனர். ஃபிராங்பெர்ட் கண்காட்சியே சென்னைக் கண்காட்சிக்கு முன்னோடி எனலாம்.

இக்கண்காட்சியில் காப்புரிமைப் பரிமாற்றம் செய்வது, அதற்கென படைப்பாளிகளின் பிரதி­நிதிகளாக வெளிநாட்டுப் பதிப்பாளர்களிடம் உரையாடுவது, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது போன்ற பணிகளை மேற்கொள்வதற்கென்று இலக்கிய முகவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். இதற்கென இதழ்களில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்ட வகையில் கல்லூரி மாணவர்கள் 500 பேருக்கும்மேல் இப்பணிக்கு விண்ணப்பித்திருந்தனர்.

மூன்று கட்டத் தேர்வுகள் நடத்தி இவர்களுள் 20 பேர் முகவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 21 நாள்கள் சிறப்புப் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தகைய பயிற்சி பெற்ற முகவர்களே இக்கண்காட்சியில் பரிவர்த்தனைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இம்முகவர்களுக்கு அரசு சன்மானம் அளிக்கப்பட்டதோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் பதிப்பாளர்களிடமிருந்தும் படைப்பாளிகளிடமிருந்தும் ஊதியம் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகவர் ஏற்பாடு பரவலாக பல படைப்பாளிகளின் நூல்கள் பிறமொழிகளுக்குச் சென்றடைவதற்கான முக்கியக் காரணமாக விளங்கியது. அவ்வாறே பிறமொழி நூல்களில் சில தமிழுக்கும் வந்தன.

பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு நூல்கள் அந்தந்த நாட்டுப் பதிப்பகங்களால் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்ட பிறகு அந்நூல்களைப் பதிப்பிக்க தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட அயல்மொழிப் பதிப்பகங்களுக்கு மானியத் தொகை வழங்குகிறது. தகுதிமிக்க தமிழ்மொழி நூல்கள் பிற உலக மொழிகளிலோ, பிற மாநில மொழிகளிலோ வெளிவருவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மானியம் உள்ளிட்ட பல ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மானியம் பெறத் தகுதிமிக்க பதிப்பகங்களைத் தேர்வு செய்யத் தனிக்குழுவும் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மானியத்தொகை கொடுப்பதற்கும் ஒரு பதிப்பகத்திற்கு இத்தனை நூல்களுக்கு என்றும், ஒரு படைப்பாளிக்கு இத்தனை நூல்களுக்கு என்றும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பரவலாக பல படைப்புகள் மொழிமாற்றம் பெறுவதற்கு இத்தகைய விதிமுறைகள் வழி வகுத்தன.

சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசு இதற்கென ஒதுக்கியிருந்த மானியத் தொகை ஒன்றரைக் கோடி ரூபாயாகும். இந்த ஆண்டு மூன்று கோடி ரூபாய். இந்த ஆண்டு மொத்தம் 752 நூல்கள் மொழியாக்கம் செய்வதற்கு இக்கண்காட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு சுமார் 250 நூல்களும், தமிழிலிருந்து பிறமொழிகளுக்கு 500 க்கும் மேற்பட்ட நூல்களும் தேர்வாகியுள்ளன.

உள்நாட்டில் பிற மாநிலங்களிலுள்ள மற்றமொழிப் பதிப்பகங்களும் வந்திருந்தன. இந்த ஆண்டு மொத்தம் 40 நாடுகளிலிருந்து பிறமொழிப் பதிப்பகங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றிருந்தன. கண்காட்சி ஏற்பாடும் அரங்குகள் அமைத்த விதமும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தன. ஒவ்வொரு அரங்கத்திலும் அமர்ந்து உரையாட இடங்கள், அந்நாட்டின்- அம்மொழியின் முக்கிய மாதிரி நூல்கள் பல, அந்நாட்டு நூல்கள் பற்றிய அட்டவணை என அனைத்தும் கச்சிதமாகவும் கவர்ச்சிகரமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அனைத்து அரங்குகளையும் நின்று நிதானித்துப் பார்வையிட்டோம். அயலகப் பதிப்பாளர்கள் பலரிடம் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றது. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், பதிப்பாளர் அகிலன் கண்ணன் உள்ளிட்ட நண்பர்கள் உடன் வந்து ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கினர். இளம் முகவர்கள் கோட்டணிந்து கொண்டு அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களின் பணிகளை அவர்களிடமே கேட்டறிந்தோம். நூலகத்துறை அலுவலர்களிடமும் உரையாடினோம். நூலக இயக்குனர் கே.இளம்பகவத் ஐஏஎஸ், பாடநூல் கழகத்தின் இணை இயக்குநர் சங்கரசரவணன் உள்ளிட்ட பல அரசு அலுவலர்களும் குழுவினர்களும் அங்கேயே முழு நேரமும் பணி செய்தனர்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இக்கண்காட்சியில் தனது அழுத்தமான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. இந்த ஆண்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் பத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நாகை கே. முருகேசன் சி.எஸ். சுப்பிரமணியம் இணைந்து எழுதிய ‘ம. சிங்காரவேலு - தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்ற சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாற்று நூல் மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படவும், பொன்னீலன் எழுதிய ‘கரிசல்’ நாவல் மலையாளம், மராத்தி, குஜராத்தி, அரபி, துருக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படவும், எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வி எழுதிய ‘அளம்’ நாவல் மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவும் ஒப்பந்தமாகியுள்ளது.

இவையல்லாமல் வைக்கம் முகம்மது பஷீர், ஸ்ரீ நாராயணகுரு ஆகியோர் பற்றிய நூல்கள் மலையாளத்திலிருந்து தமிழுக்கும், துருக்கிய இடதுசாரி எழுத்தாளரான ஒயா பைதர் எழுதிய ‘லாஸ்ட் வேர்ல்டு’ எனும் நூல் துருக்கிய மொழியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கப்பட ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.

சென்ற ஆண்டு இதே கண்காட்சியில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் ‘ம.சிங்காரவேலு - தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ நூலும் ஒன்று. அது மலையாளத்தில் மொழிமாற்றம் செய்ய ஒப்பந்தமாகியது. தமிழக அரசு இந்நூலுக்கு மொழிமாற்ற உதவித்தொகை வழங்கியுள்ளது. அந்நூல் தற்போது தயாரிப்பில் உள்ளது.

இக்கண்காட்சியில் திருக்குறள், சங்கத்தமிழ் நூல்கள் என தமிழ்ப்பதிப்பு அடையாளங்களாக விளங்கும் சில தனித்தன்மை வாய்ந்த இருபது, முப்பது நூல்களை மாதிரிக்காக அப்படியே பெரிதுபடுத்தி வரைந்து அந்நூல்களை அடுக்கி வைத்திருப்பதுபோல் ஒரு அலங்காரக் காட்சியை அமைத்துள்ளனர். அவற்றுள் தொ.மு.சி. ரகுநாதனின் ‘பாரதி காலமும் கருத்தும், ‘இலக்கிய விமர்சனம்’, ‘பாரதியும் ஷெல்லியும்’ ஆகிய நூல்களும் நா. வானமாமலையின் ‘தமிழ்நாட்டு நாட்டுப்புறப்பாடல்கள்' நூலும் இருந்தன.

உலக அளவிலான புத்தகக் கண்காட்சிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டை கௌரவப்படுத்தும் விதத்தில் ‘இந்த ஆண்டின் GUEST OF HONOUR’ என்று ஒரு நாட்டை அறிவிப்பது வழக்கம். அது போன்று ‘இந்த ஆண்டின் GUEST OF HONOUR’ நாடாக சென்னைக் கண்காட்சியில் மலேசியா அறிவிக்கப்பட்டிருந்தது. மலேசியாவிற்கும் தமிழகத்திற்குமான நீண்டகால நல்லுறவு, தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் நாடு, மலேசியாவில் செயல்பட்டுவரும் பன்மொழிப் பதிப்பகங்கள், தமிழ் நூல்களுக்கான முக்கிய அயலகச் சந்தை ஆகியவை இதற்குக் காரணங்களாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

இரு நாட்டு வாசகர்களுக்கிடையில் பரஸ்பரப் பண்பாட்டுப் பகிர்வுகளும், பன்முகப் பார்வையுடனான இலக்கியப் பரிமாற்றங்களும் செவ்வனே நடைபெற்றன. மலேசியாவிலிருந்து படைப்பாளிகளும் பதிப்பாளர்களும் வாசகர்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றிருந்தனர்.

‘தமிழிலிருந்து உலகிற்கு... உலகிலிருந்து தமிழிற்கு’ என்பதே இக்கண்காட்சியின் முழக்கமாக முன்வைக்கப்பட்டுருந்தது. இந்த முழக்கத்திற்கு ஏற்ற வகையில் மூன்று நாள்களும் அரங்கத்தில் பல்வகைப் பன்னாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்ப் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் சிறப்பு நிகழ்வு, ‘உலகிற்குத் தமிழை எடுத்துச் செல்லுதல்’ என்ற அமர்வுகளில் சிறப்பு வல்லுனர்கள்-பதிப்பாளர்கள், பல்வேறு நாடுகளின் கல்வியாளர்கள், அரசு உயர்மட்ட அலுவலர்கள் பங்கேற்றுக் கருத்துரை வழங்கும் நிகழ்வு, கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற மலேசிய நாட்டுப் பதிப்பு மற்றும் பண்பாட்டுச் சிறப்பு நிகழ்வுகள், மலேசியப் படைப்பாளிகளின் அறிமுக நிகழ்வு, ‘மொழிபெயர்ப்புப் பண்பாடு - உள்ளும் புறமும்’ என்ற தலைப்பிலான பண்பாட்டுக் கருத்தரங்கம், ‘தமிழ் மற்றும் குவலயம்... பரஸ்பரம் கற்றல்’ என்ற அமர்வின் பண்பாட்டு உரையரங்கம், ‘இந்தியா... பதிப்புப் பணிகளில் அடுத்த இலக்கு’ என்ற தலைப்பிலான உலகப் பதிப்பாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கம், ‘உலகைத் தமிழுக்குக் கொணர்தல்’ என்ற அமர்வுகளில் அறிஞர்களின் உரைகள், விருது வழங்கும் நிகழ்வு, நிறைவு நிகழ்ச்சி என்று மூன்று நாள்களிலும் தொடர்ந்து மைய அரங்கில் நடைபெற்ற பயன்மிகு நிகழ்வுகள் யாவும் ‘இது வெறும் கூடிக் கலைகிற கூட்டமல்ல’ என்பதற்கான சாட்சியங்களாக விளங்கின.

மொத்தத்தில் தமிழ்நாடு அரசின் இம்முன்னெடுப்பு காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் ‘மைல்கல் முயற்சி’ என்றால் அதில் மிகையில்லை. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இக்கண்காட்சி அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும். நகர வேண்டும்.

நாவல், சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களுக்கு இந்த ஆண்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே உலகெங்கிலுமுள்ள வரலாறு, அறிவியல், சமூகவியல் நூல்களுக்கும் அடுத்தடுத்த ஆண்டுகளில் சரிவிகித முக்கியத்துவம் அளிக்கப்பட்டால் மேலும் சிறப்புக் கூடும். கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெற்ற அனுபவங்கள், படிப்பினைகள், பயன்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் கண்காட்சியை அடுத்தடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும் விதத்தில் தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும்.

இத்தகைய ஆலோசனைகளைப் பெற்று சேர்ந்து சிந்திக்கும் நோக்கில் நூலகத்துறை சார்பில் இயக்குனர் தலைமையில் ஓர் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இக்கண்காட்சி அடுத்த தலைமுறையின் அறிவுத்துறை வளர்ச்சிக்கு வித்திடும் அரியதொரு முயற்சியாகும். ஒரு காலத்தில் இந்தியப் படைப்புகளென்றால் அது சமஸ்கிருத இலக்கியம்தான் என்று உலகம் நம்பிக் கொண்டிருந்தது. அதற்கு ஆங்கிலேயர் காலத்திலேயே அம்மொழி இலக்கியங்கள் ஏராளமானவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் செல்ல வழி வகுக்கப்பட்டதே காரணமாக இருந்தது. அந்த ஒளி வெள்ளத்தில் தமிழ் இருட்டடிக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பலரால் எடுக்கப்பட்ட பன்முக முயற்சிகளுக்குப் பின்னர் அந்த இருள் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது.

தமிழ்நாடு அரசின் சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி எதிர்காலத்தில் தமிழை உலகமயமாக்க அடித்தளமிடுகிற பெரு முயற்சிகளில் ஒன்றாக அமையும். அமைய வேண்டும்.

உலகெங்கிலுமுள்ள பேரறிவுப் பெட்டகங்களை தமிழில் கொண்டுவந்து தமிழ் மக்களின் அறிவுத்தளத்தை உயர்த்தப் பயன்படும் உன்னதத் திட்டங்களில் ஒன்றாக விளங்கும். விளங்க வேண்டும்.

‘தமிழிலிருந்து உலகிற்கு... உலகிலிருந்து தமிழுக்குஞ்’ இந்த முழக்கத்தை மனதளவில் விரிவுபடுத்திப் பார்த்தால் எத்தனையோ ஆண்டுகளாக இதயத்திற்குள் அடங்கிக்கிடக்கிற ஏக்கம் எதிர்கொள்ளப்படுவதாகவும் நிறைவேற்றப் படுவதாகவுமான நம்பிக்கை துளிர்க்கத் தொடங்குகிறது.

எவ்விதச் சார்புத்தன்மையுமின்றி மிகுந்த கவனத்தோடும் கவனிப்போடும் இதேபோன்று எதிர்காலத்தில் இம்முழக்கத்தை 'தமிழ் மொழியின் வளர்ச்சி' , 'தமிழர்களின் முன்னேற்றம்' என்ற அப்பழுக்கற்ற ஒற்றைச் சிந்தனையோடு உணர்வுப்பூர்வமாக நடைமுறைப் படுத்துவோமென்றால் அறிவுத்தளத்தில் தமிழர்கள் அடுத்த கட்டத்தை எட்டுவர் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

மொழிவளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய பலவித முயற்சிகளில் முக்கியமானது 'மொழிபெயர்ப்பு'. உலகின் தலைசிறந்த நூல்கள் அது எந்த மொழியில்... உலகின் எந்த மூலையில் வெளிவந்தாலும் அவற்றைத் தமிழாக்கி வாசிக்கத் தந்தால்... அத்தகைய நூல்களைத் தொடர்ந்து வாசிக்கும் தமிழர்களின் அறிவுத்தரம் தானாக உயரும். சிந்தனை வளரும்.

‘யாதும் ஊரே... யாவரும் கேளிர்' என்ற பண்பாட்டு முழக்கத்தை உரக்க எழுப்பும் தமிழர்களிடம் உலகிற்கு அளிக்க ஏராளம் உள்ளது. உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் பேரறிவுச் செல்வங்களைப் பெற்று தமிழ் மண்ணை அறிவுக்களமாக, சிந்தனைக் கூடமாக உருவாக்கும் கடமையும் நம் தலைமுறைக்கு உள்ளது.

- த.ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை நிறுவனர்.

Pin It