படித்துப் பாருங்களேன்...

Vijaya Ramaswamy - Textiles and weavers in Medieval South India. Oxford University Press, New Delhi

மனிதர்கள் கடந்தகாலத்தில் பயன்படுத்தி வந்த பொருட்களும், தற்போது பயன்படுத்திவரும் பொருட்களும் அவற்றின் பயன்பாட்டெல்லையைத் தாண்டி அச்சமூகத்தின் வரலாறு, பண்பாடு, பொருளியல் வரலாறு, தொழில்நுட்ப அறிவு ஆகியனவற்றையும் வெளிப்படுத்தி நிற்பன. பொரு ளுக்கும் பண்பாட்டுக்கும் இடையிலான உறவை, பொருள்சார் பண்பாடு (Material - Culture) ‘ ‘புழங்கு பொருள் பண்பாடு’ என்று சமூக மானிடவிய லாளர்களும், நாட்டார் வழக்காற்றியலரும் குறிப்பர். ஒரு சமூகத்தின் சமூக வரலாற்றில் பொருள்சார் பண்பாடு முக்கிய இடம் வகிக்கிறது. பொருள்சார் பண்பாட்டில் இடம்பெறும் ஒவ் வொரு பொருள் குறித்தும் விரிவான ஆய்வு அவசியமான ஒன்று. இவ்வகையில் விஜயா ராம சாமியின் இந்நூல் குறிப்பிடத்தக்கதாகும்.

Textiles-and-Weavers 400நூலாசிரியர் விஜயா ராமசாமி புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வர லாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த கார்கில் கல்லூரியில் வரலாற்றுத்துறையில் பணியாற்றி வருகிறார்.

கி.பி. பத்தாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. பதினேழாம் நூற்றாண்டு வரையிலான காலத்திய தென் இந்தியாவின் நெசவாளர், துணியுற்பத்தி, துணி வணிகம், நெசவாளர் சமூகத்துக்கும் அரசுக்கும் இடையிலான உறவு, துணி உற்பத்தி மையங்கள், துணி உற்பத்திக்கும் துணி வணிகத்திற்கும் இடை யிலான உறவு என்பனவற்றை இந்நூல் ஆராய் கிறது.

தமிழர் வரலாற்றில் துணி

‘அறுவை’ என்ற பெயரால் தமிழில் துணி குறிப்பிடப்பட்டுள்ளது. அழகர் மலையில் காணப் படும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக் காலத்திய தொல் தமிழ் (பிராமி) கல்வெட்டில் ‘அறுவை வணிகன்’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் துணி வணிகத்தின் தொன்மையை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. இளவேட்டனார் என்ற சங்க காலக் கவிஞர் ‘அறுவை வணிகர்’ என்ற அடை மொழியினால் குறிப்பிடப்பட்டுள்ளார்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தமிழகத்தி லேயே துணியானது இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிடும் ஆசிரியர், இதற்குச் சான்றாக வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள பையம்பள்ளி என்ற இடத்தில் கிட்டிய தொல்லியல் பொருட்களில் நூற்கும் கருவி இடம் பெற்றுள்ளதைக் குறிப்பிடு கிறார். ஆதிச்சநல்லூர் மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் நிகழ்ந்த தொல்லியல் ஆய்வுகளில் ஆடை தொடர்பான எச்சங்கள் கிட்டியுள்ளன.

சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களிலும் பருத்தி மற்றும் பட்டாடை நெசவு குறித்தும் காவிரிப்பூம் பட்டினம் வழியாக அவை ஏற்றுமதி செய்யப் பட்டது குறித்தும் செய்திகள் உள்ளன. நெச வாளர் வாழும் தெரு, அறுவை வணிகர் வீதி என்றழைக்கப்பட்டது.

மதுரை நகரில் கிடைத்த உயரிய ஆடைகள் குறித்து அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது. பாம்பின் சட்டை போன்றும், புகை போன்றும், பாலின் ஆவி போன்றும் மென்மையான ஆடைகள் உற்பத்தி யானது குறித்த செய்திகள் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. சித்திரவேலைப்பாட்டுடன் கூடிய ஆடைகள் குறித்த செய்தியும் இடம் பெற்றுள்ளது.

பருத்தியில் இருந்து அதன் கொட்டைகளை நீக்கி, பஞ்சு தயாரிக்க உதவும் கருவி குறித்து அகநானூறும், நற்றிணையும் விவரிக்கின்றன. துணிகளுக்கு வண்ணம் தோய்க்கும் தொழில் நுட்பமும் பண்டைத் தமிழகத்தில் இருந்துள்ளது. “நீலக் கச்சை” என்ற பெயரில் நீலநிற ஆடை புற நானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட பெரிய அளவிலான சாயத்தொட்டிகள் அரிக்கமேட்டிலும், உறையூரிலும், அகழ்வாய்வில் காணப்பட்டன. இவற்றின் காலம் கி.பி. முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டாக இருக் கலாம்.

அரசின் மெய்க்காப்பாளர்கள் சட்டையும் தலைப்பாகையும் அணிந்திருந்ததாகச் சிலப்பதி காரம் குறிப்பிடுகிறது. சட்டை என்பதை ‘மெய்ப்பை’ (மெய் = உடல்) என்றழைத்தனர். ஆடை தைப் போர் துன்னர், துன்னகாரர், துன்ன வினைஞர் என்றழைக்கப்பட்டதாகச் சிலப்பதிகாரமும் மணி மேகலையும் சுட்டுகின்றன. சிற்பங்கள், ஓவியங்கள், பண்டைய இலக்கியங்கள் ஆகியனவற்றில் இடம் பெறும் படைவீரர்கள், அரண்மனைப் பணி யாளர்கள், யானைப்பாகர்கள், பாடகர், நடன மாடுவோர் ஆகியோர் தைக்கப்பட்ட ஆடை களை அணிந்துள்ளனர்.

துணி, ஆடை தொடர்பான இத்தகைய பாரம் பரியத்தைத் தமிழகம் கொண்டிருந்த காலத்தில் பருத்தி குறித்து ஐரோப்பியர் எதுவும் அறிந்திருக்க வில்லை. கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹீராட்டட்டஸ் என்பவர் செம்மறியாட்டின் உரோமம் போல் ஒரு விலங்கின் உரோமம் என்று பருத்தியைக் குறிப்பிட்டுள்ளார். கிறித்து சகாப் தத்தின் தொடக்கத்தில் ரோம் நாட்டுடன் இந்தி யர்கள் துணி வணிகம் மேற்கொண்டிருந்தனர். மசூலிப்பட்டினத்தில் இருந்து ரோம் நாட்டிற்கு ஏற்றுமதியான சாயம் தோய்த்த துணியை மசுலியா என்ற பெயரால் அரியன் என்ற ரோம் நாட்டு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் துணிகள் அவற்றின் எடைக்கேற்ப தங்கத்தை விலையாகப் பெற்றன. ரோமின் வளத்தை இந்தியா வறளச் செய்வதாகப் பிளினி புலம்பியதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். தென் இந்தியாவில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளில் 1007 ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டதை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். இவ்வரலாற்றுப் பின் புலத்தில் தென்னிந்தியாவின் நெசவாளர்கள், துணி உற்பத்தி, துணி வணிகம் என்பன குறித்து இந்நூல் ஆராய்கிறது.

நெசவாளர் சமூகம்

தென்னிந்தியாவின் நெசவாளர் சமூகமானது துறைமுகங்களுடன் பெரும்பாலும் இணைந் திருந்தது. பிற்காலச் சோழர்காலத்தில் ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் சாலியர், கைக்கோளர் என்ற பெயரில் இரு நெசவுத் தொழில் சமூகங்கள் இருந்தன. இவற்றுள் சாலியர் சமூகமானது சோழிய சாலியர் என்றும் அழைக்கப்பட்டது.

செங்கல்பட்டு, தென் ஆற்காடு, திருநெல்வேலி மாவட்டங்களில் இவர்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வாழ்ந்துள்ளனர் (சாலியத் தெரு என்ற பெயரில் இவர்கள் வாழும் தெருக்கள் அழைக்கப்படுகின்றன). இம்மாவட்டங்கள் தவிர கோவை, வடஆற்காடு, தஞ்சாவூர் மாவட்டங் களிலும் இவர்கள் காணப்படுகின்றனர்.

சோழர் ஆட்சியின்போது, கைக்கோளர்கள் மன்னனின் மெய்க்காப்பாளர்களாக இருந் துள்ளனர். கைக்கோளப் பெரும்படை, கைக் கோள சேனாபதி என்று சோழர் காலக் கல் வெட்டுக்கள் இவர்களைக் குறிப்பிடுகின்றன. முதலாம் பராந்தகச் சோழன் காலத்திய கல் வெட்டுகளில் இடம்பெறும் சில படைவீரர்களும் அதிகாரிகளும் தம் பெயருக்குப் பின் கைக்கோளர் என்ற பின்னொட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளனர். ‘தெரிஞ்ச கைக்கோளர்’ என்றும் இவர்களை அழைத்துள்ளனர். பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான கல்வெட்டுக்களில் நெசவுத் தொழிலுடன் தொடர்புடையதாக இச் சமூகம் குறிப்பிடப்படவில்லை.

சுந்தரபாண்டியனின் பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் இவர்கள் மீதான தறிஇறை (நெசவுத் தொழிலுக்கான வரி) குறிப்பிடப்பட்டுள்ளது. இது தான் நெசவுத் தொழிலுடன் இச்சமூகத்தைத் தொடர்புபடுத்தும் பழமையான கல்வெட்டாகும். இதுபோன்ற வரியுடன் இவர்களைத் தொடர்பு படுத்தும் பதினான்காம் நூற்றாண்டுக் கல்வெட்டு சம்புவராயர் ஆட்சிக் காலத்தியதாகும். 12 ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் எழுதிய ‘ஈட்டி எழுபது’ என்ற இலக்கியத்தில் படைவீரர்களாகச் சாலியர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சோழர் ஆட்சியின் போது படைவீரர்களாக நெசவாளர்களும் இருந்துள்ளனர் என்று கருத இடமுள்ளது. கைக்கோள முதலி என்ற பெயரிலான இராணுவப் பதவியும் இருந்துள்ளது. போர் இல்லாத காலத்தில் நெசவாளர்களாகவும் போர்க் காலங்களில் படைவீரர்களாகவும் இவர்கள் இருந் திருக்கலாம். மன்னனின் படைவீரர்களாகப் பணி யாற்றியவர்கள் மட்டும் நெசவுத் தொழிலைத் தவிர்த்தவர்களாய் இருக்கலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகரம் நிகண்டு, செங்குந்தர், படையர், சேனைத் தலைவர், கைக்கோளர் என இச்சாதியைக் குறிப் பிடுகிறது. மூன்றாம் ராஜராஜனின் படை கலைக்கப் பட்டதையும். விசயநகரப் பேரரசு உருவானதையும் அடுத்து கைக்கோளர்கள் நெசவுத் தொழிலை முழுமையாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். கைக்கோளத்தெரு என்ற பெயரில் இவர்களின் குடியிருப்புகள் அழைக்கப்படலாயின.

துணி வகைகள்

புடவை, உத்திரியம், வேட்டி, கூறைப்புடவை, நீராவடிப்புடவை, பூவாடைப்புடவை, பருத்திப் புடவை எனப் பல்வேறு வகைத் துணிகளைக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்ரமசோழன் கல் வெட்டு, பச்சைப்பட்டு, புலியூர்ப்பட்டு, பட்ட வலப்பட்டு எனப் பட்டுவகைகளைக் குறிப்பிடு கிறது. இவற்றை உடுத்துவது என்பது சிறப்புக் குரியதாக இருந்தது. இவற்றை அணியும் உரிமையை இடையர்களுக்கு வழங்கியதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தைத்தல்

துணிகளை, ஆடைகளாக வடிவமைக்கும் தையற்கலைஞர்களும் இருந்துள்ளனர். கஞ்சுகம் என்ற பெயரிலான ஆடை, தைக்கப்பட்ட ஆடையைக் குறிப்பிடுகிறது. துன்னகர், துன்னகாரர் என்று தையற்கலைஞர்கள் அழைக்கப்பட்டனர். முதலாம் ராஜராஜனின் பத்தாவது நூற்றாண்டுக் கல்வெட்டு ‘தையன்’ என்று தையற்காரரைக் குறிப்பிடுகிறது. துணியை வெட்டுபவர் ‘துன்னன்’ என்று பெயர் பெற்றுள்ளார்.

சாயமேற்றல்

சோறு வடித்த கஞ்சித் தண்ணீரைப் பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்குப் பசையாகப் போடு வதையும் நறுமணப் புகையூட்டுவதையும் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் சாயங்கள் துணிகளுக்குத் தோய்க்கப்பட்டன. குசும்பா எனப்படும் சிவப்பு நிற மலரிலிருந்து சிவப்பு நிறச்சாயம் தயாரிக்கப்பட்டது. தொடக்கத்தில் துணி தயாரிப்புடன் இணைந்திருந்த சாயமேற்றல் பின்னர் தனித்ததொரு தொழிலாக உருவெடுத்தது.

சிவப்பூட்டியோர் என்றழைக்கப்பட்ட சாய மேற்றுவோர் மீது வரி விதிக்கப்பட்ட செய்தியை 1223 ஆம் ஆண்டு திருவொற்றியூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

துணிகளில் அச்சுப்பதித்தல்

துணிகளில் உருவங்கள் அல்லது ஓவியங்கள் பதிக்கும் தொழில்நுட்பமும் வழக்கில் இருந்துள்ளது. கி.பி. 1001ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழர் காலக் கல்வெட்டில் அச்சுத்தறி என்ற சொல்லாட்சி இடம்பெற்றுள்ளது. இதில் அச்சு என்பது அச்சிட லையும் தறி என்பது துணியையும் குறிக்கிறது.

துணி வணிகமும் வரி விதிப்பும்

அறுவை வணிகர், சீலைச் செட்டி, கூறை வணிகர் என்ற பெயர்களில் துணி வணிகர்கள் அழைக்கப்பட்டனர். சீர்காழி, அறந்தாங்கி, கும்ப கோணம், திருப்பத்தூர், சிவகங்கை ஆகியன துணி நெசவுடன் தொடர்புடைய இடங்களாக விளங்கின.

கொற்கை, காவிரிப்பூம்பட்டினம், மாமல்ல புரம், மயிலாப்பூர் துறைமுகங்கள் வாயிலாகத் துணிகள் ஏற்றுமதியாயின. இவற்றிற்குச் சுங்கவரி விதிக்கப்பட்டது. முதலாம் குலோத்துங்க சோழன் சுங்க வரிகளை நீக்கியதால் சுங்கம் தவிர்த்த சோழன் என்ற பெயர் பெற்றான். அவனது இச்செயலை ஒட்டக்கூத்தர் புகழ்ந்துரைத்துள்ளார்.

பருத்திப் பொதிகளுக்கும், புடவைக் கட்டு களுக்கும் வரி விதிக்கப்பட்டதைத் திருக்கழுக்குன்றம் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்தியாவின் தட்ப வெப்ப நிலையின் காரணமாக உள்நாட்டுத் துணி வணிகத்தைவிட வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் துணி வணிகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. துணி வணிகமானது வாணிகக் குழுக்களா லேயே பெரும்பாலும் நிகழ்ந்தது. பல்லவர்களின் கூரம் செப்பேட்டில் குறிப்பிடப்படும் தறிகள் கிராமத்தின் பொதுச் சொத்து என்று அப்பாத் துரை குறிப்பிடுகிறார். இக்கருத்தில் நூலாசிரியைக்கு உடன்பாடில்லை.

நெசவாளரின் அடிப்படைத் தொழில் கருவி யான தறி வரி விதிப்புக்குள்ளானது. ‘தறி இறை’, ‘தறிக்கடமை’ என்ற பெயர்களில் இது அழைக்கப் பட்டது. இவை தவிர ‘அச்சுத்தறி’, ‘தறிப் புடவை’ என்ற பெயர்களிலும் துணிகள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜடாவர்மன் ஸ்ரீ வல்ல பனின் 1129 ஆம் ஆண்டுக் கல்வெட்டு தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம் என்ற ஊரில் இருந்த 24 தறிகளுக்குத் தறி ஒன்றுக்குப் பத்து பணம் என்ற விகிதத்தில் ஆண்டொன்றுக்கு வரி வாங்கப் பட்டதைக் குறிப்பிடுகிறது. கோவில்களுக்கு இவ்வரியைக் கொடையாக வழங்கும் வழக்கமும் மன்னர்களிடம் இருந்துள்ளது.

நெசவாளர் மீதான வரி விதிப்பென்பது ஆண்டுக்கொரு முறையாக இருந்தது. முன்னர் குறிப்பிட்ட ‘தறி இறை’ ‘தறிக்கடமை’ என்பன தவிர தொழில் வரியும் நெசவாளர் மீது விதிக்கப் பட்டது. நெசவு செய்பவரின் சாதியின் பெயரில் ‘கைக்கோளக் கடமை’, ‘சேனியதறி’, ‘சாலிய தறி’ என்ற வரிகளையும் ‘நூலாயம்’ (நூலுக்கான வரி), பட்டாடை நூலாயம் என்ற வரிகளையும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ‘வாசல்வரி’ என்ற பெயரில் வீட்டு வரியும் வாங்கப்பட்டது.

வரி விதிப்புக் கூடினால் தம் சமூக அமைப்பு வாயிலாகத் தம் எதிர்ப்பைத் தெரிவித்து வரிக் குறைப்பைப் பெற்றுள்ளனர். தம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வேலை நிறுத்தமும் செய்துள்ளனர். சில நேரங்களில் சில வரிகளில் இருந்து நெச வாளர்களுக்கு விலக்களித்தலும் நிகழ்ந்துள்ளது. திருக்கழுக்குன்றம் கைக்கோளர்களுக்கு விலக் களிக்கப்பட்ட வரிகளின் பெயர்கள் கல்வெட் டொன்றில் இடம் பெற்றுள்ளன.

வரி விதிப்பு அதிகரிக்கும் போது தம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழிமுறையாக நெசவாளர்கள் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர். இது எதிர்க் குரலின் ஒரு வடிவமாக அமைந்தது. இதன்மூலம் வரிக் குறைப்பைப் பெற்றுள்ளனர்.

நில உரிமை

விளைநிலங்களுக்கு உரிமையாளராக இருப்ப தென்பது மத்திய காலத் தமிழ்ச்சமூகத்தில் மிக உயரிய தகுதியடையாளமாக இருந்தது. மத்திய காலத் தமிழகத்தின் நெசவாளர்கள் இவ்வுயரிய தகுதியுடையவர்களாக விளங்கியுள்ளனர். பிற் காலச் சோழர் ஆட்சியின் போதும் விசயநகர ஆட்சியின் போதும் நிலக்கொடையானது முக்கியத் துவம் உடையதாகயிருந்தது. தம் தேவைக்கு மேல் நிலம் உடையோர் அல்லது வேறு வகையிலான பொருள்வளம் படைத்தோரே நிலக்கொடை வழங்கும் உயரிய நிலையினராக இருந்தனர்..

விளைநிலங்கள் மீதான அதிகாரம் உடை யோராக நெசவாளர் விளங்கியமைக்குக் கல் வெட்டுச் சான்றுகள் உள்ளன. இவை நெசவாளர் வழங்கிய நிலக்கொடையைக் குறிப்பனவாகும். சுந்தரநயினார் கோவில் கைக்கோளர் ஒருவர் 10 மா அளவுள்ள நிலத்தை நெசவாளர் ஒருவர் கொடை யாக வழங்கியதை ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஆலூர் (திருச்சிராப்பள்ளி) பகுதி கல்வெட்டு குறிப்பிடு கிறது.

தென்ஆற்காடு மாவட்டத்தின் உடையார் குடியில் உள்ள திருமுள்ளூருடைய நாயனார் கோவிலில் ஸ்ரீபலி பூசையின்போது இசைபாட அரைவேலி, ஒரு மா அளவுள்ள நிலத்தைக் கொடை யாக வழங்கியுள்ளார். இதுபோன்ற நிலக்கொடை களைக் குறித்த கல்வெட்டுக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. இவை தனிப்பட்ட முறையிலோ கூட்டாகவோ வழங்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் ஒரு கிராமம் முழுவதையுமே கோவிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளனர். சில நேரங்களில் நிலமாக அன்றி நெல்லாகவும் தோப்புக்களாகவும் வழங்கியுள்ளனர்.

நிலங்களின் உரிமையாளர்களாக நெசவாளர்கள் குறிப்பாகக் கைக்கோளர்கள் விளங்கியதை இச் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. கிராமத் தலை வனுக்கும், நில உடைமையாளர்களுக்கும் உரிய கிழான் என்ற பட்டம் தாங்கியவர்களாகக் கைக் கோளர் சிலர் கல்வெட்டுக்களில் குறிப்பிடப் பட்டுள்ளனர்.

நிலங்களைக் கொடையாகக் கைக்கோளர் வழங்கிய செய்தியை மட்டுமின்றித் தனிப்பட்டவர்களிடமிருந்தும் கோவிலில் இருந்தும் நிலங்களை விலைக்கு வாங்கியதையும் சில கல்வெட்டுக்கள் வாயிலாக அறிய முடிகிறது. சிறு பாசனக் குளங் களைச் சொந்த செலவில் வெட்டி அதைக் கொடை யாக வழங்கியுள்ளனர். தரிசு நிலங்களை விலைக்கு வாங்கி அவற்றைத் திருத்தி விளைநிலங்களாக்கியு முள்ளனர். ‘குடிகாணி’ என்ற பெயரிலான பயிரிடும் உரிமையை நெசவாளர்கள் பெற்றிருந்தனர். தங்களது உபரி வருவாயை நிலங்களில் மட்டுமின்றி வட்டிக்கும் கொடுத்துள்ளனர். பொருள் வளத்தின் அடையாளமாக விளங்கிய கால்நடைகளின் உரிமையாளர்களாகவும் இவர்கள் இருந்துள்ளனர்.

கோவிலுக்கு வழங்கிய கொடை

மத்திய காலத் தமிழகத்தில் நெசவாளர்கள் தனித்தனியாகவோ, கூட்டமாகவோ கோவிலுக்குக் கொடை வழங்கியுள்ளனர். அக்கொடைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

1) கோவில்களில் நந்தாவிளக்கு (அணையா விளக்கு) ஏற்றவும், அமுது படைக்கவும் (பிரசாதம் வழங்க) பணவடிவிலான கொடை.
2) நந்தா விளக்கேற்றத் தேவையான நெய் பெறுவதற்காக ஆடுகளை வழங்கல்.
3) ‘திருநாமத்துக்காணி’, ‘தேவதானம்’ என்ற பெயர்களில் நிலங்களைக் கொடை யாக வழங்கல்
4) தெய்வங்களை நிலை நிறுத்தவும் திரு விழா நடத்தவும் கொடை வழங்கல்
5) துணி விற்பனையில் கிட்டும் ஆதாயத்தில் ஒரு பங்கையோ நெல்லையோ வழங்கல்.
6) உயிர்த்தியாகம் செய்தோரைப் போற்றும் வகையில் உதிரப்பட்டி (இரத்த காணிக்கை) ஆகப் பணம் வழங்கல்

சமூக உயர்நிலை

இவ்வாறு நில உரிமையும் பொருள் வளமும் கொண்டிருந்த நெசவாளர்கள் சமூக உயர் மதிப்பைப் பெற்றிருந்தனர். முக்கிய நிகழ்வுகளில் சங்கு முழக்கும் உரிமையும் பல்லக்கில் உலா வருவதும் கொடி பிடித்தலும் இக்காலத்தில் உயர் மதிப்பீட்டின் குறியீடுகளாயிருந்தன. இம்மூன்று உரிமைகளையும் நெசவாளர்கள் பெற்றிருந்தனர். வீடுகளுக்கு வெள்ளையடிக்கவும் இரண்டடுக்கு மாடி கட்டவும், இலச்சினைகள் தாங்கவும் சில வகையான ஆடைகளை அணியவும் உரிமை பெற்று உள்ளனர்.

சோழர் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த சாலியர்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டு அந்த இடத்தைக் கைக்கோளர் பெற்றனர். பொருளியல் நிலையில் விசயநகர ஆட்சியின்போது உயர்நிலையில் இருந்தாலும் சடங்கியல் நிலையில் தாழ்ந்தவர்களாக நெச வாளர்கள் இருந்துள்ளது குறித்தும் சில கல் வெட்டுச் சான்றுகள் உள்ளன.

கோவில் பணமானது நெசவாளர்களிடம் வைப்பு நிதியாக வைக்கப்படும் வழக்கம் இருந் துள்ளது. கோவில் கணக்குகளை எழுதும்பணி சில ஊர்களில் நெசவாளர்களிடம் வழங்கப்பட்டு இருந்தது. தங்களுக்குள் முறை வைத்துக் கொண்டு இப்பணியை அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என்று கருதப்பட்டதன் அடையாளமாக இவற்றைக் கருதலாம். இப்பணி களுக்காக நெசவாளர்கள் வரி விலக்குப் பெற்று இருந்தனர். தமக்காகத் தனிக் குடியிருப்புக்களைக் கட்டிக்கொள்ள சிதம்பரம் சாலியர்களுக்கு நாலு வேலி ஆறுமா அளவு நிலம் வழங்கப்பட்டது. இதற்குக் கைமாறாக ஆண்டு தோறும் சிதம்பரம் கோவில் திரு உருவங்களுக்கு ஆடை வழங்கி வந்தனர்.

இடங்கை வலங்கை என்ற பெயர்களில் பிராமணர் அல்லாத தமிழகச் சாதிகள் இரு பெரும் பிரிவுகளாக இருந்தபோது கைக்கோளர் இடங்கைப்பிரிவிலும், சாலியர்கள் வலங்கைப் பிரிவிலும் இடம் பெற்றிருந்தனர்.

நெசவாளர் சமூகத்தின் சிதைவு

தமக்கென்று தறிகளை உரிமையாகக் கொண் டிருந்த நெசவாளர்கள் அதன் வாயிலாகத் தாம் உற்பத்தி செய்த துணிகளைத் தாமே விற்று வந்தனர். இது படிப்படியாக வளர்ச்சியுற்று, நெச வாளர்களிடமிருந்து துணி வாங்கும் வணிகர்கள் உருவாயினர். அத்துடன் ஒரே நெசவுத் தலத்தில் பல தறிகள் செயல்படலாயின. பத்து தறிகள் இவ்வாறு செயல்பட்டால் ஒரு தறிக்கு வரிவிலக்கு தந்த செய்தியைக் கல்வெட்டொன்று குறிப்பிடு கிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான தறி களுக்கு உரிமையாளர்கள் உருவானதை அறிய முடிகிறது.

ஒரு சிலரின் பிடியில் பல தறிகள் இயங்கத் தொடங்கின. 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலக் காலனியாட்சி உருப்பெற்றபோது நெசவாளர்களைச் சுரண்ட உதவும் பணியை ‘மேலுரிமை நெசவாளர்’ (மாஸ்டர் வீவர்கள்) என்போர் மேற்கொண்டனர். பிரிட்டிஷாரின் துணிகள் இறக்குமதி இவர்களையும் பாதித்த போது சிறு நெசவாளர்களுடன் இவர்கள் இணைந்து கொண்டனர்.

இதே காலத்தில் இடைத்தரகர்களின் தாக்கமும் நெசவுத் தொழிலில் ஏற்படலாயிற்று. துணி உற்பத்தி யாளனான நெசவாளி, துணிவாங்கும் குடிமகன் என்ற இருவருக்கும் இடையிலான நேரடி உறவில் மாற்றம் ஏற்படலாயிற்று. பதினேழாம் நூற்றாண்டில் நாகப்பட்டினம், தரங்கம்பாடி, திருமுல்லைவாசல், பரங்கிப்பேட்டை, காஞ்சிபுரம், மதுராந்தகம் ஆகியன நெசவு மையங்களாக விளங்கின. இவை பழவேற்காட்டில் செயல்பட்ட டச்சு தொழிற் கூடத்துடன் தொடர்புகொண்டிருந்தன. ஆங்கிலக் காலனியத்தின்போது வட்டார அளவில் சாதாரண பருத்தி ஆடைகள் புழக்கத்தில் இருந்தாலும் இங்கி லாந்தின் உயரிய துணிகளையே உள்ளுர்ப் பிரபுக்கள் விரும்பி வாங்கினர்.

ஆங்கில ஆட்சியின்போது உருவான நகரங் களில் நெசவாளர்கள், வண்ணார்கள், சாயம் தோய்ப்போர் ஆகியோர் குடியமர்த்தப்பட்டனர். தாம் நெய்த துணிகளை நெசவாளர்கள், துணி வணிகர்களுக்கு விற்கலாயினர். நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்கும் இடையில் வணிகர்கள் நுழைந்தனர். இப்போக்கைத்தான் ‘வாணிபம் வாயிலான சுரண்டல்’ என்று மார்க்ஸ் குறிப் பிட்டார்.

நெய்யும் தொழிலில் இருந்து விலகி நின்று துணி வணிகத்தில் ஈடுபட்டோரைச் செட்டி என்று பின்னொட்டுடன் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம் பெனியின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. மேலுரிமை நெசவாளர் (மாஸ்டர் வீவர்) என்போர் நெசவாளர் களிடம் புதிய வர்க்கமாக உருவாயினர். மேலுரிமை நெசவாளர்கள் இருவகைப்படுவர். முதல் வகை யினர் ஒரே கூரையின் கீழ் தறிகளை நிறுவி அவற்றில் பணி புரிவோருக்கு ஊதியம் வழங்கி விட்டு நெய்யப்பட்ட துணிகளைத் தமது உடைமை யாக்கிக் கொண்டனர்.

இரண்டாம் வகையினர் நெசவு செய்வோருக்கு முன் பணம் கொடுத்து, அவர்களது உற்பத்தியை விலைக்கு வாங்கிக் கொண்டனர். இவ்விருவகையான மேலுரிமை நெசவாளர் அறிமுகமான பின்னர் தாம் நெய்த ஆடைகளைத் தாமே சந்தைப்படுத்தும் உரிமையை நெசவாளர்கள் இழந்தனர். அவர்களது தொழிற்கருவியான தறி மட்டுமே அவர்களது உடைமையாக விளங்கியது. அவர்களது உற்பத்திப் பொருளான துணி அவர் களுக்கு அந்நியமானது.

தாம் கொள்முதல் செய்த துணிகளை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மொத்தமாக விற்ற மேலுரிமை நெசவாளர்கள் தறி நெய்யும் நெசவாளர்களைவிட அதிக ஆதாய மடைந்தனர். சில பகுதிகளில் தறி மீதான உரிமையையும் இழந்து ஊதியம் பெறுவோராக மட்டுமே நெசவாளர்கள் மாறினர்.

நூலாசிரியரின் முடிவுரை

சோழப் பேரரசுக் காலத்திலும் விஜய நகரப் பேரரசுக் காலத்திலும் கோவில் வளாகத்தில் நெச வாளர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். ஆனாலும் கோவில் எல்லையைத் தாண்டி, தாம் வாழும் பகுதி, அயல்நாடு ஆகியனவற்றின் ஆடைத் தேவையைப் பூர்த்தி செய்து வந்துள்ளனர். விலை குறைந்த சாதாரண ரகத் துணி நெய்வோர் உள்ளுர்த் தேவையைப் பூர்த்தி செய்தனர். இவர்களுக்கான விற்பனைச் சந்தையாகத் திருவிழாக்கள் அமைந்தன. மற்றொரு பக்கம் உயர்ரகத் துணிகளை நெய்த நெசவாளர்கள், அரசவை, வெளிநாட்டுச் சந்தை ஆகியனவற்றை மையமாகக் கொண்டு இயங்கினர். சாதாரண துணி நெய்வோரைவிட இவர்கள் பொருளியல் நிலையில் உயர்ந்திருந்தனர்.

16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களும் இவர்களைத் தொடர்ந்து டச்சுநாட்டினரும் ஆங்கிலேயர்களும் தம் வாணிப நிறுவனங்களை இங்கு நிறுவினர். இந்நிறுவனங்கள் துணி ஏற்று மதியிலும் ஈடுபட்டன. இதன் தொடர்ச்சியாகக் கோவில் வளாக எல்லையைத் தாண்டி உருவான தொழிற்சாலைகள், ‘கருப்பர் நகர்’ ஆகியனவற்றைத் தளமாகக் கொண்டு இயங்கலாயின.

இவ்வெளி நாட்டு நிறுவனங்களுடன் துணி விற்பனைக்கான ஒப்பந்தத்தை யார் பெறுவது என்பதில் நெசவாளர் களுக்கிடையில் போட்டி உருவானது. இந்நிறுவனங் களின் வாணிப இடைத்தரகர்கள் மூலமாகப் பெறும் முன்பணமானது இவர்களது பேரம் பேசும் ஆற்றலைப் படிப்படியாகக் குறைத்தது. அவர்கள் விரும்பியதற்கேற்ப ஆடைகளை உருவாக்கியதால் தம் படைப்பாற்றலையும் படிப்படியாக இழந்தனர்.

பஞ்சங்களும் தானிய விலை உயர்வும் நெசவாளர்களின் சீரழிவுக்கும் இறப்புக்கும் காரணமாயின. இந்தியாவின் காலிகோ துணிகள் மீதான இங்கிலாந்து விதித்த தடையும் அங்கு நிகழ்ந்த பருத்திப் புரட்சியும் நம் நெசவாளர்களைக் கடுமையாகப் பாதித்தன.
* * *
இவ்வாறு பத்தாம் நூற்றாண்டு தொடங்கி பதினாறாம் நூற்றாண்டு வரையிலான தென் இந்தியாவில் செயல்பட்ட நெசவாளர்கள் குறித்த ஒரு சித்திரத்தை இந்நூல் நமக்கு வழங்குகிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு தொடர் பான செய்திகள் மட்டுமே இந்நூல் அறிமுகத்தில் இடம் பெற்றுள்ளன.

அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய தொழிற் கருவிகள் பற்றிய செய்திகள் ஒரளவுக்கு இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இடங்கை வலங்கைப் பிரிவு களுக்கு இடையிலான உறவுகள் முரண்பாடுகள் குறித்த செய்திகளும் நெசவாளர்கள் தம் சாதிய உயர்வை நிலைநாட்ட உருவாக்கிய புராணக் கதைகள் குறித்த செய்திகளும் இடம் பெற்று உள்ளன. சோழர் மற்றும் விசயநகர ஆட்சிக் காலத்திய கல்வெட்டுக்களை ஆசிரியர் நன்றாகப் பயன்படுத்தியுள்ளார். பிரெஞ்சுக் காலனியவாதிகள் மேற்கொண்ட துணி ஏற்றுமதி தொடர்பான செய்திகள் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட் குறிப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றையும் பயன் படுத்தியிருக்கலாம்.

இந்தியாவின் பிறபகுதிகளில் இருந்து பிற மொழி பேசும் நெசவாளர்கள் தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து நிலைபெற்ற வரலாறும் உண்டு. மேலும் கைக்கோளர், சாலியர், பட்டு நூல்காரர் மட்டுமின்றி பூர்வீகக் குடிகளான வாதிரியார் (கோலியர்) என்ற நெசவாளர் சமூகம் குறித்த பதிவும் அவசியமான ஒன்று. அட்டவணைச் சாதி யினர் பட்டியலில் இடம்பெற்று இன்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள இச்சமூகம் தனது பூர்வீகத் தொழிலாக நெசவுத் தொழிலையே மேற் கொண்டிருந்தது.

ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் வருகை யால் பாதிக்கப்பட்ட இச்சமூகம் தன் பாரம் பரியமான நெசவுத் தொழிலைப் படிப்படியாக இழந்தது. ஆனால் இன்றும் கூட ஆங்காங்கே வாதிரியார்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு உள்ளார்கள். தெலுங்கு, கன்னடம், சௌராஷ்டிரம் ஆகிய மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டு நெசவாளர்களுக்கு, ஆய்வாளர் களால் தரப்படும் இடம் பூர்வீகக்குடிகளான இவர்களுக்கு மறுக்கப்படுவதற்கான காரணம் ஆய்வுக்குரியது.

* * *
(இந்நூலைப் படிக்க வழங்கிய நண்பர் திரு. ரெங்கையா முருகனுக்கும் (MIDS : சென்னை) மாஸ்டர் வீவர் குறித்து விளக்கமளித்த தோழர் எஸ். எஸ். காசிவிஸ்வநாதனுக்கும் (A.I.T.U.C) கணினிப் படியை உருவாக்கிய முனைவர் நா.இராமச்சந்திரனுக்கும் (F.R.R.C) (பாளையங் கோட்டை) என் நன்றி உரியது)

Pin It