• எனது தந்தையார் நான் 7ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது சென்னை தியாகராய நகரில் இப்போது ஜி.ஆர்.டி நகைக்கடை உள்ள உஸ்மான் சாலைக்கு உள்ள சர்மாஜி என்று நண்பர்களால் அழைக்கப்படும் வெ.சாமிநாதசர்மா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
  • saminatha sharmaஅது ஒரு சிறுகுடில். குடிலைச்சுற்றி 5-6 சிறிய மாமரங்கள். சாமிநாத சர்மா, சிறிது குள்ளமானவர். சிவந்த மேனி, பளபளக்கும் மொட்டைத் தலை, வெள்ளை வெளேரென்று கதர் வேஷ்டியும் கதர் ஜிப்பாவும் அணிந்திருந்தார். இப்புகழ் பெற்ற எழுத்தாளர் சர்மாஜியின் வீட்டின் அருகிலுள்ள நூல் வெளியீட்டாளர் சின்ன அண்ணாமலையை, வீட்டில் இராஜாஜி சந்தித்த பிறகு, சில சமயம் உணவை உண்டபிறகு நடந்து சென்று சர்மாஜியுடன் அளவளாவுவது வழக்கம் என்று தியாகி சின்ன அண்ணாமலை தனது நூலில் குறிப்பிடுகிறார்.
  • சர்மாஜியின் பெயருக்கு முன் இருக்கும் வெ.வெங்களத்தூர் என்ற ஊர், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் உள்ள சிற்றூர். அங்குதான் இவர் 17.9.1895இல் பிறந்தார். தன் வரலாற்று நூலை எழுதாத இவர் இருபதுக்கும் மேற்பட்ட மற்றவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவருடைய தந்தை பெயர் முத்துசுவாமி ஐயர், தாயார் பெயர் பார்வதி. நாகேசுவர சர்மா, சாமிநாத சர்மா, துரைசாமி சர்மா என்று மூன்று விதப் பெயர்கள் இவருக்குச் சூட்டப்பட்டாலும் சாமிநாத சர்மா என்ற பெயரே நிலை பெற்றது. இவருடன் ஒரு சகோதரி, ஒரு தம்பி பிறந்தாலும் இருவரும் இறந்து விட்டார்கள். இவருடைய கல்வித் தகுதி உயர் நிலைப்பள்ளிக் கல்வியோடு முடிவுற்றது. 'உண்மையில் பள்ளிக் கூடத்தை விட்ட பிறகுதான் என் படிப்பு ஆரம்பமாயிற்று' என்று சாமிநாத சர்மா தமது கல்வி வளர்ச்சியைப் பற்றிக் கூறுவதுண்டு.
  • சாமிநாத சர்மா ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பாட்டானாரும், தந்தையும் பன்மொழிப் புலமை பெற்றவர்கள். இந்த சூழலே சர்மாவை இளமையிலேயே எழுதத் தூண்டியது. பதினேழாவது வயதிலேயே முதன் முதலில், "இந்து நேசன்", என்னும் இலக்கிய இதழில் எழுதினார். கட்டுரை எழுதும் முயற்சியில் முன்னேறிய சாமிநாத சர்மா, நூல் எழுதும் முயற்சியிலும் துணிவு பிறந்து, அது நாடகம் எழுதும் முயற்சியாக மலர்ந்து, 1921இல் 'ஹேமாங்கி' எனும் ஆங்கில நாடகத்தை எழுதினார். ஆனால் இது வெளிவரவில்லை எனினும், மனம் தளர்ச்சியுராது தமிழில், 'பாணபுரத்து வீரன்' எனும் நாடக நூலை 1923இல் விடுதலை இயக்க பிரச்சாரத்திற்காக எழுதி அது டி.கே.எஸ். பிரதர்ஸ் நாடகக் குழுவினரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • சாமிநாத சர்மாவின் 'கௌரிமணி' எனும் முதல் நூல் 1914இல் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளிவந்த ஆண்டிலேயே சாமிநாத சர்மா 14 வயதான மங்களம் என்னும் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பெற்றெடுத்த குழந்தைகள் நூல்கள்தான்.
  • சாமிநாத சர்மாவின் எழுத்துலகில் ஒரு திருப்பம் 1914இல் ஏற்பட்டது. 1917இல் திரு.வி. கல்யாணசுந்தரம் முதலியாரை ஆசிரியராகக் கொண்ட தேசபக்தன் என்னும் அக்கால தலை சிறந்த தமிழ் நாளிதழில் துணை ஆசிரியராக இணைந்து பணியாற்றினார். அப்போது சர்மாவின் தமிழ் நடையில் தேசிய நோக்கில் புதிய பரிமாணங்கள் வளர்ச்சியுற்றன. பிறகு திரு.வி.க. அவ்விதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகி நவசக்தி என்னும் தமிழ் வார இதழை 1920இல் தொடங்கியதும் அதிலும் சாமிநாத சர்மா துணையாசிரியாரானார். இவர் தமிழ்த் தென்றலின் தம்பி என்று போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடன் உறவு பிணைப்போடு பணியாற்றினார்.இந்நிலையில் சர்மாஜி சுதந்திரமான எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தார். மூன்று ஆண்டுகள் தேசபக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும் பணியாற்றியபின் இரண்டாண்டுகள் ஆந்திரகேசரி டி.பிரகாசம் நடத்திய சுயராஜ்யா தமிழ் நாளேட்டிலும் 1924-1926 வரை உதவியாசிரியராகப் பணியாற்றினார். பிறகு இதழியல் துறையில் இருந்து விலகி 1926-27ஆம் ஆண்டுகளில் மைசூரில் வேலை பார்த்தபின் அடையாறு பிரம்மஞான சபை நூல் வெளியீட்டுத்துறையில் பணிபுரிந்தார்.
  • அதன் பிறகு பர்மா (மியான்மார்)விற்கு (1932) சென்று பன் மொழி அறிந்த மனைவியுடன் 10 ஆண்டு காலம் வாழ்ந்தார். அங்கு "பாரதபந்தர்" என்னும் சுதேசிப் பொருட்கள், கதர், நூல்கள் முதலியவைகளை விற்கும் கடையை நடத்தினார்.
  • இரங்கூனில் 1936இல் அரு. சொக்கலிங்கம் செட்டியார் சர்மாஜியின் நூல்களை மட்டும் வெளியிடும் பிரபஞ்ச ஜோதி எனும் பதிப்பகத்தை நிறுவினார். இரங்கூனில்தான் சாமிநாத சர்மாவிற்குப் பெரும் புகழை அளித்து ஆசிரியப்பீடத்தில் அமர்த்திய 'ஜோதி' என்னும் தமிழ் மாத இதழ் 1927 முதல் 1942 வரையில் வெளிவந்தது.
  • இவ்விதழில், 'விபரீத ஆசை' முதலான புதுமைப் பித்தன் கதைகள் வெளிவந்தது. இலட்சியப் பிடிப்போடு ஒருமுன் மாதிரி இதழாக விளங்கிய ஜோதியில், வருணன், சரித்திரக்காரன், தேவதேவன். வ.பார்த்தசாரதி முதலான பல பெயர்களில் பல துறைகள் தொட்டு சர்மாஜி எழுதினார். இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் 'ஜோதி' அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் போர்க் காலத்தில் மனைவியுடன் பர்மாவிலிருந்து கல்கத்தாவரை மேற்கொண்ட நடைப்பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழைக்குப் பயந்து, பாதுகாப்புக் குழியில் முடங்க வேண்டிய தருணத்திலும் தமிழ்ப்பணியை மறக்கவில்லை. தான் ஆரம்பித்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆக வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அப்படி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழி பெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான், 'பிளாட்டோவின் அரசியல்’, என்ற உலகம் போற்றும் நூல். உயிருக்கு உத்திரவாதமில்லா இந் நடைப்பயணத்தைக் குறித்து "பர்மா வழி நடைப்பயணம்" எனும் நால் 1980இல் வெளிவந்தது. இதில் புலம் பெயர்வுச் சோதனைகளையும் அவர் அடைந்த துன்பங்களையும் அறியமுடிகிறது. சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே மட்டும் இரங்கூனில் அரு. சொக்கலிங்கம் செட்டியாரால் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது.
  • கல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பியதும் சக்தி வை.கோவிந்தனின் அரிய தமிழ் மாத இதழாக நடத்திவந்த சக்தியில் சாமிநாத சர்மாவின் எழுத்துப்பணி தொடர்ந்தது.
  • இதையடுத்து கட்டுரைப் புதையல்களைத் திரட்டித் தருவதில் தன்னிகரற்று விளங்கிய தலை சிறந்த தேசியவாதியான உலகம் சுற்றிய தமிழனான ஏ.கே. செட்டியார் அயல்நாடு சென்றிருந்த போது சக்தி மாத இதழில் ஓர் ஆண்டு ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • 1953இல் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இதழான பாரதியிலும் ஓராண்டுக் காலம் ஆசிரியராக இருந்தார்.
  • 1954 பிப்ரவரி 6 இல் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கம் இராஜாஜி தலைமையில் சாமிநாத சர்மாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி கேடயம் வழங்கி பெருமை சேர்த்தது. 1955இல் சென்னை, தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் சாமிநாத சர்மா.
  • இவர் எழுதிய நூல்களில் அரசியல் நூல்கள் சற்று கூடுதலாகும். இதற்கான காரணத்தை, 'இந்த துறைகள் பற்றிய நூல்கள் தமிழில் அதிகமாக இல்லை. இந்தக் குறையை நம்மால் தீர்ப்போம் என்று என்னுள் எழுந்த எண்ணம் இந்த துறைகளில் என்னை அதிகமாக ஈடுபடுத்தியது' என்று கூறுகிறார். தேசபக்தனில் பணியாற்றிய காலத்தில் லோக மான்ய திலகர், ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப் படுகொலை முதலிய நூல்கள் வெளிவந்தன. பிறகு பர்மா வாழ்வில் 1936இல் முதல் நூலாக முஸோலினியும், இரண்டாவதாக, அபீசினிய சக்ரவர்த்தியும், மூன்றாவதாக, ஹிட்லரும், நான்காவதாக, ஸ்பெயின் குழப்பமும் வெளியிடப்பட்டன. இது குறித்து அப்பிரசுர நிறுவனர் அரு.சொக்கலிங்கம் செட்டியார், "அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டவுடன் மக்கள் தான்தோன்றித் தனமாக மாறி விடக்கூடாதே என்ற கவலையும் எங்களுக்கு ஏற்பட்டது. சுயராஜ்யம் கிடைத்ததும் அராஜகமும், தலைகனமும் ஏற்பட்டு, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற பாணியில் ஜனங்கள் வளர்ந்து விடாமல் இருக்க சில ஆண்டுகளாவது நம்நாடு ஒரு சிறந்த தேசபக்தர் சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுபடுவது நலமென்று சிந்திக்க ஆரம்பித்தோம்" என்று கூறுகிறார்.
  • முஸோலினியை ஒரு தாய்நாட்டுப் பற்றுள்ள சரித்திர நாயகனான பார்த்துள்ளார். இது குறித்து எழுதிய வரிகள் பின்வருவன: “முஸோலினி ஒரு சரித்திர புருஷர். வேற்றுமைகளினால் அளிக்கப்பெற்றும், சோர்வினால் உறங்கியும் கிடந்த ஒரு சமூகத்திற்குத் தன்மதிப்பு, கடமை, ஒழுங்கு, ஒழுக்கம் ஆகிய மருந்துகளை உட்புகுத்தி அதனைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்வதோடு மற்ற சமூகங்களுக்கு எதிரே தோள்தட்டவும் செய்வித்தவன் ஒரு சரித்திர புருஷனாக அல்லாது வேறு எவ்விதமாக இருக்க முடியும்?" என்று வினவுகிறார்.
  • இது போன்ற அரசியல் நூல்களில் அடிக்குறிப்புகளையும் விளக்கங்களையும் தருகிறார். (எ.கா) எதியோப்பியர் என்ற சொல்லிற்கு வெயிலினால் கறுத்துப்போன முகமுடையவர்கள் வசிக்கும் நாடு என்றும், அபிசீனியா என்பதற்குக் கலப்பு சாதியினர் வசிக்கும் இடம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
  • இரண்டாம் உலகப் போரினால் பேரழிவை உண்டாக்கியவர் ஹிட்லர். இவர் வரலாற்றை வித்தியாசமான பார்வையில் சர்மாஜி எழுதியுள்ளார் என்பதற்கு, சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் இதழான ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், தனது த ஹிட்லர் நூலின் விமர்சனத்தில், "தமிழரிடத்து அஞ்சாமை, வீரம், அன்பு, அறிவு முதலியன பொலிய வேண்டுமானால் ஹிட்லர் போன்ற சிறந்த வீரர்களின் வரலாறுகளை கற்க வேண்டும். இந்நூலைப் போன்று தமிழில் உயர்ந்த நூல்கள் பல வெளிவருதல் இன்றியமையாதது" என்று முற்றிலும் ஆன்மீக இதழ் பாராட்டியுள்ளது இவரின் எழுத்தாற்றல் வெற்றி எனலாம்.
  • "ஸ்பெயின் குழப்பம்", என்ற நூல் சர்வாதிகார சக்திக்கும் மக்களாட்சி சக்திக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தை விளக்குவதே ஆகும். இந்நூலைக் குறித்து பெ.சு.மணி, "இந்நூலின் வழியாக நமது நாட்டில் விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தையும் தமிழர்கள் வளர்ந்து கொள்வர் என்பதும் சாமிநாத சர்மாவின் கணிப்பு" என்று மதிப்பிடுகிறார்.
  • இதுவரை கூறப்பெற்ற நூல்களில் தேசபக்த சர்வாதிகார தத்துவத்தை ஓரளவு ஏற்றுக்கொள்ளும் பாங்கில் சாமிநாத சர்மா அணுகியிருந்தாலும் பிறநாடுகளை அடிமைப்படுத்தும் ஆக்கிரமிப்பு போக்கை ஏற்க மறுத்தவர்.
  • "நவீன துருக்கியின் தந்தை", என்று போற்றப்படும் கமால் அத்தாதுர்க் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் எழுதப் பெற்றதன் நோக்கமும் இந்திய தேசியத்திற்கு வலுவூட்டவே ஆகும்.
  • பிளேட்டோவின் அரசியல் தமிழ் மக்களுக்கு அரசியல் அறிவு புகட்டியதோடு "அவர்களைத் தங்கள் சுதந்திரத்திற்குத் தகுதிப்படுத்தி கொண்டவர்களாவார்கள்" என்று சாமிநாத சர்மா குறிப்பிடுகிறார்.
  • நடக்க முடியாமல் படுக்கையில் படுத்துக் கொண்டேயிருந்த காலத்தில் படுத்த படியே எழுதப் பெற்ற நூல், 'கார்ல் மார்க்ஸ்".
  • கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளி வந்திருந்தாலும் முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே!
  • இவர், இது போன்று உலகத் தலைவர்கள், இராஜ தந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள், அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையில்லை. ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு, உலகம் தொடர்பான ஆங்கில நூல்களை எளிய அழகு தமிழில் மொழி பெயர்த்து அளித்துள்ளார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும்போதும் தனது விமர்சனங்களையும், கற்பனைகளையும், ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல. இப்பண்பே அவரது நூல்களில் மிகச் சிறந்த அம்சமாகும்.
  • பிளாட்டோ கூறினார், ரூஸோ சொன்னார், கார்ல் மார்க்ஸ் சாற்றினார், மாஜினி மொழிந்தார் எனத் தமிழக மேடைகளில் தமிழகப் பேச்சாளர்கள் அள்ளி வீச வாய்ப்பளித்தவர் சாமிநாத சர்மா. இதற்காக ஒவ்வொரு பேச்சாளரும் சர்மாஜிக்கு ராயல்டி கொடுக்கவேண்டும் என்பார், காகிதப் புரட்சி எனும் நூலில் திரு.ஸ்டாலின் குணசேகரன்.
  • சாமிநாத சர்மாவின் அரசியல் நூல்களைக் கற்ற, கற்கும் பலர் முற்போக்கான இடதுசாரி இயக்க சிந்தனைகளில் ஊக்கம் பெறுபவர்கள் என்பதையும் கண்டுவருகிறோம்.
  • இவருடைய மனைவி 1956இல் இறந்தார். இவர் துக்கம் தொடர்பாக தன் நூல்களின் பதிப்பாளரான அரு.சொக்கலிங்கம் செட்டியாருக்கு 6.3.56இல் இருந்து 17.4.1956 வரையில் பத்து கடிதங்கள் எழுதினார். இதுபற்றி அவர் கூறும் போது, "அழுது அழுது என் துக்கத்தை தணித்துக் கொள்வதற்குப் பதில் எழுதி எழுதி என் துக்கத்தை தணித்துக் கொள்கிறேன்" என்று கூறுகிறார். இக்கடிதங்கள் பிறகு ஒரு தொகுப்பு நூலாக, 'அவள் பிரிவு' என்று வந்தது.
  • இறுதிக்காலம்:
  • அவருடைய தனிமை வாழ்க்கையின் இறுதிக்காலம் சென்னை கலாசேத்ரா குடில் ஒன்றில் 1971இல் தொடங்கியது. அப்போது தம்முடைய நூல்களையும் மறுபதிப்புகளாகவும் புதிய நூல்களாகவும் வெளியிடத்தக்க உரிமையை திரு பெ.சு. மணியிடம் வழங்கினார்.
  • இம் மாபெரும் எழுத்தாளர் 1978 ஜனவரி 7இல் உயிர் நீத்தார். "நான் எழுதுவதற்காக வாழ்கிறேன், வாழ்வதற்காக எழுதவில்லை" என்று அவ்வப்போது கூறிவந்தார், சாமிநாத சர்மா. ஆம், அவருடைய நூல்கள் வழியாக அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.