பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் இராமேச்சுரத்தை அடுத்த திருத்தேவை எனும் பாம்பனில் (1850) பிறந்தவர். இவர் முருகனை வழிபட்டு வந்த தமிழ்த் துறவி. இயற்பெயர் அப்பாவு. திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். பதின்மூன்று வயதில் குமரகுருவைப் பற்றி கவிதைகள் 100 நாட்களுக்கு மதிய உணவுக்கு முன் ஒவ்வொரு நாளும் ஒரு கவிதை எழுதினார். இவரியற்றிய சண்முகக் கவசம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம், குமாரஸ்தவம் போன்ற பாடல்கள் புகழ்பெற்றவை, முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. கோயில் பூசாரி சேது மாதவ ஐயர் மூலம் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றார்.

pamban kumaragurudasa swamigalஇவருக்கு 25 வயது எட்டியபொழுது 1878ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் இராமநாதபுரத்தில் காளிமுத்தம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு முருகையா பிள்ளை, சிவஞானம்மாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர். 1894ஆம் ஆண்டு பிரம்பன்வலசை என்ற ஊரில் அருந்தவம் புரிந்த பின்பு துறவுநெறி மேற்கொண்டு சென்னையை வந்தடைந்தார்.

அப்போது அவருடன் பழகிய "திரு.வி.க அவர்கள் இவ்வாறு கூறுவார். ‘குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வார். அவருடன் யானும் போவேன், அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துகளைத் தமிழில் விளக்குவார். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவார்." (திரு.வி.க வாழ்க்கைக் குறிப்பு பக்.127).

தமிழ் மீது கொண்ட அன்பின் காரணமாக வேறு எந்த மொழியிலிருந்தும் எந்த வார்த்தைகளும் இல்லாமல் தூய தமிழில் முருகனைப் பற்றி 50 பாடல்களைக் கொண்ட நூலை உரையுடன் இயற்றிய ஒரே துறவி பாம்பன் சுவாமிகள் மட்டுமே. இவர் இயற்றிய ஆறு செய்யுள்கள் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு வெளியிடப் பெற்றுள்ளன. இவற்றுடன் நான்காவது மண்டலத்தைச் சேர்ந்ததுதான் தூய தமிழ் நூல், ‘சேந்தன் செந்தமிழ்’. இந்நூலின் முதல் பதிப்பு 1906இல் பாம்பன் சுவாமிகளாலே பதிப்பிக்கப் பெற்றது. அப்பதிப்பில் நூலின் முன்னுரையும் அமைதி ஐம்பது என்னும் செய்யுட்களின் மூலமும் மட்டும் வெளியிடப் பெற்றன. நாற்பத்தெட்டுப் பக்கங்களைக் கொண்ட இந்நூலில் பத்துப் பக்கங்களே மூலநூல், எஞ்சிய முப்பத்தெட்டுப் பக்கங்களில் ஆசிரியர் முன்னுரை உள்ளது.

இதன் இரண்டாம் பதிப்பு 1915இல் நூலாசிரியரின் சீடர்களில் ஒருவராக, தா.வேங்கடாசல முதலியாரால் பதிப்பிக்கப் பெற்றது. இதுபோல மூன்றாம் பதிப்பு 1996இல் மதுரை பாம்பன் மெர்க்கண்டைல்ஸ் உரிமையாளரினாலும், 4ஆம் பதிப்பு மகாதேஜோ மண்டல சபையினாலும் வெளியிடப் பெற்றுள்ளன.

இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதற்பகுதி பாம்பன் சுவாமிகள் முதல் பதிப்புக்கு எழுதிய நீண்ட ஆராய்ச்சி முன்னுரை. இரண்டாம் பகுதி ‘சேந்தன் செந்தமிழ்ப் புலன்வனப்பு’ எனப்படும் வடசொல் – தமிழ் அகரமுதலி; மூன்றாம் பகுதி ‘அமைதி ஐம்பது’ மூலமும் உரையும், இந்நூலின் உரையாசிரியர் சுவாமிகளின் சீடர்களில் ஒருவரான மா.துரைசாமி முதலியார். இவ்வுரையை சுவாமிகளிடம் நேரில் கேட்டுத் தெரிந்து அவர் ஆணைப்படி வடசொல் புகாத தனித்தமிழ்ச் சொற்களால் இயற்றப்பட்டது. “….இவ்வளவில் வந்த மொழிகளிலெல்லாம் மொழியேனும் புகாமல் தென்மொழி நூலொன்று மின்றா மெனவும், இன்னும் வேண்டியவாறாகவும் வடமொழி கற்றாருட் சிலர் கூறுதல்’ கூறுங்கொல் இதுகாறும் காட்டப்பட்ட சொற்களெல்லாம் வட மொழியேயாயினும், தென்மொழியேயாயினும் சிலச்சில பலப்பல அவ்வாறாயினும் அவர் கூற்றுப்படி இவற்றுட் பலசில புகாமல் தென்மொழி நூலொன்று மின்றென்றல் உறுதியேயாம். ஆகலின் இச்சொற்களுள்ளும் ஒன்றேனும் புகாமலே ‘சேந்தன் செந்தமிழ்’ எனுமிந் நூலென்னாலமைக்கப்படுவதாயிற்று."

இவ்வாறு பல சொற்கள் “நீங்குழியுந் தமிழ்ச் செய்யுள் தன் மொழியானே நடைபெறூ உமெனும் ஆற்றலு மிதனால் வெளிப்படுத்தப்பட்டது”. (பாம்பன் சுவாமிகள் முன்னுரை பக்-28)

“வடமொழி கலவாத் தமிழ் நூல் ஒன்றேனும் இல்லை என வடமொழி கற்றார் கூறக்கூடும், அக்கூற்று உண்மையே” எனக் கருதிய பாம்பன் சுவாமிகள் வடசொல் ஒன்றும் கலவாத ‘சேந்தன் செந்தமிழ்’ நூலை எழுத விரும்பினார்; எழுதினார். இலக்கணக் கொத்தின் ஆசிரியர் சாமிநாத தேசிகன் கூற்றினைக் கருத்திற் கொண்டு பாம்பன் சுவாமிகள் இந்நூலைப் படைத்திருக்கலாம்.

வடசொற்களை முற்றாக நீக்கிய பிறகும் தமிழ் தன் சொற்களாலே இயங்கும் ஆற்றலை நிலை நாட்டலே பாம்பன் சுவாமிகளின் நோக்கம் என்பது தெளிவாகின்றது.

ஊரும் பெயரும் (மந்த்ரம்) மறையும் ஓரொலிக் குறிப்பும், ஈரொலிக் குறிப்பும், எம்மொழியினும் ஏற்பட்டபடி கோடல் கூடுமாயினும், முருகப் பிரானெனுஞ் சேந்தன் மீது பாடுந்தூய தமிழாம் இச்செந்தமிழில், அந்தப் பிரான் பெயராக வடநூலிழை வரூஉம் கார்த்திகேயன், மஹாஸேனநன், சரஜன்மன், ஷடாநநன், பார்வதி நந்தனன், ஸ்கந்தன், யேநாநீ, அக்நிபூ, குஹன், பாஹூலேயன், தாரகஜித் விசாகன், சிகிவாகநன், ஷான்மாதுரன், சக்திதரன், குமாரன், க்ரௌஞ்ச, தாரணன், வல்லீசன், குக்குடதாரன், ஸீப்ரஹ் மண்யன், த்விஷட்புஜன், சூரன், ஸ்வாமி, கஜாமுகாநுஜன், சரவணபவனென வருவனம், இவற்றிற்கு வேறாக வடமொழி ஆயிரம் பெயரில் வரும் பெயர்களும் புகவில்லை. பிராட்டிகளின் பெயராகிய தேவஸேனா வல்லீயெனுஞ் சொற்களும் புகவில்லை. தெய்வயானை என்பதில் தெய்வம் என்பது வடசொல்லென்ப. அதனோடு சிவணிய ‘யானை’ என்பதையும் சிலர் வடசொல்லெனக் கூறுதல் மேலே விளக்கப்பட்டது. தெய்வயானை யென்பது ‘கடவுட்பிடி’ எனவும், வல்லீ (வள்ளி) என்பது ‘கொடிச்சி’ எனவுஞ் செந்தமிழ் வழக்காக இந்நூற்கண் நிற்றல் காண்க. அங்ஙனம் குஹனென்பது உள்ளிடத்தான், கடவுள் என நிற்பன பலவென்க.

யானை, வல்லி முதலிய சொற்களைக் கூட வட மொழியாளர் சிலர் தமிழன்றென்று என கூறுதலின் அச்சொற்களையும் கூட விலக்கி பாம்பன் சுவாமிகள் தூய தனித்தமிழ் நூல் எழுதினார் என்பது இம் முன்னுரைப் பகுதியால் தெரிகிறது.

இச்சிறந்த ஆராய்ச்சி நூல் சொற்பிறப்பு, ஆராய்ச்சி நெறிமுறை (ETYMOLOGICAL DERIVATION) பற்றியறிந்து கொள்ள இஃது ஒரு சிறந்த வழிகாட்டி நூல் எனலாம்.

இந்நூலின் பல அரிய பொருள் நுட்பங்களைத் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது. எடுத்துக்காட்டாக உடம்புக்கு, மெய் என்ற பெயர் அமையக் காரணம் பற்றி (செய்யுள் 20) விளக்குமிடத்து, “பார்வைக்குப் புலப்படா உயிரைப் புலப்படுமாறு காட்டி நிற்பது உடம்பே யாகலின் அதற்கு மெய் என்னும் பெயர் போந்தது” எனக் குறிப்பிடும் பொருள் புதுமையும், நுட்பமுமுடையதாதல் காணலாம். மேலும், இதுவரையில் பலரும் கூறிவந்த கருத்தினை, ‘பொய்யான உடம்பை, மெய் என்று கூறுதல் மங்கல வழக்கு’ என்னும் கருத்தினை மறுத்திருத்தலும் காணலாம். “பொய்யுடம்பினை மெய்யென்பது நல்வழக்கென்பார் கூற்றுத் தள்ளற்பாலதாமன்றிக் கொள்ளற்பாலதாகாது” என்னும் தம் கொள்கையை வற்புறுத்தியுள்ளதும் காணலாம். இத்தகைய நுண்மாண் நுழைபுலக் கருத்துகள் பல ஆங்காங்கே உரையில் அமைந்துள்ளன.

மேற்குறித்த உரைப்பகுதியில், 'மங்கல வழக்கு' என்னும் மரபான சொற்றொடரைக் கையாளாமல் 'நல் வழக்கு' என்று குறிப்பிட்டிருத்தல் கருதத்தக்கது. ‘மங்கலம்’ என்பது வடசொல். வடமொழியின், சொற்கள் கலவாமலே ‘சேந்தன் செந்தமிழ்’ என்ற நூலும் அதன் உரையும் அமைய வேண்டும் என்று விரும்பியது அடிகளின் திருவுளம். அதற்கேற்பவே மங்கலம் என்ற வடசொல்லை நீக்கி, ‘நல்’ என்ற சொல்லை அமைத்து, ‘நல் வழக்கு’ என்று எழுதியுள்ளார். இந்நோக்கம், அடிகளின் முன்னுரையைக் கற்போருக்குத் தெளிவாகும். இவ்வாறு ஒரு நூலும் உரையும் அமைந்த அமைப்பு, இதுவரையில் தமிழ்மொழி வரலாற்றில் இல்லை எனலாம்.

நடுநிலைமை இன்றி, தவறானதொரு பற்றுக்கொண்டு, வடமொழியே உயர்ந்தற என்றும், தெய்வத் தன்மை உடையது என்றும், சிலர் மயங்கித் தடுமாறி எழுதியும் பேசியும் வந்த போக்கை உணர்ந்த அடிகள், அவர்களைத் திருத்தவும், அவர்களின் மயக்கத்திற் சிக்காமல் பிறரைக் காக்கவும் விழைந்து முன்வந்து செய்த புலமைத் தொண்டு இது. உண்மையை உணராமல், தாய்மொழியுணர்வும் இல்லாமல், தமிழ்மொழியைத் தாழ்த்தியும் புறக்கணித்தும் பேசிய அவர்களின் போக்கைத் திருத்த விரும்பினார். ‘எல்லாம் மாயை’ என்றும், எவ்வகையான வேறுபாடும் கடந்த பரம்பொருளே உண்மை என்றும் வாயளவில் கூறித் திரிந்தும், ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியைத் தாழ்த்தியும் பேச அவர்களுக்கு எவ்வாறு மனம் வந்ததோ? அந்தக் குறையைத் தீர்க்க முயன்ற அடிகள், “இச்சொற்களுள்ளும் இவற்றிற்கு வேறான வடசொற்களுள்ளும் ஒன்றேனும் புகாமலே சேந்தன் செந்தமிழ் எனுமிந்நூல் என்னாலமைக்கப்படுவதாயிற்று. இவ்வாறு பல சொற்கள் நீங்குழியுந் தமிழ்ச் செய்யுள் தன் மொழியானே நடைபெறூஉமெனும் ஆற்றலுமிதனால் வெளிப்பட்டது” என்று முன்னுரையில் எழுதியுள்ளமை காணலாம்.

யானை, திரு, தோள், நீர், காலம், தாய், நிலம், பூ, மாது, வாள், விண், ஓடம், பழம், பிட்டு, மீன், நேயம், ஐயன் முதலான பழைய தமிழ்ச் சொற்களையும் வடசொற்கள் என்று நிறுவுவதிலே சிலர் 'மாயை' கொண்டு மயங்கிய காலம் அது. அந்த மயக்கம் எல்லாம் இன்று மொழியியல் அறிஞர்கள் – வெளிநாட்டு அறிஞர்களான பேராசிரியர்கள் பாரோ, மெனோ முதலானவர்களின் அரிய ஆராய்ச்சியின் பயனாகத் தீர்ந்து வருகிறது. இந்த ஆராய்ச்சி வளராத காலத்திலேயே அடிகள் அத்தகைய தெளிவு பெற்று இவை முதலானவற்றைத் தமிழ்ச்சொற்களே எனக் காட்ட முயன்றுள்ளார் எனக் கூறுகிறார் தன் முன்னுரையில் டாக்டர் மு.வரதராசனார்.

முடிவுரை

பாம்பன் சுவாமிகளின் சேந்தன் செந்தமிழ்ப் படைப்பு, மறைமலையடிகள் தனித்தமிழைச் செயற்படுத்த முனைவதற்கும் பத்தாண்டுகட்கு முன்னரே நிகழ்ந்து தனித் தமிழியக்கத் தோற்றத்திற்கு முன்னோடியாக அமைந்தது எனலாம்.

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.