சென்னை
15.5.45
என் அன்பார்ந்த நண்பன் ராஜநாராயணனுக்கு,

உன் கடிதம் இன்று மாலை கிடைத்தது. உனக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே கவர் வாங்கி வைத்தேன். சற்று நீண்ட கடிதமாகவே எழுத உத்தேசித்திருந்தேன். விஷயங்களும் நிறைய இருக்கின்றன. ஆனால் என் உடல்நிலை கடிதம் எழுத ஒட்டாமல் செய்துவிட்டது. இப்போது உன் கடித விஷயமாக இரண்டொரு வார்த்தைகள் சொல்லிவிட்டு நிறுத்திக்கொள்ள விரும்புகிறேன். ஏதோ மயக்கமாகவும் அலுப்பாகவும் வருகிறது. எழுதும்போது கொஞ்சம் கையை அசைத்தாலும் வலிக்கிறது.

சுமார் 5 நாட்களுக்கு முன்னால் நண்பர் ரகுநாதனுடன் இரவு 3 மணி வரைக்கும் பேசிக்கொண்டிருந்தேன். மறுநாள் கண் விழிக்கும்போதே பிடரியில் பலமாக வலித்தது. அதிலிருந்து ஆரம்பித்து 4 நாட்களாக காய்ச்சலும், மண்டையிடியும் பலமாகப் பிடித்துக்கொண்டது. இருமல் வரும்போது சகிக்க முடியவில்லை. மூன்று நாட்களாக ஆபிசுக்குப் போகவும் இல்லை. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தூக்கம்தான். எதைப் பார்த்தாலும் வாந்தி எடுக்கிறது. வியர்த்து வியர்த்து உடலும், உடையும் பிணவாடை அடிக்கிறது. மிகவும் மெலிந்து உடல் பலவீனமாக இருக்கிறது. ஆனால் டாக்டரிடம் மருந்து சாப்பிட்டு இன்று சிறிது தெளிவாக இருக்கிறது. இரண்டொரு நாளில் ஆபிசுக்கு போகலாம் என்றிருக்கிறேன்.

திடீரென்று என்னை நாடகம் எழுதத் தூண்டிய காரணம் என்னவோ? ராமசாமியின் விலாசத்தைத் தெரிவிப்பதற்கென்ன? இந்த ஆனந்த போதினியில் முத்துசாமியின் கவி வெளியாகியிருக்கிறது. படி.

நண்பர் சண்முகசுந்தரத்தின் பாட்டை இரண்டொருதடவை படித்தேன். என் தற்போதைய நிலையில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அது பற்றி பின்னால் அபிப்பிராயம் எழுதுகிறேன்.

மாக்ஸிம் கார்க்கி புத்தகம் அவசரம்.

கோவில்பட்டியிலுள்ள அந்தக் கிழவியாவது என்னை மறவாமல் விசாரித்துக்கொள்ளுகிறாளே என்பதை நினைக்க எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

என் உடல்நிலையைப் பற்றி எங்கள் வீட்டில் சொல்லாதே. இதற்குமேல் என்னால் எழுதமுடியவில்லை.
மற்றவை பின்னால்.
அன்புடன்
கு.அ. 
***********************

சென்னை
24.5.45

அன்புள்ள நண்பன் ராஜநாராயணனுக்கு,

ஷேமம்; ஷேமத்துக்குப் பதில்.

நான் உனக்கு முந்தாநாள் ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தேன். அது உனக்குக் கிடைத்திருக்கலாம். இப்போது மறுபடியும் வெகு சீக்கிரத்தில் உனக்குக் கடிதம் எழுதும்படி ஏற்பட்டிருக்கிறது. மன்னிக்கவும்.

எட்டயபுரத்தில் பாரதி ஞாபகார்த்த நிலைய அஸ்திவாரவிழா வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி நடக்கப்போகும் விபரம் உனக்குத் தெரிந்திருக்கலாம். நீயும் கூட அதற்குப் போகலாம் என்று நினைக்கிறேன். நிற்க. அந்த விழாவுக்கு “ஜீவா அவர்கள் வருகிறார்கள். சிற்சில காரணங்களினால் மற்ற கோஷ்டிகளுடன் வராமல் தனியாக வருகிறார்கள். அங்கே வருவதற்குமுன் டோனாவூருக்கு அருகிலுள்ள காமநேரி என்னும் கிராமத்தில் ஜூன் மாதம் முதல் தேதி நடக்கப்போகும் நண்பர் கனியின் கல்யாணத்துக்குப் போகிறார்கள். 3ம் தேதியன்று “ஜீவா” கோவில்பட்டிக்கு வருவார்கள். ஆகவே, அவர்கள் சென்னை திரும்புமட்டும் நீ அவர்களுடனிருந்து எல்லாச் சௌகரியங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக எட்டயபுரத்தில் இருப்பிட வசதி தயார் செய்து கொடுக்கவேண்டும். இது பற்றி கோவில்பட்டி அண்ணாச்சிக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். “ஜீவா” அவர்களுக்கு ஸ்ரீ சுவாமியவர்களை அறிமுகம் செய்து வைக்கவும். அவர்களை நம் ஊருக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். மற்றப்படி நான் ஒன்றும் எழுதத் தேவையில்லை.

இதில் இன்னொரு விஷயம் : “ஜீவா அவர்கள் என்னையும் தம்மோடு அழைக்கிறார்கள். தெற்கே டோனாவூர், நாகர்கோவில், கன்னியாகுமரி முதலிய இடங்களுக்கும் போய்விட்டு, எட்டயபுரம் போய்வரலாம் என்று கூறுகிறார்கள். ஆனால், நான்தான் பலவிதமாக யோசனை செய்துகொண்டிருக்கிறான். செலவு ரூ 40 வரையிலும் ஆகும். அதைப் பற்றிக்கூட யோசனை இல்லை. ஆனால் அதற்குள் நான் ஊர் திரும்புவது அனாவசியம் என நினைக்கிறேன். அத்தோடு நான் இப்போது அங்கு வந்து திரும்பினால் நீ சென்னைக்கு விஜயம் செய்வதற்கு சற்று காலதாமதம் ஆகும். நான் அங்கு வருவதைவிட நீ சென்னைக்கு வருவது முக்கியமல்லவா? அதோடு நான் இன்னும் கொஞ்சநாள் கழித்துவந்தால், ஊரில் கூடக்கொஞ்சநாள் தங்கிவிட்டு வரலாம். இப்போது இருவரும் அங்கு வந்துவிட்டால் பத்திரிக்கை வேலையைக் கவனிக்கவெகு சீக்கிரம் திரும்ப வேண்டியிருக்கும். இப்படியெல்லாம் யோசனை செய்துகொண்டு இருக்கிறேன். ஆனால் “ஜீவா” அவர்கள் அழைக்கிறார்கள். உன் அபிப்பிரயாம் என்ன? என்னைப் பொறுத்தமட்டிலும் நான் இப்போது ஒன்றும் உறுதி சொல்ல முடியாது.

நண்பர் காசி விசுவநாதன் தம் சகோதரி கல்யாணத்துக்காகத் தூத்துக்குடிக்கு இன்று போயிருக்கிறார். அவர் 27.5.45 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி வண்டிக்கு தூத்துக்குடியிலிருந்து நேராகச் சென்னைக்கு வருவார். அப்போது அவரை நீ கோவில்பட்டி ஸ்டேஷனில் போய்ப் பார்க்கச் சௌகரியப்பட்டால் மறுபக்கத்தில் குறிப்பிட்டுள்ள புத்தகத்தைக் கொடுத்தனுப்பு. அவற்றை வெகு விரைவில் படித்துவிட்டு, உனக்குத் தபால் மூலம் அனுப்புகிறேன்.

கொடுத்தனுப்ப வேண்டிய புத்தகங்கள் :

1. மாக்ஸிம் கார்க்கியின் புத்தகம்

2. மானிட ஜாதியின் சுதந்திரம்

3. கம்ப்ளீட் ஒர்க் ஆப் தி பெங்கால் ரைட்டர்ஸ்

நண்பர் சண்முகசுந்தரத்திடம் கடிதத்தைக் கொடுக்கவும். என் கடித விபரங்களை எங்கள் வீட்டுக்கும் சொல்லவும்.

நண்பர் சண்முகசுந்தரம், நாச்சியார்புரத்தில் யாரிடமோ அண்ணாமலை ரெட்டியாரின் அச்சேராத காவடிச் சிந்துகள் பல இருக்கின்றன என்று என்னிடம் வெகு நாட்களுக்கு முன்பு சொன்னதாக ஞாபகம். அது விஷயமாக அவரை விசாரித்துத் தகவல் கொடுக்கவும். உடன் பதில்.

அன்புடன்
கு.அ.
***********************

சென்னை
1.7.45, (நள்ளிரவு)

அன்புள்ள நண்பனே,

உன் 30.6.45 தேதியிட்ட கடிதத்தை இப்போதுதான் பார்த்தேன். நள்ளிரவாகிறதே. இதுவரைக்கும் நான் எங்கே சுற்றினேன் என்று நீ யோசிக்கலாம். இன்று எங்கள் முதலியார் வீட்டில் ஒரு மங்கள ஸ்நானக் கொண்டாட்டம். அதையொட்டி ஒரு நாட்டியக்கச்சேரி நடந்தது. அதைப்பார்த்துவிட்டு நானும் துரையும் இப்போதுதான் வந்தோம். வந்து உன் கடிதத்தை கடிதமாக அது? அதை என்ன வென்று சொல்லுவது? பார்த்தேன். உடனே இந்தப் பதிலை எழுத ஆரம்பித்தேன்

நண்பா, உனக்கு நான் மூன்று நாட்களுக்கு முன்னால் எழுதி தபாலில் சேர்க்காமல் வைத்திருந்த கடிதத்தை இத்தோடு அனுப்பியிருக்கிறேன். அதோடு, என்ன காரணத்திற்காக என் கடிதம் தாமதப்பட்டதோ, அந்தக் காரணம் நிறைவேறும் முன்பே, உன் சாந்திக்காக உடனடியாக இக் கடிதத்தை எழுதினேன்.

மகாபலிபுரம் பிரயாணத்திற்குத் தேதி குறிப்பிடும் பிரச்சனைதான் கடிதத்தின் தாமதத்துக்குக் காரணம். கல்யாணத்திற்கு முகூர்த்தம். கணித்தமாதிரி அதற்குப் பலபேரைக் கலந்து கொள்ளவேண்டியிருக்கிறது. முக்கியமாக நண்பர் ரகுநாதனைப் பார்த்துப் பேசிக்கொண்டு எழுத நினைத்தேன். அவரைப் பார்த்து ஒரு வாரமாகிறது. ஒரு ஊரில் இருக்கிறோம் என்ற பெயரே தவிர ஒருவரையொருவர் அடிக்கடி பார்த்துக்கொள்ள முடிவதில்லை. அவர் தினந்தோறும் என்னிடத்திற்கு முன்னால் வருவார். இப்போது ‘தினமணி’யில் அவர் உதவி ஆசிரியராக அமர்ந்து 1 மாதமாகிறது. அவருக்கு வர அவகாசம் வாய்ப்பதில்லை. ஆகவே அவரிடம் கலந்துகொண்டு உனக்கு நாளையே நிச்சயமான தேதி குறிப்பிட்டுக் கடிதம் எழுதுகிறேன். அதனால், இதோடு வைத்திருக்கும் மற்றொரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தவணைகள் நிச்சயமில்லாதவை என தெரிந்துகொண்டேன். அநேகமாக மாதக் கடைசியல்தான் இருக்கும். நிற்க.

நானும் துரையும் வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று (8.7.48) வாலாஜாபாத் என்ற ஒரு ஊருக்குப் போகிறோம். அங்கே ராமகிருஷ்ணா வித்தியாலயம் போல வள்ளலார் இல்லம் என்ற மிகப்பெரிய பாடசாலை நடந்துவருகிறது (இதைப்பற்றி கோவில்பட்டி அண்ணாச்சிக்கு நன்றாகத் தெரியும்) அதன் தலைவர் இன்று எங்களிருவரையும் முதலியார் வீட்டில் வைத்துப் பார்த்தார். அவரை, ஒரு ராமலிங்க சுவாமிகள் என்றோ அல்லது தாயுமானவர் என்றோ சொல்லவேண்டும். ஆகா! என்ன அன்பு! அவர் எங்களிருவரையும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் தம் பாடசாலைக்கு வந்துபோகுமாறு சொல்லி ரயிலுக்கு வேண்டிய பணத்தையும் சட்டைப் பையில் திணித்துவிட்டார். அந்த ஊர் காஞ்சீபுரத்திற்குப் பக்கமாக உள்ளது. அங்கே போய்விட்டு உடனே திரும்பிவிடுவோம். அந்தப் பாடசாலையை ஒவ்வொரு தமிழ் மகனும் பார்க்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். நிற்க.

ஏழை உள்ளம் படைத்த என் நண்பனே! நான்தான் மனம் தளர்ந்திருந்தால் நீயாவது சற்று திடமாக இருக்கக்கூடாதா? நாமிருவரும் உள்ளத்திலும் உடலிலும் அளவு கடந்து ஆபத்தை விளைவிக்கக்கூடிய அளவு பலவீனத்தைப் பெற்றிருக்கிறோம். ஆனால் சாகமாட்டோம்!

நீ துன்பப்படும் இரவுகளைவிட நான் துன்பப்படும் இரவுகள் துயரம் தருவதில் ஒன்றும் குறைந்ததல்ல. என் முந்திய கிழித்தெறிந்த கடிதம் இப்போது உயிரோடிருந்தால் உனக்கு நல்ல பதில் சொல்லும். ஐயோ! தினம் தினம் காலை வாடைக் காற்று படுத்தெழும்போது உடம்பில்பட்டால், என்ன நினைவுகள்! நான் எங்கள் வீட்டில் இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்னால் உட்கார்ந்து கதவுகளைப் பூட்டிக்கொண்டு கவி எழும்போது, சந்திரோதயம் ஆவது போல கதவுகளைத் திறந்து முகம் காட்டும் உன் காட்சியை அப்படியே அக்காற்று வாரிக்கொண்டு வருகிறது! இது மட்டும்தானா? அவற்றையெல்லாம் எழுதுவது எப்படி? இப்படி இருக்க நீ என்னைச் சந்திரனுக்கு உவமித்தது பொருத்தமே இல்லை.

‘இந்தப் பாழாய்ப் போன உலகத்தை நான் எவ்வளவு முயற்சித்தும் அறிந்துகொள்ளமுடிவதில்லை’ என்று நீ எழுதியிருப்பது, ஊடற்காலத்தில் பெண்கள் விளையாட்டுக்குப் கோபித்துக்கொண்டு சொல்லுவது போலிருக்கிறது! உனக்கு நம்பிக்கை மோசம் செய்த துரோகிப் பயல் எவனோ?

நீ நடிப்பவன் என்று நான் என்றாவது என் மனமார நினைத்ததுண்டா? விளையாட்டுக்காவாது சொன்னதுண்டா அன்பே! ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறாய்? உன் மதிப்பு உனக்கே தெரியவில்லை. இப்படி ஒரு அன்பனை நடிகன் என்று அடுத்தவன் எப்படி நினைப்பான். என்றாவது யோசித்தாயா?

கிடைத்தற்கரிய செல்வமே! கடிதம் நீளுகிறது. நம் துயரத்தைப்போல், நான் மனங்கலங்கி, ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ எழுதுகிறேன், இக்கடிதத்தை. நமக்கு நற்காலம் வெகுவிரைவில் கிட்டும். நான் நெஞ்சாரக் சொன்னால், உன் பிரிவின் துயரால்தான் நான் இலக்கிய உற்பத்திகள் செய்ய இயலாமல் படு சோம்பேறியாகி விட்டேன். இப்படியும் பொழுதுபோக்குவோம் என்று நான் ஒரு காலத்திலும் நினைத்ததில்லை.

நீ அங்குள்ள இரவையும், விண்மீன்களையும், கடிகார ஓசையையும், நாய்கள் குரைப்பதையும் எழுதியிருந்தாய். அந்த வஸ்துக்கள் இங்கேயும் இல்லாமல் போய்விடவில்லை.

துயரமுள் குத்துவதால் ஏற்படும் ரத்தப் பொழிவு, தானே நிற்கிறது. ஏன், என்றால் உள்ளே ரத்தமில்லை. ரத்தமற்ற உயிரற்ற இச்சடலம் உறங்கப் போகட்டுமா?

அன்புடன்
கு.அ.

Pin It