கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

Tamil Inscriptionsகாசுமீரிகளும், பஞ்சாபிகளும், நாகலாந்து மிசோரம் மக்களும் சமசுக்கிருதத்தைத் தங்கள் தாய்மொழிக்கு இணையாகவோ மேலாகவோ மதிப்பதில்லை.

மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் என எவர் ஒருவரும் தங்கள் தாய்மொழியா, சமசுக்கிருதமா என்றால் தாய்மொழியையே உணர்வாகவும் உயிர்ப்பாகவும் கருதுகின்றனர்..

இந்தியாவிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள எந்த ஓர் இன மக்களுக்கும் சமசுக்கிருதம் முதன்மை மொழியாக இல்லை..

ஆனால், இந்தியாவில் உள்ள ஆரியப் பார்ப்பனர்கள் மட்டுமே தாங்கள் வாழ்கிற மொழித் தேச அளவில் அந்தந்தத் தேசிய மொழி களையே தங்கள் தாய்மொழியாகக் கருதினாலும், சமசுக்கிருதத்தையே உயர் மொழியாகவும் தங்கள் குமுகத்திற்குரிய மொழியாகவும் ஏற்றுக் கொள்கின்றனர்..

* * *

தமிழே உலகின் மூத்த மொழி என்றும், திராவிட மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி என்றும், சமசுக்கிருதத்திற்கே மூல மொழி என்றும் மொழிஞாயிறு பாவாணர் தொடங்கி, தமிழறிஞர்கள் பலரும் நிறுவியிருக்கின்றனர்...

எண்ணற்ற நூல்கள் எழுதி இருக்கின்றனர், இப்போதும் எழுதியும் பேசியும் வருகின்றனர். அவர்களின் அவ்வகை விளக்கங்கள் அறியப்பட வேண்டியவை என்பது மட்டுமல்லாது, பரப்பப்பட வேண்டியவையு மாக உள்ளன.

ஆனால், அத்தகைய கருத்துகள், இதுவரை அந் நூல்களைப் படித்தவர்கள், அவர்களின் கருத்துரைகளை அறிந்தவர்கள் அளவில் மட்டுமே பரவியிருக்கின்றனவே அல்லாமல், அவர்களைக் கடந்து பரவிடவில்லை... பரவிடவில்லை என்பதைவிட அக்கருத்து பரப்பப் பட்டவர்களிடையேகூட பெரிய அளவில் எந்தப் பயனையும் அளித்து விடவுமில்லை. காரணம் தமிழ்மொழி அதிகாரம் படைத்ததாக இல்லாமல் இருப்பதே அடிப்படையானது..

தமிழ்மொழி எவையெவற்றில் எல்லாம் அதிகாரம் படைத்திருக்க வில்லை என்று பார்த்தால்தான் அதன் அதிகாரமற்ற மெலிவு தெரியும். தமிழ், கல்வி மொழியாக அதிகாரம் படைத்திருக்கவில்லை. வாழ்வியல் மொழியாக அதிகாரம் கொண்டிருக்கவில்லை, வழிபாடுகளில், நயன்மை(நீதி)த் துறைகளில், அரசின் ஆட்சித் துறைகளில், பொருளியல் வழித் தொழில்களில், வணிகத்தில் அதிகாரம் இழந்திருக்கிறது...

அதிகாரம் இழந்து இருக்கிறது என்று சொன்னால் அதிகாரம் செலுத்த இயலாதபடி அடங்கிக் கிடக்கிறது..

ஏன் அவ்வாறு அடங்கிக் கிடக்க வேண்டும் என எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவற்றிலெல்லாம் அதிகாரம் செலுத்துகின்ற அளவில் தமிழ் தகுதி படைத்த மொழியாக இல்லையா? அதனால்தான் அடங்கிக் கிடக்கின்றதா? - என்றால் காரணம் அது இல்லை.

தமிழ் எல்லா நிலைகளிலும் தகுதி படைத்த மொழியாகவே இருக்கிறது..

எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புகளையும் கருத்துகளையும் உடனே தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லிவிடமுடியும் என்கிற அளவில் தமிழ் தகுதி வாய்ந்த மொழியாகவே இருக்கிறது...

ஆனால், கல்வி நூல்களையெல்லாம் தமிழில் மொழி பெயர்த்துக் கல்விமொழியாகத் தமிழை மாற்றிவிடும் அதிகாரத்தைக் கல்விக்கூடங் களோ, இயக்ககங்களோ பெற்றிருக்கவில்லை..

உலகின் பல மொழியினர் அறிவியல் வளர்ச்சிக்குரிய பெயர், வினைச் சொற்களையெல்லாம் அவை எந்த மொழிகளில் உள்ளனவோ அச்சொல்லிலேயே பெயர்த்து பயன்படுத்துகின்றனரே அல்லாமல் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துப் பயன்படுத்துவதில்லை.

பஸ், கார், ராக்கெட் - என்று எளிய சொற்கள் தொடங்கி ஹார்ட்வேர், சாப்ட்வேர், சிப், ஆப் என்று பல நூற்றுக்கணக்கான சொற்களையும் பலரும் அப்படி அப்படியே அவரவர் மொழிகளில் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் எந்தப் பொருளின் பெயர் என்னவாக இருந்தாலும் அந்தப் பொருளின் செயல்பாடறிந்து அதற்கான வினையை அடியட்டிய பெயர்ச்சொல்லை உடனடியாகத் தமிழில் பெயர்த்து வெளியிடுகிற ஆற்றல் தமிழகத்தின் அறிஞர்களிடம் மட்டுமல்ல, பொதுவான அறிவு ஈடுபட்டாளர்கள் அனைவரிடமும் உள்ளதை அறிய முடியும்.

மிதிவண்டி, பேருந்து, ஏவுகணை, ஆழிப்பேரலை, மென்பொருள், வன்பொருள், செயலி என்றெல்லாமான பல்லாயிரம் பெயர்ச்சொற்கள், கழக இலக்கியங்கள் எவற்றிலும் இல்லாத நிலையில் தமிழ் அறிஞர்கள் சிலரும், தமிழ் ஈடுபாட்டாளர்கள் பலருமே தாங்களே தமிழின் பெருமையைப் பயனாக்கிக் கொண்டு தமிழ் உலகிற்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்றால், தமிழ் அவ்வகை ஆற்றல் படைத்தது என்பதை உணர வேண்டும்.

அடுத்தது...

தமிழ் என்பது ஒரு மொழியாக மட்டுமே இல்லாமல் ஆற்றல் படைத்த குமுகமாகவும் வாழ்வாகவும் பண்பாடாகவும் வரலாறாகவும் வளர்ந்திருப்பதை அறிய வேண்டும்.

இந்தத் தன்மையளவிலும் பிற மொழிகளில் இருந்து தமிழ் வேறுபட்டது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

உலகில் சில மொழிகளைக் காதல் மொழி, வணிக மொழி, வழிபாட்டு மொழி, நீதி மொழி என்றெல்லாம் அடையாளப்படுத்திச் சொல்லப்பட்டு வருவதை அறிந்திருக்கிறோம். அதற்கு அந்த மொழி தான் காதல் செய்யும், வணிகம் செய்யும், நயன்மை (நீதி) சொல்லும், வழிபாடு செய்யும் என்று பொருள் அல்ல.

அந்த மொழி சார்ந்த குமுகமும் அரசும் அந்த ஈடுபாடுகளில் அதிகம் இருந்ததால் அதற்கான சொற்பெருக்கம் அந்த மொழியில் உண்டானது என்பதே அதன் பொருள்..

ஆனால், தமிழைப் பொறுத்த அளவில் அதற்குப் பல்வகைச் சிறப்புகள் உண்டு. தமிழுக்குப் பதினாறு வகைச் சிறப்புகள் இருப்பதாகப் பாவாணர் அவர்கள் அடையாளப்படுத்திக் காட்டுவார்.

அவ்வகைச் சிறப்புகளைத் தமிழ் கொண்டிருப்பது ஒருபுறம் எனில் ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் வரலாற்றையும் குமுகத்திற்குரிய அரசியல் பொருளியலையும் வெளிப்படுத்தும் வகையில் இருப்பதை உணர்வது மறுபுறமாக உள்ளது..

து        - என்பது மேல் என்பதைக் குறிக்கும் குறிப்பு ஒலிப்பு.

து        - என்பது மேல் என்பதிலிருந்து - துய் - துலை என்பது அளக்கும்  

               கருவி..

துலை - துலா - துலாக்கோல் - மேலே உயர்த்திப் பிடித்து அளக்கும்      கருவி..

துலை - தொலை - தொலைவு - மிக நீண்ட, உயர்ந்த..

துலை - தலை - மேல் உள்ளது..

செந்தலை, குழித்தலை என்றுமான தன்மைக்கேற்ப நிலம் அடையாளப்பட்டிருக்கிறது..

தலை - தரை - நிலத்தின் மேல் பகுதி

தர் - என்றும், தர - என்றும், தரா - என்றுமாகச் சிந்து கங்கை ஆற்றுப் பகுதிகளையட்டிய எண்ணற்ற ஊர் பெயர்களை யெல்லாம் அன்றைய தமிழிய வரலாறு படிந்த சுவடுகள் காட்டுவதை உணரலாம்

ஆக, தமிழில் உள்ள பல ஆயிரக்கணக்கான சொற்களுக்குரிய வரலாற்றுச் சுவடுகளை இந்த வகையில் உணர முடியும்.

அவற்றின் மூலம் தமிழில், தமிழரின் மொழி, இன, வாழ்வியல் பரப்பை விரிவை அறிய முடியும்.

“நாடென்ப நாடா வளத்தன” - என்பதிலிருந்து பிறரை நாடி வளப்படுத்திக் கொள்ளும் நடைமுறை நாட்டிற்கு இருக்கக் கூடாது என்று குமுகம் அடையாளப்படுத்தப்படுவதிலிருந்து தமிழ்க்குமுகத்தின் அரசியல் பொருளியல் இலக்கை அறிய முடியும்.

சிறியோரை. இகழ்தல் இல்லாத குமுக ஒழுக்கமே, மக்கள் பண்பு எனக் கொண்ட குமுகமாக வளர்ச்சியுற்று இருந்த தமிழகத்தைக் காணமுடியும்.

ஆனால் அப்படியான மிகச் சிறந்த வாழ்வியல், தொழிலியல், குமுகவியல், அரசியல்,. பொருளியலை நோக்கமாகக் கொண்ட வள வாழ்வை இன்றைய தமிழ்க் குமுகமோ, தமிழோ கொண்டிருக்க இயலவில்லை.

காரணம், தமிழ்க் குமுகம் தன்னைத் தன்னளவில் நிரல்படுத்திக் கொள்கிற, ஒழுங்குபடுத்திக் கொள்கிற, நெறிப்படுத்திக் கொள்கிற அதிகாரத்தைப் பெற்றிருக்க முடியவில்லை

அதிகாரம் இழந்த இத் தமிழ்க் குமுகம், அதிகாரம் இழந்த அரசியலை, அதிகாரம் இழந்த பொருளியலைக் கொண்டிருப்பதாக ஆகிவிட்டது.

அதனால் அதன் மொழியும், இன அடையாளமும், பண்பும் வாழ்க்கை முறைகளும்கூட அதிகாரம் இழந்தது மட்டுமன்றி வழக்கிழந்தும் வருகின்றன.

வளத்திற்காகக் கூட பிறரை, பிற நாட்டை நாட வேண்டாத வாழ்வுமுறை நோக்கம் கொண்ட தமிழும் தமிழகமும் இன்றைக்கு முழுக்க முழுக்கப் பன்னாட்டுச் சுரண்டல்களுக்கும் இந்திய அரசதிகாரத்திற்கும் அடிமைப்பட்டுத் தன் அனைத்து ஒழுங்கு முறைகளையும் வாழ்வியல் முறைகளையும் இழந்து வருகிறது.

இவை குறித்தெல்லாம் விரிந்து அறிந்து கொள்வதன் முதல்படியாகத்தான், தமிழின் மீது, தமிழினத்தின் மீது தமிழ்நாட்டின் மீதான சமசுக்கிருத அதிகாரத்தைத் தெரிந்து கொள்வதில் முன்னுரையாகக் கீழே உள்ளவற்றை அறியத் தருகிறோம்..

முதலில் சமசுக்கிருதம் என்ற மொழியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

சமசுக்கிருதத்தில் 10,278 கோடி சொற்கள் இருப்பதாகத் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சொல்கிறார்..

“பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்” என்று சொல்வார்களே, அந்த வகையில் அவர் சொல்லி இருக்கும் இந்த அண்டப்புளுகு சிரிப்பதற்கானதா? சினப்படுவதற்கானதா?

உலக ஆய்வாளர்கள் பல மொழிகளையும் ஆய்ந்து கண்டறிந்து பலவகையில் மொழிகளின் சொற்கள் எண்ணிக்கையைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்..

2015 இல் வெளியான ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் இருபதாம் பதிப்புக்குரிய ஆங்கில அகராதியின்படி ஆங்கிலத்தில் ஓர் இலக்கத்து 76 ஆயிரத்து 476 சொற்கள் உள்ளன என்பதாக அறிவித்திருக்கிறார்கள்...

கொரிய மொழியில் பதினோரு லட்சம் சொற்கள் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்..

சப்பானிய மொழியிலும் அதற்கிணையாக இருப்பதாகக் கூறுகிறார்கள்..

தமிழில் ஒன்றரை இலக்கம் சொற்களுக்கும் மேலாகத் தொகுக்கப்பட்டிருப்பதாகப் பதிவு உள்ளது..

இந்நிலையில் எந்த மொழியிலும் ஒரு கோடி அளவில் சொற்கள் இருப்பதாகக் கூறுவதேகூட பொய்க் கருத்து என்றே ஏற்றுக்கொள்ள வேண்டும்... இந்த நிலையில் குருமூர்த்தி சமசுக்கிருதத்தில் பத்தாயிரத்து 278 கோடி சொற்கள் இருப்பதாகக் கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு என்று புரிந்து கொள்ள வேண்டும்...

பாணினி எழுதிய அசுட்டாத்யாயி சமசுக்கிருதத்தில் எழுதப்பட்ட நூல் அன்று, என்பதைப் பல இடங்களில் விளக்கி இருக்கிறோம். அந்தக் காலத்தில் சமசுக்கிருதம் என்று ஓர் மொழி தோன்றியிருக்கவேயில்லை என்பதைப் பாணினியே பதிவு செய்திருக்கிறார்...

கி.பி. 150 ஆண்டுகளுக்கு முன்பாகச் சமசுக்கிகருத மொழியின் பயன்பாடு இருந்ததற்கான சான்றுகள் இல்லை..

கி.பி. 150இல் எழுதப்பட்ட சமசுக்கிருத எழுத்துப் பதிவுகள் அசோகனின் பிராமி எழுத்து முறையிலேதான் முதன்முதலாகப் பதிவாகியிருக்கிறது.

மேலும், சமசுக்கிருதத்தின் மீது தமிழர்களுக்கு மறுப்பு வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகப் பொய்க் கருத்துகளை அள்ளி விடுகிறார் குருமூர்த்தி...

சமசுக்கிருதத்திற்கும் தமிழுக்கும் இடையேயிருந்த ஆழ்ந்த உறவை வெளிப்படையாகத் தொல்காப்பியம் கூறுவதாகச் சொல்லுகிறார். அதன் பாயிரத்தில் திருவிற்பாண்டியன் அவையில், நான்கு வேதங்களும் கற்றுணர்ந்த அதங்கோட்டாசான் தலைமையில், அவர் எழுப்பிய ஐயங்கள் பலவற்றையும் தீர்த்து ஐந்திரம் கற்ற தொல்காப்பியன் எனத் தன் பெயரைக் கூறிப் புகழ்பெற பாடினான் - எனத் தொல்காப்பியப் பாயிரத்தைப் பற்றிக் கதை விடுகிறார்..

தொல்காப்பியப் பாயிரத்திலுள்ள நான்மறை என்பது நான்கு வேதங்கள் என்பதாகத் திரித்துக் கூறுகிறார்..

தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் வேதங்கள் தொகுக்கப்பட வில்லை என்பது மட்டுமல்ல; நான்கு வேதங்களாகவும் உருவெடுக்க வில்லை; பகவத்கீதை எழுதப்பட்ட கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில்கூட வேதங்கள் மூன்று வேதங்களாக மட்டுமே இருந்திருக்கின்றன என்பதை, வேதங்கள் மூன்று என்பதாகவே பதிவு செய்திருப்பதிலிருந்து கவனித்தாக வேண்டும்...

இந்நிலையில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தில் உள்ள நான்மறை என்பது நான்கு வேதங்களைக் குறிப்பிடுவதாகச் சொல்வது கதை அளப்பு முயற்சி இல்லாமல் வேறல்ல...

சமசுக்கிருதம் இயற்கையாகத் தோன்றிய மொழி அன்று..

காலத்தின் தேவைக்கேற்ப ஆரியப் பார்ப்பனியக் கூட்டத்தினரால், அவர்களின் அதிகார நலனுக்காக அதை அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள்.. அதற்கென்று தனித்த எழுத்து வடிவம் இல்லை..

பாணினியால் எழுதப்பட்ட அஷ்டாத்யாயி - நூலில் சமசுக்கிருதம் என்பது ஒரு மொழியாகக் குறிப்பிடப்படவில்லை..

அந்தக் காலத்தில் ஆட்சி செய்த அரசர்கள் சிந்து, கங்கைக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் அரசுகளை அமைத்திருந்தபோது, விரிந்த அந்த நிலப்பரப்பில் அதிகாரத்தைச் செலுத்துவதற்காக ஆங்காங்கே புழக்கத்திலிருந்த பல்வேறு இனக்குழுக்களின் மொழிகளைத் தொகுத்து நிரல் படுத்தி எழுதுவதற்கான முயற்சியாகவே அந் நூல் தொகுக்கப் பட்டதாக அறியமுடிகிறது.. அப்படியாகத் தொகுத்து எழுதப்பட்ட வற்றுள் தேர்ந்த ஒன்றை ஒருமுகப்படுத்தி அதிகாரத்திற்காக ஆக்கிக்கொண்ட நோக்கமே, அந்நூலைத் தொகுத்ததின் நோக்கமாகத் தெரிகிறது. பிராகிருதம், பாலி, அர்த்தமாகதி போன்ற பல மொழிகள் அக்காலத்தில் அவ் வட பகுதிகளில் நிலவி வந்திருக்கின்றன..

அவற்றிலிருந்தான கலவை மொழியாகவே, இன்னும் சொன்னால் கலந்து செய்யப்பட்ட மொழியாகவே சமசுக்கிருதம் இருந்ததை உணர முடியும்.

தமிழை மூலமாகக் கொண்ட, தமிழிலிருந்து திரிந்ததான வடபால் திராவிட மொழியாகப் பிராகிருதம் இருந்ததால் பிராகிருதத்தின் வழியாகச் சமசுக்கிருதம் உருக்கொண்ட காரணத்தினால் தமிழிய மூலத்தோடான பல சொற்களும் சமசுக்கிருதத்தில் உண்டு..

அசோகர் ஆண்ட கி.மு. 360ஆம் ஆண்டுகளில் கற்பாறைகளில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் பாலி, பிராகிருத மொழிகளைச் சார்ந்தவையே அல்லாமல் சமசுக்கிருதத்தைச் சார்ந்தவை அல்ல..

தமிழிய எழுத்து வடிவத்திலிருந்து உருவாக்கிக் கொண்ட வடபால் பிராமி எழுத்துகளைக் கொண்டே பிராகிருதமும், பாலியும் அதன் பின்னால் சமசுக்கிருதமும் எழுதப்பட்டன என்பதை அறிய வேண்டும்.

சமசுக்கிருதத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு எழுத்து கி.பி. 150 ஆண்டுகளுக்குப் பிந்தையதாக உள்ளனவே அன்றி அதற்கு முந்திய பதிவுகள் எங்கும் இல்லை.

அந்தக் கல்வெட்டும் அசோகனின் பிராமிய எழுத்து வடிவில் எழுதப்பட்டிருக்கிறதேயன்றி சமசுக்கிருதத்திற்கு என்று தனி எழுத்துமுறை அப்போதும் தோன்றிட வில்லை... கிபி ஐந்தாம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் பல்லவர் காலத்தில் புழக்கத்தில் இருந்த கிரந்த எழுத்துகளிலேயே பின்னர், சமசுக்கிருதம் எழுதப் பட்டிருக்கிறது..

அதன் பிறகு 11ஆம் நூற்றாண்டளவில்தான் சமசுக்கிருதம் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டது..

இந்த அளவில் சமசுக்கிருதத்தின் கால வளர்ச்சியை விளங்கிக் கொண்டு அதன் அதிகாரப் போக்கு எப்படி வளர்ந்தது என்பது குறித்துப் பார்ப்போம்..

சமசுக்கிருதத்தின் நுழைவும் கலப்பும்  2000 ஆண்டளவினதே என்றாலும், வெகுமக்களிடையேவான தன் முழு அதிகார ஆட்சிப் போக்கும் சில நூற்றாண்டுகளை உடையதே..

அரசர்கள் காலத்தில் என்று எடுத்துக் கொண்டால், பல்லவர் காலங்களிலும், பிற்காலச் சோழர்களுக்குப் பிறகும், அதன்பிறகு நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆண்ட காலங்களிலும் சமசுக்கிருதமே அரசு அதிகார முதன்மை மொழியாக இருந்திருக்கிறது.. எனவே, அக்காலங்களில் அரசக் குடும்பங்களின், மிகப் பெரும் நிலவுடைமைக் குடும்பங்களின் விழாக்கள், சடங்குகளில் மட்டுமல்லாமல், அரசு அதிகாரங்களுக்கு உட்பட்ட பெரும் கோயில்களில் ஆரியப் பார்ப்பனர்களின் அதிகார வலியுறுத்தத்தினால் சமசுக்கிருதமும் ஓதப்படும் நடைமுறை ஏற்பட்டிருக்கிறது.. ஆரியத்திற்கெதிரான தமிழிலக்கியங்கள் பல அழிக்கப்பட்டன. பல இலக்கியங்களில் இடைச்செருகல்கள் நடத்தப்பட்டன. கல்வி என்பது குலக்கல்வியாகவும், சமசுக்கிருதச் சார்புடைய கல்வியாகவுமே ஆக்கப்பட்டன.

ஆங்கிலேயர்கள் வரவுக்குப் பின்னர் அவர்களின் ஆட்சி அதிகாரத்தோடு ஒருபக்கம் இணங்கிச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஆரியப் பார்ப்பன அலுவலர்கள், சமசுக்கிருதத்தைக் கல்வியிலும் திணிப்பதற்குப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர்..

சமசுக்கிருதமே மூத்தமொழி என்பதாகவும், இந்தியாவின் 'தத்துவங்களெல்லாம் சமசுக்கிருத்திலேயேதான் இருப்பதாகவும்  உலகெங்கும் பரப்பினர்..

அதனால், பார்ப்பனர்கள் மட்டுமே பெருமளவில் படிக்க நேர்ந்த மருத்துவக்கல்வி உள்ளிட்ட உயர்கல்விகளில் பார்ப்பனரல்லாதார் வரவைத் தடுப்பதற்காகச் சமசுக்கிருத மொழியையும் படித்தாக வேண்டும் என்கிற நடைமுறையை உருவாக்கினர்.

இன்னொரு புறத்தில், இன்றைய அளவில் நூறு இருநூறு ஆண்டுகளுக்கு முன்புகூட, சில முற்பட்ட சாதியினர் உள்ளிட்டு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் எவரும் பார்ப்பனர்களை வைத்து விழாக்கள், குடும்ப நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாக இல்லை.. மேற்படி சாதிமக்களின் நிகழ்வுகளுக்கு ஆரியப் பார்ப்பனர்களும் வர ஒப்புவதுமில்லை..

எனவே, பெரும்பான்மை மக்களின் குடும்ப நிகழ்வுகளில், பெயர் வைப்புகளில், சிறிய கோயில்களின் வழிபாடுகளில், குடமுழுக்குகளில், சடங்குகளில் சமசுக்கிருத வழக்கங்கள் அக் காலங்களில் இருந்திடவில்லை.. இந்து என்று அக் காலங்களில் தங்களைச் சொல்லிக் கொள்வாரும் இல்லை..

1938 தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத் தாக்குதல்களை அரசுகள் ஒருபுறம் அடக்கிக் கொண்டிருக்க, திட்டமிட்ட சூழ்ச்சியாய் அவற்றை எதிர் கொள்ளும் நோக்கில், ஆரியப் பார்ப்பனர்கள் களப் பணிகளைச் செய்யத் தொடங்கினர்..

1925ல் தொடங்கப்பட்ட ஆர்.எசு.எசு களங்களை உருவாக்கிக் கொள்ளும் நிலையில், மாவட்டந் தோறும் வட்டந் தோறும் அதிகார நடுவ நிறுவனங்களை அமைத்தனர்..

பல்வேறு வகையில் அந்த அதிகார நடுவங்கள் அமைந்திருந்தன.. பெருங்கோயில்களை முழுக்கமுழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர், ஆங்கிலேயர்களைப் பார்த்து அவர்களைப் போன்றே, கல்விக்கூடங்கள் இணைந்த அதிகார நடுவங்களை உருவாக்கிக் கொண்டனர்.. அரசின் அதிகார நடுவங்களுக்குள் நுழைகிற திட்டத்தில், உச்சநீதிமன்ற நயனகர் (நீதிபதி) தொடங்கி, நிர்வாகத் துறைகள், படைத்துறைகள் அதிகாரங்களில் என எல்லாவற்றிலும் முழுமையாக நுழைந்து கொண்டனர்..

சட்டமன்ற நாடாளுமன்றங்களிலும் அவர்களின் அதிகாரம் தாண்டவமாடியது..

1947இல் ஆங்கிலேயர்கள், ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவிற்கு விடுதலை கொடுத்ததாய் விடைபெற்றுச் சென்ற பின், அரச அதிகாரங்கள் முழுமையையும் பார்ப்பன பனியாக்கள் மட்டுமே கைப்பற்றிக் கொண்டனர்..

அதன்பிறகு இந்திய அரசியல் அதிகாரம் முழுக்க முழுக்கத் தங்கள் கைகளுக்கு வந்து விட்ட நிலையில் அனைத்து துறைகளிலும் சமசுக்கிருத அதிகாரத்தை அதிகப்படுத்தினர்.

றீ இந்தியாவின் அலுவல் மொழிகள் 14 என்று அறிவித்து, அந்த 14 மொழிகளில் சமசுக்கிருதமும் ஒன்றாக அறிவித்துக் கொண்டனர்.

அதிலிருந்து 1957ஆம் ஆண்டுகளில் சமசுக்கிருத ஆணையம் ஒன்றை இந்திய அரசு தொடங்கியது.

1970இல் இராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சன்ஸ்தான் - என்ற நிறுவனத்தைத் தொடங்கியது இந்திய அரசு, இந்தியாவில் உள்ள எந்த மொழிக்கும் ஒரு நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தை அமைக்காத இந்திய அரசு, சமசுக்கிருதத்திற்கு மட்டும் 18 நிகர்நிலை பல்கலைக் கழகங்களை அமைத்திருக்கிறது. அவற்றுள் மூன்று பல்கலைக்கழகங்களை நடுவண் பல்கலைக்கழங்களாக இப்போது உயர்த்தியுள்ளது.

அந்த நடுவண் பல்கலைக்கழகங்கள்வழி ஐந்து சிற்றூர்களைச் சமசுக்கிருதச் சிற்றூர்கள் என்பதாகப் பொறுப்பேற்று உருவாக்கிட ஏறத்தாழ 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிற்றூருக்கு 50 முதல் 100 பிராமண குடும்பங்கள் என்கிற அளவில் அவர்களுக் கெல்லாம் நல்கை கொடுத்துச் சமசுக்கிருதத்திலேயே பேசுவதற் கான பயிற்சியும் கொடுத்து ஏற்பாடு செய்கின்றனர்..

மாந்த வள மேம்பாட்டுத் துறையின் வழியாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்கிற கணக்கில் உலகச் சமசுக்கிருதம் மாநாடுகளை இந்திய அரசே தன் பொறுப்பில் பல நாடுகளில் நடத்தி வருகிறது.. இதுவரை 18 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தியாவிற்குள் மூன்று மாநாடுகளும், பிற வெளிநாடுகளில் 15 மாநாடுகளும் நடத்தப்பட்டுள்ளன. மாநாடு ஒன்றிற்கு 1000 கோடி என்கிற அளவில் ஏறத்தாழ 18 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய அரசே இந்த மாநாடுகளுக்காகச் - செலவிட்டிருக்கிறது.. கடைசி மாநாடு 2018இல் கனடாவில் நடைபெற்றது.

சன்சுதான்கள் (Sansthan) என்று அழைக்கப்பட்டு வரும் பதினெட்டு நிகர்நிலைப் பல்கலைக்கழக நிறுவனங்களிலெல்லாம் சமசுக்கிருதம் மொழி அளவில் பயிற்றுவிக்கப்படுவதைக் கடந்து பார்ப்பனிய வைதிக மதக் கோட்பாடுகளை எல்லா நிலைகளிலும் பயிற்றுவிப்பதும், குறும் படங்களாய் எடுத்துப் பரப்புவதுமாக, உலகளவில் சமசுக்கிருதத்தை நிலைப்படுத்துவதற்கான திட்டச் செயல்பாடுகளைச் செய்து வருகிறது. இந்தியாவெங்கும் உள்ள பல்கலைக் கழகங்களில் மட்டுமன்றி, உலகில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங் களில் சமசுக்கிருத மொழித் துறைகளை உருவாக்குவது, சமசுக்கிருத இருக்கைகளை அமைப்பது, அதற்கென மாணவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ. 10 பேராசிரியர்களை அமர்த்திக் கொள்வது, அவற்றுக்கெல்லாம் உலக அளவிலும் நன்கொடைகளைப் பெறுவது என உலகளவில் வேலை செய்கின்றனர்.

தமிழகத்தை மராட்டிய சரபோஜி மன்னர் ஆண்ட காலத்திலும், அதன் பிறகும், தஞ்சை சரபோஜி மகால் நூலகத்தில் தொகுக்கப்பட்ட தமிழ் ஓலைச் சுவடிகளின் படிகளையெல்லாம் சமசுக்கிருதத்தில் பெயர்த்து எழுதிக் கொண்டு, தமிழ் ஓலைச் சுவடிகளை அழித்த வேலைகள் நடைபெற்றன.

தமிழர்களின் அரிய சித்த மருத்துவ நூல்கள் பலவற்றை ஆரிய வைத்தியம்(ஆயுர்வேதம்) என்கிற பெயரில் மொழிபெயர்த்துக் கொண்டு, மூலச் சுவடிகளை அழித்ததும், பெருஞ் சிறப்பு வாய்ந்த தமிழ்இசையின் அரிய பதிவுகளையெல்லாம் சமசுக்கிருத வயப்படுத்திக் கொண்டு கர்நாடக சங்கீதம் என்கிற பெயரில் மாற்றிக் கொண்டதும், தமிழின் கூத்து, நடனக் கலைகளின் சிறப்புகளையெல்லாம் திருடி சமசுக்கிருதத்தில் மாற்றிக் கொண்டதோடல்லாமல், மூலங்களை அழித்துவிட்டுப் பரத நாட்டியம் என்பது சமசுக்கிருதத்திலேயே மூலத்தைக் கொண்டது என்பதாகப் பொய்யுரைத்து வருவதும், சமசுக்கிருத அதிகார வெறியின் பல்வேறு நடைமுறைகள் ஆகும்.. இவற்றையெல்லாம் அவ்வவ் துறைசார்ந்த அறிஞர்கள் பலர் எடுத்துக்காட்டி நூல்கள் பலவற்றை எழுதி இருக்கின்றனர்..

பழஞ்சுவடிகளையெல்லாம் தொகுத்து வெளியிடுவதாகக் கூறி இதுவரை 14க்கும் மேற்பட்ட சமசுக்கிருதக் கலைக்களஞ்சியங் களைச் சென்னைப் பல்கலைக்கழகச் சமசுக்கிருதத்துறை வெளிக் கொண்டு வந்திருக்கிறதாம். இதற்கெல்லாம் இந்திய அரசும், இந்தியப் பல்கலைக்கழக நல்கை(மானிய)க் குழுவும் பெரும் துணை செய்திருக்கின்றன.

இந்திய அரசின் மாந்த வள மேம்பாட்டுத் துறையின் பெரும் பணிகள், பார்ப்பனிய மேம்பாட்டிற்கானதாகவும் சமசுக்கிருத மேம்பாட்டிற்கானதாகவுமே நடைபெற்று வருகின்றன. அந்தத் துறைக்கே ஆரியப் பார்ப்பனிய சமசுக்கிருத மேம்பாட்டுத் துறை - என்று பெயர் வைத்துக் கூறுவது பொருத்தமானதாக இருக்கும் படியான வேலைகளையே அத்துறை செய்து வருகிறது.

இந்திய அரசு சமசுக்கிருதத்திற்கான அதிகாரத்தை உருவாக்கி, அம் மொழியை, அதன்வழி ஆரியப் பார்ப்பனியத்தை மேற்சுட்டப் பட்ட பல வகைகளிலெல்லாம் வலுப்படுத்திக் கொள்கிறது என்றால் சமசுக்கிருத அதிகாரங்களை நிறுவுவதற்கு ஆரியப் பார்ப்பனர்கள் செய்துவரும் சூழ்ச்சிகள் இன்னும் அதிகப்படியானவை.

கோயில்களிலும் வழிபாடுகளிலும் குடமுழுக்கு போன்ற விழாக்களையும் சிறப்புகளையும் சமசுக்கிருதத்திலேயே கடந்த சில நூற்றாண்டுகளாகச் செய்துவருகின்றனர். சமசுக்கிருதத்தில் வழிபடுவதாலேயே  வழிபடுவோரின் வேண்டுகை இறைவனைச் சென்றடையும் என்பதான புளுகைச் சமசுக்கிருத விற்பன்னர்கள் செய்து வருகின்றனர். சமசுக்கிருத ஒலிப்பு முறைகளில் ஏதோ ஓர் அதிர்வு இருப்பதாகவும், அந்த அதிர்வு அலையின் காரணத்தால் தான் கடவுள் செவி சாய்ப்பதாகவும் அவர்கள் கதைகட்டி விடுகின்றனர். எனவே தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் கோயில்களில் வழிபாடு, பூசனை செய்வது என்பது கடவுளுக்கு உகந்தது அல்ல என்பதோடு அவ்வழிபாடும் நிறைவேறாது என்பதாகவும், அப்படி வேறு மொழிகளில் செய்வதன் வழி அந்தக் கோயில் தீட்டுப்பட்டுவிடும் என்பதாகவும் கூறி சம்ப்ரோக்ஷண யாகம் செய்து தீட்டுக் கழித்தாக வேண்டும் என்பதாகவும் கூறிப் பொய்யுரைப்பது மட்டுமல்லாமல் அந்நடைமுறைகளையே செய்து வருகின்றனர், பார்ப்பனிய வெறிபிடித்த மடாதிபதிகள்!

அரசு விழாக்களை, நிகழ்வுகளைத் தொடங்கி வைப்பதில், புதிய திட்டங்களைத் தொடங்குவதில் மட்டுமல்லாமல், குடும்ப நிகழ்வுகளில் சடங்குகளிலெல்லாம் சமசுக்கிருதத்திலேயே மந்திரங்கள் ஓதுவதும், யாகங்களை வளர்த்து சமசுக்கிருத மந்திரங்களைச் சொல்லுவதுமான நடைமுறையையே உருவாக்கி வருகின்றனர்.. அரசினர்களும், ஆட்சி அதிகாரிகளும் பெரும் பெரும் பண முதலைகளும் இவ்வாறான நடைமுறைகளைச் செய்வதன்வழி, அதையே மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதான பழக்கங்களையும் மக்களிடையே உருவாக்குகின்றனர்..

குழந்தைகளுக்குப் பெயரிடுவது, அரசின் நலத்திட்டங்களுக்குப் பெயரிடுவது, நிறுவனங்களுக்குப் பெயரிடுவது என்பதான அனைத்துப் பெயர் சூட்டல்களையும் சமசுக்கிருதத்திலேயே செய்வதான அதிகார நடைமுறையைப் பார்ப்பனிய வெறியர்கள் தங்கள் ஆட்சி அதிகார வலிமையின் மூலமாக நிறுவி வருகின்றனர்..

ஆக, இவைபோன்ற எண்ணற்ற திட்டங்களையும் இந்திய அரசும் பார்ப்பனிய வெறியர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவற்றின் மூலம் சமசுக்கிருத, பார்ப்பனிய அதிகாரங்களைத் தக்கவைத்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் தமிழர்களின் அடிப்படை வாழ்வுரிமைக்காகச், சமன்மை உணர்வைத் தமிழர்கள் காத்துக் கொள்வதற்காகத் தமிழையும் தமிழரையும் அதிகாரம் வாய்ந்த செயல்படுத்தங்களில் ஈடுபடுத்துகிற அடிப்படையான நிறுவன முயற்சிகளை நிறுவுதல் வேண்டும்.

தமிழை அனைத்து நிலைகளிலும் அதிகாரப்படுத்துவதற்குத் திட்டமிட்ட போராட்டங்கள் மட்டும் போதுமானவையாகி விடாது.. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுக் கூடங்கள், சிறுதொழில் - பெருந் தொழிற்கூடங்கள், ஊடகத்துறை - என அனைத்து நிலைகளிலும் நிறுவனங்களை அமைத்துச் செயல்பட வேண்டிய தேவை மிகவும் முகாமையான நிலையில் உள்ளது..

புதிய தமிழகத்தைப் படைக்க புதிய முயற்சிகள், உத்திகள் தேவை.

நாளைய விடுதலைத் தமிழ்த் தேசத்தில் அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் எனப் போராட்டங்களை மட்டும் முன்னிறுத்திக் கொண்டு தமிழர்கள் வாளாய் இருந்தோமானால் காலத்தையும் அதிகாரங்களையும் நாம் இழந்து போவோம்..

எனவே,

கடந்தகால இழப்புகளைப்போல எவற்றையும் இழந்துவிடாமல், அதிகாரம் கொண்ட தமிழிய நிறுவனங்களையும், தமிழ் நிறுவனங்களையும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அடித்தளங்களாய் அமைப்போம்!

புதிய தமிழ்க் குமுகமே!

புதிய தமிழ் வரலாற்றைப் படைப்போம்! வாருங்கள்...

- பொழிலன்