அங்கவை, சங்கவை என்னும் பெயர் கொண்டவர்கள் யாவரென்று கேட்டால், வள்ளல் பாரியின் பெண்கள் என்றே பலரும் கூறுவர். உண்மையில் பாரியின் பெண்மக்களுடைய பெயர்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் (112) கீழே அப்பாடலைப் பாடியவர்கள் பாரி மகளிர் என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது. பாரிமகளிர் எனின் பாரியுடைய பெண்கள் என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது. அவர்களுடைய இயற்பெயர் இன்னவென்று குறிப்பிடப்படவில்லை. பாரியின் மக்களின் பெயரில் அறியப்படும் பாடல் இதுவொன்றே. மகளிர் என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஒருவருக்கு மேற்பட்ட பெண்மக்கள் பாரிக்கு இருந்தனர் என்று அறியப்படுகிறது. மற்றெந்த நேரடிச் செய்தியும் இவர்களைப் பற்றி அறியக் கிடைக்கவில்லை. மேலும்,

“பரந்துஓங்கு சிறப்பின் பாரி மகளிர்” (புறம்.200:12)

“நெடுமாப் பாரி மகளிர்” (புறம்.201:5)

“கைவண் பாரி மகளிர்” (புறம்.202:15)

என மேலும் மூன்று பாடல்களில் பாரிமகளிர் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இம்மூவிடங்களிலும் அங்கவை, சங்கவை என்ற பெயர்கள் பயன்படுத்தப்படவில்லை.

“ஆய்தொடி அரிவையர் தந்தை” (புறம்.117:10) என்று கபிலர் பிறிதோரிடத்திலும் பொதுவாகவே குறிப்பிட்டுள்ளார். பாரிமாய்ந்த பின்னர் விச்சிக்கோன் என்றும் மன்னனை அணுகிப் பாரிமகளிரைத் திருமணம் செய்துகொள் எனக் கபிலர் கேட்டார் (புறம்.200). அவன் மறுத்தான். அவ்வாறே இருங்கோ வேளிடமும் கேட்டார் (புறம்.201). அவனும் மறுத்தபிறகு கழாஅத்தலையாரை இகழ்ந்த உன் முன்னோன் ஒருவனின் அரையம் என்னும் பெருநகரம் அழிந்ததையொப்ப என்னை இகழ்ந்ததால் உனது குலம் அழியாது நிலைப்பதாக எனப் பாடிவிட்டுச் சென்றுவிட்டார் (புறம்.202). இம்மூன்று பாடல்களையும் பாடியவர் பாரியுடன் மிக நெருங்கிய தோழமைபூண்ட கபிலர். அத்தகைய கபிலரே பாரிமகளிரின் இயற்பெயர்களைச் சுட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் பாரி பற்றிய தெளிவான செய்திகள் இல்லை.

“மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு – நீருலையுள்

பொன்தந்து கொண்டு புகாவாக நல்கினாள்

ஒன்றுறா முன்றிலோ இல்”    (381)

என்று பழமொழி நானூறு நூலில் ஒரு பாடல் உள்ளது. இப்பாட்டுத் தமிழ் நாவலர் சரிதை நூலில் இடம் பெற்றுள்ள சில செய்திகளுக்கு முன்னோடியாக உள்ளது. இதில், தங்களுடைய தந்தையையும் மலையையும் இழந்தபிறகு பாரியின் மகள் ஓரிடத்தில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் மழை வறண்டு விட்டது. அப்போது அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்த வழிப்போக்கர் (பாணன், பொருநன், முதலானவர்களில்) ஒருவர் உணவு கேட்க, உணவிற்கான உலையுள் பொன்னைப் போட்டுக் கொடுத்தார் எனச் சொல்கிறது. அத்துடன் பாரிமகளிர் எனப்படாது பாரிமகள் என்ற ஒருத்தியை மட்டும் குறிப்பிட்டுள்ளதையும் கருத்திற்கொள்ள வேண்டும்.

ஆகவே பதினெண் கீழ்க்கணக்கு, மேல்கணக்கு ஆகிய 36 நூல்களிலும் பாரியின் பெண்களின் இயற்பெயர் சுட்டப்படவில்லை என்பது தெளிபு. அத்துடன் கீழ்க்கணக்கிலேயே (பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டு) பாரியின் மக்கள் ஒருவரா? இருவரா? என்ற தெளிவில்லை.

கபிலர் இருங்கோவேளைச் சந்தித்ததற்குப் பிறகான செய்திகள் புறநானூற்றில் இல்லை. அங்கே தொடர்ச்சி அறுபட அண்ணாமலைச் சதகத்தில் ஒரு கண்ணி கிடைக்க அங்கவையும் சங்கவையும் இருபத்தோராம் நூற்றாண்டிலும் சங்க காலப் பாரியின் மக்களாகத் தொடர்கின்றனர்.

தமிழறிஞர் இரா.இராகவையங்காரால் யாக்கப்பட்ட 753 வெண்பாக்களாலான “பாரிகாதை” (1937) என்றொரு நூல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறையிலிருந்து முதல் நூலாக வெளிவந்தது. அதன் முன்னுரையில், மாம்பாக்கம் உபாத்தியாயரென்னும் திருச்சிற்றம்பல நாவலர் என்பார் இயற்றிய அண்ணாமலைச் சதகத்தில் (பதிப்பு 1908), பாரியின் மகள்களுடைய பெயர்கள் முற்கூறப்பட்டவாறு சுட்டப்பட்டுள்ளனவென்று குறிப்பிட்டுள்ளார். அச்சதகத்தில் பாரி சிங்கள நாட்டையாளும் மன்னன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.

சிங்கள மெனுந்தேய முழுதாளு மன்னன்

       சிறந்தபேர் பாரிசாளன்

       செய்தவப் பயனாற் பிறந்தநற் குணமான

       சிறுமியங் கவைசங்கவை

மங்கையர்க ளிருவரை வளர்த்தெடுத் தௌவையார்

       மாமுகக் கணபதிகையால்

       மணவோலை யெழுதிமும் மன்னரைக் கோவலூர்

       வரவழைத் தறுகிடற்குத்

தங்கிப் பனந்துண்ட மரமாகி யேபழந்

       தரநதிப் பெண்ணை நெய்பால்

       தான்வரப் பாடியப் பெண்களைத் தெய்விகத்

       தலைவன் மணம்புரியவே!”          (பா.22)

இப்பாடலில், பாரி என்பதற்குப் பதிலாகப் பாரிசாளன் என்றிருப்பதைக் கவனிக்க வேண்டும். ஒளவையார் இயற்கை இறந்த ஆற்றலுடையவராக இப்பாடலில் சித்திரிக்கப்பட்டுள்ளார். கணபதியை வரவழைத்து மூவேந்தர்க்கும் ஓலை எழுதச் சொன்னாராம். ஔவையார் பாடலியற்ற அதைக் கேட்டுக் காய்ந்த பனைமரத்துத் துண்டமொன்று வளர்ந்து மரமாகிப் பழம் கொடுத்ததாம். அவ்வாறே பெண்ணையாற்றில் நீருக்குப் பதிலாக நெய்யும் பாலும் ஓடச் செய்தாராம். இவற்றைப் பார்த்து வியந்த திருக்கோவலூரை ஆண்ட தெய்வீகன் என்னும் மன்னன் அவ்விருவரையும் மணந்தாராம். இவன் ஏற்கெனவே, சேரனின் மகள் பதுமாவதி, பாண்டியன் மகள் காஞ்சனமாலை, சோழனின் மகள் சண்பகமாலை முதலோனோரை மணந்ததாக இந்நூலில் (பா.20) குறிப்பிடப்பட்டுள்ளது. இவனுக்குப் பத்மாவதி, காஞ்சனமாலை, சண்பகமாலை, கனகை, கலாவதி, உற்பலமாலை, கமலக்கண்ணி, உற்பலலோசனை, அன்னப்பிரபை, கமலாவதி, அங்கவை, சங்கவை” என மனைவிமார்கள் பன்னிருவர் என்று 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தெய்வீகபுராணம் என்னும் திருக்கோவலூர்ப் புராணத்தில் (1901:5) குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த “தமிழ் நாவலர் சரிதை” (1916) என்ற நூலில் ஒளவையார் பாடியனவாகவுள்ள வெண்பாக்கள் ஏழனுள்,

“சேரலர்கோன் சேரல் செழும்பூந் திருக்கோவல்

ஊரளவுந் தான்வருக உட்காதே – பாரிமகள்

அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான்

சங்கியா தேவருக தான்” (பா.2, ப.72)

என்ற வெண்பாவில் பாரியின்மகள் அங்கவை பெயர் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணாமலைச் சதகத்தில் குறிக்கப்பட்டதைவிடக் கூடுதலாக இந்நூலில், ஒளவையார் வருணனை நோக்கிப் “பொன்னை மழையாகப் பொழி” (7) என்று ஆணையிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. நம்பகத்தன்மையற்ற பல செய்திகள் இதன்கண் உள்ளன. பாரி சிங்கள நாட்டு மன்னன் எனக்கூறும் சதகத்தின் ஏனைய செய்திகள் உண்மைதானா என்ற ஐயம் எழுகிறது.

சதகத்தில் இடம்பெற்றுள்ள ராசர், வசந்தராயர் (13), கெம்பீரதுரை (17) முதலான சொற்களால் அதன்காலம் 17ஆம் நூற்றாண்டதாகலாம். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மீனாட்சியைத் “துரைமகள்” (28:4, 82:4, 92:4) என்றே குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார். குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு என்பது ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, துரையென்ற சொற்கள் இடம்பெற்றுள்ள சதகத்தின் காலத்தையும் அவ்வாறே கொள்வது தவறில்லை.

கோவலூர்ப் புராணத்தில் சொல்லப்பட்ட செய்திகள் சிறிது மாற்றத்துடன் சதகம், சரிதை ஆகியவற்றில் மீளவும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாவலர் சரிதை அங்கவையை மட்டும் ஏற்றுக்கொண்டு சங்கவையை மறுதலித்துள்ளது கருத்திற்கொள்ளத்தக்கது. ஆகவே, பாரியின் மகளிர் அங்கவை, சங்கவை என்ற கருத்தில் 17ஆம் நூற்றாண்டிலேயே முரண்பாடு ஏற்பட்டுள்ளதை அறியலாம். அதேநேரத்தில் அண்ணாமலைச் சதகம் சிறுமி (பன்மைப்பாலில் குறிப்பிடாது ஒருத்தி என்றவகையில்) அங்கவை சங்கவை என்று குறிப்பிட்டுள்ளதை நோக்க அது ஒரே பெயரோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

எது எப்படியாயினும் மூன்று நூல்களும் தரும் செய்திகள், செவ்விலக்கியக் காலத்துப் பாரிவேள் ஆட்சிசெய்தபின் பன்னூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவை. வெண்பா யாப்பும், விநாயகர் வணக்கமும் சங்க இலக்கிய நூல்களில் பயின்றுவரவில்லை. வெண்பா கலிப்பாட்டில் கலந்து வந்துள்ளதேயன்றித் தனித்தெங்கும் பயன்படுத்தப்படவில்லை. ஆகவே, இவற்றில் உண்மையிருக்கும் வாய்ப்பில்லை. தமிழ் நாவலர் சரிதையில் பாரியின் பெண்மக்களைப் பற்றி ஔவையார் பாடியதாகக் காணப்படும்

“பாரி பறித்த பறியும் பழையனூர்க்

காரியன் றீந்த களைக்கோலும் – சேரமான்

வாராயோ என்றழைத்த வார்த்தையு மிம்மூன்றும்

நீலச்சிற் றாடைக்கு நேர்” (ப.18)

என்ற பாடலை அடிப்படையாகக்கொண்டு “நீலச் சிற்றாடை” என்றொரு நாடகம் மிகப் பிற்காலத்தில் எழுதப்பட்டு, தமிழ்நாடு அரசின் ஐந்தாம் வகுப்புப் பாடநூலில் (1993) இடம்பெற்றது. 2007இல் வெளியான சிவாஜி திரைப்படத்தில்கூட அங்கவை, சங்கவை என்ற பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. அப்பெயர்கள் நல்ல தமிழ்ப்பெயர்கள் என்று படத்தில் ஒரு வசனம் இடம்பெறும். ஆனால் பாரியின் பெண்களை இழிவுபடுத்திவிட்டதாகப் பலர் அறியாமல் கருத்துரைத்தனர்.

திருக்கோவலூரில் வடக்கிருந்து உயிர்நீத்த கபிலர் பாரியின் நண்பர்தான் என்று நாவலர் ந.மு.வேங்கடசாமி முதலான அறிஞர்கள் கருதுகின்றனர். இதனை அடியொற்றி இராம.ஆநிரைக்காவலன் என்பார் எழுதிய “புறநானூறும் கபிலர் கல்வெட்டும்” என்ற ஆய்வு நூல் (மணிவாசகர், சென்னை, 2002) வெளியாகியுள்ளது. இந்நூலிலும் அங்கவை, சங்கவை பாரியின் மக்கள் எனப்பட்டுள்ளனர். அண்மையில் பாரிவேள் பற்றி சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” (2018) என்ற புனைவு நூலிலும் பாரிமகளிர் இப்பெயர்களாலேயே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அறிஞர் தமிழண்ணலின் கருத்தை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். “தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைக் கூர்ந்து நோக்கும்பொழுது சில உண்மைகள் புலனாகின்றன. மிகப் பழங்காலத்தே ஏற்பட்ட கடல்கோள்களால் பாண்டியநாடு பெரிதும் பாதிக்கப்பட்டது. சேரநாடும் பாதிக்கப்பட்டது. அதனால் கடல்கோள்கள், காலப்பழைமை, ஏடுகளாதலின் கறையானரித்தல், மக்களின் அறியாமை முதலியவற்றால் தமிழ் இலக்கியச் செல்வத்தில் பத்தில் ஒன்பது பகுதியை நாம் இழந்துவிட்டோம். கடல்கோள்களால் போனவையே மிகுதி. போனவைபோக இருந்தவற்றைக் காக்கும் எண்ணம், நினைவிலுள்ளதைப் பேணி எழுதி ஆவணப்படுத்துதல் என்பன காணப்படுகின்றன” (2008:31). இதனடிப்படையில் பார்த்தோமெனின் புறநானூறு தொகுக்கப்பட்ட காலத்திலேயே பாரி மகளிரின் இயற்பெயர் இல்லாமல்தான் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது என்றும் புரிந்து கொள்ளலாம்.

உறுதியாகப் பாரியின் பெண்மக்களுடைய இயற்பெயர் முற்காலத்திலிருந்த எந்நூலிலும் குறிப்பிடப்படவில்லை. பாரியின் மேற்கொண்ட பெருமதிப்பின் காரணமாக அவனுடைய பிள்ளைகளைப் பெயர்சுட்டாது பாரிமகளிர் என்றே அனைவரும் வழங்கிப் பிற்காலத்தில் உண்மைப் பெயர் முற்றாக வழக்கொழிந்திருக்கலாம். எது எப்படியாயினும் வேள்பாரியின் பெண்மக்களின் பெயர்கள் அங்கவை, சங்கவை ஆகா.

துணைநூற்பட்டியல்

1.      ஆநிரைக்காவலன், இராம., புறநானூறும் கபிலர் கல்வெட்டும், மணிவாசகர், சென்னை, 2002

2.      இராகவையங்கார், இரா., பாரிகாதை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 1937

3.      சாமி தில்லை நடேச செட்டியார், பெ. (ப.ஆ.), தமிழ் நாவலர் சரிதை, கமர்ஷல் அச்சுக்கூடம், செனை, 1916

4.      சாமிநாதையர், உ.வே. (ப.ஆ.), புறநானூறு மூலமும் உரையும், வெ.நா.ஜுபிலி அச்சுக்கூடம், சென்னை, 1894

5.      சௌந்தரராஜ உடையார், வே. (ப.ஆ.), தெய்வீகபுராணம் என்னும் திருக்கோவலூர்ப்புராணம், லார்ட் ரிப்பன் யந்திரசாலை, கும்பகோணம், 1901

6.      தமிழண்ணல், சங்க இலக்கியத் தொன்மை: அகச்சான்றுகள், நோக்கு, சென்னை, 2008

7.      திருச்சிற்றம்பல நாவலர், அண்ணாமலைச் சதகம், மதராஸ் அச்சியந்திர சாலை, சென்னை, 1908

8.      வெங்கடேசன், சு. வீரயுக நாயகன் வேள்பாரி, விகடன், சென்னை, 2018

9.      செல்வக்கேசவராய முதலியார் (ப.ஆ.), கே., பழமொழி நானூறு, எஸ்.பி.சி.கே. பிரஸ், வேப்பேரி, 1917

- முனைவர் கி.சிவா, விரிவுரையாளர், தமிழ்த்துறை, காந்திகிராமியப் பல்கலைக்கழகம், காந்தி கிராமம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.