kuthoosi gurusamyகுழந்தைகளை வளர்ப்பதிருக்கிறதே, அது ரொம்பத் தொல்லையான வேலை! அதிலும் பையன்களை வளர்ப்பது இன்னும் ரொம்பத் தொல்லை. அலட்சியமாக விட்டு விட்டால் முளைக்கும் போதே பீடி பிடித்துக் கொண்டு, ஒரு சினிமா விடாமல் சுற்றிக் கொண்டிருக்கும். படிப்பதைப் பற்றிய கவலையே இருக்காது. “சிவாஜி படித்தவரா? க்ளைவ் படித்தவரா?” என்று கேட்க ஆரம்பித்து விடும்!

ரொம்பச் செல்வமாக வளர்க்கும் ஆண் குழந்தைகளில் 100க்கு 99 அடியோடு கெட்டுப் போவது தான் வழக்கம். “ரிப்பேரா”கப் போன பிறகு பழுது பார்ப்பது ரொம்பக் கடினம், “என் அருமை மகன் படிப்பதற்குப் பதிலாக குடிப்பதற்கல்லவா கற்றுக் கொண்டிருக்கிறான்,” என்று ஏங்கும் பெற்றோர்கள் எத்தனையோ பேர்!

வயது வந்த பெரிய பையன்கள் கெட்டுப் போவதற்குச் சேர்க்கை தான் பெரும்பாலும் காரணமாயிருக்கும். ஆனால் சிறு பையன்கள் கெட்டுப் போவதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே முழுக் காரணம்.

சிறுவர்களை நாம் எப்படித் தயார் செய்கிறோமோ அப்படித்தான் வளர்வார்கள். வசதியிருந்தால் கூட வறுமையிலேயே வளர்த்து வந்தால் தான் வாழ்க்கையில் பிறருடைய வறுமையைப் பற்றிக் கொஞ்சமாவது கருதிப் பார்ப்பார்கள். பிறவியிலேயே செல்வத்தின் சிசுவாகப் பிறந்து அது போலவே தங்கத் தாம்பாளத்தில் வைத்து வளர்க்கப்படும் குழந்தைகள் உலகிலுள்ள துயரங்களை அறிய வாய்ப்பில்லாமலே போய் விடுவார்கள்.

ஆகவே, பிள்ளைகள் விஷயத்தில், அவர்களை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பதுதான் முக்கியம்.

“டேய் விச்சு! மாமா மூஞ்சியிலே துப்புடா!” என்று சொல்லிக் கொடுக்கும் பிரகஸ்பதிகள் பலர் உண்டு!

“பரண் மேலே பூச்சாண்டி இருக்கிறான் - இந்த உருண்டையை மாத்திரம் சாப்பிட்டுடா, கண்ணு” என்று சொல்லிப் பிள்ளை வளர்க்கும் மேதாவித் தாயார்கள் எத்தனையோ பேர்!

“அவாளை எல்லாம் தொட்டுண்டு விளையாடறயே, மண்டு! அவா என்ன ஜாதி? என்ன மதம்? போடா! அசடு! உடுப்புத் துணியை நனைச்சுட்டு! தலையிலே ஒரு சொம்பு ஜலத்தை கொண்டீண்டு போ!” என்று பிள்ளைக்குப் புத்தி சொல்கிற அதிபுத்திசாலி ‘ஜாதிகள்’ எத்தனையோ இருக்கின்றன!

“ஏண்டா, சம்பத்! அடுத்த வீட்டு சாமிகண்ணுப் பயலோடே உனக்கென்ன விளையாட்டு வேண்டியிருக்கு? நம் அந்தஸ்தென்ன? அவன் அந்தஸ்தென்ன? ஒரே ஜாதியாயிருந்தால் போதுமா? அவனோ வண்டிக்காரன் மகன்! நாமோ இந்த ஊர் பெரிய மிராசுதார்! நம் அந்தஸ்துக்குத் தகுந்த மாதிரி நடக்க வேண்டாமோடா?” என்று அதட்டுகின்ற பண மூட்டைகள் எத்தனையோ பேர்!

பிள்ளைகளை நாம் எப்படி வளர்க்கிறோமோ அப்படித்தான் வளரும். அவைகள் மேல் தப்பில்லை. பிள்ளைகள் காட்டில் முளைக்கும் செடி கொடிகளைப் போல் அல்ல. வீட்டில் வளர்க்கும் ஆடு - மாடு - நாய்கள் மாதிரி!

இராகு காலம் - சகுனம் - நல்ல நாள் - முதலியவைகளைப் பற்றியெல்லாம் கற்பித்து வளர்க்கும் பிள்ளைகள் பயங்கொள்ளிகளாகவேதான் இருக்கும்! பெரியவர்களான பிறகு இராணுவத்திலோ போலீசிலோ சேர்ந்தால்கூட இராகு காலம் என்றவுடனேயே துப்பாக்கியைக் கீழே போட்டு விடுவார்கள்! (இராகுகாலத்தில் சுட்டால் குண்டு எதிர் நோக்கிப் போகாமல் தம் மார்பை நோக்கியே வரும் என்ற சங்கதி சு.ம.க்களுக்கு எப்படித் தெரியும்?)

நம் நாட்டுப் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் திடீரென்று ஸ்டாலின் நுழைகிறார் என்று வைத்துக் கொள்வோம். ‘இவர்தான் ரஷ்ய நாட்டுத் தலைவர் ஸ்டாலின்’ என்று ஆசிரியர் அறிமுகப்படுத்துவார்!

“ஏனப்பா தம்பீ! எங்கள் நாட்டைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா? அதைப் பற்றி உனக்கென்ன தெரியும்?” என்று ஸ்டாலின் ஒரு சிறுவனை நோக்கிக் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நம் பையன் என்ன சொல்வான் என்று நினைக்கிறீர்கள்?

“ராஷ்யாவா? ராஷ்யா!” என்று சொல்லிவிட்டுத் தன் உபாத்தியாயர் முகத்தைப் பார்ப்பான்! அதாவது அவர் ஒன்றும் சொல்லிக் கொடுக்கவே யில்லை என்பதைக் குறிப்பாகக் காட்டுவான்.

பிறகு ஸ்டாலின், “தம்பி! ஒரு தமிழ்ப் பாட்டுப் பாடிக் காட்டுக் கேட்கலாம்!” என்பார்.

உடனே தொடங்குவான்! “தலை நிமிர்ந்து நில்லாடா! தமிழா!” என்றா பாடுவான்? அதுதான் இல்லை!

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

 நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ்செய்

 துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ யெனக்குச்

 சங்கத் தமிழ் மூன்றுந் தா!”

- என்று இசையோடு பாடி முடிப்பான்! இதன் பொருள் என்ன என்று கேட்பார் ஸ்டாலின்!

சொல்லுவார், மொழி பெயர்ப்பாளர்! என்ன செய்வார் ஸ்டாலின்? உதட்டைப் பிதுக்குவார்! அதாவது, கடவுளோடு பேரம் பேசுகின்ற இந்த நாடு உருப்படவே உருப்படாது என்ற பொருளில் உதட்டை பிதுக்குவார்!

நம் பிள்ளைகளுக்கு இம்மாதிரிப் பாடல்களைத் தானே சொல்லி வைத்திருக்கிறோம்? நம் பிள்ளைகள் கண்ணை மூடிக்கொண்டு கையைக் கட்டிக் கொண்டு, “அப்பன் நீ, அம்மை நீ, அய்யனும் நீ...” - என்று பாடிக் கொண்டிருந்தால் அவைகளுக்கோ அவைகள் நடமாடப் போகும் சமுதாயத்துக்கோ வீரம், தன்நம்பிக்கை, தன்மானம் முதலிய குணங்கள் எப்படி வர முடியும்?

பண்டிட் நேரு அமெரிக்காவிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நுழைந்தாராம். அங்கு 10 நிமிஷந்தான் இருந்தாராம். அதற்குள்ளாக ஒரு சிறுவன் அவரைப் பார்த்துக் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?

“ரஷ்யாவோடு நாங்கள் சண்டை போட்டால் நீங்கள் எங்களோடு சேர்வீர்களா?”

- ஒரு பள்ளிச் சிறுவனுக்குத் தன் நாட்டைப் பற்றி எவ்வளவு கவலை பார்த்தீர்களா? அதுவல்லவோ கல்வி? அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறவர்களல்லவோ ஆசிரியர்கள்? அவனல்லவோ பிள்ளை?

நமக்கு வாய்த்திருக்கிறதே! எல்லாமே சர்வகோணல்! களிமண் பிள்ளையார்! பையனுக்கேற்ற கிரகணம் பிடித்த உபாத்தியாயர்! இருவருக்கும் ஏற்ற இராகு காலப் பெற்றோர்கள்!

- குத்தூசி குருசாமி (18-10-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It