காற்று நிரப்பாத அந்த
இளஞ்சிவப்பு நிற பலூன்தான்
வேண்டுமென
அடம்பிடித்து வாங்கிக்கொண்டாள்
பாப்பா.

வீட்டிற்குள் நுழைந்ததும்
குழாயைத் திருகி பாதியளவு
நீர் நிரப்பிய பின்
தன் மூச்சுக்காற்றை
ஒன்று திரட்டி
பலூன் ஊதத் துவங்கினாள்.

குட்டி பூமியென உப்பிய பலூனை
விரல்களின் நுண்தசையால்
அவள் அமுக்க அமுக்க
வீடு முழுக்க திருவிழாவைத் தூவியது
துளைகள் வழியே
பீய்ச்சியடித்த சிறுமழை.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It