கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில், திராவிட இயக்கமானது தமிழ்நாட்டில் ஏற்படுத்திய மாற்றம் அளப்பரியது. சடங்குகளாலும், மூட நம்பிக்கைகளாலும், பிற்போக்குத்தனங்களாலும் கெட்டிப்பட்டுப் போயிருந்த ஒரு சமூகத்தைப் புரட்டிப் போட்ட இயக்கம், திராவிட இயக்கம். இந்த மாற்றங்களையும், மாற்றத்திற்கான காரணிகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசே ஈடுபட்டு இப்பணியை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22 மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு பாடநூல் கழகம், தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து திராவிட இயக்க சிந்தனையாளர்களின் ஆக்கங்களை, திராவிடக் களஞ்சியத் தொகுப்பு நூல்களாக வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.
நீதிக்கட்சி வரலாறு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகள், திராவிட இயக்கத்தினால் விளைந்த சமூக, பண்பாட்டு, பொருளாதார மாற்றங்கள், திராவிட இயக்கப் பெண் சிந்தனையாளர்களின் சிந்தனைகள், திராவிட இயக்கச் சிறுகதைகள், கவிதைகள் ஆகிய ஏழு பெருந்தொகுப்புகள் திராவிடக் களஞ்சியங்களாகக் கடந்த 18.02.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஏழு தொகுப்புகளுக்கும் முறையே திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, தோழர் புனித பாண்டியன், ஆய்வாளர் வீ. எம். எஸ். சுபகுணராஜன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பேராசிரியர் எஸ். ஆனந்தி, பேராசிரியர் ந. இளங்கோ, பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி ஆகியோர் பதிப்பாசிரியர்கள் ஆவர். இத்தொகுதிகளுக்குப் பொதுப்பதிப்பாசிரியர் பாடநூல் கழக ஆலோசகர் தோழர் மூ. அப்பணசாமி ஆவார்.
திராவிட இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சியின் வரலாற்றினைத் தொகுப்பதற்கு ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்களைவிடப் பொருத்தமான நபர் இருக்க முடியாது. சான்றாவணங்களோடு வெளிவந்துள்ளது இத்தொகுப்பு. பெரியாரின் சிந்தனைகளைப் பொறுத்தமட்டில், அவருடைய கடவுள்/மத மறுப்புச் சிந்தனைகளில் இருந்து அவருடைய பல்வேறு பரிமாணங்களைப் புரிந்து கொள்ளும் வகையில், அனைத்துத் தலைப்புகளையும் உள்ளடக்கிய சிந்தனைத் திரட்டாக இருக்கிறது. அண்ணாவின் தொகுப்பும் அவ்வாறே. அறிஞர் அண்ணாவைப் பொறுத்த அளவில், அவருடைய மாநில சுயாட்சி குறித்த பார்வையைத் தாண்டி, மதச்சார்பின்மை, பொருளாதாரம், இந்துமத மறுப்பு என்று பரவலாகாத சிந்தனைகள் பல தொகுக்கப்பட்டுள்ளது, இத்திரட்டின் சிறப்பு. சமூக, பண்பாட்டு, பொருளாதார மாற்றங்கள் திரட்டில் ராபர்ட் ஹார்ட்கிரேவ் தொடங்கி பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலதரப்பட்ட எழுத்தாளர்களின் கட்டுரைகள் அடங்கிய அணிவகுப்பாக இத்தொகுப்பு மிளிர்கிறது. சில ஆங்கிலக் கட்டுரைகளும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரையில் பெரிய அளவில் கொண்டு சேர்க்கப்படாத வரலாறு, திராவிட இயக்கப் பெண்களின் வரலாறு. முனைவர் வளர்மதி, தோழர் ஓவியா, தோழர் ஜீவசுந்தரி, வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோரின் பங்களிப்பு இத்துறையில் குறிப்பிடத்தக்கது. 720 பக்கங்களைக் கொண்ட இத்திரட்டில், பெண் சிந்தனையாளர்களின் பேச்சும், எழுத்தும் தொகுக்கப்பட்டுள்ளது. “நாங்கள் வைக்கும் நெருப்பு அநேக காலம் புகைந்து கொண்டே இருக்கும்” என்ற தலைப்பிலான பதிப்பாசிரியர் உரை செறிவானது.
திராவிட இயக்க இலக்கியங்களை வெறும் பிரச்சார இலக்கியமாகச் சுருக்கிப் பார்க்கும் குறுகிய பார்வை கொண்டவர்கள் படிக்க வேண்டிய தொகுப்புகள். திராவிட இயக்கச் சிறுகதைகளும், கவிதைகளும். கலை கலைக்காக மட்டும் அல்ல, கலை வாழ்க்கைக்காகவும்தான் என்ற கோட்பாட்டைக் கொண்டது திராவிட இயக்கம். அவ்வகையில் சிறுகதை, கவிதை போன்ற இலக்கிய வடிவங்களை, தமிழ் இன, மொழி மீட்பு, பகுத்தறிவு, மாநில உரிமை, ஆதிக்க எதிர்ப்பு போன்ற பல்வேறு பொருண்மைகளை உள்ளடக்கிய இலக்கியமாகப் படைத்தளித்தது திராவிட இயக்கம். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தொடங்கி அண்மையில் மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் வரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தொடங்கி முத்தமிழறிஞர் கலைஞர், ஆசைத்தம்பி, தென்னரசு, முரசொலி மாறன் உள்ளிட்ட பலரின் சிறுகதைகள் இந்த இரண்டு தொகுப்புகளிலும் இடப்பெற்றுள்ளன.
இந்த ஏழு தொகுப்புகளும் மொத்தம் 4,740 பக்கங்களைக் கொண்டவை. ஆவணக் காப்பகங்கள், நூலகங்கள், தனிநபர்களின் சேகரிப்புகள் என்று பலதரப்பட்ட இடங்களில் இருந்து இத்தொகுப்பிற்கான உள்ளடக்கம் சேகரிக்கப்பட்டுள்லது. இக்களஞ்சியங்களைத் தொகுப்பதில் தொகுப்பாளர்களாகப் பணியாற்றிய திராவிடப் பள்ளி இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிச்செல்வன், தோழர்கள் ராஜா, முருகன், அஜித் ஆகியோரின் உழைப்பு பாராட்டுவதற்கு உரியது. மேற்காணும் திரட்டுகளின் வரிசையில் மேலும் சில தொகுப்புகளும் வெளிவரவுள்ளன. இவை ஆங்கிலத்திலும், இந்தியாவின் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும்போது, திராவிட இயக்கச் சிந்தனைகள் உலகெங்கும் பரவிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இம்முயற்சி திராவிட மாடல் அரசின் 2.0 -வில் தொடருமாயின் அது வரவேற்கத்தக்கதே.
நூல்கள் கிடைக்குமிடம்: தமிழ்நாடு பாடநூல் கழகம், நுங்கம்பாக்கம், சென்னை.
- வெற்றிச்செல்வன்