கடந்த நாற்பதாண்டுக்கும் மேலாக எழுதி வருபவர் தேவிபாரதி. கொங்கு வட்டாரப் பகுதியைச் சார்ந்தவர். திருப்பூர் பகுதியின் அசலான மொழியைத் தம் படைப்புகளில் கொண்டு வந்தவர். தொடக்கத்தில் இடதுசாரித் தன்மையுடன் புனைவுகளை எழுதியவர்; விரைவிலேயே தனக்கானத் தொன்ம மொழியை அடையாளம் கண்டு கொண்டவர். சிறுகதை, நாவல், கட்டுரை எனத் தொடர்ச்சியாக எழுதி நவீனத் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்து வருகிறார். ஒவ்வொரு படைப்புக்கும் இடையில் தேவையான காலத்தை எடுத்துக்கொள்ளும் படைப்பாளி தேவி பாரதி. ‘பலி’, ‘பிறகொரு இரவு’, ‘கறுப்பு வெள்ளைக் கடவுள்’, ‘வீடென்ப’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் ‘நிழலின் தனிமை’, ‘நட்ராஜ் மகராஜ்’, ‘நீர்வழிப் படூஉம்’, ‘நொய்யல்’ ஆகிய நாவல்களும் இவரது புனைகதைப் பங்களிப்புகளாகும். இதில் ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு இந்த ஆண்டுக்கான (2023) சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவொரு தன்வரலாற்றுத் தன்மையிலான நாவல். தன் சமகாலத்தில் வாழ்ந்து கைவிடப்பட்ட ஒருவரின் கதையைத்தான் தன் தனித்துவமான கதைமொழியால் ‘நீர்வழிப் படூஉம்’ நாவலாக எழுதியுள்ளார்.

சங்க இலக்கியத்தில் ஒரே பாடல் மூலமாகப் புகழ்பெற்றவர் கணியன் பூங்குன்றனார். இவர் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனத் தொடங்கும் புறநானூற்றின் 192ஆம் பாடல், ஐக்கிய நாடுகள் சபை வரை இவரது புகழைக் கொண்டு சேர்த்துள்ளது. இந்தப் பாடல் வரியிலிருந்துதான் தேவிபாரதி ‘நீர்வழிப்படூஉம்’ நாவலைஎழுதுவதற்கான தொன்ம மதிப்பீட்டைப் பெற்றிருக்கிறார். ‘......... மின்னொடு / வானம் தண்துளி தலைஇ ஆனாது / கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று / நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர் / முறைவழிப் படூஉம் என்பது திறவோர் / காட்சியின் தெளிந்தனம் .........’ என்ற இப்பாடலின் கருத்து இப்புனைவின் மையக் கதாபாத்திரமான காருமாமாவிற்கு அப்படியே பொருந்திப் போகிறது. ‘வெறுப்பில் வாழ்க்கை துன்பமயமானது என்று கூறமாட்டேன்; வானம் மின்னி மழை பொழிந்து கல்லை உருட்டிக்கொண்டு இரைச்சலுடன் பாயும் வெள்ளத்தில் மிதந்தோடும் தெப்பம்போல நம் உயிர் மிதந்து ஓடும். இந்த உண்மையைத் திறம் பெற்றவர் வாழ்க்கையில் கண்டு தெரிந்து கொண்டேன்’ என்பது பூங்குன்றனாரின் இருத்தலியல் கருத்து. தேவிபாரதி இந்தக் கருத்துக்குத் தான் புனைவு வடிவம் கொடுத்திருக்கிறார்.devibharathi novel neervazhi padooumஉடையாம்பாளையம் எனும் சிறிய கிராமத்தில் வாழ்ந்து, தேவிபாரதியின் நினைவுகளில் தங்கிப் போன காருமாமா இவரை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறார். அவர்நடமாடியஊர்தற்போதுபுதர்மண்டிக் கிடக்கிறது. அந்த ஊரைத்தான் இந்நாவலினூடாக மீட்டுக் கொணர்ந்திருக்கிறார். காருமாமா என்ற கதாபாத்திரத்தைச் சுற்றி இப்புனைவின் கதை நகர்ந்தாலும் ஒரு காலகட்டத்தின் சமூக வரலாறு இப்புனைவினூடாகத் திறந்து காட்டப்படுகிறது. இச்சமூகம் உற்பத்தி செய்த ஓர் உதிரிதான் காருமாமா. ஆனால், ஒரு புனைவாக எழுதப்படும் அளவுக்கு அவர் வாழ்க்கை இச்சமூகத்திற்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லாவற்றையும் இழந்த பிறகும் சக மனிதர்கள்மீது கொண்ட கருணையையும் மன்னிக்கும் குணத்தையும் கைவிடாதவராகவே இருந்திருக்கிறார். எல்லாவற்றிலும் தோற்றுப்போன காருமாமா, காவிய நாயகனுக்குரிய அத்தனை தன்மைகளையும் பெற்றவராகவே புனைவில் காட்டப்படுகிறார். நாவலின் இறுதியில் உருட்டப் படும் பகடையில் காருமாமாவின் கருணை ஒளிந்திருக்கிறது. தேவிபாரதி பெரிய திருப்பத்துடன் புனைவை முடித்து விட்டார். பகடை உருளும் போது அது இன்னொரு பிரதிக்கு வாசிப்பவர்களை இட்டுச் செல்லும் சுவாரசியத்துடன் புனைவு முடிந்திருக்கிறது.

உடையாம்பாளையம் என்ற ஊருக்குக் குடி நாவிதராக அழைத்து வரப்படுபவர் காருமாமா. அவர் மனைவி ராசம்மா. அவர்களுக்கு சுந்தரம், ஈஸ்வரி என இரு குழந்தைகள். ஒருநாள் இரு குழந்தை களையும் அழைத்துக்கொண்டு அந்த ஊர் செட்டியை நம்பி ஊரைவிட்டு வெளியேறுகிறாள் ராசம்மா. காருமாமாவின் வாழ்க்கை சுழலில் சிக்கிக்கொள்கிறது. மனைவியின் துரோகத்தைவிட குழந்தைகளின் பிரிவு அவருக்கு வலிப்பு நோயை வரவைக்கிறது. அவர் வாழும்வரை வலிப்பு நோயுடனே போராடுகிறார். மனைவியை மன்னிக்க அவர் தயாராகவே இருக்கிறார். மனைவியைத் தேடி ஊர் ஊராக அலைகிறார். வாழ்க்கை அவருக்குக் கடுமையான துயரங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இறுதியில் அந்த ஊரைப் போலவே எல்லோராலும் கைவிடப்பட்ட நபராக இறந்து போகிறார். அவர் இறப்பில் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். கதைசொல்லி இங்கிருந்துதான் அவரது வாழ்க்கையை நினைவுகளில் இருந்து மீட்டெடுக்கிறார்.

புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதை ‘செல்லம்மாள்’. இக்கதை செல்லம்மாளின் இறப்பி லிருந்தே தொடங்கும். முன்பின்னாகச் செல்லம்மாளின் வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பார் பிரம்மநாயகம் பிள்ளை. ‘நீர்வழிப் படூஉம்’ நாவலும் காருமாமாவின் இறப்பிலிருந்தே தொடங்குகிறது. காருமாமா ஒடுக்கப்பட்ட நாவிதர் குடியைச் சார்ந்தவர். அக்கா கணவர் இறந்துவிட்ட காரணத்தால், தன் அக்காவிற்குத் துணையாக உடையாம்பாளையத்துக்குக் குடிநாவிதராக வந்து சேர்ந்தவர். இவ்விடத்தில், ஒரு குடிநாவிதர் அவர் வாழும் ஊருக்கு என்னென்ன பணிகளை எல்லாம் செய்வார் என்பதைத் தேவிபாரதி மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். கொங்கு வேளாளர்கள் அதிகம் வாழும் ஊர் உடையாம்பாளையம். அவ்வூரில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே நாவிதர்கள். இவர் களுக்கு இடையிலான சாதிய முரண்பாடுகள் குறித்துத் தேவிபாரதி எழுதவேயில்லை. அது இந்தப் புனைவுக்குத் தேவைப்படவில்லை. அந்த வகையில் இந்நாவல் தனித்துவமானது. புனைவு, வேளாளர் களுக்கும் நாவிதர்களுக்கும் இடையில் நல்ல உறவு இருப்பதாகவே வெளிப்படுத்திக் கொள்கிறது. காருமாமாவின் இறுதிச் சடங்கில் அந்த ஊர் கவுண்டர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. தங்களது குடிநாவிதனின் இறுதிச் சடங்கை மிகச் சிறப்பாகவே முன்னின்று நடத்து கிறார்கள். அதேநேரத்தில் அந்த ஊர் கவுண்டர்கள் குடிநாவிதர்களுக்குக் கூலியைச் சரியாகக் கொடுக்க வில்லை; அவர்களது உழைப்பைச் சுரண்டினார்கள் என்ற சோசலிசப் பார்வையிலும் இந்நாவலை வாசிக்க முடியாது. தேவைக்கு அதிகமாகவே அவர்களுக்குத் தானியங்கள் கிடைத்திருக்கின்றன. வெறும் பதினாறு குடிகளைக்கொண்டே காருமாமாவால் உடையாம் பாளையத்தில் பிழைக்க முடிகிறது.

சாதிப் பிரச்சினை, வர்க்க முரண், உழைப்புச் சுரண்டல் போன்ற பருப்பொருள் பார்வைகளை இந்நாவல் முழுமையாக நிராகரித்திருக்கிறது. காருமாமா வாழ்க்கையில் சந்தித்த வீழ்ச்சியைத்தான் இந்நாவல் முக்கியத்துவப்படுத்துகிறது. அந்த வீழ்ச்சிக்கு அவர் ஒருபோதும் காரணமாக இல்லை. ஆனால் வாழ்க்கையில் அத்தனைத் துயரங்களையும்அவர் எதிர்கொள்கிறார். வாழ்வின் தொடர் சூதாட்டத்தில் மாட்டிக் கொண்டு பகடைகளாக உருள்கிறார். ஏன் தனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என ஒரு கணமும் அவர் நினைத்துப் பார்க்கவில்லை; குறைபட்டுக் கொள்ளவில்லை. வாழ்க்கை, நீர் செல்லும் வழியே அடித்துச் செல்லப்படும் ஒரு புணை என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நிரூபணம் ஆகிக் கொண்டே இருக்கிறது. காருவை விட்டு ராசம்மா ஏன் ஓடிப்போனார் என்ற இடத்தையும் நாவல் சூன்யமாகவே வைத்திருக்கிறது. அதற்கான காரணமும் யாருக்கும் முக்கியமாகப் படவில்லை. ராசம்மா சென்ற பிறகு அந்தக் குடும்பம் நீர்ச்சுழலில் சிக்கிக்கொண்ட புணைபோல திசை தெரியாது தவித்துப் போகிறது. மீண்டும் அந்தப் புணை தன் சொந்தத் தடத்திற்குத் திரும்பும்போது காருமாமா இறந்து போகிறார்.

அவிழ்க்க முடியாத பல புதிர்களை நாவல் உருவாக்கிக் கொண்டே செல்கிறது. இலக்கியம் எப்போதும் வாழ்க்கையில் தோற்றவர்களின் கதை களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது; கைவிடப்பட்டவர்களின் துயரத்தைத்தான் பகிர்ந் திருக்கிறது. வெற்றி பெற்றவர்களின் கதை வியாபாரத்திற்குத்தான் பயன்படும். காருமாமா இங்குக் கைவிடப்பட்டவர். காருமாமாவின் துயரத்திற்கு ராசம்மாதான் காரணம் என்பது அவரது அக்காக்களின் வாதம். அவளைத் தொடர்ந்து இகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் காருமாமா தன் மனைவி குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. மனித ஆழ் மனதின் யதார்த்தங்களை ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது. லௌகீக வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான போராட்டத்துடனே வாழ்க்கை நகர்கிறது. இதில் சக மனிதர்களைப் புரிந்துகொள்வதற்கான நேரம் மிகச் சொற்பமாகவே இருக்கிறது. ஒரு குடி நாவிதனாக ஊர்மக்களிடம் நல்ல பெயரெடுத்தவர் காருமாமா. ஆனால் ராசம்மாவை அவர் புரிந்துகொள்ள தவறி யிருக்கிறார். அதனால்தான் அவள் செட்டியுடன் சென்றபிறகும் பெரிய எதிர்வினைகளைக் காட்ட வில்லை.

உறவுகளுக்கு இடையிலான அன்புக்கு நாவல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. தன் கணவனை இழந்துவிட்டுப் பெண் குழந்தையுடன் தவித்துக் கொண்டிருக்கும் அக்காவின் அன்புதான் காருமாமாவை உடையாம்பாளையத்துக்கு வரவழைக்கிறது. தன் அக்காவின் நலனுக்காகத் தன் வாழ்க்கையைப் பணயம் வைக்கத் தயாராக இருக்கிறார் காருமாமா. ராசம்மா அவரைவிட்டுச் சென்ற பிறகும் அக்காவுடனே இருக்கிறார். காருவுக்கும் தனக்குமான அளவுகடந்த அன்பை ராசம்மாவிடம் நிறுவுவதிலேயே குறியாகச் செயல்பட்டவள் கதைசொல்லியான ராசுவின் அம்மா. இவள் காருவின் தங்கை. இந்த இடத்தில் தான் பாசமலர் திரைப்படத்தை நவீனப்படுத்தும் பணியைத் தேவிபாரதி செய்திருக்கிறார். இதற்குப் பாசமலர் படத்தையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சிறப்பு. இப்பகுதிகள் புனைவில் துருத்திக் கொண்டிருக்கின்றன. தவிர, புனைவுக்கு ஒரு நாடகத் தன்மையையும் அளிக்கிறது.

செட்டியாருடன் சென்றுவிட்ட தன் மனைவியைப் பற்றி ஒரு குற்றச்சாட்டும் காருவுக்கு இல்லை. பெருவெள்ளத்தை எதிர்த்துச் சிறு புணையால் என்ன செய்துவிட முடியும் என்ற உலக யதார்த்தத்தைப் புரிந்துகொண்டவராகவே காருமாமா இருக்கிறார். கதைசொல்லியால்தான் இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் ராசம்மா செட்டியுடன் ஓடிப்போன நிகழ்வு திரும்பத் திரும்ப நினைவுகூரப்படுகிறது. புனைவில் காருமாமாவிற்கும் ராசம்மாவிற்கும் இடையிலான உறவு குறித்து நாவல் பெரிதாகப் பேசவில்லை. மௌனமாகவே கடந்திருக்கிறது. மனைவியுடனான உறவை எளிதாகக் கடந்துவிட முடிந்த காருவிற்கு, குழந்தைகள் மீதான அன்பைத் துறக்க முடியாமல் தவிக்கிறார். பரதேசியைப் போன்று தன் குழந்தைகளைத் தேடி அலைகிறார். அன்பு, அவருக்கு ஞானத்தை வழங்குகிறது; மனப் பிறழ்வுக்கும் உள்ளாக்குகிறது. ஆனால் ராசம்மா ஒருநாள் தம் குழந்தைகளுடன் மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கை காருவிற்கு இருந்திருக்கிறது. தனக்குக் கிடைத்த அரசு உதவித் தொகையில் சிறுகச் சிறுக தன் மகளுக்கு நகைகள் சிலவற்றை வாங்கிச் சேர்க்கிறான். இந்தத் தரிசனம்தான் காருவைக் காவியத் தன்மையுடைய நாயகனாக மாற்றுகிறது. காருவின் ஆன்மா தாயக்கட்டைகளின் வழியாக வெளிப்படும் என்று தங்கையும் மனைவியும் உறுதியாக நம்புகிறார்கள். பகடை எந்தப் பக்கம் உருளும்; காரு யாருக்கு நியாயம் செய்வார் என்பதுதான் புனைவில் அவிழ்க்க முடியாத முடிச்சு.

ஒவ்வொரு ஊருக்கும் நாவிதர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை இந்நாவல் பகிர்ந்து கொள்கிறது. சேவைத்தொழில் செய்துகொண்டு ஊருக்கு ஒரு குடியாக வாழ்ந்துவரும் நாவிதர்கள், வண்ணார்கள் குறித்து நவீன இலக்கியங்களே கவனம் கொடுத்துப் பதிவுசெய்து வருகின்றன. அவர்களது தொழில்சார்ந்த துயரங்களை இந்நாவல் பேசவில்லை; அவர்களது இருத்தலியல் சார்ந்தே உரையாடுகின்றன. இத்தன்மைதான் தேவிபாரதியைப் பிறஎழுத்தாளர்களிடமிருந்துவேறுபடுத்திக்காட்டுகிறது. குடியானவர்களுக்கு முடிதிருத்தம் செய்வது மட்டுமே நாவிதர்களது முக்கியமான பணியாகக் கருதப் படுகிறது. அதனைக் கடந்து அவர்கள் சார்ந்திருக்கும் ஊருக்கு நாவிதர்கள் செய்யும் பணிகள் வெளியே அவ்வளவாகத் தெரிவதில்லை. நாவிதர்கள் இல்லாமல் அவ்வூரில் ஒரு சடங்கும் நிகழாது. ஒவ்வொரு சடங்கும் இவர்களது மேற்பார்வையில்தான் நடைபெறு கின்றன. குடியானவர்கள், நாவிதர்களைச் சார்ந்தே இருந்தார்கள் என்ற யதார்த்தத்தை இந்நாவல் காத்திரமாகவே பேசுகிறது. அதற்கான தரவுகளைத் தேவிபாரதி பிரதியில் முன்வைத்திருக்கிறார். இந்தப் பார்வையை முக்கியமானதாகவே கருதுகிறேன்.

காருவின் அக்கா கணவர் இறந்து போனதற்குப் பிறகு குடிநாவிதர் இல்லாமல் உடையாம்பாளையம் பெரும் தவிப்புக்குள்ளாகியிருக்கிறது. அவர்களது அன்றாட வேலைகளைச் செய்வதற்கு ஆளில்லை. ‘சவரம் செய்துகொள்ள வழியில்லாமல் அவர்களது முகங்களில் ரோமம் படரத் தொடங்கியிருந்தது; குடுமியைத் திருத்த ஆளில்லை; நகம் வெட்ட ஆளில்லை; கை, கால் பிடித்துவிட ஆளில்லை; முதுகு தேய்க்க ஆளில்லை; தைத்த முள்ளைப் பிடுங்கியெறிய ஆளில்லை; போ என்றால் போவதற்கும் வா என்றால் வந்து நிற்பதற்கும் அவர்களுக்கு ஒரு குடிமகன் இல்லை. உடையாம்பாளையத்தின் பண்ணையக்காரர்கள் தவித்துப் போனார்கள்’ என்று தேவிபாரதி எழுதியிருக்கிறார். குடியானவர்களின் வீட்டு வாசல்களைக் கூட்டிப் பெருக்குவது; பாத்திர பண்டங்களைக் கழுவுவது; பருத்திக்கொட்டை ஆட்டுவது; வீடு வீடாகச் சென்று கழுநீர்த்தண்ணீர் எடுத்துவருவது போன்ற குற்றேவல் பணிகளைக்கூட நாவிதர்கள் செய்திருக்கிறார்கள். பொதுவெளியில் நாவிதர்கள் முடிவெட்டும் தொழிலை மட்டுமே செய்வார்கள் என்ற பிம்பமே பரவியிருக்கிறது. அதனைக் கடந்து குடிநாவிதர்கள் செய்யக்கூடிய பணிகளைப் புனைவாசிரியர் பட்டியலிட்டிருக்கிறார்.

குடியான வீட்டுப் பெண்களுக்குப் பிள்ளைப்பேறு பார்ப்பது நாவித வீட்டுப் பெண்களின் பெரும் பணியாகக் கருதப்படுகிறது. இதனால்தான் இவர்கள் மருத்துவர்கள் என்று அழைக்கப்பட்டனர். பிறந்த குழந்தைகளுக்கு ஓரத்தெண்ணெய் காய்ச்சிக் கொடுப்பதும் மாந்தக்கயிறு தயாரித்துக் கொடுப்பதும் அப்பெண்கள் தாம். தங்களால் பேறு பார்க்கப்பட்ட குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரும்வரை அக் குழந்தைகளை மருத்துவச்சிகள் கண்காணித்திருக்கிறார்கள். குடியானப் பெண்களுக்கு எண்ணெய் தேய்ப்பது, நகம் வெட்டி விடுவது, காலில் தைத்த முள்ளை எடுத்துவிடுவது உள்ளிட்ட வேலைகளையும் இவர்கள் செய்திருக்கிறார்கள். மருத்துவச்சிகள் பிரசவம் பார்க்கும்போது தங்களை மருத்துவர்களாகவே கருதிக் கொள்கிறார்கள்; பெருமிதமடைகிறார்கள். அந்த நேரத்தில் மட்டும் தங்களை அதிகாரம் படைத்தவர்களாகத் தகவமைத்துக் கொள்கிறார்கள். குடியானவர்கள் நாவிதர்களுக்குக் குற்றேவல் செய்யும் நேரமும் அதுதான். இந்தப் பகுதிகளெல்லாம் நாவலில் ஒரு தரிசனமாக அமைந்திருக்கின்றன. புனைவின் எந்த இடத்திலும் தாங்கள் செய்யும் பணிக்காகக் கழிவிரக்கத்தைக் கோரவில்லை. நாவிதர்களுக்கும் இந்தச் சமூகத்திற்குமான இருப்பையே புனைவு முன்னிலைப்படுத்துகிறது.

பொருளாதார வளர்ச்சி முதலில் கிராமங்களின் மீதுதான் தன் தாக்குதலை நிகழ்த்துகிறது. அந்த வகையில் உடையாம்பாளையம் தன் பழைய முகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வருகிறது. படித்த அடுத்த தலைமுறை நகரங்களை நோக்கியே நகருகிறார்கள். நகரங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் ஓட்டல் ஆரம்பிக்கிறார்கள்; சாயப்பட்டறை வைக்கிறார்கள். அவர்களது தேவைக்குக் கிராமங்களில் இருக்கும் ஆட்களை நகரங்களை நோக்கி இழுக்கிறார்கள். இப்படியாக அந்த ஊரின் ஒவ்வொரு குடும்பமும் அருகிலுள்ள நகரங்களுக்கு இடம்பெயரத் தொடங்குகின்றன. விவசாயத்தைக் கைவிட்ட ஒரு சிலரும் ஆடு வளர்ப்பில் ஈடுபடு கிறார்கள். கோழிப்பண்ணைகளை வைக்கிறார்கள். உடையாம்பாளையத்தைச் சார்ந்தவர்கள் எளிதில் பணம் கிடைக்கும் தொழிலுக்குத் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இந்த மாற்றங்கள் குடிநாவிதர் களையும் பாதிக்கிறது. அவர்களது அடுத்த தலைமுறையினர் நகரங்களில் சலூன் கடை வைக்கிறார்கள். சொந்தமாகக் கடை வைக்க முடியாதவர்கள் கூலிக்குச் செல்கிறார்கள். முத்தையன் வலசுப் பெரியப்பாவின் மகன் அம்பிகாபதி அப்படித் தான் தன் தொழிலை மாற்றிக் கொள்கிறான். கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரங்களை நோக்கி நகரும்போது அதனை நம்பியிருந்த சேவைச் சமூகத்தினரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். காருமாமா, முத்தையன் வலசுப் பெரியப்பா போன்ற ஒரு சிலர் மட்டுமே யாருமற்ற அந்தக் கிராமங்களில் தங்களது கடந்த கால வாழ்க்கையை அசைபோட்டபடி படுத்துக் கிடக்கிறார்கள்.

தனிமை எவ்வளவு கொடூரமானது என்பதையும் இந்நாவலை வாசிப்பவர்கள் உணர முடியும். அனைவராலும் கைவிடப்பட்ட உடையாம்பாளையத்தில் காருமாமாவும் முத்தையன் வலசுப் பெரியப்பாவுமே அவரவர் வீடுகளில் தங்கள் இறுதிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். வானொலியில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மட்டுமே அவர்களுக்குத் துணையாக இருக்கின்றன. வானொலியின் மின்கலம் தீர்ந்து விடும்போது காருமாமா அடையும் பதற்றம் புனைவின் உச்சம். அந்தக் கோபத்தை முத்தையன் வலசுப் பெரியப்பாவிடம் காட்டுகிறார். ஒரு மின்கலம்கூட கிடைக்காத ஊர்தான் உடையாம்பாளையம். வெறுப்பின் உச்சத்தில் வெள்ளக்கோவில் வரை நடந்தே போகிறார். தனிமையும் அது ஏற்படுத்தும் மனப்பிறழ்வும் அவரை மூர்க்கம் கொள்ளச் செய்கின்றன. தனிமை ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு வாதை. தன் இறுதிக் காலத்தை அப்படித் தான் கழிக்கிறார் காருமாமா. பிரதி உடையாம் பாளையத்துக்கும் காருமாமாவிற்கும் ஓர் ஊடிழையை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே தன் குடும்பத்தை இழந்து நிற்கும் காருவின்மீது ஊரின் அழிவு வெறுமையாகப் படிகிறது. இரண்டும் சேர்ந்து முதலில் அவர் நினைவுகளை அழிக்கிறது; பிறகு அவரையும்.

‘நீர்வழிப் படூஉம்’ நாவல், கைவிடப்பட்ட ஓர் ஊரை முன்னிறுத்தி ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறது. கொங்கு மண்ணின் மொழி இப்புனைவில் முக்கியப் பங்காற்றுகிறது. உன்னதமான மனிதர்களின் களிம்பேறிய துயரங்கள்தான் காவியங் களாகியிருக்கின்றன. தேவிபாரதி, நாவலின் கடைசி அத்தியாயத்தை அப்படித்தான் அமைத்திருக்கிறார். உருளும்பகடைகள்மகாபாரதத்தைநினைவூட்டுகின்றன. அதுவரை இல்லாத பதற்றத்தை வாசிப்பவர்கள்மீது புனைவு உருவாக்கிவிடுகிறது. வாழ்க்கை அதன் போக்கில்தான் போகும்; நாம் அதனை ஏற்றுக் கொண்டு வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எங்கோ பெய்த மழைதான் ஆறாகப் பெருக்கெடுக்கிறது. கல்லையும் மண்ணையும் அடித்துக் கொண்டு ஓடும் ஆற்றை நாம் எப்படித் தடுக்க முடியும். காருமாமாவின் வாழ்க்கை அதனைத்தான் தெளிவுபடுத்துகிறது.

- சுப்பிரமணி இரமேஷ், உதவிப் பேராசிரியர், இந்துக் கல்லூரி, சென்னை -72

Pin It