நண்பர் ஒருவர் என்னை ஒரு நிகழ்வில் பார்த்ததும் அவர் துணிப்பையில் இருந்த புத்தகங்களை எடுத்து, ஐயா உங்களுக்கான புத்தகம் ஒன்றை நான் நீண்ட நாட்களாக சுமந்த வண்ணம் இருக்கின்றேன், பெற்றுக் கொள்ளுங்கள் என்று என்னிடம் கொடுத்தார். கொடுத்துவிட்டு ஐயா, நீங்கள் இந்தப் புத்தகத்தை படித்திருக்கிறீர்களா? என்று கேட்டார். இல்லை என்றேன். உடனே நான் பயனுள்ள பணியைத்தான் இன்று செய்துள்ளேன் என்று கூறிவிட்டு பார்வையாளர் பகுதிக்குச் சென்றுவிட்டார். அந்த நூலைப் பெற்றுக்கொண்டு சென்ற நிகழ்வில் பங்கேற்றுப் பேசிவிட்டு வீடு திரும்பியதும் அந்த நூலைப் புரட்டினேன். அந்த நூலின் முகப்பில் ஒரு எழுத்தாளரின் வசைபாடல் இருந்தது. அந்த வசைபாடல் இன்றைய பல்கலைக்கழக பேராசிரியர்களை நோக்கியதாக உணர்ந்தேன்.

uppuveli 550கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை அரசு இவர்களுக்கு அளிக்கிறது, இவர்கள் இன்று சுகபோக வாழ்க்கையில் தோய்ந்து கல்வி என்ற பெயரில் பம்மாத்து செய்கின்றார்கள் என்பதுதான் அந்த எழுத்தாளரின் குற்றச்சாட்டு. பொதுவாக விமர்சனங்கள் எவரைப் பற்றியதாக இருந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்பவன்தான் ஒரு ஆய்வாளன் என்பதை என் ஆய்வுக்கு வழிகாட்டிய நெறியாளர் எனக்குக் கற்றுத் தந்தார். இந்த எழுத்தாளர் ஒரு முறை தன் புத்தகத்தில் நான் பணி செய்த நிறுவனத்தை விமர்சனம் செய்து எழுதி இருந்ததை ஆசிரியர்கள் பலர் விமர்சனம் செய்தனர். என் நண்பர் ஒருவர் அதை முழுவதுமாகப் படிக்காமல் அவரையே ஒரு நிகழ்வுக்கு பல்கலைக்கழகத்திற்கு அழைத்திருந்தார். அந்த நிகழ்வுக்கு நான் சென்று வந்தவுடன், என் நண்பர்கள் என்னைக் கேட்டார்கள், “அவர் நம் நிறுவனத்தைப் பற்றி எழுதி இருந்ததைப் படித்தீர்களா? படித்தேன் என்றேன். படித்துவிட்டுமா அங்குச் சென்றீர்கள் என்றார்கள். ஆம். படித்தேன் பல கருத்துக்கள் அவர் கூறியதில் எனக்கு உடன்பாடு இருந்தது என்றேன்.” உடனே ஒரு பேராசிரியர் உங்களுக்கு நிறுவனப்பற்று கிடையாது என்று விமர்சித்தார். அவர் விமர்சித்திருப்பது நிறுவனத்தை அல்ல நிறுவனச் செயல்பாடுகளைத்தான்.

நம் நிறுவனம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அது நடைபெற்றிருக்கிறதா என்பதை கேள்வியாக்கி, நம் செயல்பாடுகளை விமர்சனம் செய்துள்ளார். நாமெல்லாம் பேராசிரியர்கள்தானே, நமக்கு அவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் எழுத துணிவு உண்டா என்றேன். பக்கத்தில் நின்றவர் கூறினார், அப்படி எழுதினால் இன்று எழுதியதைவிட இன்னும் ஆழமாக அழுத்தமாக அவர் அடுத்த புத்தகம் ஒன்றையே எழுதுவார், விட்டுவிட்டு வாருங்கள் போவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இன்றுவரை அதற்கு பதில் எழுதவில்லை, காரணம் அவர் எழுதியது உண்மை. அதேபோலத்தான், இந்தப் புத்தகத்திலும் ஆராய்ச்சி என்ற பெயரில் நடத்தும் அவலங்களை தோலுரித்துள்ளார் அந்த எழுத்தாளர். காரணம் நம் நாட்டில் ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அதை இன்று வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்து செய்திருக்கிறார் என்றால் நம் ஆய்வாளர்கள் எங்கே என்ற கேள்வியில்தான் அவர் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார். இந்த “உப்பு வேலி” என்ற நூல் நாம் ஆய்வு செய்யவேண்டியவை எண்ணிலடங்கா உள்ளன என்பதை நமக்கு எடுத்துக்கூற வந்த நூல்போல் இருப்பதால்தான் அதைப் பற்றி எழுத வேண்டி இருக்கின்றது.

இந்த நூல் எதைப்பற்றியது என்பதில்தான் இதன் சிறப்பே அடங்கியுள்ளது. இந்தியாவில் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் 1500 கிலோ மீட்டர் தூரத்திற்கு இமயத்திலிருந்து ஒரிசா வரை உயிர் வேலி ஒன்று போடப்பட்டிருந்தது. இந்த வேலிதான் அன்றைய ஆட்சியாளர் இந்திய மக்களிடமிருந்து உப்புவரி வசூலிக்க உபயோகப்படுத்தியிருந்தனர் என்பதை இதுவரை எவரும் கொண்டுவந்து ஆய்வு செய்து தரவில்லை. இதனால்தான் இந்தப் புத்தகம் மிகப்பெரிய ஆவணமாகத் தெரிகிறது.

எங்கோ ஒரு வெள்ளையனுக்கு எதையோ படிக்கும்போது, எதோ ஒரு தேடல் ஓர் உணர்வாக மாறி, அதில் தன்னைக் கரைத்துக்கொள்ளச் செய்த சாகசத்தின் வெளிப்பாடுதான் இந்த நூல். இது ஒரு வரலாற்று ஆவணம்தான், இதில் ஒரு இலக்கியம் இருக்கிறது, இதில் ஒரு பயணக் குறிப்பு இருக்கிறது, இதில் ஒரு மானுட வரலாறு இருக்கிறது, இதில் ஒரு ஆளுகை இருக்கிறது, ஒரு பொது நிர்வாகம் இருக்கிறது. இது அனைத்துமே ஒரு குறிப்பிட்ட கொள்ளைக்காரர்கள் மக்களை அடக்க, மேய்க்க அச்சுறுத்த கற்றுக்கொண்டு துணிந்து ஒரு அரசாங்கத்தின் துணையோடு நடந்திருப்பதை இந்த நூல் படம் பிடித்துக் காண்பிக்கிறது. ஒரு நாட்டில் ஒரு அரசாங்கம், அரச குடும்பம், பாராளுமன்றம் அதிகாரவர்க்கம், அனைவரும் இணைந்து உலகைக் கொள்ளையடித்து ஒரு சுகபோக வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். அப்படி ஒரு குறிப்பிட்ட வர்க்கம் வாழ வெள்ளைய அரசாங்கம் 1600இல் கம்பெனிச் சட்டம் போட்டு, ராணுவ அதிகாரத்தையும் அந்தக் கம்பெனிக்கு வழங்கி அனுப்புகிறது. அந்தக் கம்பெனி துணிந்து வணிகத்திற்கு வந்தது, ஆட்சியைப் பிடித்துக் கொண்டு கம்பெனி இந்தியாவைக் கொள்ளையடிக்கின்றது. இந்திய மக்களைச் சுரண்டுகின்றது, அச்சுறுத்துகிறது, மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கின்றது.

இங்கு இந்த நிலப்பரப்பில் கோலோச்சிய மன்னர்களும் அதற்கு உடந்தையாய் இருந்து தங்கள் சுகபோக வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். அப்படி வெள்யைர்களுக்குக் கொள்ளையடிக்க உதவிய அரசர்களும்கூட சகிக்க முடியாத அளவுக்கு மக்களை வாட்டி வதைப்பதை எதிர்க்க ஆரம்பித்தவுடன் அவர்களையே காலி செய்து தன் கொள்ளை ராஜ்யத்தை விரிவாக்குவதில்தான் கவனமாக இருந்தது வெள்ளையர் கம்பெனி. அந்தக் கம்பெனியின் முகவர்களாக இருந்தவர்கள் கம்பெனியை ஏமாற்றுவது, முகவர்களாக இருந்தவர்களை, நிதி வசூலிப்பவர்கள் ஏமாற்றுவது, வெள்ளைய அரசை கம்பெனி ஏமாற்றுவது, கொள்ளையடிப்பதில் பங்கு போடுவது என்பதை நிதி நிர்வாகம் என பெயரிட்டு மக்களை ஏமாற்றுவது என அனைத்தையும் வெள்ளையர்கள் செய்து வந்ததை இந்த ஆய்வு எடுத்துக் காண்பிக்கிறது. இந்த ஆய்வாளர் உப்பு வேலியை கண்டுபிடிக்க ஆரம்பித்து வெள்ளையரின் கொள்ளை ராஜ்யம் பற்றி விரிவான வரலாற்றையே தன் கடின உழைப்பால் கொண்டுவந்து தந்துள்ளார்.

இந்தக் கொள்ளையடிக்கும் வெள்ளையர்களின் வரலாற்றை ஏன் அமெரிக்கா இங்கிலாந்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று இங்கிலாந்து தேச பொதுச் சிந்தனையாளன் தாமஸ் பெயின் தன் 'காமன் சென்ஸ்' என்ற நூலில் எழுதி அமெரிக்க மக்களுக்கு விடுதலைக்கான எழுச்சியை ஊட்டினான். அதன் பிறகு பிரெஞ்ச் தேச பொருளாதார நிபுணர் இந்த காலனியாதிக்க ஆட்சிகள் என்பது ஒரு கொள்ளைக் கூட்டம் நடத்தும் ஆட்சி, இதில் கொள்ளையடிப்பதை வாழ்வியலாக்கி, அதிகாரத்தைப் பிடித்து அதன் மூலம் எல்லையில்லா கொள்ளைகளை நிகழ்த்தி, அதை சட்டபூர்வமாக்கிக் கொள்ள சட்டங்களை அவர்களே கொண்டுவந்து மக்களை மிரட்டி அச்சுறுத்தி செயல்படுவதும், இந்தக் கொள்ளையடிக்கும் வெள்ளையர்களின் வாடிக்கை என்பதை விளக்கினார். இந்த வெள்ளையர் கொள்ளைக் கூட்டம் தாங்கள் ஆட்சியில் இருக்க சாதாரண மக்களை ஏமாற்றிட அவ்வப்போது மக்கள் பிரச்சினைகளுக்கு ஓரிரண்டு தீர்வினைக் காண்பார்கள். அதையே சாதனையாக்கி, மக்களுக்கானதுதான் இந்த அரசாங்கம் என்று ஏழை எளிய மக்களை நம்ப வைப்பார்கள். இதை ஆட்சியில் உள்ளவர்கள் நாங்கள் மக்களுக்காகத்தான் ஆட்சி நடத்துகின்றோம் என்று அவர்களே நிறுவிக்கொண்டு தங்களைப் பாராட்டி மகிழ்ந்து கொள்வார்கள் என்று பிரடெரிக் பஸ்த்தியட் என்ற பொருளாதார வல்லுனர் எழுதினார். சட்டம் போட்டு கொள்ளையடிப்பதுதான் இவர்களின் பணி என்று விளக்கினார். இவர் இதை எழுதிய காலம் என்பது 19ஆம் நூற்றாண்டு. அது காலனிய காலம்.

இதைத்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் லாலா லஜபதிராய் இங்கிலாந்து இந்தியாவுக்குத் தர வேண்டிய கடன் என்று ஒரு புத்தகம் எழுதினார். அக்கால பொது நிதியை ஆய்வு செய்து துல்லியமாக வெள்ளையர்கள் நம் மக்களை ஆட்சி என்ற பெயரில் கொள்ளையடித்தனர் என்பதை எழுதியுள்ளார். அதையே இன்னும் விபரமாக வெள்ளையர்கள் தங்கள் காலனியாதிக்க நிர்வாகத்தின் மூலம் இந்தியாவை கொள்ளையடித்த வரலாற்றை 'இந்தியாவின் இருண்ட காலம்' எனத் தலைப்பிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ஒரு புத்தகம் வெளியிட்டார். இன்றைய சூழலில் வெள்ளையர்களால் அந்தத் தொகை இந்தியாவுக்கு திரும்பத் தர இயலாது. தரக்கூடிய சூழலில் அவர்களின் பொருளாதாரமும் இல்லை. குறைந்த பட்சம் இந்திய மக்களிடம் மன்னிப்பாவது கேட்பார்களா என்று எழுதியது மட்டுமல்ல, பல பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பேசவும் செய்தார்.

ராய் மாக்ஸம் 'உப்புவேலி'யில் உப்பை வைத்து ஒரு பெரிய கொள்ளையை கம்பெனி மற்றும் ஆங்கில அரசாங்கம் நடத்தி மக்களை வாட்டி வதைத்ததையும், அந்த வரிவசூலை செய்ய உலகின் மிகப்பெரிய உயிர்வேலி அமைத்து சுரண்டியதையும், இந்த உயிர் வேலியை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒரு வரலாற்று ஆவணத்தை இந்திய மக்களுக்குத் தந்துள்ளார். இதை ஒரு இந்திய வரலாற்று ஆசிரியரால் தர இயலவில்லை.

தன் தணியாத ஆய்வுத் தாகத்தால் ஓர் ஆய்வாளனாக அவர் நடத்திய ஆய்வு, அதற்காக அவர் ஆவணங்களையும், அதற்குச் சான்றாக உயிர் வேலியின் தடங்களைக் கண்டுபிடிப்பதற்கு அவர் செய்த பயணங்கள், அவர் சென்ற ஆவணக் காப்பகங்கள், அவர் தேடிய ஆவணங்கள், அவைகளை ஆய்வு செய்த முறைமைகள் அத்தனையும் இந்த நூலில் தந்து வாசிப்போரை ஒரு நாவல் படிக்கும் உணர்வுக்குக் கொண்டு வந்ததுதான் இந்த ஆவணத்தின் தனிச்சிறப்பு.

இதில் ஒரு ஆய்வாளனாக அவர் சந்தித்த தோல்விகள், தன் தோல்வியிலிருந்து மனம் தளராமல் வெற்றிப்படிக்கட்டுகளாக அந்த ஆய்வை நடத்தி அந்தத் தடத்தை கண்டுபிடித்தது என்பது ஒரு சாதனை மட்டுமல்ல, அது ஒரு சாகசம் என்பதை அந்த நூலைப் படிக்கும்போது நம்மால் உணரமுடியும்.

இதில் வெள்ளையர்கள் இந்த நாட்டில் செய்தது கொள்ளைதான். அதை தாங்கள் ஒரு அரசாங்கம் என மக்களிடம் ஒரு கருத்தை உருவாக்கி, அச்சுறுத்தி, மேய்த்து மக்களைச் சுரண்டினாலும், அந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வைத்திருந்ததை நாம் மறுக்க இயலாது. அந்த ஆவணங்கள்தான் இன்று நமக்கு நம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க உதவுகிறது, அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, அன்று மக்களின் நிலை, மக்களின் வாழ்வியல் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுத் தரவுகள் தேடும் படலத்தில் மக்களின் வாழ்வுநிலை என்ன என்பதையும் பதிவு செய்து விளக்கி இருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச் சிறப்பு. அடுத்து நம் வரலாற்று ஆய்வுக்கு முறைமை இயலில் என்னவெல்லாம் புதுமைகள் கொண்டுவர முடியும் என்பதையும் இந்த நூலைப் படிக்கும் ஆய்வாளர்கள் அறிந்து கொள்ளலாம். இவற்றையும் கடந்து பல கேள்விகள் எழுவதற்கான வாய்ப்புக்களையும் அந்தத் தேடுதலில் அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.

இவர் தரவுகளை தேடியது 18ஆம் நூற்றாண்டு நிகழ்வுகளை உறுதிப்படுத்த. ஆனால் அவர் நடத்திய ஆய்வு 1990களில். 1991ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா உலகமய பொருளாதாரத்திற்குள் நுழைந்துவிட்டது. அந்தக் காலத்தில் அதாவது சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகள் கடந்து இந்தியக் கிராமங்கள் எப்படி இருக்கின்றன என்பதையும் தன் ஆய்வுத் தடத்தை விளக்கும்போது கூறியிருப்பது அடுத்த சிறப்பாகும். மக்களின் வாழ்க்கை நிலை என்பது எந்த அளவுக்கு சுதந்திர இந்தியாவில் குடியரசால் நடத்தப்படும் ஆட்சியில் உள்ளது என்பதைப் படம்பிடித்துக் காண்பித்து மற்றொரு மையக்கேள்வியை எழுப்பி வைத்திருக்கிறது.

உப்பு வரியை ஆய்வு செய்யும்போது இந்திய ஆட்சியாளர்களுக்கும், வெள்ளைய கொள்ளையர்களுக்கும் வரி விதிப்பதில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை நம்மால் புரிந்துகொள்ளும் அளவுக்கு தரவுகளுடன் விளக்குகிறது இந்த நூல். உப்பு வரி என்பது சந்திர குப்த மெளரியர் காலத்திலிருந்து இன்றுவரை இருந்தாலும், இந்திய அரசர்கள் சற்று மக்கள் மீது கருணை காட்டினார்கள். வெள்ளையர்களோ கொள்ளையடிப்பதைத் தவிர மக்கள் மேல் எந்தக் கவலையும் கரிசனமும் இன்றி ஈவு இரக்கமின்றி அரக்கக் குணத்துடன் செயல்பட்டது என்ற ஒரு கொடுமையான நிர்வாக அமைப்பை அப்பட்டமாக ஆவணப்படுத்தியுள்ளது மிக முக்கியமான சிறப்பம்சமாகும்.

இந்த வரலாற்று ஆவணத்தை நுணுக்கமாகப் படிக்கும்போது ஒரு கேள்வி எழும். ராபர்ட் கிளைவ் எப்படி கம்பெனி நிர்வாகத்திற்கு தலைமை ஏற்று இங்குவந்து கம்பெனியையும், ஏமாற்றி, இங்கிலாந்து அரசையும் ஏமாற்றி இங்கிலாந்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பணம் தந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டான் போன்ற சம்பவங்களைப் படம்பிடித்துக் காண்பித்திருப்பது ஒரு நாவலுக்குரிய தன்மை இந்த நூல் பெற்று இருக்கிறது. இன்று சுதந்திரமான நம் நாட்டில் அரசியல் நடத்துவதாக மக்களுக்காக அரசியலில் பதவிக்கு வருவதாகக் கூறி தங்களைப் பணக்காரர்களாக ஆக்கிக்கொண்டு, தாங்கள் சம்பாதித்த பணத்தை வைத்து பாதுகாத்துக் கொண்டிருக்கும் நவீன கால ராபர்ட் கிளைவ்களாக நம் அரசியல்வாதிகள் இருப்பதையும் உணர வைக்கிறது இந்த ஆய்வு நூல்.

ராபர்ட் கிளைவ் இந்தியாவில் கொள்ளையடித்து சொத்து சேர்த்ததை விசாரிக்க ஆங்கிலேய அரசு விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்தது அந்த கமிஷன். ஆனால் பொதுமக்கள் சபை உறுப்பினர்கள் ராபர்ட் கிளைவ் அவர்களின் கவனிப்பால், கிளைவ் நாட்டுக்குத் தொண்டாற்றினார் என்று பாராட்டி அதை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டனர். அந்த அளவுக்கு அந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியாயவான்கள். ஆனால் இயற்கை வேறு ஒன்றைச் செய்தது. வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர் மது அருந்தி கடைசியில் 49வது வயதில் தற்கொலை செய்துகொண்டார். அதன்பின் அவர் கல்லறைகூட அடையாளமற்றதாக மாற்றப்பட்டது.

அதன் பின் வந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் நிர்வாகச் சீர்திருத்தம் என்று கூறி லண்டனில் அதிகார மையத்தை திருப்திப்படுத்த மக்கள்மீது வரியைத் தாங்க முடியாத அளவிற்கு விதித்து பெருநிதி லண்டனுக்குத் தந்தார். முன் அரசர்களைப் பயன்படுத்தி இந்த வரிவசூல் நடைபெற்றது. அதற்கு அவர்களுக்கு சன்மானமாக உதவித்தொகை சலுகைகள் என வழங்கப்பட்டிருந்தன. அவைகளையெல்லாம் நிறுத்தி கஜானாவைப் பெருக்க முனைந்தார். அதுமட்டுமல்ல, வரிவசூலை நேரடியாகவே செய்தார். இவர் வந்தபிறகு உப்பு தயாரிக்கும் நிலங்கள் வைத்திருந்தவர்கள். தங்கள் நிலங்களை இழந்து அதில் கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதுதான் இவரின் சாதனை.

உப்பு அன்றாடத் தேவைக்கான பொருள். அதனை வணிகப் பொருளாக்கி, வரி விதித்து, மக்களின் வாழ்க்கையைச் சீரழித்தது வெள்ளைய அரசாங்கம். உப்புக்காக அன்று மக்கள் அதிகம் செலவழிக்க வேண்டியிருந்தது. இந்த உப்பு வேலி வரலாற்றைப் படிக்கும்போது வெள்ளைய அரசாங்கம் மக்களை எப்படிச் சுரண்டியது என்பதை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காண்பித்தது. அதே நேரத்தில் இன்று நம் நாட்டில் மக்களாட்சி நடைபெற்று வருகிறது. இந்த சுதந்திர நாட்டில் நடைபெறும் அரசியல் ஆட்சி என்பதெல்லாம் எப்படி நடக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்கு அடித்தளமாக இந்த ஆய்வு நூல் விளங்குகிறது.

இன்று ஒரு மையக்கேள்வியை எழுப்புகிறது இந்த நூல். இன்றைய அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பிடித்து அடித்த கொள்ளை எவ்வளவு, இன்றைய அரசியல்வாதிகள் நவீனகால ராபர்ட் கிளைவ்களாக, வாரன் ஹேஸ்டிங்ஸ் போல இருப்பதைத்தான் நம்மால் பார்க்க முடிகிறது. வரிவிதிப்பு என்பதில் கூட மக்களை இந்த வரிவிதிப்பு எப்படி சாதாரண மக்களைப் பாதிக்கும் என்பது அறியாது மக்களை வாட்டும் நிலையில் வரிவிதிப்பது நடக்கத்தான் செய்கிறது. நிர்வாகச் சீர்திருத்தம் என்று கூறி. சந்தைக்கு லாபம் சம்பாதிக்க நிர்வாகம் சீர் செய்யப்படுகிறதேயன்றி சாதாரண மனிதனின் வாழ்வைச் செம்மைப்படுத்த நிர்வாகம் சீர் செய்யப்படுகிறதா என்ற கேள்வியைக் கேட்க வைக்கிறது இந்த நூலைப் படிக்கும்போது.

ஒரு பாராளுமன்றம் எப்படிக் கொள்ளைக்காரர்களை நாட்டுக்கு நல்ல பணியாற்றியோர் என்று பாராட்டுத் தெரிவிக்கிறதோ அதேபோல்தான் குற்றப் பின்னணி கொண்டவர்கள் அரசியலில் புகுந்து பாராளுமன்றத்திற்குள் சென்று பாதுகாப்புத் தேடிக்கொள்கின்றனர் இன்று. காலம்தான் வித்தியாசம், செயல்கள் அனைத்தும் ஒன்றுதான். ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்று நம் விடுதலைக்காகப் போராடிய இந்திய தேசிய காங்கிரஸ் தன் லாகூர் மாநாட்டில் ஓர் தீர்மானம் 1929இல் இயற்றி 1930இல் வெளியிட்டது. அதில் கூறுகிறது, அரசாங்கம் என்பது: மக்களைப் பாதுகாக்க வேண்டும்; மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்; மக்களை அச்சுறுத்தக்கூடாது; மக்களை யாரும் சுரண்ட அனுமதிக்கக்கூடாது, மக்களை அரசும் சுரண்டக் கூடாது, மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து; மரியாதையுடைய வாழ்க்கையை வாழ வைக்க வேண்டும்; மக்களின் சுயமரியாதையை நிலைநாட்ட வேண்டும், மக்களுடன் இணைந்திருக்க வேண்டும், மக்களை அந்நியப்படுத்தக்கூடாது. இவைகள்தான் மக்கள் அரசாங்கத்தின் பண்புகள். இதை வைத்துப் பார்க்கையில் வெள்ளைய அரசு எங்களுக்கான அரசு அல்ல, நீ வெளியேற வேண்டும் என்று தீர்மானம் இயற்றினர். இன்று அதை வைத்து நம் சுதந்திர நாட்டில் மேற்கூறிய அனைத்துக் குறியீடுகளையும் வைத்துப் பார்க்கையில் நம் அரசாங்கம் யாருக்கானது என்பதை எளிதில் தீர்மானித்து விடலாம்.

இந்த நூல் ஆய்வாளர்களுக்கான நூல் மட்டுமல்ல, நல்ல பொதுக்கருத்தாளர்களாக செயல்படுபவர்களுக்கான நூலும் கூட. இதை நாம் படிக்கும்போது பல புதிய தடங்கள் நோக்கி நம் வரலாற்று ஆய்வை தகவமைத்துக் கொள்ள வழிவகை காட்டுகிறது. அடுத்து நம் நாட்டின் வரலாற்றை நாம் திரும்பிப் பார்த்து நாம் எவ்வளவு தூரம் சுரண்டப்பட்டுள்ளோம் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அது மட்டுமல்ல, இன்றும் அந்த சுரண்டல் நடைபெறுவதை நம்மால் உணர முடிகிறது. அதற்குத் தீர்வுகாண நம்மை இந்த நூல் தூண்டுகின்றது.

உப்புவேலி | ராய் மாக்ஸம் | தமிழில்: சிறில் அலெக்ஸ்

விலை: ரூ. 440 | வெளியீடு: தன்னறம் நூல்வெளி

க.பழனித்துரை, பேராசிரியர், காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.