நவீனத் தமிழ்க் கவிதை வரலாற்றில் பெண் கவிஞர்கள் எழுதியுள்ள கவிதைகள் இன்று தனித்து விளங்குகின்றன. பெரும்பாலான பெண் கவிஞர்கள் பெண் என்று தன்னிருப்பை அறிந்திட்ட சூழலில் பெண் கவிதை என்பது மொழி, பால் அடையாளத்துடன் வெளிப்பட்டுள்ளது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் ஒருபுறம் எனில், மின்னணு வெளியின் தாக்கம் இன்னொருபுறம் வலுவாக உள்ளது. இந்நிலையில், காலங்காலமாகக் குடும்ப நிறுவனத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட பெண் பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்ற பெண் படைப்பாளர்கள் புனைகின்ற கவிதைகள் புதிய தடத்தில் பயணிக்கின்றன. பெண் கவிஞர்கள் எழுதியுள்ள கவிதைத் தொகுதிகளை முன்வைத்து நண்பர், இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. நளினி சுந்தரி, முனைவர் பட்ட ஆய்விற்காக எழுதிய ஆய்வேட்டின் செம்மையாக்கப்பட்ட பிரதியான 'பெண் கவிஞர்கள் கவிதைகளில் வாழ்வியல்’ புத்தகத்தை வாசித்தபோது, கவிதை மீதான அவருடைய ஈடுபாடு புலனாகியது.

nalini sundari book on women writingsஆ. நளினி 2011ஆம் ஆண்டில் நளினி என்ற பெயரில் ‘முதற் பேறு’ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருப்பது இங்குக் கவனத்திற்குரியது. ஆய்வாளரின் கவிதை தோய்ந்த மனம், சமகாலக் கவிதைகளைப் பற்றிய புரிதலுடன் கவிதைகளைப் பாடுபொருளாக்கி ஆய்வினை மேற்கொண்டுள்ளது. குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியான கவிதைக் தொகுதிகளை முன்வைத்துக் கவிதையைப் பற்றிய பேச்சுகளையும் மறுபேச்சுகளையும் உருவாக்கிட முயன்றுள்ள ஆய்வாளர் ஆ.நளினியின் ஆய்வு, சமகாலத் தமிழ்க் கவிதையியல் ஆய்வில் புதிய திறப்புகளை உருவாக்கியுள்ளது.

தமிழாய்வு என்பது வெறுமனே ஆய்வாளருக்கு முனைவர் பட்டம் பெறுவதற்கானது என்று கல்விப்புலம் சார்ந்து வரையறுத்திடுவது ஏற்புடையதல்ல. ஏனெனில், இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பின்புலத்தில் பண்பாடும் மரபும் சார்ந்த தொடர்ச்சியைச் சாத்தியப்படுத்துகின்ற தமிழ் மொழியினால் உருவான தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய அடிப்படையான கேள்விகளை எழுப்புவதில் தமிழாய்வு முக்கியமானது. சங்க இலக்கியம் முதலாகத் தொடர்ந்திடும் தமிழ்க் கவிதை வரலாற்றில் நவீன கவிதை தனித்துவமானது. பிற இலக்கிய வடிவங்களில் இருந்து மாறுபடுகின்ற கவிதை, ஒப்பீட்டளவில் மனதுடன் நெருங்கிய தொடர்புடையது. தனிமனித மனம், நினைவுகளின் வழியாக வாழ்க்கையின் சாரத்தையும் அனுபவங்களையும் கவித்துவமான சொற்களில் ஈரத்துடன் பதிவாக்குகிறது. உணர்வுகள் கொப்பளித்திட மனம் கட்டமைக்கிற சொற்களின் வழியே கவிதை வடிவெடுக்கிறது. ஒருபோதும் முடிவற்ற தவிப்புகளும் துடிப்புகளும் கவிதை வரிகளாக உருவெடுத்துப் புனைகிற உலகம், முடிவிலியாக விரிகின்றது. ஒவ்வொரு கணத்திலும் பொங்குகின்ற அனுபவங்களைக் கவிதையாக்குகிற கவிஞரின் மொழியாளுகை தனித்துவமானது. இயற்கையுடன் நெருக்கமான பெண்ணுடலும் பெண் மனமும் ஒருவகையில் கவிதை மொழிக்கு நெருக்கமானவை. பெண் கவிதை மொழி, அன்றாட வாழ்வில் ஒத்திசைந்து உருவாக்கும் வரிகள், கவிஞர் அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட முக்கியமான காட்சிகளை இயல்பாகப் பதிவு செய்கின்றன. ஒப்பீட்டு நிலையில் பெண் கவிதை மொழியானது ஆண் கவிஞர்களின் கவிதை மொழியில் இருந்து மாறுபட்டுள்ளது என்று மொழியியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சங்க காலத்தில் 41 பெண் கவிஞர்கள் தொடங்கி, காரைக்காலம்மையார், ஆண்டாள் என்று உச்சநிலை அடைந்த பெண் கவிதையாடல், பின்னர் ஆயிரமாண்டுகளாகத் தொய்வடைந்திருந்தது. எழுபதுகளில் இரா.மீனாட்சி, திரிசடை போன்ற பெண் கவிஞர்கள் கவிதை எழுதியபோது கவிதைச் சூழலில் சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. தொண்ணூறுகளில் வீரியத்துடன் பெண்கள் கவிதை எழுதத் தொடங்கிய சூழலில் அதிர்வுகள் ஏற்பட்டன. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் பெண் கவிதைத் தொகுதிகள் கணிசமாக வெளியாகின. இன்று உலகமெங்கிலும் நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்கள் தமிழில் கவிதை எழுதிக் கொண்டிருக்கின்றனர். பெண் கவிஞர்களின் கவிதைகள் மீதான அக்கறையுடன் ஆ.நளினி சுந்தரி 2001 முதல் 2005 வரையில் ஐந்து ஆண்டுகள் காலகட்டத்தில் வெளியாகியுள்ள பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுதிகளை ஆய்விற்குட்படுத்தியுள்ளார். அவருடைய ஆய்வுத் தேடல் பெண் கவிஞர்கள் எழுதியுள்ள கவிதைகளைப் பற்றிய பன்முகப் பார்வைகளைக் கண்டறிந்துள்ளது.

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகமயமாக்கல் அரசியல் காரணமாக எங்கும் நுகர்பொருள் பண்பாடு ஆதிக்கம் செலுத்தியது. அதேவேளையில், இணையவெளியில் மின்னணு ஊடகங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் பல்கிப் பெருகின. தமிழ்நாட்டில் வாழ்கின்ற மக்களின் அன்றாட வாழ்க்கையில் இதுவரை நிலவிய சமூக மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாகின. எதுவும் நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகள் வலுவடைந்துள்ள சூழலில் பெண்களின் சமூகப் பங்களிப்பு வீச்சாகப் பரவியுள்ளது. இதுவரை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த கவிதையுலகில் பெண் கவிஞர்கள் தங்களுடைய கவிதைத் தொகுப்புகளுடன் களத்தில் குதித்தனர். பெண் கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்பட்ட பெண்ணுடலை மையமிட்ட கவிதைகளின் உக்கிரத்தைத் தாங்கிடாமல் அலறிய அன்றைய ஆண் மையவாதிகளின் அதிகாரப் பேச்சுகள் இன்றைய தலைமுறையினர் அறியாதவை.

பண்பாட்டுக் காவலர்களாக வேடந்தாங்கிய அராஜகவாதிகளின் வன்முறைப் பேச்சுக்கு எதிராகச் சென்னை மாநகரில் 2004, மார்ச் 27 அன்று 'அணங்கு' அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று 'நவீனப் பெண் கவிதையியலின் அகம்Xபுறம்’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தேன். அந்தக் கருத்தரங்கக் கட்டுரைகள் ‘அணங்கு’ என்ற பெயரில் நூலாகியுள்ளன. பெண் கவிஞர்களின் கவிதைகளுக்கு எதிரான கொந்தளிப்பு நிலவிய காலகட்டத்தில் வெளியான கவிதைத் தொகுப்புகள் பெண்ணிய வரலாற்றில் முக்கியமானவை. காலங்காலமாக நிலவிய கவிதையாடலைக் கேள்விக்குள்ளாக்கிய பெண் கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து ஆய்வாளர் ஆ.நளினி மேற்கொண்ட ஆய்வு, அவருடைய சமூக அக்கறையின் வெளிப்பாடு. அழகுநிலா, ஆண்டாள் பிரியதர்சினி, இராஜலெட்சுமி, கனிமொழி, குட்டி ரேவதி, தமிழச்சி தங்கப்பாண்டியன், திலகபாமா, தேன்மொழி, மாலதி மைத்ரி, ரிஷி, வெண்ணிலா ஆகிய பன்னிரு பெண் கவிஞர்கள் வெளியிட்டுள்ள 21 கவிதைத் தொகுப்புகளின் பின்புலத்தில் விரிந்துள்ள ஆய்வு பெண்ணியக் கவிதைப் போக்குகளின் முதன்மை அம்சங்களைப் பதிவாக்கியுள்ளது.பெண் கவிஞர்களின் கவிதைகளைப் பாடுபொருள்கள், வெளிப்பாட்டு முறைகள், உத்திகள் என்ற வகைப்பாடுகளில் பகுத்து விளக்கியுள்ள ஆய்வாளர் நளினியின் ஆய்வுமுறையியல் நுணுக்கமானது.  பெண் கவிஞர்கள் எழுதியுள்ள கவிதைகளின் பாடுபொருள்கள் பெரிதும் சமுதாயத்தை மையப்படுத்தியுள்ளன என்று குறிப்பிடும் ஆ. நளினி மனித மன உணர்வுகள், வாழ்வியல் தொடர்பான உணர்வுகள், இயற்கையோடு தொடர்பான பதிவுகள் எனப் பகுத்து விளக்கியுள்ளார். அவர் குறிப்பிடுகின்ற மனித மன உணர்வுகளைப் பற்றிய பதிவுகள் உளவியல்ரீதியில் கவனத்திற்குரியன.

பேசும் தனிமை, மௌனம் பேசிய கவிதை என்று கவிதைகளை அணுகியிருப்பது ஆ.நளினியின் கவித்துவ வாசிப்புக்குச் சான்றாக விளங்குகின்றது. ஒரு தலைப்பின் கீழ் எப்படியெல்லாம் கவிஞர்கள் கவிதைகளை எழுதியுள்ளனர் என்று ஆய்வாளர் தந்துள்ள கவிதை விமர்சனம் முக்கியமானது. கவிதையைப் பொருத்தவரையில் உள்ளடக்கத்துடன் கவிதையின் வெளிப்பாடும் மொழித் தேர்வும் முக்கியமானவை என்று ஆ.நளினி பகுத்துத் தந்துள்ளவை பின்வருமாறு: தனிமை, மௌனம், அச்சம், வெறுமை, நினைவு (கடந்த கால நினைவு), ஆன்மா, கனவு, மாயை, ஏக்கம், வேற்று உலக எண்ணம், கற்பனை உலகம், மன அழுத்தம், மனநிலை, மனித மனம், மனிதனின் மாற்றம், முடிவற்ற நிலை, தன்னம்பிக்கை, நேசிப்பின் மீதம், அன்பு, அலுத்துப்போகும் விஷயங்கள், இறந்தவன் முகம், பார்வை, ஸ்பரிசம், பிரிவு, எதிர்பார்ப்பு, காத்திருப்பு, அறிவை எதிர்கொள்ளுதல், மயான வேளை, கனவோசை நிகழ்வு, எச்சில், வெட்கம், தேவதையின் செயல், வாழ்வின் அனுபவம், அவமானத்தின்போது ஏற்படும் சூழல், இழப்பு, பேசாமல் இருந்தவர் சந்திப்பு, போராட்டம், ஆளுமை, வார்த்தை அடைத்துப் போதல், விடுதலை, ரசனை, இன்பத்தின் வலி, நாவுகள், படிப்பினை, எதிர்காலம், அன்பின் வெளிப்பாடு,அதிர்வுகள், குழப்பம், ஆறுதல், துக்கம், முயற்சி, துன்பம், பிரபஞ்சம் பற்றிய கனவு, ஆசை, வலி, அந்தரங்கம், அசரீரி, அறிவு, ஒளிவட்டம், மனப்புழுக்கம், ஏமாற்றம்... ஒவ்வொரு கவிதைக்குள்ளும் குறுக்கு நெடுக்கிலும் பயணித்துக் கண்டறிந்த கவிதையின் மையத்தைப் பற்றிய ஆய்வாளரின் விவரிப்புகள், குறிப்பிடத்தக்கனவாக விளங்குகின்றன.  

ஒவ்வொருவரும் பேசும்போது குறியீடுகள்மூலம் கருத்தைத் தெரிவிக்க முயலுகின்றனர். ஆனால் மொழியே ஒரு குறியீடுதான். உரைநடையில்  சொற்களின் இணைப்பு என்பது பொருளை மட்டுமே உருவாக்குகிறது. அந்த இணைப்பிலிருந்து உருவாகும் அனுபவத்தின் மூலம் மொழியைச் சார்ந்து விளக்கமுடியாத மர்மக் கூறு எதுவும் இல்லை. ஆனால் கவிதையில் சொற்களின் இணைப்பானது சொற்களுக்குரிய பொருளைத் தாண்டிய வெறொரு புதிய தளத்திற்கு நகர்த்திடும் இயல்புடையது. அதனால் கவிதை வரிகளுக்கு இடையில் வாசிப்பின் வழியாகப் பயணித்திட தோது உள்ளது. கவிதைப் பின்புலம், கவிதை மொழி, கருத்தியல் வெளிப்பாடு என்று கவிதைகளை ஆய்வாளர் ஆ.நளினி அணுகியிருப்பது ஏற்புடையது. கவிதை உணர்த்துமுறை என்ற தலைப்பின் கீழ் கவிதைகளை ஆய்வாளர் பகுத்துள்ள பகுப்புகள் பின்வருமாறு. அவை: ஒரே சொல்லை அடுக்கி உணர்த்துதல், கலைத்துவத்துடன் கருத்துணர்த்துதல், எள்ளலாக உணர்த்துதல், திகைப்பூட்டும் காட்சி வழியே உணர்த்துதல், சொல்லழகில் கலைச்சுவையை உணர்த்துதல், ஆண்-பெண் முன்னிலைப்படுத்தி உணர்த்துதல், படிப்பினை வழியாக உணர்த்துதல். ஒரு மையப் பொருண்மையில் கவிதைகளைத் தொகுத்துப் பகுத்து வகுத்து விளக்கிடும் ஆ.நளினியின் அணுகுமுறையென்பது வாசிப்பில் கவிதைகள் பற்றிய புரிதலை ஆழப்படுத்துகின்றன. பெண் கவிஞர்களின் கவிதைகளில் மனதினை மேம்படுத்துதல், பிரச்சினையை எதிர்கொள்ளல், சகித்தல், விடுபடல் போன்ற உளவியல் கூறுகளைப் பற்றிய விவரிப்புகள் கவனத்திற்குரியன.

விழிகளுக்கு மை தீட்டுவதுபோலக் கவிதை மொழிக்கு உவமை உள்ளிட்ட அழகியலான கவித்துவக் கூறுகளைப் பற்றி ஆய்வாளர் ஒப்பீட்டு நிலையில் விளக்கியுள்ளார். அவை கவிதையைப் பற்றிய ஆ.நளினியின் ரசனைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. கவிதையில் வெளிப்படுகின்ற உவமை, உருவகம், படிமம், குறியீடு, தொன்மம், இருண்மை, அங்கதம், பகடி, முரண், பொருள் மயக்கம் போன்றவற்றை நுணுகி ஆராய்ந்து பெண் கவிஞர்களின் கவிதை வரிகளின் தனித்துவத்தைப் பற்றிய ஆ.நளினியின் விளக்கம், கவிதையியலாக விரிந்துள்ளது.

தனிமனித மன உணர்வுகளைப் புரிந்திருக்கிற பெண் கவிஞர்கள், ஒருநிலையில் தனிமையான சூழலில் தங்களுக்குள் கட்டமைத்திடும் உரையாடல்களைக் கவிதையாக்கியுள்ளனர் என்ற ஆய்வாளர் ஆ.நளினியின் கண்டறிதல் முக்கியமானது. பாலினச் சமத்துவம் நிலவிடாத இன்றையச் சமூகச் சூழலில் பெண் என்ற புரிதலுடன் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிரான கலகக் குரலைக் கவிதை வரிகளாக்கியுள்ள பெண் கவிஞர்களின் சமூக அக்கறையை வெளிப்படுத்துகின்ற போக்கு நூலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.

பெண் கவிஞர்களின் கவிதைகளைப் பற்றிய அவதானிப்பில் ஆ.நளினி கோட்டோவியமாகக் கவிதைகளைப் பற்றித் தீட்டியுள்ள பின்வரும் மதிப்பீடுகள், அவருடைய நுணுக்கமான கண்டறிதலுக்குச் சான்றாக விளங்குகின்றன. "ஆங்கிலப் புலமையின் எழுத்து மொழிதனை வெளிக்காட்ட விரும்பாத கவிஞர்களாய் அழகுநிலா, திலகபாமா, இராஜலட்சுமி, தேன்மொழி ஆகியோர் திகழ்கின்றனர். புதிய உலகத்தைத் தொட்டுவிட விரும்பும் ஏக்க உணர்வை அழகுநிலா தருகிறார். எத்தகையச் சூழலிலும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் வேண்டும் என்ற உணர்வையும், சமூக அக்கறையுடன் வாழத் துடிக்கும் எத்தனிப்பையும் ஆண்டாளின் கவிதைகள் உணர்த்துகின்றன. தன்னைப் புதுவிதமான அடையாளப்படுத்தலுக்கு உட்படுத்த விரும்பாமல் இயல்பான புரிதலுக்குட்பட்டுச் சூழ்நிலைகளைக் கடக்க வேண்டும் என மொழிகிறார் இராஜலட்சுமி. மரபு சார்ந்த நிலையிலிருந்து மாறாமல் சமூக அக்கறையின் தேவைகளை உணரச் செய்கிறார் கனிமொழி, பாலின அதிகாரத்திற்கு எதிரான குரலாகவே மாலதி, குட்டிரேவதி, சல்மா ஆகியோரின் கவிதைகள் அமைகின்றன. இருப்பை மறந்து புதிதாய் எதனைச் சொல்லுவது என்ற மனநிறைவோடு எழுதி வாசிப்போரையும் கவிதை எழுதச் செய்கிறார் தமிழச்சி. அடக்குமுறைக்கு எதிரான கவிதைக்குரல் திலகபாமாவினுடையது. வாழ்வின் மீதான நம்பிக்கைத்தன்மையை ஒருபோதும் விட்டுவிடாதவராய் தேன்மொழி; ஆண்-பெண் பேதங்கள் படைப்பில் இருக்கக்கூடாது என்ற நோக்குடன் இறுக்கமான எதிர்ப்புக் குரலாய் ரிஷி; எளிமையும் இயல்பும் கலந்து மௌனத்தைப்போல அழுத்தமாய்ச் சொல்லும் வேகத்தோடு வெண்ணிலாவின் கவிதைகள் எனப் பெண் கவிஞர்களின் கவிதைகள் அமைந்துள்ளன.” ஆய்விற்குட்படுத்தப்பட்ட பெண் கவிஞர் ஒவ்வொருவரைப் பற்றியும் தன்னுடைய கருத்தை எளிய மொழியில் ஆ.நளினி பதிவாக்கியிருப்பது அவருடைய கவித்துவ ஈடுபாட்டின் வெளிப்பாடுதான்.

ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்ட பெண் கவிதைகயைப் பற்றிய ஆ.நளினியின் விமர்சனம் இன்றையக் கவிதைகளைப் புரிந்திட உதவுகிறது.  இன்று சகலமும் மறுதலிக்கப்பட்டு மறுவாசிப்பு செய்யப்படும் வேளையில், கவிதை மட்டும் தனித்திருக்க முடியாது. உருப்பளிங்கு போன்ற வடிவத்திற்குள் செய்நேர்த்தியான வரிகளைக் கவிதையென்று போற்றிய மனநிலை மறைந்து விட்டது. பெண்ணின் அனுபவங்கள் வீட்டை விட்டு வெளியேறி வெளியெங்கும் மிதக்கின்றன. பெண் தனக்கென உருவாக்கிய வெளியில், புனைந்திடும் கவிதை வரிகள் வாசிப்பில் அதிர்வை ஏற்படுத்துகின்றன. காலந்தோறும் மொழியின் வழியே புனையப்பட்ட கற்பிதங்களைப் புறந்தள்ளிவிட்டு, பெண்ணின் சுயமான இருப்பு, ஆயிரமாயிரம் மறுதலிப்புகளையும் கேள்விகளையும் எழுப்புகின்றது. இதுவரையில் தமிழ்ச் சமூகம் கட்டமைத்திருக்கிற பெண்ணை பற்றிய கற்பிதங்களை மறுதலித்துவிட்டுப் புதிய வாசிப்பைப் பெண் கவிஞர்களின் கவிதைகள் கோருகின்றன; கலகத்தை நிகழ்த்துகின்றன. பெண்ணுடல் இழிவானது என்ற மத அடிப்படைவாதச்  சொல்லாடலைச் சிதைத்திடும் பெண் கவிதை மொழியைப் பற்றிய ஆ.நளினியின் பன்முகப் பார்வைகள், ஒடுக்கப்படும் பெண்களின் குரல்களாக வெளிப்பட்டுள்ளன. அதேவேளையில், 'பெண் கவிஞர்கள் கவிதைகளில் வாழ்வியல்’ நூல், பெண்கள் எதிர்கொள்கின்ற பாலின சமத்துவமின்மை முதலான பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிய புரிதல்களையும் பெண்ணைச் சக மனுஷியாகப் பார்க்கின்ற பார்வையையும் வாசிப்பில் உருவாக்கிடும் வல்லமையுடையது.

ஆ.நளினி சுந்தரி எழுதியுள்ள ’பெண் கவிஞர்கள் கவிதைகளில் வாழ்வியல்’ நூல்  பெண்ணியக் கவிதைகள் திறனாய்வு வரலாற்றில் என்றும் தனித்து விளங்கும். இந்த நூல் பெண்ணிய வாசிப்பில் உருவாக்கியுள்ள மனப்பதிவுகள் காத்திரமானவை. பேராசிரியர் ஆ.நளினி சுந்தரி ஆய்வுலகில் தொடர்ந்து இயங்கிட வேண்டியது அவசியம். அதற்கான நம்பிக்கையையும் தேவையையும் அவருடைய ஆய்வு நூல் ஏற்படுத்துகிறது.

பெண் கவிஞர்களின் கவிதைகளில் வாழ்வியல்
ஆ. நளினி சுந்தரி | வேரல் பதிப்பகம் | விலை:ரூ.320/-. தொடர்புக்கு:9578764322.

- ந.முருகேச பாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.