தமிழ்ச் சிறுகதை வெளியில், காத்திரமான வரவாக வந்திருக்கிறது பவா செல்லதுரையின் 'நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை' தொகுப்பு. பெரிதும் வழக்கில் இராத சூழல்கள், கதைக்களன்கள், வியப்பேற்படுத்தும் மனிதர்கள் என விரிந்திருக்கிறது பவாவின் இந்த உலகம். ரசனையோடு வடிவமைக்கப்பட்ட, எளிமையின் பேரழகோடு செய்யப்பட்ட உணவு விடுதியின் குறைந்த வெளிச்சம் பழக்கப்பட்டுப்பின், இதமும் ஆசுவாசமும் தரும் ஒளிவிரிப்பாவது போலக் கதைகள் ஒவ்வொன்றும் வாசித்த முடித்தபின் தரும் கலை இதம், வசீகர அனுபவங்கள். நிலைபேறுடைய பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பவா செல்லதுரையின் கதைகள் தனித்தனியாகப் படித்தபோது, எனக்குத் தந்த நிறைவும் மகிழ்ச்சியும், இவைகள் தொகுதியாக வரவேண்டும் என்ற ஆசையை எனக்கு ஏற்படுத்தி இருந்தன. பல முறையும் இதை வலியுறுத்தியும் இருக்கிறேன். இப்போது அனைத்துக் கதைகளையும் ஒரு சேரப் படித்தபோது, என் அனுமானம் பொய்க்கவில்லை என்பதில் நிறைவு ஏற்படுகிறது மட்டுமில்லை, சங்கத்து ஒளவையைத் தழுவிச் சொன்னால், ஒரு நாளில் ஒரு தேர் செய்யும் வல்லமை கொண்ட தச்சன், மூன்று மாதம் முனைந்து செய்த தேர்போல, நுட்பம் கூடிய புதிய கதைகள் சேர்க்கப்பட்டு, அடர்த்தி பொதிந்த தொகுதியாக இது வெளிப்பட்டு இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

சுமார் முக்கால் நூற்றாண்டு வயதேறிய சிறுகதைப் பரப்பில் பவா செல்லதுரை எங்கு நிற்கிறார். விமர்சகர்கள் இதைச் சொல்லக்கூடும்.

இடையறாத தொடர்ந்த வாசிப்பை ஒரு வாழ்க்கையாகவே கொண்ட என் பார்வையையும் பதிவு செய்வது இளம் வாசகர்களுக்குப் பயன் தரக்கூடும். சிறுகதையைப் பாரதி அல்லது வ.வே.சு. ஐயரோடு இணைத்துப் பேசுவது ஒரு மரபாகி இருக்கிறது தமிழ்ச் சூழலில். என் பார்வை, இவர்கள் இரண்டு பேருமே சிறுகதைத் தந்தையர்கள் இல்லை என்பதே. பாரதி, சிறுகதைகள் வாசித்துள்ளார் என்பது உறுதி. தாகூரை அவர் மொழி பெயர்த்தார். எனினும், அவர் சிறுகதையை விளங்கிக்கொள்ள வாய்த்ததா என்றால் இல்லை. குட்டிக் கதைகள் அல்லது குமரன் கதைகள், செய்திக் கதைகள், கருத்துக் கதைகள் என்றே அழைக்கப்படலாம் அவர் கதைகள். ஐயருக்கும் சிறுகதை தெரியும். முயன்றும் பார்த்தார். அவர் நோக்கம், வாசகர்க்குத் தேசிய இரத்தம் பாய்ச்சுவது அவர் கதைகளோடு கதைத்தோற்றம் புதுப்பாதை கண்டது, சிறுகதை அல்ல. எனினும், சிறுகதை என்கிற புது இலக்கியப் பிரிவு தமிழில் இடம்கொள்ள வேண்டும் என்று இந்த நம் முன்னோடிகள் நினைத்துச் செயல்பட்டார்களே, அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக வேண்டும்.

1850களைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகம், சோப்பு டப்பாக்களைப் போலப் பட்டதாரிகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. பல்கலைக் கட்டிடங்களைச் செங்கல்லும் சிமெண்ட்டும் கொண்டு எழுப்பிய மக்கள், மக்களின் மக்கள், உள்ளே படிக்க மட்டும் நுழையவில்லை, நுழைய முடியவில்லை. கோவிலில் இருந்து, பல்கலை வரைக்கும் நுழையும் உரிமை பெற்றவர்கள் படிக்கப் போனார்கள். அமெரிக்க, ரஷ்ய, ஆங்கில, பிரஞ்சுக் கதையாசிரியர்களை அவர்கள் படிக்கும் நல்வாய்ப்பு பெற்றார்கள். பட்டம் ஏற்று, சேவகம் செய்த அவர்கள், தாங்கள் கல்லூரியில் படித்த கதைகளைப் போலத் தமிழிலும் ஏன் எழுதப்படக் கூடாது என்று யோசித்தார்கள். அச்சு வாகனத்துக்கு எழுத்துத் தீனியும் வேண்டப்பட்டு, தேவையே படைப்புகளைத் தீர்மானித்தன. கதைகள் எழுதப்படலாயின.

ஆற்றங்கரையை ஒட்டிய, சினிமாப் போஸ்டர் ஒட்டப்படாத காலத்துச் செம்பட்டை அடித்த அக்ரகாரத்துச் சுவர்கள், ஆற்றுக்கு அந்தப்புறம் இருந்த சேரியிலிருந்து ஆசுவாசம் மிகுந்த தூரத்தில் வீடுகள், இருட்டு ரேழிகள், எண்ணெய் வழியும் சுவாமி மாடங்கள், பெருமூச்சுகள் வெடித்தெழும் கிணற்றடி, உத்தியோகச் சம்பத்து, சமையல் உள் மாமிகள், இளம் மாமிகளின் கொலு நேர்த்தி, சைவப் பட்சணப் பழக்கம், அ-மாமிசக் காதல் என்று அவர்கள் அறிந்த வாழ்க்கையை அவர்கள் எழுதினார்கள். அல்லது புனைந்தார்கள்.

புதுமைப்பித்தன், தன் ஜேபிகளில் ஆச்சரியங்களுடன் பிரவேசம் செய்தார். நிறைய குட்டிப் பிசாசுகள் அவரிடம் இருந்தன. வடிவம், சொடுக்கும் சொற்கள், சைவப் பிள்ளை மார்களில் நிறைவேறாத தாபங்கள், அற்புதமாக வடிவமைத்த குழந்தைகள், அப்பாவிப் பெண்கள், அந்தரத்தில் காமம் சொட்டும் பெண்கள், என்று முழு சனாதனம் கழறாத, அதே நேரம் மண்ணோடு ஒட்டிய மனிதர்களை எழுதி, தனித்வம் என்ற வகையில் முதல் கதாசிரியராக விகசித்து நின்றார். பிரத்யேக அனுபவங்கள் போர்த்த தத்துவச் சரடுகளும் சுழற்சிகளும் கொண்ட, தாசிகள் எனப்பட்டவரைப் பிரமை வீசும் பெண்களாக மாற்றியமைத்தவராக, ஊரோடு சேரியைச் சேர்க்க மனமற்றவராக, சிறுகதைக் கலைஞராக மௌனி தோற்றம் கண்டார். உள் வீட்டில், காதல் நெருப்பில் கனலும் பெண்களை, அவர்களின் சார்பில் வழக்காடும் புனைவாளராகக் கு.ப.ரா. வந்து போனார். அழகிரிசாமி முழுமையான படைப்பாளி எனல் தகும். ஒரு வகையில், முன்னுதாரணம் இல்லாத படைப்பாளி அவர். பின்னாளில் மிக விரிவாகக் கட்டமைந்த சிறுகதை வெளிகளை நிர்மாணித்த முன்னோடும் பிள்ளை.

தமிழ்மொழியில் தனிப்பெரும் வியக்தி தி. ஜானகிராமன். மனித அழகுகள் ஒவ்வொன்றாகப் பொறுக்கிச் சேர்த்து, அழகைப் பேரழகாக மாற்றிய பெரும் கலைஞர் தி.ஜா. வார்த்தை அழகு, உச்சரிக்கும் அழகு, வெற்றிலைச் செல்லத்தோடு குழறிப் பேசும் அழகு, நிற்கும் அழகு, நிகுநிகு உடம்பழகு, பாட்டு அழகு மனப்பரிமள வாசனை அழகு, காமம் விகசித்துச் சூரியனையே போகத்துக்கு அழைக்கும் அழகு என அனைத்து அழகுகளாலும் பெண்களைப் படைத்த ஐம்பொன் குயவர் அவர். பெண்களின் விகாசம் தாங்காமல், ஆண்களைத் தற்கொலை செய்ய வைத்த, நேசத்துக்குரிய தன்பால் துரோகி அவர். அதனாலேயே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். பெண்களின் புழங்கு வெளிகளை வானம் அளவு விஸ்தரித்த கலைஞர் அவர். நாகரிகர்கள் முகம் திருப்பும் சாயங்கால மற்றும் இரவு வாழ்க்கையின் சுயமற்றுப்போன பொலிகாளைகளின் அவமானச் சோகம் கப்பிய கதைகளைச் செய்தவர் ஜி. நாகராஜன். பலவீனங்கள் என்று தவறாகக் கருதப்படும் பயம், சுருங்குதல், போலச் செய்தல் போன்ற குணங்களோடு கூடிய எளிய மனிதர்களின் மனக் கோட்டங்களை நகையும், அங்கதமும் கூடிய தொனிகளில் எழுதியவர் சுந்தரராமசாமி. வாழ்வின் முதல் பகுதியில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களையும், பிற்பகுதியில் வளமான மனிதர்களையும் மேடைப்பேச்சுத் தோரணையுடனும், அறுபதுகளின் தமிழ்ச் சினிமாத் தாலிப்பேச்சு போல் மிகைச் சொற்களால் கதைகள் எழுதியவர் ஜெயகாந்தன்.

இவர்களுக்குப் பிறகு நாங்கள் வந்தோம். வண்ணநிலவன், நுண்மை மிகுந்த, வண்ணத்துப் பூச்சிகளின் பின்னால் பயணம் போன மிக முக்கியப் படைப்பாளி. இலைகளின் மறைவில் மறைந்திருக்கும் ஆலம்பழங்களைத் தேடித் தின்னும் கிளியைப் போன்றவர் வண்ணதாசன். சுயமாக உருவாகும் முன்பே, ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி எழுதிய, நெகிழ்வு குறைந்த நல்ல எழுத்தாளர் பூமணி. வசனத்தில் கவிதாம்சங்களைக் கொண்டு வந்தவர் ஜெயப்பிரகாசம். தனித்வம் தோன்ற, இறுக்கமான கதைகளை எழுதியவர் ஜெயந்தன்.

தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் பல அதிர்வுகளைக் கொண்டு சேர்த்தவர் அம்பை. நவீனத்துவத்தின் ஆயிரம் வாசல்களை, பிரதியின் பல அர்த்தச் சாத்தியப்படுதலை, தம் வரலாற்று நோக்கொழுங்கில் கதைகள் எழுதியவர்கள் பிரேமும், ரமேஷ÷ம். இனி வரப்போகும் வாசகர்களின் ஆராதனைக்குரியவராக விளங்கப் போகிற ஆசிரியர் கோணங்கி. கந்தர்வன், தமிழ்ச்செல்வன் இருவரும் மனிதப்பாடுகளை ஆழமான புரிதலோடும் நிகரற்ற வாஞ்சையோடும் கலாபூர்வமாகச் சித்தரித்தவர்கள். நாவல் புலத்தை அகலப்படுத்திய திறமையான எழுத்தாளர் ஜெயமோகன். கவனிக்கத்தக்க கதைகளின் ஆசிரியர். ராமகிருஷ்ணனின் சிறப்பு அலாதியானது. அவர் கதைகளின் நிலவிரிவுகள், வரலாறு போலக் கட்டமைக்கும் காலப் பரிமாணங்கள் விரியும் கதைப்புலங்கள், தனியானவை. விஷயங்களை அவைகளின் கச்சா நிலையிலேயே, தேவைக்கும் குறைந்த சொற்களால் கதை சொல்லும் சுரேஷ்குமார இந்திரஜித், மனதின் அடி ஆழத்தைத் தொட்டு வெளிக்கொணர்ந்த கோபிகிருஷ்ணன்..., அழகிய பெரியவன், ஜே.பி. சாணக்யா, கால பைரவன் என்று எத்தனை ஆகிருதிகள்.

இன்று எழுத வந்திருக்கும் இளம் எழுத்தாளர்க்குச் சந்திக்க வேண்டிய பெரிய சவால், புதுமைப்பித்தன் முதலான நேற்றைய எழுத்தாளர்களைக் கடந்துபோதல் என்பதாக இருக்கும். பூதாகாரமாக தெருவடைச்சான் சந்துகளாக அவர்கள் தங்கள் கலை வெற்றிகளைக் காட்டி மருட்டுவார்கள். போர்க்களத்தில் வெற்றியாளன் நட்டு வைத்த ஒற்றைப் போர்வாளைப் போல் அது ஒளிரும். என்றாலும், அந்த வெற்றிகள் முறியடிக்கப்படும்.

உலக இலக்கிய நியதி இதுதான். தந்தைமார்கள், தனயர்களிடம் புறம்தந்தே தீர வேண்டும். கடத்தல் என்பது பின்தள்ளப்படுதல். இளம் எழுத்தாளர்கள், அவர்களுக்கு முன் ஐரோப்பிய எழுத்தாளர்களும் மறித்துக்கொண்டு நிற்கக் காணலாம்.

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத் தொடக்கம், மொழி ஆக்க இலக்கியங்களாலும் இயன்றது. மொழி ஆக்கத்தின் சிறப்பை முதலில் கண்டு உணர்த்தியவர் தொல்காப்பியர்தான். மொழி பெயர்ப்பு எனும் சொல்லே அவர் தந்ததுதான்.

டாக்டர் செகாவ், பச்சோந்திகளுடன் வந்தார். மாப்பசான், மந்திரக்கோல் வைத்திருந்த கலைஞன். டால்ஸ்டாய், எழுதினார் என்பதிலும் பார்க்க, இலக்கியம் அவரை எழுதியது. மோசமான ஓட்டையுடன் வந்திருந்தாலும், டாஸ்டாவ்ஸ்கி, பார தூரமான விளைவுகளைத் தமிழுக்குத் தரும் சாத்தியங்களைத் தந்தார். யதார்த்தவாத இலக்கியம் எனும் செழுங்கிளை, கார்க்கியோடு இங்கு பதியம் இடப்பெற்றது. க.நா.சு.வின் பூமிப் பரப்பில் உலக மரங்கள் அனைத்தும் வேர்விட்டன. சரத்தின் தேவதாஸ் காதலில் தோற்றவர்களின் முன்னோடிக் காதலன் ஆனார். பாரதி, ஐயர், புதுமைப்பித்தன், ஜானகிராமன் முதலான தமிழின் முதல்வரிசைப் படைப்பாளிகள் அனைவருமே மொழிபெயர்ப் பாளர்களே ஆவர். இது தமிழின் சிறப்பு. ஜெர்மனியிலிருந்தே, பிரஞ்சிலிருந்தே தமிழுக்கு வந்தன இலக்கியங்கள். தமிழ் நாவலின் முகத்தை 'அன்னியர்கள்' மாற்றி அமைத்தார்கள்.

எவ்வெக் காலங்களில் எல்லாம் மொழி ஆக்கங்கள் தமிழுக்கு வந்தனவோ, அக்காலங்களில் எல்லாம் தமிழ்ப் படைப்புகளும் மேம்பட்டன. இலக்கிய வியாபகம் என்பது இதுதான். நவீனத் தமிழ், தன் ஜீவதாதுக்களைச் சங்கத்திலிருந்தல்ல, ஐரோப்பிய இலக்கியங்களில் இருந்தே சேகரித்துக் கொண்டது.

முன்னோர்களை வெல்லுதல் என்பது அவர்களைச் செரித்துக் கொண்டு முன்செல்லுதல் என்பதாகும். தமிழ்ப் படைப்பாளர்கள் அதை மேன்மையுறச் சாதித்துக் காட்டினார்கள். ஆப்ரிக்க, லத்தீன், ஐரோப்பிய நாடுகளிலும் கூட இலக்கியம் மலருமா என்ற கருதுகோள்கள் தகர்ந்து, இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அந்த நாடுகளே, ஆசிய இலக்கிய மறுமலர்ச்சிக்கு உரம் ஊட்டின.

தமிழ் எழுத்தாளர், வானத்தை இலக்கு வைத்தாலும், தம் வேர்களைத் தமிழ்மண்ணில்தான் தேட வேண்டும் என்ற போதம், மிக இயல்பாகவே இங்கு வந்து சேர்ந்தது. எண்பதுக்குப் பிறகு, நவீனத் தமிழ்மொழியில் உள் பிரதேசங்களில் உக்ரமும், வெடிப்புற்ற, கனல் சிதறலும் கூடிவந்தன. மூத்த எழுத்தாளர்கள், பாய்ச்சலை நிகழ்த்திய இளைய தலைமுறையைக் கண்டு அஞ்சி, தங்கள் இருப்பைத் தக்க வைக்க, இருக்கைகளைப் பீடங்களாக மாற்றினார்கள். காலம் முழுக்க ஒரு மாணவத் தும்பியாய் இலக்கியக் காடு மேய விதிக்கப்பட்ட (மூத்த) எழுத்தாளர்கள், குருவாகி, லோக குருவாகி, தம் படைப்புகளையும் கீழிறங்கித் தாமும் சரிந்து போயினர்.

ஒரு பக்கம், மேன்மையான இலக்கிய ஆக்கங்கள். மறுபக்கம், பிள்ளை பிடித்து சாக்கில் அடக்கும், அதிகார மையங்களைக் கட்டமைத்த முன்னாள்எழுத்தாளர்கள் என்று இலக்கிய உலகம் நுண்மையாகப் பிரிந்தது. தத்துவார்த்தமே எதிர்ப்பக்கமாக இருந்த நிலைமாறி, தான் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்கிற பதைபதைப்புடன் உறக்கமற்ற இரவுகளை விழித்துத் தீர்ந்த மனிதர்கள், தம் சக எழுத்து மனிதர்களையே பகைச் சக்தியாகக் கொண்டு, இலக்கியப் புலத்தில் எருக்கையும், எள்ளையும் விதைத்து கழுதை ஏர் பூட்டி உழுதார்கள்.

தமிழ் எழுத்துப்புலம், காலம்தோறும், காலத்துக்குத்தக, தன்னைத் தகவமைத்துக் கொண்டது. நடக்கும் அதிகாரச் சதிகளில் சிக்குறாமல், தன் ஆத்மாவைப் பாதுகாத்துக் கொண்ட சில இலக்கியச் சக்திகள், இறந்த காலத்தின் சாம்பலிலிருந்து வெளிப்பட்டார்கள். அவர்களில் ஒருவர், பவாசெல்லதுரை.

மண்சார்ந்தும், மண்ணின் விழுமியம் சார்ந்தும், மனிதம் சார்ந்தும், உலக அளவுகோல் சார்ந்தும், படைப்புமன விகாசம் சார்ந்தும், கனன்று வெளிப்பட்ட அண்மைக்கால எழுத்தாளர் பவா செல்லதுரை. யதார்த்தங்களின் எழுத்தாளர் என்று இவரைச் சொல்ல முடியாது. புனைவுகளின், கவிந்த மாலை மயங்கிய, சற்றே இருண்ட, கறுப்பு வெள்ளையுடன் கூடிய, கூரிய கவனத்தைக் கோரும் கதையாளர் பவா. சம்பவங்களின் கோர்வையாக இவர் கதைகள் இல்லை. அது அறுபதுகளின் விளைபொருள். சம்பவங்களின் ஆதாரங்களைச் சுட்டி, அவை எழுப்பும் மனமூட்டத்தில் கதைகளை நடத்திச் செல்கிற, அதிகம் பேசாத, பேச்சில் நம்பிக்கை அற்ற, சொற்களைக் கஞ்சத்தனமாகச் செலவிடும் பொறுப்புமிக்க கதையாளர். கதைகளில் பேசுவதுஎன்பது, வாசகர் மேலும், தன் மீதும் அவநம்பிக்கை கொள்கிற எழுத்தர் செயல். எழுத்தாளர்கள், திரைகளை விலக்கி, காட்சிகளை உணர்த்தும் காரியங்களை மட்டுமே செய்பவர்கள். பவாவும் அப்படித்தான் செய்கிறார்.

தொகுப்பில் சோடை போன ஒரு கதையும் இல்லை. நான்கு கதைகள், தமிழ்க்கதை என்று தலைநிமிர்ந்து உலகுக்குத் தரலாம். அந்த நாலு எது என நான் சொல்லப்போவதில்லை. வாசகர்மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. சத்ருவை முன்வைத்து ஒரு விசாரணை செய்து பார்ப்போம். இது திருடனைப் பற்றிய கதை. திருடனைப் பற்றியதா என்ற ஒற்றை வரித் தீர்மானிப்பில் உள்ள நகை புரிகிறது. இது திருடனைப் பற்றியது இல்லை. திருடனைக் கட்டி வைத்து விஷமூட்டிக் கொல்ல முனையும் மனிதர்களைப் பற்றியதா என்றால் முழுமையாக அப்படியும் சொல்ல இயலாது. பேயாத மழையா என்றால் லேசாகத் தட்டுபடுகிறது, உண்மை. திருடர்கள், தமிழ் நாட்டுப் புறக்கதைகளை ஆக்ரமித்த, என்றும் வற்றாத கற்பனைகளுக்கு இடம் தருகிற ஆதார புருஷர்கள். தமிழில் மட்டுமல்ல, உலக நாட்டுப்புறக் கதைகளில் அதிகம் கனவு காணப்படும் பொருளாக இருப்பவன் திருடன். திருடன் கதைகளில், என்றுமே மக்கள், அவனைப் போலீஸ்காரப் பார்வையில் பார்த்ததே இல்லை.

திருடர்களே கதாநாயகர்கள். வீரர்கள். திருடர்கள் கதைகளைக் கேட்கும் போதெல்லாம், கடவுளே, இவன் போலீசிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நான் வேண்டி இருக்கிறேன். அந்த அளவு திருடர்கள் மிக உன்னதமானவர்கள். புதுமைப்பித்தன் கூடத் திருடர்கள்மேல் அளப்பரிய நேசம் கொண்டவன்தான். திருடர்கள், தம் தொழிலை, ஒரு கணக்குப்பிள்ளை, தலையாரி, தாசில்தார், கவர்னர், ராஜாக்கள் செய்யும் தொழிலைப் போலவே, அதற்கென்று இருக்கும் தார்மீக அறநெறிகளோடு செய்பவர்கள். திருடப்போகும் முன், சாமியைத் தொழுபவர்கள். அவர்கள் நம் வீடுகளை அல்ல, அரண்மனையைக் குறிவைப்பார்கள். நியாயம்தானே? கூடவே ராசகுமாரிகளையும் குறிவைப்பார்கள். இதுவும் நியாயம்தானே. நமக்குக் கிடைக்காதது திருடனுக்குக் கிடைக்கட்டுமே. மதுரை வீரனையும், காத்தவராயனையும் மக்கள் பாராட்ட இதுவும்தானே ஒரு காரணம். திருடர்கள் தானதருமக்காரர்கள். மொத்தத்தில் மகா மனிதர்கள். ஒரு சமூகம், கட்டமைத்த அற்புதமான பிம்பம் இது. இந்த மனோபாவம்தான், விளிம்புநிலைக் கதையாடல் களின் ஆதாரம். நீ எதை தர்மம் என்கிறாயோ எனக்கு அது அதர்மம் என்கிற நெறி இது. மிகவும் முக்கியமானது இந்த மனப்புரிதல்.

திருடர்கள், ஒரு சமுதாயத்தில் ஏன் உருவாகிறார்கள். பகிர்தல் தவறாகும்போது, பூனைகளைக் குரங்குகள் ஏமாற்றும்போது, திருடர்கள், ஏமாற்றப்பட்டதின் ஓடுகளைத் திறந்து கொண்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் சூரர்கள். சூரர்கள் எல்லாருள்ளும் இருக்கிறார்கள். வெளிப்பட முடியாமல் கரந்து உறைபவர்கள். சட்டம், நியாயம், சிறை முதலான ஒழுங்குமுறைகளுக்குப் பயந்தே சூரர்கள், சந்திக்க வேண்டிய சிங்கம் üமியாவ்ü என்பது மாதிரி, நாளடைவில் கனவுகளில் மட்டுமே வந்து போகிறவர்களாகிறார்கள். நிஜமான சூரர்கள், தெருவுக்கு வருகிறார்கள். நாம் மகிழ்ச்சியடைகிறோம். சில சமயங்களில், அவர்களை மக்கள் பகைக்கவும் நேர்கிறது. மனிதகுலத்தின் மன நெருக்கடி முந்தும் போதெல்லாம் தியாகிகள் காட்டிக் கொடுக்கப்படுவார்கள். அப்படிச் சிக்கியவன்தான் பவாவின் திருடனும். அவனைக் கொல்லும் பொறுப்பை, ஒரு கிழவி ஏற்கிறாள். கிழவிகள் அல்லர், பெண்கள் தைரியசாலிகள். ஆண்களை விடவும் தைரியசாலிகள். இந்த உண்மையைப் பவா ஏற்கிறார். எனக்கு இது மகிழ்ச்சி தருகிறது. விஷம், உடலுக்குள் விரிவாக்கப்படும் முன், ஒரு அற்புதம் நிகழ்கிறது. அற்புதத்தின் பெயர் மழை. மழைக்கு இன்னொரு பெயர் கருணை. இந்தக் கருத்தியல் பவாவுடையது. என்ன அற்புதமான விஷயம் இது. மனிதர்கள், மழைக்கு முன்பு, கொலை வெறியோடு நின்றவர்கள். மழைக்குப் பின்பு கருணாகரர்களாகிறார்கள். மாயாஜாலம் இது. தத்துவத்தின் மாயை என்பதற்கு இல்லாதது என்று பொருள் இல்லை. மாயைக்கு, ‘இருக்கும் பொருளின் இன்னொரு தோற்றம்என்று அர்த்தம். அதாவது பொருளின் இன்னொரு சாயை. மறைக்கப்பட்ட பகுதியின் மறையாத வெளிப்பாடு.

பவா, நாணயத்தின் மறுபக்கத்தைக் காட்டுகிறார். மழை வந்து, அது மக்களை நனைத்து, அவர்களை மக்களாக்கிய பிறகு, திருடன் விடுதலை பெறுகிறான். மழை கொடுத்திருக்கா மாரியாத்தா, போ போய்ப் பிழைச்சுக்கோஎன்கிறார்கள், மக்களாகிய மக்கள்.

என் முன் பல கேள்விகளை வீசுகிறார் பவா. சத்ரு யார். மழை என்பது யாது. மனிதர்கள், மனிதர்கள் ஆகாமைக்கும், ஆகிறமைக்கும் எது காரணம், முதலான பல கேள்விகள். இலக்கியம், இதைத்தான் செய்யும். கதைகள், அவை சிருஷ்டியாக மாறும்போது, அவை முடிந்த இடத்திலிருந்து பல பிசாசுக் குட்டிகள் வவ்வால் குட்டிகளைப் போல் எழுந்து பறக்கும். பவாவின் பல கதைகளில் இது நேர்ந்திருக்கிறது.

பவாவின் இந்த இலக்கியம், தமிழ் மரபில் எந்த நிலம் சார்ந்தது. மலைக்காரர் அவர். கதைகளில் மலை, காடுகள் பாத்திரமாகின்றன, மலையும், காடும், காட்டுயிர்களும், பவாவின் கதைகளில் அல்லாமல் வேறு எவராலும் இந்த அளவுக்கும், அகலத்துக்கும், துல்லியமாகத் தொட்டுக்காட்டப்பட்டதில்லை. இந்த வகையில் முன்னோடியான இந்தக் கதைகள் முல்லை நிலம் சார்ந்தவை. குறிஞ்சி மயங்கி வந்த முல்லை.

தமிழின் சிறந்த எழுத்தாளராகப் பரிமாணம் பெற்றிருக்கும் பவா செல்லதுரையின் கதைகள், தமிழ்க் கதைகளின் புலத்தை விரிவாக்கி இருக்கின்றன. மிகுந்த சொற்செட்டு, வர்ணனைகளில் துல்லியம், அசாதாரண நம்பகத் தன்மை, அருமையான மொழி இவைகளே பவாவின் கதைகள்.

- பிரபஞ்சன்

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை, பவா செல்லதுரையின் சிறுகதைகள், விலை-ரூ.60.
வெளியீடு: வம்சி புக்ஸ், 19,டி.எம்.சாரோன், திருவண்ணாமலை-1

 

Pin It