‘இப்போது நீங்கள் வேறொருத்தியை நேசிக்கிறீர்கள். நானும் இன்னொருவரைக் காதலிக்கிறேன்.  என்றாலும், நான் எப்போதும் உங்களை நேசித்துக்கொண்டே இருப்பேன். நீங்களும் அப்படித்தான் என்னை நேசிப்பீர்கள். உங்களுக்குத் தெரியுமல்லவா? என்னை நேசியுங்கள். என்னை உமது வாழ்நாள் முழுதும் நேசியுங்கள்’ என்கிறாள்.

pooviarasu 450ஆன்மாவுக்கும் சதை உந்துதலுக்கும், இச்சைக்கும் நெறிகளுக்கும், குற்றத்துக்கும் மீட்சிக்கும், மிருகத் துக்கும் மனிதத்துக்கும், இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே தஸ்தயேவ்ஸ்கி நடத்திய யாத்திரைதான் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவல். கடவுளும் சமயநெறிகளும் கடுமையாகக் கேள்விக்குள்ளான காலகட்டத்தில் மனிதனுக்கான மீட்சி சாத்தியமா என்ற கேள்வியுடன் கிறிஸ்துவைத் தீவிரமாகப் பரிசீலித்த படைப்பு இது. தன் காலத்தில் தான் பார்த்த வாழ்க்கை, சிந்தனைக் கோலங்களை முன்வைத்து கிறிஸ்துவை மதிப்பிட்டு, விமர்சித்து, அசௌகரியமான கேள்விகளைக் கேட்டு, அவரைத் தன்வயப்படுத்தித் தக்கவைத்துக் கொள்ள ஒரு கலைஞன் செய்த மாபெரும் முயற்சி.

பணத்துக்காக சொந்தப் பிள்ளையைக்கூட ஏமாற்றுவதற்குத் துணியும், காமத்தை நிறைவேற்றும் கருவிகளாகவே இரண்டு மனைவிகளையும் பார்த்த, தாயில்லாமல்போன நிலையில் குழந்தைகளின் வளர்ப்புக்குக்கூட பொறுப்பேற்றுக்கொள்ளாத 55 வயது பணக்கார நிலக்கிழார் ஃபியோதர் பாவ்லோவிச் கரமசோவ், ஒரு நள்ளிரவில் கொல்லப்படுகிறார். இவர்தான் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலின் தலைமகன். பண்படாத முரட்டு நிலத்திலிருந்து அவரது குணங்களின் தொடரும் தீற்றல்களோடு பரிணாமச் சுத்திகரிப்பின் சாயல்களும் தென்படும் மகன்களாக திமித்ரி, இவான், அல்யோஷாவைப் படைத்திருக்கிறார். மகன்கள் திமித்ரியையும், இவானையும் நேசத்தால் அலைக்கழிக்கும் காதலிகள் கத்ரீனா, குரூசென்கா, துறவை விரும்பும் அல்யோஷாவை வெளி உலகுக்கு நீ தேவை என்று அனுப்பும் ஆசிரமத் தலைவர் துறவி ஜொசிமா ஆகியோரைத் தீர்மானிக்கும் பாத்திரங்கள் என நம் வசதிக்குச் சுருக்கிக்கொள்ளலாம்.

ஒரு காலகட்டத்தின் மாறிவரும் சமூகப் பின்னணியில் ஒவ்வொரு மூல கதாபாத்திரத்தையும் தனது கருத்தியல் வாகனங்களாகவே படைத்திருக் கிறார் தஸ்தயேவ்ஸ்கி. ஆனால், அவர்கள் ஒவ்வொரு வரும் - கயவராகத் தென்படும் தந்தை கரமசோவ் உட்பட - அவரவர் நியாயங்களோடு நம் நேசத்தைத் தூண்டுமாறு படைக்கப்பட்டிருக்கிறார்கள். பெரியவர் கரமசோவ் தவிர ஐம்பதுக்கும் மேல் வரும் கதா பாத்திரங்கள், சிறு பாத்திரங்கள் உட்பட அத்தனை பேரும் தங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தி விடுகிறார்கள்.

அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலையில் வறுமையும் குடியும் சிதைத்த உருவமாகத் தெரிபவர் கேப்டன் ஸ்னெகிரியோவ். அத்தனை கழிவிரக்க மிகுந்த சூழ்நிலையில் அல்யோஷா, தன் அண்ணன் அவருக்குச் செய்த பாதகத்துக்கு இழப்பீடாகக் கொடுக்கும் மதிப்புமிகுந்த 200 ரூபிள் பணத்தைக் கால்களால் மிதித்துக் கசக்கி மறுக்கிறார். அந்தப் ‘பைத்தியக்கார மேன்மை’ ஒரு மனிதனிடம் சாத்தியம் தான் என்பதை நிறுவுவதில்தான் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்பு மேதைமை இருக்கிறது.

கத்ரீனாவும், க்ரூசென்காவும் அல்யோஷாவை விரும்பும் 14 வயது லிசாவும் வாசகர்களையும் தங்களிடம் பிரியத்துக்குரியவர்களையும் பைத்திய மடிக்கும் அளவுக்கு உணர்வளவில் முரண்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நேசத்தையும் காதலையும் வெறுப்பையும் ஒரே நபரிடம் அடுக்கடுக்காக வெளிப் படுத்துபவர்கள் அவர்கள். ஒரு உரையாடலில், ஒரு பத்தியில், சில நொடிகளில் தடம்புரண்டுவிடும் கத்ரீனாவும், க்ரூசென்காவும் இயற்கையாகவே தெரிகிறார்கள். பணத்துக்காக எதையும் செய்வாள் என்று நம்மை முதலில் கருதவைக்கும் க்ரூசென்கா தான், திமித்ரியோடு சைபீரியா வரை செல்வதற்கான தியாகத்துக்குத் தயாராகிறாள். நீதிமன்றத்தில் திமித்ரிக்கு எதிராகச் சாட்சி சொன்ன கத்ரீனா, சிறைக்கு வந்து இவானைக் காதலிக்கிறேன் என்று கூறியபடியே, “இப்போது நீங்கள் வேறொருத்தியை நேசிக்கிறீர்கள். நானும் இன்னொருவரைக் காதலிக் கிறேன். என்றாலும், நான் எப்போதும் உங்களை நேசித்துக்கொண்டே இருப்பேன். நீங்களும் அப்படித் தான் என்னை நேசிப்பீர்கள். உங்களுக்குத் தெரியு மல்லவா? என்னை நேசியுங்கள். என்னை உமது வாழ்நாள் முழுதும் நேசியுங்கள்” என்கிறாள். படைப்பவள், துயர் தருபவள், மீட்பவள் என ‘உயிரின் ஆறாத காயங்களாக’ அவர்களைப் படைத்திருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.

மனித மேன்மைகளும் கீழ்மைகள் என்று சொல்லப்படும் குணங்களும் எதிரெதிர் நிலைகளில் அல்லாமல் அருகருகாக ஒரு நபரிடமே பயணிக்க முடியும், இருட்டிலிருந்தே ஒளி பரிணமிக்க முடியும்; அந்த இரண்டு நிலைகளையும் மனிதன் பாகுபாடு இல்லாமல் அங்கீகரிப்பதன் மூலமே, அதைப் புரிந்து தழுவிக்கொள்வதன் வழியாகவே மீட்சி சாத்தியம் என்பதையே தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து காட்டுகிறது. அதனால்தான் தீமையின் சகல தீற்றல்களைக் கொண்ட தந்தை கரமசோவை இன்னும் பரிண மிக்காத குழந்தையாக, நம்மை ஏற்றுக்கொள்ள வைக்க முடிகிறது. தந்தை கரமசோவிலிருந்துதான் சைபீரியாவுக்குச் சென்று சித்தார்த்தனாக மாற வாய்ப்புள்ள திமித்ரியும், செய்யாத குற்றத்திலும் தன் பொறுப்பைக் காணும் இவானும், களங்கமேயற்ற அல்யோஷாவும் பிறக்க முடியும். அதனால்தான் நாவலின் முடிவில் நாவலாசிரியர், ‘வாழ்க கரமசோவ்’ என்று சொல்லும்போது நாமும் ‘வாழ்க’ என்று சொல்ல முடிகிறது.

தந்தை எத்தனை கயவராக இருந்தாலும் குழந்தைகள் அவரை மன்னித்துத்தான் ஆக வேண்டும். ஏனெனில், அவர் தனது தீமையிலிருந்து நம்மை நன்மை நோக்கிப் பரிணமிக்க வைப்பவர் என்ற புரிதலை தஸ்தயேவ்ஸ்கியைத் தவிர வேறு யார் ஏற்படுத்த முடியும்?

தந்தை கரமசோவ், திமித்ரி, இவான், அல்யோஷா, ஸ்மர்டியாகவ், கத்ரீனா, க்ரூசென்கா தொடங்கி 12 வயதுச் சிறுவன் கோல்யா வரை பக்கம் பக்கமாக அறிவார்த்தமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசுகிறார்கள். கிட்டத்தட்ட வாயாடிகள் என்றே அவர்களைச் சொல்லிவிடலாம். சினிமா என்ற ஊடகம் லியோ டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி எழுதிய காலகட்டத்தில் இல்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும். தஸ்தயேவ்ஸ்கியின் படைப்பை நாடகீய எதார்த்தம் என்று வகைப்படுத்தலாம். அதீதச் சூழ்நிலைகளில் தங்கள் அதிகபட்ச சாத்தியத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் அவர்கள் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். தந்தை கரமசோவ் கொலையாகும் அந்த இக்கட்டான இரவில் திமித்ரியை அழைத்துப்போகும் குதிரை வண்டியோட்டி திமித்ரியிடம் மட்டும் அல்ல, நம்மிடமும் தன் இதயத்தை நடுங்கும் சொற்களால் துல்லியமாகக் காட்டிவிடுகிறான். அவன் தன் வாழ்விலேயே வெளிப்பட்ட ஒரு தருணமாகக்கூட அது இருக்கலாம். நிச்சயமின்மை, அதீதமான அழுத்தத்தைத் தரும் அனல் சூட்டுச் சூழல்களில் தான் தஸ்தயேவ்ஸ்கி தனது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வைக்கிறார்.

லியோ டால்ஸ்டாயின் படைப்புகளை ஒரு நிலக்காட்சியின் பின்னணியில் மனிதர்கள் உலவும் ஒரு ஓவியம் என்று சொன்னால், சித்திரக் கதையின் நடுங்கும் கோடுகளாலான மனிதர்களின் க்ளோசப் சித்திரங்கள் என்று தஸ்தயேவ்ஸ்கி படைத்தவர் களைச் சொல்லலாம். அங்கே நிலக்காட்சிகள், பின்னணிகள் மெலிதாகவே நம் கண்களுக்குப் படுகின்றன. அகம் எரிந்து சுழலும் நிலங்களாக அவருக்கு மனுஷர்களும் மனுஷிகளுமே இருக் கிறார்கள். வான்கோவின் ஓவியங்களில் தெரியும் நைந்த பூட்ஸ்களும் முகங்களும் கொண்ட மனிதர் களை தஸ்தயேவ்ஸ்கி நம்மிடம் உரையாடச் செய்கிறார்.

தேவாலயங்களின் அதிகாரம் குலைந்து கடவுள் மறுப்பு சிந்தனையும் நவீன ஜனநாயக சமத்துவக் கருத்துகளும் வலுப்பெறும் காலத்தைப் பின்னணி யாகக் கொண்டு தஸ்தயேவ்ஸ்கி இந்தப் படைப்பை உருவாக்கியுள்ளார். கிறிஸ்துவே இறுதி மீட்பர் என்ற நம்பிக்கையை அவரால் விடவே முடியவில்லை. ரஷ்ய சமூகத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்களின் நியாயத்தையும் புரிந்துகொள்ள முயல்கிறார். ஒழுக்க நெறிகளின் அடையாளமாக இல்லாமல், நீதியின் பாற்பட்டு கடவுள் இருக்க வேண்டுமென்பதை இவான் கதாபாத்திரம் மூலமாக நிறைவேற்றுகிறார். சத்தியமென்று ஒன்று இருந்தால் கடவுள் மிஞ்சுவார் என்ற நம்பிக்கையோடும் துணிச்சலோடும் தீமையையும் அதற்கேயுரிய அழகோடும் வலிமையோடும் படைத்து அவர் நடத்திய யுத்தமே இந்த நாவல். அதனால்தான் ‘மாபெரும் விசாரணை அதிகாரி’ அத்தியாயத்தில் பல இடங்களில் கிறிஸ்து தோற்றுப் போகிறார். அவரது மறுவருகை தேவையில்லை என்று திருச்சபையின் கார்டினல் சொல்லும்போது நியாயமாகவே தோன்றுகிறது. “சுதந்திரத்தைவிட அன்றாடப் பசிக்கான அப்பமே அவர்களுக்கு அவசியமானது” என்று கார்டினல் கூறுகிறார். நாவலின் சிறந்த கதாபாத்திரங்களில் ஒருவரான ஞானி ஜொசிமா, தனது சாவின் மூலம் அற்புதம் செய்வார் என்று நம்பப்படுகிறது. ஆனால், அவரது சடலமோ பல்வேறு அவதூறுகளை உருவாக்கும் விதமாக நாறத் தொடங்குகிறது. வாழ்வே அற்புதம் என்று அந்த நள்ளிரவில் அழுதழுது தேறி உணர்ந்து அவன் எழுவதற்கு, அந்த ரசவாதத்துக்கு அத்தனை பெரிய துயரம் அல்யோஷாவுக்குத் தேவையாக இருக்கிறது.

“சமீபகாலமாக, மொழிபெயர்ப்பென்பதே தமிழில் வாசக வன்முறையாகி வரும் சூழலில், அளவிலும் பெரிய தஸ்தயேவ்ஸ்கியின் இந்த சாதனைப் படைப்பை நல்ல வாசக அனுபவமாக்கி மொழிபெயர்த்துள்ளார் கவிஞர் புவியரசு. அவருக்குத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் கடன்பட்டிருக்கிறது.”

தஸ்தயேவ்ஸ்கி இந்த நாவலில் படைத் திருக்கும் அழகுமிக்க பெரிய சாத்தான் என்று தந்தை ஃபியோதர் பாவ்லோவிச் கரமசோவைச் சொல்லலாம். அவரோடு பாதிரியார் ஃபெராபான்ட் பார்த்ததாகச் சொல்லும் குட்டிச்சாத்தான்கள் பாதிரியார்களின் அங்கிக்குள் ஒளிந்திருக்கின்றன. கதவிடுக்கில் சிக்கி வலியில் துடிக்கும் மூன்றடி உயரமான பிசாசு

ஒன்றின் வால் கருஞ்சிவப்புடையது. இவான் மூளைக் காய்ச்சலில் இருக்கும்போது, அவனது மனசாட்சியின் உருவமாக வரும் சைத்தானின் வாலும் கருஞ்சிவப்பு நிறமுடையது. தஸ்தயேவ்ஸ்கி படைத்த பிசாசுகள் நமது ஆழ்மனத்தைச் சீண்டிப் பரிசீலிக்கத் தூண்டும் வல்லமை கொண்டவை.

‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலில் கதையின் மையநீரோட்டத்துக்கு வெளியே இருப்பவர்கள் குழந்தைகளாகவும், அதே நேரத்தில் அவர்களே நாவல் உருவாக்கும் கொந்தளிப்புக்குள் அமைதியை வழங்குபவர்களாகவும் இருக்கின்றனர்.

மனிதனின் மீட்சியைக் கடவுளால் உத்தரவாதப் படுத்த முடியாமல்போனாலும் குழந்தைகளையும் குழந்தைப் பருவத்தையும் மீட்சியாக தஸ்தயேவ்ஸ்கி காண்கிறாரோ என்றும் தோன்றுகிறது. அதனால் தான், நாவலின் இறுதிப் பகுதியில் அல்யோஷா குழந்தைகளுக்குச் சொல்லும் உபதேசத்தில், “குழந்தைப் பருவத்தில் நமக்கு நிகழ்கிற ஒரேயரு நல்ல நிகழ்ச்சியின் நினைவு நமக்கு இருந்தால் போதும், அது நாம் எத்தனை தீயவராக வருங் காலத்தில் மாறினாலும் நம்மைக் கடைத்தேற்றி விடும்” என்கிறான். அது தஸ்தயேவ்ஸ்கியின் நம்பிக்கையாக இருக்கக் கூடும்.

நாவல் முழுக்கச் சிறு குழந்தைகளின் மரணம் ஆங்காங்கே விவாதிக்கப்படுகிறது. ‘யுத்தங்களிலும் வறுமைச் சூழல்களிலும் குழந்தைகள் ஏன் பாதிக்கப்படுகின்றன?’ என்ற கேள்வி இன்றைக்கும் பொருத்தமானது. ‘குழந்தைகளின் மரணங்களும் அவர்கள் படும் துயரங்களும் கடவுளுக்குத் தெரியுமா?’ என்ற சந்தேகம் தஸ்தயேவ்ஸ்கிக்கு வலுவாக இருக்கிறது. சிறுவன் இல்யூஷாவின் இறுதி ஊர்வலத்தில் அவன் மீது இடப்பட்ட ஒரு மலர் உதிரும்போது, “அந்த மலருக்கு அந்த கதி ஏன் நேர்ந்ததென்று கடவுளுக்கே வெளிச்சம்!” என்ற ஆசிரியக் கூற்று வருகிறது. இதை தஸ்தயேவ்ஸ்கியின் கேள்வியாகவும் நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம்.

மானுடத்தின் சாத்தியங்களை விரிவுபடுத்தியவர் களாக, மனிதப் பிரக்ஞையின் வளர்ச்சிக்குக் காரண மானவர்களாக நவீனகால வரலாற்றில் இடம் பிடித்தவர்களென்று ஐன்ஸ்டைன், காந்தி, சிக்மண்ட் ஃப்ராய்ட் போன்ற ஆளுமைகளைச் சொல்ல முடியும். அவர்களுக்கு இணையாக, ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியை உறுதியாகச் சொல்ல முடியும். ஐன்ஸ்டைன், ஃபிராய்ட், நீட்சே போன்றவர்களின் சிந்தனைகளைப் பாதித்த படைப்பாளி இவர். “19-ம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி கார்ல் மார்க்ஸ் அல்ல, தஸ்தயேவ்ஸ்கி தான் என்கிறார்” ஆல்பெர் காம்யு. சமீபகாலமாக, மொழிபெயர்ப்பென்பதே தமிழில் வாசக வன்

முறையாகி வரும் சூழலில், அளவிலும் பெரிய தஸ்தயேவ்ஸ்கியின் இந்த சாதனைப் படைப்பை நல்ல வாசக அனுபவமாக்கி மொழிபெயர்த்துள்ளார் கவிஞர் புவியரசு. அவருக்குத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் கடன்பட்டிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை

கரமசோவ் சகோதரர்கள்

(இரண்டு பாகங்கள்)

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

தமிழில்: கவிஞர் புவியரசு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொலைபேசி எண் : 044-26359906

விலை-` 1500/-

Pin It