திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகில் உள்ள பொன்னிமான்துறையைச் சேர்ந்த ஏசுதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட பூர்ணா என்பவர் தொகுத்த நூல் இது.
மூவர், ஆளுக்கு இரண்டு கட்டுரைகள், ஏனைய இருபத்திநான்கு பேர், ஆளுக்கு ஒரு கட்டுரை, என மொத்தம் முப்பது கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமானவைகள். திண்டுக்கல், சித்தரேவு, கன்னிவாடி, கொடைக்கானல், பழனி, வேடசந்தூர், அய்யலூர், நத்தம், நிலக்கோட்டை என திண்டுக்கல் மாவட்டத்தின் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம் என பல்வேறு அம்சங்களை 360 டிகிரியில் படம்பிடித்து இருக்கிறது இந்தத் தொகுப்பு.
திண்டு என்றால் தலையணை. 1210 அடி நீளம், 900 அடி அகலம், 280 அடி உயரம் கொண்ட தலையணை போன்ற கல், திண்டுக்கல்.
கி.பி. 1605 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டு, 1659 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் போன்ற பல தலைவர்கள் இக்கோட்டையில் தங்கியுள்ளனர்.
பத்மகிரி என்பது திண்டுக்கல். ‘பத்மகிரியார் தென்றல் விடு தூது’ என்ற தலைப்பில் உள்ள நூல், திண்டுக்கல்லின் பெருமை பேசும் நூல். தமிழ் இலக்கியத்தில், தென்றலைத் தூதுவிட்ட முதல் நூல் இதுதான்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், ஆங்கிலேயரைத் தோற்கடிக்க முதன்முதலாக தென்னிந்திய கூட்டமைப்பை (Southern Federation) ஏற்படுத்தியவர் விருப்பாச்சி கோபால் நாயக்கர்.ஆங்கிலேயர்களிடம் இறுதி வரை, சரணடைய மறுத்த இவர், 1801 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள், தற்போது திண்டுக்கல்லின் தலைமை அரசு மருத்துவமனையின் அருகிலுள்ள கோபாலசமுத்திரம் குளத்தின் கரையிலிருந்த மரத்தில், ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.
இந்தக் குளம், வேலு நாச்சியாருக்காக திரட்டப்பட்ட படைகளின் தாகம் தீர்க்க கோபால் நாயக்கர் வெட்டிய குளம் என்பது கண்ணீர்க் கதை.
திண்டுக்கல் பகுதியில் இருபத்தி ஆறு பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்களாக இருந்தார்கள். அவற்றில் அளவில் பெரியது கன்னிவாடி.
கன்னிவாடி மகாராஜாவின் மந்திரியாக இருந்த திண்டுக்கல் வீர முத்துப் பிள்ளை ஏற்பாட்டில்தான் கி.பி.1851 ல் நாலடியார் என்னும் இலக்கிய நூல் உரையுடன் பதிப்பிக்கப்பட்டது.
2400 ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட புறநானூறு, இன்றைய பழனியை, பொதினி என்று குறிப்பிடுகிறது. குளிரில் நடுங்கிய மயிலுக்கு, போர்வை தந்த பேகன் ஆட்சி செய்த இடம் பழனி.
பல்வேறு குறிப்புகள், பழனிமலை இறைவனை, சிவபெருமானின் இளைய மகன் என்று குறிப்பிட்டபோது, கி.பி. 1520 ஆம் ஆண்டுக் கல்வெட்டு.
பழனிமலையை முருகன்மலை என்று கூறுகிறது. கலையம்புத்தூரில் கிடைத்த ரோமானிய நாணயங்கள், பழனியை வணிகத் தலமாகவும், பழனிப் பாவலர்கள் பட்டியல், பழனியை இலக்கிய நகரமாகவும் எடுத்தியம்புவது தமிழுக்குச் சிறப்பு.
1871 ஆம் ஆண்டு வேடசந்தூர் பகுதிகளில் நடந்த பண்டுக்கலவரம், மற்றும் அய்யலூர் பகுதியின் சிறப்புக்கள், நமக்கு ஆச்சரியம் அளிக்கின்றன.
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊர் நத்தம்.வடநாட்டு முஸ்லீம்கள் படையெடுப்பின் போது மதுரையைக் காக்க நத்தம் பகுதி கள்ளர் இன மக்களின் பங்களிப்பு அளப்பரியது. கி.பி. 1757,1760,1774 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நத்தம் போர்கள் சிறப்பு வாய்ந்தவை.
10.2.1755ம் தேதி மணப்பாறையிலிருந்து மதுரைக்கு வந்த ஆங்கிலேயப் படை தளபதி ஹெரான், நத்தம் சிவாலயத்தைக் கொள்ளையடித்தான். 25.5.1755ம் தேதி மதுரையில் இருந்து ஆயிரம் வீரர்களுடன் மணப்பாறைக்குத் திரும்பிய அவனது படையில், 970 பேர்களை, நத்தம் கணவாய் பகுதியில் வெட்டிக் கொலை செய்தனர், நத்தம் பகுதியில் வாழ்ந்த கள்ளர் இன மக்கள்.
கி.பி. 1520,1525ம் ஆண்டுகளில் மொகலாயப் படைகள் விஜயநகரப் பேரரசை தாக்கிய போது, திண்டுக்கல் பகுதியிலிருந்து முண்டாசு கட்டிக்கொண்டு முதலில் ஓடியவர் மாக்காளசாமி நாயக்கர்.
மொகலாயர்கள் விரட்டப்பட்டதன் விளைவாக மாக்காளசாமி நாயக்கருக்கு ஒன்பது ஊர்கள் வழங்கப்பட்டன. இப்போதைய நிலக்கோட்டைக்கு தெற்கே அணைப்பட்டிக்கு மேற்கே 26 ஏக்கரில் கட்டப்பட்டதே நிலக்கோட்டை ஜமீன். நிலக்கோட்டைக்கு ஒன்பதூர், நவபுரி, பெஞ்சை என்ற பெயர்களும் உண்டு.
நிலக்கோட்டையின் புகழ்மிக்க ஜமீன்தார் நாகம கூளப்ப நாயக்கர். இவர் சிறந்த வீரர். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படையுடன் நாய்ப் படையும் வைத்திருந்தார்.
மதுரை நாயக்க மன்னர்களைக் காக்க இலங்கை சென்று போரிட்டு கண்டி அரசனைக் கொன்றவர்.
அம்மைய நாயக்கனூர் ஜமீனில், மக்கள் விளைவித்த பொருட்களில், மூன்றில் இரண்டு பங்கை ஐமீனே சுருட்டிய போது, உழவர் பெருங்குடி மக்கள் அம்மையநாயக்கனூர் ஜமீனை எதிர்த்துப் போரிட்டனர் என்பது வரலாறு.
ஆனால், நிலக்கோட்டை ஜமீனான கூளப்ப நாயக்கரோ, கடுமையான பஞ்சத்திலும் வரிவசூல் உயர்த்தாதவர். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையால், வரிவசூல் என்ற பெயரில் இவரைக் கைதுசெய்ய ஆங்கிலேயர்கள் முயன்ற போது, எண்பத்தியோரு கிராம மக்கள் இவரைச் சூழ்ந்துநின்று காத்தனர் என்பது மக்கள் வரலாறு.
இவரைப் பற்றிய சிற்றிலக்கியங்களே, கூளப்ப நாயக்கன் காதல், விறலி விடு தூது, ஆகியவை.
மக்களை நேசித்த மாமனிதர்கள் இன்றும் இலக்கியங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள், என்பதைச் சொல்வதே‘திண்டுக்கல் சீமை.’
திண்டுக்கல் சீமை | தொகுப்பாசிரியர்: பூர்ணா
விலை: ரூ.170 | வெளியீடு: என்சிபிஎச், சென்னை
- எம்.எஸ்.முத்துசாமி ஐபிஎஸ்., காவல்துறை தலைவர் (ஓய்வு)