அலைகுடிகளாக வாழ்ந்த மனித சமூகம் நாகரிக வளர்ச்சிக்கு உட்பட்ட பின்புதான் நிலையான வாழ்வியலை மேற்கொள்ளத் தொடங்கியது. மனித வாழ்வியலை ஓரிடத்தில் நிலைநிறுத்தியதில் ஆற்றங்கரை நாகரிகங்களே முதன்மைப் பங்காற்றின. புலம்பெயர்ந்து நாடோடிகளாய் உலகமெங்கும் பரவி விரவிக் காணப்பட்ட மனித இனம் தங்கள் மூதாதையர்களின் பெயர்களை மரியாதை மற்றும் வழிபாட்டின் காரணமாகத் தம் பெயர்களுடன் இணைத்துக் கொண்டு பயணித்தனர். அவ்வாறு இந்தியா முழுவதும் பரவியிருந்த ஒட்டுப் பெயர்களில் ஒன்றாகக் ‘கொத்தாளி’ காணப்படுகிறது. பின்னாளில் சிறுதெய்வ வழிபாடாக மாற்றமும் கண்டுள்ளது. 'கொத்தாளி' என்னும் இனக்குழுத் தெய்வத்தின் முன்னிலையில் மனித சமூகத்தில் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், மனித நேயமற்ற செயல்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டுவதாக முஹம்மது யூசுப் எழுதிய 'கொத்தாளி' நாவல் அமைந்துள்ளது. இந்நாவலில் இடம்பெறும் சமூக மற்றும் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையிலான புனைவுகளை இனக்குழுப் பண்பாட்டு மானுடவியல் மற்றும் அடிமை நிலைச் சமூகவியல் ஆகியவற்றின் நோக்கில் இக்கட்டுரை ஆராய்கிறது.

koththali novelஇக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் கொத்தாளி’ நாவல் 2023-ஆம் ஆண்டு வெளிவந்ததாகும். இந்நாவல் தாய்வழிச் சமூக வாழ்வியலைக் கதைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது; சூழலியல் மற்றும் மானுடவியல் வரலாற்று நோக்கில் இனக்குழு வாழ்வியலைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அடிமைநிலைச் சமூக உருவாக்கத்தையும், அதன் கட்டமைப்புக் கூறுகளையும், மனித குலத்தின் மீது மனிதனே நிகழ்த்தும் வன்முறைகளையும் வெளிக் கொணர்கிறது. எனினும் கதை சொல்லும் முறையால் ’கொத்தாளி’ நாவலானது புலனாய்வு வகைமையைச் சார்ந்ததாக உள்ளது.

தாய்வழிச் சமூகத்தைப் பேசுவதன் வாயிலாகக் கதையை உருவாக்கி, அதில் சூழலியல், வரலாறு, மானுடவியல், மொழியியல் என வெவ்வேறு துறைகளின் தொன்ம ஆவணங்களின் வழி புனைவை விரியச் செய்கிறார். சாதியத்தின் தன்மை, சாதிய வன்முறையினால் உண்டாகும் விளைவுகள் ஆகியவற்றையும் அவை அரசியலாக்கப்படுவதையும் ‘கொத்தாளி’ நாவல் தன் களமாகக் கொண்டுள்ளது. சமூக நிகழ்வுகளைத் துணிச்சலாக வெளிப்படுத்துவதுடன், நாளுக்கு நாள் சமூக ஊடகங்களால் அதிகரித்துவரும் சாதிய சிந்தனையின் அறியாமையைப் போக்கும் விதமாகக் குற்றப்புலனாய்வு அடிப்படையில் விறுவிறுப்புடனும் நாவலாசிரியர் இக்கதையினை எழுதியுள்ளார்.

'கொத்தாளி' - கதையும் சமூகமும்

கொத்தாளி நாவல் கதையின் மையப்பாத்திரமாக வரும் செந்தட்டி அய்யனார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் ஆயினும் கல்வி கருவியைக் கொண்டு அரசுப் பணியில் மேனிலை அடைந்த நேர்மையான அதிகாரியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளார்.

“1990 காலகட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பழனிமுத்து சிவகாமி அவர்களால் 'சிறந்த பணியாளர்' எனும் நன்னடத்தை நற்சான்றிதழ் வழங்கப்பட்டு கிராம ஊராட்சி அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்த கதையை வழக்கறிஞரிடம் கூறினார் செந்தட்டி”           (முஹம்மது யூசுப், கொத்தாளி, ப.39).

கடமை தவறாது நேர்மையுடனும் கண்ணியத்துடனும் உழைத்த உழைப்பிற்குக் கிடைத்தப் பரிசு யாதெனின் அவருடைய பணி ஓய்வுப் பணத்தைக் கிடைக்கப் பெறாமல் செய்ததுடன், பல்வேறுபட்ட ஊழல்களிலும் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டு குற்றவாளியாக்கப் படுகிறார்.

"கோண்டு, பறையர், ஹோலியர் (கோலியர்-நெசவுத் தொழில்), சாமர் என அனைவரும் ஒன்றுதான் என்று எலியட் இன ஆய்வு கூறினாலும், எட்கர் தர்ஸ்டனும் ரஸ்ஸலும் கூட எழுதி வைத்தாலும், பட்டியல் இன மக்கள் சிதறு தேங்காய் போல துண்டு துண்டாக உடைந்து போனதன் மிச்ச மீதி ஆட்கள் வேறுவேறு பெயர்களில் கொத்தாளி ஊரில் வாழ்ந்து வந்தனர்” (முஹம்மது யூசுப், கொத்தாளி, ப.51) என்கிறார். கொத்தாளி இன மக்களின் வேறுபெயர்களாக, “ஹரிஜன், தாழ்த்தப்பட்டவர், பஞ்சமர், தீண்டத்தகாதவர், ஒதுக்கப்பட்டவர், கீழ்ச்சாதி, ஆதி திராவிடர், பட்டியல் இன வகுப்பினர் என்பன சுட்டுப்பெயர்கள்" (முஹம்மது யூசுப், கொத்தாளி, ப.51)

இவ்வாறு, பல்வேறு பெயர்களில் இந்த ஓர் இனத்தார் மட்டும் நாடு முழுவதிலும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகிறது. இந்தியா முழுவதிலும் ஒரே இனம் மட்டும் அனைவராலும் குறி வைத்துத் தாக்கப் பட்டுள்ளது. அம்பேத்கர், பெரியார் போன்ற பெருந் தலைவர்கள் தோன்றி ஒடுக்கப்பட்டோருக்காக உரிமைக் குரல் கொடுத்து மீட்டெடுக்க முனைந்து, சட்டங்களே இயற்றினாலும் புதிதாக உருவாகும் இளம் தலைமுறையினரும் புதிய சிந்தனையுடன் செயல்படாமல், பழைமையுணர்ச்சியில் சக மனிதர்களை அடிமைகளாக எண்ணி இழிவுப்படுத்த முயலுவதை,

சொத்தை இழந்தாச்சு, குடும்பத்தை இழந்தாச்சு, பொண்டாட்டி புள்ள இவ்வளவையும் விட்டாச்சு, ஆனாலும் நம்மள நிம்மதியா இருக்க விடுறானுங்களா” (முஹம்மது யூசுப், கொத்தாளி, ப.102)

என்று புலம்பும் அளவிற்கும் கொடுமைக்கு உட்படுத்தப் படுவதையும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் உயர் பதவிகளுக்குப் போட்டியிடக் கூடாது; தகுதியானவர்கள் கிடையாது என்று எண்ணிடும் எண்ணத்தை எல்லாம் மாற்றி அமைத்து, செந்தட்டி அய்யனார் போன்றோர் உயர்நிலையை எட்டும்போது, பின்தங்கிய, அறிவற்ற, எத்தகுதி நிலைக்கும் பொருந்தாத மனிதர்கள், தாழ்த்தப்பட்ட உயரதிகாரிகளைக் கொலை செய்ய முயல்கின்றனர். கொலை முயற்சி தோல்வி அடையும்போது, உடனடியாக வேலையில் நெருக்கடியையும் மன உளைச்சலையும் தந்து தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகின்றனர். இதனை,

பெரும் கட்டிட முதலாளிகளின் அழுத்தம் தாங்காமல் கருங்குளம் மாவட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட கேஸில் உடன்வேலை செய்யும் ஆட்களுக்கு எதிராக, உண்மைக்குக் குரல் கொடுத்தார் செந்தட்டி என்பதற்காக, லாரி ஏற்றி கொலை செய்ய நடந்த முயற்சியில் மூன்று மாத காலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று உயிர் மீண்டு வந்தார் (முஹம்மது யூசுப், கொத்தாளி, ப.40)

என்பதிலிருந்து ஒரு நேர்மையான அதிகாரியாகப் பணிபுரியும் கீழ்ச் சாதிக்காரர் என்ற மனப்பான்மையினால் ஏற்பட்ட சாதிவெறி ‘மனித உயிர்’ என்ற பகுத்தறிவினை மறந்து, ‘கீழ்ச்சாதி உயிர்’ என்ற மனநிலையில் இரக்கம் காட்ட மறுப்பதை நாவலில் காண முடிகிறது.

பிறரை நம்ப வைத்து ஏமாற்றுதல், வஞ்சனை செய்தல், வாழ்க்கையின் மாண்புகளை அறியாமல் இருத்தல், அன்பும் நட்பும் இல்லாமை போன்ற குணங்களை எல்லாம் விடுத்து ஈகையுடனும், முற்போக்குச் சிந்தனையுடனும், போதுமென்ற நிறை குணத்தைப் பெற்றும், வாழ்க்கையின் மாண்புகளை அறிந்தும், உழைப்பின் உயர்வையும் உன்னதத்தையும் பாராட்டுபவராகவும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை என்ற பல உன்னத குணங்களையும் உயரிய பண்புகளையும் பெற்ற செந்தட்டி அய்யனார் அறவழியில் வாழ்ந்திடும் வாழ்க்கையும் நேர்மையின் பார்வையில் கடமையைச் செய்தாலும், இவை அனைத்தையும் பார்க்காமல் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று முத்திரையிட்டு, அவருக்கு வாகன ஓட்டியாக வரும் (பெயர் சூட்டப்படாத பாத்திரம்) ஒருவரால் புறமுதுகில் குத்தப்படுவது கொடுமையான சமூகநிலைமையைக் காட்டுவதாக இடம்பெற்றுள்ளது.

சமூகமானது சாதி, மத வன்மங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மனித சாதி என்பது விலங்கு சாதியினின்று வேறுபடுத்திக் காட்ட எழுந்தது. அதில், ஈகை செய்வோர் உயர்வானர்கள் என்றும், ஈகைத் தன்மை இல்லாதோர் தாழ்ந்தோர் என்றும் கற்பிக்கப்பட்டது: “சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் / நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் / இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் / பட்டாங்கில் உள்ள படி” (ஔவையார், ‘நல்வழி’ #2). ஆனால், சாதியச் சமூகத்தில் இத்தகைய விழுமியங்களுக்கு மதிப்பில்லை என்பதை ‘கொத்தாளி’ நாவலின் மூலம் அறியமுடிகிறது.

செந்தட்டி அய்யனார் தான் நாற்பது வருடங்களாக உழைத்த உழைப்பின் பயனாகத் தனக்கு வரவேண்டிய தொகையைப் பெறமுடியாமல் அலைந்து திரிகிறார். தன் பக்கம் உள்ள நியாயத்தைக் கடிதமாக, விண்ணப்பமாகக் கொண்டுசென்று அரசு அலுவலக உயர் அதிகாரிகளிடம் கொடுத்தாலும் அவை ஓரங்கட்டவும் புறக்கணிக்கவும் படுகிறது. ஏனெனில், அவற்றை வாங்கியவர்கள் எல்லாம் உயர் சாதிக்காரர்கள். இதனை,

30 வருஷத்துல 25 கலெக்டர்கள் வேலை செஞ்ச ஒரே மாவட்டம் தூத்துக்குடி மாவட்டமாதான் இருக்கும். அடிக்கடி ரெய்டு நடத்துறார்ன்னு தூத்துக்குடி கலெக்டரா இருந்த ஆசிஷ்குமார் மேலேயே தன்னோட பையன் பிறந்த நாளைக்கு காஸ்ட்லி கிப்ட் வாங்கினார்னு லஞ்ச ஒழிப்புத் துறைய விட்டு விசாரணைக்கு உத்தரவு போட்டு அவரையே அங்க இருந்து தூக்கிட்டாங்க. கலெக்டருக்கே இந்தக் கதிதான் (முஹம்மது யூசுப், கொத்தாளி, ப. 40-41)

என்னுமிடத்தில் சாதியையும் மதத்தையும் மையமிட்ட அரசியல் சூழ்ச்சியினால் நேர்மையான அதிகாரிகள் பாதிக்கப்படுவதைப் பார்க்கமுடிகிறது.

கொத்தாளியும் அரசியலும்

அரசியல் செய்வதற்காக உருவாக்கப்படும் சூழலையும், அரசியல்வாதிகள் செய்யும் ஊழலையும், அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் முஹம்மது யூசுப் இந்நாவலில் திறம்படப் பேசியுள்ளார்.

கொத்தாளி நாவல் காட்டும் அரசியல் பதிவுகள் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்து தொடங்குகிறது. ஆங்கிலேயரின் ஆட்சியில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலும், பிஹாரின் சம்பாரண் என்னும் இடத்திலும் அவுரிப் பயிர் விளைச்சல் செழிப்பாக இருந்தது. எனவே அவுரி உற்பத்திக்காக ஆங்கிலேயர் ஏழைமக்களை வேலைக்குக் கொண்டு செல்கின்றனர். அப்படிக் கொண்டு செல்லப்பட்டவர்களுள் பெண் தொழிலாளர்களும் இருந்தனர் அவர்களில் ஒருத்தி தன் குழந்தைக்குப் பாலூட்ட எண்ணுகிறாள். அந்தப் பகுதியில், பெற்ற குழந்தையை நீலத்துணியில் படுக்க வைத்துவிட்டு அவுரி நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள் அவள். தானியங்களுக்குப் பதிலாக அவுரி விளைவிப்பதால் அதிக உணவுப் பஞ்சம் நிலவிய காலம். வேலை செய்தவளின் காதில் திடீரென பெற்ற குழந்தையின் அழுகுரல் கேட்டது. அவள் பசிக்கே உண்ண உணவில்லை. அவள் உடம்பில் தெம்பில்லை, குழந்தைக்குப் பாலூட்ட வழியில்லை. இருப்பினும் குழந்தை அருகில் சென்று கிளிமூக்கு மரப் பூக்களை எடுத்து சிரிக்க வைத்து வாரியணைத்து வற்றிய மார்பை குழந்தை வாயில் திணித்தாள்.

        "இரண்டாம் நாள் எப்போதும் போல குழந்தை அழுதது. பலாச மரத்தின் குச்சிகளைத் தட்டி சப்தம் எழுப்பி மீண்டும் வெற்று மார்பை குழந்தை வாயில் திணித்து ஏமாற்றினாள். ஒருவாரம் ஆனபோது அவளது வறண்ட மார்பிலும் ஈரமில்லை” (கொத்தாளி, ப.137).

என்கிறார் முஹம்மது யூசுப். கொடுமைகளின் உச்சம் என்னவென்றால் கொத்தாளிகளின் வாழ்வியலில் மாற்றம் என்பது பசியும் பஞ்சமும் பிணியும் தான். ”அடித்தட்டு மக்களின் கடைசி ஆயுதம் உதிர்க்கும் வார்த்தைகள் மட்டுமே” (மேலது, ப.137) என்பதற்கு ஏற்ப அந்தத் தொழிலாளிப் பெண்ணின் அறச் சீற்றமே தொழிலாளிகளை இணைத்து ஒரு போராட்ட இயக்கமாக உருவானதையும் அது வரலாற்றில் சம்பாரண் சத்தியாகிரகம் என்னும் பெருநிகழ்வாகப் பரிணாமம் அடைந்ததையும் முஹம்மது யூசுப் பதிவு செய்துள்ளார்.

“இருள் நிறைந்த மனித வாழ்வின் ரகசிய பாகம் யாரும் அறியாதது, அன்று அழுத பெண்ணின் அழுகை வரலாற்று சம்பவத்தின் அடிக்கரும்பாக மாறியதை அவள் அறிந்திருக்கவில்லை” (மேலது, ப.138)

என்று 'இண்டிகோ கலகம்' உருவாக வித்தாக இருந்த அவளின் தியாகத்தை அவர் பெருமைப்படுத்துகிறார்.

“1835 முதல் 1848 வரை மதுரை மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்த ஜான் பிளாக்பர்ன் என்பவரின் அடையாளச்சின்னமாகத் தான் மதுரை விளக்குத்தூண் விளங்குகிறது. அவர் உப்பையும் தமிழக அடிமைகளையும் வாங்கி விலைக்கு விற்பதை (This move would see the family diversifying in to the slave trade) பெரும் வணிகமாகச் செய்தவர் என்பதை கமுக்கமாக மறைத்து விட்டார்கள் வரலாற்று ஆசிரியர்கள் (முஹம்மது யூசுப், கொத்தாளி, ப.138)

என்பதிலிருந்து வெகுஜனத்துக்கு அதிகார வர்க்கம் இயற்றிக் கற்பிக்கும் வரலாற்றுப் பிரதிகளுக்கு அடியில் மக்கள் அறிய வேண்டியதும், அவர்கள் அறிந்து விடக்கூடாது என்று அதிகார வர்க்கம் இருட்டடிப்புச் செய்வதுமான மாற்று வரலாறு உறைந்து கிடப்பதையும் அதனை வெளிக்கொணர்வதே இலக்கியத்தின் பணி என்னும் தெளிவுடன் முஹம்மது யூசுப் எழுதி வருகிறார் என்பதையும் நாம் அறியலாம்.

திராவிடப் பழங்குடி இனமக்களை அடிமைகளாகப் பிடித்துச்சென்று விற்பனை நடத்தி அரசியல் லாபம் அடைந்துள்ளனர் முதலாளிகள். பறையர் இன மக்கள்; 1. அந்தணருக்கு, 2. முதலாளிக்கு, 3. கங்காணிகளுக்கு, 4. கணக்குப் பிள்ளைகளுக்கு, 5. பிள்ளைமார்களுக்கு, 6. படைவீரனுக்கு எனப் பட்டியலிடப்பட்டு அடிமைகளாகப் பிடித்து சென்று கொடுமைப் படுத்தப்பட்டுள்ளதை விவரிக்கிறது 'கொத்தாளி' நாவல்.

“தேர்தல் என்றாலே சாதி தானே. தூத்துக்குடி மாவட்டத்தில் சாதிவாரியாக நாடார் சமுதாயத்தினர் 32 சதவீதம் தாழ்த்தப்பட்டோர், 18 சதவீதம் தேவர், ரெட்டியார் 6 சதவீதமும், யாதவர் 3 சதவீதமும் இதர வகுப்பினர் 7 சதவீதமும் பிராமணர் 2 சதவீதம் என்பது பொதுவிலுள்ள தேர்தல் கணக்கு” (முன்னுரை, கொத்தாளி, ப.5) என்னும் புள்ளி விவரக் கணக்கைத் தரும் முஹம்மது யூசுப், தாழ்த்தப்பட்டோர் அப்பகுதியில் 2-வது பெரும்பான்மையராக இருந்தபோதிலும் ‘கொடியன் குளம்’ போன்ற கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களைத் தவிர அவர்களுக்கென எதுவும் நிகழவில்லை, எந்த அடையாளமும் இல்லை என்பதை 'கொத்தாளி' நாவலில் முன் வைப்பதுடன், 'கொத்தாளி' நாவலின் மையக் கருவான பட்டியலின மக்களின் உழைப்பு, அவுரி விளைச்சல், குறுமரத்து உழவு, நெட்டாமைய உழவு என்று உழைப்பதைத் தவிர வேறு எதையும் யோசிக்காத அடித்தட்டு வர்க்க மனநிலையையும், வன்மம் மனித மனங்களில் நுழைந்து கொடுமை மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை நிகழ்த்திடும் அவலத்தையும், அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பில்லாத சமூகச் சூழலையும், அதனை நிகழ்த்திடும் அரசியல் சூழ்ச்சிகளையும் துணிவுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

பட்டியலின மக்கள் கல்வி கற்கக் கூடாது, அரசு வேலைக்குச் செல்லக் கூடாது. அவ்வாறு சென்றாலும் நேர்மையாகவும், உண்மையாகவும் வாழக்கூடாது என்று இயற்றப்படாத சட்டங்கள் நிலவுவதையும் அவர்கள் உழைத்து முன்னேறினால் அவர்கள் மீது வீசப்படும் விமர்சனங்களையும், பழிகளையும் துணிவுடன் எதிர்கொண்டு வாழுமிடத்து பழிவாங்கப்படும் பேரவலத்தைத் துணிவுடன் பேசியுள்ளார் ஆசிரியர்.

- ல.அ. முஹம்மது அலி ஜின்னாஹ், முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), உதவிப் பேராசிரியர், முதுகலை & தமிழாய்வுத்துறை, ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது

& முனைவர்.அ. தெளஃபீக் ரமீஸ், உதவிப் பேராசிரியர், முதுகலை & தமிழாய்வுத் துறை, ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்றது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.