இந்த உலகம் ஏதாவது செய்யக்கூடும் என்கிற வீண் நம்பிக்கையில், வரலாற்றில் முதல் முறையாக போரினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களின் அழிவை நேரலையாக ஒளிபரப்பும் இனப்படுகொலை” — சர்வதேச நீதிமன்றத்தில் இசுரேலுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் Blinne Ní Ghrálaigh கூறிய வார்த்தைகள் இவை.

காசாவில் இசுரேல் செய்துவரும் இனப்படுகொலையை நிரூபிப்பதற்காக கடந்த டிசம்பர் 29, 2023 அன்று சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice – ICJ) வழக்கு தொடர்ந்தது தென்னாப்பிரிக்கா. இந்த வழக்கில் ஐ.நா.வின் விதிகளை மீறி இனப்படுகொலை குற்றங்களை இசுரேல் நிகழ்த்துவது குறித்து தென்னாப்பிரிக்காவின் வழக்கறிஞர்கள் வாதாடினர். இந்த வழக்கில்தான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மே 24, 2024 அன்று தீர்ப்பளித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம்.Blinne Ni Ghralaighபாலஸ்தீனத்தில் இருந்து பூகோள ரீதியாக தொலைவில் இருந்தாலும், தனது பாலஸ்தீனிய ஆதரவை வலுவாக வெளிப்படுத்திய நாடாகத் திகழ்கிறது தென்னாப்பிரிக்கா. தென்னாப்பிரிக்காவைப் போலவே பாலஸ்தீன விடுதலை அமைப்பும் (PLO) தன்னாட்சி உரிமைக்காக போராடுகிறது என்று கூறி பாலஸ்தீனத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியவர் மண்டேலா.

தென்னாப்பிரிக்காவில் பதவியில் இருந்த நிறவெறி அரசாங்கத்திற்கு இசுரேல் ஆயுத உதவி செய்த போதே கடும் எதிர்ப்புகளை மண்டேலாவின் ‘ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி‘ வெளிப்படுத்தியது. இவ்வாறு மண்டேலா உயிருடன் இருந்தபோதும், அவர் இறந்த பிறகும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நாடு தென்னாப்பிரிக்கா.

(தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய மண்டேலா, ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தார். 1985-களில் புலிகளின் அரசியல் குழு மண்டேலாவுடன் தொடர்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.)

கடந்த அக்டோபரில் போர் தொடங்கிய சில நாட்களிலேயே இசுரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்தது தென்னாப்பிரிக்கா. நவம்பரில், தென்னாப்பிரிக்காவில் உள்ள இசுரேலிய தூதரகத்தை மூடுவதாகக் கூறி, அந்நாட்டுடனான அரசியல் உறவுகளை துண்டித்தது. இதனைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்றத்தில் இசுரேல் மீதான இனப்படுகொலை வழக்கையும் டிசம்பர் 29, 2023 அன்று பதிவு செய்தது.

கடந்த ஏழு மாதங்கள் மட்டுமல்ல, 16 ஆண்டுகளுக்கும் மேலாக காசாவை தாக்கியது. 56 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன நிலப்பரப்பை ஆக்கிரமித்தது என இசுரேல் இதுவரை செய்த அனைத்து வன்முறைகளுக்கும் சேர்த்தே சர்வேதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தென்னாப்பிரிக்கா.

தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கின் விசாரணை சனவரி 11, 2024 அன்று தொடங்கியது. பாலஸ்தீனியர்களின் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து இடங்களிலும் கண்மூடித்தனமான குண்டுவீச்சை இசுரேல் நிகழ்த்தியது என்று தென்னாப்பிரிக்காவின் வழக்கறிஞர்கள் கூறினர். மேலும் இசுரேல் நிகழ்த்திய இனப்படுகொலை குறித்த சான்றுகள் திரையிடப்பட்டன.

காசாவில் பாலஸ்தீனியர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டது முதல் இனப்படுகொலை, அவர்களுக்கு கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பாதிப்பை இசுரேல் ஏற்படுத்தியது இரண்டாவது இனப்படுகொலை, அவர்கள் வாழ்விடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது மூன்றாவது இனப்படுகொலை, அவர்களுக்கான உணவு மற்றும் மருத்துவ உதவிகளைத் தடை செய்தது நான்காவது இனப்படுகொலை, இறுதியாக, கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றதன் மூலம் பாலஸ்தீனப் பிறப்பு விகிதத்தைத் தடுக்கும் நோக்கில் இசுரேல் செய்த வன்முறை ஐந்தாவது இனப்படுகொலை“ என்று வாதிட்டார் தென்னாப்பிரிக்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவரான அடிலா ஹாசிம்.

இதனைத் தொடர்ந்து இசுரேல் செய்த நில ஆக்கிரமிப்பு குறித்து தென்னாப்பிரிக்க வழக்கறிஞர்கள் ஆவணப்படுத்தினர். 23 லட்சம் மக்கள் தொகை கொண்ட காசாவில் 19 லட்சத்திற்க்கும் (85%க்கும்) அதிகமான பாலஸ்தீனியர்கள் இசுரேலால் வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கூறினர்.

1948-ல் ஐ.நா-வில் செய்யப்பட்ட இனப்படுகொலையை தடுப்பது குறித்தான ஒப்பந்தத்தை இசுரேல் மீறுவதாக அறிவிக்குமாறு நீதிமன்றத்தை தென்னாப்பிரிக்கா கேட்டுக்கொண்டது. மேலும் இசுரேல் செய்த இனப்படுகொலைக்குத் துணையாக இருக்கும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், பாலஸ்தீனியர்களுக்கு இழப்பீடு வழங்கவும் தென்னாப்பிரிக்கா வலியுறுத்தியது. குறிப்பாக இனப்படுகொலை ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தென்னாப்பிரிக்கா கூறியது வருங்காலங்களில் இசுரேலுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்.

தென்னாப்பிரிக்காவின் வாதத்திற்குப் பிறகு இசுரேல் மீதான இனப்படுகொலை வழக்கு உலகளவில் கவனம் ஈர்க்கத் தொடங்கியது. மெக்சிகோ, துருக்கி, மாலத்தீவு, எகிப்து, அயர்லாந்து, பெல்ஜியம், நிகரகுவா, கொலம்பியா, லிபியா போன்ற பல நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்த வழக்கில் தங்களை முறைப்படி இணைத்துக் கொண்டன.

இவ்வாறு இசுரேலுக்கு எதிராக பல நாடுகள் அணிதிரண்ட நிலையில், மே 24, 2024 அன்று இந்த வழக்கில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தெற்கு காசா நகரமான ரஃபா மீதான இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறும் நீதிபதிகள் இசுரேலுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல், இசுரேல் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உணவு, தண்ணீர், மருந்துகள் இல்லாததால் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கி இருக்கிறது தென்னாப்பிரிக்கா. இன்று பல்வேறு நாடுகள் பாலஸ்தீனத்திற்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்கு தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கும் ஒரு காரணியாகப் பார்க்கப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு இசுரேல் போன்றே சிங்கள இனவெறியர்கள் மீதும் வழக்கு தொடுக்கலாம் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது. இசுரேல் அதிகாரிகளைப் போல இலங்கை அதிகாரிகள், அரசியல்வாதிகள் பேசியது ஆவணமாக உள்ளது. மேலும் ஈழப்போர் நடந்த முறையும் இசுரேலின் போர் வகையை சார்ந்ததாக இருக்கிறது என்பதை தென்னாப்பிரிக்காவின் வழக்கு நமக்கு காட்டுகிறது. பாலஸ்தீனத்திற்கான நீதிக்கு மேற்குலகம் போராடவில்லை, மாறாக மூன்றாம் உலகம் போராடியுள்ளது. பாலஸ்தீனத்திற்காக வழக்கு தொடுத்தது போல, அன்றும் தென்னாப்பிரிக்கா இதேபோல ஈழத் தமிழர்களுக்கு உதவ முன்வந்தது. ஆனால் புலிகளுக்கு பின்பாக எழுந்த சில போலி தலைமைகள், ஈழப்போராட்டத்தை மேற்குலகு சார்ந்த ஒன்றாக சித்தரிக்க முயன்றனர்.

ஈழத்திற்கும் மேற்குலகம் நீதியைப் பெற்றுத்தரும் என்று இங்குள்ள பலரும் கூட ஐ.நாவில் 2015-ல் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்தார்கள். அது இலங்கைக்கு ஆதரவான மற்றும் அமெரிக்காவின் நலன் சார்ந்த போலியான தீர்மானம் என மே 17 இயக்கம் அன்றே அம்பலப்படுத்தியது. தோழமை அமைப்புகளுடன் அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டது.

இன்றளவும் போலி தலைமைகள் மேற்குலகின் அணுசரணைக்காக மூன்றாம் உலக நாடுகள் மீது நம்பிக்கை கொள்ளாமல், மேற்குலகிற்கு வால்பிடிக்கும் முயற்சியில் தொடர்கின்றனர். மேலும் இந்துத்துவ, பார்ப்பனிய நலன் விரும்பும் இந்திய அரசின் தயவை எதிர்பார்க்கின்றனர்.

பாலஸ்தீன வழக்கு குறித்து புலம்பெயர் ஊடகங்கள், செயற்பாட்டாளர்கள் மேற்குலக சார்புடன் இயங்குவதை இப்பொழுதும் காண இயலுகிறது. தமிழீழப் பிரச்சனைகளிலும் இதே போன்றதொரு தன்மையுடனே மேற்குலக ஊடகங்கள் இயங்கின. இந்திய மற்றும் தமிழக பார்ப்பனீய ஊடகங்களோ தமிழீழப் படுகொலையை மேம்போக்கான செய்திகளாகவே கடந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் மீது அவதூறுகளை அள்ளி வீசி இலங்கை இனவெறி அரசை பாதுகாத்தன.

பாலஸ்தீனத்தின் அறிவுசீவிகள் முதற்கொண்டு சாமானியர்கள் வரை பாலஸ்தீன விடுதலையின் நியாயத்தை உலகம் முழுதும் பல தளங்களில் கொண்டு செல்கின்றனர். இதனால் சர்வதேசம் எங்கும் ஆதரவைப் பெருக்குகின்றனர். ஆனால் இங்குள்ள அறிவுசீவிகள் பலர் ஈழ விடுதலையின் நியாயத்தைப் பற்றிப் பேசாமல், விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளை பற்றிப் பேசியே, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிவற்று இருக்கும் சூழலில், புலம்பெயர் சாமானிய தமிழர்களே பல பின்னடைவுகளைக் கடந்து விடுதலை உணர்வை காக்கின்றனர். ஈழத்தில் வாழ்பவர்களோ, மிருகத்தனமான சிங்கள ராணுவத்தை எதிர்கொண்டு போராட்ட களம் அமைக்கின்றனர். இவர்களுக்கு தென்னாப்பிரிக்கா ஒரு வெளிச்சக்கீற்றை காட்டியுள்ளது.

இங்குள்ள அறிவுசீவிகள் புலிகளின் மீதான அவதூறுகளைக் கடந்து சிந்திக்க மறுத்தாலும், தென்னாப்பிரிக்காவின் இடதுசாரி அரசியல்வாதியான yanis Varoufakis, பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாசைக் கடந்து பாலஸ்தீன விடுதலையை சிந்திக்கிறார் என்பதற்கு X தளத்தில், அவர் ஒருவருக்கு கூறிய பதிலே சான்றாக இருக்கிறது.

இசுரேலை பற்றிய சர்வதேச நீதிமன்றத்தின் கருத்துகளை சொன்னீர்களே, ஏன் ஹமாசை பற்றி அவர்கள் சொன்னதை குறிப்பிடவில்லை‘ எனும் கேள்விக்கு yanis அளித்த பதில், ”ஹமாஸ் ஒரு நாட்டின் பிரதிநிதிகள் அல்ல, ஐ.நா வின் உறுப்பினர் அல்ல, மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதம் தாங்கும் நாடு அல்ல” எனப் பதிலுரைத்திருந்தார். இலங்கையின் குற்றத்தை புலிகளோடு இணையாக்கி புலிகளை ஏன் விமர்சிப்பதில்லை, ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் புலிகளையும் குற்றம் சாட்டியுள்ளார்களே என சொல்லும் அனைவருக்குமான பதில் இதுவாகத் தானிருக்க முடியும். அரசுக்கும், போராளி குழுக்களுக்குமான வேறுபாடை புரிந்துகொள்ள இப்பதிலே போதுமானதாக இருக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்த இந்த வழக்கு, நம் தமிழீழ நோக்கத்திற்கும் புது வெளிச்சத்தைக் காட்டியுள்ளது. இசுரேலுக்கு எதிராக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தென்னாப்பிரிக்கா நடத்தும் வழக்கின் சாராம்சங்களை கவனிப்போம். நமக்கான பாதைகளை திறப்போம்.

- மே பதினேழு இயக்கம்

Pin It