neet examதமிழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற முதல் குரல் 1920ஆம் ஆண்டு தொடக்கத்தில் எழுந்தது. அவ்வப்போது தமிழறிஞர்களால் வைக்கப்பட்ட வேண்டுகோள் 1981இல் செயல்வடிவம் பெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக வ. அய். சுப்பிரமணியம் பொறுப்பேற்ற பின் தமிழ் வளர்ச்சி இயக்ககம் என்ற பிரிவை உருவாக்கினார். இவ்இயக்ககம் பொறியியல், மருத்துவம் பாடநூல்களைத் தயாரித்து வெளியிடுவதை முதன்மை நோக்கமாகச் செயல்பட்டு, பயிற்சி மொழித் திட்டத்தைக் கல்லூரி நிலையிலிருந்து உயர் தொழில்நுட்பக் கல்வியை (Professional Studies) நோக்கி நகர்த்தியது.

நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைத் தொடர்ந்து நூலாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பொறியியல் 14 நூல்களும், மருத்துவம் 14 நூல்களும் எழுதி வாங்கப்பட்டன.

திராவிட முன்னேற்றக் கழக அரசு 1997ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுக்காகத் தனி அமைச்சகத்தைத் தோற்றுவித்தது. இது 1997-1998ஆம் ஆண்டு முதல் தமிழ்வழிப் பொறியியலைக் கற்பிக்க அரசாணை வெளியிட்டது.

தமிழில் பொறியியல் கற்பிப்பதற்கான முயற்சிகளின் முதல் பணியாகப் பொறியியல் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டன. இப்பயிற்சி வகுப்புகளுக்கான தொடக்க விழாவில் தொடக்கவுரை நிகழ்த்திய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ப. க. பொன்னுசாமி, "இத்திட்டம் 150 ஆண்டுகால போராட்டத்தின் வெற்றி. தமிழில் பொறியியல் பட்டப்படிப்பு என்பது சரியான முயற்சி. இதில் வெற்றி பெற ஆசிரியர்கள் கடினமாக உழைக்க வேண்டும். இம்முயற்சி வெற்றி பெறாவிட்டால் தமிழைப் பலிகடா ஆக்கியவர்களாவோம்” என்று கூறினார். (தினமணி. 23. 06. 1997)

தமிழ்வழிப் பொறியியல் கல்வி வகுப்புகளுக்கான அரசு வெளியிட்டிருந்த விளம்பரத்தில் மொத்த இடங்கள் 350 என அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 700க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. விண்ணப்பங்களின் அடிப்படையில் மாணவர் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கும்போது அனைத்திந்தியத் தொழில் நுட்பக் கல்விக்குழு (AICTE) ஒப்புதல் தரவில்லை என அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மறுமுறை கலைஞர் கருணாநிதி முதல்வரான பிறகு தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகள் தமிழில் தொடங்கப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் (சென்னை, அரியலூர், பண்ருட்டி, இராமநாதபுரம், திருக்குவளை, திண்டுக்கல், பட்டுக்கோட்டை, நாகர்கோவில், திண்டிவனம், திருச்சி, தூத்துக்குடி) மட்டும் சிவில், மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் 2008இல் தமிழ்வழிப் பொறியியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் 900 மாணவர்களை அனுமதிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எனினும் கல்லூரிகளில் தமிழ்வழிப் பொறியியல் 2010இல் தொடங்கப்பட்டது. ஆனால் இக்காலகட்டத்தில் பாடப்புத்தகங்கள் தயாராகவில்லை. தயாரித்த நூல்களும் கையேடுகளைப் போல் இருந்தன. அவைகளை நகல் எடுத்து மற்றவர்களும் படிக்க நேர்ந்தது.

தற்பொழுது எந்த இந்திய தொழில்நுட்பக் குழு ஒருமுறை தமிழகத்திற்கு பொறியியலைத் தொடங்க அனுமதி மறுத்ததோ அதே கல்விக்குழு பொறியியல் கல்லூரிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பாடங்களைத் தொடங்க கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதையட்டி இக்கல்வியாண்டு முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காலி, அசாமி, பஞ்சாபி, ஒரியா, இந்தி ஆகிய 11 பிராந்திய மொழிகளில் பி. டெக் பயிற்றுவிக்க ஒப்புதல் வழங்கியுள்ளதை IACTயின் தலைவர் அனில்சகஸ்புரதே அறிவித்துள்ளார்.

தற்பொழுது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதல்வர் மு. க. ஸ்டாலின் அரசு (2021) தமிழ் வழிக் கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்த வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கோவைக் கல்லூரியில் ஒரு வகுப்பில் தமிழ்வழியில் பாடம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொறியியல் பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) முதல்கட்டமாக அடுத்த ஆண்டு முதல் சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பொறியியல் பட்டயப் படிப்புகள் தமிழ்வழியில் தொடங்கப்படும் என்பதும், படிப்படியாக இதர பட்டயப் படிப்புகளும் தமிழ்வழியில் தொடங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பும் நம் நாதுகளில் தேனாகப் பாய்கிறது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு பொறியியல் படிப்புகளை தமிழ் உட்பட வட்டார மொழிகளில் நடத்த ஒப்புதல் அளித்ததோடு இதற்கான பாடநூல்களையும் தயாரித்து வழங்கவிருப்பதாகவும் அறிவித்த நிலையில் மருத்துவக் கல்வி தொடங்குவதில் எந்த சிக்கலும் தமிழ்நாட்டிற்கு ஏற்படாது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனினும் இது முடியுமா? என்ற கேள்விக்கு இலங்கையில் 190 ஆண்டுகளுக்கு முன் ஒரு தனிமனிதன் டாக்டர் ஃபிஷ்கிறீன் மேலை மருத்துவத்தைத் தமிழில் கற்பித்த வரலாறு உண்டு.

இதற்கு முன்னேற்பாடாக 1983ஆம் ஆண்டு ஆணைப்படி தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் 9 மருத்துவ நூல்கள் வெளிவந்துள்ளன. மருத்துவ அகராதிகளும் மிகுதியாகவே உள்ளன. சான்றாக மணவை முஸ்தபா மருத்துவக் களஞ்சிய பேரகராதி, அ. கி. மூர்த்தி அறிவியல் அகராதி, டாக்டர் சம்பத் குமாரின் மருத்துவ அகராதி, டாக்டர் சாமி சண்முகத்தின் மருத்துவ, கால்நடை சட்ட சொற்கள் அகராதி, தமிழ் இணைய இயக்ககத்தின் மருத்துவ அகராதி ஆகியவைகளைக் கூறலாம்.

தாய்மொழியில் மருத்துவக்கல்வி பயிற்றுவிக்கப்படும் என்று தமிழக பா. ஜ. க. தேர்தல் வாக்குறுதி தந்திருக்கிறது. தேசிய கல்விக்கொள்கை குறித்த மாநாடு ஒன்றில் உரையாற்றிய பிரதமர் மோடி “மொழி என்பது வெறும் கருவிதான். அதுவே கல்வியாகிவிடாது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளைத் தாய்மொழியில் கொண்டுவருவது தான் எங்கள் இலக்கு” என்று சொன்னதையும் இங்கு நினைவு கூர வேண்டியதாக உள்ளது. இப்படிப்பட்ட எண்ணம் ஒன்றிய அரசை ஆளும் பா. ஜ. க. விற்கு இருக்கும் நிலையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கல்வி, கற்க தகுதிபடைத்தவர் என்பது போய் நாட்டில் உள்ள அனைவரும் நீட் தேர்வு எழுதியே அதனடிப்படையில் மருத்துவக்கல்வி பயில முடியும் என்ற நிலை தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது.

இதன் விளைவாகத் தனியார் பயிற்சி மையங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. பழங்குடி, தமிழ்வழி கிராமப்புற மாணவர்கள் வாய்ப்புகளை இழந்தார்கள். இதன் காரணமாக மாணவி அனிதா போன்ற 19 மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதற்கான காரணம் என்ன? என்பதைக் கண்டறிய தற்பொழுது பொறுப்பேற்றிருக்கும் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆராய பரிந்துரைத்தது. அந்த அறிக்கையில் உள்ள கணக்கீடுகள் கிராமப்புற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள தமிழ்வழி மாணவர்களை எவ்வாறு பாதித்துள்ளது? என்பதைப் புள்ளி விபரத்துடன் விவரித்துள்ளது. அதன் 165 பக்க அறிக்கையின் சுருக்கம் இதுதான்.

நீட் தேர்விற்கு முன்பாக 2016-2017 கல்வியாண்டில் எம். பி. பி. எஸ். , சேர்க்கையில் 537ஆக இருந்த தமிழ்வழிப் படித்த மாணவர்களின் எண்ணிக்கை நீட் தேர்வு வந்த பிறகு 2017-2018 கல்வியாண்டில் 56ஆகக் குறைந்துள்ளது. 2020-2021 கல்வியாண்டில் (92. 5%) 82 பேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட (7. 5%) இடஒதுக்கிட்டின்படி 217 பேரும் என மொத்தம் 209 மாணவர்களே தமிழ்வழிப் படித்தவர்கள். நீட்டுக்கு முன்பாக 500க்கும் மேற்பட்ட தமிழ்வழி மாணவர்கள் படித்து வந்த நிலையில் இடஒதுக்கீடு வழங்கியும் பாதியை மட்டுமே நெருங்க முடிந்து இருக்கிறது.

மாநில பாடத்திட்டம் மற்றும் சி. பி. எஸ். இ. பாடத்திட்டப் பிரிவில் பார்த்தால், 2016-2017ஆம் ஆண்டில் 3544 மாணவர்கள் என மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களின் எண்ணிக்கை நீட் தேர்விற்குப் பிறகு 2017-2018இல் 2303, 2109-2020இல் 2762 என குறைந்து இருக்கிறது. ஆனால் சி. பி. எஸ். இ-அய் எடுத்துக் கொண்டால், நீட்டுக்கு முன்பாக இரட்டை இலக்கத்தை தாண்டாமல் இருந்தது. நீட் தேர்விற்குப் பிறகு ஆயிரத்திற்கும் மேல் சென்றுள்ளதைப் பார்க்கலாம்.

நீட் தேர்விற்கு முன்பாக 2016-2017இல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் 65. 66%ஆக இருந்த நிலையில் நீட் தேர்விற்குப் பிறகு 2020-21இல் 43. 13%ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் 0. 309ஆக இருந்த சி. பி. எஸ். இ. மாணவர்களின் எண்ணிக்கை 26. 83%ஆக உயர்ந்து இருக்கிறது.

நீட் தேர்வுக்குப் பிறகு தமிழ்வழியில் படித்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது குறைந்து உள்ளது. 2016-2017இல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 12. 14%ஆக இருந்த தமிழ் வழியில் பயின்றவர்களின் சதவீதம் 2020-2021இல் வெறும் 17%ஆக இருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மொத்த சதவீதத்தில், நீட்டிற்கு முன்பாக ஆங்கில வழி பயின்றவர்கள் 84. 12% மற்றும் தமிழ் வழி பயின்றவர்கள் 14. 88%ஆக இருந்த நிலையில் நீட்டுக்குப் பிறகு 2020-2021இல் ஆங்கில வழி பயின்றவர்கள் 98. 01%ஆக அதிகரித்தும் மற்றும் தமிழ் வழி பயின்றவர்கள் 19. 9%ஆகக் குறைந்தும் உள்ளது.

நீட்டிற்கு முன்பாக 2016-2017இல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 65. 17%ஆக இருந்த கிராமப்புற மாணவர்களின் சதவீதம் தேர்விற்குப் பிறகு 49. 91%ஆக குறைந்துள்ளது. அதே நேரம் 34. 83%ஆக இருந்த நகர்ப்புற மாணவர்களின் சதவீதம் 50. 09%ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவப் படிப்பு சேர்க்கை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016-2017இல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 18. 26%ஆக இருந்தது, 2020-2021இல் 10. 46%ஆக குறைந்துள்ளது.

பெற்றோரின் ஆண்டு வருமானம் 2. 5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன் 2016-2017இல் 47. 42%இல் இருந்தது. இந்த சதவீதம் நீட் தேர்வுக்குப் பிறகு 30% அளவிற்கும் குறைந்து சென்றதைப் பார்க்கலாம்.

நீட் தேர்விற்கு முன்பாக, அதே ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த 87. 53% மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்தனர். மீண்டும் முயற்சித்தவர் 12. 47%ஆக உள்ளனர். இது நீட் தேர்விற்குப் பிறகு மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் இடங்களைப் பெறமுடிகிறது என்பதைக் காட்டுகிறது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் மூன்றில் இரண்டு பகுதி மூன்றாவது நான்காவது தேர்வு எழுதியவர்கள். அவர்களும் எப்படித் தேர்வு எழுதியவர்கள் என்றால் இரண்டு இலட்சம் ரூபாயிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்து கார்பரேட் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்றவர்கள். (விடுதலை. 25. 09. 2021)

இதனையட்டி தமிழ்நாட்டரசு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறவேண்டும் என்று தவியாய்த் தவிக்கிறது. ஒரு உண்மையை நாம் இப்பொழுது உணரவேண்டும். கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகிற கதையாக உள்ளதை அறிய வேண்டும். ஒன்றிய அரசின் அறிக்கை, சுதேச மொழியிலும் தொழில்நுட்பக் கல்வியைக் கற்பிக்கலாம் என்று சொல்லும் நிலையில் நாம் ஏன் மருத்துவக் கல்வியைத் தமிழில் தொடங்கக் கூடாது? தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியைத் தொடங்கும் நிலையில் நிச்சயமாக வெளிமாநிலத்தவர்கள் நீட் எழுதி தமிழ்வழியில் படிக்க முன்வர மாட்டார்கள். 100 விழுக்காடு இடங்களும் நமக்கே கிடைத்துவிடும். இக்காலகட்டத்தில் தமிழ் நாட்டிற்கு நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்தாலும் அதையும் மனமுவந்து ஏற்றுக் கொள்வோம்.

தற்பொழுது தமிழக அரசு அறிவிப்பின்படி வெவ்வேறு பாடப் பிரிவுகளில் 100 பாடநூல்கள் 2 கோடி செலவில் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்பதோடு நில்லாது இன்னும் சில கோடிகளை ஒதுக்கி மருத்துவ அறிஞர் குழுவைக் கூட்டி தக்க நூல்களை விரைவாக எழுதிவாங்கி அதைத் தமிழறிஞர், மொழியியல் அறிஞர், மருத்துவ நுண் ஆய்வாளர் துணையுடன் திருத்தம் செய்து தரமாக வண்ணப்படங்களுடன் வெளியிட வேண்டும். இத்துடன் இம்மருத்துவ நூல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து மறுபதிப்பு செய்யவேண்டும். இதைக் கண்காணிக்க ஒரு மொழிபெயர்ப்புக் குழு கண்ணும் கருத்துமாய் செயல்பட வேண்டும். ஏனெனில் மருத்துவ அறிவியலை இலக்கியங்களைப் போல் நாம் எண்ண முடியாது. மேலும் நாளும் முன்னேற்றம் அடைவது அதன் சிறப்பியல்பு. இதைவிட முக்கியமானது தமிழ்வழியில் மருத்துவம் படித்துத் தேறிய மாணவனுக்கு அரசுப்பணியில் முதலிடம் தரவேண்டும்.

இத்துடன் தமிழ்வழி மருத்துவக்கல்வி சிறப்புடன் நடைபெற மொழித்திட்டக்குழு அமைக்கப்பட வேண்டும். இதன் உட்பிரிவாக அறிவியல் தொழில் நுட்பக்கலைச் சொல் தரப்படுத்துதல் குழுவும் அமைக்கப்பட வேண்டியது இன்றியமையாதது ஆகும்.

எச்சரிக்கை தேவை

இந்நிலையில் தமிழ்வழி மருத்துவக் கல்விக்குத் தடைகள் எப்பொழுதும் போல ஏற்பட நேரிடும். இதற்குச் சில அரசியல் சமூகக் காரணங்கள் உண்டு. இன்னும் பள்ளிக் கல்வியே முழுமையாகத் தமிழில் இல்லாதபோது மருத்துவக் கல்வியில் தமிழைக் கொண்டு வரமுடியுமா? என்னும் ஒரு கேள்வி எழக்கூடும். மருத்துவத் தேர்வை எழுதி வெற்றி பெறுபவர்களில் 90 விழுக்காடுக்கு மேல் ஆங்கிலவழி படித்தவர்களே என்பதை ஏ. கே. ராஜன் அறிக்கை உறுதி செய்கிறது. இரண்டு மூன்று தலைமுறையாக ஆங்கிலம் படித்து தங்களைத் தாங்களே மேட்டுக்குடிகளாகக் கருதிக் கொண்டிருக்கும் சிலர் தமிழ்வழி மருத்துவப் படிப்பை நிச்சயம் எதிர்ப்பார்கள். காரணம் தங்களது வளமான வாழ்வுக்குப் போட்டியாக மற்றவர்கள் அதுவும் சாதாரணமானவர்கள் வந்துவிடக் கூடாது என்பதால் நீதி மன்றம் கூட ஏறுவார்கள்.

இதற்கு முன் உதாரணங்கள் பல உண்டு. 1970களில் கலைஞர் கருணாநிதி கல்லூரிகளில் தமிழ்பயிற்சி மொழித் திட்டத்தை விரிவு படுத்தும் ஆணையை சிண்டிகேட் காங்கிரஸ்காரர்களும், டாக்டர் ஏ. லெஷ்மணசாமி முதலியார் போன்றவர்களும் எதிர்த்தனர். கலைஞரின் கொடும்பாவியை எரித்தனர். ஆங்கில ஆதரவு குறித்த மாநாட்டை சென்னையில் நடத்தினர். 1999இல் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழிக் கல்வி என்று கலைஞர் அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வாதாடி அதற்கு தடை வாங்கினர். நாம் மொழிப் போராட்டத்தில் கூட English ever Hindi Never என்று கூறியவர்கள்தான் Tamil Ever எனக் கூறத் தயங்கியவர்கள் அல்லது மறந்தவர்கள். இதன் காரணம் 200 ஆண்டுகள் ஆங்கிலேயரின் அடிமை வாழ்வு வாழ்ந்த மரபணுக் கோளாறாக இருக்கக் கூடும்.

கர்னாடகம் வழியாக வரும் காவிரி நீரை நாமும் கர்னாடக மக்களும் குடிக்கின்றோம். ஆனால் கர்னாடக மக்களுக்குள்ள தாய்மொழிப் பற்று ஏன் தமிழ் நாட்டினருக்கு அவ்வளவாக வருவதில்லை என்பது ஒரு புதிரே ஆகும்.

- டாக்டர் சு.நரேந்திரன்

Pin It