இந்த நூல் தென் கர்நாடகத்தில் வாழும் பண்ட்களின் வரலாறு மற்றும் பண்பாட்டின் வளமையை ஆய்வு செய்யும் முயற்சியாகும் (நூலின் அறிமுக இயலில் நூலாசிரியர்).

Surendra Rao (2010) - Bunts in History and Culture.

World Bunts’ Foundation Trust(R), S.R.S.Home, Mangalore-575 003

buntsகர்நாடக மாநிலத்தின் தெற்குப் பகுதியில் வாழும் பண்ட்கள் என்ற முக்கிய சமூகத்தைக் குறித்த நூல்இது. இச் சமூகம் குறித்த ஓர் அறிமுக நூலாகவும் ஆய்வு நூலாகவும் இந்நூல் எழதப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்நூலானது முற்றிலும் இச் சமூகத்தின் வரலாறாக அமையாமல் துளு நாட்டின் வரலாற்றிலும் பண்பாட்டிலும் பண்ட்களின் பங்களிப்பை ஆராய்கிறது. பண்ட் என்ற சொல் அண்மைக் காலமாகத்தான் பயன்படுத்தப் படுகிறது. நாடவர் (Nadava) ஒக்கிலிம் (Okkelme) என்ற சொற்களாலேயே இவர்கள் முன்னர் அழைக்கப்பட்டனர். தற்போது வழங்கும். Bunts என்ற ஆங்கிலச்சொல்லை Bant என்று எட்கர் தர்ஸ்டன் தமது தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் நூலில் குறிப்பிட்டுள்ளார். Bunts என்ற பன்மைச் சொல்லை கன்னடத்தில் பண்டரு என்று அழைப்பதாகக் குறிப்பிட்ட நண்பர் சீனிவாசன் (தேரேகால்புதூர்) தமிழில் பண்ட்கள் என்றழைக்கலாம் என்றார். இவர் துளு மொழி அறிந்தவர். தர்ஸ்டன் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பில் பண்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்ட்கள் வாழும் பகுதி துளுநாடு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பரவலாக அறியப்பட்ட மங்களூர், உடுப்பி என்ற ஊர்கள் இப் பகுதியில்தான் உள்ளன. துளுநாடு என்ற நிலப்பகுதி கர்நாடக மாநிலத்திற்குள் இருந்தாலும் இப்பகுதி மக்களின் பேச்சு மொழியாகத் துளு மொழிதான் உள்ளது. துளுமொழி குறித்து கால்டுவெல் தமது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த இம்மொழிக்கு வரிவடிவம் இல்லை. ஆயினும் வாய்மொழி வடிவிலான நாட்டார் வழக்காறுகள் உள்ளன. குறிப்பாக பர்தானா என்ற கதைப்பாடல்கள் வாய்மொழிக் காவியங்களாக வழக்கிலுள்ளன.

துளுநாடு

துளு நாடு குறித்த தொன்மைச் சான்றுகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. ஆய்வறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி துளு நாட்டு வரலாறு என்ற தலைப்பில் ஆய்வு நூல் ஓன்றை எழுதியுள்ளார். அவரது கருத்துப்படி, கொங்கண நாடு என்று சங்க இலக்கியங்களில் இந்நிலப்பகுதி குறிப்பிடப் பட்டுள்ளது என்று குறிப்பிடும் அவர் "பழைய சேர நாடு பிற்காலத்திலே மலையாள நாடாக மாறித் தனியாகப் பிரிந்து போய்விட்டது போலவே பழைய தமிழகத்துடன் இணைந்திருந்த துளுநாடும் பிற்காலத்திலே பிரிந்து தனியாகப் போய்விட்டது" என்கிறார்.

மாமூலனார் என்ற சங்க காலக் கவிஞர் எழுதிய அகநானூற்றுக் கவிதை ஒன்றில் (15: 5- 7) துளு நாடு என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளதுடன் அங்கு கோசர்கள் என்போர் வாழ்வதாகவும் துளு நாட்டு மக்கள் வறியோரைப் பேணும் பண்புடையோர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. துளு நாட்டின் தொன்மைக்கு இது சான்றாகும்

நூல்

பண்ட்களின் தாய்மொழியான துளு எழுத்து வடிவம் பெறாத மொழி என்பதன் அடிப்படையில் இவர்கள் பண்பாட்டு நிலையில் பின்தங்கியவர்கள் என்று கருதினால் அது முற்றிலும் தவறு என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இம்மக்களின் தொன்மையான வரலாற்றில் தொடங்கி அவர்களது இன்றைய வாழ்க்கை வரையிலான பல்வேறு செய்திகளைக் கூறிச் செல்கிறது. பண்ட்கள் என்ற மக்கள் பிரிவினரின் இனவரலாற்றைக் கூறும் நூல் என்று இந்நூலின் எல்லையை இந் நூலாசிரியர் சுருக்கிக் கொள்ளவில்லை. அயற் பண்பாட்டுக் காரர்களுக்கான காட்சிப் பொருளாக இவர்களை முன் நிறுத்தவுமில்லை. தொன்மையான ஒரு மக்கள் பிரிவினரின் வரலாற்று வரைவு எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பது குறித்த ஒரு தெளிவான வரலாற்றுப் பார்வை ஆசிரியரிடம் காணப்படுகிறது. பண்ட்களின் தொன்மைக்குள் முகம் புதைக்காமலும் அதைப் புறக்கணிக்காமலும், நவீனத்துவம் இந்தியதேசிய இயக்கம் என்பனவற்றின் தாக்கத்தை இச்சமூகம் எவ்வாறு, உள்வாங்கிக் கொண்டுள்ளது என்பதை அறிமுகம் செய்வதுடன் ஆராயவும் செய்கிறது.

நூலாசிரியர்

இந் நூலாசிரியர் பி. சுரேந்திர ராவ் (1948-2019)மங்களூர்ப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில்(1982-2008):இணைப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதற்கு முன் புத்தூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியின் வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். வரலாற்று நூல்கள் எழுதியதுடன் துளு மொழியின் வாய்மொழி வழக்காறுகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 2015 ஆவது ஆண்டில் ராஷ்டிர கவிகோவிந் பை சம்சோதன மையம் வழங்கும் ராஷ்டிர கவி கோவிந்த பாய் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இச்சிறிய அறிமுகத்துடன் இனி நூலுக்குள் நுழைவோம்.

பண்ட்களின் தொன்மை:

பண்ட்களின் தொன்மையை சிந்துச் சமவெளியின் ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் போக்கை ஷீரூர் சிவராம ஷெட்டி என்பவர் தொடங்கி வைத்துள்ளார். இது 1995இல் இவர் எழுதிய நூலிலும் 2002இல் எழுதிய கட்டுரையின் வாயிலாகவும் வெளிப்பட்டது. ஹரப்பா அகழ் ஆய்வில் கிடைத்த முத்திரைகளில் ஒன்று எருது உருவம் பொறித்த முத்திரையாகும். துளுப் பகுதியில் உள்ள காவாலி குகையில் பொறிக்கப் பட்டுள்ள கூனுடைஎருதின் ஓவியத்துடன் ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரையில் இடம் பெற்றுள்ள எருதின் உருவத்தையும் இணைத்து நோக்கி பண்ட்களின் தொன்மை சிந்துச் சமவெளி நாகரிகத்துடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது.

ஆனால் நூலாசிரியருக்கு இதில் உடன்பாடில்லை. ஹரப்பா நாகரிகத்திற்கு முன்னர் பண்ட்கள் எங்கிருந்தனர் என்ற கேள்வியை எழுப்புகிறார். இதையடுத்து பூதலப்பாண்டியன் என்ற பாண்டிய மன்னனை மையமாகக் கொண்டு பண்ட்களின் தொன்மையைச் சற்று விரிவாக ஆராய்ந்துள்ளார். மருமக்கள் தாயமுறையை இவன் மரபைச்சேர்ந்த தேவபண்டியன் அறிமுகம் செய்ததாக கணபதி ராவ் என்பவர் பதிப்பித்த பூதலப் பாண்டிய ராயன் சரித்திரம் குறிப்பிடுவதைச் சுட்டுகிறார். அத்துடன் இதன் நம்பகத்தன்மையை விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

அடுத்து அசோகரது கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ள சத்தியபுத்திரர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கோசர்கள்தான் என்ற கருத்தை ஆராய்கிறார். இக் கோசர்கள் என்போர் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் இருந்து துளு நாட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்ற கருத்து உள்ளது. துளு நாட்டிறகு இடம் பெயர்ந்து வந்த கோசர்கள் அங்குள்ள காட்டுவாசிகளைப் பயன்படுத்தி காட்டைத் திருத்தி விளைநிலங்களாக மாற்றியுள்ளனர். இவ்வாறு காடை நாடாக்கியமையால் ‘நாடாவாஸ்’ என்று பெயர் பெற்றுள்ளனர்.

இவை தவிர அசோகரது கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ள சத்தியபத்திரர் என்ற சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கோசர் என்போரைக் குறிக்கிறது என்ற கருத்தை ஆராய்கிறார். வரலாற்றறிஞர்களிடையே இது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அகநானூறில்(281) வடவர் என்ற பொருளில் வடுகர் குறிப்பிடப் பட்டுள்ளனர். ரமேஷ் என்ற வரலாற்றியலர் கோசர்களும் வடுகர்களும் துளு நாட்டவர் என்று கருதுகிறார். அத்துடன் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மோரியர் கொங்கன் பகுதியில் உள்ள மௌரியர் என்றும் வடபுல மௌரியர் அல்லர் என்றும் குறிப்பிடுகிறார். இது ஆய்வுக்குரியது.

இவ்வாறு ஏராளமான வரலாற்றுச் செய்திகளை முன்வைத்து பண்ட்களின் வரலாற்றை ஆராய்ந்துள்ளார். இச் செய்திகளுக்குள் நுழைந்தால் பண்ட்களின் பண்பாடு குறித்த செய்திகளை அறிமுகம் செய்ய இயலாது போய்விடலாம். எனவே பண்ட்களின் பண்பாட்டு வாழ்க்கை குறித்து ஆசிரியர் குறிப்பிடும் செய்திகளைக் காண்போம். அதன் முதற்படியாக பண்ட் சமூகத்தின், நாட்டார் வழக்காறுகள் குறித்த சில அடிப்படைச் செய்திகளைக் காண்போம்.

நாட்டார் வழக்காறுகள்:

பண்ட்களின் நாட்டார் வழக்காறுகளை அறிமுகம் செய்யும் முன்னர் நாட்டார் வழக்காறுகளைக் குறித்து அவர் பொதுவான சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றின் முக்கியத்துவம் கருதி அவர் கூறியுள்ள செய்திகளின் சாரம் இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது:

  • · வெற்றி பெற்றவர்களின் கதையை மட்டுமே கூறுவதால் வரலாறு மதிப்பிழந்து போகிறது.
  • · ஆட்சியாளர்கள் தம் வரலாற்றைத் தாமே எழுதிக் கொள்கிறவர்கள். தம்மைக் குறித்த மதிப்பீடுகளாக எவை அமையவேண்டும் என்பதையும் தன் சார்பில் யார் பேசவேண்டும் என்பதையும் முடிவு செய்கிறார்கள்
  • · வெற்றியாளர்கள் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊதியப்பட்டியலில் வரலாற்றாசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பழமையான ஒன்று.
  • · ஆளுவோர் தமக்கென வரலாறு எழுதுவோரைக் கொண்டிருந்தனர். இன்றும் அது தொடர்கிறது.
  • · இன்று அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களும் அதிகாரப் பரவல்களும் மன்னர்களைப் பின்னடைவிற்கு ஆளாக்கி நூல்களிலும் அல்லது கல்லறைகளிலும் மட்டிலுமே வாழ்வோராக்கி விட்டன.

bunts in history and cultureவரலாற்றை மறு கட்டமைப்புச் செய்யும்போது நாட்டார் வழக்காறு பெரும்பாலும் பாரம்பரிய அதிகார அமைப்பிற்கு வெளியே நின்று செயல்படுகிறது. வினா எழுப்புகிறது. அத்துடன் தனக்கெனத் தனித்துவமான மாற்று அதிகாரமையங்களை உருவாக்கிக் கொள்கிறது. அதிகாரப் பூர்வமான பனுவல்களில் ஆளுவோர் குறித்துப் பதிவாகியுள்ள செய்திகளுக்கு மாற்றுவடிவங்களை வழங்குகிறது என்று குறிப்பிடும் நூலாசிரியர் பண்ட்கள் குறித்த வரலாற்று வரைவுக்கு நாட்டார் வழக்காறுகள் துணைபுரியும் என்கிறார். தம் கருத்துக்குச் சான்றாக ‘பதானா’ ‘சந்தி’ என்ற பெயர்களில் வழங்கும் இரு வகையான நாட்டார் கதைப்பாடல்களைக் குறிப்பிடுகிறார்.

இவை மைய நீரோட்டத்தில் இடம் பெறாத சமூக அரசியல் செய்திகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. நாட்டார் காவியங்களான பதானாக்கள் பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாவீரர்கள், எதிர்நிலைத் தலைவர்கள் ஆகியோரின் வீரச்செயல்கள், நயவஞ்சகச் செயல்கள், அர்ப்பணிப்பு, உயிர்த்தியாகம். என்பனவற்றை வெளிப்படுத்துகின்றன. அத்துடன் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கு ஓர் இடத்தை வழங்கி அவர்கள் எதிர்கொண்ட அநீதியை வெளிப்படுத்துவதுடன் அவற்றை அவர்கள் வெற்றிகொள்ளவும் செய்கின்றன.

பண்ட்களின் கதைப்பாடல்கள் குறித்த செய்திகளை அடுத்து அவர்களது நாட்டார் வழக்காறுகளுள் முக்கிய கூறாக இடம் பெற்றுள்ள இரு விளையாட்டுப் போட்டிகளை அறிமுகம் செய்துள்ளார். இவற்றுள் ஒன்று கம்பலா என்னும் எருமைப் பந்தய விளையாட்டு. மற்றொன்று கோரிகட்டா என்னும் சேவற்சண்டை.

கம்பலா:

வரலாற்று அடிப்படையில் நோக்கினால் கம்பலா நிகழும் வயல் குறித்து இடைக்காலக் கல்வெட்டுகளில் பதிவுகள் உள்ளன. 1691 ஆவது ஆண்டுக் காலத்திய செப்பேடு ஒன்றில் கம்பலா நிகழும் வயல் குறித்த பதிவு இடம் பெற்றுள்ளது. அறுவடை முடிந்த காலத்திற்கும் அடுத்த வேளாண்மை தொடங்கும் காலத்திற்கும் இடையில்(திசம்பர்/சனவரி) இது நிகழும்.

இது பெருநிலக்கிழார்களால் பாரம்பரியமாக சேறு கலக்கிய வயலில் நிகழ்த்தப்படும். இதன் புரவலர்கள் அவர்கள்தான். அவர்களது மதிப்பு மற்றும் அதிகாரத்தின் குறியீடாக இது அமையும்.

பண்ட்களின் பொழுது போக்குத் தன்மையுடன் கூடிய போட்டி விளையாட்டு என்று கம்பலா காட்சி அளித்தாலும் அதற்கும் மேலான சில செய்திகளை அது தன்னுள் அடக்கி உள்ளது என்பது நூலாசிரியரின் கருத்தாக உள்ளது. அவரது ஆய்வு சார்ந்த கருத்தை அறிந்து கொள்ளுமுன்பு இது நிகழும் முறை குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

கம்பலா நிகழும் களமாக நன்செய் நிலம் அமையும். பெரும்பாலும் மூன்றில் இருந்து பத்து ஏக்கர் பரப்பளவு நிலத்தில் இது நிகழும்.

பொதுவாக நான்கு வகையான எருதுப் பந்தயங்கள் நடைமுறையில் இருந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். முதலாவது முறையில் இரு எருமைகள் நுகத்தடியில் பூட்டப் பட்டிருக்கும். நுகத்தடியின் நடுவில் கட்டப் பட்டிருக்கும் கயிற்றை ஓருவன் பிடித்தவாறு அவற்றை விரட்டிச் செல்வான். இரண்டாவது முறையில் இரண்டு எருமைகள் கலப்பையில் பூட்டப் பட்டிருக்கும் நிலையில் ஒருவன் அவற்றை விரட்டி ஓட்டுதல் நிகழும். மூன்றாவது முறையில் நுகத்தடியில் கலப்பைக்குப் பதிலாக வயலைச் சமப்படுத்து உதவும் பலகை(பரம்புப் பலகை) பொருத்தப் பட்டிருக்கும். இப் பலகையில் நின்றவாறு ஒருவன் எருமைகளை விரட்டிச் செல்வான். நான்காவது முறையானது மூன்றாவது முறையை ஓரளவுக்கு ஒத்ததாகும். ஆனால் பந்தயக் களமான நஞ்சை நிலத்தில் சேறை நன்றாகக் கலக்கி (தொளி கலக்கி)வைத்திருப்பார்கள். இதனால் மாடுகள் ஓடும்போது கலங்கிய சேறு வாரி இறைக்கப் படும். அது எவ்வளவு உயரத்திற்கு வீசி எறியப் படுகிறது என்பது வெற்றியை முடிவு செய்யும் காரணிகளில் ஒன்றாகும். அடிப்படையில் இது அதிக அளவில் பொருள் தேவைப்படும் விளையாட்டு. கம்பலா போட்டியில் கலந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற எருமைகளை அதிக விலை கொடுத்து வாங்குவதும் அவற்றை நல்ல முறையில் பராமரித்தலும் வளம் படைத்த நிலக்கிழார்களாலேதான் முடியும்.

போட்டியில் வெற்றி பெற்ற எருமைகளுக்கு நன்றாகத் தீனி கொடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வருவர். அவற்றின் உரிமையாளருக்கு பொற்பதக்கம் வழங்கப்படும். தற்போது பணமும் வழங்கப்படுகிறது. ஒரு வகையில் திருவிழா போன்றே கம்பலா நிகழுகிறது. தற்போது கம்பலா போட்டிக்கென்று அரங்கங்கள் உருவாக்கப்படுவதும், பயணத்தொகை கட்டுதலும் நிகழ்கின்றன. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விளையாட்டாகவும் மாறிவிட்டது. கம்பலாவைத் தடை செய்ய வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. தொடக்கத்தில் நாட்டார் சமய நெறியில் இணைந்திருந்ததுடன் நிலவுடைமையாளர்களின் அதிகாரத்தை வெளிப்படுத்துவதாகவும் செயல்பட்ட கம்பலா காலப்போக்கில் இத்தகைய மாறுதல்களை ஏற்றுள்ளது.

எருமைப் பந்தயத்திற்காக நன்றாகப் பேணி வளர்க்கப்பட்ட எருமைகள் பழைய சமூக அமைப்பில் அதை வளர்ப்பவருக்கு உயரிய சமூக மதிப்பை வழங்கியுள்ளன. இன்று அச் சமூக அமைப்பு மறைந்துவிட்ட போதிலும் தேவையற்ற ஒன்றாகக் கம்பலாவை ஆக்கிவிடவில்லை.

இவ்வாறு கம்பலா என்ற எருமைப் பந்தயம் குறித்த செய்திகளைப் பதிவு செய்ததுடன் ஆசிரியர் தம் பணியை நிறுத்திவிடவில்லை. அவ்வாறு நிறுத்தியிருந்தால் போட்டித் தன்மையுடன் கூடிய விலங்கு விளையாட்டு ஒன்றைக் குறித்த விவரணத் தன்மையடன் கூடிய பதிவாக மட்டுமே இது சுருங்கிப் போயிருக்கும். மாறாக இவ் விளையாட்டு நிகழ்வுடன் இணைந்துள்ள சில நிகழ்வுகளை வெளிப்படுத்துவதன் வாயிலாக, துளு நாட்டில் நிலவிய, நிலமானியச் சமூக அரசியல் சூழல் குறித்த கடந்த கால நினைவுகளைப் பாதுகாத்து வருகிறது என்ற முடிவுக்கு வந்துள்ளார். இது தொடர்பாக அவர் முன்வைத்துள்ள கருத்துக்களின் சுருக்கம் வருமாறு.

  • · நிலக்கிழார்களின் மேற்பார்வையில் இப் போட்டி நிகழ்கிறது.
  • · தாம்பூலத்தை அவருக்கு வழங்கி மரியாதை செலுத்தப் படுகிறது.
  • · புனிதமான இடமாக இப் போட்டி நிகழும் இடம் கருதப்படுகிறது.
  • · தம் எருமைகளுடன் போட்டியில் கலந்து கொள்வோரின் பெயர்கள் பெரு நிலக்கிழாராலேயே அறிவிக்கப் படுகிறது,
  • · தற்போது நிலமானிய அடையாளங்களில் இருந்து விடுபட்டு ஒரு பண்பாட்டு அடையாளமாக கம்பலா உள்ளது.

கோரிகட்டா:

துளுநாட்டவரும் பண்ட்களும் பேரார்வம் காட்டும் ஒரு பொழுது போக்கு விளையாட்டு சேவற்சண்டை. இது துளு நாட்டின் பண்பாட்டில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. கோவில் திருவிழாக்களிலும், திருமணம், சீமந்தம் ஆகிய வாழ்க்கைவட்டச் சடங்கு நிகழ்வுகளிலும் இது இடம் பெறுகிறது. கோரிக்கட்டா என்று துளுமொழியில் கோழிச் சண்டை அழைக்கப்படுகிறது. (கோரி-கோழி).

உள்ளூர்க் கடவுள்களை மையமாகக் கொண்டு நிகழும் ஊர்த் திருவிழாக்களின் போது கோழிச்சண்டை முக்கிய இடம் பெறுகிறது. கோழிச் சண்டையில் வெற்றி பெரும் கோழி ‘பந்தே கோரி’ என்றும் தோற்ற கோழி ‘ஒட்டி கோரி’ என்றும் அழைக்கப் படுகிறது. கோழிச் சண்டையின் போது இறந்து போன கோழிகளின் இறைச்சி சமைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும்.

நாட்டார் அறிவு நுட்பத்துடன் தொடர்புடைய ஒன்றாகக் கோழிச் சண்டை விளங்குகிறது. சண்டைக் கோழியைத் தேர்வு செய்தல், ஊட்டச்சத்து கொண்ட உணவை அதற்கு வழங்கல், அதன் காலில் கத்தியைக் கட்டும் முறை, நம்பிக்கைகள் என்பன இவற்றுள் குறிப்பிடத் தக்கவை ஆகும். இச் சண்டையின் நுட்பங்களை அறிந்தவர்கள் உரிய முறையில் அங்கீகரிக்கப் படுவதுடன் அவர்களுக்குப் பணமும் வழங்கப்படும். பந்தயக் குதிரை வளர்ப்பின் கிராமிய வடிவம் என்று கோழிச்சண்டையைக் குறிப்பிடலாம். இச் சண்டையானது கிராம மக்களை மட்டுமின்றி நகர வாசிகளையும் ஈர்ப்பதாக விளங்குகிறது.

தனித்துவமான போக்குகளை இது கொண்டுள்ளது. பணம் மரியாதை, பொழுது போக்கும் விளையாட்டு, என்பன இதில் இடம் பெற்றுள்ளன. ஆனால் ஆங்கில ஆட்சியில் இது குறித்த எதிர்க் கருத்துக்களும் வெளிப்பட்டன. துணை ஆட்சியர் ஒருவர், பண்ட் குடியானவர்கள் கோழிச் சண்டையிலும் கம்பலாவிலும் தம் பணத்தை வீணாக்குகிறார்கள் என்று 1909 ஆவது ஆண்டில் அறிவுரையாகக் கூறிய செய்தி சுதேசபிமானி என்ற கன்னட நாளிதழில் வெளியாகி உள்ளது. ஆனால் இத்தகைய விமர்சனங்கள் எவ்விதத் தாக்கத்தையும் பண்ட்களிடம் ஏற்படுத்தவில்லை. மாறாகக் கோழிச் சண்டையின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கவே செய்தது. தற்போது ஒரு நல்ல சண்டைக் கோழியின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ளது. கோழிச் சண்டையில் ஆர்வம் கொண்ட வளம் படைத்தோர் சண்டைக் கோழிப் படையையே பராமரிக்கிறார்கள். அவற்றை வளர்க்க அதிக முதலீடு தேவைப்படுகிறது. தொலைவிலுள்ள கேரளத்தின் கொச்சி நகரில் இருந்து சண்டைக் கோழிகளை வாங்கி வருகிறார்கள். இது அரேபியாவில் இருந்து குதிரகளை இறக்குமதி செய்ததை ஒத்ததாக உள்ளது. பண்ட்கள் சிலர் தாம் வளர்க்கும் சண்டைக் கோழிகளின் காதில் பொன்னால் ஆகிய காதணியையும் கால்களில் மின்னும் வெள்ளிக் கொலுசையும் அணிவிப்பதுண்டு.

கோழிச் சண்டையின் மீது கொண்டுள்ள ஆர்வம் பண்ட்கள் சிலரைத் திவாலாக்கி உள்ளது. தேசியம் சீர்திருத்தம் என்ற இரண்டின் மீதும் பற்றுக்கொண்டிருந்த கே. கே. ஷெட்டி என்பவர் இதைப் பொறுக்கமுடியாத நிலையில் புலம்பலும் கண்டிப்பும் கலந்த கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

இந்நூலாசிரியர் தமது கருத்தாக கோழிச் சண்டையானது பெரும்பாலும் தனிப்பட்ட மதிப்புடனும் குடும்ப மதிப்புடனும் இணைந்துள்ளது இதுவே சில நேரங்களில் தனிப்பட்ட சண்டைகளுக்கும் குடும்பச் சண்டைகளுக்கும் ஏதுவாய் அமைவதும் உண்டு. சண்டைக்குப் பதிலியாக விளயாட்டு அமைவது கடந்த காலத்தில் மட்டுமின்றி இப்போதும் உள்ளது. கோழிச் சண்டை நிகழ்ச்சிக்குப் புரவலர்களும் உருவாகி உள்ளார்கள். உள்ளூர்த் தலைவர்கள் அரசியல்வாதிகள் ஆகியோரின் இடையீடும் உண்டு என்று கூறியுள்ளார்.

பண்ட்களின் வழிபாடு:

பாம்பு வழிபாட்டாளர்களாகவும் கணக்கற்ற தெய்வங்களை வழிபடுபவர்களாகவும் துளு மக்கள் இருந்துள்ளனர். பின்னர் ஆகம மரபு சார்ந்த தெய்வங்கள் இவர்களிடையே நுழைந்தன. பிராமணிய மேலாண்மை வளர்ச்சியுற்ற பின் சைவ வைணவ வழிபாட்டு முறையில் இருந்து இவர்களின் வழிபாட்டு முறையை வேறுபடுத்திக் காட்டும் வகையில் ‘நாட்டார் (Folk) நம்பிக்கைகளும் வழிபாடும்’ என்ற வகைமைக்குள் அடக்கினர்.

அய்ரோப்பியர்களில் சிலர், இந்தியாவின் சமயம், மொழி, பண்பாடு குறித்து அறிய ஆர்வம் கொண்டு இவற்றைக் கற்றறிந்ததுடன் புலமை மிக்கவர்களாகவும் விளங்கினர். இவர்களைக் ‘கீழைத்தேயவாணர்' (Orientalist) என்பர். இவற்றை இவர்களுக்குக் கற்றுக்கொடுத்த பிராமணப் பண்டிதர்கள் நாட்டார் வழிபாட்டு முறைகள் மதிப்புக் குறைந்தவை, போற்றுதலுக்குரிய வேதங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையல்ல என்று கற்பித்தனர். ‘தேவபாஷை’ ஆன சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தாது செய்யும் வழிபாடுகள் இழிவானவை என்றும் கூறினர். கிறித்தவத்தைப் பரப்ப வந்த கிறித்தவ மறைப்பணியாளர்களும் நாட்டார் தெய்வ வழிபாடானது பேய் வழிபாடு என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.

சிவன், விஷ்ணு என்ற தெய்வங்களின் பாதுகாவல் தெய்வங்களே நாட்டார் தெய்வங்கள் என்றழைத்ததன் வாயிலாகப் பிராமணிய சமயத்திற்குள் நாட்டார் தெய்வங்களை உள் இழுத்துக் கொண்டனர். நாட்டார் தெய்வ வழிபாட்டிற்குள் பிராமண பூசாரிகளின் நுழைவும் நாட்டார் சமயத்தின் தனித்துவத்தைச் சிதைத்தது. அரசியல் இந்துத்துவமானது பெருமரபு என்று குறிப்பிடப்படும் மேட்டிமையோரின் மரபுக்குள் நாட்டார் சமய மரபை இழுத்துக் கொண்டது. இனக்குழு நம்பிக்கைகளும் வழிபாடுகளும் மேலாண்மைத் தன்மை கொண்ட பிராமணிய வழக்காறுகளாலும் வழிபாட்டு வகைமைகளாலும் உறிஞ்சப் பட்டுவிட்டன. இந்திய சமய அனுபவத்தில் காணப்படும் நெகிழ்ச்சியும் பன்முகத்தன்மையும் புதிய செமிட்டிக் சமயநெறியை உண்டாக்கும் முயற்சியில் அதிகார இந்துத்துவத்தால் (Syndicated Hinduism) அழிக்கப்பட்டு விட்டன.

நூலாசிரியரின் இக் கூற்றுகள் நாட்டார் சமய நெறியின் மீது அவர் கொண்டுள்ள மதிப்பீட்டை வெளிப்படுத்துவனவாயும் சமய அரசியல் குறித்த அவரது புரிதலை உணர்த்துவதாயும் உள்ளன. இத்துடன் நின்றுவிடாமல் பண்ட்களின் நாட்டார் தெய்வங்கள் சிலவற்றைக் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்ட்களின் சமயம் குறித்த அவரது அறிமுகமானது அவர்களது வழிபாட்டு மரபு குறித்த வெறும் பதிவாக அன்றி அவர்களது சமயவாழ்வில் நிகழ்ந்த ஊடுறுவல்கள் குறித்தும் விமர்சன நோக்குடன் எடுத்துரைக்கிறது.

இவ்வாறு தொன்மையான பண்ட் சமூகத்தின் வரலாறும் பண்பாடும் பெரும்பாலும் வாய்மொழிச் சான்றுகளின் துணையுடன் எழுதப்பட்டுள்ளது. வரிவடிவம் பெறாத ஒரு மொழி பேசும் மக்களின் வரலாறையும் பண்பாட்டையும் விவரணைத் தன்மையுடன் மட்டுமின்றி ஆய்வு நோக்குடனும் வெளிப்படுத்தி உள்ளார். மேற் கூறிய செய்திகள் மட்டுமின்றி நவீனத்துவம் தொடர்பான இம் மக்களின் எதிர்வினை, இந்தியாவின் தேசிய இயக்கத்தில் இம் மக்களின் பங்களிப்பு, துளு மக்களின் தாய் மொழியான துளு மொழி வரிவடிவம் இழந்த வரலாறு எனபன இந்நூலின் இறுதிப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. வேளாண் குடிகளான பண்ட்கள் வாணிபம், வங்கித் தொழில், தொழிற்சங்க இயக்கம் என்பனவற்றில் தடம் பதித்துள்ளதையும் இந்நூல் நாம் அறியச் செய்துள்ளது.

- ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It