நீட்டின் பாதிப்புகள் குறித்து ஆராய தமிழக அரசு நியமித்துள்ள முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் குழு - சட்டத்துக்கு எதிரானது என்று தமிழக பா.ஜ.க. சார்பில் அதன் செயலாளர்களில் ஒருவரான கரு. நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தன்னையும் எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டுள்ளார். வழக்கறிஞர் திருமூர்த்தி, ஜூலை 9, 2021 அன்று உயர்நீதி மன்றத்தில் இந்த ‘இடையீட்டு’ மனுவை தாக்கல் செய்தார். மனுவில் அடங்கியுள்ள முக்கிய கருத்துகளின் சுருக்கமான தொகுப்பு.

மாணவர்கள் - பெற்றோர்கள் மற்றும் பெரும்பான்மை பொது மக்களிடையே எதிர்ப்புணர்வுகளை உருவாக்கக்கூடிய ஒரு பிரச்சினையில் அது குறித்து கருத்துகளை கேட்கவும், ஆதாரங்களை திரட்டுவதுமான அரசின் செயல்பாடுகள், அரசின் கொள்கை முடிவுகளைச் சார்ந்த தாகும். நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது அந்த சட்டம் மாநிலங்களோடு தொடர்புள்ள நிலை யில் மாநில அரசு, அந்த சட்டம் குறித்து மக்களின் கருத்துகளைக் கேட்கும் கொள்கை முடிவுகளை சட்டத்தை ஏற்க மறுப்பதாகவோ சட்ட எதிர்ப்பாகவோ கருதிவிட முடியாது.

ஏ.கே.ராஜன் குழுவை நியமித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையின் நோக்கம் என்ன? ஒரு மக்கள் நல அரசு தனக்கும், மக்களுக்கும் இடையிலான ‘தூதுவராக’ செயல்படுகிறது என்பதே இந்த ஆணையின் உள்ளடக்கம். இந்த குழு மக்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. அது நீட் தேர்வுக்கு ஆதரவாக இருக்க லாம்; அந்தத் தேர்வு தேவை இல்லை என்பதாகவும் இருக்கலாம். இரு தரப்பு கருத்துகளையும் பதிவு செய்யும் இந்தக் குழுவின் செயல்பாட்டை உச்சநீதிமன்றத் தின் தீர்ப்புக்கு எதிரானது; சட்ட விரோதமானது என்று எப்படி முடிவுக்கு வர முடியும்?

பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வியலாத காரணத்தால் பல மாணவ மாணவியர்கள் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வுகள் தமிழ் நாட்டில் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் ஏன் இந்த முடிவுக்கு தள்ளப் பட்டார்கள்? அவர்களின் உளவியல் பிரச்சினை என்ன? இதைத் தவிர்க்க தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்கு எத்தகைய முயற்சிகள், திட்டங்கள் தேவைப்படுகின்றன? சட்டரீதியாக எதிர் காலத்தில் கல்விப் புலத்தில் எதைச் செய்ய வேண்டும் என்பதை ஆராயவே தமிழக அரசு இந்தக் குழுவை நியமித்திருக்கிறது.

ஒன்றை வலியுறுத்திக் கூற வேண்டும். சுகாதாரம் மாநில அரசு உரிமையின் கீழ் தான் வருகிறது. இந்த நிலையில் மருத்துவக் கல்வியை சுகாதாரத் துறையில் இருந்து எப்படித் தனியே பிரித்துப் பார்க்க முடியும்? இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை தான்.

விசாரணைக் குழுவை நியமித்துள்ள தமிழக அரசு, அதன் விசாரணை வரம்புகளிலேயே இதைத் தெளிவுப்படுத்தி யிருக்கிறது. ‘நீட்’ தேர்வு அடிப்படையில் கடந்த காலத்தில் நடந்த மாணவர் சேர்க்கை, அவர்களிடையே பாதிப்புகளை உருவாக்கியிருக்கிறதா? அப்படிப் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தால் எத்தகைய பாதிப்புகள்? இந்த பாதிப்புகளை சரி செய்வதற்காக அனைத்து மாணவர் களும் பயன்பெறக் கூடிய மாற்று வழி முறைக்கான ஆலோசனைகள் இருக்கிறதா? அந்த ஆலோசனைகள் எவை? நேர்மையான அனைவருக்கும் நீதி வழங்கக் கூடியதாக இருக்க வேண்டிய அந்த ஆலோசனைகளை சட்டப்பூர்வமாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன? என்பதுதான் விசாரணைக் குழு வுக்கு தமிழக அரசாணை விதித்துள்ள வரம்பு. இது எந்த வகையிலும் நாடாளு மன்ற சட்டத்துக்கோ உச்சநீதிமன்றத் துக்கோ எதிரானது அல்ல.

3.1.1977இல் ‘கல்வி’ மாநில உரிமையிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டாலும் பொதுப் பட்டியலில் உள்ள பிரச்சினை ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமையானது என்று தவறுதலாகக் கருதப்படுகிறது. மாநில அரசுக்கும் அதில் உரிமை உண்டு. ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை என்ற கண்ணோட்டத்தில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு மட்டுமே சட்டம் இயற்ற முடியாது. தமிழ்நாடு அரசேகூட மருத்துவப் பட்டப் படிப்பு மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்பில் தமிழ் நாட்டுக்கு விதிவிலக்கு கேட்டு 2017ஆம் ஆண்டு சட்ட மன்றத்தில் (TNLA Bill No.7, of 2017 etc.) சட்டம் நிறை வேற்றியிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

‘தேசிய மருத்துவ ஆணைய’ சட்டத்தை யும் ஒன்றிய அரசு ஒத்திசைவுப் பட்டியல் தனக்கு மட்டும் அதிகாரம் தருகிறது என்ற கண்ணோட்டத்தில் பல்கலைக் கழகக் கட்டுப்பாடுகளை தனது முழு உரிமையாக்கி சட்டம் இயற்றியிருக்கிறது. இந்த நிலையில் மருத்துவ ஆணையத்தின் கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட்ட பல்கலைக் கழகங்களில் விளிம்பு நிலை ஏழை மாணவர்களுக்கு - குடிசையிலிருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறதா என்பதை ஆராய்வதற்கு ஒரு மக்கள் நல அரசு கடமைப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையிலேயே தமிழக அரசு இந்தக் குழுவை நியமித்துள்ளது. இதன் வழியாக ஒரு மக்கள் நல அரசு தனக்கான கடமையை நிறைவேற்ற முன் வந்திருக்கிறது. நீதி அனைவருக்கும் கிடைக்கிறதா என்ற கொள்கைப் பார்வையில் ஒரு அரசு எடுக்கும் கொள்கை ரீதியிலான இந்தச் செயல்பாடு எப்படி சட்ட விரோதமாகும்?

ஏழைகளிலும் ஏழைகளாக இருப்போருக்கு சமூகநீதி சென்றடைய வேண்டும் என்பது தான் அரசியல் சட்டத்தின் வழியாக வழங்கப்பட்டுள்ள ‘இறையாண்மை’க்கான அர்த்தம். வெவ்வேறு கல்வி நிறுவனங்கள் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப் பெண்களைப் பெறுவதற்கு மாணவர் களை தயார் செய்ய வெவ்வேறு கற்பிக்கும் முறைகளைப் பின்பற்றுகின்றன என்ப தாலேயே தேர்வுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதை நியாயப்படுத்த முடியாது.

3.1.1977இல் கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டபோது அப்போது நாடாளு மன்றம் அதற்காகக் சட்டம் ஏதும் இயற்ற வில்லை. தமிழ்நாடு சட்டமன்றம் நீட்டி லிருந்து விதிவிலக்கு கேட்டு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு தான், ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தில் (புதிய) சட்டத்தைக் கொண்டு வந்திருக் கிறது. இந்தச் சட்டம்கூட செல்லத் தக்கதா என்பது குறித்து உரிய நேரத்தில் வழக்குகளை எதிர் நோக்கலாம்.

தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாகவே சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏதோ இந்தக் குழு அமைப்பு முதல்முறையாக உச்சநீதிமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ எதிர்ப்பு தெரிவிக்க அமைக்கப்பட்டதாகக் கருதிவிட முடியாது. ஏற்கனவே தமிழக அரசு எடுத்த முயற்சிகள் வெற்றி பெற முடியாமல், அதன் பலனை பாதிக்கப்பட்டோருக்குக் கிடைக்காமல் ஒன்றிய அரசால் தடுக்கப் பட்டு விட்டன. இதன் காரணமாகவே தமிழக அரசு அடுத்த நடவடிக்கைகளை மேற் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளது. அதுவே இந்தக் குழுவை உருவாக் கியதன் நோக்கம். உச்சநீதி மன்றத்தையோ, சட்டத்தையோ எதிர்ப்பதற்கு அல்ல.

அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமை களுக்கு உட்பட்டே தமிழக அரசு இந்த விசாரணைக் குழுவை நியமித்திருக்கிறது.

- என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pin It