வரலாறு என்பது நினைவுகளின் வழியே கடந்த காலத்தின் பதிவாக வெளியெங்கும் மிதக்கிறது. இன்மையின் அபத்தத்தை அறிந்த மனிதர்கள், எப்படி யாவது தங்களுடைய இருப்பினை அடுத்த தலைமுறைக்கு அறிவித்திட மொழி யினாலான இலக்கியத்தையே பெரிதும் நம்புகின்றனர். ஒரு காலகட்டத்தின் குரலாகப் படைப்புகளை அணுகுகின்ற பார்வை, நுட்பமான வாசிப்பினுக்கு இட்டுச் செல்கிறது. படைப்பாளரின் கற்பனை வீச்சிற்கு அப்பால், வாசிப்பின் மூலம் கண்டறிகின்ற பிரதியின் அரசியல் முக்கியமானது. மொழியின் வழியே யோசிக்கின்ற மக்கள், வரி வடிவில் பதிவாக்கிட விழைந்தவை, அடையாள அரசியலுக்கு வித்திட்டுள்ளன. இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழியினால் அடையாளப்படுத்தப் பட்ட நிலவெளியில் வாழ்ந்திட்ட மக்கள் பற்றிய பேச்சுகள், இன்றளவும் தொடர் வதற்குக் காரணம் சங்க இலக்கியப் படைப்புகள்தான்.

kv jayasreeமுன்னொரு காலத்தில் தமிழைப் பேசியவர்களின் மன உணர்வுகள், வாழ்க்கைமுறை என்னவாக இருந்திருக்கும் என்பதற்கு ஒரே சாட்சியாக சங்கப் படைப்புகள் உள்ளன. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், வைதிக, சைவ, வைணவ மதங்களின் ஆதிக்கம் காரணமாகச் சங்க இலக்கியம் புறக் கணிக்கப்பட்டிருந்தது. இன்று உலக மெங்கும் பரவியுள்ள தமிழர்களின் அடையாளமாகச் சங்க இலக்கியம் கருதப்படுகிறது. தமிழ் மொழி, செவ்விய லானது என்று அறிவிக்கப்பட்டவுடன் சங்க இலக்கியம் குறித்து ஆய்வுகளும் பேச்சுகளும் பெருகியுள்ளன. எனினும் சங்க இலக்கியப் படைப்புகள் சித்தரிக்கும் காட்சிகள், சம்பவங்களை முன்வைத்துப் படைப்பு ரீதியில் தமிழில் எதுவும் வெளியாகவில்லை. இத்தகு சூழலில், மனோஜ் குரூர் மலையாளத்தில் சங்கப் படைப்புகள் பின்புலத்தில் பண்டைத் தமிழர்களின் வாழ்க்கையை எழுதியுள்ள நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவல் தனித்து விளங்குகிறது. அந்த நாவலைத் தேடிக் கண்டறிந்திட்ட மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ, காலத்தின் தேவையாகத் தமிழாக்கியுள்ளார்.

குறுந்தொகை உள்ளிட்ட எட்டுத்தொகை நூல்களும், திருமுருகாற்றுப்படை முதலான பத்துப் பாட்டுகளும் அடங்கிய சங்க இலக்கியப் படைப்புகளின் சாரத்தைக் கண்டறிவது சிரமமானது. இனக்குழுத் தலைவர்களும், குறுநில மன்னர்களும், வேந்தர்களும் அரசாண்ட நிலப்பரப்பினைத் தமிழர்களின் நினைவிற்குள் தகவமைக்கப்படும் நுட்பமான பணியைச் சங்கப்பாடல்கள் செய்துள்ளன. ஆண், புறத்தில் நிலப்பரப்பினைத் துய்ப் பதற்குப் புறப்பாடல்களும், அகத்தில் பெண்ணுடலைத் துய்ப்பதற்கு அகப்பாடல்களும் தளம் அமைத்திட்டன. பாணர்கள், தமிழ் நிலவெளியில் அங்குமிங்கும் பயணித்ததைப் பதிவாக்கியுள்ள ஆற்றுப்படை நூல்கள் சித்திரிக்கிற நிலக் காட்சிகள், பேரரசு உருவாவதற்கான பின்புலம். வாய்மொழிப் பாடல் மரபு நிலவிய கால கட்டம், வீரயுகம் எனச் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. வேற்று நாட்டிலிருந்து மாடுகளைக் களவாண்டு வருதல், ஆநிரை கவர்தல் என்று வெட்சிப் போருக்குரியதாகக் கௌரவத்துடன் கருதப்பட்டது. ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் ஏற்றத்தாழ்வான சூழலில் பல்வேறு போக்கு களுக்கு இடமளிக்கும் சங்க இலக்கியப் பாடல்களை வாசித்துவிட்டு, நாவல் எழுதுவது என்பது ஒருவகையில் சவால்.

மலையாளத்தைத் தாய்மொழியாகக்கொண்டு, கேரளாவில் வாழ்கிற மனோஜ் குரூர், சங்க இலக்கியப் பிரதிகளின் வழியே சங்க காலத்திற்குள் பயணித்து, சுவாரசியமாகப் புனைகதையைச் சொல்லியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உலகமெங்கும் எட்டு கோடித் தமிழர்கள் வாழ்ந்தாலும், தமிழர்களின் அடையாளமாக விளங்குகிற சங்க இலக்கியத்தை நவீன வடிவில் வெளியிட முயலாத நிலையில், மலையாளியான மனோஜ் முன்வந்திருப்பது பாராட்டிற்குரியது. சேர நாட்டினராக மனோஜ் தன்னிலை அறிந்திட்ட நிலையில், தமிழ்ப் பண்பாட்டு அம்சங்களுடன் கடந்த காலத்தில் மிதப்பதுதான், நாவல் உருவானதற்கான அடித்தளமா? யோசிக்க வேண்டியுள்ளது.

மலையாள மொழியில் நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற தலைப்பில் வெளியான நாவல், அதே பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. மொழிமாற்றத்தில் நாவலின் கதைப்போக்கு, காவியத்தன்மையுடன், பழந்தமிழ் இலக்கியப் பிரதிபோல விரிந்துள்ளது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முற்பட்ட கதைக்கேற்ற செறிவான மொழியைக் கையாண்டிருப்பதனால், நாவல் செவ்வியலாக உள்ளது. ஓரளவு சங்க இலக்கியம் அறிந்தவர் எனில், நாவலுக்குள் எளிதாகப் பயணிக்கலாம். சராசரி வாசகர் கொஞ்சம் கவனத்துடன் வாசித்தால், புனைகதை தரும் இன்பத்தை நுகரலாம்: இப்படியெல்லாம் முன்னோர் வாழ்ந்தனரா என அறியலாம்.

நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலின் மையம், சங்கப் பாணர் மரபாகும். பெரும் பாணனின் தலைமையில் செயல்படுகிற பாணர்கள், இசைக் கருவிகளை மீட்டுவதுடன், நாட்டியமாடுவதிலும் வல்லவர்கள். எளிமையான இனக்குழுத் தலைவர்களின் ஆளுகைக்குட் பட்டிருந்த நிலப்பரப்பு சிதலமடைந்து, வேந்தர்களின் ஆதிக்க அரசியல் ஏற்பட்டபோது, ஏற்கெனவே செல் வாக்குடன் விளங்கிய கலைஞர்களான கூத்தர், விறலியர், பாணர் போன்றோர் ஆதரிப்பவர் யாரும் இன்றி, வறுமையில் வாடினர். பாணர்களின் பசியைப் போக்குகிற குறுநில மன்னனைத் தேடிச் செல்லுவது பற்றிய குறிப்புகள், சங்கப் பாடல்களில் நிரம்ப இடம் பெற்றுள்ளன. இத்தகைய பாணர்கள் பாடல்கள் புனைவதில் கைதேர்ந்தவர் ஆதலின், குறுநில மன்னன் அல்லது இனக்குழுத் தலைவனின் வீரம், கொடைச் சிறப்பைப் புகழ்ந்து பாடியுள்ளனர். சங்கப் புறப் பாடல்கள் முக்கியத்துவம் தந்துள்ள பாணர் மரபில் இருந்து நாவலாசிரியர் மனோஜ் நாவலைத் தொடங்கியிருப்பது பொருத்தமானதாகும். பாணரான கொலும்பன், அவருடைய மகள் சித்திரை, மகன் மயிலன் ஆகிய மூவரும் கதை சொல்கிற முறையில் நாவல் அமைந்துள்ளது.

பாணர் கூட்டத்தினர் பெரும் பாணன் தலை மையில் இடம் பெயர்வதில் இருந்து நாவல் விரிகிறது. வறுமையைப் போக்கிட ஏதாவது ஒரு மன்னனைக் காண்பது என்ற நோக்கமுடன் கிளம்புகின்றனர். அவர்கள் செல்லும் வழியானது அடர்ந்த காட்டுப் பகுதி. பசியால் வாடியவர்களைக் காட்டில் குடியிருக்கும் எயினர்கள் புல்லரிசிச் சோறும், சமைத்த இறைச்சியும், அரிசியில் இருந்து வடித்த மதுவும் தந்து உபசரிக் கின்றனர். அப்புறம் இரவினில் பாட்டும் கூத்தும். வேட்டையாடி வாழ்கின்றவர்களின் பொருளியல் நிலை வளமற்றது எனினும், தங்களை நாடி வந்தவர்களுக்கு உணவும் மதுவும் வழங்குவது அவர்களின் பண்பாட்டுச் சிறப்பாகும்.

இளம் பருவத்திலே தான் சார்ந்துள்ள குழுவினரை விட்டுப் பிரிந்து போய்விட்ட கொலும்பனின் மகனான மயிலனைத் தேடிச் செல்வதும் பயணத்தின் இன்னொரு நோக்கமாகும். கொலும்பன், மரபு வழிப்பட்ட நிலையில் பாணர் குறித்த பெருமிதத்துடன் வாழ்கிறான். மகனான மயிலன் வறுமை தோய்ந்த பாணர் வாழ்க்கைமுறையை வெறுத்து, வீட்டை விட்டுக் கிளம்புகிறான். அவனது விருப்பம் அரண்மனையில் மன்னனுக்கு நெருக்கமாக இருத்தல் அல்லது ஆறலைக் கள்வராக வாழ்தல். வறண்ட பாலை நிலத்தில் வழிப்பறி செய்து வாழ்க்கை நடத்துகிற மறவர்களுடன் சேர்ந்த மயிலன் கொள்ளை யனாக மாறுகிறான். பெரும் புலவரான பரணரைக் கொள்ளையடிக்க முயலும்போது, அவரால் காப்பாற்றப் பட்டு அரண்மனைப் பணியாளராகும் மயிலன், பின்னர் ஒற்றனாகவும் மாறுகிறான்; வேள் பாரியைக் கொல் கிறான். சங்க இலக்கியம் பதிவாக்கியுள்ள சம்பவங்களைச் சுவாரசியமாக வாசிப்பதற்கேற்றவாறு மாற்றுவதற்கு, மயிலன் பாத்திரம் பயன்பட்டுள்ளது. புனைவுகளும் விநோதங்களும் நிரம்பிய வரலாற்றில் மர்மங்களும் அளவற்றுக் கொப்பளிக்கின்றன. அதிகாரத்தினுக்கான அரசியல் சதிகளின் பகடைக்காய்களில் ஒருவனான மயிலன் பற்றிய மனோஜின் விவரிப்பு, திகில் நிரம்பி யதாக உள்ளது. சங்க இலக்கியம் என்றால் வீரம் என்று புனைவினைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், நாவலின் பிற்பகுதி அமைந்துள்ளது.

உலகமெங்கும் பழமையான படைப்புகளைக் கொண்டிருக்கும் கிரேக்கம், சம்ஸ்கிருதம் போன்ற செவ்வியல் மொழிகளுக்கும் தமிழுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. அவை புராணம், அதியற்புதக் கடவுளர்கள் கதைகளுக்கு முக்கியத்துவம் தந்துள்ளன. தமிழைப் பொறுத்தவரையில், சங்கப் படைப்புகளில் விண்ணில் இருக்கும் சொர்க்கத்தை முன்வைத்துக் கட்டமைக்கப்பட்டுள்ள கதைகளுக்கோ, தொன்மங் களுக்கோ பெரிய அளவில் இடம் எதுவுமில்லை.

அகம்-புறம் என்ற எதிரிணையில் மனிதனை மையப் படுத்திய போக்குதான் முன்னிலை வகிக்கிறது. சங்க இலக்கியத்தில் மூன்று தொன்மக் கதைகள்தான் மீண்டும் மீண்டும் இடம் பெற்றுள்ளன. அவை: ஆட்டனத்தி-ஆதிமந்தி கதை, காவல் மரத்தில் இருந்து வீழ்ந்த மாங்காயைத் தின்றதற்காக அந்தப் பெண்ணைக் கொலை செய்த மன்னனான நன்னன், ஒற்றை முலைச்சியான கண்ணகி கதை. மூன்று தமிழ்த் தொன்மக் கதைகளையும் நாவலாசிரியர் மனோஜ், கதைப்போக்கினுக்கேற்ப விவரித்துள்ளார். காவிரி வெள்ளத்தினால் இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டனத்தியின் கதையைப் புலவர் பரணர், பாணர் கூட்டத்தினரிடம் சொல்கிறார். காவிரி ஆற்று நீரில் இருந்து மீண்டு வருகிற ஆட்டனத்தி பற்றிய புனைவு, முக்கியத்துவம் பெற்றமைக்கான காரணம் புலப்படவில்லை.

பாழிப் போரில் ஆய் எயினனைக் கொன்று வெற்றி வாகை சூடிய ஏழி மலையின் மன்னரான நன்னனுடன் பரணர் இருக்கிறார். மன்னரின் காவல் மரமான மாமரத்தில் இருந்து விழுந்து ஆற்றில் மிதந்து வந்த மாங்காயை ஆற்றில் நீராடிய பெண், தற்செயலாகக் கண்டு, எடுத்து உண்டதற்காக நன்னன் அவளுக்குக் கொலைத் தண்டனை விதிக்கிறான். அவளுடைய உறவினர்களுடன் சேர்ந்து புலவர் பரணரும் தண்டனையை மாற்றச் சொல்லி மன்றாடுகின்றார். அப்பொழுது மயிலன் சொன்ன பசுவின் கன்றுவைக் கொன்ற மகனைத் தேர்ச் சக்கரத்தில் கொன்ற சோழ மன்னரின் பெருமை பற்றிய கதையானது, நன்னனை மூர்க்கமானவனாக்குகிறது. பெண்ணுக்கு வழங்கப்பட்ட கொலைத் தண்டனையை உடன் நிறைவேற்ற ஆணையிடுகிறான். இதனால் மனம் வெதும்பிய பரணர் நாட்டைவிட்டு வெளியேறினார். அதிகாரம் மிக்க மன்னன் செய்த அறமற்ற கொடூரமான செயல், நாவலில் உயிரோட்டமாகப் பதிவாகியுள்ளது. கொல்லப்பட்ட பெண்ணின் நினைவாக அடர்த்தியான காட்டில் கட்டப்பட்டுள்ள கோவிலின் கருவறைக்குள் இளம்பெண் கண் திறந்தபடி தூங்கும் கற்சிலை, அநீதியான செயலைத் தட்டிக் கேட்கும் என்பது அழுத்தமான நம்பிக்கையின் வெளிப்பாடு. கோவிலின் முற்றத்தில் நிற்கின்ற கற்சிலை மீது அரைத்த காய்ந்த மிளகாய் விழுது தேய்க்கப்படுவது ஒருவகையான வேண்டுதல். அதை நீதிக்கல் எனப் பரணர் குறிப்பிடு கிறார். அதிகாரத்தினுக்கு எதிரான மக்களின் குரல் எந்த வடிவிலும் வெளிப்படும் என்பது தொன்மக்கதையின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

மயிலனின் தங்கையான சீரை தன்னிலை மறந்து, தெய்வமேறிய பெண்ணாக வெளிப்படுகிறாள். பாணர் குடியினருடன் மீண்டும் சேர்ந்த பின்னரும் மயிலன், அலைபாயும் மனதுடன் தத்தளிக்கிறான். அரசியல் காரணமாக வேள் பாரியைக் கொலை செய்த மயிலன், ஒருவகையில் அவனது தந்தை கொல்லப்பட்டதற்கும் காரணமாகிறான். கலைப் பின்புலத்தினாலான பாணர் வாழ்க்கையை வெறுத்து, அரசியலில் ஈடுபட்ட மயிலன், நன்னன், பெண் கொலை செய்வதற்கு வழி வகுத்தவன் ஆவான். பெரும் புலவரான கபிலர் மீது கொலைப் பழியைச் சுமத்தி, அவர் வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவெடுக்கத் தூண்டுகிறான். எது அவனைக் கொடூரமானவனாக்கியது? நாவலாசிரியர் மனோஜ் படைப்பின் மூலம் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கிய மானவை.

சேர நாட்டில் கொடுங்கலூர் என்ற ஊரில் கூடல் நகரைச் சுட்டெரிக்க இடமுலையைத் திருகி எறிந்த கண்ணகிக்குக் கோவில் உள்ளது. அந்த ஊருக்குத் தற்செயலாகப் போன மயிலன், அங்கே சாமியாடிகள் சிலம்பின் ஓசையுடன், முடியவிழ ஆடுவதைப் பார்க்கிறான். வெண்ணிக்கூத்தும், பொருநரின் படைப்பாட்டும் இரைந்தன. திடீரென ஒரு சாமியாடி நெற்றியிலும் உடலிலும் குருதி வழிந்திட ஆடி வந்து, ஓங்கிய வாளினால் மயிலனின் நெற்றியிலும் மார்பிலும் தாக்கியது. அந்தச் சாமியாடி மயிலனின் தங்கையான சீரை என்று நாவலாசிரியர் குறிப்பிடுவது, தொன்மக் கதையை அமானுடமாக்குகிறது. இன்றளவும் கேரளாவில் நிலவுகிற கண்ணகித் தொன்மத்தை அநியாயத்திற்கு எதிரானதாகப் புனைவது, நடப்பியலுடன் தொடர் புடையதாகும்.

சங்க இலக்கியம் என்றால் புலவர்களும் புரவலர்களும் நிரம்பியது. நாவலில் அவ்வையார், கபிலர், பரணர் ஆகிய மூன்று புலவர்களும் அதியமான் அஞ்சி உள்ளிட்ட பல்வேறு குறுநில மன்னர்களும் பாத்திரங்களாக இடம் பெற்றுள்ளனர். புலவர் - குறுநில மன்னர் உறவு பற்றிய சம்பவங்கள் பழந்தமிழர் வாழ்க்கையை வாசிப்பின் வழியே அறிமுகப்படுத்து கின்றன. குறுநில மன்னர்களை அழித்திட முயலும் வேந்தர்களின் சதிகளும், திட்டங்களும் நிரம்பிய சங்கப் பாடல்களில் இருந்து, நாவலில் உருவாக்கப்பட்டுள்ள புனைவுகள், அழுத்தமானவை. அவ்வையாருக்கும் அதியமானுக்கும் இடையிலான உறவானது, புறநானூற்றுப் பாடல்கள் பின்புலத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தில் முதன்மையாகச் சிறப்பிக்கப் படும் திணைசார் வாழ்க்கை பற்றிய பதிவுகள், நாவலாசிரியரின் புலமைத்திறனுக்குச் சான்றுகளாக விளங்குகின்றன. பாணர்கள் செல்லும் வழி பற்றிய விவரிப்பில் முல்லை, மருதம், நெய்தல் நிலம் பற்றிய வருணனைகள் நுணுக்கமானவை. திணை சார்ந்த நிலம், அங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைமுறை, உணவு பற்றிய தகவல்கள், கதைப்போக்கில் பொருத்தமாக வெளிப்பட்டுள்ளன. வெளியில் இருந்து தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு வருகிறவர்களை விருந்தினராக உபசரிக்கிற இனக்குழுவினரின் பண்பு, நாவலில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு நிலத்துக்கும் அங்கு வாழ்கிற மக்களுக்குமான உறவைச் சங்கப் பாடல்கள் விவரிப்பது போலவே, நாவலும் சுட்டி யுள்ளது.

சங்கப் பாடல்கள் சித்தரிக்கிற காதல் பற்றிய புனைவுகள் தனித்துவமானவை. பொதுவாக அக இலக்கியப் படைப்புகள் காதலை மகிமைப்படுத்து கின்றன; ஆண்-பெண் உறவு குறித்த ஆளுகையை உருவாக்குகின்றன. வெளியில் இருந்து அதாவது வேறு இனக்குழுவில் வருகின்ற இளைஞனுடன் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட காதல் உணர்வை ஏற்பது என்பது, நில விரிவாக்கத்துடன் தொடர்புடையது. இரவு வேளையில் வருகின்ற காதலன், திருமணத்திற்கு முன்னர் பாலுறவு கொள்ளுதல், உடன்போக்கு என விரியும் காதலர் வாழ்க்கையை அன்றைய சமூகம் ஏற்றுக் கொண்டிருந்தது. நாவலில் சித்திரை தற்செயலாகக் கண்ட மகீரனுடன் காதல் வயப்படுகிறாள். காதலர் இருவருக்குமிடையில் நடைபெறும் சம்பவங்கள், சங்க இலக்கிய மரபில் விவரிக்கப்பட்டுள்ளன. மகீரனும் சித்திரையும் உடன்போக்குச் செல்லும் வழியில் கொள்ளையடிக்கும் மறவர்களின் குடியிருப்பினில் தங்கிச் செல்கின்றனர். அப்பொழுது மகீரன், “இன்று நம் முதலிரவு. மற்றதெல்லாம் பேச ஒரு வாழ்வு இருக்கிறதே” என்கிறான். காதல் வாழ்க்கையில் களவு, கற்பு என விரியும் சங்கப் பாடல்களில் முதலிரவு என்ற பேச்சினுக்கு இடமில்லை. களவு வாழ்க்கையில், திருமணத்திற்கு முன்னர் காதலருக்கிடையிலான உடலுறவு குறித்து அன்றைய சமூகம் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பது நாவலாசிரியர் மனோஜ் அறியாத தகவல். அது ஒருவகையில் கருத்துப் பிழை. மற்றபடி சங்கத்தமிழரின் காதல் வாழ்க்கை பற்றிய விவரிப்பு அற்புதமானது.

மருத நிலத்தில் பரத்தையர் பற்றிய நாவலாசிரியரின் கருத்தியல் மரபு வழிப்பட்டதாகும். இனக்குழு வாழ்க்கை ஒருபுறம் எனில், தாய்வழிச் சமூகத்தின் எச்சம் நிலவிய சங்க காலகட்டத்தில் பெண்ணின் தலைமை மறுக்கப் பட்டு, குடும்பம் என்ற அமைப்பினில் கணவன் அல்லது காதலனுக்காகக் காத்திருக்கும் பெண் பற்றிய பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. வேந்தரின் அரசியலதிகாரம் நிலவுவதற்கான அடிப்படை அலகாக விளங்கும் குடும்பத்தில் பெண்ணைத் தக்க வைப் பதற்கான தந்திரத்தைச் சங்கப் பாடல்கள் நுட்பமாக நிறைவேற்றியுள்ளன. இந்நிலையில் குடும்பத்தை ஏற்றுக் கொள்ளாமல், தன்னியல்பாக வாழ்கின்ற பெண்களின் சுதந்திர மனநிலையைக் கேள்விக்குள்ளாக்குவதுதான் பரத்தை பற்றிய புனைவுகள். பொருளுக்காகத் தன்னுடலை விற்ற பெண் பற்றிய குறிப்பு எதுவும் சங்கப் பாடல்களில் இடம் பெறாதது கவனத்திற்குரியது.

ஏறுதழுவுதல் என்பது காளையின் கொம்பினில் விழுந்து இளைஞன் உயிரைத் துறப்பது என நாவலாசிரியர் விவரிப்பது, ஏற்புடையதன்று. குடும்பத்தைவிடத் தான் சார்ந்துள்ள குடியினரின் நலனை முன்னிறுத்துகிற புறப்பாடல்கள் கட்டமைக்கிற வீரம், அன்றைய சமூகத்தின் தேவை. ஆநிரை மேய்த்து வாழ்கின்ற சமூகத்தில், எப்பொழுதும் மாடுகள் கள்வரால் கவர்ந்து செல்லப்படும் சூழலில், ஆணின் வீரம் வலியுறுத்தப்பட்டது. எனவேதான் தனிமனித வீரத்தை மதிப்பிடக் காளையை அடக்குவது தோன்றியது. ஆயர்களின் முல்லை வாழ்க்கையில் ஏறு தழுவுதல் வீரம் சார்ந்த கொண்டாட்டம். நாவலில் விவரிக்கப் பட்டுள்ளது போன்று காளையினால் குத்துப்பட்டு இறந்த இளைஞர்களின் துயர முடிவு, காதலிக்கும் உறவினர்களுக்கு வருத்தம் அளிக்காதா?

உலகமயமாக்கல் சூழலில் எல்லாம் சந்தைக் கானதாக மாற்றப்பெற்று, நுகர்பொருள் பண்பாடு மேலோங்கிய நிலையில் அடையாளங்களை அழிக்கும் நுண்ணரசியல் வலுப்பெற்றுள்ளது. இந்நிலைக்குத் தமிழும் விதிவிலக்கு அல்ல. தமிழ் மொழியினால் கட்டமைக்கப்பட்டுள்ள தமிழர் மரபு, தாக்குப் பிடிக்க வேண்டுமென்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சங்க இலக்கியம் தொடங்கி எல்லாவற்றையும் மறு வாசிப்பினுக்குள்ளாக்கும்போது மீட்டுருவாக்கம் நடைபெறும். சங்க இலக்கியப் பின்புலத்தில் சொல்லப் பட்டுள்ள ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் இரண்டாயிரமாண்டுத் தமிழ்ப் பாரம்பரியம், வரலாற்றின் தொடர்ச்சியைச் சாத்தியப்படுத்தியுள்ளது.

தமிழின் வேர்களைத் தேடுகிறவர்களின் பயணத்தைத் துரிதப்படுத்துகின்ற நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலை எழுதிய மனோஜ் குரூரின் புனைவு, தமிழில் என்றும் முக்கியமானதாக விளங்கும். பச்சை மலையாளம் என்று குறிக்கப்படும் மொழியில் இருந்து சொற்களைத் தேர்ந்தெடுத்து நாவலாசிரியர் பயன்படுத்தியுள்ளது, மொழியாக்கத்தில் நெருக்கத்தைத் தருகிறது. நாவலை மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் போது, இரு வேறு மொழிகளுக்கிடையிலான உறவைப் புரிந்துகொண்டு செயல்பட்டுள்ள மொழிபெயர்ப்பாளர் கே.வி ஜெயஸ்ரீயின் படைப்புத்திறன் குறிப்பிடத்தக்கது. நவீன இலக்கிய உலகில் தீவிரத்துடன் இயங்குகிற வாசகர்களும் படைப்பாளர்களும் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலை அவசியம் வாசிக்க வேண்டும்.

நிலம் பூத்து மலர்ந்த நாள்

மலையாள மூலம்: மனோஜ் குரூர்

தமிழில்: கே.வி ஜெயஸ்ரீ

வெளியீடு: வம்சி புக்ஸ்

திருவண்ணாமலை

விலை:ரூ.250/-

Pin It