ஆட்டுக்கிடையை கிராமத்தைவிட்டு வெளியேறிய இக்கால நகர வாசிகள் காண வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவர்களையெல்லாம் கைபிடித்து அழைத்துச் சென்று நேரில் காணச் செய்து ஒவ்வொன்றாய் விளக்கி புரிய வைத்துள்ளார் ஆசிரியர் கி.ரா. அக்காலங்களில் கிராமங்களில் வீட்டிற்கு கதவுகள் இருப்பதுவே பெரிது, அதிலும் பெரும்பாலும் ஒத்தக்கதவு தான் இருக்கும்.

ki rajanarayanan bookரெட்டைக் கதவுள்ள வெங்கட ராமானுஜர் வீடெங்கேயெனக் கேட்டாலே போதும் அவர் வீட்டிற்கே அழைத்துச் சென்று விடுவர். கதவுகள் மூடாமல் திறந்தேயிருக்கும். திண்ணையில் மடக்குக் கட்டிலில் தான் இவரின் இருப்பு என்பதில் கதையின் தொடக்கம்.

ஆட்டுக் கிடைக்கு கீதாரியாக இருந்தவர். எண்பது வயதானதால், மடித்துப்போட்ட கம்பளி இடது தோளிலும், வலதுகையில் துறட்டிக் கம்புடனும் காட்சியளிக்கும் ராமசுப்பாதான் இப்போதைய கீதாரி.

ஆடுகளின் புழுக்கைகள் நிலத்தினில் பரவச் செய்து உரமாக மாற்றி நிலத்தினை பண்படுத்துதல் தான் கிடை என்பதாகும். அது ஒரு தனியான ராஜ்யமாகும். ராஜ்யத்தின் தலைவர் தான் கீதாரி. ஆட்டுக்குட்டிகளின் கூடுகளை வரிசைப்படுத்தி வைக்கும் முறைக்கு வட்டம் என்று பெயர். மேய்ப்பவர்கள் கிடையிலிருந்து மேய்ச்சலுக்காக காலையில் தனது ஆடுகளை ஒதுக்கி நிறுத்துவர். அம்முறைக்குப் பெயர் பாங்கு. ஒரு மொய் என்றால் 21 ஆடுகள் வைத்திருப்பதைக் குறிக்கும்.

மேய்ச்சலுக்கு ஆடுகள் செல்லும்போது யாருடைய தோட்டத்திலாவது விளைந்துள்ளவைகளை தின்று தீர்த்து விட்டால் அவ்விடத்திற்காரர்கள் நியாயம் கிடைக்க வேண்டி ஊர்க்கூட்டம் கூட்டுவதற்கு கிடை_மறிச்சல் என்பர். ஊர்க்கூட்டம் முடிந்து தீர்வு கிடைத்தபின் தான் மீண்டும் ஆடுகள் மேய்ச்சலுக்குப் போகும் அதுவரை ஆடுகள் கதி பரிதாபம்.

மேய்ச்சலின்போது வெங்கட ராமானுஜரின் மகள் வழிப் பேரன் எல்லப்பனும், வேற்று சமூகத்தைச் சேர்ந்த சிவன் மகள் பெரியமனுசியாகாத செவனியும் சேர்ந்துதான் போவார்கள். அவளுடைய கீழ் உதட்டுக்கும் நாடிக்கும் ஊடே பாசிப் பருப்பளவு சிறிய பாலுண்ணி இருக்குமென ரசித்து எழுதியிருப்பார் ஆசிரியர், நம் கண்முன்னே வந்து செல்லும் பாலுண்ணி.

தண்ணித்தாகம் போக்க தண்ணிக்காய்களை இருவரும் சாப்பிடும்போதே முள்வாங்கியை எல்லப்பன் தனது காலிலுள்ள முள்ளை எடுக்க முயற்சிப்பான், அவளோ தன் தொடையில் அவன் காலை படரச் செய்து முள்ளை எடுக்கும்போது கூச்சமூட்டி பின் இருவரும் வளையல் நொறுங்குமளவிற்கு பிண்ணிப் பிணைந்தபோது சாதிவலை அறுக்கப்படும் வேளையில் ராக்கம்மாள் பருத்திக் காட்டிற்குள் இவர்களைப்போல் ஆடுகளும் மேய்ந்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டன.

அதற்கான கிடை மறிச்சலில் ஊர்க்கூட்டத்தின் செயல்பாடுகள், சாதியினால் எல்லப்பனும் செவனியும் என்ன ஆனார்கள், ஊரிலுள்ள திருட்டெல்லாம் பொன்னுச்சாமியால் நடைபெறுவதால் இப்பஞ்சாயத்தில் அவரின் நுழைவு எத்தீர்ப்பை அளிக்கும் என்பதையெல்லாம் நாவலை வாசித்து தெரிந்து கொள்க.

இதில் இடைக்காடர் சித்தரையும் காட்டி எப்பஞ்சத்திலும் ஆடுகளுக்கு தீனி கிடைக்கும் விதமாக ஆவாரந்தளைகள் உதவுமென்றும், வரகரிசியையும் மண்ணையும் குழைச்சி கோட்டை கட்டி ஆடுகளோடு அவரும் குடியிருந்து ஆவாரந்தை தின்று ஆடுகள் தினவெடுத்து உடம்பெ சுவரில் உரசும்போது வரகு தரையிலே உதிரும், அதை தூத்தெடுத்து பஞ்சகாலத்தில் ஆட்டுப்பாலோடு வரகரிசியைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு 12வருசத்தை கழிச்சதாக அக்கோட்டைச் சுவரில் நம்மையும் உட்கார வைத்து வரகரிசிக் கஞ்சியை சாப்பிட வைத்திருப்பார் கி.ரா.

நூல்: குறுநாவல்கள் (கிடை/ கரிசல் காட்டில் ஒரு சம்சாரி)

ஆசிரியர்: கி.ராஜநாராயணன்

பதிப்பகம்
மனை எண்.1, நிர்மலா நகர்
தஞ்சாவூர் - 613 007.

விலை: ரூ.60

- செல்வக்குமார், இராஜபாளையம்

Pin It