26/03/2017 அன்று திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் கி.நடராஜன் அவர்களின் ‘இந்தியர்களின் ஆங்கிலச் சிறுகதைகள்’, ‘வள்ளுவரும் ஷேக்ஸ்பியரும்’, ‘காலத்தை வென்ற காதற் கவிதைகள்’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.  நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமை யேற்ற இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சிறப்புரையாற்றினார்.

ஆர். நல்லகண்ணு உரை:

கி.நடராஜன் அவர்கள் இதுவரை 23 நூல்கள் வெளியிட்டிருக்கிறார். அவரது நூல்கள் தமிழ் நாட்டு கல்லூரிகளில் பாட நூல்களாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளன.  இப்போது மூன்று நூல்கள் வெளி யிட்டுள்ளார்.  அவருக்கு வயது 70.

இங்கே பேசிய பேராசிரியர்கள் காதல் கவிதை களைப் பற்றிச் சொன்னார்கள்.  காதலுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. காதலிக்கக் கூடியவர்கள் ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கும்போது காதலை விட பெரிய அன்பு வேறு இல்லை என்பதை நினைவு படுத்தக்கூடிய வகையில் காலத்தை வென்ற காதல் கவிதைகள் நூலை வெளியிட்டுள்ளார்.

இவ்விழாவுக்கு யார்யாரெல்லாம் வருகிறார்கள் என்று அவரிடம் கேட்டேன்.  என்னிடம் படித்த மாணவர் ஒருவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தேன்.  அவர் மாநிலங்களவையில் சிறந்த உறுப்பினராக விளங்குகிறார்.  ரொம்பப் பெருமை யாக இருக்கிறது என்று இவரிடம் படித்த மாணவர் சிறப்பானவராக திகழ்வதைப் பற்றிப் பெருமையாகப் பேசினார் நடராஜன் அவர்கள். 

அவரும் என்.சி.பி.எச்சும் இணைந்து இவ் விழாவை நடத்துகிறோம். நாங்களே இவ்விழாவை நடத்துகிறோம் என்று சொன்னபோது பேரா சிரியர் எனக்கு சில கடமை இருக்கிறது. அதனால் அவரே இவ்விழாவை நடத்துவதாகச் சொல்லி விட்டார். 1995லிருந்து அவரது அனைத்து நூல் களையும் என்.சி.பி.எச். மூலமாகத்தான் வெளியிட்டு இருக்கிறார்.  22 வருடங்களாக என்.சி.பி.எச். பதிப்பித்திருக்கிறது. அவை பாடநூல்களாக இருக்கின்றன, அந்தப் பெருமைக்காக நான்தான் விழாவை நடத்துவேன் என்று பிடிவாதமாக அவர் பொறுப்பில் இங்கே நடத்துகிறார்.

வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். விடுதலைப்போராட்டத்திலும் அதற்குப் பின்னாலும் சமுதாய மாற்றத்திற்கான கருத்துகளை பகுத்தறிவு இயக்கங்கள், சுயமரியாதை இயக்கங்கள், சமத்துவ இயக்கங்கள், இவையெல்லாம் வெளியே கொண்டு வர வேண்டும் என்றஅடிப்படையில் பாரதி பாரதி தாசன் நூல்களை வெளியிட்டோம். இந்த நூல் களை ஊர்திகளில் வைத்து திருவிழாக் காலங்களில் ஊர்ஊராக எடுத்துச்செல்லவேண்டும் என்ற வகையில் இரண்டு விற்பனை பேருந்துகளை உருவாக்கி னோம். கடந்த 51ம் வருடத்திலிருந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் தொடர்ந்து நூல்களை வெளியிட்டு வருகிறோம்.

பாரதி பாரதிதாசன் மட்டுமல்ல சங்க இலக்கியங்களைத் தொகுத்து வழங்கினோம். மேலும் சிங்கார வேலர் சிந்தனைக்களஞ்சியம் தொகுப்பாக வெளியிட்டோம். அதேபோல ஜீவானந்தம் நூல்களை ஐந்து தொகுப்பாக வெளியிட்டோம்.

இந்திய வரலாற்றைப் பற்றி பேராசிரியர் பகுத்தறிவு சிந்தனையாளர் ரொமிலா தாப்பர் அவர்கள் இந்தியாவை எப்படிப் பார்க்கவேண்டும் என்றும் இன்றைய இந்தியா முற்கால இந்தியா என்பவற்றை வரலாற்றுப்பிழை இல்லாமல் திரிக்கப் படாத உண்மையான விவரங்களை எல்லாம் இந்த ஆண்டு ஒரு தொகுப்பு நூலாக வெளியிட்டுள் ளோம். அதேபோல ராகுல சாங்கிருத்யாயன் நூல்கள், இப்படிப் பலநூல்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பாரம்பரியம், தந்தை பெரியாருக்கு ஒரு பெரிய பாரம்பரியம் இருக்கிறது. பகுத்தறிவு இயக்கங்களுக்கு முன்னாலேயே 1910ம் வருடத்தி லேயே இந்திய லௌகீக சங்கம் என்று பகுத்தறிவு இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் வாயிலாக வாழ்க்கையை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற நூல்களெல்லாம் இந்தியாவில் வடமாநிலங்களைவிட தமிழகத்தில் வெளியிடப் பட்டிருக்கிறது.  கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் அரசு அவர்கள் தொகுத்து நூலை வெளியிட்டிருக் கிறோம்.  அது தமிழகத்தின் வரலாறு, பெரியா ரோடு சேர்த்து பெரியாருக்கு முந்தின காலத்தி லிருந்து இன்று வரை மூடப்பழக்கங்களை யெல்லாம் எதிர்த்து முற்போக்கு சிந்தனையுடன் ஜாதி மத வேற்றுமை இருக்கக்கூடாது, மனிதன் மனிதனாக வாழ வேண்டும். பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் திருக் குறளையும் வரலாறாக தத்துவமாக உள்ள மற்ற நூல்களையெல்லாம் தொகுத்து வெளியிட்டுள்ளோம்.

அம்பேத்கர் நூல்கள் 38 பகுதிகளாக தமிழ்ப் படுத்தியுள்ளோம்.  இப்போது பெரியார் எழுதிய நூல்களை வெளியிடவுள்ளோம். அதுவும் பெரியார் எழுதிய எழுத்துகளை இலக்கியம், மொழி, பகுத்தறிவு, ஜாதி என்பது எப்படி, வருணாச்சிரமம் என்பது என்ன என முக்கியமான கட்டுரைகளை தொகுத்து அளித்து வெளியிட உள்ளோம்.

திருச்சி சிவா எம்.பி. உரை:

எங்களுக்குப் பாடம் சொல்லித் தந்த பேரா சிரியரின் நூலை வெளியிடுகிறோம் எனும் போது எங்கள் உருவாக்கம் சோடை போகவில்லை என்பதன் அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்.

ஒரு ஆசிரியர் எத்தனையோ மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தந்தாலும், எதிர்காலத்தில் உயர்ந்த நிலையிலிருக்கிற ஒரு மாணவரைப் பார்த்து என்னுடைய தயாரிப்பு என்று சொல்கிற பெருமிதம் ஆசிரியர்களைத் தவிர வேறு யாருக்கு மில்லை.

நடராஜன் எங்கள் மதிப்புக்குரியவர்.  அன்பிற்கும் பெருமைக்கும் உரியவர்.  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.  இந்தப் புத்தகங்களை வெளியிட்டதற்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஒரு மிகச் சிறந்த பணியினை நீங்கள் மேற்கொண்டு வருவதற்காக ஒரு காலத்தில் கல்லூரியில் படித்த நாட்களில் விரும்பிய நூல்கள் கிடைப்பது அரிது, அதனால் தான் சொல்கிறேன்.

பெரியார் கல்லூரியில் இவர் பேராசிரியராக பணிபுரிந்தபோது நாங்கள் மாணவர்களாக இருந் தோம்.  அற்புதமான மழையாக கொட்டும் அவரது ஆங்கிலம். கருத்துச் செறிவோடு பாடம் நடத்து வார். நட்புணர்வோடு நடந்து கொள்வார்.  அதனால் இவரது வகுப்பு எப்போது வரும் என்று காத்திருப் போம்.

நாங்கள் படித்த பின்னர்தான் இந்தியர்கள் எழுதிய ஆங்கில சிறுகதை பாடமாக வந்தது.  நாங்கள் படித்ததெல்லாம் 17, 18, 19, 20 ஆம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியங்கள். அவரது பாட வகுப்பு முடிந்தால் சினிமா தியேட்டரை விட்டு வெளியே வருவதுபோல ஒரு உணர்வு வரும்.  பாடம் நடத்தி வகுப்பை விட்டு வெளியே வரும் போது அவரும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்.  டீக்கடைக்கு வருவார்.  சினிமாவுக்கு சேர்ந்து போவோம்.  காலம் மாறியது.  பாதைகள் மாறின.  ஆனாலும் நெஞ்சத்தில் நினைவுகள் தங்கிவிட்டன.  இதையெல்லாம் நினைவுகூர்வதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

இந்தப் புத்தகத்தில் முல்க்ராஜ் ஆனந்த், பிரேம் சந்த் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் இருக்கின்றன.  இதையெல்லாம் நீங்கள் படிக்க வேண்டும்.  கதைகளைப் படித்து முடிக்கிற போது சுரீர் என்று முடிவில் ஒரு சீர்திருத்தக் கருத்து வெளிப்படும். 

நான் ஒருமுறை லண்டன் சென்ற போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் இணைந்திருந்தேன்.  அப் போது ஷேக்ஸ்பியர் பிறந்த ஊருக்குச் சென்றேன்.  அந்த மண்ணில் சிலிர்ப்பை உணர்ந்தேன்.  அவர் வாழ்ந்த வீடு, நாடக அரங்கு அவற்றைச் செப்பனிட்டு பராமரிக்கிறார்கள்.  அதைப் பார்த்து பரவசப் பட்டேன்.  அந்த உணர்வை இந்த நூல்களில் பேராசிரியர் தந்துள்ளார்.  இந்த நூல்களை

நீங்கள் வாங்க வேண்டும், வாங்கிச் சென்று அலமாரியில் வைக்காமல் படிக்க வேண்டும்.  படிக்கப் படிக்கத்தான் அறிவு பெருகும்.  என்ன தான் இணையதளம், கணிப்பொறி இருந்தாலும் ஏராளமான நூல்கள் கொட்டிக் கிடந்தாலும் இந்த நூலை எடுத்து ஒரு பக்கத்தைப் படித்து விட்டு மடித்து வைக்கிற சுகம், ஒரு ஓரத்தில் கோடு போடுகிற போது கிடைக்கிற பரவசம் வேறு எங்குமே கிடைக்காது.

இந்த இனிமையான இலக்கியக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்தியதற்கு நன்றி.  இனிவரும் நாட்களில் நடக்கிற கூட்டங்களுக்கு இந்தச் சாலையை மறைக்கும் அளவிற்குக் கூட்டம் வர வேண்டும். அப்போதுதான் எழுத்தாளர்களுக்கு மரியாதை இருக்கிறது என்று அர்த்தம்.  படிக்கிற ஆர்வம் குறைவது, கூட்டம் கேட்கிற ஆர்வம் குறைவது, இதுவெல்லாம் நல்ல அறிகுறி அல்ல.  உங்கள் வீட்டு பிள்ளைகளுக்குப் புத்தகம் படிக்கப் பழக்குங்கள்.  சின்னச்சின்னப் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.  நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் நிறைய சிறிய சிறிய புத்தகங்கள் இருக்கின்றன.  நான் அவர்களுக்காகவே பேசுகிறேன்.  காரணம் ஒரு காலத்திலே என் அறிவுப் பசியை, படிப்பு தாகத்தைத் தீர்த்தது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்தான்.  சிங்காரத் தோப்பிலே மெட்ரோ ஹோட்டலும், ராயல் ஹோட்டலும் மட்டுமா இருந்தது.  நியூ செஞ்சுரி புக் ஹவுசும் இருந்தது.  அந்த அடிப்படையில் தான் சொல்கிறேன்.  பிள்ளைகளுக்குச் சின்னச் சின்னப் படக்கதைகளை வாங்கித் தாருங்கள்.  பீர்பால் கதை, மரியாதை ராமன் கதைகளிலிருந்து ஆரம்பியுங்கள்.  ஒன்றும் தவறில்லை.  நல்ல புத்தகங் களைப் படிக்க பழக்கப்பட்ட பிள்ளைகள் எதிர் காலத்தில் நல்ல குடிமகனாக வருவார்கள். 

எங்களுக்குப் பாடம் நடத்திய பேராசிரியர் அந்தப் பாடங்களையெல்லாம் புத்தகமாக வெளி யிட்டுள்ளார்.  அவருக்கு எங்கள் வணக்கம்.  அதனை வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுசுக்கும் நன்றி.

Pin It