குறுந்தொகையைப்பற்றி நானும் நண்பரொருவரும் ஒரு மாலையில் உரையாடிக்கொண்டிருந்தோம். பேச்சு நீண்டுநீண்டு குறுந்தொகையிலிருந்து ஆளுக்கு சில வரிகளை நினைவிலிருந்து சொல்ல முயற்சி செய்வதில் வந்து முடிந்தது. கணநேர யோசனைக்குப் பிறகு கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே, கன்றும் உண்ணாது கலத்திலும் படாது, கையில் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் என நண்பர் வேகவேகமாக ஒரு பத்து வரிகளைச் சொன்னார். என் பங்குக்கு நானும் சிறுகோட்டுப் பெரும்பழம், செம்புலப்பெயல்நீர், யாருமில்லை தானே கள்வன், பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படா நாருடை ஒசியல், நோக்கிநோக்கி வாள் இழந்தனவே என சில வரிகளை முன்வைத்தேன். அப்படிச் சொல்ல முடிந்ததில் இருவரும் மகிழ்ச்சி யுற்றோம். படித்துப் பல ஆண்டுகள் கடந்த பிறகும் எப்படி அந்த வரிகள் மனத்தில் தங்கியிருக்கின்றன என்றொரு கேள்வி எழுந்தது. சொற்கள் அடுக்கப் பட்டிருந்த முறையும் சொன்ன விதமுமே மிக முக்கிய காரணங்கள் என்பதை அக்கணத்தில் கண்டடைந்தோம்.

புதிய புதிய சொற்சேர்க்கையும் புதிய கூறுமுறையும் உள்ளவர்களுடைய ஆக்கங்களுக்கு மட்டுமே ஒவ்வொரு தலைமுறையிலும் முன்வரிசையில் இடம் கிடைக் கின்றன. அவர்கள் எழுதிச் செல்லும் வரிகளே காலத்தைக் கடந்து நிற்கின்றன. தேய்வழக்குகளை முற்றிலும் கைவிடும் ஒரு படைப்பாளி மட்டுமே மொழியைப் புதுமையுறச் செய்கிறான்.

இந்தத் தலைமுறையைச் சேர்ந்த முக்கியமான மரபுப்பாவலர் ம.லெ.தங்கப்பா. பாட்டுக்காக அவர் தேர்ந் தெடுத்திருக்கும் வடிவம் பழமையானதாக இருந்தாலும் பாடல்களைக் கட்டமைக்கும் விதத்தில் அவர் ஒரு போதும் பழமைக்கு இடமளித்ததில்லை. அவ்விதத்தில் அவரைப் புதுமைப்பாவலர் என்றே சொல்லவேண்டும். மரபுக்கே உரிய தாளக்கட்டும் ஓசை நயமும் அவருடைய பாடல்களில் மிக இயல்பாகப் படிந்திருக்கின்றன. அதே சமயத்தில் தம் பாடல்களை பழைய கருத்துலகத்தின் திசையை நோக்கிச் சென்றுவிடாதவண்ணம் கட்டுப் படுத்தி புதிய திசைகளை நோக்கி விரித்தெடுக்கும் ஆற்றலும் எச்சரிக்கையுணர்வும் தங்கப்பாவிடம் காணப்படுகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பாக கார் நாற்பது, கூதிர் நாற்பது என்னும் தலைப்புகளில் அவர் எழுதிய வெண்பாக்கள் சமீபத்தில் நூல் வடிவில் சிறு வெளியீடாக வெளிவந்திருப்பதைப் படித்தேன். வெண்பாக்கள் அனைத்தும் காலத்தின் பழமையைக் கடந்து படித்ததும் பிடித்துவிடுகிற விதத்தில் அழகான கட்டமைப்பும் கச்சிதமான சொல்லாட்சியும் உள்ளவையாக இருந்தன.

கார் நாற்பது முழுவதும் கார்காலத்தைப் பற்றிய வெண்பாக்கள். ஒவ்வொன்றிலும் விதவிதமான உவமைகள். கச்சிதமான சொல்லாட்சிகள். உவமைகளால் கட்டியெழுப்பப்படும் காட்சிகள் வேகவேகமாக நகரும் சித்திரங்களைப்போல உள்ளன. முதல் பாடலிலேயே ஒரு குதிரை சவாரியை நினைவுபடுத்துகிற உவமை யன்றைக் கையாள்கிறார் தங்கப்பா. காற்று குதிரையாகத் துள்ளி வருகிறது. அதன் முதுகில் உட்கார்ந்து வருகிறது கார்காலம்.

வானில் முகில்கவிய வையம் திசையிருள

யானைபோல் சீறி இடிமுழங்க - மீன்நிறையும்

ஆர்கலிபாய் காற்றின் அரும்பிடர்மேல் போதருமே

கார்கலித்துப் பூமலியும் கார்.

திரும்பத்திரும்ப படிக்கும்தோறும் குளம்போசையை உணரவைக்கும் விதத்தில் ஓசைநயம் பொலிவதை உணரலாம்.

இன்னொரு வெண்பாவில் மக்கள் குறைகளைக் கேட்டறியவும் அவற்றை உடனுக்குடன் நீக்கவும் புடைசூழ வரும் ஒரு அரசனின் தோற்றத்தை கார் காலத்துக்கு அளிக்கிறார் தங்கப்பா.

ஓவென் றிரங்கும் ஒலிகடலும் சூறையடு

சோவென் றிரையும் பெருமழையும் - காவெல்லாம்

பொங்கும் புனலும் புடைசூழ வந்ததே

கங்குல் பொழுதகற்றும் கார்

ஒருபுறம் கடல். இன்னொருபுறம் மழை. மற்றொரு புறம் வெள்ளம். ஒரு பவனியென இவையனைத்தும் புடைசூழ வருகிறது கார்காலம். அதன் வருகையால் பொழுதுமயக்கம் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. கங்குலென்றும் காலையென்றும் மாலையென்றும் இனி தனித்தொரு பொழுதுக்கு இடமில்லை. எல்லாப் பொழுதுகளிலும் மழையின் ஆட்சியே திகழ்கிறது.

மற்றொரு வெண்பாவில் கார்காலத்தின் வருகையை புலியின் வருகையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்.

காந்தள் விரிநகமாய் கள்வேங்கை பொன்னுடலாய்

ஏந்தும் இடியே எழுமுழக்காய் - பூந்தண்

தடங்குமுதம் செங்கண்ணாய் தாவுபுனல் பாய்த்தாய்க்

கடும்புலியை ஒத்ததே கார்

கார்காலம் என்னும் புலிக்கு வேங்கை மரமே உடல். காந்தள் மலர்களே நகங்கள். இடிமுழக்கமே சீறும் குரல். குமுத மலர்களே கண்கள்.

ஒரு பெண்ணின் வருகையாக கார்காலத்தின் வருகைக்காட்சியை தீட்டிக் காட்டும் இன்னொரு வெண்பாவும் இவ்வரிசையில் குறிப்பிடத்தக்கது.

கொண்டல் கருங்குழலாய்க் கூர்மின்னல் பாய்விழியாய்

ஒண்தளவம் வாயாய் ஒளிமுல்லை வெண்பல்லாய்

மேவுவண்டின் தீம்பண் மிழற்றி நடந்ததே

காவியுண்ட கண்ணின்நறுங் கார்

ஒரு குழந்தைக்கு விதவிதமாக உடுத்தி அழகு பார்க்கும் அன்னையைப்போல கார்காலத்துக்கு பலவிதமான புனைவாடைகளைக் கட்டி நடமாடவிட்டு அழகு பார்க்கிறார் தங்கப்பா. அந்தப் புனைவுகளின் உச்சம், எருமைகளை விரட்டியபடி அவற்றின் பின்னால் நடந்துவரும் இடையனின் வருகையை கார்காலத்தின் வருகைக்கு இணையான காட்சியாக முன்வைக்கும் புனைவு. அந்த வெண்பாவை தங்கப்பாவுடைய கவித்துவத்தின் உச்சம் என்று சொல்லலாம்.

முல்லை நகைக்கின்ற முற்றத்தில் கார்எருமை

மெல்ல நடப்பதுபோல் மீமுகில்கள் - செல்லவிட்டுத்

தோட்டு மலர்புனைந்த தோளோடும் பின்வருமே

காட்டிடையன் போலுமந்தக் கார்.

முகில்களை எருமைக்கூட்டமாக்கி, காலத்தை இடையனாக்கி உலவவிடும் இந்த வெண்பா எத்தனை முறை படித்தாலும் சுவை குன்றாத ஒன்று.

துள்ளிவரும் குதிரையாக, புடைசூழ அரும் அரசனாக, புலியாக, பெண்ணாக, மாட்டிடையனாக என விதவிதமாக கார்காலத்தின் வருகையைத் தீட்டிக் காட்டும் தங்கப்பாவின் வெண்பாக்களில் காணப்படும் இயல்பான சொல்லாட்சி ஒரு வாசகனை மனம் பறிகொடுக்க வைப்பவை. இது ஒரு பகுதி. இன்னொரு பகுதியில் கார்கால நிகழ்ச்சிகள் நிறைந்திருக்கின்றன.

மழையின் வருகை மண்மணத்தோடு தொடங்குகிறது. பிறகு மண்ணைக் குளிரவைக்கிறது. அதைத் தொடர்ந்து காற்றையும் குளிரவைக்கிறது. இறுதியில் அனைத்தையும் தொட்டு குளிரவைக்கும் மழைக்கென தனித்துவம் மிக்கதொரு மணம் உருவாகிறது. மெல்ல மெல்ல உலகத்தையே நிறைக்கிறது அந்த மழை மணம். அத்துடன் நொச்சி மலரின் மணம் சேர்ந்துகொள்கிறது. மக்கள் சமைக்கும் கூழின் மணமும் மொச்சையின் மணமும் இணைந்துகொள்கின்றன.

நொச்சி மலர்மணமும் நொய்க்கூழ் மணமுமட்டில்

மொச்சை அவிமணமும் முன்கமழப் - பச்சைப்

பயற்றினிளங் காய்மணக்கும் பைந்துடவை ஆம்பல்

கயத்தினின்று தான்மணக்கும் கார்

பலவிதமான மணங்களால் நிறைந்த மழைக் காலத்தைப் பற்றிய தங்கப்பாவின் சொல்லோவியம் மனத்தைக் கொள்ளை கொள்கிறது.

கார்கால வருகையைப் பற்றிய பாடல்களைப் போலவே கூதிர்கால வருகையைப் பற்றிய பாடல்களும் கற்பனைநயம் கொண்டவையாக உள்ளன. மழைக்காலம் முடிந்ததும் குளிர்காலம் தொடங்கிவிடுகிறது. அதை யட்டி சூழலில் நிகழும் ஒவ்வொரு மாற்றத்தையும் கூதிர் நாற்பது பகுதியில் பதிவு செய்கிறார் தங்கப்பா. இருளும் குளிரும் இணைந்த பொழுதில் கோழிக் கூட்டத்தின் தயக்கம் மிக்க நடமாட்டத்தை அழகான காட்சியாகச் சித்தரிக்கிறார் தங்கப்பா.

கோழி இரைதவிர்த்து குஞ்சின் சிறகொடுக்கித்

தாழிரும் பெற்றம் தளர்வுறுத்திச் சூழிருளால்

எங்கும் மருள்பரப்பி ஏக்கம் விளைக்குமே

கங்குகுலொடு கூதிர்ப் பொழுது

இன்னொரு வெண்பாவில் பிரையிட்டும் தயிராக மாறாத பாலின் அவலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓயா மழைபிசிரும், உள்ளெலும்பில் போய்க்குளிரும்

பேயாய்க் காற்றாடும் பிரையிட்டும் - தோயாமல்

முன்னிரவின் தீம்பால் முகிழ்கொள்ள வந்ததே

புன்பனிதோய் கூதிர்ப் பொழுது

குளிர்காலம் தொடங்கியதும் சூழலில் உருவாகும் சிறுசிறு மாற்றங்களைப் பதிவு செய்யும் வெண்பாக்கள் கவனிக்கத்தக்கன.

காக்கணம் பூக்கும், செங் காந்தள் அறமலரும்

பூக்கும் கொடிக்கோவை பொற்புறுநுணாக்கிளைமேல்

குன்றி தழைக்கும் குளிர்ந்த சரக்கொன்றை

பொன்றிகழும் கூதிர்ப் பொழுது

பூக்களை முன்வைத்தும், மிக இயற்கையாக சிறுவர்களிடையே மாறும் விளையாட்டுகள், உணவு வகைகளில் உருவாகும் வேறுபாடுகள், சுற்றுச்சூழலில் தென்படும் மாற்றங்கள் என அனைத்தையும் முன் வைத்திருக்கும் வெண்பாக்கள் பல குளிர்கால நிகழ்ச்சி களை அடுக்கிக் காட்டுகின்றன.

எருக்குழியில் கேழ்வரகும் ஈரக் களத்தில்

உருக்குலைந்த வைக்கோல்மேல் ஒண்நெல்லும் சாணமிட்ட

முற்றத்தில் எள்ளும் முளைத்துச் செழிக்குமே

பொற்பார்ந்த கூதிர்ப் பொழுது

பச்சைப்பசேலென அரும்பி மரகத விரிப்பென எங்கெங்கும் விரிந்திருக்கும் மொட்டுகளை அகக் கண்ணால் காணும் விதத்தில் தீட்டப்பட்டிருக்கும் சொல்லோவியம் தரும் அனுபவம் மறக்கமுடியாதது.

இரவில் உல்லாசமாகப் பறந்து திரியும் ஈசல்கள் அருகிலிருக்கும் நீர்நிலையை அமர்ந்திருக்கத் தக்க இடமென பிழையாக நினைத்து அதன்மீது இறங்கி விழுந்து, விழுந்த கணத்திலேயே இறந்துவிடுகின்றன. அடுத்தடுத்து வந்து இறந்துபோன ஈசல்கூட்டம் ஒரு திரையெனப் படர்ந்து நீரின் தோற்றத்தையே மறைத்துவிடுகிறது. மறுநாள் காலையில் வலைவீசி அவற்றை அள்ளியெடுத்துச் செல்கிறார்கள் ஊர்மக்கள். தங்கப்பாவின் வெண்பா அக்காட்சியை மிகவும் அழகாகச் சித்தரிக்கிறது.

ஆர்வம்கொள் ஈயல் அயர்ந்திரவில் வீழ்ந்திறந்து

நீர்நிலைமேல் எல்லாம் நிரம்புமே - ஊரார்

வலைகொண்டு அவை அரிப்ப வந்துநிறை காட்சி

புலர்கொண்ட கூதிர்ப் பொழுது

ஈசல்களின் பின்னால் அலைதலையும் அவற்றைச் சுட்டுத் தின்னுவதையும் பற்றிய பல சித்தரிப்புகள் பல வெண்பாக்களில் நிறைந்திருக்கின்றன.

புயலில் புளியஞ் சருகு பறந்தே

அயல்சிதறிப் பின்தாழ்ந்து அங்கங்கே ஒதுங்கல்போல்

ஈசல் சிறகுகள் எங்கும்பறந்தொதுங்கி

பூசலுறும் கூதிர்ப் பொழுது

பறந்து ஒதுங்கும் ஈசலுக்கு உவமையாகச் சொல்லப் படும் புளியஞ்சருகு அழகானதொரு சொல்லாட்சி.

மரபுப்பாடல்கள் இப்போது பெரிதும் எழுதப் படுவதில்லை. அதற்கான வாசகர்களும் குறைவாகவே இருக்கிறார்கள். ஏன் இந்த நிலை உருவானது என்பது யோசிக்கவேண்டிய கேள்வி. மரபுவடிவத்தின் முக்கிய மான அழகு அதன் சொல்லொழுங்கு. அவ்வடிவத்தைக் கையாள்வது என்பது கிட்டத்தட்ட நேர்த்தியாக நெசவு நெய்வதற்கு நிகரானது. குறுக்கும் நெடுக்கும் ஓடிவரும் இழைகள் சரியான தருணத்தில் ஓடிவந்து சேர வேண்டும். சரியான அழுத்தத்தோடு அவை ஒன்றெனப் பொருந்தவேண்டும். மிகச்சரியான இடைவெளிகளில் நிறங்கள் மாறிவரவேண்டும். செய்நேர்த்தி தெரியாத அளவுக்கு அதன் அழகு இயற்கையாக இருத்தல் வேண்டும். ஒரே ஒரு கணம் பிசகினாலும் அல்லது ஒரே ஒரு இழை சுருங்கிப் போனாலோ அல்லது மாறி விட்டாலோ நெசவின் அழகே குலைந்துபோய்விடும். சொல்தேடி அடுக்கும் மரபு வடிவத்திலும் இச்சிக்கல் உண்டு. சொல்லடுக்குக்காக வீணான தேவையற்ற சொற் களைக் குவிப்பதும் கற்பனையற்ற சொல்லாட்சியால் வறட்சியான சித்திரங்களைத் தீட்டுவதும் பெருகியதாலேயே, அவ்வடிவம் தன் வாசகர்களை இழந்து போய்விட்டது.

அரை நூற்றாண்டு காலமாக தொடர்ச்சியாக மரபுவடிவங்களைக் கையாண்டுவரும் தங்கப்பா புதிய புதிய சொல்லாட்சிகளைக் கையாண்டு பார்ப்பதிலும் வற்றாத கற்பனையை விரித்தெடுப்பதிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். அவருக்கு இருக்கும் ஆழ்ந்த பயிற்சியின் விளைவாக அவர் எழுதும் பாடல்கள் சுவைமிக்க ஆக்கங்களாக உள்ளன. பாட்டுணர்வு மிக்க பாவலனுக்கு வடிவம் சார்ந்த சிக்கல்கள் என எதுவுமே இல்லை என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டத் தக்கவர் தங்கப்பா. அவர் பாடல்கள் மீண்டும் மீண்டும் படித்து அசை போடும் அளவுக்கு இனியவை. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய பாடல்கள் ஒரு பெருந் தொகுதியாக தமிழினி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்தது. ஒரு சிறு பிரசுரமாக இப்போது வெளியிடப்பட்டிருக்கும் ‘காரும் கூதிரும்’ குழந்தையின் உள்ளத்தோடும் ஓர் இயற்கையார்வலனின் பார்வை யோடும் மழைக்காலத்தையும் குளிர்காலத்தையும் முன்வைத்து அவர் எழுதியிருக்கும் வெண்பாக்களால் நிறைந்திருக்கின்றது. அவருடைய ஆளுமைக்கு இப் பிரசுரம் நல்லதொரு சான்று.

காரும் கூதிரும்

தங்கப்பா

வெளியீடு : வானகப் பதிப்பகம்

7, 11 வது குறுக்குச் சாலை,

ஒளவை நகர், புதுவை – 8