“சிறகிலிருந்து
பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஓரு பறவையின்
வாழ்வை
எழுதிச் செல்கிறது.”

“அக்கினிக் குஞ்சைப் போல்
அகத்துள் எழும் பெரு நெருப்பு
பெருங்காட்டை அழித்துவிடும்
பிரளயமாய் பீறி எழும்
பேதமையைச் சுட்டெரிக்கும்.”

- பிரமிள்

ஐம்பத்தி எட்டு ஆண்டுகள் மட்டுமே இந்த உலகில் வாழ்ந்த பிரமிள் கலை, இலக்கியத்துக்காகவே வாழ்ந்தார். அவருக்கு வேறு தொழில்கள் தெரியாது. ஓவியம் போன்ற நுண்கலைகளிலும் ஈடுபாடு இருந்தாலும் கலை இலக்கியம் தான் அவரது முக்கிய மூச்சாக இயங்கியது. இதனால் அவருக்கு பசி, பட்டினி எல்லாம் பழக்கமானது. ஆன்மீக உரம் அவருக்கு உளப்பலத்தைக் கொடுத்தது. அதனால் தைரியமாக இந்த உலகத்தை எதிர் கொண்டார். எந்தப் பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி, சாதாரண எலும்பனாக இருந்தாலும் சரி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நேர்மையாக விமர்சனம் செய்தார். இதனால் தன் மீது எறியப்பட்ட அம்புகளை எல்லாம் அடித்து நொறுக்கி வீழ்த்தினார். தனி ஒருவனாக வீர்யம் மிக்க படைப்பாளியாக உயர்ந்து நின்றார். தமிழின் மகத்தான படைப்புக் குரல் இவருடையது. தமிழில் கவிதை விமர்சனத்துறை வளரவில்லை என்ற வசை இவரால் ஒழிந்தது. நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளை, கருத்தாக்க அடிப்படையில் அணுகி , தரநிர்ணயம் செய்வதில் தாட்சண்யம் காட்டாத விமர்சகர். இவருடைய விமர்சன வீச்சால் நவீன தமிழ் இலக்கிய மதிப்பீடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. கவிதைக் கோட்பாடுகள், அடிப்படைகள், உத்திகள் பற்றிப் பல விஷயங்களை ஆழமாகப் பேசும் கட்டுரைகளை பிரமிள் படைத்தார். கவிதை நூல்களுக்கு இவர் எழுதிய முன்னுரைகளில் கூட கவிதை பற்றிய ஆழ்ந்த புரிதல்களைக் காண முடியும். கவிதைகளை அணுகும் முறைகளைக் கற்றுத்தந்த நவீன ஆசான் என்று கூட இவரைக் கூறலாம்.

pramilதமிழில் வசன கவிதை என்னும் பெயரில் தொடங்கி, புதுக்கவிதை என்னும் பெயரில் நடந்த ஓர் இயக்கத்தில் ‘எழுத்து’ பத்திரிகையில் எழுத ஆரம்பித்து 1997 ஆம் ஆண்டு வரை தீவிரமாகச் செயல்பட்டவர். புதுக்கவிதையில் படிமங்களை அதிகமாக உபயோகிக்கத் தொடங்கியவராக அறியப்பட்டு ‘படிமக் கவிஞர் ’ என்று அழைக்கப்பட்டார். தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் இவர்.

இலங்கை திருகோணமலையில் கணபதிப்பிள்ளை விருட்சலிங்கம் (தர்மராஜன்) - அன்னலட்சுமி வாழ்விணையருக்கு மகனாக 20.04.1939 ஆம் நாள் பிறந்தார். பிரமிளின் இயற்பெயர் சிவராமலிங்கம். திரிகோணமலையில் இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை கற்றார்.

பள்ளியில் படிக்கும் போதே , ‘யாழ்’ என்னும் கையெழுத்துப் பிரதியில் கவிதைகளையும் , ஓவியங்களையும், மரபுக்கவிதைகளையும், கதைகளையும், சித்திரத் தொடர்களையும் எழுதியுள்ளார்.

1960 களின் பிற்பகுதியில் பிரான்சுக்குச் செல்லும் நோக்கத்துடன் தமிழகம் வந்தார். ஆனால், பிரான்சுக்குச் செல்லாமல் தமிழகத்திலேயே தங்கிவிட்டார்.

வாசிங்டன் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்னும் நிறுவனத்தில் அஞ்சல் வழியில் சித்திரக்கலையைக் கற்றார்.

எழுத்து, கொல்லிப்பாவை, மீறல் , லயம், அஃக், சதங்கை, யாத்ரா, படிமம், கற்குதிரை, திசைநான்கு, கனவு, நவீன விருட்சம், அரும்பு, பசுமை முதலிய இதழ்களில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதினார்.

பிரமிள் கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், சிற்பம், களிமண் சிற்பம், நாடகம், மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஆன்மிகம், சோதிடம், எண் கணிதம் என விரிந்த பல தளங்களில் இயங்கியவர்.

லஷ்மி ஜோதி, இலக்குமி இளங்கோ, கௌரி, பூம்பொற்கொடி இளங்கோ, பிருமிள், பிரமிள் பானு , அரூப் சிவராமு முதலிய புனை பெயர்களில் எழுதியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்துடன் இணைந்து ‘தமிழீழத்தில் ரணகளம் ’ என்ற புகைப்படத் தொகுப்பு நூலை எழுதி வெளியிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளியீட்டுப் பிரிவில் சில காலம் பணியாற்றினார்.

பிரமிள் எழுதி அளித்துள்ள படைப்புகள், கவிதைத் தொகுதிகள்: கண்ணாடியுள்ளிருந்து , கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம், பிரமிள் கவிதைகள், சிறுகதை தொகுப்பு: லங்காபுரி ராஜா, யாழ் கதைகள் ( சிறுவர் கதைகள்), தியானதார, மார்க்சும் மார்க்சியமும் - பீட்டர் வோர்ஸ்லி (தமிழ் மொழிபெயர்ப்பு) வானமற்ற வெளி : கவிதை பற்றிய கட்டுரைகள், பாதையில்லாப் பயணம் : (ஆன்மிக மறைமுகஞானப் படைப்புகள்), விடுதலையும் கலாச்சாரமும்: (மொழி பெயர்ப்பு படைப்புகள்), ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை, காலவெளிக் கதைகள் ( அறிவியல் கட்டுரைகள்), வெயிலும் நிழலும் ( இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்) , வரலாற்றுச் சலனங்கள் (சமுதாயவியல் கட்டுரைகள்), எதிர்ப்புச் சுவடுகள் ( பேட்டிகள், உரையாடல்கள்), அறைகூவல் (இலக்கிய அரசியல் எழுத்துக்கள்),தமிழின் நவீனத்துவம் (எழுத்து இதழில் வெளிவந்த கட்டுரைகள்), சூரியன் தகித்த நிறம் ( மொழி பெயர்ப்புக் கவிதைகள்) , ஆயி , பிரசன்னம் (குறுநாவல்கள்) , நட்சத்திரவாஷி ( நாடகம்), விமர்சன ஊழல்கள் (நேர் காணல்கள்), விமர்சணாஸ்ரமம் ( கட்டுரைத் தொகுப்பு), விமர்சன மீட்சிகள் , பிரமிள் படைப்புகள்: தொகுதி 1 ( கவிதைகள்), பிரமிள் படைப்புகள்: தொகுதி 2 ( கவிதைகள் , நாடகங்கள்), பிரமிள் படைப்புகள்: தொகுதி 3 ( விமர்சனக் கட்டுரைகள்), பிரமிள் படைப்புகள்:தொகுதி 4 (விமர்சனக் கட்டுரைகள்), பிரமிள் படைப்புகள்:தொகுதி 5 (பேட்டிகளும், உரையாடல்களும்), பிரமிள் படைப்புகள்: தொகுதி 6 (மொழி பெயர்ப்பு , அறிவியல், ஆன்மிகம்) முதலியவைகளாகும்.

வானமற்ற வெளி (கவிதைத் தொகுப்பு) – பிரமிள் (தொகுப்பு கால சுப்ரமணியம்). கவிதை தொடர்பான 35 கட்டுரைகளை உள்ளடக்கிய இத்தொகுதியில், புதுக்கவிதையையும் ந.பிச்சமூர்த்தியையும் நிறுவுவதற்காக மட்டுமே பதினோரு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஓளவை , பாரதி, பசுவய்யா, சி. மணி, நாரணோ ஜெயராமன், கால சுப்ரமணியம், தேவதேவன், விக்ரமாதித்யன், சமயவேல், ரமேஷ்-பிரேம் என மூத்த சமகால இளைய கவிஞர்கள் குறித்த பிரமிளின் கட்டுரைகளும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

பிரமிள், படைப்பை இயற்கைக்கு நிகரானதாய், முழுமையானதாய், கலைஞனின் மனோதர்மத்தை வெளியிடும் கருவியாக , உயர்ந்த போதம் உருவாக்கும் அழிகியலாய் காண்கிறார்.

‘லங்காபுரி ராஜா’ என்னும் குறுநாவல் ஈழத்தின் விடுதலைப் போராட்டம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. இக்குறுநாவல் ‘தினமணி கதிர்’ இதழில் தொடராக வெளிவந்தது. சிறுகதையின் திருமூலர் என்றழைக்கப்படும் மௌனியின் சிறுகதைத் தொகுப்புக்கு தமது 28 ஆவது வயதிலேயே முன்னுரை எழுதி அளித்துள்ளார். ‘ஆயி’ என்னும் குறுநாவல் கன்னியாகுமரி, சேலம் மாவட்டங்களில் வழங்கும் அம்மன் பற்றிய உண்மைச் சம்பவங்களை, சடங்குகளை அடிப்படையாகக் கொண்டது.

‘கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை, பாரதியை மதிப்பீடு செய்து வெளிவந்தவைகளில் மிக முக்கியமானது எனத் தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டியது.

க.நா.சு தமிழில் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலில் பிரமிள் எழுதிய ‘சந்திப்பு ’ சிறுகதை இடம் பெற்றுள்ளது.

பிரமிள் எழுதிய நாடகங்களுள் ‘நட்சத்திரவாஷி’ இவருக்கு பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது. இந்நாடகம் முதன் முதலில் பேராதனை பல்கலைக்கழகத்தில் அதன் தமிழ்ச்சங்க பொன்விழா சிறப்பு நிகழ்வில் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின் கொழும்பில் இயங்கிய பாலேந்திராவின் அவைக்காற்று கழகத்தினால் கொழும்பில் மேடையேற்றப்பட்டது. பின்னர் அவைக்காற்று கழகம் மூலம் லண்டனிலும் மேடையேற்றப்பட்டது.

பிரமிளின் சில கவிதைகள்

எல்லை
கருகித்தான் விறகு
தீயாகும்

அதிராத தந்தி
இசைக்குமா ?

ஆனாலும்
அதிர்கிற தந்தியில்
தூசி குந்தாது.

கொசு
நெருப்பில் மொய்க்காது.

தாசி
குங்குமம், கூந்தலில் மலர்,
‘குலக்கொடி நான்
ஆனால் இது
பசிக்கொடுமையில் ‘ என்றாய்.
எனவே நான்
பேரம் பேசவில்லை.
உன் கண்களும்
அரையிருளில்
உனது புருவ நிழலில்
தெரியவில்லை.
மனசைக் கீறியது
இருளின் திருட்டு விழிப்பு
தசையைத் தீண்டிற்று
தாம்பூலச் சகதி.
இருபது ரூபாய்களுக்கு
எனதின்பம் உனதுதரத்துள்
எரிகற் தாரையாய்
சீறி விழுந்தது.

 

குமிழிகள்
இன்னும்
உடையாத ஒரு
நீர்க்குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.

கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர் மொக்கு.

இருபத்திநாலு மணிநேர இரவு

பகலைச்
சட்ட பூர்வமாகச் சதுரமிட்ட
ஜன்னல்களில்
நடுநிசியின் ரௌடி நிழல்கள்.

பதுங்காமல்
பவிஷீடன் பவனிவரும்
ஓநாய் பற்களுக்கு
இரும்பு வளைவுகளாய்
ராணுவப் பாதுகாப்பு.

இருமை தாண்ட விரதமெடுத்துத்
தலைமழித்த பிட்க்ஷீ மடத்தில்
மலர்ச்செடி சிலிர்ப்புகள் கூட
ராஷஸத் தலைப் பரட்டைகளாகின்றன.
குழந்தை வீறிடுகிறாள்.

நாளாந்த நாகரீகத்தின்
ஒளிச்சதுரம் உடைந்து
வீட்டினுள் சிதறுகிறது
சட்டத்தின் கரம் எறிந்த
பெட்ரோல் வெடி.

குழந்தமை கற்பிழந்து
பயங்கரம் முதிர்கிறது.
உலகின் ஊமைச் சட்டங்கள்
வீறிட்டு அழும்
பெண்குரலைச் சுற்றி
உதவியற்ற
அமைதிப் பிராந்தியமாகின்றன.
விடிவின் திசையற்று
ஒரு சமூகத்தின் உயிரை சூழ்கிறது
இருபத்தி நாலு மணிநேர
இருள்.

கண் முன்னால் தாய்தங்கை
கழுத்தறுபடக் கண்டவனின்
பிஞ்சுக் கை பிடித்த
துப்பாக்கி இரும்பில் மட்டும்
நஷத்திரங்களின்
ஓளிக் கண்ணீர்த்துளி ஒன்று
உதயத்தை நோக்கிப்
பிரவஹிக்கிறது
நெருப்பாக.

இழையோடும் மனிதாபிமானம்

“ வைரம் நிறுத்தது
போன்ற சொற்கள்
சொற்களின் விளிம்பில்
வானவில் நயங்கள்
உணர உணர
விரிகின்ற கருத்தாழம்
உவமைகளை உருவங்களாக்கி
உருவங்களைப்
படிமங்களாக்கும் நேர்த்தி
அறிவியலின் ஒளிச்சாயல்
வரலாற்றின் ஏடுகளை
ஈரமாக்கித் துளும்பும் சோகம்
அதற்குள் பொதிந்து
இழையோடும் மனிதாபிமானம். ”

நீதிப் பண்புக்கு முரணாக அழகினை அனுசரிக்கும் இயல் எதுவும் இருக்க முடியாது . விமர்சனத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அநீதியே அழகியலாக வடிவெடுக்க இடமில்லை. ஆயினும், இல்லாமையற்ற, சமூக ஏற்றத் தாழ்வுகள் அற்ற பகுத்தறிவுப் பூர்வமான இயக்கங்களை வேரறுக்கும் ஏற்றத் தாழ்வுக் கங்காணிகள் இந்தியாவில் அழகியலை வர்ணாஸ்ரமச் சார்புள்ள இயலாகவே பயின்று வந்திருக்கின்றனர். காரணம், வர்ணாஸ்ரமமே தர்மம் நீதி நியதி என்ற இந்திய மனோவியாதி மண்டலத் தொடர்ச்சியாகும்”. ‘ விமர்சன மீட்சிகள் ’ என்ற கணையாழி கட்டுரையில் பிரமிள் இந்திய இலக்கிய விமர்சனம் குறித்து பதிவு செய்துள்ளார்.

“பிரமிளின் படிமவியல் 2000 வருட தமிழ்க் கவிதைச் சரித்திரத்தில் புதுமையானது. உரைநடையின் அதிகபட்ச சத்தியத்தை நிறைவேற்றியவர்.” என ‘எழுத்து’ இதழ் ஆசிரியர் சி.சு.செல்லப்பாவும், “நவீன தமிழ் இலக்கியத்தின் மாமேதை” என நாவலாசிரியர் தி.ஜானகிராமனும் புகழ்ந்துரைத்து உள்ளனர். “பிரமிள் தமிழ்க் கவிதையின் தனிப்பெரும் ஆளுமை” என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தமது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

“புதுக் கவிதை தொடர்பான அதிகபட்ச பிரக்ஞையும் , மரபின் செழுமையும், சமத்காரப் பண்பும், தனித்துவமான படிம வெளியீட்டு முறையையும் பெற்றவர் பிரமிள். ” என விமர்சகர் சங்கர ராம சுப்ரமணியன் பதிவு செய்துள்ளார்.

“இன்றைய தமிழ் இலக்கிய நிலையைப் பற்றி விமர்சன பூர்வமாக நிர்ணயிக்கும் முதல் கட்டுரை மௌனியின் கதைக்கு பிரமிள் எழுதிய முன்னுரை, ‘எழுத்து’ சஞ்சிகை மூலம் நமக்குக் கிடைத்த விமர்சகர். அவரது நடை சிந்தனைத்துடிப்பு மிக்கது. நுணுக்கமும், ஆழமும், உடையது . அவர் எழுத்து மேல்நாட்டு இலக்கிப் பரிச்சயத்தால் வளம் பெற்றது. ” எனக் கவிஞர் நகுலன் குறிப்பிட்டுள்ளார்.

“தற்காலத் தமிழ்க் கவிதையில், படைப்பாற்றலில் முன்னணியில் உள்ளவர் பிரமிள் என்பதில் ஐயமில்லை. இவரது படிமங்கள், வைரப்படிமங்கள் தமிழ்க் கவிதைக்கு ஒரு சொத்து. இவரது கவிதைக்குகள் மெய்யியல் பெற்றிருகூகும் ஆற்றலில் தான் இவரது உயர்நெறி தென்படுகிறது” என ஆய்வாளர் கோவை ஞானி பதிவு செய்துள்ளார் .

“தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான பிரமிள், இங்குள்ள இலக்கிய மைய நீரோட்டத்தால் முழுமையாக வரவேற்கப்பட்டவர் அல்ல. அவர் வாழும் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகளில் அவரது கதைகள் தவிர்க்கப்பட்டன. பரிசுகள், நிறுவனங்கள் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்படாத ஒரு விளிம்புநிலை எழுத்தாளராக வாழ்ந்து மடிந்தவர் அவர் ” என்று விமர்சகர் பேராசிரியர் அ. மார்க்ஸ் தமது கட்டுரை ஒன்றில் பிரமிளைப் பற்றி பதிவு செய்துள்ளார்.

நுண்ணிய பார்வையிலான ஒரு சூழலை உருவாக்கி, அதற்கு மிக மிக குறைந்தளவிலான கனமான சொற்களைக் கொண்டு கோர்த்து மொத்த வடிவத்தையும் ஒரு கவிதையாக்கும் தனித்திறம் பிரமிளுக்கு வாய்த்திருக்கிறது.

பிரமிள் தன் கவிதைகள் ஒவ்வொன்றிலும் மிகப் பெரும் வார்த்தை ஜாலத்தை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். வார்த்தைகளின் கூட்டுக்குள் தன் சுயம் மறைத்தபடி மிகப்பெரும் பிரளயமாய் வெடித்துக் கிளம்புகின்றன அவரது கவிதைகள்.

பிரமிளின் ஒவ்வொரு வார்த்தையும் எதையோ சொல்ல விரும்புகின்றது. அதையும் தாண்டி மிக ஆழமாக எதையோ உணர்த்தி நிற்கின்றது. உண்மை நிலையிலிருந்து விலகி ஓர் இலட்சிய கோபுரத்தின் ஆணியடித்தது மாதிரி உட்கார்ந்திராமல் இயல்பு வாழ்வை தன் கவிதைகளில் மையப்படுத்தி இருக்கிறார் பிரமிள். எப்போதும் முடிவற்ற வெளியை நோக்கியபடி இருக்கும் இவரது பார்வை அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறு அசைவையும் மிக உன்னிப்பாகப் பார்க்க வல்லது. நான் எல்லோருக்குமாகத்தான் எழுதியிருக்கிறேன் என்று சொல்லாவிட்டாலும் அவரது கவிதைகள் நம் அனைவருக்குமானது. என ‘இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை’ என்னும் கட்டுரையில் எழுத்தாளர், விமர்சகர் பூங்குழலி வீரன் பதிவு செய்துள்ளார்.

தமிழ் விமர்சனப் போக்கிலிருந்து தனித்தொலித்த குரல் இவருடையது. வெவ்வேறு வகைப்பட்ட விமர்னப் போக்குடைய க.நா.சு. போலவோ , சி.சு. செல்லப்பா போலவோ இல்லாமல் இலக்கியக் கருத்தாக்க அடிப்படையில் படைப்பினை அணுகித் தர நிர்ணயம் செய்தவர் பிரமிள். இவருடைய வருகைக்குப் பின், நவீன தமிழ்ப் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன.”
“பிரமிள் தீவிரமான மனேபாவத்துடன் நிகழ்வுகளை எதிர் கொள்பவர். எந்த ஒரு கால கட்டத்திலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலை இலக்கிய நிறுவனங்களின் அதிகாரப் பிரதிநிதிகளுடன் மருந்துக்குக்கூட உறவு வைத்துக் கொள்ளதவர் . அவருடைய கலை இலக்கிய மனோபாவம் மதிக்கப்பட வேண்டியது. போற்றப்பட்ட வேண்டியது. தமிழின் மகத்தான படைப்புக்குரல் இவருடையது. எழுத்தாளர் சி. மோகன்.

“தமிழ்ச் சமூகம் கொண்டாடிப் பெருமிதம் கொள்ள வேண்டிய நவீன தமிழ்க்கவி பிரமிள். 2000 ஆம் ஆண்டு வளமான தமிழ்க் கவிதை மரபு செறிவும்-குறிப்பாக சங்கக் கவிதை மரபு – தனதான கவித்துவ மேதமையும் முயங்கியதில் வெளிப்பட்ட கவி. நவீன தமிழ்க் கவிதை இத்தகையோர் படைப்பு ஆளுமையைக் கொண்டிருந்தும் அறிந்து கொண்டாட முடியாத நம் பேதமை இன்றைய சமூக அவலங்களில் ஒன்று. ” என எழுத்தாளர் சி.மோகன் பதிவு செய்துள்ளார்.

“தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் , பிரமிள் கதைகள் தவிர்க்க முடியாத தனியிடம் வகிப்பவை. புதுமைப்பித்தனுக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு படைப்பாளுமை பிரமிள். சமூக விமர்சனமும் , அங்கதக் கூர்மையும் கொண்ட கதைகளை, ருசிகரமும் ஆனந்தமும் கொண்ட கதைகளை எழுதியவர் பிரமிள் – கூடுதலாக இவரிடம் ஆன்மிக ஆழமும் இணைந்து விடுகிறது. ”

“கவிதையிலும் விமர்சனத்திலும் தமிழின் முதன்மைத் திறனாளியாக மதிக்கப்படுகிறவர் அவர். அவருடைய கதைப்பிரபஞ்சம் , அவருடைய வாழ்நாளில் முழுமையாகப் புத்தக ரூபத்தில் வாசகர்களுக்குக் கிடைக்காதது பெரும் குறையே. அப்படி வெளிவந்து இருந்தால் சிறுகதையில் பிரமிளின் சாதனை முன்பே நிறுவப்ட்டிருக்கும். ” என பேராசிரியர் காலசுப்ரமணியம் தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.
பேராசிரியர் காலசுப்ரமணியம் பிரமிள் கவிதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பிரமிளின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து பதிப்பித்து ஆறு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். ‘இந்து தமிழ்’ நாளிதழ் தனது இலக்கிய விழாவில் ‘பிரமிள் விருது ’ என்ற பெயரில் படைப்பாளிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

கண்டி-பிரான்சு நட்புறவுக் கழகத்தின் சார்பாக 1971 ஆம் ஆண்டு பிரமிளின் ஓவியக் கண்காட்சி கண்டியில் நடை பெற்றது.

நியூயார்க் விளக்கு அமைப்பு ‘புதுமைப் பித்தன் விருது ’ அளித்து இவரைச் சிறப்பித்துள்ளது. கும்பகோணம் சிலிக்குயில் அமைப்பு இவருக்கு ‘ புதுமைப்பித்தன் வீறு ’ எனும் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.

தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் அவரது வாழ்க்கை ஒரு துறவு நிலையில் அமைந்திருந்தது என்று கூறலாம். அவரது சொத்துக்கள் எனக் கூறினால் புத்தகங்கள் மட்டுமே. நண்பர் பலரும் அவருக்கு உதவி செய்தனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் அருகில் உள்ள கரடிக்குடி என்னும் கிராமத்தில் 06.01.1997அன்று காலமானார். அங்கு அவரது நினைவு கல்லறை உள்ளது.

- பி.தயாளன்

Pin It