பொதுவாக கி. ராஜ நாராயணன் படைப்புகள் ஒரு விவசாய சமூக விவரணமாகக் காட்சியளிக்கிறது அவற்றில் கரிசல் விவசாயம், வாழ்வியல் முறைகளுமே பிரதானமாக இடம் பெற்றுள்ளது. எனவே சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் அவருடைய நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் விவசாயம், விவசாயிகள் மற்றும் விவசாய போராட்டங்கள் குறித்து இடம்பெற்றுள்ள பதிவுகள் இங்கே திறனாய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
சுதந்திரத்திற்கு முன்பிருந்த விவசாயிகளின் நிலை குறித்து கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் நாவல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோபல்ல கிராம நாவலில் வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்ததின் காரணமாக தெலுங்கு தேசத்திலிருந்து முஸ்லீம் அரசர்களுக்கு அஞ்சி தமிழகத்தில் குருமலைப் பகுதிகளின் சரிவுகளில் குடியேறிய கம்மவார் சமூகத்தின் வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கிந்திய கம்பெனியார் இந்திய மண்ணில் கால் வைத்து, ஆட்சி அதிகாரத்தில் பிடித்த காலம் வரையுள்ள ஒரு நூற்றாண்டு வரலாற்றை புராணத் தாக்க இயல்புகளுடன், நாட்டுப்புற கதை மரபுடனும் கலந்து கூறும் படைப்பாக இந்த நாவல் திகழ்கிறது.
குறிப்பாக தெலுங்கு தேசத்திலிருந்து இடம் பெயர்ந்து குருமலைப் பகுதிகளில் தங்கி பிரம்மாண்டமான கள்ளிக்காட்டை அழித்தார்கள். பூமியைத் தோண்டும் போது கிடைத்த கோரைக்கிழங்கு, காட்டுக் கிழங்குகள், காட்டுப் பறவைகளின் முட்டைகளையும் உண்டார்கள். சோற்றுக்கற்றாழையை உரித்து தண்ணீரில் கழுவி அவற்றின் கசப்பை நீக்கியும், பறவைகள், விலங்குகளையும் வேட்டையாடி அவற்றின் மாமிசத்தையும் உண்டார்கள். மாடுகளோ, கலப்பைகளோ இல்லாத நிலையில் விளை நிலங்களை உருவாக்க மரத்தில் கலப்பை போல் செதுக்கி மாடுகள் போல் அவற்றை இழுத்தார்கள். இடப்பெயர்ச்சியின் போது உடன் கொண்டு வந்த உணவு தானியங்களில் தங்களது தேவைக்கு போக ஒதுக்கிவைத்த தானியங்களை விதைத்துள்ளார்கள்.
அதன் பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது சக்திக்கு ஏற்ப எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிலத்தை சொந்தமாகக் கைகொண்டு பயிர்செய்ய முற்பட்டார்கள். வீடுகள் கட்ட ஆரம்பித்தார்கள். கிராமம் முறையாக வளர ஆரம்பிக்கவே குடிநீருக்காக கிணறுகளையும், கால்நடைகளுக்கான கண்மாய்களையும் தோண்டியுள்ளார்கள். தங்களிடம் இல்லாத விவசாய தொழிலாளர்களான தச்சர், கொல்லர் முதலானவர்களைக் கூட்டி வந்து தங்களது கிராமத்தில் குடியமர்த்தினார்கள். இவ்வாறாக இடம்பெயர்ந்த மக்கள் கோபல்ல கிராமத்தில் தங்கி வேட்டுவ வாழ்க்கையிலிருந்து உழவு வாழ்க்கை முறைக்கு மாறினார்கள்.
இடைப்பட்ட காலத்தில் அவர்களது பயிர்களை வெட்டுக்கிளிகள் அழித்து நாசம் செய்ததால் பஞ்சம் ஏற்பட்டதையும் அதனால் மக்கள் பட்ட அவதிகளையும் நாவலில் விளக்கப்பட்டுள்ளது. இவரது ஒட்டுமொத்த படைப்புகளில் கோபல்ல கிராமத்தில் ஏற்பட்ட மூன்று பஞ்சங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவ்வகையில் பார்த்தால் இந்தியாவை பிரிட்டிஷ் ராணியார் நேரடி ஆட்சி செய்ய முற்பட்ட ஆரம்பக் காலங்களில் ஏற்பட்ட பஞ்சமாகும் இது. ஆனால் பிரிட்டிஷார் இந்தப் பஞ்சத்தால் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்காண நிவாரணங்களை வழங்கவில்லை.
இரண்டாவது நூலான கோபல்ல கிராமத்து மக்கள் கதையின் மூலம் மற்றும் மையமாந்தர்கள் அனைவரும் விவசாயிகளே. இந்த நாவலில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள் போராட்டம் குறித்து இந்தியா சுதந்திரம் பெற்ற கதையையும் விளக்குகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் போலோ அல்லது அதற்கு ஆதரவான இயக்கங்களோ கோபல்லபுரத்தில் நடைபெறவில்லை என்றாலும், தெலுங்கானா புன்னப்புரா, வயளார் போன்ற இடங்களில் நடைபெற்ற விவசாயப் போராட்டங்கள் நாவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அந்தமான் நாயக்கர் நாவலில் கொடியேற்றும் போராட்டம் குறித்தும் சுதந்திரத்திற்குப் பின்னர் நடைபெற்ற வரி விதிப்பிற்கு எதிரான போராட்டம் குறித்தும் சித்தரிக்கப்பட்டுள்ளது. 1920களில் காந்தியின் வழிகாட்டுதலில் பர்தோலி கிராமத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் நிலவரி கொடா இயக்கமும் அதன் ஒரு பகுதியாக கொடியேற்றும் போராட்டமும் நடைபெற்றது. நாடு முழுவதும் துவக்கப்பட்ட இப்போராட்டம் கரிசல் பகுதியிலும் நடைபெற்றது. அழகிரி என்ற சிறுவன் தடைசெய்யப்பட்ட தேசியக்கொடியை மரத்தில் ஏற்றியது. அதன் பின்னர் பக்கத்து ஊரில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் அழகிரி குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டது. பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலையாகி கோபல்ல கிராமத்தில் வந்து மற்றுமொரு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று கொல்லப்பட்ட கதை சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறாக இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் விவசாயம், விவசாயிகளின் நிலை, விவசாயப் போராட்டங்கள் குறித்து, மூன்று நாவல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் சுதந்திரத்திக்குப் பின்னரான நிலை குறித்து அந்தமான் நாயக்கர் நாவலில் பிற்பகுதியில் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களில் மட்டுமே விவசாயிகளின் நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை வெளிவந்த கால வரிசைகளின் படி நான்கு கட்டங்களாகப் பிரித்துக்கொள்ள முடியும்.
முதலாவதாக, 1958 முதல் 1969 வரை, இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட படைப்புகளில் கூலி விவசாயிகள், சிறு மற்றும் ஏழை விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டங்களை மாயமான், கதவு, கரண்ட், குடும்பத்தில் ஒரு நபர் மற்றும் கருவேப்பிலைகள் ஆகிய சிறுகதைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இவற்றில் கறிவேப்பிலைகள் என்ற சிறுகதை, வாழ்நாள் முழுவதும் கூலி வேலை செய்து ஜீவனம் நடத்தி வந்த ஒரு வயதான தம்பதிகள் பற்றியது. அந்தத் தம்பதிகள் தங்கள் வாழ்வின் இறுதியில் இயற்கைச் சீற்றத்தால் தங்களது சிறிய வீட்டை இழந்து கல் மண்டபத்தில் குடித்தனம் நடத்தியது குறித்தும், மூப்பின் காரணமாக உழைக்க முடியாமல் பிச்சை எடுக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்த சித்தரிப்புகள் நெஞ்சை உருகச் செய்கிறது.
அதேபோல், தீர்வை (நிலவரி) கட்ட முடியாமல் தங்களது வீட்டின் கதவை இழக்கும் ஏழை விவசாயி (கதவு), ஒற்றை மாட்டுடன் விவசாயம் செய்யும் விவசாயி ஒரு ஜோடி மாடு வாங்க முடியாத அவல நிலை (அதாவது கரிசல் காட்டில் ஒரு ஜோடி மாடு வைத்திருக்க வேண்டுமென்றால் குறைந்தது 20 ஏக்கர் நிலமாவது இருக்க வேண்டும். ஆனால் கதையில் வரும் தொட்டணக் கவுண்டரிடம் எட்டு ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. ‘ஒரு குடும்பத்தில் ஒருவர்’, விவசாயம் செய்வதற்கு மின்சாரம் வேண்டி அதிகாரிகளை அணுகி அவமானப்பட்டு, ஆவேசமுறும் விவசாயி குறித்து ‘கரண்ட்' சிறுகதையில் பதிவு செய்துள்ளார்.
இரண்டாவதாக, (1975) காலகட்டத்தில், சிறு விவசாயியாக இருக்கும் ஒருவர் இதர விவசாயிகளின் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கையகப்படுத்தி நில உடமையாளராக மாறியது, அதன் தொடர்ச்சியாக அவரது வாரிசுகள் பெரிய ஜின்னிங் பாக்டரியைத் தொடங்கி தொழிலதிபராக பரிணமித்தது குறித்து ‘கரிசல் காட்டில் ஒரு சம்சாரி’ என்ற சிறுகதையில் பதிவு செய்துள்ளார்.
மூன்றாவது காலகட்டப் படைப்புகளில் (1980 - 1984), விவசாயம் சிதிலமடைந்து வருவது குறித்தும் விவசாயிகள் சாகுபடி செய்யும் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காததும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ‘ஒரு செய்தி’ என்ற சிறுகதை தீப்பெட்டித் தொழில் உருவானதின் காரணமாக களையெடுக்க, பருத்தி எடுக்க ஆட்கள் இல்லாமல் சாகுபடி நிலங்கள் தரிசு நிலங்களாகவும், மேய்ச்சல் நிலங்களாகவும் மாறியது குறித்தது. ‘விடிவு’ கதையோ பருத்தி, அவுரி, மிளகாய், வெங்காயம் போன்ற சாகுபடி பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது குறித்தது. இவற்றில் கரிசல் காட்டில் பருத்தி வெடித்து வரும்போது பவர்கட் உடன் வரும். இதனால் அரவை தடைபடும். எனவே வியாபாரிகள் குறைந்த விலைக்கே பருத்தியைக் கொள்முதல் செய்வார்கள். அதேபோல் சாகுபடி செய்வதற்கு இலகுவான அவுரி சாகுபடி கரிசல் காட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஏற்றுமதியாளர்கள் கூடிப் பேசி அவுரியை மலிவான விலைக்கு கொள்முதல் செய்து வந்தார்கள். இதனால் இவற்றிற்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்ற விவரங்கள் போத்தி நாயுண்டு என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக சித்தரிக்கப்படுகிறது.
அவுரி கதையில் 100 ரூபாய்க்கு விற்ற அவுரி ஒரு ரூபாய்க்கு விலை போனதால் அவற்றைக் குப்பையில் போடும் விவசாயி குறித்தது. இக்கதையில் “அவுரி என்பது உள்நாட்டுத் தேவைக்கு பயன்படாதவை. பெரும்பாலும் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் விளைவாக அரசிற்கு பவுன்பவுனாக, அந்நியச் செலாவணி கிடைக்கிறது. 60 வருடமாக நடந்து வரும் இந்த அவுரிச் சாகுபடி மற்றும் ஏற்றுமதியை அரசு ஒழுங்குபடுத்த திராணியற்று உள்ளது” என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அத்துடன் அரசின் இந்தப் பொறுப்பற்றத் தன்மைக்கு எதிராகப் போராடுவதற்கு விவசாயிகள் ஒன்று திரள வேண்டியதையும் பூடகமாக சுட்டுக்காட்டுகிறது. ‘தாவோவைப் பார்த்து’ கதையோ விவசாயிகள் சாகுபடி செய்யும் பருத்தியைக் கொள்முதல் செய்வதின் மூலம் இடைத்தரகர்களும், மில் முதலாளிகள் மற்றும் அதிகாரிகள் கூட்டு சேர்ந்துகொண்டு கொள்ளை லாபம் சம்பாதிப்பது குறித்துப் பேசுகிறது.
நான்காவது காலகட்டத்தைப் பொருத்தமட்டில் (1995), ஏற்கனவே கி. ரா. 1959இல் எழுதிய கதையான ‘கதவில்’ தீர்வை கட்ட முடியாத ஏழை விவசாயியின் கதவை ஜப்தி செய்யும் அதிகாரி குறித்து எழுதப்பட்டுள்ளது. ஆனால் 1995ஆம் ஆண்டு வெளிவந்த ‘அந்தமான் நாயக்கர்’ என்ற நாவல் இதன் நீட்சியாகவே எழுதப்பட்டுள்ளது. அதாவது 1959ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடுத்த பத்தாண்டுகளில் ஏறபட்ட மற்றுமொரு பஞ்சத்தால் விவசாயிகள் சந்தித்த அவலம் குறித்தது.
சுதந்திர இந்தியாவில் இரண்டாவது முறையாக பஞ்சம் ஏற்பட்டதின் காரணமாக மக்கள் தீர்வை கட்ட முடியாத நிலை ஏற்பட்டதால் அரசாங்கம் ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதை எதிர்த்து பெரும் போராட்டங்கள் அப்பகுதியில் வெடித்தன. இந்தப் போராட்டத்தை அரசாங்கம் நசுக்கியது. இதில் அந்தமான் நாயக்கர் கொல்லப்பட்டார்.
அதாவது 60களில் சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட முதலாவது பஞ்ச காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜப்தி நடவடிக்கைகளை எதிர்த்து விவசாயிகள் போராடவில்லை. ஆனால் இரண்டாவது பஞ்ச காலத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த ஆண்டு கரிசல் காட்டில் மழை இல்லாததால் விளைச்சல் இன்றி கஞ்சிக்கு வழியில்லாமல் முள்ளுக் கீரையையும் அவற்றின் இலைகளையும் அவித்துத் தின்றனர். கள்ளிப்பழம், சோத்துக்கத்தாழை, அணில்கள், காட்டு எலிகள், சாளைக்கிழங்கு மற்றும் சட்டிக் கிழங்கைத் தோண்டித் தின்றார்கள். எறும்புப் புற்றுகளைத் தோண்டி தானியங்களை எடுத்து வேகவைத்து தின்றார்கள். வசதியுள்ளவர்கள் கடலைப் புண்ணாக்கையும் எள்ளுப் புண்ணாக்கையும் வாங்கித் தின்று பசியாறினார்கள்.
அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் நிலத்திலிருந்து வரும் விளைச்சலைக் கணக்கிட ஒரு ரூபாய் விளைச்சல், முக்கா ரூபாய் விளைச்சல், அரை ரூபாய் விளைச்சல் என்று கணக்கு வைத்திருந்தார்கள். கால் ரூபாய் விளைச்சல் என்று சொன்னால் நிலவரி ரத்து செய்யப்படும். ஆனால் அந்த ஆண்டு கால் ரூபாய் விளைச்சலுக்குக்கூட சுதந்திர இந்தியாவில் தீர்வை போடப்பட்டது. ஊர்க்கூட்டம் போட்டு அந்த ஆண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு மகஜர் கொடுத்தார்கள். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்காமல் சம்சாரிகளின் சட்டிப் பானைகள், வீட்டுக் கதவுகளை ஜப்தி செய்தார்கள். உழவு மாடுகளை, கால்நடைகளை சிறையில் அடைத்தார்கள்.
மேலும் அந்த சமயத்தில் விவசாயத்திற்கான மின் கட்டணத்தையும், பஸ் கட்டணத்தையும் அதிகப்படுத்தியது அரசு. பெட்ரோல் விலைகள் அதிகமாகி விட்டதால் ரசாயன உரங்களின் விலையும் அதிகரித்தன. முக்கியமாக விவசாய மின் கட்டணத்தை உயர்த்தியது, சம்சாரிகளை கோபமடையச் செய்தது. எனவே அரசை எதிர்த்துப் போராடுவதென முடிவு செய்து ஊர்தோறும் விவசாயச் சங்கங்களைக் கட்டினார்கள். கட்டம் கட்டமாக போராட்டங்களை முன்னெடுத்து இறுதியில் மறியலில் ஈடுபட்டார்கள். பின்னர் மாநிலம் தழுவிய அளவில் அப்போராட்டம் பரவியது. அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட இந்த முரண்பாடுகள் பெரும் போராட்டமாக பரிணமித்த விதத்தை நான்காவது கட்டத்தில் அந்தமான் நாயக்கர் என்ற நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறாக கி. ரா. வின் விவசாயம், விவசாயிகள் குறித்த படைப்புகளை நாம் வாசிக்கும்போது கரிசல் பகுதியில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்கள். விவசாயிகளின் வாழ்வில் ஏற்படுத்திய நெருக்கடிகள். அந்த நெருக்கடிகள் விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் அவர் தொடர்ச்சியாக சிறுகதைகளிலும், நாவல்களிலும் இலக்கிய நயத்தோடு பதிவு செய்துள்ளதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
- சு.அழகேஸ்வரன்