பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை இலௌகிக சங்கம் வெளியிட்ட தத்துவவிவேசினி, The Thinker இதழ்வழிப் பதிவுகளை ஐந்து தொகுதிகளாகத் தொகுத்துள்ளார், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடான இந்நூலின் முதல் தொகுதியை சென்னை தரமணி, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக வளாகத்தில் 10-10-2012 அன்று நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு வெளியிட, ஆய்வாளர் வ.கீதா பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் செயலாளர் சண்முகம் சரவணன் வரவேற்புரையாற்றினார்.

வ.கீதா தனது நூல் அறிமுக உரையில், “140 ஆண்டு களுக்கு முன்பு செயல்பட்ட சென்னை இலௌகிக சங்கம் என்னும் இயக்கத்தின் விசாரணை மரபு பற்றி இந்நூலில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்த அமைப்பிலிருந்து எந்தெந்த விஷயங்கள் வேறு தளங்களுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டன என்று ஆய்வு நடத்தப்பட வேண்டும்” என்றார்.

பேரா.இராம.மணிவண்ணன் தனது மதிப்புரையில், “தமிழகத்தின் கடந்த இருபது ஆண்டுக்கால வரலாற்றுப் போக்கில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் வீழ்ச்சிதான் அந்த வெற்றிடம். இந்த நிலையில் “தத்துவ விவேசினி வரலாற்று ஆவணமாக வெளிவந்துள்ளது. 1750-க்கும் 1850-க்கும் இடைப்பட்ட காலம் இந்தியாவின் மறுமலர்ச்சிக் காலம். தேச விடுதலையை அடைய 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் ஆகும் என்று கால அளவைக் குறிப்பிடலாம். ஆனால் மனித விடுதலை என்பது அப்படியல்ல. அதற்கு சமூகச் சிந்தனை வளம் வேண்டும்” என்றார்.

க.திருநாவுக்கரசு தனது மதிப்புரையில், “நாத்திகக் கருத்தில் சென்னை இலௌகிக சங்கத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் ஒரு தொடர்ச்சி உள்ளது. தத்துவவிவேசினி நடத்திய அமைப்பு எது, கொள்கை என்ன என்று கூறுகிறது இந்த முதல் நூல். 130 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை எப்படி இருந்தது என்றும், நாத்திக, சோஷலிச அமைப்புகள் எத்தனை இருந்தன, என்னென்ன பெயரில் இருந்தன என்றும் இந்த நூல் மூலம் அறிய முடிகிறது” என்றார்.

தோழர் ஆர்.நல்லகண்ணு தனது சிறப்புரையில், “வருங் காலத்துக்குப் பயனளிக்கும் நோக்கோடு இந்த நூல் வெளியிடப் படுகிறது. இத்தகைய பழைய நூல்களின் தொகுப்புகள் மிகவும் அவசியம். ஜீவா காலத் தலையங்கம் என்ற தலைப்பில் பேராசிரியர் வீ.அரசு தொகுத்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட தொகுதி நூல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகைய நூல்களின் மூலம் தான் நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க முடிகிறது. அதற்காகவே, என்சிபிஎச் நிறுவனம் தத்துவக் கட்டுரை நூல் களை மிகுந்த அக்கறையுடன் வெளியிடுகிறது. தத்துவத்தின் மூலக் கூறுகளை அறிய வேண்டுமென்பது மிகவும் அவசியம். வரலாற்றுத் தேவையையொட்டி, இதனைத் தொடர்ந்து இன்னும் நான்கு நூல்கள் வெளிவர உள்ளன.

தத்துவப் போராட்டங்கள், தமிழகத்தின் தொன்மையான கருத்துப் போராட்டங்களை ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும். தமிழறிஞர் உ.வே.சா. பழம்பெரும் இலக்கிய நூல்களைப் புதிதாகப் பதிப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் பழைய நூல்களைத் தேடிச் சென்ற போது, ‘நேற்று தான், விஜயதசமியை முன்னிட்டு பழைய புத்தகங்களை யெல்லாம் ஒழித்துக் கட்டினேன்’ என்று கூறியவர்களும் உண்டு. சில நூல்கள் திட்டமிட்டு, நோக்கத்துடனும் அழிக்கப்பட்டுள்ளன. சமண, பௌத்த மதங்களுக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. அந்த மதங்களின் இலக்கியங்கள் அழிக்கப்பட்டன. கருத்துப் பரப்பல் என்ற விஷயத்தில் மற்றவர்கள் கருத்தைச் சொன்னார்கள். ஆனால் பெரியார் கருத்தை இயக்கமாக நடத்தினார். இராமலிங்க அடிகள் இறுதிக் காலத்தில் சைவத்தைப் புறக்கணித்து, சமரச சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்ததும் கவனத்துக்குரியது. சமுதாயத்தில் மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்தின் ஒரு கூறாகத்தான் இந்த நூலை என்சிபிஎச் வெளியிடுகிறது” என்றார்.

வீ.அரசு தமது ஏற்புரையில், “பெரியார் பரப்பிய சுயமரியாதை என்ற சொல் தமிழகத்தில் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இது விடுதலைத் தத்துவம். கிறித்தவ மதத்துக்கு எதிராக, தேவாலயத்துக்கு எதிராக, பாதிரியார்களுக்கு எதிராக, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இயக்கங்கள் தோன்றின. வால்டேர், இங்கர்சால் போன்றவர்களின் செயல் பாடுகளைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். உலகின் பிற நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளின் சம காலத்தை நமது சமகாலத்துடன் அணுகுவது மிகவும் அவசியம். புரூனோ 1600-இல் எரிக்கப் பட்டார். அவரை மதிப்புடன் நினைவுகூரும் வகையில் அவர் கொல்லப்பட்ட ஆண்டிலிருந்து கணக்கிட்டு, புரூனோ ஆண்டு எனக் கொள்ளத் தொடங்கினர். தமிழ்ச் சூழலில்தான் மத எதிர்ப்பு அதிகமாக இருந்துள்ளது. மத விமர்சனம் என்பதே கடவுள் என்ற சொல்லிலிருந்துதான் தொடங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அப்போதைய பம்பாய், கல்கத்தாவில் இல்லாத கிளர்ச்சிமிக்க நிலை மதராஸில்தான் இருந்துள்ளது” என்றார். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அலுவலர் திருமதி முத்து மாலதி நன்றி கூறினார்.

Pin It