அஞ்சலி

ஞாயிறு அன்று பொழுது புலர்ந்ததும் ‘இலங்கை அதிபர் மரணம்’என்ற குறுஞ்செய்தி செல்பேசிகளுக்கு வந்தது.  பின்னர்தான் தெரிந்தது - அது ஏப்ரல் முதல் நாள், முட்டாள்கள் தினம் என்பதால் அனுப்பப்பட்ட செய்தி என்று! அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் புதுக்கோட்டை எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன் மரணம் என்ற செய்தியும் வந்தடைந்தது.  ‘இதுவும் பொய்யோ?’ என்று எண்ணிக் கொண்டிருக்கையில், செல்பேசியில் அழைத்துப் பேசியவர்கள் ‘தகவல் உண்மைதான்!’ என்று உறுதி செய்தனர்.

muthukumaran_300செய்தியைக் கேட்டவர்கள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் சி.பழனிவேல் - முல்லையம்மாள் இணையருக்கு ஒரே மகனாக (16-6-1968) பிறந்த முத்துக்குமரன் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்.

பள்ளிப் பருவத்திலேயே பொதுவுடைமை இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த முத்துக்குமரன் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் சேர்ந்து, பல ஆண்டு காலம் செயல்பட்டார்.  அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தின் தமிழ் மாநிலத் தலைவ ராகவும் பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்த முத்துக்குமரன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்றுச் செயலாற்றி வந்த வேளையில் கடந்த ஆண்டு (2011) நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதுக்கோட்டைத் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த வேளையில் இவரது தாயார் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப் பேரவையில், பொதுவாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில், தனது புதுக்கோட்டைத் தொகுதியைப்பற்றிப் பேசிய தோடு நிற்காமல், எடுத்த எடுப்பிலேயே தமிழகத்தில் லோக் ஆயுக்தா, அரசு அறிவித்த புதுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்துவது, வேலைவாய்ப்பு, மாநில நதிகளை இணைத்தல், வீட்டுமனை வழங்கும் திட்டம், அரசுத் திட்டங்கள் கிராமங்களைச் சென்றடைவதற்கு கிராமங்களை ஒருங்கிணைக்கும் திட்டம் என்று மாநில அளவிலான மக்கள் பிரச்சினைகளிலும் ஈடுபாட்டுடன் கருத்துரைத்து, தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று மெய்ப்பித்த முத்துக் குமரன் அவற்றுக்கும் மேலே சென்று, இலங்கைத் தமிழர்கள் உரிமைப் பிரச்சினையில் அக்கறை கொண்டு, தமிழ் வரலாற்றில் முதன்முறையாக ஒரு சிறப்புமிகு தீர்மானம் கொண்டு வந்தமைக்காக, தமிழக முதல்வருக்கும், தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கும் பேரவையில் நன்றி, அந்த நன்றியையே ஆக்கபூர்வமான கருத்து நடவடிக் கையாக வெளிப்படுத்திய பெருமைக்குரியவர்.

தொகுதிக்குள் கட்சி அடையாளத்துக்கு அப்பால், எந்த ஒரு குடிமகனுடைய கோரிக்கையையும் கனிவுடன் கேட்டு ஆவன செய்யும் முத்துக்குமரன் தலைநகரில் சட்டப் பேரவையில் பண்புடன் நடந்து, நற்பெயரெடுத்தவர்.  சில நாட்களுக்கு முன்பு, “மக்கள் பிரச்சினையைப் பற்றி அவையில் கேள்வி கேட்கும் போது, கட்டுரையாகக் கேட்கா தீர்கள்; மாறாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாண்புமிகு எஸ்.பி.முத்துக்குமரனைப் போல ‘நறுக்’கென்று ஒரே வரியில் கேளுங்கள்”என்று சட்டப் பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் அவையில் உரைத்தது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

இவர் விபத்தில் காலமான ஞாயிறு 01-04-2012 அன்றும் மறுநாளும் (02-04-2012) கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமின்றி, ஏராளமான பொது மக்கள் திரண்டு வந்து தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்தது போலத் துயருற்று அழுதனர்.

முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், “44 வயதில் மரணமுற்ற முத்துக்குமரன் சட்டமன்றத்தில் பொறுப்பேற்று, மின்னலைப் போலப் பளிச்சிட்டு, ஓராண்டுக்குள் மறைந்துபோன துயரத்தை எங்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இடி விழுந்ததைப் போலத் திகைத்து நிற்கிறோம். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.  மறைந்த முத்துக் குமரனுக்கு அஞ்சலி செலுத்துவதுடன்.  இந்தப் பெரும் துயரத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மக்களோடு பகிர்ந்து கொள்கிறது.  மூன்று நாட்களுக்கு கட்சியின் கொடி, தமிழ்நாடு முழுவதும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு மறைந்த தோழர் முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

தோழர் முத்துக்குமரனின் மறைவுக்குத் தெரிவித்த இரங்கல் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா ‘அனைவரிடத்திலும் அன்புடன் பழகக்கூடியவர்.  சிறிது காலமே சட்டப் பேரவை உறுப்பினராகப் பணி யாற்றினாலும், சிறப்புடனும் திறம்படவும் பணியாற்றி அனைவரின் அன்பையும் பாராட்டுதலையும் பெற்றவர்.  முத்துக்குமரனின் மறைவு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்குப் பேரிழப்பாகும்”என்று கூறியிருந்தார்.

“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகச் சிறந்த இயக்கப் பணியாளர்களுள் ஒருவர் எஸ்.பி.முத்துக் குமரன்.  அவர் மக்களின் நலனுக்காகப் பாடு பட்டவர்”என்று தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஆளுநர் மேதகு கே.ரோசய்யா, எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. தலைவர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான சு.திருநாவுக் கரசர் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் முத்துக் குமரனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்

பின்னர், 02-04-2012 திங்கள் அன்று நடை பெற்ற இரங்கல் கூட்ட உரையில் தா.பாண்டியன், “எனக்குப் பின் பல ஆண்டுகள் கழித்துப் பிறந்த முத்துக்குமரன் எனக்கு முன்னே செல்வான் என்று நான் நம்பவில்லை.  முத்துக்குமரனின் பிள்ளைகள் ‘ஏழ்மையில் பிறந்தோம்.  ஏழ்மையில் வாழ்ந்தோம்.  நம்மை அப்பா தற்போது அனாதையாக ஆக்கி விட்டுச் சென்றுவிட்டாரே...’ என்று நினைக்கக் கூடாது.  சாகாவரம் பெற்ற கட்சியின் உறுப்பினர் உங்கள் அப்பா.  உங்களின் கனவை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் கட்சித் தோழர்கள் இருக் கிறார்கள்.  நீங்கள் விரும்புகிறபடி முழுமையாகப் படித்து முடிக்க உங்களுக்குத் தேவையான அனைத் தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பார்த்துக் கொள்ளும்”என்றார்.

முத்துக்குமரன் இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, “எனது வயதில் பாதி வயது கூடக் கடக்காத தோழர் முத்துக்குமரனின் மரணச் செய்தி கேட்ட போது எனது கண்கள் கலங்கிவிட்டன.  இந்த நிமிடம் வரை முத்துக்குமரன் இறந்துவிட்டார் என நம்பவில்லை.  புதுக்கோட்டைத் தொகுதி மக்களும், கட்சியும் கொடுத்த பொறுப்புகளை சரியாகச் செய்து முடித்தவர்.  பதவி வந்த பின்பும் பொறுமையையும் தலைமைப் பண்பையும் வளர்த்தவர்”என்று குறிப்பிட்டார்.

ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எளிமையாக வளர்ந்து, செயலூக்கத்துடன் தேர்ந்த பொதுமையாளனாகத் திகழ்ந்த முத்துக்குமரன், ‘இந்தியாவின் சொத்து!’ என்று காந்தியடிகளால் பாராட்டப்பட்ட தோழர் ஜீவாவைப் போல, ‘முத்து கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்து!’ என்று கம்யூனிஸ்ட் கட்சியினரால் பாராட்டப் பெற்றவர்.

வாழும் வரை செம்மையாக வாழ்ந்தவர் என்று தோழர் முத்துக்குமரனைப்பற்றி நாம் பெருமிதம் கொண்டாலும், அவரது அகால மரணமானது அவரது குடும்பத்துக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பு என்பதை மறுக்க இயலாது.  ஏற்பட்டுள்ள சோகத்தை உடனடியாகக் களைந்துவிட முடியாது.  இருப்பினும், தோழர் முத்துக்குமரன் மக்கள் மேம்பாட்டுக்காக இதுவரை ஆற்றிய பணிகள் ஒவ்வொன்றையும் நினைவு கூர்வது, கட்சித் தோழர்களுக்கு மட்டுமின்றி, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சோகத்திலும் ஓர் இதத்தை அளிக்கும்.  சோகத்தை ஆற்றும் வலிமை காலத்திற்கு உண்டு! இந்த முத்து உடலளவில் மறைந்தாலும், மனஅளவில் நம்மைவிட்டு மறைய முடியாத முத்து!

Pin It