க.பெருமாள், இன்றைய நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர். தமது 94 ஆவது வயதில், தம்முடைய ஆசிரியர் பணியையும் புறச்சூழலையும் பற்றிய நினைவுகளை ‘உங்கள் நூலகம்’ வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொண்டார்.

அந்தப் பகிர்தலிலிருந்து சில பகுதிகள்...

நேர்காணல் : அ.கணேசன்

உங்களுடைய தொடக்கக் கல்வியைப் பற்றி...

என்னுடைய தொடக்கக்கல்வி திண்ணைப் பள்ளியில்தான் ஆரம்பித்தது. அந்தப் படிப்பு ஆறு ஆண்டுகள் வரை தொடர்ந்தது. அங்கு ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நன்னெறி, விவேக சிந்தாமணி ஆகியவையும் கணிதமும் எனக்குக் கற்பிக்கப் பட்டன. அங்குப் படித்த மாணவர்களிடம், பணம் பெற்றும், அரசாங்கத்தின் சிறு தொகையும் சேர்த்து ஆசிரியர்களுக்குச் சம்பளமாகத் தரப்பட்டது. அந்தச் சம்பளம் என்னுடைய ஆசிரியருக்குப் போதாததால் அவர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் பத்திரம் எழுதிக் கொடுக்கப் போய்விடுவார். அந்தச் சமயங்களில் நான்தான் வகுப்பைக் கவனித்துக் கொள்வேன்.

ka_perumal_380அப்போது தமிழ் எழுத்துகளையும், கணித எண்களையும் மண்ணில் எழுதிப் பழகுவோம். இப்படி எழுதுவதில் ஓரளவுக்குத் தேறிவிட்டால் சிலேட்டில் எழுதுவோம். அப்போது காகிதத்தில் எழுதுவது என்பது வாழ்நாள் கனவாக இருந்தது. என்னோடு படித்த முப்பது மாணவர்களில் பெண்கள், தலித்துகள், அருந்ததியர்கள் என்று யாருமே இல்லை. கணிதத்தில் அணா, பைசா, வீசம், பவுண்ட், செல்லிங் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்.

இந்தத் திண்ணைப் பள்ளிக்கூடத்தை முடித்து விட்டு தாலுக்கா போர்டு ஸ்கூலிலோ அல்லது ஜில்லா போர்டு ஸ்கூலிலோ சேரவேண்டும். அப்படிச் சேரு வதற்குத் தராதர பரீட்சை எழுதி வெற்றி பெற வேண்டும்.

அப்போது படிப்பதற்கு ஐந்து ரூபாய் கட்ட வேண்டும். அந்த ரூபாயைக் கட்டுவதற்கு என் வீட்டில் வசதி கிடையாது. மிகவும் சிரமப்பட்டுத்தான் அப்பாவும் அம்மாவும் பணம் கட்டுவார்கள்.

அன்றைக்கு ‘ஸ்கூல்-ஃபீஸ் எக்ஸாம்’ என்று ஒன்று இருந்தது. அந்தப் பரீட்சையை யார் வேண்டு மானாலும் எழுதலாம். நானும் எழுதி வெற்றி பெற்றேன். அப்படி வெற்றி பெற்றுவிட்டால் நாம் கட்டிய பணத்தைத் திருப்பித்தந்து விடுவார்கள்.

அப்போது உள்ள இரவுப் பள்ளியைப் பற்றிக் கூறுங்கள்...

என் குடும்பத்தில் என்னோடு சேர்த்து ஆறு பேர். இந்த மாதிரி பல குடும்பங்கள் இருந்தன. எல்லோருக்குமே பள்ளிக் கூடத்தில் படிக்கக்கூடிய பொருளாதாரச் சூழல் இல்லை. அதனால் பள்ளிக்குச் சென்று படிக்க முடியாதவர்கள் இரவுப் பள்ளியில் படித்தார்கள். அந்த இரவுப் பள்ளியில் தமிழை எழுதவும், படிக்கவும், வீட்டுக் கணக்கைப் பார்க்கவும் தெரிந்து கொண்டார்கள். அந்தப் பள்ளி மாலை ஆறு மணிக்குத் தொடங்கி பதினொரு மணிக்கு முடியும். அங்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாணவரும் (ஒவ்வொரு) ஒரு தொகையைக் கொடுப் பார்கள். அதுவே அவர்களுக்குச் சம்பளம். என்னைத் தவிர என் குடும்பத்தில் உள்ள ஐந்து பேரும் இப்படித் தான் படித்தார்கள். இந்தப் பள்ளிக்கூட முறையை அன்றைய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.

நாமக்கல் கவிஞருக்கும், உங்களுக்குமான தொடர்பைப் பற்றி...

நான் படித்த பள்ளியில் மாணவர்களைப் புகைப்படம் எடுக்க வருவார் நாமக்கல் கவிஞர். அவர் ஒரு நல்ல போட்டோ கிராபர், ஓவியர். அப் போது நான் கந்தசாமிக் கண்டர் உணவு விடுதியில் தங்கிப் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந் தேன். அந்தச் சமயத்தில் மகாத்மா காந்தி நாமக் கல்லுக்கு வந்தார். அதற்காக விடுதியில் தங்கியிருந்த பத்து மாணவர்கள் சேர்ந்து சேகண்டியுடன் நாமக்கல் மலைக் கோட்டை உச்சிக்குச் சென்று, நீண்ட நேரம் ஒலி எழுப்பி காந்தி மகான் வருவதை மக்களுக்கு நினைவூட்டினோம். மகாத்மா சரியாக எட்டு மணிக்கு வந்தார். ‘மகாத்மாவுக்கு ஜே’ என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. சில நிமிடங்கள் கழித்து நாட்டின் நிலைமையைப் பற்றிப் பேசினார். அரிசன நல சேவைக்கும் நிதி கேட்டார். அதனால் சிலர் பணம் கொடுத்தனர்; சில பெண்கள் தங்க நகைகளைக் கழற்றிக் கொடுத்தார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு நாமக்கல் கவிஞருடனான தொடர்பு மிக நெருக்கமானது. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் சென்று ஓவியம் கற்றுக் கொண்டேன். அந்தப் பயிற்சிக்குப் பிறகு கந்தசாமி கண்டர் அறக்கட்டளையின் உணவு விடுதிக் கட்டடத்தைப் பெரிய அளவில் வரைந் தேன். ஏனெனில், அந்த உணவுக் கட்டடத்தை முழுப் புகைப்படமாக எடுக்க முடியவில்லை. அந்த உணவு விடுதிப்படத்தை ஒரு மாதகாலம் ‘பென்சில் ஸ்கெட்ச்’சாக வரைந்தேன்.

இந்த ஓவியத்தைப் பார்த்த நாமக்கல் கவிஞர் என்னைப் பாராட்டியதோடு, அதை ‘அஞ்சல் அட்டை’ வடிவத்தில் புகைப்படமாக எடுத்துத் தந்தார்.

அந்தப் படத்தை என்னிடம் கேட்டு வாங்கி, வேலூர் கந்தசாமிக் கண்டர் உயர்நிலைப்பள்ளி வெள்ளிவிழா மலரில் வெளியிட்டார்கள். அப்படி பிரசுரித்தவர்கள், நாமக்கல் கவிஞர் எடுத்த படத் தையும் தரவில்லை. அந்த மலரின் பிரதியை என்னிடம் கொடுத்தார்கள். அது இப்போது என்னிடம் இல்லை.

சேலம் கருப்பூரில் தாங்கள் ஆற்றிய பணி பற்றி...

அப்போது கருப்பூரில் அரசின் நடுநிலைப் பள்ளி தான் இருந்தது. உயர்நிலைப் பள்ளியில் படிப்பதற்குச் சேலம் செல்ல வேண்டும். கருப்பூருக்கும் சேலத் திற்கும் 13கி.மீ. தூரம். அந்தக் காலத்தில் வசதியுள்ள வர்கள் மட்டுமே சேலம் சென்று படிக்க முடியும் என்ற சூழ்நிலைதான் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம். கல்யாணசுந்தரம் அவர்களின் மனைவியின் ஊர் கருப்பூர் என்பதால் அவர் அவ்வப்போது கருப்பூருக்கு வருவார். ஒருமுறை அவரிடம் பள்ளிக் கூடப் பிரச்சினையைப் பற்றிப் பேசினேன். அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு ஒரு கமிட்டி அமைத்து, அந்தக் கமிட்டி, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. அந்த மக்கள் இயக்கம் மூலமாக மக்களிடம் நன்கொடைகள் பெறப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அரசிடம் முயற்சி செய்து 1959-60 ஆம் கல்வி ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளியாக மாறியது.

இந்த மாற்றத்தினால் பள்ளித் தலைமை ஆசிரி யராக இருந்த நான் எல்லாவிதத் தகுதி இருந்தும் மாற்றப்பட்டேன். அந்த இட மாற்றலை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை மோகன் குமாரமங்கலம் நடத்தினார். அன்றைக்கு ஸ்டாம்ப் டியூட்டியாக 160 ரூபாய் கட்டினேன். சிறிது காலத்தில் மோகன் குமார மங்கலம் விபத்தில் இறந்து விட்டார். இதற்குப் பின்னால் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் நிர்வாகம் தவறு செய்து விட்டது என்று கூறப்பட்டது.

உங்களின் ஆசிரியர் பணி வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்...

இடைப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்தபோது, நைனாம்பட்டி என்ற பகுதியில் ஒரு இஸ்லாமியத் தெருவில் ஒரு ஓட்டு வீட்டில் குடியிருந்தேன். அது மிகவும் சின்ன வீடு. அங்கு என் மனைவியுடன் இரண்டு வயது குழந்தையோடு, அண்ணன் குழந்தைகள் இரண்டு பேருடன் வசித்து வந்தேன். அப்போது 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற வானொலிச் செய்தி மறுநாள் காட்டுத் தீயாய்ப் பரவியது. மகாத்மா சுட்டுக் கொன்றதுக்குக் காரணம் இஸ்லாமியர் தான் என்ற செய்தியும் திட்டமிட்டுப் பரப்பப் பட்டது.

ஆர்.எஸ்.எஸ். வன்முறையால் தொலைபேசிக் கம்பிகள் துண்டிக்கப்பட்டன. வாகனப் போக்கு வரத்து முடக்கப்பட்டது. இடைப்பாடி காவல் துறை செயல் இழந்துவிட்டது. இஸ்லாமியர்களின் வீடுகளும், கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. அப்போது அந்தப் பகுதியில் ‘சலாமத்’ என்ற பெயரில் ஒரு பஸ் ஓடிக் கொண்டிருந்தது. அந்த பஸ் முதலாளி வீட்டை விட்டு விட்டுத் தன் குடும்பத்தோடு குதிரை வண்டியில் தப்பித்தார்.

இஸ்லாமியர் குடிசைகளுக்குத் தீ வைக்கப் பட்டது. தீ வைப்பினால் கயிற்றால் கட்டப்பட்ட மாடுகள் தப்பி ஓடின. சங்கிலியால் கட்டப்பட்ட எருமை மாடுகள் தீயில் கருகிப் போயின. என்னுடைய மனைவியையும், மூன்று குழந்தைகளையும் இடைப் பாடியில் உள்ள என் நண்பர் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். இடைப்பாடிக்கும் நைனாம்பட்டிக்கும் இடையே சிறிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. வன்முறையாளர்கள் ஆற்றின் படுகையில் நின்று கொண்டு என் குடும்பத்தை விரட்டியடித்தார்கள்.

அன்றைக்கு இரவு ஒன்பது மணி இருக்கும். அந்தச் சமயத்தில் 70 வயதுள்ள ஒரு இஸ்லாமியப் பெரியவர் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்களோடு என் வீட்டிற்குள் வந்து அடைக் கலம் தர வேண்டும் என்று உட்கார்ந்து விட்டார். உடனே அவர்களைக் கட்டிலுக்குக் கீழே படுக்க வைத்து, மேலே போர்வையைப் போட்டு மூடினேன். முன் பக்கத்தில் உள்ள தாழ்வாரத்தில் குழந்தை களையும், மனைவியையும் உட்கார வைத்தேன். அப்போது நெ. 55 என்ற ஒரு கத்தி இருந்தது. அதை பட்டன் கத்தி என்று சொல்வார்கள். அந்தக் கத்திக்குத் தந்தத்தில் பிடி போட்டிருப்பார்கள். யாராவது தீ வைக்க வந்தால் அந்தக் கத்தியால் குத்தி விடுவது என்று கத்தியோடு வாசலில் உட்கார்ந்திருந்தேன். என் வீட்டிற்குப் பக்கத்தில் தீ வைத்ததில் இரண்டு மாட்டு வண்டிகள் தீக்கிரையாகின. அடுத்ததாக, அவர்கள் என் வீட்டை நோக்கி வந்து கொண் டிருந்தார்கள். அப்போது ‘என் ஆசிரியர் வீடு’ என்ற குரலோடு அந்தக் கும்பலைத் தடுத்து நிறுத்தி எதிர்ப்பக்கம் திருப்பி அனுப்பினான். பின்னால் தான் தெரிந்தது- அந்தப் பையன் என் வகுப்பு மாணவன் இருசப்பன் என்று.

உங்கள் அனுபவத்தில் ஆசிரியர் - மாணவர் உறவு?

திருச்செங்கோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, கே.மாணிக்கம் என்பவர் படித்தார். அவர் இப்போது அமெரிக்காவில் தொழில் அதிபராக இருக்கிறார். அவரும் அவரின் மனைவி டாக்டர் பத்மாவதியும் இணைந்து என் பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி யுள்ளார்கள். இந்த அறக்கட்டளை திருச்செங் கோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், (ஆண், பெண்) பிற பள்ளி மாணவர்கள் ஆகியோர் உயர்கல்வி பயில்வதற்கு உதவி செய்கிறது. இந்த உயர் கல்வி பயில்வதற்கு உதவி செய்வதற்காக, மூன்று பள்ளிகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வங்கியில் நீண்டகால முதலீடாகச் செய்யப்பட்டு உள்ளது. இந்த முதலீட்டின் மூலமாகப் பெறப்படும் வட்டியில், பள்ளித் தலைமையாசிரியர் மூலமாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நீங்கள் படித்த சூழல், ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தோடு இன்றைய கல்வியின் தரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் படித்த காலத்தில் தமிழில் உள்ள செய்யுள் பாடல்கள் ராகத்தோடு சொல்லித்தரப்பட்டன. அப்போது படிப்பைத் தவிர வேறு சிந்தனைகளுக்கான சூழல் இல்லை. நாடகம் மட்டுமே அன்றைக்குப் பிரதான பொழுதுபோக்காக இருந்தது. நாடகம் நடக்கும் நாட்களில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு நாடகம் பார்க்க யாராவது மாணவர்கள் வந்திருக்கிறார்களா என்று கண்காணிக்கும் வழக்கமும் இருந்தது.

ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் விடு வீடாகச் சென்று மாணவர்களை அழைத்து வருவோம். வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டால் ஆசிரியருக்கு வேலை இல்லை என்ற நிலை மையும் இருந்தது. கல்வி ஆழமாகக் கற்பிக்கப் பட்டது. கற்றலில் குறை உள்ள மாணவர்களுக்குப் பள்ளியிலேயே சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டது. அப்போது நெ.து.சுந்தரவடிவேலு ருஷ்யா சென்று வந்த பிறகு பாடப்புத்தகங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அப்போது நான் ஆறுமுதல் பத்தாம் வகுப்பு வரை பொதுக் கணிதப் பாடப்புத்தகங்கள் எழுதினேன்.

இன்றைக்கு இருக்கும் மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியரின் கற்பித்தல் இல்லை என்பதுதான் என் கருத்து. கால மாற்றங்களுக்கு ஏற்ப பாடத் திட்டங்கள் மாறிவிட்டன; ஆசிரியர்கள் மாறவில்லை.

Pin It