‘சந்திரிகையின் கதை’ பாரதியாரின் சிறப்புறு அரிய படைப்பு; அவரின் இறுதி நூல் ஆகும். பெண்களின் மென்மை, மேன்மையின் வெளிப் பாடாகவே இக்கதையினைப் பாரதி எழுதி இருப் பார் என நம்பலாம். கதை நிகழ்விடம் தமிழகத் தலைநகர் சென்னை என்பதால் நம்முள் ஒரு சார்புத் தன்மை ஆரம்பம் முதல் ஏற்படுகிறது. சுருக்கமாகக் கதை சொல்லும் விஷயங்கள் இவையே: காதலின் வெளிப்பாடுகள், விதவா விவாகம் செய்யப்பட வேண்டிய அவசியம், தலை மழிக்காத பிராமணப் பெண், விதவைகள் இருத்தலின் நியாயம், மனத் தாலும் பிற மாதர் உறவு-நினையாமை, பிரம்ம-சமாஜ உதவிகள், கிறிஸ்துவின் மேலான மேற் கோள்கள் ஆகியன செம்மை மிகு வார்த்தைக் கட்டமைப்பில் பாரதியால் வாசகருக்குக் காட்டப் பெறுகின்றன. மனித நேயம் பல இடங்களில் வெளிப் படும் தன்மை நம்மை உணர்வு நெகிழ்ச்சியில் உறைய வைக்கிறது.

bharathi_261சந்திரிகை, பொதிகைமலைச் சாரல் வேளாண்குடி கிராமத்தில், ஒரு பூகம்ப இரவில் அக்ரஹாரத்தில் பிறந்தவள். தந்தை மகாலிங்கம், இக்கதை நாயகி யாகச் சித்திரிக்கப் பெறும் விசாலாக்ஷி (மகா லிங்கத்தின் தங்கையானவள்) ஒரு கைம்பெண். இவள் சந்திரிகையின் அத்தை (மகாலிங்கத்தின் தங்கை) பெண் குழந்தை சந்திரிகையின் தாயும், தந்தை மகாலிங்கமும் பூகம்ப மழையன்று இறந்து போய் விடுவதால் கைம்பெண் அத்தை விசாலாக்ஷியின் பராமரிப்பில் விசாலப்பார்வையுடன் சந்திரிகை வளர்க்கப்பெறுகிறாள்.

1904 எனக் கதை நிகழ் ஆண்டு சுட்டப்படு கிறது. விசாலாக்ஷி சென்னை வந்து சுதேசமித்திரன் ஆசிரியர் ஜீ.சுப்பிரமணிய அய்யரைக் கண்டு கடிதம் பெற்று மனித நேயர் வீரேசலிங்கம் பந்துலுவைக் கண்டு தன் நிலையைக் கூறித் தனக்கு மறுமணம் செய்திட உதவி கேட்கிறாள். அவரும் அவர் மனைவியும் விசாலாக்ஷியின் நிலையைக் கண்டு இரங்கி உதவிகள் செய்ய மனம் உவந்து முயல்கின்றனர். ஆனால் அவர்கள் இல்லம் வரும் டெபுடி கலெக்டர் கோபால அய்யங்கார் இவள் சமையல் ருசியினை இரசிப்பவராயிருந்தும் இடையர்குல மங்கை மீனாக்ஷி பேரில் மையல் கொண்டு அவளை மணம் முடிக்க, விசாலாக்ஷி மீண்டும் மணமகன் தேடி உறவினர் வீடு, தோழி வீடு எனச் செல்கின்றாள். தோழியும் உறவின் முறையால் அம்மாங்கார் ஆன மையிலாப்பூர் முத்தம்மா வீடு செல்கிறாள். அங்கு வக்கீலான முத்தம்மாவின் கணவர் சோமநாதன் என்பவரால் தவறான நோக்கில் இவள் பேரில் பாலியல் மோகம் கண்ணுறப்பெற்றதும் தம் பெரியம்மா மகள் பிச்சு வீட்டிற்குத் தங்கசாலை செல்ல, அங்குப் பாலசந்நியாசி நித்யானந்தரைக் கண்டதும் காதல் கொள்கிறாள். அவரும் இவள் பேரில் அபிமானம்கொண்டு சன்னியாசம் துறந்து விசுவநாதசர்மா எனப்பெயர் மாற்றிக்கொண்டு இவளை மணம் செய்துகொள்கிறார். எழுத்தாளர் ஆகிறார். இவர்கள் இல்லறம் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் விசாலாக்ஷியின் வாழ்வில் தென்றலாய் வீச, காலத்தின் கோலத்தால் யார் கண்ணோ பட்டது போல் விசுவநாத சர்மாவிற்குப் புத்தி பேதம் ஏற்படுகிறது. அது முதல் விசாலாக்ஷிக்கு மனம் ஏக விசனம் ஒன்றே வாழ்வாகிறது. பலப்பல வைத்தியங்கள் செய்தும் சர்மா குணம் பெற்றாரில்லை.

இது இப்படி நிற்க, 1907 விசாலாக்ஷி திருமணம் சென்று இரு வருடங்களுக்குப் பின்னர் மயிலை வக்கீல் சோமநாதையர் முத்தம்மாவின் கணவர் தன்னுடைய தாயார் மரித்த பின்னர், பல லோக விஸ்தாரங்களை உணர்ந்து மனைவி பெருமை அறிந்து அவளைக் கொண்டாடத் தலைப்படும் நேரத்தில் கதை முடியாமல் நிற்கிறது. ஏன் எனில், பாரதியார் (கஜேந்திர) யானையின் கால் பட்டுக் காலமாகி விடுகிறார்.

கிட்டத்தட்ட மேற்கண்ட குறிப்புகளில் கதைச் சுருக்கம் ஆக விளக்கிக் கூறியாயிற்று. மேற்கொண்டு கதையுள் பாரதியார் கோத்துத் தரும் தத்துவ விஷயங்களைப் பற்றிக்கொஞ்சம் காண்போம்.

இக்கதையின் வடிவமைப்பில் மையம் கொண்ட விஷயங்களாய் பாரதியார் எடுத்துக்கொண்டவை கீழ்க்கண்டவையே ஆகும். பெண் விதவைகள் மறுமணம், பிரம்மசமாஜின் உதவிகள், உண்மைக் காதலின் மகத்துவம், மனைவியுடன் முதுமைப் பருவத்தும் இனிமையுடன் வாழ்தல், இயற்கையுடன் நுகர்வு- இனிய சுகானுபாவத்துடன் இணைந்து ரசிக்கும் தன்மையினை ஏற்று வளர்த்தல், திக் கற்றோருக்கு உதவுதல், மற்றும் நல் சமுதாயத்திற்கு ஏற்ற கருத்துக் கணிப்புகள்.

தத்துவச் செய்திகளாய்ப் பாரதி தருவன-(பக்கம் 68-இல் கூறுவது) பசியறிந்து உண்ணுவோர் உணவின்பம் தெவிட்டப்பெறார், நோயின்றி இருப் போருக்கு ஸ்நான இன்பம் தெவிட்டாது. நட்பு, கல்வி, சங்கீதம் ஆகியன லோகாயத இன்பங்கள் ஆகும், இவை நீர்க்குமிழிகள் எனப் பகர்வோர், அறிவிலோர், சோம்பேறிகள், நெஞ்சு உறுதி இல்லாதோர் ஆவர் என்று எழுதிச்செல்கிறார். காதல், ஒருவன் ஒருத்தியிடம் கொள்வது உயர்ந்தது என மொழிகிறார்.

திருத்தக்க தேவரின் பாடலான,

இடுக்கண் வந்துற்ற காலை,

எரிகின்ற விளக்குபோல

நடுக்க மொன்றானுமின்றி நகுக, தாம் நக்க போதவ்

வீடுக்கணையரியு மெஃகாம்,

இருந்தழுதியாவ ருய்ந்தார்?

என்பதை சீவக சிந்தாமணியில் இருந்து மேற்கோள் காட்டுகிறார் (பக் 75). இதன் கருத்தானது துன்பம் வரும் வேளையில் அதைக் கண்டு நகைப்பின் அச் சிரிப்பே அதனை வெட்டும் வாள் ஆகும், அன்றிக் கவலைப்படின் ஏதொரு உய்வும் நேராது என்ப தாகும். சோமநாதையர் கூற்றாக (பக்87) “வில்லம்பு, சொல் அம்பு மேதினியிலே இரண்டாம் வில்லம்பில் சொல்லம்பே மேலதிகம்” என்னும் பழம் பாடல் சொல்லாகச் சொல்லி ஆடவர் பெண்டிரை வலிந்து ஆக்கம் செய்வது கொடுமை செய்தல், பெண்டிரை வாய்ச்சொல் வலிமையுடை மாட்சிகொள்ள ஏது ஆகிறது என்கிறார். மடந்தையர் மடமை உடை யோர் என்பதே மடமை (பக் 90) என விளக்குகிறார்.

பயமே மூல காரணம், பயம் வெல்ல அனைத்தும் வெல்லும் ஆற்றல் பெறலாம். பூஜை, தவம் இவை பயம் வெல்ல உதவும் காரணிகள் ஆகும் என்றும் தெளிவாய் எழுதுகிறார். மேலும் சோமநாதைய்யர் வீட்டில் தன் மனைவியின் சிரேஷ்டமுணர்ந்து (உயர் தன்மை) அன்புறு நிலையில் அன்பு பற்றி பலஹிதமான (மென்மையான) சொல்லடுக்கு களைக் கதையில் பாரதி, சொல்லிச் செல்கிறார். இதிலிருந்து ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ என்ற வள்ளுவன் சொல் அவரை மிகவும் ஆட்கொண் டிருந்ததாய்க் கண்டுகொள்வோமாக. இயேசுவின் கூற்றாகக் கடவுளிடத்தும், மற்ற எல்லா உயிரிடத்தும் அன்பு செலுத்தலே மோட்சம் உய்யும் வழி. மற்ற மனிதர்தமக்கு உதவி செய்தல், மதித்தல், தொண்டு ஆற்றல் இவையே பூசனைகள். ஜெபம், தவம் காட்டிலும் சிறந்தவை எனக் கதையின் இடையே மேற்கோள் காட்டி எழுதிச் செல்கிறார்.

இஃது பாரதியின் முடிவுறாக்கதை. எனினும் அவர் கதை சொல்லும் பாண்டித்தியம் பாங்குற சந்திரிகையின் கதையிலும் மிளிர்கிறது.

சந்திரிகையின் கதை

பாரதியார்

வெளியீடு : தாமரை பப்ளிகேஷன்ஸ்

விலை : ரூ. 60.00

Pin It