தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஐம்பது ஆண்டு நிறைவு, பொன்விழா சிறப்பு மாநாடு, கோவை நகரில் மே 12, 13 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. 1961-ஆம் ஆண்டில் இலக்கியப் பேராசான் ஜீவா, எந்தக் கோவை மண்ணில் இப்பெருமன்றத்திற்கு உருக்கொடுத் தாரோ, அதே கோவை மண்ணில் அதன் பொன் விழா நிகழ்ச்சியும் அமைந்தது பொருத்தமான தன்றோ. இவ்விழா நடைபெற்ற பாரதிய வித்யா பவன் அரங்கு, தமிழியல் ஆய்வில் பேரறிஞராக விளங்கிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவாகப் பெயரிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் கலை இலக்கியத் துறையில் ஆழமான தாக்கத்தையும் வீச்சையும் ஏற்படுத்தியுள்ள பெரு மன்றத்தின் காவலர்களாக, படைப்பாளிகளாக, களப் பணியாளர்களாகத் தமிழகமெங்குமிருந்து வந்திருந்த நானூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இப்பொன்விழா மாநாட்டில் பேரார்வமுடன் பங்கெடுத்தனர்.

பெருமன்றத்தின் மூத்த தமிழறிஞர் திருச்சி வீ. சோமசுந்தரம் பெருமன்றக் கொடியினை ஏற்றினார். வரவேற்புக் குழுச் செயலாளர் ப.பா. ரமணி வரவேற்புரை வழங்கினார். வரவேற்புக் குழுவின் தலைவரும், சாகித்ய அகாதமியின் தென்னக ஒருங்கிணைப்பாளருமான கவிஞர் சிற்பி. பால சுப்பிரமணியம் துவக்கவுரையாற்றினார். பொறுமை காத்து இரையைக் கொத்தும் கொக்கு போல இலக்கியப் பணிகளைச் சமயமறிந்து செய்வதிலும், தேவையற்றவற்றைப் புறந்தள்ளி, வேண்டியதைக் கொத்தி எடுக்கும் கோழிபோல, நல்ல இலக்கியங் களைப் படைப்பதிலும், மண்ணிலும், நீரிலும், கண்ணுக்குத் தெரியாமல் கலந்து உரமாகவும் சத்தாகவும் இருப்பதில் உப்பு போலவும் பெரு மன்றம் கடமையாற்றி வந்துள்ளது என்றார் கவிஞர். சிற்பி. பழைய இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் ஆக்கபூர்வமான மனிதநேயக் கருத்துக்களை உள் வாங்கிக்கொண்டு மக்களிடம் பேசவேண்டும் என்பதுவே ஜீவா காட்டிய பாதை. அவ்வாறுதான் பக்தி இலக்கியங்களையும் பார்க்க வேண்டும் என்றார்.

தலைமை உரையாற்றிய முனைவர் தி.சு.நடராசன், நச்சு இலக்கியங்களுக்கு எதிராகப் பெரும்பண்பாட்டுப் போரை நடத்தியது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். படைப்பாளிகளின் சுதந்திரத்திற்குத் தடைபோடாத ஜனநாயக இயக்கமாகப் பெரு மன்றம் மலர்ச்சியடைந்துள்ளது என்றார்.

மாநாட்டின் மைய உரையை நிகழ்த்திய முன்னாள் துணைவேந்தரும், வரலாற்றுப் பேரறிஞருமான கே.என். பணிக்கர், பண்பாட்டுத் துறைக்கு மார்க்சிய வாதிகள் அதிக கவனம் செலுத்த வேண்டினார். பொருளாதார அடித்தளத்திற்குக் கொடுக்கப்படுகிற அதே கவனம் கலாசாரத்துறைக்குத் தரப்பட வேண்டு மென்றார். சமூகத்தின் மரபுசார்ந்த கலை படிவங் களைப் புறக்கணித்தால் பாட்டாளி வர்க்கத்தின் பண்பாடு பொலிவிழந்து விடும் என்றார். பெரு மன்றத்தின் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எழுத்தாளர் பொன்னீலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலச் செயலாளரும், ‘காவல் கோட்டம்’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றவருமான எழுத்தாளர் சு. வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிப் பேசினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பெருமன்றம் தயாரித் துள்ள இசைப் பேழையை வெளியிட்டுச் சிறப்புரை யாற்றினார். 1961-ஆம் ஆண்டில் பெருமன்றம் துவக்கப்பட்ட காலத்தில் முன்னின்று பணியாற்றிய மூத்தோர்கள்- புலவர் ராசியண்ணன், கவிஞர் வாய்மைநாதன், புதுவை மு.கு.ராமன், சி.ஆர்.கோவிந்த சாமி ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பு செய்தார் தா.பாண்டியன். பேராசான் ஜீவா, கவிஞர் கே.சி.எஸ் அருணாசலம், பேராசிரியர், நா.வானமா மலை, கவிஞர் தொ.மு.சி. ரகுநாதன், தோழர் கே.பாலதண்டாயுதம், தனுஷ்கோடி ராமசாமி, தோழர் ஜெகன் ஆகியோரின் படங்களை, முறையே ஜீவா, அ.சுரேஷ், வெள்ளங்கிரி, மா.நடராசன், சதிஷ் குமார், அரு. கந்தசாமி, பழனிகுமார், செ.ரத்தின வேலு ஆகியோர் திறந்து வைத்தனர்.

பெருமன்றத்தின் பொன்விழா மாநாட்டை யொட்டி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நூல்கள் வெளியிடும் நிகழ்ச்சி மாலையில் நடை பெற்றது. மாநிலச் செயலாளர் வை.செல்வராசு தலைமை தாங்கினார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் செயலாளர் சண்முகம் சரவணன், பெருமன்றத்தின் மாநிலப் பொருளாளர் செ. ரத்தினவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் கண்மணி ராசாவின் ‘லட்சுமி குட்டி’ கதை நூலை, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ். நாகராஜன் வெளியிட திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் எஸ். பிரபாகரன் பெற்றுக்கொண்டார். ஆய்வாளர் செந்தீ நடராசனின் ‘புலப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்’ கட்டுரை நூலைப் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் அஜாய் குமார் கோஷ் வெளியிட, மாநிலக்குழு உறுப்பினர் செழியரசு பெற்றுக் கொண்டார். கந்தகப் பூக்கள் ஸ்ரீபதியின் ‘துணங்கைக் கூத்து’ சிறுகதைத் தொகுப்பை திருவாரூர் மாவட்டச் செயலாளர் செ. அண்ணாத்துரை வெளியிட, மதுரை மாவட்டச் செயலாளர் மு.செல்லா பெற்றுக் கொண்டார். குறும்பட இயக்குநர் எஸ்.ஜே. சிவசங்கரின் ‘கடந்தைக் கூடும் கேயாஸ் தியரியும்’ சிறுகதைத் தொகுப்பை நாமக்கல் மாவட்டச் செயலாளர் நாணற்காடன் வெளியிட, புதுவை அ.மு. சலீம் பெற்றுக்கொண்டார்.

கவிஞர் பிரான்சிஸ் கிருபா கரனின் ‘ஏழுவால் நட்சத்திரம்’ கவிதை நூலை மாநிலக்குழு உறுப்பினர் வெ.சுப்பிரமணியன் வெளியிட, குமரி மாவட்டச் செயலாளர் எம். விஜயகுமார் பெற்றுக்கொண்டார். முனைவர் எஸ். ஸ்ரீகுமாரின் ‘தமிழில் திணைக் கோட்பாடு’ கட்டுரை நூலை எழுத்தாளர் எஸ். அர்ஷியா வெளியிட, கலை. மு. மணிமுடி பெற்றுக்கொண்டார். கவிஞர் ந.நாகராஜனின் ‘சித்திரம் வரைந்த குழந்தை’ கவிதை நூலை... சிவகங்கை மாவட்டச் செயலாளர் மணிபாரதி வெளியிட, முனைவர் இரா.காமராசு பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் பி.சி. சண்முகத்தின் ‘சருகுகள்’ நாவலை... இசைக்கும் மணி வெளியிட, நாகை ப.பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் அ.ப.பாலையனின் ‘அளவுகோல்’ கட்டுரை நூலை, தர்மபுரி கே. பெரியசாமி வெளியிட, ராமநாதபுரம் ந.சேகரன் பெற்றுக்கொண்டார். கவிஞர் பரிணாமனின் ‘என் பெயர் இந்தியா’ கவிதை நூலை அ.இ. அரசு வெளியிட, முனைவர் உ. அலிபாபா பெற்றுக்கொண்டார். சிறந்த நூல் களை, அருமையாகத் தயாரித்து உரிய காலத்தில் வெளியிட்ட நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தையும், நூலாசிரியர்களையும் பாராட்டிப் பேசினார், செந்தீ நடராசன்.

மாநாட்டில், பெருமன்றத்தின் மூத்த படைப் பாளிகளையும், ஆய்வாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் சந்திரகாந்தன் தலைமை தாங்கினார். கவிஞர் புவியரசு பாராட்டுரை வழங்கினார். மாலையில் நடைபெற்ற கலைவிழா நிகழ்ச்சியில், எழுத்தாளர் பொன்னீலன், கவிஞர் புவியரசு ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் ‘வாகை சூடவா’ இயக்குநர் சற்குணத்திற்கு இளம் சாதனை இயக்குநர் விருதும் வழங்கி, தா.பாண்டியன் சிறப்புரையாற்றினார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குண சேகரன், மாநிலச் செயலாளர் இரா. காமராசு, புதுவை எல்லை சிவகுமார் வாழ்த்துரை வழங்கினர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் இரா. நல்லகண்ணு கலந்துகொண்டு பொன்விழா மலரை வெளியிட்டுக் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் எஸ்.தோதாத்ரி வாழ்த்துரை வழங்கினார். பின்னர், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றன. மாலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர், சி.மகேந்திரன் நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சிகளை, முனைவர். செ.சேதுபதி ஒருங்கிணைத்துத் தொகுத்து வழங்கினார்.

Pin It