யார் இந்த சீத்தம்மா? கதை படிக்குமுன் ஒரு முன்னோட்டமாக சில குறிப்புகள். ஒடுக்கப்பட்ட இனங்களில் ஒருவராக, வறுமையைத் துணிவு ஒன்றையே கொண்டு எதிர்த்துப் போராடும், உழைக்கும் பெண் குலத்தின் சலிக்காத செம்மை உருவகமே, “சீத்தம்மா”. மன்னர்குல சீதை, மன்னன் இராமனின் மனை யாட்டி ஆனாலும் மன்பதை (உலகம்) அவள் வனம் ஏகிய கதையையும், சிறை எடுக்கப்பட்ட கதையையும், லவகுசா பிறந்தபின் ஒதுக்கப்பட்ட கதையையும் காலங்காலமாகப் படித்து, கேட்டு வந்துள்ளது.

மாமன்னன் குல மகள் சீதை பட்டதற்கு ஈடாகவே வேதனைகளைக் குறையின்றி சீத்தம்மா அனுபவிக்கிறாள். ஆனால் துணிந்து அக்னி புகுந்த சீதையைப் போலப் போராடிப் போராடி மீள்கிறாள். தனி ஒரு மனுஷியாக அவள் நூலாசிரியரால் சித்திரிக்கப் பட்டாலும், வறுமையுற்ற-ஏழைப் பெண்கள் எப்படி வறுமையிலும் தன்மானத்துடன் செம்மையாக வாழ்கின்றனர், மற்றும்-ஒதுக்கப்படுதலை எதிர் கொள்கின்றனர், வஞ்சிக்கப்படுதலை எதிர்த்து நடைபோடுகின்றனர், சமூகத்தால் ஏசப்படுதலை எதிர்கொள்கின்றனர், மற்றும் ஏமாற்றப்படுதலுக்கு ஆட்படுகின்றனர், சுரண்டப்படுகின்றனர், மேலும் அவற்றை எதிர்த்து வாழ்வு நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போடுகின்றனர் என்பதனைப் பலருக்குச் சொல்லித் தரும் முகமாகவே இக்கதைதனில் நாயகியாய்க் காட்டப்படுகிறாள்.

கதை : சீத்தம்மா பிறந்த ஊர் பூலுவப்பட்டி, தந்தை பெருமாள், தாய் வெள்ளையாத்தா, ஒரு ஏழைக்குடும்பத்தில் இளைய சகோதரி பெயர் கமலா.

seethammal_450lதேர்வில் தோல்வி பெற்றதால் படிப்பைத் தொடராது, பல வேலைகளில் ஏவலுக்குச் செல்பவள் ஆகிறாள்., தந்தை பெருமாளும், வெள்ளையாத்தாவும் பலத்த யோசனைகளுக்குப் பின் சடங்காகி பெரிய வளான சீத்தம்மாவிற்கு வெள்ளையாத்தாவின் தம்பி இராமசாமிக்கு (மாமன் முறை) கல்யாணம் செய்து வைக்கின்றனர். ஆனால்... தோழியரின் கிண்டல்கள் கேட்டு, கணவன் பால் சீத்தம்மா மனம் ஒட்டவிடாமல் செய்துவிட, சமுத்தூருக்கு (கணவன் ஊர்) கணவன் வீடு போய் மனம் இருப்புக் கொள்ளாது தன் ஊருக்கே (பூலுவப்பட்டி) திரும்பி வந்து வாழ்கிறாள். தாயின் புத்திமதிகள் எடுபட வில்லை. ஆனால் அவளே மூன்று வருடங்கள் சென்ற பின் மனசு மாறி புருஷன் இராமசாமியுடன் சமுத்தூர் சென்று சீராக வாழ்ந்து ஒரு பையனையும் பெற்றுத் தாய் ஆகிறாள். விதி விளையாட்டுப் போல் வயிற்று வலி கண்ட கணவன் காசு செலவு பண்ணி கவர்ன்மெண்ட் ஆசுபத்திரியில் சேர்த்தும் செத்துப் போகவே, விதவை ஆகித் தாய் வீட்டுக்கு மகனோடு வந்து விடுகிறாள். சோகமே வாழ்வின் பக்கமாகப் புரள, கணவன் இறந்த 35ஆம் நாள் சீத்தம்மாவின் மகனும் (7 மாதமே ஆன மகவு) நோயில் மாண்டு விட, வாழ்வின் துயரங்கள் அடுக்கடுக்காக தாக்க திகைத்துப்போய் நிற்கிறாள். அடி மேல் அடியாக சில நாட்களில், வேலைக்குப் போன தந்தை பெருமாளும் திடீரென இதயநோயால் இறக்க, குடும்பமே கதிகலங்கித் தடுமாறுகிறது.

சீத்தம்மாவின் தங்கை கமலா அப்பாவின் சாவுக்கு வந்தவள் இவர்களுடனே தங்குகிறாள். பூலுவப்பட்டி ஊருக்கே வந்து வாழாத வாழ்வு வாழ்கின்றாள், ஏன் எனில் அவள் கணவன், தங்கப்பன்- மருத்துவக்காரி வெள்ளைநாயகியை சின்ன வீடாக வைத்து கமலாவைக் கண்டு கொள்ளாது இருப்பதால் இவளும் தாய் வீட்டுச் சோக வாழ்வினைப் பங்கு போடுகிறாள். என்னே ஒரு சோதனை! அவனும் திடுமென இறந்துபோகிறான். இரு பெண்களும் விதவைகள் ஆகி விதவைத் தாய் வெள்ளையம்மா கணவன் இழந்த குடும்பத்தலைவி சோகத்தின் சிகரத் திற்கே சென்று வாழ வலு இழந்து விடுகிறாள்.

சுதாரித்து எழுபவள் சீத்தம்மா மட்டுமே. தங்கை, தாய், இருவருக்கும் ஆறுதல் கூறிக் கூலி வேலைக்குச் சென்று வாழ, வருடங்கள் ஓட, ஊரில் வேலைகளே இல்லாது வறுமை வாட்டுகிறது. ஆண்கள் போல வேற்றூர் சென்று சீத்தம்மா வேலை செய்ய விரும்ப, அதைத் தடுத்த தாய் வேறு வழி இல்லாமல் ஒப்புக் கொள்கிறாள். பாப்பம்பட்டியில் குளம் வெட்டும் வேலை. மேஸ்திரி சென்னியப்பன் (கல்யாணம் ஆனவன்) கண் இவள் மேல் படுகிறது. ஊர் வாய் இதனை மெல்ல, இது அனைவரின் கேலியாகப் போய் தாய் மனம் தடுமாறுகிறது. நடத்தை சரியில்லையோ என சந்தேகமுற்று, மாரக்கா என்கிற வம்படிப்பவள் பேச்சை நம்பி சீத்தம்மாவைப் பலப்பலப் பேசி வீடு சேர்க்க மறுக்கிறாள்.

பாப்பம்பட்டி குள வேலை முடிந்து, வேறுவழி அற்ற திக்கற்ற சீத்தம்மா தன் ஊர் பொன்னம்மா -கண்ணப்பன் மற்றவர்களுடன் கோவை செல்கிறாள். அங்கு முதலில் ஒரு டீக்கடை கண்ணப்பன்- பொன்னம்மா (ஜோடி) வைக்கவும், டீக்கடையில் மாங்கு மாங்கு என அடுப்படியில் நின்று ஈர விறகுடன் மல்லுக்கட்டி வேலை செய்கிறாள்.

ஒருநாள் அங்கு வந்த பூலுவப்பட்டி மாரியம்மா- மயில்சாமி துணையால், கோவையில் சேட்டுவீட்டு வேலைக்கு மாறிச் செல்கிறாள். மூன்று வருடங்கள் ஓடுகின்றன. சேட்டு தில்லிக்குச் செல்ல, வேறு இந்திக்காரனின் வீட்டிற்குச் செல்லும் சீத்தம்மா அவனின் தகாத நோக்கம் அறிந்து வேலையில் இருந்து நின்று விடுகிறாள்.

சொந்தம் இன்றி, பந்தம் அறுந்து, அறுபட்ட பட்டமான சீதம்மாவிற்கு இடியாக மாகாளியாத்தா வீட்டிலிருந்து பருவதா என்பவளின் எதிர்ப்பால் குடியிருந்த சாளை காலி செய்யப்படவே பாடு களில் இருந்தது திறப்பே இல்லாத சீத்தம்மா மீண்டும் மாரப்பனின் சாளைக்குக் குடி மீண்டு ஊராரின் / (பெண்களின்) ஏச்சு பேச்சுகளுக்கு மவுன பதில் தந்து, வாழ ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி சிக்கனமாக உழைத்து, வடா மிட்டு, வயல் வேலைகள் செய்து வயிறு வளர்க்கின்றாள்.

ஆறு குட்டி, இவரின் மனைவி பழனாத்தா என்பவரின் காட்டுச்சாளையில் வாழும் சீத்தம்மா 30000 ரூபாய் சேர்த்து ஆறு குட்டி நிலம் வாங்க முனைய அது நிகழவில்லை. மாறாக, தம்பியண்ணன் எறங் காட்டில் குடியேறுகிறாள். சீத்தம்மாவின் தம்பி ஒரு ஆடு பல ஆடுகளாய் ஆனதைத் தன் தம்பிக்குத் தருகிறாள். தம்பியண்ணன் வீட்டைக் காலி செய்யக் கூறி வெளியேற்ற, மீண்டும் துயரம் தொடர்கிறது.

எத்தனை சிறப்பு என வாழ்கின்ற பெரிய மனசுக்காரி அவள். அவள் கூற்றாகவே” “எங்கே எப்படி விழுந்தாலும் நானே எழுந்து விடுவேன், நடப்பேன்” (பக் 146). வலியுற்றோர் வலு உற்றவர் ஆக இருப்பதை ஆசிரியர் விரும்புகின்றார் எனத் தெளிவாகக் கூறுகிறது இந்த நாவல். வாழ்வின் அத்தனை பக்கங்களிலும் துக்கங்களையே எதிர் கொண்ட சீத்தம்மா நிலை குலையாது மீண்டும் எவ்வாறு வாழ்க்கையைத் தொடர்கிறாள் என்பதே நாவலின் உச்சகட்டம்.

ஸஅருஞ்சொற்பொருள்கள் என்று கீழ்க்கண்ட பதங்களைச் சேர்ப்பின் மேலும் மெருகு சொட்டும். (மைகோதி.=தலை கோரும் ஒரு சாமான்) பன்னாடி/ பண்ணாடி = நிலக்கிழார். (போசி= போகணி-பாத்திரம்) (கோயலு=கோயில்) (இட்டாரி/இட்டேரி=முள் காட்டு வெளி)]

சீத்தம்மா

பட்சி

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.95.00

Pin It