jeeva-final_450இன்று சட்டப் பேரவையில் நடக்கின்ற விவாதங்களின் தன்மைகளைக் கூர்ந்து நோக்கிட, பழைய காலத்திய சட்டமன்றத்தில் தோழர் ஜீவா ஆற்றிய உரைகள் காலங்கடந்து நிற்கும் பண்பியல் சார்ந்தவை என்பது தெளிவு.  அவைகளின் ஒரு தொகுப்பினை நாட்டிற்கு நல்ல விதமாகச் செய்து அளித்திருப்பவர் கே.ஜீவபாரதி; அவரது பணிபாராட்டுக்குரியது.  இந்நூல் 279 பக்கங்கள் கொண்டது.  தரமான நூல்களினைத் தரணிக்கு வழங்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக இது அமையப் பெற்றுள்ளது.  இந்நூலினைப்பற்றிச் சிறிது காண்போம்.

சிறந்த பேச்சாற்றலும், படைப்பாற்றலும், கொண்ட தோழர் ஜீவா கொள்கைப் பிடிப்புடையவர்.  ஆழ்ந்து ஆராய்ந்து அதன் பின் எடுக்கும் முடிவுகளில் ஒன்றிவிடும் தன்மையினர்.  அவர் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், மீனவ நண்பர்களின் முகமாயும், அயல் அகத்தமிழர்களின் பிரச்சினைகளின்பால் கவனம் கொண்டு இலங்கிய பெருமகன், அவரின் காலச் சிறந்த சட்டசபை பேச்சுகளின் தொகுப்பு அதன் மேம்படு தன்மை யினை மேதினிக்கு வெளிச்சமிடுகிறது.  அவற்றை வரிசையிட நமக்கு ஒரு புரிதல் கிடைக்கும்

1. ராஜாஜி அமைச்சரவையின் காலச் சட்டப் பேரவையில் ஜீவா,

2. தொழிலாளர்நலச் சட்டங்களில் ஜீவா பேசியவை,

3. மது விலக்குச் சட்டங்கள் பற்றிய பார்வை,

4. கைத்தறி பற்றிய கருத்து,

5. பண்ணையார்களின் சுரண்டல்,

6. தாய்மொழித் தாக்கம்,

7. வரிகள் ஏன்?,

8. பிச்சைக்காரர்கள்- பட்டினிச் சாவுகள்,

 9. இலங்கைத் தமிழர் நிலை,

10. தமிழும் அரியணையும்,

11. பஸ் ஓட்டுநர் நிலை,

12. ஆவடி காங்கிரசும் ஆளும் கட்சியும்,

13. காமராஜர் ஆண்ட காலத்து உரைகள்,

14. விபசாரத்தடைச்சட்டமும் விளைவுகளும்,

15. கல்விக்கொள்கைகளும்-கடப் பாடும்,

16. தமிழ்நாடு ஏன்?

17. இன்னும் பிற முக்கிய மானவை.

தொடக்க காலத்தில் ஜீவா சட்டப் பேரவையில் முதல் முழக்கமாக... 1. 1. 1952இல் பேசியதன் சாராம்சம் இது.. ராஜாஜி எதிர்ப்பல்ல, எம் எதிர்ப்பு; அரசாங்கக் கொள்கையின் எதிர்ப்பே யாம்.  இஃது அரிசி தராத ஆட்சியினை எதிர்த்து, தண்ணீர் தராத தன்மையினை எதிர்த்து, வேலை வாய்ப்பு ஏற்படுத்தா உதாசீனம் குறித்து, இவைகளினை எதிர்த்தேதான் நாங்கள் பேசுகிறோம். 

மக்களின் துயரம் அறியா அரசு, மக்களின் நிலை உணராது மேதாவி போல நடக்கும் அரசு, ஒரு போதும் மக்கள் நம்பிக்கையினைப் பெற முடியாது.  மாறாக, எல்லையற்ற துன்பமே மக்கள் அடைவர்.  அதை நீக்கவே கம்யூனிஸ்டு கட்சி சார்பாகவும், நிலையில்லா ஏழை மக்கள் கண்ணீரின் வலிவினை எடுத்து இயம்பும் உத்வேகமாகவும் நான் பேசு கிறேன்... என்கிறார்.

மேலும், “காடு வெளஞ்சென்ன மச்சான், நமக்குக் கையும் காலும் தானே மிச்சம்” என்ற பட்டுக் கோட்டையார் பாடலிற்கொப்ப, பாரில் நொந்து கிடக்கும் தொழிலாளர் பற்றிய நலச்சட்டங்கள் பற்றிக் கூறியதன் சுருக்கம் இது.  (26 ஜூலை 1952-இல்) சரியாக அமுல் நடத்தப் பெறாச் சட்டங்கள், உதாரண மாக மோட்டார் தொழிலாளர்களின் போனஸ் பிரச்சினை கண்முன் இல்லை எனினும் மனதில் விழ ஆழ அகலங்களுடன் அருமையாக விவரித்தார்.  பிறகு அமைச்சர் பதிலில் மவுனம் நிலவியது.  கைத்தறி, ட்ராம் தோழர்கள் இதைப் பெரிதும் பாராட்டினர்.ஏற்றுமதிபற்றிப் பதிவானது அவர் சீரிய கருத்துகள்.  அன்னியத் துணிக்குத் தடையும் கைத்தறி ஏற்றுமதியும் அதன் சாராம்சம் ஆகும்.

மதுவிலக்கு: அன்று முதல் இன்று வரை அரசின் பார்வை மாறவில்லை என்று அட்டகாச மாக உண்மை நிலையை உடைத்தார்; அன்றே, புள்ளி விவரம் பற்றி அரசின் கணக்கினைச் சுட்டி 1950இல் மதுவிலக்கு மீறியோர் 65,000/- பேர்- 1951-இல் 85,000 என்று உண்மைதனைத் தோலுரித்தார்.  20 ஊர்களில் குடிக்கவில்லை, ஆனால் 2000 ஊர்களில் மீறுவதற்கு அரசு என்ன நிலைமை என்றார்.  சுண்டிச் சோறு, நீலகிரியின் குலினரி எசென்ஸ் போன்றவை அவர் உரையில் இடம்பெற்ற பிற போதைப் பொருட்கள் ஆகும்.

நில உடைமைப் பற்றையும் பண்ணையார் பாதுகாப்பையும் கண்டு பொங்கிய ஜீவா தொழி லாளர் தோழனாக உரை ஆற்றினார்.  சோழவள நாடு 2. 5 லட்சம் டன் உபரியான மாவட்டம் சோறு இன்றி, வாடிய நிலை கண்டு வருந்தினார்.  அரசு மாற்றுச் சிந்தனைகொண்டு தொழிலாளர் நலம் காக்க விரும்பினார்.  வாரம் 55ரூ தர வற்புறுத்தியவர் ஜீவா.  வாடிய பயிரைக்கண்டு வாடிய அரசியல் விவசாயி ஜீவா ஆவார்...

தமிழ் & தமிழர் பற்று:
தமிழின்பால் பெரும் பற்றுக் கொண்ட ஜீவா தமிழின் பெருமைபற்றி முழங்கும் போது,“தமிழர்கள் தாயகம் விரும்புகிறார்கள், தாயைப் போன்று தமிழன் மொழி கருதிப் பாராட்டுகிறான்.  ஆனால் அரசு அதனின்பால் கவனமற்றுச் செயல் படுகிறது” என்கிறார்.  இந்த வார்த்தைகள் இன்றும் உண்மை எனத் துணியலாம் தானே? மொழி வாரிப் பிரிவினை ஆதரவாகக் கருத்தினைப் பதிக்கிறார்.  தமிழருக்கும் தெலுங்கருக்கும் விரோதம் இல்லை எனக்கூறுகிறார். 

1937இல் தமிழக கம்யூனிஸ்டுகளும் ஆந்திர கம்யூனிஸ்டுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையின்படி ‘சென்னை, தமிழர்களுக்கு’ என்றதைச் சுட்டி விளக்குகிறார் ஜீவா. 1946-இல் அதனை மீண்டும் உறுதி செய்தமையும் அவர் கூற்றில் சொல்லப்படுகிறது.  கம்யூனிஸ்டுகள் மொழி பேசுவோர் பெரும்பான்மையின் விருப்பத்திற்கு ஒப்பவே தம் கொள்கையினை வடிவெடுக்க முடிவு எடுப்பர் என்கிறார். 

நீதிமன்ற வழக்குகளில் மக்களுக்குப் புரியும் தாய்மொழி, தமிழில் வழக்கு மொழி ஆக்க வலியுறுத்தியவர் ஜீவா.  நாஞ்சில் நாட்டின் பின்னணி கொண்ட ஜீவா அதன் பெயர் சுட்டுதல் விரும்பாது அதனின் மொழிவழக்கு கருதி அதனைத் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்றே வலியுறுத்திச் செல்கிறார்.  இலங்கை மலையகத் தமிழர் பற்றி,

“சிங்களம் புட்பகம் சாவக-மாறிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய் நாடு”

என்ற பாரதியார் பாட்டினை எடுத்துக்காட்டி - முப்பாட்டன் முத்து வியாபாரி, பேரன் மொச்சைக் கொட்டை வியாபாரி எனச் சொல்கிறார்-முத்தான எம் மக்களுக்கு இலங்கை அரசு அநீதி செய்யுங் கால் மத்திய அரசு இதன் கொடுநிலை உணர்ந்து செயல்பட வேண்டும். 

இதை மாநில அரசு எடுத்துச் சொல்லாவிடில் என்ன பயன் என்கிறார் (காலங்கள் மாறியும் அவர் கருத்து எப்படி உலக அளவில் உண்மையாகப் பரிமளிக்கின்றன என்னும் போது) அவர் தொலைநோக்கு கொண்டு இயம்பியவை கால சரித்திரம் பேசும் உண்மை ஆகி நிற்கிறதே! மேலும் அவர், “இங்கு இருக்கிற எல்லா அங்கத் தினர்களும் சகோதரர்களாக இதை உணர வேண்டும், கட்சி மனப்பாங்குகொண்டு அணுகாமல், நம் தமிழர்கள், மற்றும் மலையாளிகள் அவர்களும் இலங்கை அரசின் தேயிலைத் தோட்டங்களில் வாடும் நிஜ நிலையைக் கருத்தில் கொண்டு துயர் துடைக்க நம் சர்க்காரானது (தமிழ் நாடு), மத்திய சர்க்காருக்கு அயல் உறவுக் கொள்கையைச் சரியாக எடுத்தியம்ப வேண்டும்” எனப் பேசி நிற்கிறார்.  அய்யா ஜீவா அன்று பேசியது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்க்கு; ஆனால் இன்று அது அனைத்துத் தமிழருக்கும் பொருந்துமாறு உள்ளது ஈண்டு நோக்கற்குரியது.

பிச்சைக்காரர் பிரச்சினையில் பேசும் ஜீவா குறளை மேற்கோள் காட்டி... இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக... என்று பேசி ராஜாஜியின் கவனத்தை ஈர்க்கிறார்.  நிதி மந்திரி நிகழ்கால வாழ்வை உணரத் தவறிய போக்கு அவரால் சுட்டிக் காட்டப் படுகிறது.  விடுதிகள், மாற்றுப் பணிகள் செய்து அவர்களை வாழ வைக்க அரசு பொறுப் பேற்க அவர் வேண்டுகிறார்.  பட்டினிச் சாவுகள் இன்றி மாநிலம் வாழ்ந்திட அவர் பேசுகிறார்.

வரிகள்: சிக்கனத்தை அரசு கைக்கொண்டால் புது வரிகள் தேவை அன்று எனப் புகல்கிறார்.  கடலூரில் பாஷ்யம் ரெட்டியார் 25 பஸ்களை வைத்துக் கொண்டு வரியைக் குறை கூறிப்பேசுவது பற்றிக் கூறுகிறார்.  காங்கிரசாரே இவரிடம் வந்து சர்க்கார் வரியினை எதிர்த்துப் பேசச் சொன்னதைப் போட்டு உடைக்கிறார்.  சௌகார்பேட்டை முதலாளி களிடம் சிறு தமிழக முதலாளிகள் கடன்பட்டிருக்கும் நிலைதனை விளக்கும் ஜீவா அரசு தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற யோசனையும் நல்குகிறார்.

“குடி உயரக் கோன் உயரும், ஆனால் இங்கு கோன் உயரக் குடி வாடுகிறது” என முழங்கும் இன்ன பிற ஜீவாவின் கருத்துகளைப் பெட்டகமாக ஜீவபாரதி தொகுத்துத் தந்திருப்பது அவருடைய கடும் உழைப்பினை நமக்குப் புரியச் செய்கிறது.  நீளமான வாக்கியங்களினால் இதன் பெருமைகளை நம்மால் உணரவைக்க இயலாது.  படிப்போர் மட்டுமே முழுப்பயன் அடைய இயலும்.

சட்டப்பேரவையில் ஜீவா

தொகுப்பாளர்: கே.ஜீவபாரதி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ.200

Pin It