“மனிதன் தனியாக வாழ்வதில்லை. சமூகமாகக் கூடி வாழும் இயல்புடையவன். அவ்வாறு கூடி வாழும்போது எப்படி வாழ வேண்டும் என்பதற்காகச் சில வழிமுறைகளை வகுத்துக் கொண்டான்.இவைகளைச் சட்டங்கள், மதிப்பீடுகள், அறநெறிகள், பழக்கங்கள், வழக்கங்கள் என்று கூறலாம். இவை அச்சமூகம் முன்னேறுவதற்கும் பொருந்துவனவாக இருந்தன. இவைகளை அச்சமூகத்திலுள்ள ஒருவர் மீறும்போது அவரைச் சமூகத்தின் வழிமுறைப்படி நடக்க வைப்பதற்காகச் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப் பட்டன. இச்செயல்பாடுகளை அரசியல் என்று கூறலாம்.

“ஆதியில் நாடோடிகளாக மனிதர் வாழ்ந்த போதும் இனக்குழுக்களாக ஓர் இடத்தில் தங்கிப் பயிரிட்டு வாழ்ந்தபோதும் தங்களுக்கென்று சில வழி முறைகளைப் பின்பற்றினர். உறவின் அடிப்படையில் ஆரம்பத்தில் வாழ்ந்த இவர்களுக்குக் காலப்போக்கில் வழிமுறைப்படி அனைவரையும் நடக்கவைப்பதற்காக ஒரு தலைவர் தேவைப்பட்டார். அவர்களில் திறமை யானவர் இயல்பிலேயே தலைவராக உருவானார். பிறகு, இந்தத் தலைமை முறையே வாரிசாகத் தலைமைக்கு வித்திட்டது.

arunthathiyar vaazhum varalaru“இந்தத் தொடக்க காலத் தலைமுறை வளர்ந்து முடியாட்சிக்கு வித்திட்டது. அரசர்கள் ஆட்சி செய்தனர். அரசர்களின் திறமையின் அடிப்படை யிலேயே குடிமக்களின் மகிழ்வும் இருந்தது.

“அரசர் தனது ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்து வதற்காக மற்ற அரசர்களுடன் போரிட்டார். வென்றார். வென்ற பகுதிகளில் தனது பெயரால் ஆட்சி செய்யும்படி ஒரு சிலரை நியமித்தார். இவ்வாறு முடியாட்சி முறையானது காலனி ஆதிக்கத்திற்கு வித்திட்டது.

 “காலப்போக்கில் இந்த முடியாட்சி முறையும், காலனி ஆட்சி முறையும் மறைந்து குடியாட்சி முறை மலர்ந்தது. மக்களிலிருந்து மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆளும் முறையைத் தான் குடியாட்சி முறை என்கிறோம்.”

தனது, புரிதலின் அடிப்படையில், வரலாற்று இயங்கியல் கண்ணோட்டத்தில், மதிப்பீடுகளைச் செய்து ‘அருந்ததியர்’ என்ற இந்த வாழும் வரலாற்று நூலை வடிவமைத்துள்ளார் மாற்கு.

தொடர்ந்து, இவர் தனது தகவல் சேகரிப்பு குறித்து வெளிப்படையான கருத்துக்களை முன்வைக்கிறார்.

“தகவல்களைச் சேகரித்தபோது தகவலுக்கு முக்கியத்துவம் கொடுத்தேனே தவிர, மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனவே, தகவல் கொடுத்தவரின் மொழிநடையைப்பதிவு செய்யவில்லை. இங்கே பதிவுசெய்திருப்பது எனது மொழி நடையே.”

“ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்த அருந்ததியர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் மற்றவர்களும் அருந்ததியர்களைப் புரிந்து கொள்ள இப்புத்தகம் பயன்படும்.

“இதிலுள்ள நிகழ்வுகள், கதைகள் முதலியவற்றை அருந்ததியர்களில் சிலர் எப்படிப் பார்க்கின்றனர் என்பதன் விளக்கமாக இதன் ஆய்வுப் பகுதி அமைந்தாலும் இது முழுமைபெற்ற ஆய்வு என்று சொல்ல முடியாது. அறிவுப்பூர்வமான, ஆழமான ஆய்வுகள் செய்வதற்கு இதில் இடமுண்டு. அருந்ததியர்களே மாறுபட்ட கருத்துக்களைக் கூற இடமுண்டு.

“விருதுநகர் மாவட்ட அருந்ததியர்களைப் பற்றி இந்த நூல் எழுதப்பட்டிருந்தாலும் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் சம அளவில் தகவல்களைச் சேகரித்தேன் என்று சொல்ல முடியாது. நான் தங்கிப் பணியாற்றிய வெம்பக்கோட்டை ஒன்றியத்திலிருந்து மிக அதிக அளவிலும் அதைச் சுற்றியுள்ள சிவகாசி, சாத்தூர், திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிரும்பு ஆகிய ஒன்றியங்களிலிருந்து அதிக அளவிலும் தகவல்களைச் சேகரித்தேன். மற்ற ஒன்றியங்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

“ஒரே கருத்தை வலியுறுத்தும் பல தகவல்களில் ஒரு தகவலை மட்டுமே சேகரித்துத் தகவல்களிலிருந்து எழுதியுள்ளேன்.”

தன்னடக்கத்தோடும், நேர்மையோடும், வெளிப்படையாகவும் தனது உள்ளார்ந்த ஆய்வுப் படைப்பைக் குறித்து மாற்கு பெருமிதம் கொள்கிறார்.

தெலுங்கு பேசும் அருந்ததியர், கன்னடம் பேசும் அருந்ததியர் தமிழ்நாட்டிற்கு வந்து தங்கிய வரலாற்றை தகுந்த ஆதாரங்களோடு இவர் விரிவாக விளக்குகிறார். அதற்குரிய அரசியல் பொருளாதார, கலாச்சாரப் பண்பாட்டு நிலைகளையும் குறிப்பிடுகிறார்.

அருந்ததியர்களுக்கு சக்கிலியர், பகடை, தொட்டி, தொம்மான், செம்மான், ஆதி ஆந்திரர், ஆதி கர்நாடகர், மாதாரி என்ற பல வகையான அடையாளங்கள் உள்ளன. இருந்தாலும் சக்கிலியர், பகடை, மாதாரி என்ற பெயர்களிலேயே அவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும், தனித்தன்மைகளையும் மாற்கு குறிப்பிடுகிறார்.

அனைவரும் தாங்கள் கம்பளத்தார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று நம்புகின்றனர். இவர்களது சொத்து மாடுகள் மட்டுமே. இந்த மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நிறைவாக வாழ்ந்து வந்தனர்.

கம்பளத்தார்களில் ஒரு சிலர் இறந்த மாடு களையும், கன்றுக்குட்டிகளையும் சமைத்து உணவாக உட்கொண்டதன் விளைவாக அவர்களிடையே பிளவுகள் ஏற்பட்டன. மாட்டிறைச்சியைச் சாப்பிட்டவர்களைக் கம்பளத்தார் தங்களுடைய இனத்திலிருந்து விலக்கி வைத்தனர். இதன் விளைவாக கம்பளத்தார்கள், அருந்ததியர்கள் என்ற பிரிவுகள் தோன்றித் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்தார்கள்.

அருந்ததியர்களுடைய கதைகளிலும், பாடல் களிலும், பிற கலாச்சார நடவடிக்கைகளிலும் அவர்களுடைய பிளவுக்கு அடிப்படையான காரணம் மாட்டிறைச்சியை உண்ணும் செயலே முதன்மையாகவும், பரவலாகவும் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. பிற வகையான காரணங்கள் மிகமிகக் குறைவே. அந்த வகையில் அவர்களிடையே மேலும் மேலும் பிரிவுகள் ஏற்பட்டு தனித்தனியான அடையாளங்கள் தோன்றி அவர்களுடைய ஒற்றுமை குலைந்தது.

அருந்ததியர்களில் குறிப்பாக பகடை வகையில் நான்கு பிரிவினர் இருந்தனர். இவர்கள் முத்தன் பகடை, பொட்டிப் பகடை, கந்தன் பகடை, தாமன் பகடை என்று குறிப்பிடப்பட்டனர். கட்ட பொம்மன் காலத்தில் வாழ்ந்த அவர்கள் அவரது கோட்டையையும், படையையும் பாதுகாக்கும் அலுவலர்களாகவும், சில படைப்பிரிவுகளின் தலைவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை, எட்டப்பன் போன்ற சிற்றரசர்களின் அல்லது பாளையக்காரர்களோடு தொடர்பு கொண்டவர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள்.

காலப்போக்கில் ஏற்பட்ட நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கையின் மாற்றங்களாலும், இயற்கையின் மாறுபாடுகளாலும் மக்களிடையே பல வகையான மாற்றங்களும், வளர்ச்சிகளும் படிப்படியாக நிகழ்ந்தன. அதன் விளைவாக பிராமணர், சத்திரியர், வணிகர் மற்றும் சூத்திரர் என்ற சாதியப் பிரிவுகளும், தொழில்முறைகளும் தோன்றி வளர்ந்து விரிவடைந்தன.

அதன் விளைவாக, ஏற்றத்தாழ்வுகள் தோன்றின. ஒதுக்கப்பட்ட அருந்ததியர்கள் படிப்படியாக ஒடுக்கப் பட்டு தாழ்ந்த சாதியினராக மாற்றப்பட்டார்கள். துப்புரவுத் தொழில்களே செய்து பிழைக்க வேண்டிய நிலைமைக்குப் பின் தள்ளப்பட்டனர்.

‘அருந்ததியர்களுக்குத் தெய்வங்களை வழிபடுவது என்பது உண்பது போல அன்றாடம் நடக்கும் ஒரு இயல்பான செயலாக வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது என்பதை மாற்கு தகுந்த ஆதாரங்களோடு குறிப்பிடுகிறார். அதைக் குறித்து அவர்களுடைய தெய்வங்களைப் பற்றியும், வழிபாட்டு முறைகளைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார். குறிப்பாக, அவர்களுடைய குலதெய்வங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார். அதன் தொடர்பாக முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகள் தோன்றி வளர்ந்து நிலைபெற்றன. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒரு வழிபாட்டு முறையைப் பகுத்து அதற்குரிய வகையில் தெய்வங்களை அவர்கள் வணங்கி வருவதையும் இவர் விளக்குகிறார். அவைகளைக் குறித்த புராணக்கதைகள், கர்ணபரம்பரைக் கதைகள், கட்டுக் கதைகள் போன்றவைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இவர் கூறுகிறார். அவைகளில் இருளப்ப சாமி, எட்டப்பன் சாமி, வெறியன் சாமி, முத்துவீரப்பசாமி, தோப்புக்காரன் சாமி, கொட்டைத் தாத்தா சாமி, வீரம்மா-வீரசின்னுசாமி, சங்கம்மா சாமி போன்ற அருந்ததியரின் குலதெய்வங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார். ஆதிக்க சாதியினர் எவ்வாறு அருந்ததியர்களின் தெய்வங்களான மதுரைவீரன், வெறியன் சாமி, முத்துவீரப்பன் சாமி போன்றவற்றைத் தாங்கள் வழிபடும் கோயில்களில் விலக்கி வைத்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பாக விளக்குகிறார்.

அருந்ததியர் வாழும் வரலாறு மாற்கு வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை -600 050 ` 560/ அருந்ததியர்கள் அன்றாட வாழ்வில் தெருவைச் சுத்தம் செய்தல், கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல், சாக்கடை அள்ளுதல், செருப்புத் தைத்தல், செத்தமாடு தூக்குதல், இறப்புச் செய்திகளைச் சொல்லுதல், பிணம் எரித்தல் போன்ற அடிமைத் தொழிலே ஆதிக்கச் சாதியினருக்குச் செய்கின்றனர்” என்று அவர்களுடைய தொழில்களை இவர் வகைப்படுத்துகிறார்.

பண்பாடு என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பும்போது கீழ்க்கண்ட விதத்தில் புரிந்து கொள்ளலாம்.

“ஓர் இனம், சாதி தனது இருத்தலுக்கான அர்த்தத்தைக் கொடுக்கும் நம்பிக்கைகள், தெய்வ வழிபாடுகள், உணவு, உடை போன்ற பழக்க வழக்கங்கள், வாழ்வின் முக்கிய நிலைகளாகிய பிறப்பு-பருவம் அடைதல், திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் கடைப்பிடிக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், செய்யும் தொழில், உபயோகிக்கும் கருவிகள், மரபுசார்ந்த சட்டங்கள், குறியீடுகள், அடையாளங்கள், வழக்காறுகள் போன்றவற்றின் முழுமையான தொகுப்பைப் பண்பாடு என்று கூறலாம்.

இதன் அடிப்படையில், அருந்ததியர்களின் பண்பாட்டுத் தன்மைகளை இவர் பகுப்பாய்வு முறையில் விளக்குகிறார். தொடர்ந்து, “மாந்திரீகத்தில் அதிகம் நம்பிக்கையுள்ள இனமாக அருந்ததியர்கள் இனம் திகழ்கிறது. இழந்த பொருளை அடைய, நல்ல சுகம் கிடைக்க, செய்யப்பட்ட செய்வினை நீங்க, தனக்குத் தீமை செய்தவர்களைத் துன்பப்பட என்ற பல காரணங்களுக்காக அருந்ததியர்கள் மாந்திரீகத்தில் ஈடுபடுகிறார்கள். குட்டி வெட்டுதல் என்னும் சடங்கின் மூலம் இந்த மாந்திரீகச் சடங்கைக் கம்பளத்தார் செய்கின்றனர்” என்று இவர் குறிப்பிடுகிறார். இவர்கள் கலைகளை நேசிப்பவர்களாக உள்ளார்கள். “தனியாகவும், குடும்பமாகவும் கும்பிடும்போது இசைக் கருவிகள் இல்லாமல் கும்பிடுகின்றனர். ஆனால், சமூகமாகக் கும்பிடும் குல தெய்வ வழிபாடு, பொங்கல் போன்றவற்றிற்கு இசைக் கருவிகளை இசைத்தே வழிபடுகின்றனர். தவில், மேளம், நாதஸ்வரம், உருமி, பம்பை, தாளம், ஒத்தூதல் போன்ற இசைக் கருவிகளை இசைத்தே சாமி கும்பிடுகின்றனர். வழிபாட்டின் முக்கிய அம்சமாகிய சாமியாட்டம் இசை இல்லாமல் இருக்காது என்று சொல்லலாம். இந்த இசைக் கருவிகளைஇசைக்கும்கலைஞர்களாக அருந்ததியர்களே இருக்கின்றனர்” என்பதையும் இவர் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

“இவர்கள், அரசு கட்டிக்கொடுத்துள்ள சிறிய வீடுகளில் தங்கி துப்புரவுப் பணி செய்கிறார்கள். ஆனால், ஓய்வு பெற்றதும் வீட்டைக் காலி செய்ய வேண்டும். வயதான காலத்தில் சொந்தவீடு இல்லாமல் கஷ்டப்படும் இவர்களது நிலைமையை அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.” என்று தனது வருத்தத்தைத் தெரிவிக்கிறார் இவர்.

“தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை மனித நேயமற்ற செயல் என்று அரசு கூறுகிறது. தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையும் அரசு நிறைவேற்றியுள்ளது. இருப்பினும் இந்தத் தீண்டாமை சமூகத்திலிருந்து விலகவில்லை. இன்றைய தினம் பல்வேறு வடிவங்களில் வளர்ந்து வருகிறது என்றுகூடச் சொல்லலாம்.

“சிறிது காலத்திற்கு முன்புவரை காணாமை, அணுகாமை, தீண்டாமை என்ற மூன்று சமூக அவலங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. இந்த அவலங்கள் ஆன்மிக நாடு என்று பெருமையடித்துக் கொள்ளும் இந்தியாவில் இருந்தது வியப்பளிக்கிறது. இவைகளை மதம் நியாயப்படுத்தியது இன்னும் மிகப் பெரிய அவலம்.”

“காங்கிரஸ் கட்சி உட்பட எந்தக் கட்சியும் இதுவரை இம்மாவட்டத்தில் அருந்ததியர்களைப் பொதுத் தொகுதியில் தங்களது வேட்பாளர்களாகத் தேர்தலில் நிறுத்தவில்லை.”

“தங்கள் இனத்தில் இத்தகைய நிலைமையைப் புரிந்துகொண்ட விழிப்புணர்வு மிக்க அருந்ததியர் சிலர் தம் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் வளர்ச்சிக்காகப் பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்புகள் சங்கங்களாக, இயக்கங்களாக, பேரவைகளாக, முன்னணிகளாகச் செயல்படுகின்றன. அருந்ததிய மக்களை ஒருங்கிணைத்து, அவர்கள் முன்னேறப் பல்வேறு தளங்களில் உதவுகின்றன.

“மக்களின் சமூக பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காக எவ்வளவு அமைப்புகள் வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தகைய அமைப்புகள் மூலம் அருந்ததியர்கள் பல்வேறு விதத்தில் வளர்ச்சியடைய முடியும்.”

கூர்மையாகவும், அழகாகவும், செறிவாகவும், எளிமையாகவும், தெளிவாகவும், விருப்பு வெறுப்பு இல்லாத மனநிலையில் எழுதப்பட்ட இந்த “அருந்ததியர் வாழும் வரலாறு” உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டும் ஓர் ஒளிவிளக்கு!

- சி.ஆர்.ரவீந்திரன்

Pin It